18 ஜனவரி, 2012

வன்முறைக்கு பலியாகிறதா வாலிபம்?

அந்த பேருந்துக்குள் இருந்து திடீரென்று திமுதிமுவென்று இறங்கியவர்களின் கைகளில் உருட்டுக்கட்டை, கத்தி மாதிரியான ஆயுதங்கள் இருந்தது. கீழே நின்றிருந்தவர்களை ஓட ஓட விரட்டி தாக்க அந்த வளாகம் முழுக்க இரத்தக்களரி. இருவருக்கு மோசமான காயம்.

ஒரு இருபது பேர் உருட்டுக்கட்டை மாதிரியான ஆயுதங்களோடு அந்த இளைஞனை துரத்திச் செல்கிறார்கள். துரத்துபவர்கள் கையில் கிடைத்த கற்களையும் வீசிக்கொண்டே துரத்துவதால், கண்களில் பீதியோடு உயிர்பிழைக்க ஓடுகிறான். இனியும் ஓடமுடியாது என்ற நிலையில் வழியில் இருந்த ஆற்றில் குதிக்க, மறுநாள் அவனது உடல் போலிஸாரால் கண்டெடுக்கப் படுகிறது.

இந்த இரண்டு சம்பவங்களுமே ஏதோ தெலுங்கு டப்பிங் படத்தில் இடம்பெற்ற காட்சியல்ல. தலைநகர் சென்னையில் அரசுக் கல்லூரி வளாகங்களில் நடைபெற்றவை. தாக்கியவர்களும், தாக்கப்பட்டவர்களும் மாணவர்களே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான மோதல் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டு தமிழகமே அதிர்ந்தது நினைவிருக்கலாம்.

அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெறும் இதுபோன்ற செய்திகளால் அரசுக் கல்லூரி மாணவர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்கிற சித்திரம் சாதாரண பொதுஜனத்துக்கு ஏற்பட்டு விட்டது.

உண்மையிலேயே என்னதான் நடக்கிறது... மாணவ சமுதாயம் வன்முறை வெறியாட்டங்களுக்கு சிக்கி பலியாகிக் கொண்டிருக்கிறதா.. பின்னணியில் ஏதேனும் சுயநல சக்திகள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? மதம், சாதி, அரசியல் என்று வேறு ஏதேனும் பிரிவினைக் காரணிகள் இம்மாதிரி வன்முறைகளுக்கு காரணமா? கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களிடம் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம் – குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் – மிக மோசமான எல்லைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து ‘புதிய தலைமுறை’ களத்தில் இறங்கி அரசுக் கல்லூரிகளில் விசாரணை மேற்கொண்டது. தனியார் கல்லூரிகளிலும் வன்முறை உண்டு. ஆனால் அது வேறு மாதிரியானது. தனியார் கல்லூரிகளில் இன்னமும் முழுமையாக ஒழிக்கப்பட முடியாத ராக்கிங் பிரச்சினை, அரசுக் கல்லூரிகளில் சுத்தமாக இல்லவே இல்லை என்பதும் நம் விசாரணையில் தெரியவந்தது.

“நமது மாணவர்கள் சொக்கத் தங்கங்கள். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் காலத்தில் களிமண் மாதிரிதான் இருப்பார்கள். அவர்களை நல்ல முறையில் வடிவமைக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருக்கிறது. குறிப்பாக கல்லூரிக்கும், அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் செல்லும் பாதையை அவர்களது வாழ்க்கைச் சூழல்தான் முடிவெடுக்கிறது. மாணவ சமூகம் வன்முறைப் பாதைக்குச் செல்கிறது என்றால், வெறுமனே அவர்களை நோக்கி குற்றம் சாட்டிவிட்டு நாமெல்லாம் தப்பிக்க நினைப்பது அயோக்கியத்தனம். மாணவர்களிடையே வன்முறை என்பது சமூகம் உற்பத்திச் செய்த சாத்தான்” என்கிறார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.

