21 ஜனவரி, 2012

சாதி, வர்க்கம், சோஷலிஸம்

தெரியாத்தனமாக நண்பன் பார்த்துவிட்டேன். பார்த்துத் தொலைத்ததோடு விடாமல் ஏதோ ஒரு அறியாமையில் ‘விமர்சனம்’ மாதிரி எதையோ எழுதித் தொலைத்துவிட்டேன். ’உன்னைப் போல முட்டாளுக்கு படமெல்லாம் ஒரு கேடா?’ என்கிற அளவுக்கு நிர்வாண நண்டு என்கிற தோழர் பின்னூட்டத்தில் அறச்சீற்றத்தை கொளுத்திப் போட்டுவிட்டார். எனவே நேற்று மதுரை மாதிரி பற்றியெரிந்தது நம் இணையத்தளம்.

படத்தில் காட்டப்படும் பொறியியல் மாணவனான ‘விஜய் வசந்த்’ பாத்திரம், frustration தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சமீபத்திய சில வருடங்களில் மட்டும் 18 மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதை இக்காட்சி உருவகப்படுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர் நண்டுவுக்கு இது ஏற்புடையதல்ல. ‘அப்பாத்திரம் தலித் என்கிற வசனம் இல்லாததால், நீயாக எப்படி தலித் என்று குறிப்பிடலாம்? படத்தில் இருப்பதை மட்டும் பேசு’ என்கிறார். நண்பர் குறிப்பிடுவது உண்மைதான். விஜய் வசந்த்தும், அவரது அப்பாவும் கருப்பாக இருப்பது மட்டும் தலித்துக்கான குறியீடல்ல. அவரது அப்பா ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்ப்பதால் மட்டுமே தலித் என்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் திரைப்படம் என்பது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது என்கிற வகையில், சமகாலச் சூழல்தானே வெளிப்படும்? ஒருவேளை ஷங்கர் இயக்கிய படமென்பதால் இம்மாதிரியான தலித் ஆதரவு சித்தரிப்புக்கு வாய்ப்பேயில்லை என்று நண்பர் நண்டு கருதக்கூடும். இங்கே குறிப்பிடும் சமகாலச் சூழல் என்னவென்று புரியாத நண்பர்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

நண்பன் திரைப்படம் வெறும் கல்விப் பாடத்திட்டப் பிரச்சினையைத் தாண்டி, சமூகப் பிரச்சினையையும் (இயக்குனருக்கு தெரிந்தோ தெரியாமலோ) தொட்டிருக்கிறது என்பது என் நம்பிக்கை. இதையே நண்பர் கிருஷ்ணபிரபுவும் அவரது பின்னூட்டத்தில் குறியீடாக சில பாத்திரங்கள் வருவதை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இதை வெறும் சினிமாவாக விவாதிக்காமல், சமூகப் பிரச்சினையாகவும் விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தார். எப்போதும் விவாதித்துக் கொண்டிருப்பதுதான் என்றாலும், இம்மாதிரி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் தீவிரமாக விவாதித்துப் பார்ப்பதில் தவறேதுமில்லை. எத்தனை கோணங்கள், எவ்வளவு தீர்வுகள், எம்மாதிரியான பிரச்சினைகள் என்றெல்லாம் அறிந்துகொள்ள இவ்விவாதங்கள் உதவுகின்றன.

கிருஷ்ணபிரபுவின் சம்பந்தப்பட்ட பின்னூட்டத்தில் “பொருளாதாரத்தால், சமூகத்தால், சாதிப்பிரிவால் ஒடுக்கப்படும் எல்லோருமே தலித்துகள்தானே?” என்று கேட்டிருக்கிறார். சட்டென்று வாசிக்கும்போது ‘சரிதானே?’ என்று தோன்றக்கூடும். இப்படித்தான் இங்கே வெகுஜன கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதில் சாதியும், வர்க்கமும் ஒரே பிரச்சினை என்கிற தொனி இருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். இரண்டும் சர்வநிச்சயமாக வேறு, வேறு. வர்க்க வேறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவன், தன்னளவில் நேர்மையாகவோ அல்லது அநியாயமாகவோ எப்படியோ பொருள்சேர்த்து தன்னுடைய வர்க்கத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பொருள் சேர்ப்பதால் மட்டும் ஒரு தலித் தன் மேல் சுமத்தப்பட்ட சாதிய இழிவை துடைத்துக்கொள்ளவே முடியாது என்பதுதான் இங்கே யதார்த்தம். உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த ஒருவர் கூட, மற்றைய உயர்சாதி நீதிபதிகளால் அவமானப்படுத்தப்படுவது என்பது இங்கே நடைமுறை. நாட்டுக்கே குடியரசுத்தலைவராக தலித் உயர்ந்திருந்தாலும், ஒரு சாதாரண கோயில் கும்பாபிஷேகத்தில் கூட கோபுரத்தில் அமரமுடியாது என்பதுதான் நிதர்சனம். எனவே வர்க்கத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒரே தட்டில் நிறுத்தி விவாதிக்க முடியாது என்று கருதுகிறேன்.

