21 மே, 2012

ராட்டினம்



‘யதார்த்தம், விளிம்புநிலை’ ஆகிய இரண்டு சொற்களை தமிழகராதியில் இருந்து நீக்கினால்தான் தமிழ் சினிமா உருப்படும் என்று தோன்றுகிறது. யதார்த்தமாக எடுக்கிறோம் என்கிற பெயரில் வருடா வருடம் எடுக்கப்படும் தலா நாற்பது மொக்கைப்படங்களில் ஒன்றுதான் ராட்டினமும்.

சுப்பிரமணியபுரம் பாணியில் க்ளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட். அதற்கு முன்னால் ஒரு ஷாக். ஒரு யதார்த்த சினிமாவுக்கு இது போதுமென இயக்குனர் முடிவுகட்டி விட்டது பார்வையாளர்களின் துரதிருஷ்டம். இந்த ட்விஸ்ட்டையும், ஷாக்கையும் மட்டுமே தயாரிப்பாளரிடம் கதையாக சொல்லி ‘சான்ஸ்’ வாங்கிவிட்டிருப்பார் போலிருக்கிறது. ‘காதல்’ பார்த்துவிட்டு, அதை பீட் செய்யும்விதமாக ஒரு படைப்பை தரவேண்டும் என்கிற இயக்குனரின் ஆர்வம் நமக்கு புரிகிறது. அதற்காக காதலையேவா மறுபடியும் மோசமாக பிரதியெடுப்பது? அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, லொட்டு லொசுக்கு என்று பிழிந்துப் பிழிந்து டீனேஜ் காதலை படமாக்கிய நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களில் வந்த சப்பைக் காட்சிகளின் மொக்கைத் தொகுப்பாகவே ராட்டினம் இருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த டீமுமே ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளிலிருந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து இப்போதுதான் படமெடுக்கிறார்கள் போலிருக்கிறது. மொத்தமாக சொல்ல வேண்டுமானால் புளித்துப்போன பழங்கஞ்சி.

ஹீரோ லகுபரனுக்கு விஜயாக உருவெடுப்பதா, கார்த்தியாக உருவெடுப்பதா என்கிற குழப்பம் இருந்திருக்கிறது. நடிப்பென்றால் லிட்டருக்கு எவ்வளவு என்று கேட்கும் விஜயின் அசமஞ்சத்தனத்தை முகத்திலும், உடை மற்றும் தோற்றத்தில் கார்த்தியையும் ‘பிட்டு’ அடிக்கிறார். க்ளைமேக்ஸில் ஒரு ஃப்ரேம் போட்ட கண்ணாடியை மாட்டிக் கொண்டால் நடுத்தர வயது குடும்பஸ்தனாகிவிடலாம் என்று ஐடியா கொடுக்கும் காஸ்ட்யூமர்களின் அறிவே அறிவு.

ப்ளஸ் டூ படிக்கும் பெண்தான் வேண்டும் என்று தேடித்தேடி ஸ்வாதியை செலக்ட் செய்தாராம் இயக்குனர். ஹீரோவுக்கு சித்தி மாதிரி இருக்கிறார் ஹீரோயின். கொடுமை சாமி. வயசுக்கு வந்து பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிய பெண்களை எல்லாம் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு மாணவியாக நடிக்க வைக்கும் தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது இ.பி.கோ செக்‌ஷன் 304(2)-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு தொடர வேண்டும்.

படத்தின் இசையமைப்பாளர், அந்தக் காலத்தில் கே.வி.மகாதேவனிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றி அவருக்கு இப்போதுதான் சான்ஸ் கிடைத்திருக்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது. அடிக்கடி அவர் போடும் ‘தான்னன்னா’ மியூசிக்கில் தாவூ தீருகிறது.