பேராசிரியரின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். அரசுக் கல்லூரிகளில் பயிலவரும் மாணவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்ட நிலையில் இருந்து வருகிறார்கள். காட்டில் வளரும் செடிகளை ஒத்தவர்களாக பெற்றோர்களால் பாதுகாக்க, பரமாரிக்கப்படாத நிலையில் இருக்கிறார்கள். நிறைய பேர் முதல் தலைமுறையாக பட்டப்படிப்புக்கு வருகிறார்கள். கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு இவர்கள் என்ன படிக்கிறார்கள், கல்லூரிக்கு ஒழுங்காக செல்கிறார்களா என்றெல்லாம் கணிக்கவோ, கண்காணிக்கவோ இயலவில்லை.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்து, வீட்டுவேலை செய்யும் அம்மாவால் படிக்கவைக்கப்படும் இளைஞர்களும் அதிகம். Broken families என்று சொல்லப்படும் பெற்றோரின் கருத்துவேறுபாட்டால் சிதறிய குடும்பங்களில் இருந்து படிக்க வருபவர்கள், பெற்றோரே இல்லாமல் உறவினர்கள் உதவியோடு படிக்கும் மாணவர்கள் என்று ஒவ்வொரு கல்லூரியிலும் கண்ணீர்க் கதைகள் ஏராளம்.

உதாரணத்துக்கு மகேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எடுத்துக் கொள்வோம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டார். இவரையும் சேர்த்து மூன்று குழந்தைகள். தாய் தனது பொறுப்பை துறந்துவிட்ட எங்கோ சென்றுவிட, மூவரும் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கிறார்கள். உறவினரும் ஏழ்மையானவர்தான். தங்களது உணவுக்கும், கல்விக்கும் இவர்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இரவு வேளைகளில் சில தொழிற்சாலைகளில் பணியாற்றி, பகலில் கல்லூரிக்குச் செல்கிறார் மகேஷ்.

“இம்மாதிரி மாணவர்களை தகப்பனாக நின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவர்களது ஆசிரியர்களுக்குதான் இருக்கிறது” என்கிறார் நம்மிடம் பேசிய பேராசிரியர். கண்காணிப்பு இல்லாததாலும், வறுமைச் சூழலும் இவர்களை எந்த குறுக்கு வழிக்கு வேண்டுமானாலும் திருப்பக்கூடும் என்பது அவரது அச்சம்.

பேராசிரியரின் அச்சத்துக்கு ஏற்ப ஆசிரியர்-மாணவர் உறவின் நெருக்கம் குறைந்து வருகிறது. வகுப்பில் பாடம் எடுப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக சில ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியத் தொழிலை வருமானத்துக்காக எடுத்துக் கொள்பவர்களும் பெருகிவருகிறார்கள். வகுப்பறை தாண்டிய மாணவர்களின் செயல்பாடுகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மீது வைக்கப்படுகிறது. பெற்றோர்களால் கவனிக்கப்படாத மாணவர்களை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டாலே பெருமளவில் இப்பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

நாம் விசாரித்ததில் மாணவர்களுக்கிடையே விரோதம் ஏற்பட ‘பஸ் ரூட் கலாச்சாரம்’ முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. மிகச்சமீபத்தில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமாக இதைதான் காவல்துறையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. சென்னையின் அம்பத்தூர், பாடி, அயனாவரம் ஆகிய தடங்களில் இருந்து வரும் 27-எச், 27-பி ஆகிய பேருந்துகளில் வந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், ராயபுரம், காசிமேடு, சுங்கச்சாவடி ஆகிய தடங்களில் இருந்து வரும் 6-டி பேருந்தில் வரும் மாணவர்கள் மற்றொரு குழுவாகவும் உருவெடுத்திருக்கிறார்கள். கல்லூரித் தேர்தலின் போது இந்த இரு தட மாணவர்களுக்குள்ளும் சிறு சிறு உரசல்கள் ஏற்பட, நீறுபூத்த நெருப்பாக இருதரப்பினரின் நெஞ்சிலும் வன்முறை பற்றியெரியத் தொடங்கியது. இதன் உச்சமாகதான் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கல்லூரி வளாகத்திலேயே ஆயுதங்களோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பஸ்ரூட் கலாச்சாரம் என்பது வாழையடி வாழையாக தொடர்கிறது. சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை உருவாக்குவது என்பது இக்கலாச்சாரத்தின் முக்கிய அங்கம். பகுதிவாரியாக இம்மாதிரி உருவாகும் குழுக்கள், மற்ற பகுதி குழுக்களோடு கேலி கிண்டலில் ஈடுபடுவது முற்றிப்போய்தான் வன்முறையில் இறங்குகிறார்கள். சென்னையில் பிரசித்தி பெற்ற ‘பஸ் டே’ கலவரங்கள் உருவாவது இம்மாதிரிதான். தொடக்கத்தில் மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுனர் நடத்துனருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய ‘பஸ் டே’ இன்று வன்முறை கலாச்சாரமாக உருவெடுத்து, தடை செய்யப்பட்டிருக்கிறது.