நாட்டில் அவ்வப்போது எவ்வளவோ பிரச்சினைகள் கிளம்பிக் கொண்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் எதோ ஒருவகையில் தீர்வினை கண்டெடுக்க முடிகிறது. சாதிப்பிரச்சினைக்கு மட்டும் கண்ணுக்கெட்டும் தூரத்துக்கு எந்தத் தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. இதன் இந்துத்துவ கட்டுமானம் மிகவும் பலமானது. மனித மனங்களின் அடிப்படையில் சாதியம் இயங்குவதாலும், அது பரம்பரை பரம்பரையாக ஜீன்களின் வழியாக அறிவியல்பூர்வமாகவே கடத்தப்படுவதாலும் நவீன உலகிலும் பூதாகரமாக நமக்கு முன் வளர்ந்து நிற்கும் பிரச்சினையாக இருக்கிறது. மதம் மாறினாலும் சாதியம் மனதில் தங்குமளவுக்கு மிகப்பலத்த கட்டுமானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியொரு பிரச்சினை இந்திய சமூகத்தில் இருப்பதைச் சொன்னால், ஏழை-பணக்காரன் என்கிற வர்க்கப் பிரிவினை மற்றும் ஒரு சில இன, மொழிப் பிரிவினைகளை மட்டுமே கேள்விப்பட்ட மேல்நாடுகளில் இதையெல்லாம் நம்பக்கூட மாட்டார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம் சாதிகள் இங்கே உண்டு. முற்படுத்தப்பட்ட சாதி எனப்படும் பார்ப்பனர்களிலேயே கூட ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன.

‘எல்லோரும் சமம்’ என்கிற கருத்தியலைக் கொண்ட சோஷலிஸம் இதற்கு தீர்வாக தோன்றுகிறது. நேரு முன்நிறுத்திய போலி சோஷலிஸத்தை இங்கே நினைத்துக்கூட பார்க்க வேண்டாம். அது வெறும் வார்த்தையளவில் சொல்லப்பட்ட சித்தாந்தம். துரதிருஷ்டவசமாக சோஷலிஸத்தை இங்கே முன்னெடுக்கக்கூடிய வெகுஜன கம்யூனிஸ்ட்டு கட்சிகளோ வர்க்கத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஐரோப்பாவில் எப்படி கம்யூனிஸம் அமல்படுத்தப்பட்டதோ, அதே மாதிரியை அச்சு அசலாக இங்கே இயந்திரம் மாதிரி பொருத்திப் பார்ப்பது நம்மூர் கம்யூனிஸ்டுகளின் பலவீனம். ஐரோப்பாவில் முதலாளி-தொழிலாளி என்று இரண்டே இரண்டு வர்க்கப் பிரிவு. மாறாக இந்தியாவில் நாலாயிரத்து சொச்சம் சாதிப்பிரிவுகள். இந்தியாவுக்கு ஏற்ற கம்யூனிஸ சிந்தனைகளை புதியதாக உருவாக்கியிருக்க வேண்டும். இந்தப் போதாமையின் காரணமாகதான் மார்க்ஸால், சேகுவேராவால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸப் பாதைக்கு வந்த இந்திய தலித்துகளும், பழங்குடியினரும் பிற்பாடு நக்சலியப் பாதைக்குச் சென்றார்கள்.