சரியாக சொல்லப்போனால் இரண்டரை வருடங்களுக்கு இழுக்கப்பட வேண்டிய பாடாவதி மெகாசீரியல் ஒன்றினை இரண்டரை மணி நேரத்துக்கு எடிட்டி சாவடித்திருக்கிறார்கள். சாதாரண நடையில் வசனம் எழுதிவிட்டு, எல்லாவற்றுக்கும் பின்னால் ‘லே’ போட்டுவிட்டால் தூத்துக்குடி பாஷையாகிவிடும் போல. ‘லே’வுக்கு பதில் ‘லூ’ போட்டு டப்பிவிட்டால் தெலுங்கிலும் கல்லா கட்டலாம். வக்கீல் மாமா, திரேஸ்புரத்துக்காரி, ஹீரோவின் அண்ணி என்று சிலர் யதார்த்தமாக(!) இருக்கிறார்கள் என்று கஷ்டப்பட்டு தேடினால் மட்டுமே ஓரிரண்டு சமாச்சாரங்கள் படத்தை பாராட்ட கிடைக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை சாட்டை கொண்டு விளாசக்கூடாது என்பது குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் கொள்கை. குமுதத்தின் கொள்கைகளை முடிந்தவரை கடைப்பிடிப்பவன் என்றாலும் ரொம்ப ரொம்ப சுமாரான இந்தப் படத்தை மீடியாக்களும், இணையதள விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் ‘ஆஹா, ஓஹோ’வென அர்த்தமேயில்லாமல் தூக்கிவைத்து கொண்டாடுவதில் ஏற்படும் எரிச்சலில் இம்மாதிரி எழுத வேண்டியிருக்கிறது. அசட்டுத்தனமாக இருப்பதே நம்மூரில் அறிவுஜீவித்தனமாக பார்க்கப்படுகிறது. ஊன்னா தான்னா பரிந்துரைக்கும் படங்கள் என்றுமே உருப்படாது என்பதற்கு மீண்டும் நல்ல எடுத்துக்காட்டு.

18 மே, 2012

கலகலப்பு


தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர்.சி-க்கு சினிமாவில் இருந்த மவுசு இன்றைக்கும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே ஒரு ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை இட்டுச்சென்ற உயரம் அப்படியானது. அடுத்தடுத்து வந்த மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களெல்லாம் ‘சுந்தர்.சி’ என்கிற பிராண்டுக்காகவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. என் சமவயதுள்ள தோழர்களுக்கு சுந்தர்.சி நடிக்க வருவதற்கு முன்பே ஹீரோ. அவர் இயக்கிய இருபத்தைந்து படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். ‘அருணாச்சலம்’ மட்டுமே சுந்தர்.சி-க்கு திருஷ்டிப்படிகாரம் என்பது என் எண்ணம்.

இத்தனை ஆண்டுகளில் சுந்தர்.சி கொஞ்சமும் மாறவேயில்லை என்பது கலகலப்பு பார்க்கும்போது தெரிகிறது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கொஞ்சம்கூட வளரவில்லை என்றும் சொல்லலாம். அதே உருட்டுக்கட்டை, அதே சேஸிங், அதே லாஜிக்லெஸ் சீன்கள், அதே வசன-வார்த்தைக் குழப்பங்கள்... உள்ளத்தை அள்ளித்தா பார்முலாவில் இத்தனைப் படம் எடுத்தும் இன்னும் அலுக்காமல், அதையே தொடர்ச்சியாக, ஆர்வமாக அவர் எடுத்துக் கொண்டிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.

‘கலகலப்பு’ 1996ல் வெளியான படத்தை பார்ப்பதைப் போன்ற உணர்வினைக் கொடுக்கிறது. இடைபட்ட ஆண்டுகளில் தமிழ் திரையுலகம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதையுமே இயக்குனர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விமர்சனமாக சொல்லவேண்டும் என்றால் சுந்தர்.சி அப்டேட்டாக இல்லை. ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில்குமாரும் அதேகாலத்து தொழில்நுட்பத்தில் முடங்கிவிட்டார் போல. படத்தின் எடிட்டர் கழுவப்பட்ட நெகட்டிவ்களை கத்திரிக்கோலால் வெட்டி, செலபன் டேப் ஒட்டி எடிட்டியிருப்பார் போலிருக்கிறது. இசையும் தொண்ணூறுகளின் இசைதான். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்ததும் காலயந்திரத்தில் பயணித்து பதினைந்து ஆண்டுகள் முன்பாக போய்விட்டது மாதிரி ஃபீலிங்.

