30 ஜனவரி, 2012

மனிதநேயக் கலைஞன்

இசைஞானி இளையராஜாவைப் பற்றி டிரம்ஸ் கலைஞர் சிவமணி எழுதுகிறார் :

அவரைப் பற்றி எழுத நான் யார்?

இந்தக் கேள்வியை எனக்குள் நானே இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு இசைக்கலைஞன். அவரோ இசைக்கே அரசர். அவரைப் பற்றிக் கட்டுரை எழுதக் கலைஞன் என்ற தகுதி மட்டுமே போதுமா? ராஜா அண்ணனைக் குறித்து யோசிக்கும்போதே பல்வேறு அனுபவங்களும், நிகழ்வுகளுமாக, என் இதயம் புயல் அலையில் ஆடும் ஓடம் போலத் தத்தளிக்கிறது

அவருக்கும் எனக்குமான உறவு என்பது இசையோ, தொழிலோ மட்டுமல்ல என்பதை அழுத்தமாக உணர்கிறேன். அவர் என்னுடைய குரு. என்னை ஆன்மீக வழியில் செலுத்திய சித்தர். கோடி சாமிகள் என்கிற மாபெரும் மகானை நான் அடையக் காரணமாக இருந்தவர். என் வாழ்வின் பாக்கியம் ராஜாவால் வந்தது. அவர் எனக்கு குருநாதர் மட்டுமல்ல. அண்ணனும் கூட.

இளையராஜாவுக்கு அப்போதெல்லாம் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தவர் நோயல். அவரது வேலை ராஜாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். நோயலின் மறைவுக்குப் பிறகே நான் ராஜாவோடு பணியாற்ற ஆரம்பித்தேன். நோயலின் இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர் பாணியிலேயே நானும் வாசிப்பேன். எனவே, ராஜாவுக்கு என்னுடைய இசையும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை. "பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தைத் தேவர்கள் உண்டார்கள்" என்று படித்திருக்கிறோம். இளையராஜாவோடு பணியாற்றும் போது எனக்கும் அமிர்தம் உண்ட உணர்வு ஏற்படும்.

அவர் ரெக்கார்டிங் செய்யும் அழகைக் காண எத்தனையோ கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது. அவர் வயலின் அரேஞ் செய்த பிறகு பொழியும் இசையைக் கேட்கும்போது, என் கண்களில் கண்ணீர் கொட்டுவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. ஏன், இளையராஜாவின் இசை ஜீவனுள்ள இசை என்று சர்வதேச அளவில் இசைமேதைகள் பேசுகிறார்கள் என்பதை அப்போதுதான் உணர முடியும். பணக்காரன் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசையை எத்தனை முறை கேட்டுப் பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இசையில் மட்டுமல்ல. நட்புகளை, உறவுகளைப் பேணுவதில் அவர் ராஜாதான். சிவா என்றுதான் என்னை அன்பாக அழைப்பார். வேலை பார்க்கும்போது எவ்வளவுக்கு எவ்வளவு சீரியஸாக வேலை வாங்குகிறாரோ, அதே சீரியஸ்னஸ்சை மற்ற நேரங்களில் அன்பைப் பொழியும்போதும் காட்டுவார்

’47 நாட்கள்’ என்றொரு படத்திற்கு இசையமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வர அன்று ஏதோ காரணத்தால் தாமதமாகி விட்டது. மதிய நேரம், எனக்கோ பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. ஸ்டுடியோவில் இருந்த ராஜாவின் கம்போசிங் ரூமில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. டேபிளில் வாழை இலை விரிக்கப்பட்டு இருந்தது. 'உட்காரு சிவா! சாப்பிடு!' என்றார். எப்படித்தான் என் பசி அவருக்குத் தெரிந்ததோ? இதனால் தான் அவரை சித்தர் என்கிறேன். ஞானி என்கிறேன். ‘இல்லண்ணே..! எஸ்.பி.பி. வந்துட்டாருன்னா ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆயிடும்' என்று தயங்கினேன். நான் தயங்கியபடியே எஸ்.பி.பி.யும் வந்து விட்டார்.

உடனே ரெக்கார்டிங் ரூமில் இருந்த இஞ்சினியர்கள் இருவரையும் ஃபோன் செய்து அழைத்தார் ராஜா. அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக்கொண்டே இருந்தார்.

“பசியோட வேலை பார்க்கக் கூடாது. இப்போ உன்னாலே ரெக்கார்டிங் லேட்டுன்னு யாரும் சொல்லிட முடியாது. ஏன்னா ரெக்கார்டிங் பண்ண வேண்டிய இஞ்சினியர்கள் கூட நான் பேசிகிட்டு இருந்தேன். அதனால், என்னாலேதான் லேட்டு." என்றார். மனித நேயம் அருகிக் கொண்டிருக்கும் உலகில், ராஜாவுக்குள் இருக்கும் இந்த ஈரம்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது. சக மனிதர்கள் மீதான இந்தப் பண்பும், அன்பும் அரிதிலும் அரிதானது.

கலைஞர்களே பிரமிக்கும் கலைஞர் அவர். ரீ-ரெக்கார்டிங்கின்போது சில நொடிகளே வரும் அருமையான பிட் ஒன்றினைக் கொடுப்பார். அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அந்த சில நொடி பிட்டுகளையே நான் ஐந்து பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வாசித்துப் பழகுவேன். இதுபோலச் செய்வது ஒரு தியானத்துக்கு ஒப்பானது. இசைக்கு இதைப் போன்ற ஆன்மீகப் பலம் நிறைய உண்டு.