கம்யூனிஸ்டுகள் செய்யத் தவறியதை திராவிட இயக்கம் தனக்கான பலமாக உருவாக்கிக் கொண்டது. சோஷலிஸ கம்யூனிஸ்ட்டு சிந்தனைகளை ‘பிட்’ அடித்து, தென்னிந்திய சமூக சாதிப்பிரிவுகளை கணக்கில் கொண்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாகான புதிய சிந்தனைகளை உருவாக்கி மக்களிடம் பிரபலமானது. ஆனால் திராவிட இயக்கம் கூட சாதிப்பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வினைதான் வழங்கியிருக்க முடிகிறது. பிற்படுத்தப்பட்டோரின் எழுச்சியை துரிதமாக்கி செயல்படுத்திக் காட்டிய இவ்வியக்கம், தலித்துகளின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளில் ஈடுபாடு காட்டவில்லை. மாறாக திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளால் வளர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகளை நசுக்குவதை (முன்பு முற்படுத்தப்பட்ட சாதியினர் பிற்படுத்தப்பட்ட சாதியினரை செய்தது மாதிரி) வழக்கமாகிக் கொண்டார்கள். திராவிட இயக்கங்கள் வளர்ச்சி பெற்றதில் பக்க விளைவாக இன்றைய பிற்படுத்தப்பட்டவர் – தலித்துகள் சமூக மோதல் சூழலை நாம் சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம். எனினும் கூட மனுதர்மத்தை முழுமையாக செயல்படுத்தப்பட விடாமல் முட்டுக்கட்டையாக முன் நிற்பதால், திராவிட இயக்கத்தின் தேவை இன்றும், இன்னும் சில ஆண்டுகளுக்கும் அவசியமென்றே கருதுகிறேன். சாதியம் ஒட்டுமொத்தமாக ஒழிவதற்கான ஒளிக்கீற்று தெரியும் வரையாவது இங்கே திராவிட இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தியாக வேண்டும்.

முதலாளித்துவம் ஓரளவுக்கு சாதியத்தை மற்றுக்கக்கூடிய பண்பு கொண்டதாக தெரிகிறது. அறிவோ, பணமோ, ஆற்றலோ கொண்டவனாக இருந்தால், அவனையும் மேல்தட்டுக்கு ஈர்த்துக் கொள்வதில் இது சாதி பாகுபாடு எதையும் பார்ப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்ளலாம். அதே நேரம் முதலாளித்துவத்தின் முக்கிய விளைவாக வர்க்க வேறுபாடு அதிகரித்துக் கொண்டே செல்லுவது பெரும் ஆபத்தில் முடிகிறது. இந்தியா ஏழை நாடாக 90களுக்கு முன்பாக இருந்தபோது கூட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டதில்லை. வளரும் நாடாக, இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசு ஆகப்போகிறது என்றிருக்கும் சூழலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கே தொழில் செய்யமுடியாமல் கொத்து கொத்தாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். டங்கலின் காட் ஒப்பந்தம் வந்த காலக்கட்டத்தில் உறுதி கூறப்பட்ட விஷயங்கள் இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தியாவில் நிறைய பணம் இருக்கும். லட்சாதிபதி கோட்டீஸ்வரன் ஆவான். ஏழை நடுத்தரவாதியாக உயர்வு பெறுவான் என்றெல்லாம் நாக்கில் தேன் தடவி சொன்னார்கள். இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் சொன்னதில் பாதி நிறைவேறியிருக்கிறது. இந்தியாவில் இப்போது நிறைய பணம் இருக்கிறது. லட்சாதிபதிகள் கோட்டீஸ்வரன்களாக மட்டுமல்ல, குபேரன்களாகவும் ஆகியிருக்கிறார்கள். ஆனால் ஏழைகளோ சிரமப்பட்டு வாழமுடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். முதலாளித்துவத்துக்கு சொல்லிக் கொள்ளக்கூடிய சாதியப் பண்புகள் குறைவு என்பதற்காக, அதை வரவேற்றுவிட முடியாது. அதனுடைய மற்ற பக்கவிளைவுகள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட கொடுமையானதாக இருக்கிறது.

