16 மார்ச், 2012

சங்கரன்கோவில்: கட்சிகள் வரிந்து கட்டும் கடைசி நிமிடம்!

இன்னும் சில தினங்களில் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது சங்கரன் கோவில்.எப்படி இருக்கிறது நிலவரம்? களத்தில் அரங்கேறும் காட்சிகளை உங்கள் கண் முன் கொண்டுவருகிறது புதிய தலைமுறை.

சங்கரன் கோவிலில் ஜவஹரைத் திமுக வேட்பாளாராக அறிவித்திருக்கிறது. ஆனால் காந்தியும் களமிறங்கியிருக்கிறார் தெரியுமா?நீங்கள் நினைப்பது போல் கரன்சியில் சிரிக்கும் காந்தியைச் சொல்லவில்லை.

‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலித்தபடி அந்த வேன் ஆரவாரமின்றி மெதுவாக கிராமங்களுக்குள் நுழைகிறது. தேர்தல் சமயத்தில் காதைக் கிழிக்கும் சத்தமின்றி ஒரு வாகனம் தங்கள் ஊருக்குள் நுழைவதை உலக அதிசயமாக பார்க்கிறார்கள் மக்கள். வேனுக்குள் இருந்து கதராடையில், வெள்ளைக் குல்லா அணிந்த சிலர் அமைதியாக பிட் நோட்டீஸ்களை வினியோகிக்கிறார்கள்.

“நாங்கள்லாம் மகாத்மா காந்தியோட தொண்டர்கள். மறக்காம மெழுகுவர்த்தி சின்னத்துக்கு நீங்க ஓட்டு போடணும்”

சொல்லிவிட்டு பிட்நோட்டீஸ் கொடுத்தவரை நிமிர்ந்துப் பார்க்கிறார் அந்த கடைக்காரர். நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருக்கும் வேட்பாளரேதான் நோட்டீஸ் கொடுத்தவரும். கடைக்காரருக்கு ஆச்சரியம். இவ்வளவு எளிமையான வேட்பாளரை இதுவரை அவர் கண்டதில்லை.

அந்த வேட்பாளர் பெயர் ஆறுமுகம். டி.ஆர்.ஓ.வாக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் அவருக்கு வயது எழுபத்து ஒன்பது. தன்னை காந்திய பண்பாளராக மக்களிடம் அறிமுகம் செய்துக் கொள்கிறார். “பூரண மதுவிலக்கே எங்கள் நோக்கம்” என்கிற இவர்களது பிரச்சாரத்துக்கு பெண்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆனால், இந்த ஆதரவு ஓட்டாக மாறுமா என்பது சந்தேகம். சங்கரன்கோவிலின் பெரும்பாலான வாக்காளர்கள் ஏதோ ஒரு அடிப்படையில், ஏதோ ஒரு கட்சியுடன் உணர்வுபூர்வமாக பிணைந்திருக்கிறார்கள்.

சரி, கட்சிகள் களத்தில் காட்டும் காட்சிகள் என்ன?

கடந்த வாரம் வரை களைகட்டாமல் டல் அடித்துக் கொண்டிருந்த சங்கரன் கோவிலை இந்த வாரம், இன்னொரு திருமங்கலமாக மாற்ற நமது அரசியல் கட்சிகள் முனைந்திருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக பிரச்சார வாகனங்கள் ஆரவாரத்தோடு தொகுதி முழுக்க வலம் வந்தவாறு இருக்கின்றன. சரத்குமார், குஷ்பு, செந்தில் என்று சினிமா நட்சத்திரங்களைக் காண மக்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது.

தேதிமுக
விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கிறது தேதிமுக. மாநிலம் முழுவதிலிருந்தும் கட்சியின் நிர்வாகிகள் மொத்தமாக சங்கரன்கோவிலில் குவிந்திருக்கிறார்கள். திமுக, அதிமுக, மதிமுக கட்சிகளின் கரைவேட்டிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தேமுதிக கரைவேட்டிகளை தொகுதி முழுக்க காண முடிகிறது.

தொகுதியில் தேமுதிகவின் தேர்தல் அலுவலகமே இல்லாத கிராமமில்லை என்ற நிலையை ஒரே வாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் தேமுதிகவின் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்.பி. ஆஸ்டின்.

“எங்களது பிரச்சாரத்தை காவல்துறையினரைக் கொண்டு ஆளுங்கட்சியினர் தடை செய்கிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இத்தேர்தலில் அமைதிப்புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்கள். இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் வெல்லுவார்” என்று உற்சாகமாக நம்மிடம் பேசினார் ஆஸ்டின்.

சங்கரநாராயண சாமி கோயிலுக்குச் சென்று வணங்கி, தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “சட்டசபையில் மக்களுக்காக பேசக்கூடாது என்கிறார்கள். இங்கே அதிமுக வென்றால் அவர்களின் ஆணவத்தை அழிக்க முடியாது. கவர்ச்சித் திட்டங்களுக்காக வளர்ச்சித் திட்டங்களை இழக்காதீர்கள். எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

மதிமுக
சங்கரன்கோவில் தேர்தலில் ஈழப்பிரச்சினையை முன்வைத்துப் பேசும் ஒரே கட்சியாக மதிமுக மட்டுமே இருக்கிறது. “பம்பரம் வென்றால் மகிழப்போவது நீங்களோ, நானோ, வைகோவோ அல்ல. வேலூர் சிறையில் மரணத் தண்டனைக்காக காத்திருக்கும் முருகன், பேரறிவாளன் சாந்தனும். ஈழத்து முகாம்களிலே அடைபட்டிருக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளும்” என்று முழங்குகிறார் நாஞ்சில் சம்பத்.