இளையராஜா பேசுவது, சிலருக்கு சில நேரங்களில் புரியாது. அவரது பேச்சில் நேரடி அர்த்தத்தை எதிர் பார்த்தால் அப்படித்தான். அவர் ஒரு யோகி. உன்னிப்பாக கவனித்தோமேயானால், அவரது பேச்சில் பன்முக அர்த்தங்கள் பொதிந்திருக்கும். வாழ்வுக்கு உபயோகமான கருத்துகள் அடங்கியிருக்கும். இவரைப் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றும், பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது என் பெற்றோர் செய்த புண்ணியமாகத் தான் இருக்கும்.

ஒரு முறை வாழ்த்து அட்டை ஒன்றில் இவ்வாறாக எழுதி எனக்குக் கொடுத்தார். "உன்னை இன்னொருவனால் உருவாக்க முடியாது. நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்."

அண்ணன் என்ன சொன்னாரோ, அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு : யுவகிருஷ்ணா

(நன்றி : புதிய தலைமுறை)

12 கருத்துகள்:

  1. பெயரில்லா4:49 PM, ஜனவரி 30, 2012

    //"உன்னை இன்னொருவனால் உருவாக்க முடியாது. நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்."//

    valuable lines! Thanks for sharing Yuva!

    பதிலளிநீக்கு
  2. இளையராஜா பேசுவது, சிலருக்கு சில நேரங்களில் புரியாது. அவரது பேச்சில் நேரடி அர்த்தத்தை எதிர் பார்த்தால் அப்படித்தான்.//தலை சிறந்த கலைஞன் ஒரு மாதிரி பித்துப் பிடித்தமாதிரி இருப்பது இயல்பானது.அதை சாதாரணர்கள் குறை சொல்வதும் நடப்பதே! இப்படி ஒரு இசையைக் கொடுத்தவன் அப்படி இருப்பதில் வியப்பேது? நன்றி கட்டுரைக்கு...

    பதிலளிநீக்கு
  3. அரியதொரு கட்டுரை,நன்றி

    பதிலளிநீக்கு
  4. சினிமாவைப் பொழுதுபோக்காக மாத்திரம் பார்க்கும் எனக்கு,அதையும் மீறி ஒருவரில் அளவுகடந்த அன்பும் ரசனையும் ஏற்ப்பட்டது என்றால் அது ராஜா மீதே.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //மனித நேயம் அருகிக் கொண்டிருக்கும் உலகில், ராஜாவுக்குள் இருக்கும் இந்த ஈரம்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது. சக மனிதர்கள் மீதான இந்தப் பண்பும், அன்பும் அரிதிலும் அரிதானது.//

    இது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். (இசைஞானி கஞ்சர்; தன் குழுவினருக்குச் சரியாகச் சம்பளம் கொடுக்க மாட்டார். தன் தம்பி கங்கை அமரன் கஷ்டப்பட்ட காலத்தில் கூட இவர் உதவவில்லை - கங்கை அமரனின் முன்னாள் வீட்டு வேலைக்கார அம்மாள்தான் தன்னாலான உதவிகளைச் செய்து குழந்தைகளையும் வளர்த்தார்கள் - என்று தகவல் உலவுகிறதே?

    பதிலளிநீக்கு
  6. யுவா,
    இளையராஜா இசைக்கு எல்லாரும் ஒரு காலத்தில் அடிமை தான். இன்றும் அவரின் இசை எல்லோருக்கும் பிடிக்கும்தான். அவரின் மெலடி க்கு முன்னால் இன்று வரும் ஒரு பாடும் வராது. அவர் ஒரு இசை அரசர். ஆனால் அவரை சித்தர், ஒரு யோகி என்று எல்லோரும் சொல்வது எதனால் என்று புரியவில்லை. ஆத்திகம் பேசும் நீங்களும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை வெளிப்படுத்த தயங்காத நீங்களும் எதை எல்லாம் ஏன் போடுகிறீர்கள் என்று புரியவில்லை. மற்றபடி ஒரு நல்ல பதிவு ராக வேந்தனை பற்றி.

    பதிலளிநீக்கு
  7. இளையரஜாதான் உலகிலேயே மனிதநேயம் அதிகமுள்ள மனிதர்.
    குறிப்பாக "பொறாமை" என்பது சிறிதும் இல்லாத மேதை.

    பதிலளிநீக்கு
  8. ராக தேவதை தனது தளிர் கரங்களில் இளையராஜாவை எப்போதும் கை பிடித்து அழைத்து வருகிறாள்.

    பதிலளிநீக்கு
  9. http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html

    பதிலளிநீக்கு
  10. சிவமணி கூறுவது நம்பும்படி இல்லையே?
    MSVயினால் கவனிக்க முடியாததை இளையராஜா கவனித்தார் என்பதை எவ்வாறு நம்புவது?
    இளையராஜாவை புகழட்டும் . அதற்காக தனக்கு பசி இருப்பதை MSV கவனிக்கவில்லை என்று கூற வேண்டாம்.

    பதிலளிநீக்கு