ஆனால், இந்தப் பிரச்சினை எதுவுமே ‘கலகலப்பின்’ கலகலப்பை குறைக்கவில்லை. சுந்தர்.சி-யின் படங்கள் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆவதைப் போல ரொம்ப ஸ்லோவாகவே ஆரம்பிக்கும். நான்கைந்து காட்சிகளுக்குப் பிறகு பிடிக்கும் சூடு, அப்படியே பிக்கப்பாகி க்ளைமேக்ஸில் பிரமாதமாக வெடிக்கும். கலகலப்பும் அந்த ஃபார்முலாவுக்கு விதிவிலக்கல்ல. படம் முழுக்க காரணமேயில்லாமல் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துவிட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ‘ஏன் சிரித்தோம், அப்படி என்ன பிரமாதமான காமெடி?’ என்று தோன்றுகிறது. அதனாலென்ன? ரெண்டு மணிநேரம் வாய்விட்டு சிரித்திருக்கிறோமில்லையா? டிக்கெட்டுக்கு கொடுத்த காசு கண்டிப்பாக செரிக்கும்.

படத்தில் எல்லா சமாச்சாரங்களுமே எல்லாமே அவுட் ஆஃப் பேஷன் என்றாலும், ‘நங்’கென்று புதுசாக ஒரு ‘மேட்டரை’ இறக்கியிருப்பதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. சுடிதாரிலும், தாவணியிலும் டீசண்ட் ஃபிகராகவே செட்டில் ஆகிவிட்ட அஞ்சலியை பிரமாதமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் காட்டன் புடவையில் வந்தாலும் கூட செம்ம நாட்டுக் கட்டையாகவே தெரிகிறார். இதுவரை எந்த இயக்குனரும் படம்பிடித்திராத லொக்கேஷனான அஞ்சலியின் பேரெழில் தொப்புளை, வாஸ்கோடகாமா கணக்காக கண்டுபிடித்து படமாக்கியிருப்பதில் சபாஷ் வாங்குகிறார் சுந்தர்.சி. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலுமே முக்கால் சாண் இறக்கியே கொசுவம் வைத்திருக்கிறார் அஞ்சலி. இவரது தொப்புள் இயற்கையான தொப்புள்தானா அல்லது கூடுதல் கவர்ச்சிக்காக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்களா என்கிற குழப்பம் இந்த நொடி வரை எனக்கு நீடிக்கிறது.

அஞ்சலியின் கவர்ச்சி பாராட்டப்பட வேண்டியது என்றால் ஓவியாவின் கவர்ச்சி கண்டிக்கப்பட வேண்டியது. சில காட்சிகளில் அவரது முகம் அழகாக இருக்கிறது. பல காட்சிகளில் ரொம்பவே சுமாராக இருக்கிறார். சாமுத்ரிகா லட்சணம், காமசூத்ரா லட்சணம் என்று எந்த லட்சணத்தின்படி பார்த்தாலும் இப்படியொரு உடல்வாகு ஒரு பெண்ணுக்கு அமைய வாய்ப்பேயில்லை. அவ்வளவு பூஞ்சையான உடம்புக்கும், உடைந்துவிடும் மாதிரி ஒல்லியான இடைக்கும் எப்படி அவ்வளவு பெரிய...? so confusing.

சந்தானம் அலுக்கிறார். விரைவில் அடுத்த விவேக் ஆகிவிடக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதுபோலவே விமலும் கூட முன்பு எல்லா பாரதிராஜா படங்களிலும் இடம்பெறும் ராஜா என்கிற நடிகர் போல் ஆகிவிடுவார் எனத்தெரிகிறது. இன்னொரு ஹீரோவான சிவா அநியாயம். கம்மி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டதைப் போல ஏனோ, தானோவென்று நடித்திருக்கிறார்.


யோசித்துப் பார்த்தால் இது மொக்கைப்படம். ஆனாலும் இன்னொரு முறை தியேட்டருக்குப் போய் பார்க்கத் தோன்றுகிறது. 


16 மே, 2012

கப்பார்சிங்


இந்திய மசாலா சினிமாவின் உச்சம் என்று ‘தபாங்’கை இந்திக்காரர்கள் சொல்கிறார்கள். பத்து நாட்களில் நூறு கோடி வசூலித்தது என்று காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்கள். இந்தியாவில் என்ன, உலக மசாலாவுக்கே நாங்கதான் உச்சம் என்று இனி ஆந்திரவாலாக்கள் மார்தட்டிக் கொள்ளலாம். அதே ‘தபாங்’கின் ரீமேக் என்கிற பெயரில் இயக்குனர் ஹரிஷ் ஆடியிருக்கும் ஆட்டம், கப்பார்சிங் எனும் ஊழித்தாண்டவம்.