முப்பிடாதி அம்மன் கோயில் திடலிலே நாஞ்சில் இவ்வாறாக முழங்கிக் கொண்டிருக்கும்போது, அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு குஷ்புவின் பிரச்சார வேன் வந்தது. “இந்த ஆட்சி பொறுப்பேற்றதுமே அண்டை மாநிலங்களை சேர்ந்த கொலை, கொள்ளைக்கார கும்பல் இங்கே தஞ்சம் புகுந்துவிட்டது. சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று குரலுயர்த்தினார். இவரது ஒலி குறுக்கிட்டதுமே மதிமுக பொதுக்கூட்டத்தில் இருந்த மக்கள் குஷ்புவைக் காண வேகமாக பேருந்து நிலையத்துக்கு விரைந்தார்கள். மதிமுகவினர் டென்ஷனாகி வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கிளம்ப, குஷ்புவின் பிரச்சார வாகனம் பாதியிலேயே கிளம்பியது. திமுகவினர் பதிலுக்கு எகிற, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் தேர்தல் பார்வையாளர்கள்.

மதிமுக பொதுச்செயலர் வைகோவின் பிரச்சாரம் உருக்கமானதாக இருக்கிறது. தெருத்தெருவாக நடந்துச்சென்றே வாக்கு கேட்கிறார். எதிர்ப்படும் வாக்காளர்களின் பெயர் சொல்லி அழைக்கிறார். “அப்பா நல்லாயிருக்காரா?” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசும்போது, அவரது நினைவாற்றலை மெச்சி வாக்காளர்கள் சிலிர்க்கின்றனர். “ரொம்ப வருஷமா, சென்னையிலேயே தங்கியிருந்தாலும் எங்க ஊரையும், ஊர்க்காரர்களையும் வைகோ மறக்கலை” என்றார் பஜார் வீதியில் பேன்சி கடைக்காரர் ஒருவர். “என்னுடைய சொந்தத் தொகுதி இது. இந்தத் தொகுதியிலாவது மதிமுகவுக்கு இந்த ஒரே ஒரு வாய்ப்பினை தாருங்கள்” என்பதுதான் வைகோ பிரச்சாரத்தின் அடிநாதம். “மண்ணின் மைந்தர் வைகோ என்பதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது. திருமங்கலம் பாணியை வைகோ உடைப்பார்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மதிமுகவின் சங்கரன்கோவில் தேர்தல் பொறுப்பாளரும், நெல்லை மாவட்டச் செயலாளருமான சரவணன்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியின் ஊராட்சியை தொடர்ச்சியாக வைகோவின் குடும்பத்தினரே கைப்பற்றி வருகிறார்கள். எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஒரு மாதிரி கிராமமாக கலிங்கப்பட்டி திகழ்கிறது

ஆனாலும் கலிங்கப்பட்டியிலேயே வைகோவுக்கு எதிர்ப்பும் உண்டு. அவரது இல்லத்திற்கு எதிரேயே திமுகவின் தேர்தல் அலுவலகம் அமைந்திருக்கிறது. வைகோ சாடையிலேயே ஒரு இளைஞரை அங்கு கண்டேன். “அவரு என்னோட மாமாதாங்க. ஆனாலும் வேற வேற கட்சி. திமுகவை இங்கேயே ஜெயிக்க வைப்போம்” என்றார்.

“வைகோ நல்லவருதான். இல்லைன்னு சொல்லலை. ஆனாலும் எங்க சாதிக்காரங்களுக்கு அவங்க கிட்டே போதுமான நியாயம் கிடைக்கலை” என்று ஊர்க்காரர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இவர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சார்ந்தவர். “மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கு. சங்கரன்கோவிலில் பம்பரம்தான் சுத்தப் போவுது” என்றார் கலிங்கப்பட்டியின் சாமிதாஸ். இவர் கட்சி சார்பற்றவர். கலிங்கப்பட்டியில் பர்னிச்சர் ஏஜென்ஸி நடத்தும் ஆர்.சைலப்பன் கடுமையான போட்டி என்று ஒப்புக் கொள்கிறார்.

திமுக
திமுக முகாம் தேர்தல் கமிஷன் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். “நேர்மையாக தேர்தல் நடந்தால் திமுகதான் வெல்லும். இவர்கள் நேர்மையாக தேர்தல் நடத்த விரும்புவதாக தெரியவில்லை” என்கிறார் கராத்தே முத்து என்கிற திமுக தொண்டர். வெளிமாவட்டங்களில் இருந்து பிரச்சாரத்துக்கு வரும் தங்களைப் போன்றவர்களிடம் ஏகத்துக்கும் கெடுபிடி காட்டும் போலிஸ், அதிமுகவினரை கண்டுகொள்வதில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்.

“மின்வெட்டு, பால்-பஸ் விலை உயர்வு, விவசாயிகள்-விசைத்தறித் தொழிலாளர் பிரச்சினை, அதிமுக இருபது ஆண்டுகாலமாக தொகுதிக்கு எதையுமே செய்யாதது ஆகியவற்றை முன்வைத்து எங்கள் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. இத்தொகுதியில் தாமிரபணிர குடிநீர்த்திட்டம், கோர்ட்டு, அரசு அலுவலகங்கள் அனைத்துமே திமுக ஆட்சிக்காலத்தில் அமைந்தவைதான். பெண்கள் கல்லூரி அமைப்போம் என்றும் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் திமுக தேர்தல் அலுவலக பொறுப்பாளரும், கட்சியின் சங்கரன்கோவில் ஒன்றியப் பிரதிநிதியுமான கணேசன்.