பஸ்ரூட் கலாச்சாரம் மாதிரியே மாணவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் இன்னொரு கலாச்சாரம் ஹாஸ்டல் கலாச்சாரம். வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் ஒரு தரப்பாகவும், நகரங்களில் வீடுகளில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் இன்னொரு தரப்பாகவும் பிரிகிறார்கள். படுமோசமாக பராமரிக்கப்படும் ஹாஸ்டல்களில் இருந்து வரும் மாணவர்கள், வீட்டு மாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். இதனால் ஏற்படும் உரசல்களும் பெரும் சண்டையாக மாறுகிறது.

“இம்மாதிரி மோதல்களை பொறுக்கித்தனம், ரவுடித்தனமாக மக்கள் பார்க்கிறார்கள். இது சமூகத்தின் பிரதிபலிப்புதான். சமூகம் எப்படி இயங்குகிறதோ, அம்மாதிரிதான் மாணவர்களும் இயங்குவார்கள். இப்போதுதான் திடீரென இம்மாதிரி நடப்பதாக கருதுவது சரியல்ல. எல்லா தலைமுறையிலுமே வாலிபக் குறும்புகள் உண்டு. அரசியலற்றப் போக்கு திட்டமிட்டு உருவாக்கப் படுவதால் சமூகப் பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய மாணவர் இனம் இம்மாதிரி, வெட்டிச் சண்டைகளில் சக்தியை வீணடிக்கிறார்கள்” என்று கவலைப்படுகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் (RSYF) மாநில அமைப்பாளர் கணேசன். ஊடகங்கள் (குறிப்பாக சினிமா), அரசியல்வாதிகள், அரசு திட்டமிட்டு இம்மாதிரியான ‘விட்டேத்தி கலாச்சாரத்தை’ உருவாக்குகிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். தனியார் மய ஊக்குவிப்பிற்காக அரசுக் கல்லூரிகளை தரமிழக்க செய்ய வைக்கும் ஒரு முயற்சியின் விளைவாகவே மாணவர்களிடம் வன்முறை பெருகுகிறது என்கிறார் இவர்.

சமீபத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய ஒரு மாணவனிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. சினிமாக்களில் காட்டப்படும் கல்லூரி மாணவன் பைக் வைத்திருக்கிறான். நல்ல ஆடை ஆணிகிறான். நகைகள் அணிந்திருக்கிறான். அம்மாதிரி நானும் வாழ நினைத்தேன் என்கிறான். கடந்த ஆண்டு வெளியான சினிமாப்படம் ஒன்றில் காதலியோடு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குச் செல்ல கதாநாயகன் திருட்டில் ஈடுபடுவது போன்ற காட்சி இருந்தது. அந்தக் காட்சி இம்மாணவனைப் பாதித்து, அதேமாதிரியான வழிமுறையில் இறங்கினான் என்பதுதான் இங்கே அதிர்ச்சியான விஷயம். கடந்த ஆண்டிலேயே அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படும் திரைப்படம் ஒன்றும்கூட கொள்ளையையும், வன்முறையையும் தவறல்ல என்று போதிக்கிறது. சினிமா நாயகர்களை தங்கள் ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளும் இளைஞர்களின் மனதை இது பாதிப்பது இயல்பாக நடக்கக்கூடியதுதான். தன்னைத்தானே ஹீரோ என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவனும், தன்னைப் பாதித்த சினிமா ஹீரோவின் பாத்திரமாகவே மாறிவிடுகிறான்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாணவர்களை கூட்டம் சேர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்வதும், அவர்களை கல்வி சார்ந்த நோக்கத்தில் இருந்து தடம் மாற செய்கிறது. சில காலம் முன்பாக தென்மாவட்டம் ஒன்றில் நடந்த அரசியல் கட்சி மாநாடு ஒன்றுக்கு சென்னையின் அரசுக்கல்லூரி ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தபட்சம் ஐநூறு மாணவர்களை அழைத்து வந்தாகவேண்டும் என்கிற வாய்மொழி உத்தரவு அக்கட்சியின் மாணவர் அணிக்கு விடப்பட்டிருந்ததாம். இவ்வகையில் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவர்கள், ஏதேனும் பிரச்சினைகளின் போது, “நான் யாரோட ஆளுன்னு தெரியுமில்லே?” என்று எதிர்த்தரப்பை பயமுறுத்துவது சகஜமாகிவிட்டது. ஒருக்கட்டத்தில் ஏதேனும் உள்ளூர் அரசியல் தலைக்கு அடியாள் மாதிரி செயல்படக்கூடியவனாகவும் அம்மாணவன் மாறிவிடுகிறான்.