முதல்வார வசூல் மட்டுமே இருபத்தைந்து கோடியை அனாயசமாக தாண்டிவிடும் என்கிறார்கள். டோலிவுட்டின் முந்தைய எவர்க்ரீன் ரெக்கார்டுகளான தூக்குடு, மகாதீராவெல்லாம் காலியாம். ஆந்திராகாரர்களோடு இதே தொல்லை. ரச்சா, தம்மு, கப்பார் சிங் என்று அடுத்தடுத்து இரண்டு வாரத்துக்கு ஒரு ஓபனிங் ரெக்கார்ட் பிரேக்காவது அவர்களுக்கு சாத்தியமாகிறது. கோலிவுட்டில் எந்திரனின் ரெக்கார்டை உடைக்க இன்னும் நான்கைந்து வருஷமாவது ஆகும். பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது இண்டஸ்ட்ரி எவ்வளவு ஆரோக்கியமாகவும், நம்முடைய இண்டஸ்ட்ரி எவ்வளவு சோனியாகவும் இருக்கிறதென்று. கப்பார்சிங்கின் ஓபனிங் ரெக்கார்ட் தெலுங்குக்கு மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் கூட டாப் டென்னில் இடம்பிடிக்கப் போகிறது.

ரீமேக் என்றால் ஸ்க்ரிப்டை ’ஒஸ்தி’த்தனமாக அப்படியே ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென்பதில்லை என்பதில் இயக்குனர் தெளிவாக இருந்திருக்கிறார். ’தல’ ரசிகரான வெங்கட்பிரபு எப்படி ‘தல’யை அணுஅணுவாக ரசித்து மங்காத்தாவை செதுக்கினாரோ, அப்படியே ஹரிஷூம் பவர்ஸ்டார் பவன்கல்யாணை செதுக்கித் தள்ளியிருக்கிறார். காட்சிக்கு காட்சி மாஸ். ஒட்டுமொத்தமாக சூப்பர் பாஸ்ட்.

மிகச்சரியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக பவன் நடித்த ‘குஷி’ வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட். அதற்கு முன்பு நடித்த அத்தனை படங்களும் கூட ஹிட்தான். தொல்லி பிரேமா சூப்பர் டூப்பர் ஹிட். யார் கண் பட்டதோ தெரியவில்லை. குஷிக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாக பவன் எதைத் தொட்டாலும் விளங்காமலேயே போய்க் கொண்டிருந்தது. படுதோல்வி அல்லது கையை கடிக்காத சுமார் வெற்றி என்று தடுமாறிக்கொண்டே இருந்தார். நாற்பத்தி இரண்டாவது வயதில் அடித்திருக்கிறது பம்பர் ஹிட். இத்தனை ஆண்டுகளாய் பவன் பொறுமையாக இருந்ததோடு இல்லாமல், அவரது ரசிகர்களும் அவரோடு நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். கப்பார்சிங் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த பவர்ஸ்டாரின் ரசிகர் ஒருவர் தன் ட்விட்டர் தளத்தில் இவ்வாறாக குறிப்பிட்டார். “தலைவா. அடுத்த பதினோரு வருஷத்துக்கு நீ தொடர்ந்து ஃப்ளாப் கொடு. பரவாயில்லை. ஆனா பண்ணிரண்டாம் வருஷம் இதேமாதிரி இன்னொரு கப்பார் சிங் கொடு”

என்னதான் மெகாஸ்டாரின் தம்பியாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவத்தால் நிற்கவேண்டும் என்பதில் உறுதியானவர் பவர்ஸ்டார் பவன்கல்யாண். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல. இயக்குனர், கதையாசிரியர், ஸ்டண்ட் இயக்குனர், நடன இயக்குனர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர். பவன் அளவுக்கு சின்சியாரிட்டி கொண்ட நடிகர்களை காண்பது அரிது என்பதாலேயே முன்னணி இயக்குனர்கள் அவரோடு பணியாற்ற எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஒருவகையில் டோலிவுட்டின் அஜித் என்றும் இவரை சொல்லலாம்.