தோழமைக் கட்சியான காங்கிரஸ் திமுகவுக்கு பிரச்சாரத்தில் நன்கு உதவுகிறது. காங்கிரஸ் சார்பில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலத்தின் முக்கியத் தலைகளை வைத்து பொதுக்கூட்டமும் நடத்தினார்கள். “இடுப்பு வேட்டி அவிழும்போது வேகம் காட்டும் ‘கை’ போல, திமுகவுக்கு ஆபத்து என்றால் ஓடிச்சென்று காப்பாற்றுவோம்” என்று இலக்கியத்தரமாக தங்கள் கூட்டணியின் வலிமையை கூட்டத்தில் வெளிப்படுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பதால், குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை திமுக பிரச்சார ஆட்டோ, வேன், ஜீப்புகளிலாவது பார்க்கமுடிகிறது. தனித்து நிற்கும் மற்றொரு தேசியக்கட்சியான பாஜகவின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. கொடிகட்டி, தொகுதி முழுக்க வாஜ்பாய், அத்வானி புகழ்பாடி வரும் ஜீப்பில் டிரைவரைத் தவிர வேறு யாருமில்லை.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தலித் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். ஆனாலும் இக்கட்சிக்கு தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கு இல்லை. அதே நேரம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு திமுகவுக்கு ‘பூஸ்ட்’ அளிக்கிறது. அக்கட்சியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரின் பிரச்சாரம் சாதி ஓட்டுகளை மொத்தமாக அள்ளும் என்று திமுகவினர் நம்புகிறார்கள். அழகிரி-ஸ்டாலின் அதிரடி காம்பினேஷன் தோனி-சச்சின் ஜோடியைப் போல திமுகவை கரைசேர்க்கும் என்பது கட்சியினரின் எதிர்ப்பார்ப்பு.

அதிமுக
கட்சியின் மொத்த படைபலத்தையும் களத்தில் இறக்கியிருக்கிறார் முதல்வர். தொடர்ச்சியாக அதிமுகவையே சங்கரன்கோவில் மக்கள் தேர்ந்தெடுத்தாலும், இம்முறை மின்வெட்டுப் பிரச்சினை தங்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துவிடுமோவென்று அவர்களுக்கு அச்சமிருக்கிறது.

தேர்தலுக்கு சற்று முன்பாக இஸ்லாமியர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கு ஒரு கோயில் திருவிழா சார்பாக ஏற்பட்ட பிரச்சினையொன்று, இஸ்லாமியர்களின் ஓட்டுகளை எதிர்முகாமுக்கு விழச்செய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக தொகுதியில் பேசிக்கொள்கிறார்கள். இதை சரிக்கட்டும் வகையில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் களமிறங்கியிருக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவாக தொகுதியின் இஸ்லாமியர்களிடம் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், அம்மா தங்கள் சமூகத்துக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு தெருத்தெருவாக தனது ஆதரவாளர்களோடு வாக்கு கேட்டுச் செல்கிறார். தமிழ்மாநில முஸ்லீம் லீக்கும், “அதிமுகவுக்கு எங்கள் தரப்பில் பண்ணிரெண்டாயிரம் ஓட்டுகள் பெற்றுத் தருவோம்” என்று களமிறங்கியிருக்கிறது.

புதிய தமிழகம் கட்சியின் ஆதரவே, அதிமுகவுக்கு பாதிப்பாக போய்விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. “பரமக்குடி கலவரம் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது. அதன் இரத்தக்கறை கூட காயாத சூழலில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவளித்ததின் மூலம் தனது மரியாதையை தேவேந்திரகுல வேளாள மக்களிடம் இழந்திருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக, தனது அடிப்படை பலத்தை அடகுவைத்துவிட்டார்” என்றார் சத்ரப்பட்டியில் நாம் சந்தித்த புதிய தமிழகம் தொண்டர் ஒருவர்.

“அப்படியெல்லாம் இல்லை. தேவேந்திரகுல வேளாள மக்கள் டாக்டருக்கு விசுவாசமானவர்கள். அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவார்கள். அதிமுக அமோக வெற்றி பெறப்போவது உறுதி” என்றார் ஆவுடையாபுரம் வார்டு கவுன்சிலரும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவருமான மாரிக்கனி. ஆனாலும் பரமக்குடி கலவரம் பற்றி பேசும்போது இவரும் தடுமாறுகிறார்.

மறைந்த அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருந்த கருப்பசாமியின் குடும்பத்தாரை ஒருவழியாக சமாதனப்படுத்தியிருக்கிறார்கள் அவர்களை முதல்வரை சந்திக்கவைத்து, அந்தப் போட்டோவை பத்திரிகைகளில் பிரசுரித்திருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். இந்நிகழ்ச்சியை அடுத்து தொகுதிமுழுக்க சுவர் விளம்பரங்களில் “அம்மாவின் இரட்டை இலைக்கு வாக்களிப்போம். இப்படிக்கு கருப்பசாமி குடும்பத்தார்” என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இதுமட்டுமன்றி கருப்பசாமியின் மகன் மாரிச்சாமிக்கு கட்சிப் பொறுப்பு ஒன்றினையும் வழங்கி, அமைச்சரின் சொந்த ஊரான புளியம்பட்டி வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக ஆளுங்கட்சி என்பதால் ஜெயித்துவிடலாம் என்று அதிமுக தொண்டர்கள் கொஞ்சம் தெம்பாகவே இருக்கிறார்கள். முப்பத்தி இரண்டு அமைச்சர்களும் ஒவ்வொரு பகுதியாக தத்தெடுத்து வாக்குச்சேகரிப்பிலும், ‘மற்ற’ பணிகளிலும் மும்முரமாக இருப்பதால் அதிமுக தரப்பில் உற்சாகமாகவே செயல்படுகிறார்கள்.

தேர்தல் ஆணையம்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் சூழலில் ‘ரெட்டை எலைக்கு ஐநூறு, உதயசூரியனுக்கு இருநூறு’ என்கிற கட்டண விகிதம் தொகுதி முழுக்க பரவலாக மக்களிடம் பரபரப்பாக பரிமாறிக்கொள்ளப் படுகிறது. “ஓட்டு போட பணம் வாங்கினால் கைது” என்று போலிஸார் தெருத்தெருவாக சென்று எச்சரித்தாலும், மக்கள் சட்டை செய்வதாக தெரியவில்லை.