நாம் இப்போது வைத்துக் கொண்டிருக்கும் படு வீக்கான ஜனநாயகத்தைக் கொண்டு இந்த விஷயத்தில் புல்லு கூட புடுங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஸ்டாலின், மாசேதுங் மாதிரி யாரேனும் இரும்பு மனம் கொண்ட தலைவர் முற்போக்கு எண்ணங்களோடு கூடிய ஒரு சோஷலிஸ சர்வாதிகாரத்தை இங்கே அமல்படுத்தினால் மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்திய சமூகத்தின் சாதியப் பிரிவுகளை அடித்து நொறுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு இன்னும் ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குள் எல்லாம் நடந்து விடும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

35 கருத்துகள்:

  1. //ஸ்டாலின், மாசேதுங் மாதிரி யாரேனும் இரும்பு மனம் கொண்ட தலைவர் முற்போக்கு எண்ணங்களோடு கூடிய ஒரு சோஷலிஸ சர்வாதிகாரத்தை இங்கே அமல்படுத்தினால் மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்திய சமூகத்தின் சாதியப் பிரிவுகளை அடித்து நொறுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.// இது கிட்டத்தட்ட ஷங்கர் படம் கதைதான்!. அப்படியே அமைந்தாலும் சர்வாதிகாரி என்பவர் நல்ல நோக்கத்தோடு இருந்ததாக சரித்திரமே கிடையாது. அப்படி இருந்தாலும் அவன் உருவாக்கி வைத்த 'தனி ஒருவனுக்கான அதிகார அமைப்பு' இன்னொரு மோசமானவனிடம் கிடைத்தால் பாதிப்புகளை சரி செய்ய நூற்றாண்டுகளாகிவிடும். small is beautiful. வேறுவழியில்லை. காந்தி சொன்ன கிராமப் பொருளாதார அமைப்புதான் சிறந்த வழி! ஆனால் அது 'கவர்ச்சிகரமானதாக' இல்லை. ஆட்சியாளருக்கும் பொதுஜனங்களுக்கும்......

    பதிலளிநீக்கு
  2. // “பொருளாதாரத்தால், சமூகத்தால், சாதிப்பிரிவால் ஒடுக்கப்படும் எல்லோருமே தலித்துகள்தானே?” என்று கேட்டிருக்கிறார். //

    தர்மபுரி அருகே ஒரு தலித் இன்ஸ்பெக்டர் வன்னிய சாதி வெறியர்களால் தாக்கபட்டார், அதற்கு வன்னியகுல திலகம், பசுமைக்கு பச்சை பெயிண்ட் அடித்து கொண்டிருக்கும் அருள் கொடுத்த சப்பைகட்டு இருக்கே!

    எப்பப்பா சொல்லி மாளாது!

    பதிலளிநீக்கு
  3. சாதிப்பிரச்சினைக்கு மட்டும் கண்ணுக்கெட்டும் தூரத்துக்கு எந்தத் தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. இதன் இந்துத்துவ கட்டுமானம் மிகவும் பலமானது. //

    ஏன் முடியாது?

    நான் என் மகளுக்கு மூன்று பள்ளி மாற்றியும் சாதி சான்றிதழ் தரமாட்டேன் என சண்டை போட்டது தெரியும் தானே.

    என்னால் முடிந்தது உங்களால் முடியாதா? ஏன் மற்றவர்களால் முடியாதா?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4:56 PM, ஜனவரி 21, 2012

    'ஆத்திரப்படமாட்டேன்'னு அறிவிப்பு பலகை எழுதிப்போட்ட பிறகும் உங்கள ஆத்திரப்பட வச்சிட்டாரே நிர்வாண நண்டு!

    பதிலளிநீக்கு
  5. மனித மனங்களின் அடிப்படையில் சாதியம் இயங்குவதாலும், அது பரம்பரை பரம்பரையாக ஜீன்களின் வழியாக அறிவியல்பூர்வமாகவே கடத்தப்படுவதாலும்//


    என்னே ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு.
    சாதிக்கும் ஜீனுக்கும் என்ன சம்பந்தம்.

    நம்ம பெற்றோர் சொல்லி தான் நாம் சாதியை தெரிஞ்சிகிறோம்!

    இல்ல சாதிக்குன்னு ஒரு புத்தி இருக்குன்னு சொல்றிங்களா?

    அப்ப தாழ்ந்த சாதி மக்கள் உயர்ந்த பணியில் அமர்த்த லாயக்கில்லாதவர்களா என்ன?

    பதிலளிநீக்கு
  6. // மதம் மாறினாலும் சாதியம் மனதில் தங்குமளவுக்கு மிகப்பலத்த கட்டுமானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.//


    ஏன் இருக்காது.

    அதிக எண்ணிக்கையில் உள்ள இந்து சாதியினருக்கே எல்லா சலுகையும் கொடுத்தால் ஒருவன் மதம் மாறினாலும் சாதி பெயரை சொல்லத்தான் செய்வான்!

