21 பிப்ரவரி, 2012

அம்புலி

தமிழில் உருப்படியாக வந்திருக்கும் முதல் முப்பரிமாண படம். முப்பரிமாணத்தில் எடுக்கிறோம் என்பதற்காக கிராஃபிக்ஸுக்கும், இதர கந்தாயங்களுக்கும் தண்ணீராக பணத்தைக் கொட்டாமல், சிக்கனமாக சிறப்பாக எடுத்திருக்கும் படக்குழுவினரிடம் கைவலிக்க கைகுலுக்கலாம்.
படத்தின் மொத்தக் கதையையும் இரண்டு நிமிட டைட்டிலிலேயே ஸ்டோரிபோர்டாக சொல்லியிருக்கும் இரட்டை இயக்குனர்களின் தைரியம் அசாத்தியமானது (மைக்கேல் மதனகாமராஜன் ‘கதை கேளு, கதை கேளு’ டைட்டில் நினைவிருக்கிறதா?). ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் டைட்டிலுக்கு முந்தைய – கதைக்கு நேரடியாக தொடர்பில்லாத – பிட்டு அபாரம். வெள்ளைக்காரராக சித்தரிக்கப்படும் அந்த வேட்டைக்காரர் வெள்ளையாக இருக்கிறாரே தவிர வெள்ளைக்காரர் இல்லை. பட்ஜெட் சிக்கனத்துக்கு நல்ல உதாரணம் இது.

1980ல் நடைபெறும் கதை என்பதால் பேக்டிராப்புக்காக இயக்குனர்கள் அளவுக்கு கலை இயக்குனரும் கடுமையாக உழைத்திருக்கிறார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பர்ஃபெக்‌ஷன் மிளிர்கிறது. கமலஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட ஒரு சிலருக்கே இந்தளவுக்கு தரம் இங்கே சாத்தியமாகியிருக்கிறது. கேமிரா, எடிட்டிங், பின்னணி இசை என்று சகலமும் சரியாக கலக்கப்பட்ட காக்டெயில் இப்படம்.

த்ரில்லர் ஃபேண்டஸியில் லாஜிக் பார்க்க முற்படுவது பைத்தியக்காரத்தனம். ஆனாலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படம் தொடங்கியதிலிருந்தே உறுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கல்லூரி – சோளக்காடு – ஏரி – பூமாடத்திபுரம் தொடர்பான நிலவியல் வரைபடம் குழப்பிக்கொண்டே இருக்கிறது.

அம்புலியின் ஆளுகைக்கு உட்பட்ட சோளக்காடு இருபது வருடமாக அப்படியே அழியாமல் இருக்குமா, சோளம் என்பது குறுகியகாலப் பயிர் இல்லையா? மக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தினால்தான் காட்டுக்கு நடுவே பாதை சாத்தியம். யாரும் வராத காட்டில் ஒரு ஆட்டோ போகுமளவுக்கு பர்ஃபெக்டான பாதை எப்படி சாத்தியம்? சோளக்காடு வழியே ஊருக்கு அசால்ட்டாக ஹீரோக்கள் வந்து போகிறார்கள். ஆனால் ஊர்மக்கள் உள்ளே நுழைய சுவற்றை வெடிவைத்து தகர்க்க வேண்டியிருக்கிறது.

மைல் கல் என்பது பெயருக்குதானே தவிர, அக்கல்லில் இத்தனை மைல் என்று எங்காவது நெடுஞ்சாலைத்துறை எழுதிவைத்திருக்கிறதா? கி.மீ தானே இந்தியக் கணக்கு? ஊருக்கு போக வேண்டுமானால் ஏரியை கடக்கவேண்டும் என்கிற நிலையில் ஹீரோயின்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு வருவது எப்படி சாத்தியம்? சோளக்காட்டுக்குள் மனிதவாசம் தென்பட்டாலே மரணம் எனும்போது பார்த்திபன் மட்டும் எப்படி அங்கேயே வசிக்க முடிகிறது? ஏதோ ஒரு ‘பூ’ வீட்டை சுற்றி வளர்க்கப்படும் பட்சத்தில் அம்புலி வராது என்றால், அந்தப் பூவை பறித்துக்கொண்டு சோளக்காட்டுக்குள் யார் வேண்டுமானாலும் தைரியமாக போய்வரலாமே (பார்த்திபன் வீட்டில் அந்த பூ கூட இல்லை).