நாம் தொகுதியில் இருந்த அன்று ஒரு வாகனத்தில் இரண்டு கோடி ரூபாய் பணம் வந்ததாகவும், அதை செக்போஸ்டில் அமைச்சர் ஒருவர் தகராறு செய்து மீட்டதாகவும் தகவல் பரவிக் கொண்டிருந்தது. கடைசியாக ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மட்டுமே பிடிபட்டதாக ‘கேஸ்’ பதிவு செய்யப்பட்டதாம். எதிர்க்கட்சிகள் இதுமாதிரியான தொடர்ச்சியான புகார்களை பதிவு செய்துக் கொண்டேயிருக்க, அதிரடியாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி.யை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

“பதட்டமுள்ள பூத்களை கண்டறிந்துக் கொண்டிருக்கிறோம். துணை ராணுவம் பாதுகாப்புக்காக வரவிருக்கிறது. பொதுமக்களிடையே தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பாராட்டைப் பெற்றிருக்கிறது” என்கிறார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் தாமோதரன். இரவு பகல் பாராமல் தேர்தல் அலுவலர்கள் தொகுதிமுழுக்க சலிக்காமல் சுற்றி வருகிறார்கள்.

மக்கள்
“இந்த வாரம் மட்டும் பெரியதாக மின்வெட்டு இல்லாதது மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் ‘பழைய குருடி, கதவைத் திறடி’ கதையாகதான் இருக்கும்” என்று சலித்துக் கொள்கிறார் சக்திவேல் என்கிற விசைத்தொழிலாளி. முன்பெல்லாம் ஒரு நாளுக்கு ஐந்து சேலைகளாவது நெய்ந்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு இன்று ஒரு சேலை நெய்யவே தாவூ தீருகிறது.

“எங்கள் ஊரில் மட்டுமின்றி, நாடு முழுக்க மின்வெட்டுப் பிரச்சினை இப்படித்தான் இருக்கிறது. கூடங்குளம் அணுவுலை செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் தச்சுத்தொழிலாளி கோவிந்தன்.

“அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் போலிஸாரின் அராஜகம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. அம்மா இவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்” என்று நம்மிடம் பேசினார் குருவிக்குளத்தில் சந்தித்த பெண் ஒருவர்.

“உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்ததுமே பஸ்-பால் விலை உயர்த்தினார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் ஜெயித்தால் மின்கட்டணம் உயர்த்துவார்” என்று அச்சப்பட்டார் நக்கலமுத்தம்பட்டியில் வசிக்கும் இன்னொரு பெண்.

பொதுவாக கட்சி சார்பற்றவர்கள் என்னிடம் வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள். ‘யாருக்கு ஓட்டு?’ என்பது மாதிரியான கேள்வியைத் தவிர்ப்பவர்கள், பிரச்சினைகளைப் பற்றிப்பேச ஆர்வமாக இருக்கிறார்கள். தேர்தலன்று திடமான தீர்ப்பைத் தர இவர்கள் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

உதாரணத்துக்கு குருசாமியை சொல்லலாம். திருவேங்கடம் மார்க்கெட்டுக்கு அருகில் செருப்பு தைக்கும் தொழிலாளி இவர். அவரிடம் நடந்த எனது உரையாடல் கீழே :

“எலெக்‌ஷனெல்லாம் எப்படிண்ணா இருக்கு?”

“எனக்கு அரசியல், கிரசியல் எல்லாம் தெரியாதுப்பா. செருப்பு தைக்க மட்டும்தான் தெரியும்”

“ஓட்டு போடுவீங்க இல்லையா?”

“கண்டிப்பா போடுவேன்”

“யார் ஜெயிப்பாங்க?”

“நான் ஓட்டு போடற ஆளுதான் ஜெயிப்பாங்க. ஜெயிச்சப்புறம் பாரு”



எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

அலங்கரிக்க முடியலையே?
‘பந்தா’ பாலு ஏக்கம்!
அறந்தாங்கியைச் சேர்ந்த திமுக தொண்டர் ‘பந்தா’ பாலச்சந்தர் எந்த தேர்தல் நடந்தாலும், தன்னுடைய டிவிஎஸ் வண்டியை கருப்பு சிவப்பு கொடிகளால் கோலாகலமாக அலங்கரித்து கம்பீரமாக வலம் வருவார். திமுக மாநாடுகளிலும் தன்னுடைய அலங்கார டூவீலரால் தலைவர்களையும் கவருபவர் இவர். இவரது அலங்காரங்களால் அசந்துப்போன கட்சியே இவருக்கு புது வண்டி வாங்கித் தந்தது.

சங்கரன்கோவிலுக்கும் தன் வண்டியை அலங்கரித்து சூடாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். போலிஸார் இதை அனுமதிக்கவில்லை. “அதிமுகவினர் நம்பர் ப்ளேட் இல்லாம கூட வண்டி ஓட்டுறதை அனுமதிக்கிற காவல்துறை, எதிர்க்கட்சிங்கிறதாலே என்னை அனுமதிக்க மாட்டேங்கிறாங்க” என்று குறைபட்டுக் கொண்டார்.

நமக்காக ஸ்பெஷலாக வண்டியை அலங்கரித்து, ‘போஸ்’ கொடுத்தும் காண்பித்தார்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

கூடங்குளம் கட்டாயம்

பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளுமே ‘கூடங்குளத்தை கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். “இந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. சீட்டை வைத்து எப்படி கூடங்குளத்தை கொண்டுவருவார்கள்?” என்று கழுகுமலையில் பிரச்சாரத்தை கவனித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் லாஜிக்காக, கேட்டதை ஆட்டோவில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தவர் கண்டுகொள்ளவில்லை. கூடங்குளம் பற்றிப்பேச மதிமுக மட்டும் தயங்கிவருவதாக தெரிகிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :

வாக்கை விற்காதீர்கள்!