    சிறுபான்மை சமூகத்தினருகென்று அரசு என்ன சட்டம் வச்சிருக்கு இங்கே?

    அது இருந்தா எப்பவோ சாதி ஒழிஞ்சிருக்கும்!

    இந்தியாவில் ஆத்திகன், நாத்திகன்னு ரெண்டு பிரிவு தான் இருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  7. முற்படுத்தப்பட்ட சாதி எனப்படும் பார்ப்பனர்களிலேயே கூட ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன.//

    ஆனா அவுனுக்கு ஒண்ணுன்னா ஓடியாறானுங்க பாரு, அப்பத்தான் தெரியுது அவனும் பாப்பான்னு! :)

    அது சாதி அல்ல சாதி பிரிவு!

    கவுண்டரில் காடை கூட்டம், கவுதாரி கூட்டம் என இருப்பது போல்!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா5:03 PM, ஜனவரி 21, 2012

    நாம ஜாதி இல்லன்னு சொன்னாலும் நம்ம சொந்தக்காரங்க எல்லாம் ஒரே ஜாதியாகத்தானே இருக்கிறார்கள்!அதனால ஒழிக்கிறது கடினம் என்றே தோன்றுகிறது.ஜாதிகளுக்கிடையான புகைச்சலை,அடிமைத்தனத்தை எதிர்க்கணும். திராவிடஇயக்கத்தினர் வேகத்தோடு இருந்ததால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் விடுதலை கிடைத்தது.தலித்துகளுக்கு வேற ஒரு குரூப்தான் முயற்சிக்கணும்.

    பதிலளிநீக்கு
  9. கம்யூனிஸ்டுகள் செய்யத் தவறியதை திராவிட இயக்கம் தனக்கான பலமாக உருவாக்கிக் கொண்டது. சோஷலிஸ கம்யூனிஸ்ட்டு சிந்தனைகளை ‘பிட்’ அடித்து, தென்னிந்திய சமூக சாதிப்பிரிவுகளை கணக்கில் கொண்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாகான புதிய சிந்தனைகளை உருவாக்கி மக்களிடம் பிரபலமானது. ஆனால் திராவிட இயக்கம் கூட சாதிப்பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வினைதான் வழங்கியிருக்க முடிகிறது.//


    லக்கி உண்மையிலேயே மிக மிக நடுநிலையான கருத்தை இன்று அதுவும் திராவிட கட்சிகள் பற்றிய கருத்தை பார்க்கிறேன், அருமை!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா5:05 PM, ஜனவரி 21, 2012

    //அதிக எண்ணிக்கையில் உள்ள இந்து சாதியினருக்கே எல்லா சலுகையும் கொடுத்தால் ஒருவன் மதம் மாறினாலும் சாதி பெயரை சொல்லத்தான் செய்வான்!

    சிறுபான்மை சமூகத்தினருகென்று அரசு என்ன சட்டம் வச்சிருக்கு இங்கே?//
    இதில் நான் முரண்படுகிறேன். வால்பையன் அரசாங்க சலுகைகளுக்காகவே ஜாதி இன்னும் நீடித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். கிடையவே கிடையாது. அது தாய் தகப்பனை பார்த்து ஊறிப் போனது.

    பதிலளிநீக்கு
  11. பிற்படுத்தப்பட்டோரின் எழுச்சியை துரிதமாக்கி செயல்படுத்திக் காட்டிய இவ்வியக்கம், தலித்துகளின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளில் ஈடுபாடு காட்டவில்லை. மாறாக திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளால் வளர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகளை நசுக்குவதை (முன்பு முற்படுத்தப்பட்ட சாதியினர் பிற்படுத்தப்பட்ட சாதியினரை செய்தது மாதிரி) வழக்கமாகிக் கொண்டார்கள். திராவிட இயக்கங்கள் வளர்ச்சி பெற்றதில் பக்க விளைவாக இன்றைய பிற்படுத்தப்பட்டவர் – தலித்துகள் சமூக மோதல் சூழலை நாம் சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்.//


    ஆணித்தரமான கருத்து. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி வேட்பாளர்கள் சாதி அடிப்படையில் நிறுத்தப்படுவதிலேயே அவர்களின் போக்கு தெரிந்து விட்டது!

