7 பிப்ரவரி, 2012

கதிரேசன் செட்டியாரின் காதல்

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அழகான வடிவமைப்பு கொண்டவை என்கிற ஒரே காரணத்துக்காகவே சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று மா.கிருஷ்ணன் எழுதிய ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’. அவரே வரைந்த முகப்பு ஓவியத்தோடு, கவர்ச்சிகரமான தலைப்போடு.. அதேநேரம் மனதை மயக்கக்கூடிய vintage feelingஐ உருவாக்கியது இந்த நூலின் அட்டைப்படம். அட்டையிலேயே subcaption ஆக ‘ஒரு துப்பறியும் நவீனம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழையநூல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் என்கிற எண்ணத்தோடு, வேறெதுவும் பெரிய எதிர்ப்பார்ப்புகள் இன்றியே புரட்டினேன்.

இந்நூலின் அட்டையை வடிவமைத்த சந்தோஷ் தற்போது உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிரபல பதிப்பகங்களின் பெரும்பாலான நூல்களின் மேலட்டையை அலங்கரித்து வருகிறார். ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ நூலில் உள்ளே இடம்பெற்ற படங்களை மிக சுமாரான தரத்தோடு இவர்தான் வரைந்திருக்கிறார். என்னை மாதிரியே சந்தோஷும் இது நாற்பதுகளிலோ, ஐம்பதுகளிலோ நடைபெறும் கதையென்று நினைத்து வரைந்திருப்பார் போல. போலிஸ்காரர்கள் டவுசர் அணிந்திருக்கிறார்கள்.

மாறாக இது 1989ல் நடக்கும் கதையென்று நாவலின் பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1995ல் இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது நூலாசிரியரின் வயது 83. அடுத்த ஆண்டே காலமாகிறார். அதே ஆண்டுதான் இந்நூலும் முதல் பதிப்பு பெறுகிறது. உலகளவில் பிரபலமான சூழலியலாளரான மா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் முதல் நாவல் இது. 1970லேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர் இவர். எனக்கென்னவோ நாவலை விட இந்த பின்னுரை ஏகத்துக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

கதிரேசன் செட்டியாரின் வீட்டு வேலைக்காரன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்படுகிறான் என்று முதல் அத்தியாயம் தொடங்குகிறது. நேரடியாக கதைக்குள் இறங்கிவிடும் ஆசிரியர், அடுத்தடுத்து ஏராளமான பாத்திரங்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி நிதானமாக டெஸ்ட் மேட்ச் ஆடியிருக்கிறார். விறுவிறுப்பான நடையிலேயே துப்பறியும் நாவல்களை வாசித்து பழகிய நமக்கு இது ஒரு புதுவித அனுபவம்தான்.

ஒரு கொலை மட்டுமே முழுநீள நாவலுக்கு போதுமான சரக்கில்லை என்பதை நாவல் எழுத முயற்சிப்பவர்கள், எழுதியவர்கள் அறிந்திருப்பார்கள். மா.கிருஷ்ணனும் எழுதத் தொடங்கும்போது உணர்ந்திருப்பார். எனவே ஊரில் நடைபெற்ற ஒரு கோயில் கொள்ளையையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். விவேக், நரேன், கணேஷ்-வசந்த் என்று ஆக்‌ஷன் ஹீரோக்களையே பெரியளவில் வாசித்த நமக்கு இந்நூலில் ஆற, அமர விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரிகள் ‘திக்கை’யாக தெரிவதில் ஆச்சரியமேதுமில்லை.

நூலின் மிகப்பெரிய பலம் மா.கிருஷ்ணனின் மொழி. இவ்வளவு வசீகரமான மொழியை சமீபத்தில் நான் வாசித்ததேயில்லை. விசாரணை அதிகாரியான முகைதீன் என்கிற பாய் கூட ‘அவா ஊதுனா, இவா வருவா’ ஸ்டைலில் பிராமண பாஷைதான் பேசுகிறார். இந்த மாதிரி ‘லாஜிக்’கெல்லாம் பெரிய பொருட்டல்ல என்று நினைக்கக்கூடிய வாசிப்பின்பப் பிரியர்களுக்கு இந்நூல் சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் சைட் டிஷ்ஷாக கொண்ட மட்டன் பிரியாணி விருந்து.

ஏகத்துக்கும் கேரக்டர்களை அறிமுகப்படுத்திவிட்டு ஆசிரியர் திணறுவதாக சில இடங்களில் தோன்றுகிறது. முடிச்சு மேல் முடிச்சு போட்டுவிட்டு அவிழ்ப்பது என்பதுதான் க்ரைம் தில்லர்களின் அடிப்படையே. மாறாக எங்கே முடிச்சுப் போட்டோம், அதை எங்கே அவிழ்க்கப் போகிறோம் என்கிற திட்டமிடல் க்ரைம் நாவல்களை எழுதுபவர்களுக்கு அவசியம். மசலா கதைகளுக்கு லாஜிக் பார்ப்பது பாவம்தானென்றாலும், 89ல் மதுரைக்கு அருகிலிருக்கும் ஒரு சிறுநகர காவல்நிலையத்தில் போன் கூட இருக்காதா என்றெல்லாம் எடக்குமடக்காக யோசிக்கத் தோன்றுகிறது. இந்நாவலை மட்டும் லாஜிக் லபக்குதாஸூகளான விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வாசித்தால், கிழித்து தோரணம் மாட்டி, வூடு கட்டி குத்தாட்டம் போடுவார்.