இம்மாதிரி சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அப்பாவி மாணவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஐம்பது முதல் அதிகபட்சமாக நூறு மாணவர்கள் வரை மட்டுமே அடாத செயல்களில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்களும், நிர்வாகமும் இவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்கிறது. பேசிப்பேசியே இவர்களை சரியாக கொண்டுவந்துவிடலாம் என்றாலும் கூட, காவல்துறையிடம் பொறுப்பை தள்ளிவிட்டுவிடுகிறார்கள். இப்பிரச்சினையை காவல்துறையோ ‘க்ரைம்’ என்கிற வகையில் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. காவல்துறை கல்லூரிக்குள் நுழைகிறது என்றாலே மாணவர்களுக்கு வெறி ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த மாணவர்கள் – நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்தில், “நீங்கள் எங்களை என்ன வேணும்னாலும் திட்டுங்க, என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்க. ஆனா போலிஸு மட்டும் உள்ளே வந்துடக்கூடாது” என்று ஆவேசமாக கல்லூரி முதல்வரை நோக்கி குரலெழுப்பினான் ஒரு மாணவன். போலிஸுக்கு அடிக்க மட்டுமே தெரியும் என்பது மாணவர்களின் வாதம்.

“பஸ் ரூட் மாதிரி தனித்தனி குழுவாக ஒன்றுபடும் மாணவர்களின் ஒற்றுமையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள நாம் திட்டமிட வேண்டும்” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார்.

மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் விட மதுதான் மாணவர்களின் முதன்மையாக பிரச்சினையாக மாறியிருக்கிறது. மிக சுலபமாக ஒவ்வொரு மாணவனுக்கும் மது கிடைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டதால் மாணவப் பருவத்திலேயே பலரும் மதுவுக்கு அடிமையாகிவிடக் கூடிய வாய்ப்பிருக்கிறது. குடிபோதைக்கு அடிமையாகிறவர்கள் எதற்கும் பயனில்லாமல் வன்முறை பாதைக்கு செல்வது தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. குடிக்க காசு கிடைக்காத மாணவர்கள் வீடுகளில் சண்டை போடத் தொடங்கி, தெருச்சண்டை வரைக்கும் தயாராகி விடுகிறார்கள். வாராவாரம் தன்னுடைய பணக்கார நண்பன் ஒருவனின் வீட்டுத் தோட்டத்தில் தோட்டவேலை செய்யும் சென்னை மாணவன் ஒருவன், அதில் கிடைக்கும் கூலியை டாஸ்மாக்குக்கு தாரை வார்க்கிறான் என்பதைக் கண்டபோது கிடைத்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

ஓடும் பஸ்ஸின் மீது ஏறி நிற்கும் தைரியம் நம் யாருக்குமில்லை. அம்மாதிரி நிற்கும் மாணவனின் தைரியத்தை சரியான பாதையில் திருப்பிக் கொள்ள முடியாதது சமூகத்தின் குற்றம்தானே தவிர, மாணவ சமூகத்தின் குற்றமல்ல. மாணவக் கலாச்சாரம் இங்கே சரியான முறையில் வளர்த்தெடுக்கப்படவில்லை. இந்த கடமை கல்வியாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது.

அறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மட்டுமல்ல. சமச்சீர்க் கல்வி, முல்லைப்பெரியாறு, ஈழம் என்று சமகாலப் பிரச்சினைகளிலும் நம் மாணவர்கள் நியாயமான முறையில் போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே பிளவினை உண்டாக்கும் சக்திகளை அடையாளங்கண்டு வன்முறைப் போக்கினை தவிர்க்க வேண்டுமே தவிர, மாணவர்களை கிரிமினல்களாய் நடத்தும் போக்கு நிச்சயம் ஆதரிக்கத்தக்கதல்ல.