    பதிலளிநீக்கு
  12. மனுதர்மத்தை முழுமையாக செயல்படுத்தப்பட விடாமல் முட்டுக்கட்டையாக முன் நிற்பதால், திராவிட இயக்கத்தின் தேவை இன்றும், இன்னும் சில ஆண்டுகளுக்கும் அவசியமென்றே கருதுகிறேன்.//


    இப்பத்தான் சொன்னேன், வேட்பாளர்கள் சாதீய அடிப்படையில் நிறுத்தப்படுகிறார்கள் என்று. ஓட்டு கட்ச்சிக்கு விழுதா இல்ல சாதிக்கு விழுதாய்யா?

    பின் எங்கிருந்து மறையும் மனுதர்மம்!

    பதிலளிநீக்கு
  13. இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசு ஆகப்போகிறது என்றிருக்கும் சூழலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கே தொழில் செய்யமுடியாமல் கொத்து கொத்தாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். //


    யாருப்பா அது உரம் மற்றும் விவசாயத்துறை அமைச்சர்!

    பதிலளிநீக்கு
  14. அரசாங்க சலுகைகளுக்காகவே ஜாதி இன்னும் நீடித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். கிடையவே கிடையாது. அது தாய் தகப்பனை பார்த்து ஊறிப் போனது.//


    ஊறிப்போனது வெகுண்டெழ கேட்கும் உரிமை தான் ஒதுக்கீடு.

    ஆரம்பத்திலேயே ஒழுங்கா மதிக்கபட்டிருந்தா எதுக்கு இப்போ சாதிய ரீதியான ஒதுக்கீடு.

    வழி விடுங்கப்பா, அவர்களும் மனிதர்கள் தான்!

    பதிலளிநீக்கு
  15. பலவீனமான மானுடம்தான் இங்கே!.

    http://www.jeyamohan.in/?p=23200

    பதிலளிநீக்கு
  16. //ஊறிப்போனது வெகுண்டெழ கேட்கும் உரிமை தான் ஒதுக்கீடு.

    ஆரம்பத்திலேயே ஒழுங்கா மதிக்கபட்டிருந்தா எதுக்கு இப்போ சாதிய ரீதியான ஒதுக்கீடு//

    அரசாங்கம் மொத்தமாகவே தன் கையில் வைத்திருக்கும் வேலை வாய்ப்புகள்,கல்வி ஒதுக்கீடுகள் மிக மிக குறைவு இவ்வளவு ஜனத்தொகையை ஒப்பிட்டுப்பார்த்தால். தனியார் மற்றும் unorganised sector தான் வருமான ஆதாரங்களுக்கான வழிகள். அதனால் இடஒதுக்கீடு என்பது ஜாதியை ஒழிக்கவே ஒழிக்காது. அது ஒரு தேவை மட்டுமே!

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா5:29 PM, ஜனவரி 21, 2012

    /// நாம் இப்போது வைத்துக் கொண்டிருக்கும் படு வீக்கான ஜனநாயகத்தைக் கொண்டு இந்த விஷயத்தில் புல்லு கூட புடுங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ///

    மாயாவதி என்கிற தலித் பெண் ஆட்சிக்கு வர முடிந்ததைப் பார்த்துவிட்டுமா இப்படிச் சொல்கிறார்கள்?

    சரவணன்

    பதிலளிநீக்கு
  18. இந்த இடுகையையும் நீங்கள் கொடுத்துள்ள மற்ற இரண்டு இணைப்புகளையும் படித்தேன்...

    இந்த காலத்துல எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறாங்க...? என்று கேட்கும் சிலருக்கும், அதுவும் சரிதானே...? என்று எண்ணிக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கும் நிறைய விஷயங்களை புரிய வைத்தது உயிர்மை லிங்க்...

    நண்பன் விமர்சனத்தை பொறுத்தவரையில் நீங்கள் சில இடங்களில் சறுக்கிவிட்டீர்கள் என்பதே உண்மை.... நண்டுவின் ஒருசில பின்னூட்டங்கள் நியாயமாக படுகிறது...

    பதிலளிநீக்கு
  19. ஷங்கர் ஒரு அயோக்கியர் என்பது என் கருத்து... ஆனால் சம்பந்தப்பட்ட படம் Five point some one என்ற ஆங்கில நாவலை காப்பியடித்து எடுக்கப்பட்ட 3 idiots என்ற ஹிந்தி படத்திலிருந்து காப்பியடிக்கப் பட்டிருப்பதால் இயக்குனர் வேறு வழியில்லாமல் அல்லது வழி தெரியாமல் அத்தகைய காட்சிகளை வைத்திருக்கிறார்...