’ஓட்டுக்கு துட்டு’ என்பது பிறப்புரிமை என்பதுமாதிரி (குறிப்பாக இடைத்தேர்தல்) வாக்காளர்கள் வாளாவிருக்க, ஊழல் எதிர்ப்பு இயக்கம் இப்போக்குக்கு எதிராக தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்துவருகிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த இருபது பேர் இதற்காக களமிறங்கியிருக்கிறார்கள். தேசியக்கொடி ஏந்தியவாறே “உங்கள் வாக்கை விற்காதீர்கள். விற்கப்படும் உங்கள் வாக்கினை இந்த காசுக்கு பத்துமடங்காக, இதனால் ஜெயிப்பவர் பிற்பாடு வசூலிப்பார்” என்று எச்சரிக்கிறார்கள்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

எப்படி சோதிக்கிறார்கள்?

’பிரஸ்’ என்று சொன்னதுமே பல செக்போஸ்ட்களில் நமது வாகனத்தை எந்த சோதனையுமின்றி, அனுப்பி வைத்தார்கள். நிச்சயமாக அமைச்சர்கள் வாகனத்தை இவர்கள் சோதிக்கப் போவதில்லை என்று தோன்றியது. மாறாக கீழத்திருவேங்கடம் செக்போஸ்டில் முத்துப்பிள்ளை என்கிற அனுபவம் வாய்ந்த ஸ்பெஷல் எஸ்.ஐ.யும், சாமிநாதன் என்கிற இளமையான பயிற்சி எஸ்.ஐ.யும் இணைந்து கறாராக கலக்குகிறார்கள். “போக்குவரத்துத்துறை அமைச்சரின் காரையே சோதனைப்போட்ட செக்போஸ்ட் இது” என்று அருகிலிருந்த டீக்கடைக்காரர் பெருமையாக சொன்னார்.

• வண்டி எண், எங்கே போகிறார்கள் போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொள்கிறார்கள்.

• வண்டி முழுக்க சோதனை செய்கிறார்கள். சோதனையை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

• உற்சாக பானம், பணம் மாதிரி ஏதாவது இருந்தால் கைப்பற்றுகிறார்கள்.

• பணம் அருகிலிருக்கும் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படுகிறது. தக்க ஆதாரங்களைக் காட்டி வாங்கிக் கொள்ளலாம். அல்லது பணத்துக்கு முறையான காரணம் சொல்ல முடியாதவர்கள் கோர்ட்டுக்குப் போய்தான் தேர்தல் கமிஷனிடம் வாதாடி, தங்கள் பணத்தை திரும்பப் பெற முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை - படங்கள் : க.அறிவழகன்)

14 மார்ச், 2012

வீரவணக்கம்


அந்த கொடுநாள் நன்றாக நினைவிருக்கிறது.

தலை பிளக்கப்பட்ட உடல் என்.டி.டி.வி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட, இது உண்மையாக இருக்கக்கூடாதே என்கிற பதட்டம் விரல் நடுங்கவைத்து, மனசமநிலை குலைந்து, இறுதியில் அழுகைக்கு கொண்டு சென்றது. பயமறியாத அந்த கண்கள், அடர்த்தியான மீசை.. இது அவரேதான் என்று மூளை அறிவுறுத்தினாலும், மனசு நம்ப மறுத்தது.

ஆறுதலாக சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார் என்று அறிக்கை விட்டார்கள். ஒரு பத்திரிகை ஒருபடி மேலே போய் அந்த வீடியோவை அவரே எங்கோ அமர்ந்து டிவியில் பார்ப்பதைப்போல ‘கிராபிக்ஸ்’ செய்து வெளியிட்டது. அவருக்கெல்லாம் சாவு வராது என்று உடனடியாக பகுத்தறிவை மறுத்து, உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அந்த வீடியோவை மறந்தேன். அவரது மாவீரர் நாள் உரைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

தொடர்ச்சியாக தமிழக மேடைகளில் சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார், தக்க சமயத்தில் வெளிவருவார் என்று ஆணித்தரமாக பேசியதைக் கேட்டு ஆறுதலடைந்தேன். ஒருவேளை அவரேகூட இவர்களை தொடர்புகொண்டு பேசியிருக்கலாம் என்றும் குருட்டுத்தனமாக நம்பினேன்.

தொடர்ச்சியாக மூன்று மாவீரர் தினங்களாக அவரது உரை வெளிவரவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார் என்று நெஞ்சத்தின் மூலையில் எங்கோ பதுங்கிக்கிடந்த நம்பிக்கை இன்று சற்றுமில்லை.

முப்பதாண்டுகளாக உலகையே எதிர்த்துப் போராடிய மாவீரம் அவரைத்தவிர உலகில் வேறு யாருக்கும் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஈழப்போராட்டத்தின் ஒவ்வொரு தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி கவுரவித்த அந்த மாவீரனுக்கு தமிழர்கள் வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையை ஏற்படுத்தியவர்கள் யார், யாரெல்லாம் என்று ஒவ்வொருவராக இன்று நினைவுகோர வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவ்வப்போது இதையெல்லாம் எழுதவோ, பேசவோ நினைத்தாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்துக் கொண்டேயிருக்கிறது. இன்று காலை இணையத்தளம் ஒன்றில் அந்த வீடியோக் காட்சியை கண்டபிறகும் பேசாமல் இருக்கமுடியவில்லை.

அவரை கோடாலியால் வெட்டிக் கொன்றவர்கள் சிங்களச் சிப்பாய்களாக இருக்கலாம். அவர்கள் வெறும் ஆயுதம். ஏவியது ஒட்டுமொத்த உலகம். குறிப்பாக என் தேசம். நான் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட இனத்துரோகிகள். புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை தந்த உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள்.

கடந்த ஆண்டு வெளியான நார்வே அறிக்கை மிகச்சரியாகவே அனைத்தையும், அனைவரையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

• 2004ல் காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழர்கள் மீதான சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

• புலிகளுக்கு ஆதரவான போக்கு நார்வேக்கு இருப்பதாக தனிப்பட்ட சந்திப்புகளில் இந்தியா கடிந்துக் கொண்டிருக்கிறது. மேலும் புலிகளை ஒடுக்குவதற்கான இந்திய தரப்பு ‘நியாயங்களை’ திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறது.