அம்புலி என்று நினைத்து வேறு யாரையோ தவறுதலாக பார்த்திபன் போட்டுத் தள்ளிவிடுகிறார், அதுபற்றி போலிஸ் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பார்த்திபன் ஹீரோயினை மடக்கி பண்ணை வீட்டுக்குள் கட்டி போட்டு வைப்பதில் ஆகட்டும், பிற்பாடு ரெண்டு ஹீரோ மற்றும் ரெண்டு ஹீரோயின்களை தூண்டிலாக அம்புலியிடம் அழைத்துப் போவதில் ஆகட்டும்... முழம் முழமாக லாஜிக் பூ ரசிகர்களின் காதில் மைல் கணக்கில் சுற்றப்படுகிறது. இதெல்லாம் திரைக்கதையின் மூலமாகவே சரிசெய்துவிடக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள்தான்.

முழுநீள சுவாரஸ்யப் படத்தில் உறுத்தும் விஷயங்கள் பாடல்கள்தான். தமிழ்ப் படமென்றால் பாடல்கள் இருந்தே ஆகவேண்டுமென்று ஃபெப்ஸியிலோ, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலோ ஏதேனும் சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? ‘நறுக்’கென்று வரவேண்டிய திரைப்படம் தேவையில்லாத பாடல்களால் ‘ஜவ்’வாக இழுத்துக்கொண்டே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடுகிறது.

எது எப்படியாக இருந்தாலும் த்ரீ-டி த்ரில்லர் படத்தில் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்ப முயற்சித்த வகையில் அம்புலி ஒரு முக்கியமான ஆக்கமாக படுகிறது. இன்றைய திரைப்படங்களில் திராவிடச் சிந்தனைகளுக்கு போதிய களம் இல்லாத நிலையில், மிகத்தைரியமாக ஜெகன் பாத்திரம் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைக்கிறார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள். ஜெகன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை நேரடியாகக் கூறாமல், அவரது கருப்புச்சட்டை, வீட்டில் தந்தை பெரியார் படம் போட்ட காலண்டர் என்று காட்சிகளால் உணர்த்துகிறார்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிடைக்கும் இடத்தை மேடையாக்கி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது அய்யாவுடைய தொண்டர்களின் பாணி. இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சிகளில் இது மிகச்சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. காரின் மீது ஏறி பொதுமக்களிடம் ஜெகன் பேசும் வசனங்கள் கூர்மையானவை.

‘பகுத்தறிவே இறுதியில் வெல்லும்!’ என்கிற கருத்தை ஒரு வணிகப்படத்தில் ஆணித்தரமாக நெற்றிப்பொட்டில் அடித்து ’நச்’சென்று சொல்லியிருப்பதால் அம்புலியை ஆரத்தி சுற்றி வரவேற்கலாம்.

7 கருத்துகள்:

  1. இயக்குநர்கள் இருவரும் பிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. பகுத்தறிவைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டு,அம்புலியை ஆரத்தி சுற்றி வரவேற்கலாம்
    என்று எழுதுவது எந்த வகை பகுத்தறிவு தோழரே?

    பதிலளிநீக்கு
  3. //‘பகுத்தறிவே இறுதியில் வெல்லும்!’ என்கிற கருத்தை ஒரு வணிகப்படத்தில் ஆணித்தரமாக நெற்றிப்பொட்டில் அடித்து ’நச்’சென்று சொல்லியிருப்பதால் அம்புலியை ஆரத்தி சுற்றி வரவேற்கலாம். //

    #நச்..!!!

    http://www.yaavarumnalam.com/2012/02/3d.html

    பதிலளிநீக்கு
  4. மனோஜ் நைட் சியாமளன் எடுத்த த வில்லேஜ் மாதிரி கதை தெரியுதே!?

    பதிலளிநீக்கு
  5. 3d ya paththi solluppa???padam polamaa , venamaa ?

    பதிலளிநீக்கு