    பதிலளிநீக்கு
  20. அரசாங்கம் மொத்தமாகவே தன் கையில் வைத்திருக்கும் வேலை வாய்ப்புகள்,கல்வி ஒதுக்கீடுகள் மிக மிக குறைவு இவ்வளவு ஜனத்தொகையை ஒப்பிட்டுப்பார்த்தால். தனியார் மற்றும் unorganised sector தான் வருமான ஆதாரங்களுக்கான வழிகள். அதனால் இடஒதுக்கீடு என்பது ஜாதியை ஒழிக்கவே ஒழிக்காது. அது ஒரு தேவை மட்டுமே! //

    முடியாதுன்னு நினைக்கிறதால தான் நாம் இன்னும் நிலாச்சோறு ஊட்டுறோம்!

    அமெரிக்கா காரன் நிலாவுக்கு ராக்கெட் விடுறான்!

    (சந்திரயான் நிலாவுல இருக்குச்சுன்னு எதாவது புது கதை சொல்லிறாதிங்க)

    நன்றி - சத்தியராஜ்

    பதிலளிநீக்கு
  21. மாயாவதி என்கிற தலித் பெண் ஆட்சிக்கு வர முடிந்ததைப் பார்த்துவிட்டுமா இப்படிச் சொல்கிறார்கள்?//


    அதே தான்

    இங்கே ஏன் திராவிட கட்சிகள் பெரும்பான்மையான தலித்துகளை வேட்பாளர்களாக நிறூத்துவதில்லை!?

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா8:06 PM, ஜனவரி 21, 2012

    என் கருத்து!
    http://nudenandu.blogspot.com/2012/01/blog-post_21.html
    கொஞ்சம் பெரியதாக இருப்பதால் பின்னூட்டமாக போட இயலவில்லை! சுட்டி கொடுத்திருக்கிறேன்! விரும்பினால் சென்று படிக்கவும்!
    நன்றி..!
    சென்ற பதிவில் என் பின்னூட்ட கருத்துகள் உங்களை பாதித்திருந்தால் மன்னிக்க! எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன்! அதை அப்படியே வெளியிட்டதற்கு நன்றி!
    'நியுட்'நண்டு

    பதிலளிநீக்கு
  23. இந்திய தத்துவ மரபில், ஜாதிய தரிசனத்துக்கு முக்கிய இடம் இருப்பதாக் ஒருவர் சொல்வ்தை இருட்டடிப்பு செய்வதை கண்டிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  24. வால்பையன், சாதி சான்றிதழ் தராமல் இருக்கிறது ஒரு பெரிய விசயமில்லை. உங்க மகனோ, மகளோ உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் வேண்டாம் என்று சொல்லுங்கள். உங்க வைராக்கியத்த அப்போ பார்க்கலாம். ஜாதியை இந்தியாவில் ஒழிக்க முடியாது!

    பதிலளிநீக்கு
  25. சாதி அடுத்தடுத்த தலைமுறைக்குப் பரவுவதற்கு காரணம் குடும்ப அமைப்புதான். இறுக்கமான குடும்ப அமைப்பு இருக்கும் இந்தியாவில் சாதி ஒழிப்பு சாத்தியம் இல்லை. எதிர்காலத்தில் மேற்கத்திய நாடுகள் போல குடும்ப அமைப்பு சீர்குலைந்தால் சாதி மறைய வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு
  26. இந்தியாவில் சாதியை சரியான புரிதலுடன் ஒழிக்க நடந்த எல்லா முயற்சிகளையும் சில மொக்கையாளர்கள் உள்ளே நுழைந்து குழப்பி திசைதிருப்பி நீர்த்து போக செய்கிறார்கள் .ஆங்கிலேயர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கு இருந்திருந்தால் சாதி என்ற ஒன்றை இல்லாமல் செய்திருப்பார்கள்.சதியை, குழந்தை திருமணத்தை, தேவதாசி முறையை அவர்கள் தானே ஒரே நாளில் ஒழித்துக்கட்டினர்.