• ராடார் வழங்கியதோடு மட்டுமின்றி, உளவுத் தகவல்களையும் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு அளித்து உதவியது. ஆபத்தான ராணுவ ஆயுதங்களை இந்தியா, இலங்கைக்கு அளிக்காவிட்டாலும், இலங்கை அவற்றை வேறு நாடுகளிடம் வாங்கியதை எப்போதுமே ஆட்சேபிக்கவில்லை.

• 2008 இறுதியில் இராணுவத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கக்கோரி பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், இந்திய அரசு புலிகளைத் தோற்கடிக்கும் சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவினைத் தொடர்ந்தது.

• இந்திய கேபினட் அமைச்சர் பி.சிதம்பரம், புலிகளின் தலைவர் பிரபாகரனை போர் நிறுத்தத்துக்காக தொடர்புகொண்டு ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தார். இந்த ஒப்பந்தத்தின் முன்வரைவில் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க வேண்டும் என்கிற அம்சம் முக்கியமானதாக இருந்தது.

• ஆனால் இந்தியாவின் இந்த முயற்சி அதிகாரப்பூர்வமற்ற முறையில் சிலருக்கு வெளியானது. உடனடியாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தலையிட்டு இந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததோடு, இது காங்கிரஸின் தந்திரம். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்லப் போகிறது. புலிகள் காப்பாற்றப்படுவார்கள் என்கிற செய்தியினை புலிகளுக்கு முன்வைத்தார். இது நடைபெறவில்லை. கடைசியாக தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

ஈழப்போராட்டத்து மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட்டதில் இந்தியாவின் வஞ்சகம் வெளிப்படையானது. அதே நேரம் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்களுக்கும் இந்த பச்சைப் படுகொலையில் கணிசமான பங்கிருக்கிறது. பிரபாகரனின் மறைவு உறுதிப்படுத்தப்பட்ட பிறகும், அவர் உயிரோடு இருக்கிறார் என்கிற தகவலை திரும்பத் திரும்பச் சொல்லுவதின் பின்னிருக்கும் ஆதாயம் என்ன என்பதை யூகிப்பதில் பெரிய சிரமமில்லை. புலிகளால் கடந்த காலத்தில் வசூலிக்கப்பட்டு, கடைசிக் காலத்தில் அவர்களுக்கு உதவாத பலநூறு கோடிக்கணக்கான பணம் யார், யாரிடம் இருக்கிறது. யார் யாருக்கு, எது எதற்கு இன்று செலவளிக்கப்படுகிறது என்கிற உண்மைகளும் எதிர்காலத்தில் வெளிவரத்தான் போகிறது.

போர் நடந்துக்கொண்டே இருந்தால் யாருக்கெல்லாம் என்ன லாபம் இருந்திருக்க முடியும் என்பதை நாம் திறந்தமனதோடு யோசித்துப் பார்க்க வேண்டும். 2001 செப்டம்பர் 11-ஐ அடுத்து உலகநாடுகளிடையே, ‘போராட்டம், புரட்சி’ குறித்து மாறிவந்த மனோபாவம் எவ்வகையிலும் புலிகளால் உணரப்பட்டதில்லை. அவர்களை உசுப்பேத்தி, ஆயுதமேந்த வைத்து அரசியல் செய்தவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் உணர்ந்திருந்தாலும், அதை புலிகளுக்கு நேர்மையாக உணர்த்தவும் அவர்களுக்கு வக்கில்லை.

இலங்கையின் போர்க்குற்றத்துக்கு சாட்சியாக சேனல்-4 அடுத்தடுத்து பிரபாகரனின் மகன் இறந்த வீடியோ காட்சிகளையும், பிரபாகரனின் இறப்பு குறித்த வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்றுகூறி அரசியல் செய்துவருபவர்கள் இந்த சாட்சியங்களை மறுக்கப் போகிறார்களா? பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று ஐ.நா. படியேறி வாதாடப் போகிறார்களா?

துரோகிகள் என்று யாரையேனும் சுட்டிக் காட்டி தூற்றவும், விசுவாசிகள் என்று மார்தட்டிக் கொள்ளவும் யாருக்கும் இனி யோக்கியதையில்லை. எல்லோரைப் போல நானும் துரோகிதான் என்றபோதிலும் குற்றவுணர்ச்சியோடு இப்போதாவது என் வீரவணக்கத்தை அம்மாவீரனுக்கு செலுத்திக் கொள்கிறேன்.

‘இந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் துரோகிகளே, சுயநலமிகளே’ என்றுதான் வரலாறு எதிர்காலத்தில் தனது குறிப்பினில் இந்த காலக்கட்டத்தை பதிவு செய்துக்கொள்ளப் போகிறது.

7 மார்ச், 2012

ஹெல்மெட்

நான் ஹெல்மெட் அணிய விரும்பாததற்கு காரணங்கள் பின்வருமாறு :

1. பைக் ஓட்டப் பழகும்போது ரிவர்வ்யூ மிர்ரர் பார்த்து ஓட்டி பழகவில்லை. திருப்பங்களில் தலையை திருப்பிப் பார்த்தே பழகிவிட்டது. ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையை திருப்புவது கடினமாக இருக்கிறது. வேட்டியே அணிந்துப் பழகியவன் திடீரென ஜீன்ஸ் அணியும்போது ஏற்படும் அசவுகரியத்துக்கு ஒப்பானது இது.