தபாங் ரீமேக்குக்கு ஹரிஷ்சங்கரை இயக்குனராக பவன் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம். ஹரிஷ், பூரி ஜெகன்னாத்திடம் பணியாற்றியவர். தீவிரமான ரவிதேஜா ரசிகர். ரவிதேஜா-ஜோதிகா காம்பினேஷனில் 2006ல் அவர் இயக்கிய ‘ஷாக்’ பாக்ஸ் ஆபிஸ் டிஸாஸ்டர். அடுத்து சித்தார்த்தை நாயகனாக்கி எடுத்த ‘ஆட்டா’வுக்கு டாட்டா சொன்னார்கள் ரசிகர்கள். மீண்டும் ரவிதேஜாவிடமே தஞ்சமடைந்தார். போன ஆண்டு வெளியான ‘மிரப்பாக்காய்’ ரவிதேஜாவின் மாஸுக்காக ஓபனிங்கில் மிரட்டினாலும், படத்தில் சரக்கில்லை என்று விரைவாகவே புறம் தள்ளிவிட்டார்கள் ரசிகர்கள். குருநாதர் பூரிக்கும், குருநாதரின் குருநாதரான ராம்கோபால்வர்மாவுக்கும் மட்டும் ஹரிஷ் சாதிப்பார் என்று நம்பிக்கை இருந்தது (கடந்தாண்டு வெளியான ஆர்.ஜி.வி.யின் ‘தொங்கலா முத்தா’ திரைப்படத்தில் பூரி இணை இயக்குனராகவும், ஹரிஷ் துணை இயக்குனராகவும் கவுரவத்தை விட்டுக் கொடுத்து பணியாற்றினார்கள் என்பது சுவையான துணுக்குச் செய்தி).

பெரிய இயக்குனர்கள் நம்பும் இயக்குனர் என்பதாலேயோ என்னவோ, ஹரிஷ் மீது பாரத்தை போட்டுவிட்டு நடித்தார் பவன்கல்யாண். தன் அபிமான ஹீரோவான ரவிதேஜாவுக்கு எப்படி பார்த்து, பார்த்து ஹீரோயிஸ மாஸ் காட்சிகளை செதுக்குவாரோ, அதேமாதிரி பவனுக்கும் செதுக்க ஆரம்பித்தார் ஹரிஷ். தபாங்கின் ஒரிஜினல் கதை, லாஜிக் என்றெல்லாம் நிறைய இடித்தது. அதைப்பற்றி கவலை எதற்கு? ஒரு சூப்பர் ஹீரோவை கையில் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சாத்தியமோ, அதையெல்லாம் முயற்சித்துவிடலாம் என்று ஸ்க்ரிப்டில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தார்.

தன்னைப்போலவே தெலுங்கில் அட்டர்ஃப்ளாப் ஆகி, ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட ஸ்ருதியை நாயகியாக ஒப்பந்தம் செய்தார். தபாங்கின் சோனாக்‌ஷி வனப்பு என்ன.. சோமாலியா பெண் மாதிரி வாடி வதங்கி, வற்றிப் போயிருக்கும் ஸ்ருதி எங்கே என்று விமர்சனம் கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஸ்ருதி படத்தில் இருந்து நீக்கப்படலாம் என்றுகூட பேசப்பட்டது. ஹரிஷ் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டார்.

இப்படியாக மாமாங்கமாக ஹிட்டே இல்லாத ஹீரோ, அட்டர் ஃப்ளாப் இயக்குனர், ராசியில்லாத ஹீரோயின் என்று கப்பார்சிங் பெரியதாக எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லாமல்தான் வெளியானது. முதல் காட்சியிலேயே தெரிந்துவிட்டது படம் பக்கா ஹிட். பவனுடைய ரேஞ்ச் பரபரவென்று ஒரேநாளில் எங்கோ உயர்ந்துவிட்டது. ஹரிஷூக்கு பத்துகோடி சம்பளம் தர தயாராக வரிசையில் நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தென்னிந்தியாவின் ஹாட்கேக் ஹீரோயின் ஆகிவிட்டார் ஸ்ருதி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இவரை அசைக்க ஆளில்லை. ஸ்ருதி தழுதழுத்துப் போய் ஹரிஷிடம் ட்விட்டரில் சொல்கிறார். “உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ஹரிஷ்”. ஹரிஷின் பதில், “நன்றியெல்லாம் எதற்கு.. நீ என்றுமே என்னுடைய பாக்கியலட்சுமிதான்” (படத்தில் ஸ்ருதியின் பெயர் பாக்கியலட்சுமி)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஹிட்டடிக்கும் அளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் ஹைலைட் மேட்டர். படத்தின் எண்ட் கார்ட் போடும்வரை கதை எங்கே என்று பார்வையாளன் தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஆனால் பரபரப்பான திரைக்கதை, அதிரடி பஞ்ச் வசனங்கள், துள்ளல் பாடல்கள், நிமிடத்துக்கு நாலுமுறை வாய்விட்டு சிரிக்கவைக்கும் காட்சிகள் என்று ரசிகனை சீட்டில் கட்டாயப்படுத்தி கட்டிப்போடுகிறார்கள். காவல்நிலையத்தில் நடக்கும் ‘அந்தாக்‌ஷரி’ காட்சியைப் பார்க்கும் யாருக்காவது வயிறுவலிக்கவில்லை என்றால், அவரது மனநிலையை நாம் சந்தேகிக்கலாம். இந்தப் படத்தையே மீண்டும் ரீமேக் செய்து, தபாங்கின் அடுத்த பகுதியாக சல்மான் நடிக்கலாம் என்றெல்லாம் பாலிவுட் ஆட்களும் சிபாரிசு செய்யுமளவுக்கு ஒரிஜினலுக்கும், ரீமேக்கும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருந்தார் ஹரிஷ்.