    பதிலளிநீக்கு
  27. அருட்பெருஞ்சித்தன்11:56 PM, ஜனவரி 21, 2012

    யுவா இப்படி நேர்மையாக நடுநிலையாக எழுதுவதை பாராட்டுகிறேன் வாசகர்கள் குறைந்து விடுவார்கள் என பலர் போல் பயந்து கொண்டு ஜனரஞ்சகமாக எழுதாமல் துணிவுடன் செய்த இந்த பதிவு உங்களுக்குள் ஒரு கருணை மிக்க சார்புகளற்ற ஆளப்பிறந்தவன் ஒருவன் உறைவதை காட்டுகிறது....செவ்வணக்கம்.

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா5:29 PM, ஜனவரி 22, 2012

    அச்சோச்சோ, வால் வந்திருக்கு சொம்ப உள்ள எடுத்துவைங்கப்பா !!!

    பதிலளிநீக்கு
  29. Looks at these 2 articles (especially the heading) and see the TOI attitude!!!

    http://timesofindia.indiatimes.com/world/pakistan/Pakistan-arrests-31-Indian-fishermen/articleshow/11588946.cms

    http://timesofindia.indiatimes.com/india/Another-attack-on-Tamil-Nadu-fishermen-by-Lankan-navy-9-missing/articleshow/11589691.cms

    பதிலளிநீக்கு
  30. //வால்பையன், சாதி சான்றிதழ் தராமல் இருக்கிறது ஒரு பெரிய விசயமில்லை. உங்க மகனோ, மகளோ உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் வேண்டாம் என்று சொல்லுங்கள். உங்க வைராக்கியத்த அப்போ பார்க்கலாம். ஜாதியை இந்தியாவில் ஒழிக்க முடியாது! //

    ஒழிக்கமுடியாது என உங்களை போல ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் சாதி இருக்கிறது.

    எனக்கு எந்த ஒதுக்கீடும் வேண்டாம் என்று தானே சாதி சான்றீதழ் தரமாட்டேன், மீறி கேட்டால் வழக்கு தொடருவேன் என்று சொல்லி வருகிறேன் பள்ளிகளில்!

    பதிலளிநீக்கு
  31. அண்ணே கோழி பண்ணை ஓ.கே. கருப்பு நிறம் ஓ.கே. சம காலத்தில் தலித் மாணவர்கள் தான் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ஓ.கே. இதை எல்லாம் கனெக்ட் பண்ணினா படத்துல செத்து போனது தலித் பையன் தான்னு சொல்றீங்கோ ஓ.கே. ஆனா ஒரு பாஸிஸ்டு இயக்குனர் ஜகஜால ஜங்கர் ஜி படம் அப்படிங்குறத நீங்க டைட்டில் கார்டுல பாத்தப்புறமும் இப்படி நீங்க நம்புறத பாதா....நெஜமாவே பத்து கொல இருபது ரேப் பண்ணினாலும் நீ ரொம்ப அப்பாவி தான் சார்.

    பதிலளிநீக்கு
  32. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 'வாகான' புதிய சிந்தனைகளை உருவாக்கி மக்களிடம் 'பிரபலமானது'.

    Unga vaayaaleye Ketteenga ponga !

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா4:06 PM, ஜனவரி 24, 2012

    வலை தல வாசகர்களிடம் நேர்மையானவர் என்று பெயர் எடுத்திருக்கும் "லக்கிலுக்" ஒரே விமர்சனத்தின் மூலம் தானும் சாதி வெறியர்கள் என்னும் குட்டையில் ஊறிய மட்டை தான் என்பதை நிரூபித்துவிட்டார். சாதி என்பது தமிழர்களின் ஜீன்களோடசம்பந்தப்பட்டது. என்னதான் வேஷம் போட்டாலும், ஒரு நாள் அது தன் வேலையை காட்டி விடும். நீங்களும் அதற்க்கு விதி விளக்கல்ல. இப்பொழுது வரும் திரை படங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் திருடர்களாகவோ, ரௌடிகளகாவோ காட்டப்படுகிறார்கள். இல்லை என்றால் தாழ்த்த பட்டவன் இறந்து விடுகிறான்.உ-ம் (காதல், தசாவதாரம், வெண்ணிலா கபாடி குழு, நண்பன்)

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா6:32 PM, ஜனவரி 25, 2012

    நக்சல்கள் கம்யுனிஸ்டுகள் தான்..... பழங்குடிமக்கள் கம்யுனிஸ்டுகளை விட்டுவிட்டு நக்சல்க்ளை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது தவறு....போலிகளை விடுத்து உண்மை கம்யுனிஸ்டுகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது தான் சரி

    பதிலளிநீக்கு