2. பயணத்தின்போது ’ஜில்’லென்று காற்று முகத்தில் அறைவதில்லை. தலைமுடி ஸ்டைலாக பறப்பதில்லை. ஃபேஸ்கட் பர்சனாலிட்டி வெளிப்படையாக தெரிவதில்லையென்பதால், நம்மை அடையாளங்கண்டு சகப்பயணிகளான டூவீலர் ஃபிகர்கள் சைட் அடிப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் ஹெல்மெட் கட்டாயமாக்கியபோது, கலைஞரை சபித்துக்கொண்டே வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஹெல்மெட் அணிந்து ஓட்டியபோது இரண்டு, மூன்று முறை ஏடாகூடமாக பிரேக் அடித்து, பின்னால் வரும் வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால், ஒருமுறை சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தபோதுகூட பின்னால் வந்த ஸ்கூட்டி சீமாட்டியொருவர் கண்ட்ரோல் இல்லாமல், பத்தடி முன்பிருந்தே வருமுன் மன்னிப்பாக ‘சாரீ... சாரீ...’ என்று கத்திக்கொண்டே வந்து இடித்தார். ம்ஹூம். இது வேலைக்கு ஆகாது. நமக்கு ராசியில்லை. ஹெல்மெட்டால் எனக்கு பாதுகாப்பு ஏதுமில்லை. ஆபத்துதான் அதிகமென்று தூக்கியெறிந்தேன்.

இப்போது மீண்டும் ஹெல்மெட் பிரச்சினை. ஐயாயிரம் ரூபாய் வரை அபராதமென்று அச்சுறுத்துகிறார்கள்.

இவ்வளவு நாட்களாக வெறும் தலையோடு வண்டியோட்டி சமாளிக்க ‘பிரஸ்’ அந்தஸ்தை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். வண்டியிலேயே ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருப்பதால், காவலர்கள் பொதுவாக வண்டியை மடக்குவதில்லை. அப்படியே மடக்கிவிட்டால் கழுத்தில் தாலி மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும் அடையாள அட்டையை பார்த்துவிட்டு, “எல்லா நல்லது, கெட்டதையும் எழுதற நீங்களே இப்படி பண்ணலாமா சார்?” என்று கொஞ்சிவிட்டு, அனுப்பிவிடுவார்கள்.

ஆனால் ரெண்டு, மூன்று வாரங்களாகவே ‘பிரஸ்’ என்றால் தேடித்தேடி வேட்டையாடுகிறார்கள். காரணம் சக ‘பிரஸ்’ஸான தினகரன். அப்பத்திரிகையின் போட்டோகிராஃபர் காமிராவையும், கையையும் வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், போனமாதம் ஒரு போட்டோவை எடுத்திருந்தார். ஒரு சார்ஜெண்ட் தொப்பியோடு பைக்கில் போவதைப் போல. அதற்கு போட்டோ கேப்ஷன் எழுதியிருந்த உதவி ஆசிரியரோ ‘ஊரையே ஹெல்மெட் போடச்சொல்லி, போடாதவர்களிடம் கப்பம் வாங்கும் போலிஸ் இப்படி தொப்பியோடு போகலாமா?’ என்று அறச்சீற்றத்தோடு குமுறியிருந்தார். கமிஷனர் போட்டோவைப் பார்த்துவிட்டு ஏறு, ஏறுவென்று ஏறியிருப்பார் போல. இப்போது ஊரிலிருக்கும் எல்லா போலிஸ்காரர்களும் சைக்கிளில் போனாலும்கூட ஹெல்மெட்டோடு போகிறார்கள். இந்த அவலநிலைக்கு காரணம் ஒரு ‘பிரஸ்’ என்பதால், ஊரிலிருக்கும் எல்லா ‘பிரஸ்’காரர்களையும் மன்மதன் சிம்பு மாதிரி தேடித்தேடி காண்டு கொண்டு வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள்.

நேற்று மாலை தி.நகரில் மாட்டினோம். ‘பிரஸ்’ ஸ்டிக்கர் இல்லாத வண்டிகளை கண்டுக்கொள்ளாத சார்ஜண்ட், எங்களைப் பார்த்ததுமே வடமாநில கொள்ளையர்களை என்கவுண்டரில் போடும் வேகத்தோடு பாய்ந்துவந்து நிறுத்தினார்.

“லைசென்ஸ் காமிங்க”

காமித்தோம்.

“இன்சூரன்ஸ்?”

காமித்தோம்.

“ஹெல்மெட்?”

“இனிமேதான் சார் வாங்கணும்” என் நாக்கில் சனி.

அவர் விறுவிறுவென்று ஆகி, கன்னாபின்னவென்று கத்த ஆரம்பிக்க.. ஆசுவாசத்துக்காக இடையில் “எங்கே வேலை பார்க்குறீங்க?” என்றார்.

பத்திரிகையின் பெயரை சொன்னோம். நல்லவேளையாக எங்கள் பத்திரிகை மீது அவருக்கு பெருமதிப்பு இருந்தது. “நல்ல பத்திரிகை சார். ஆனா நீங்கதான் இப்படியிருக்கீங்க. மீட்டிங்குலேயே கமிஷனர் நாலஞ்சிவாட்டி உங்களை பாராட்டியிருக்கார்” சொல்லிவிட்டு, கடைசியாக அதே டயலாக் “நீங்களே இப்படி பண்ணலாமா?”

என்னால் தாங்க முடியவில்லை. இரவு தூங்கும்போது கனவில் வந்த சார்ஜெண்ட் ஒருவர் “நீங்களே இப்படி பண்ணலாமா?” என்கிறார். காலையில் வண்டியில் வரும்போது போலிஸ்காரர்கள் யாராவது பிடித்துவிடுவார்களா என்று என்றுமில்லாத அச்சத்தோடே அலுவலகம் வந்தேன்.

மதியம் ஒரு சிறுவேலையாக வெளியே கிளம்ப, ஏர்போர்ட் அருகே மிகச்சரியாக குறிவைத்து என்னைப் பிடித்தார் அந்த போலிஸ்காரர். அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன். ஒரு கடையில் ஹெல்மெட் தொங்கிக் கொண்டிருந்தது. வண்டியை லாக் செய்தேன். ‘ஹலோ, ஹலோ’ என்று போலிஸ்காரர் அழைக்க, கண்டுகொள்ளாமல் கடைக்குள் நுழைந்து, கைக்கு கிடைத்த ஹெல்மெட்டை வாங்கி தலையில் அணிந்தேன். நேராக சார்ஜண்டிடம் சென்றேன். சிரித்துக்கொண்டே, “போய்ட்டு வாங்க சார்” என்றார்.