படம் பார்த்த ராம்கோபால் வர்மா சொன்னாராம். “படம் நன்றாக இருந்தால் ஹிட். இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்தால் சூப்பர்ஹிட். ரொம்ப நன்றாக இருந்தால் ப்ளாக் பஸ்டர். அதையும் தாண்டி சொல்லவேண்டுமென்றால் இனி ‘கப்பார்சிங்’ என்று சொல்லிவிடலாம்

ராம்கோபால்வர்மாவே சொல்லிவிட்டார். நாமென்ன தனியாக சொல்வது?

14 மே, 2012

சபாஷ் தினகரன்



பொதுவாக நாளிதழ்களில் ‘செய்தி’ மட்டுமே கிடைக்கும். செய்தியை தாண்டிய உணர்வுகள் கிடைப்பதில்லை. செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகளை மொழிபெயர்த்தோ, காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட துறைகளும் நிறுவனங்களும் தரும் செய்திக்குறிப்புகளை தட்டி, வெட்டி, ஒட்டி வழங்கும் செய்திகளையே பெரும்பாலும் நாளிதழ்களில் வாசிக்க முடிகிறது. தினமலர் மாதிரியான நாளிதழ்கள் ஒருபடி மேலேபோய் சிறப்புக் கட்டுரைகளை வார இதழ்களைப் போல எக்ஸ்க்ளூஸிவ்வாக வழங்குவதுண்டு. தினமலரைப் பொறுத்தவரை உள்ளடக்கத்தின் நோக்கம் எப்படியோ, காகிதத்தில் தொடங்கி, செய்திகளையும் கட்டுரை மற்றும் இதரப் பகுதிகளையும் ப்ரசண்டேஷன் செய்யும் வகையில் தரம் என்றும் நிரந்தரம் என்பது என் நம்பிக்கை.

பிரசித்தி பெற்ற தினத்தந்தியிலேயே கூட ‘தலையங்கம்’ சிலகாலமாகதான் வந்துக் கொண்டிருக்கிறது. வாசிக்கப் பொறுமையற்றவர்கள் தொலைக்காட்சிகளிலேயே செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள். அதிலும் செய்தி சானல்களில் சுடச்சுட ஃப்ளாஷ் நியூஸ், விஷூவலாகவே கிடைக்கிறது. தமிழில் புலனாய்வு இதழ்களே இப்போது வாரமிருமுறை வந்துக் கொண்டிருக்க செய்தித்தாள்களை வாசிக்காவிட்டால் அப்படியொன்றும் குடிமுழுகி போய்விடாது என்கிற நிலைமை உருவாகி விட்டது. நாளிதழ்கள் தங்கள் பாரம்பரிய வடிவினை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

தினகரன் நாளிதழ் இந்நிலைமையை நன்கு உணர்ந்திருக்கிறது என்று தெரிகிறது. சமீப சில மாதங்களாக இந்நாளிதழில் வெளிவரும் சிறப்புக் கட்டுரைகள் அபாரமான உழைப்போடு வெளியாகிறது. கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் ஆழமும், விரிவும் வெளிப்படுகிறது. சிறப்புக் கட்டுரைகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரச்சினைகளும் வாசகர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. ஒரு வார இதழில் பணிபுரிபவன் என்கிற முறையில் அவர்களது சில கட்டுரைகளை வாசிக்கும்போது ‘வட போச்சே’ என்று நினைத்து பொறாமைப்படத்தக்க அளவில் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