இருபத்தாறு அத்தியாயங்கள் வரை சாவகாசமாக வெத்தலைப்போட்டு அன்னநடை நடந்துக் கொண்டிருந்த நாவலாசிரியர் திடீரென முடிக்கும் பொருட்டு சஸ்பென்ஸை மொக்கையாக கட்டுடைக்கிறார். அதன் பிறகு திடீரென கதைக்கும், கதையின் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று யோசித்திருப்பார். நாவலின் கடைசி மூன்று பாராகிராப்புகளில் அட்டகாசமாக சம்பந்தப்படுத்தி முடிக்கிறார். இந்த ‘யூ’ டர்ன்தான் இந்நாவலை ஒரு கலைப்படைப்பாக மனதுக்குள் நிறுத்துகிறது. இதுவரை வாசித்த கதையின் பரிமாணத்தை அப்படியே ஒட்டுமொத்தமாக வேறு பரிமாணத்துக்கு அள்ளிச் செல்லுகிறது. இந்த புதிய பரிமாணத்தில் மீண்டும் ஒருமுறை உடனே வாசிக்க வைக்கத் தூண்டுகிறது.


நூல் : கதிரேசன் செட்டியாரின் காதல்

ஆசிரியர் : மா.கிருஷ்ணன்

பக்கங்கள் : 244

விலை : ரூ.125/-

வெளியீடு : மதுரை பிரஸ்
60-பி, கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
மின்னஞ்சல் : maduraipress@gmail.com

9 கருத்துகள்:

  1. எம். கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகள் மிகவும் பிரபலம். அவற்றை ராமச்சந்திர குஹா தொகுத்து, 'நேச்சர்ஸ் ஸ்போக்ஸ்மேன்' என்ற தலைப்பில் பல தொகுதிகளாக ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிடி பிரஸ் வெளியிட்டுளைளது. இவர் தமிழில் எழுதிய கட்டுரைகளை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. புத்தகத்தின் பெயர் 'மலைக் காலமும் குயிலோசையும்' என்று நினைக்கிறேன்.
    இவரது சகோதரர் அந்தக்காலத்தில் துப்பறியும் கதைகளை எழுதியவர். பெயர் எம்.கோவிந்தன் என்று ஞாபகம்.

    சரவணன்

    பதிலளிநீக்கு
  2. நாவல் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டு பின்னுரையை வாசித்தபோது நொந்துபோனேன்.

    ஆசிரியரின் மொழி குறித்து நீங்கள் எழுதியிருப்பது மிக்க சரி.

    நல்லதொரு வாசிப்பனுபவம்.

    பதிலளிநீக்கு
  3. //விசாரணை அதிகாரியான முகைதீன் என்கிற பாய் கூட ‘அவா ஊதுனா, இவா வருவா’ ஸ்டைலில் பிராமண பாஷைதான் பேசுகிறார்.//

    //இந்நாவலை மட்டும் லாஜிக் லபக்குதாஸூகளான விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வாசித்தால், கிழித்து தோரணம் மாட்டி, வூடு கட்டி குத்தாட்டம் போடுவார்.//

    //இந்த புதிய பரிமாணத்தில் மீண்டும் ஒருமுறை உடனே வாசிக்க வைக்கத் தூண்டுகிறது.//

    குழப்பிட்டீங்க. இப் புத்தகம், வாசிக்கப்பட வேண்டிய ஒன்றில்லையா? அல்லது வாலறுந்த நரியா?

    பதிலளிநீக்கு
  4. ரா.சு. சார்!

    குழப்பம் எதுவுமில்லை. ஜெமோ பாணியில் சொல்வதாக இருந்தால் சில இலக்கியத்தனம் வாய்ந்த பப்பரப்பா எழுத்து இது :-)

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பின்னுரையையும் (அதுதான் இந்தப் பதிவு) புத்தகத்தில் இணைத்திருந்தால் புத்தகத்தை வாங்குவேன் !

    பதிலளிநீக்கு
  6. இந்நூலின் அட்டையை வடிவமைத்த சந்தோஷ் தற்போது உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிரபல பதிப்பகங்களின் பெரும்பாலான நூல்களின் மேலட்டையை அலங்கரித்து வருகிறார்.

    பதிலளிநீக்கு
  7. யுவா... எப்டி கரெக்டா புடிச்சீங்க. நானும் கதையை மனதில் பிளாக் அன்ட் வொயிட்டில் தான் வாசித்தேன். மொழி தான் அதற்கு காரணம். (ஒரு உதாரணம் சாலையை "ரஸ்தா" என்றே சொல்கிறார்) அதனால் தான் காலம் பற்றிய குழப்பம் சித்திரங்களில். பிற்பாடு தான் முரளி அந்த பின்னுரை பற்றிசொன்னார். எப்படியோ இப்போதும் அந்த கதை எனக்கு அம்பதுகளில் நடப்பதாகவே தோன்றுகிறது! நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சித்திரங்கள் குறித்த குழப்பங்களை அடுத்த பதிப்பில் சரிசெய்திடலாம், சந்தோஷ் ஒப்புக்கொண்டால். நன்றி, யுவகிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  9. மேலே வந்திருக்கும் பின்னூட்டத்தை போட்டிருப்பவர் மதுரை ப்ரஸ் பதிப்பாளரா? அப்படியெனில் மகிழ்ச்சி! :-)

    பதிலளிநீக்கு