அரசியல் என்பது கெட்டவார்த்தை என்பதாக மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு, அவர்களது அறிவு திட்டமிட்டு மழுங்கடிக்கப்படுகிறது. மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அரசியல் பேசும் சுதந்திரம் கல்லூரி மேடைகளில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிலவும் ஜனநாயகம் அங்கே எல்லா மாணவர்களையும் மேடையேற்றி நாட்டின் எல்லாப் பிரச்சினைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசும் திறனை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோன்ற சூழல் நம் கல்லூரி வளாகங்களிலும் மலரவேண்டும்.

கோஷ்டி சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வன்முறையாளர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து போராடிதான் புராதனப் பிரசித்திப் பெற்ற பச்சையப்பன் கல்லூரியின் இடங்களை, மெட்ரோ ரயில் திட்டத்திடமிருந்து மீட்டெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள்தான் இருள்சூழ்ந்த சமகாலத்தில் நமக்குத் தெரியும் நம்பிக்கை ஒளிக்கீற்று.


சில தீர்வுகள் :

1. அரசு கல்லூரிச் சூழல் கல்வி கற்க ஏதுவாக இருப்பதில்லை. ஆசிரியர்களே கூட பயன்படுத்த முடியாத மோசமான கழிப்பிடங்களை சென்னையின் மூன்று கல்லூரிகளில் கண்டோம். கல்லூரிகளிலேயே இந்த நிலைமைதான் என்றால் மாணவர்கள் தங்கும் விடுதிகளின் நிலைமை படுமோசம். மாணவர்கள் வாழ்வதற்கான, கல்வி கற்பதற்கான நிம்மதியான சூழலை ஏற்படுத்தியாக வேண்டும்.

2. பாடத்திட்டங்களில் மாற்றம் அவசியம். கடைசி ஒரு மாதம் படித்தாலே தேறிவிடலாம் என்கிற நிலை இருப்பதால், தன் கல்லூரிப் பருவத்தை ஜாலியாக வாழ்ந்துமுடிக்க முடிவெடுக்கிறான் மாணவன். ஆண்டு முழுக்க கல்வியில் கவனம் செலுத்தக்கூடிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் கல்வியாளர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.

3. வருகைப் பதிவேடு அட்ஜஸ்ட் செய்வது என்கிற மோசமான கலாச்சாரம் ஒன்று அரசுக் கல்லூரிகளில் இருக்கிறது. தனியார் கல்லூரிகளைப் போன்று யாரும் திருத்தமுடியாத ஆன்லைன் அட்டெண்டன்ஸ் உருவாக்கிட வேண்டும்.

4. நூலகங்களை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் பெயருக்கு ஒரு நூலகமும், நூலகரும் இருக்கிறார்கள். மாணவப் பருவத்தில் வாசிப்பு பண்படுத்தும் என்பதால் போதுமான நூலகர்களை நியமனம் செய்து, நிறைய நூல்களும், அவற்றை வாசிக்க ஏதுவான சூழலையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

5. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது பெற்றோர் தங்களது மகனது வகுப்பு ஆசிரியரை சந்திக்க வேண்டும். இதன்மூலமாக கல்லூரியில் மகனது நடவடிக்கைகளை பெற்றோரும், கல்லூரி தாண்டிய அளவில் தன் மாணவனது நடவடிக்கைகளை வகுப்பாசிரியரும் அறிந்துக்கொள்ள முடியும்.

6. மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையும் தனித்தனியாக கண்டறியப்பட்டு, அவர்களது விருப்பமான துறையில் வளர்வதற்கு ஏதுவான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இசை, ஓவியம் போன்ற கலைத்துறைகளில் ஆர்வமிருப்பவர்கள் அத்துறையில் பயிற்சிபெறவும், தங்கள் திறமையை வெளிக்காட்டவும் களம் அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே விளையாட்டு வீரர்களையும் சரியாக அடையாளம் கண்டறிந்து வளர்த்தெடுக்க வேண்டும்.

7. ஒவ்வொரு கல்லூரியிலும் என்.சி.சி. சிறப்பாக செயல்பட்டாலேயே பல ‘அடாத’ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

12 கருத்துகள்:

  1. நம் இருப்பிடங்களை நாமே சுத்தமாக வைத்திருக்கும் பழக்கத்தினை மாணவர்களுக்கு எற்படுத்தி தந்திடல் வேண்டும். அந்த பொறுப்பு ஆசிரியரிடத்தில் இருக்க வேண்டும்.