இனி வண்டி ஓட்டும்போது காற்று முகத்தில் அறையாது. முடி ஸ்டைலாக பறக்காது.

6 மார்ச், 2012

சங்கரன்கோவில்


1967ல் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தபோதே, காங்கிரஸின் கோட்டையான சங்கரன்கோவிலிலும் ஓட்டையை போட்டுவிட்டது திமுக. பிற்பாடு திமுகவிலிருந்து அது அதிமுக கோட்டையாக உருவெடுத்தது. 80ல் தொடங்கி இரண்டே இரண்டு வருடங்கள் தவிர்த்து எப்போதுமே சங்கரன்கோவில்வாசிகளுக்கு அதிமுகவில் இருந்துதான் எம்.எல்.ஏ. 89ல் மட்டும் வைகோவின் அன்றைய அன்புத்தம்பியான தங்கவேல் திமுக சார்பாக ஜெயித்தார். 90ல் தங்கவேல் ரயில்நிலையம் கொண்டுவந்ததுதான் அத்தொகுதியின் சொல்லிக் கொள்ளும்படியான கடைசி வளர்ச்சி. தொலைநோக்கில்லாத நபர்கள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தளவுக்கு ஓர் ஊர் மோசமடையும் என்பதற்கு சங்கரன்கோவில் நல்ல உதாரணம். உருப்படியாக சமீபத்தில் அங்கே தொழிற்சாலையோ, கட்டமைப்போ எதுவுமே நடந்ததற்கான அடையாளங்கள் எதுவுமில்லை.

போனவாரம் பணிநிமித்தம் போய்வந்தேன்.

நகர்ப்புறங்களில் எட்டு மணி நேரம், கிராமப்புறங்களில் பத்து முதல் பண்ணிரெண்டு மணி நேரம் மின்வெட்டு. விவசாயிகளும், விசைத்தறியாளர்களும் நிறைந்த பகுதி. மின்சாரம்தான் முதன்மையான வாழ்வாதாரம். அதிமுக அபிமானத்தையும் தாண்டி, இப்பிரச்சினை ‘மாற்றி’ ஓட்டுபோட வைக்குமாவென இவ்வளவு சீக்கிரமாக கணிக்கமுடியவில்லை. ‘மின்வெட்டு தவிர்த்து வேறெதுவும் பெரிய பிரச்சினை இங்கே அம்மா ஆட்சியில் இல்லை’ என்று அங்கிருக்கும் அதிமுகவினர் சொன்னாலும், மின்வெட்டை தவிர்த்து வேறு பிரச்சினை இருந்தாலும் ‘அஜ்ஜஸ்ட்’ செய்துக்கொண்டு வழக்கம்போல ரெட்டை எலைக்கு குத்தியிருப்பார்கள். காலை 6 முதல் 9 மணி வரை வெட்டப்படுவதால் வேலைக்கு கணவரையும், பள்ளிக்கு குழந்தைகளையும் கிளப்பி அனுப்ப படாத பாடு படுகிறார்கள் பெண்கள். நாள் முழுக்க கொளுத்திய வெயில் அலுப்பு நீங்க, டாஸ்மாக்குக்குப் போய் “ஜில்லுன்னு பீரு கொடுப்பா” என்று கேட்கும்போது, “கரெண்ட் இல்லைண்ணே, ப்ரிட்ஜ் ஓடலை” என்று கூறி, கிட்டத்தட்ட 100 டிகிரி செண்டிக்ரேட்டில் பீரை கொடுக்கிறார்கள். ஆண்களுக்கும் வெறுப்புதான்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள்தான் இருக்கிறது. எனவே மதிமுக அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இங்கே இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. கலிங்கப்பட்டி சுத்து வட்டாரத்தில் ‘தெலுங்கு’ பேசும் நாயக்கர் இனமக்களின் ஒட்டுமொத்த ஓட்டும் பம்பரத்துக்குதான் விழும். கிட்டத்தட்ட முப்பதாயிரம் ஓட்டுகள் என்கிறார்கள்.

கடுமையான மும்முனைப்போட்டி என்பதால் இரண்டு லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதியில் ஐம்பதாயிரம் வாக்குகள் பெறும் வேட்பாளர் வென்றுவிடலாம்.

தொகுதியை சுற்றிப் பார்த்ததில் சங்கரன்கோவில் வாசிகள் ஆளுங்கட்சிக்கு ‘ஷாக்’ கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. வாக்கு வித்தியாசம் பெருமளவில் குறையலாம். ஐயாயிரம் டூ பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ரெட்டை எலை ஜெயிக்கக்கூடும் என்று கருதுகிறேன்.

அதிமுக வென்றால், கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ., அவருக்கு அமைச்சரவையில் இடமும் வழங்கப்படலாம். திமுக வென்றாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தேமுதிகவுக்கு வெல்லுவதற்கு வாய்ப்பேயில்லை. இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதுதான் நியாயம். சதன் திருமலைக்குமார் நல்ல வேட்பாளரும் கூட. மதிமுக சார்பில் இவர் ஒருவரது குரலாவது ஈழம், கூடங்குளம், முல்லைப்பெரியாறு மாதிரியான அத்தியாவசியப் பிரச்சினைகளின்போது சட்டமன்றத்தில் எதிரொலித்தாக வேண்டும்.

பார்க்கலாம். இன்னொருமுறை சங்கரன்கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. கலைஞர், அம்மா, கேப்டனின் பிரச்சாரங்கள் மக்கள் மனதில் ஏதேனும் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்துகிறதாவென்று கடைசிக்கட்டத்தில்தான் தெரியவரும்.

கால்கள் - கலந்துரையாடல்