    அரசியல்வாதிகளிடமிருந்து மாணவர்களை பிரித்தெடுத்தாலே பாதி வன்முறை நிகழ்வுகளை தடுத்துவிடலாம்..

    கட்டுரை இன்னும் கூர்மையாய் இருந்திருக்கலாமேவென தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  2. //அரசியல்வாதிகளிடமிருந்து மாணவர்களை பிரித்தெடுத்தாலே//

    கிழிஞ்சது கிருஷ்ணகிரி. அரசியலற்றவன் தான் மொன்னையாகிறான் என்பதுதான் அடிப்படையே...

    பதிலளிநீக்கு
  3. நான் சொல்ல வந்தது, சுயநலத்திற்காக மாணவர்களை பயன்படுத்திகொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து பிரித்தெடுக்க வேண்டும். அரசியலிளிருந்து அல்ல...:)

    பதிலளிநீக்கு
  4. அரசியல் வேறு, அரசியல்வாதி வேறு. இலக்கியம் வேறு, இலக்கியவாதி வேறு.

    அப்படித்தானே? :-)

    பதிலளிநீக்கு
  5. இல்லை. பொதுக்காரியங்களில் உணர்வுபூர்வமாக மாணவர்கள் கலந்துகொள்ளும் போராட்டங்கள் தவிர்த்து, கட்சிகள் நடத்தும் மாநாடு போன்ற கட்டாயப்படுத்தி ஆள்பிடிக்கும் அரசியல் சார்ந்த கூட்டங்களிலிருந்து மாணவர்களை விலகியிருக்க செய்திடல் வேண்டும் என்பதே கருத்து..இதில் கல்லூரி தேர்தலும் விதிவிலக்கல்ல..

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7:00 PM, ஜனவரி 18, 2012

    Hats off for this post. Someone should print this and distribute to all the Lecturers first and then to the students. or atleast give link to this post. (i'll cetainly do).
    Surya

    பதிலளிநீக்கு
  7. 20:80 என்று ஒரு Pareto கோட்பாடு. அதாவது 20பேர் மீதியுள்ள 80யும் பாதிக்கிறார்கள். ஆளுக்கு பதிலாக சேதிகளையும்/ தாக்கங்களையும்
    போட்டுக் கொள்ளலாம்.

    இன்னும் மேலதிக செய்தி வேண்டுமென்றால் நான் தருவேன்.

    ஆனால், என்னைக்கூப்பிடுவதற்கு முன்னால், உங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இந்த 20:80 விதியில் பொருத்திப் பார்த்துவிட்டு என்னை அழையுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா9:25 AM, ஜனவரி 19, 2012

    "Idle mind is the workshop of devil". Students should have lot more things to do. They should be as busy as possible. This may be like having to read outside textbooks, preparing assignments on contemporary events, (individual assignments where one can't "copy") -- many many things can be done. Colleges should have soft-skills program for our students. Sports interest (not viewing stupid cricket watching in TV) should be developed/enhanced.

    பதிலளிநீக்கு
  9. எல்லாம் படத்தில் (சினிமாவில் ) சண்டைக் காட்சி பார்த்து வரும் பழக்கம்

    பதிலளிநீக்கு
  10. அப்பிடியே பொத்தாம்பொதுவா எளுதிட்டுப் போய்க்கிட்டே இருக்கவேண்டியது :) இதுல தீர்வு தீட்சண்யம் வேற! சமூகம்தான் தப்பூன்னவேண்டியது. பாடத்திட்டத்த மாத்துறான்னவேண்டியது. நூலகத்த நீட்டு, விருப்பமுள்ள தொறைய வெளக்குன்னவேண்டியது. தாக்குங்க வாத்யாரே :)

    பதிலளிநீக்கு
  11. 1. Parents n children should talk more in home .

    2. Teachers n Students should talk openly

    If any one of the above happens we can avoid lot of negative things happening among students.

    பதிலளிநீக்கு
  12. ஆசிரியர்களும் இப்போது மாணவர்களுடன் சமமான முறையில் பழகுவதில்லை.....கல்வி வியாபாரம் ஆகி விட்டது...


    "நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    பதிலளிநீக்கு