நேற்றைய தினகரன் ஞாயிறு இதழில் (மே 14, 2012) பாலகுமாரன் எழுதிய ‘நான் விட்ட பிறகும் அது விடவில்லையே...’ என்கிற அனுபவக் கட்டுரை தமிழ் நாளிதழ் வரலாற்றில் ஒரு மைல் கல். இவ்வகையிலான கட்டுரையை இதுவரை எந்த தமிழ் நாளிதழிலும் வாசித்ததாக நினைவில்லை. ‘விளையாட்டாகதான் அது ஆரம்பித்தது’ என்கிற வரிகளோடு தொடங்கும் இந்த அரைப்பக்க கட்டுரை பாலகுமாரன் எழுத்துகளில் மாஸ்டர்பீஸ். புனைவாற்றல் கைவிடலாம், ஆனால் அனுபவங்கள் ஓர் எழுத்தாளனை என்றுமே கைவிடுவதில்லை என்பதற்கு இக்கட்டுரை நல்ல உதாரணம். பத்தொன்பது வயதில் ஆரம்பித்த புகைப்பழக்கம், அறுபத்து ஆறாவது வயதிலும் தன்னை எவ்வாறாக எல்லாம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை சம்பவ உதாரணங்களோடு வெகுசுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் பாலகுமாரன். புகை வேண்டாம் என்கிற பிரச்சாரம்தான் இக்கட்டுரைக்கு அடிநாதம் என்கிறபோதிலும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்தாமல், புள்ளிவிவரங்களை அள்ளித் தெளித்து அயர்ச்சியடையச் செய்யாமல்.. புகைக்கும் தனக்குமான உறவு.. உடல்ரீதியான கட்டாயத்தின் அடிப்படையில் அப்பழக்கத்தை விடுவது.. விட்டபின்பும் பதினைந்து ஆண்டுகாலம் கழிந்த நிலையிலும் புகைக்கு ஏற்கனவே அடிமைப்பட்டுவிட்ட உடல் ஒத்துழைக்காதது என்று அவரது சுய வாக்குமூலமாக சுவாரஸ்யமாக ஓடுகிறது கட்டுரை. புகைப்பழக்கம் கொண்ட ஒவ்வொருவரையும் பன்மடங்கு குற்றவுணர்வுக்கு உடனடியாக ஆளாக்குகிறது.

பொதுவாக வார இதழ்கள்தான் இம்மாதிரி பிரபலங்களிடம் அனுபவங்களை கேட்டு தொகுத்து வெளியிடுவது வழக்கம். அது நாளிதழ்களில் பிரசுரிக்கப்படக்கூடாது என்றெல்லாம் விதிகள் ஏதுமில்லை. ஆனாலும் நாளிதழ்கள் பெரும்பாலும் செக்ஸ், க்ரைம், பாலிடிக்ஸ் என்றே தங்கள் வரையறையை சுருக்கிக் கொண்டிருக்கிறது. தினகரன் இந்த எல்லையை தாண்ட முயற்சித்து வருகிறது. பாலகுமாரனின் தீவிர வாசகன் என்கிற அடிப்படையில் நீண்டநாள் கழித்து அவரது சிறப்பான எழுத்துகளை வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தினகரன் ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

மேலும் நேற்றைய தினகரனின் 19வது பக்கத்தில் (சென்னை பதிப்பு) வெளியான ஒரு வழக்கமான மாமூல் செய்தியில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் வார்த்தையும் சட்டென்று கவர்ந்தது. நாளிதழ்களின் சம்பிரதாய வார்த்தையான ‘விபச்சாரம்’ என்பதைத் தவிர்த்து ‘பாலியல் தொழில்’ என்று ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கைதான பெண்களை அழகிகள் என்று குறிப்பிடாமல் இருந்ததும் மிகப்பெரிய ஆறுதல்.

12 மே, 2012

ரீங்காரம்


நேற்று இரவு சரியாக தூக்கம் வரவில்லை. ஆனாலும் தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். கண்களை மூட கடுப்பாக இருந்தது. இருப்பினும் மூடினேன். ‘ங்கொய்..’ என்று ரீங்காரம் கேட்டது. தொலைக்காட்சியை அணைத்தேனா என்று சந்தேகம் வந்தது. எழுந்து சென்று பார்த்தேன். அணைந்திருந்தது. ‘ங்கொய்..’ இப்போது கேட்கவில்லை. படுக்கையில் சாய்ந்தேன். கண்களை மூட முயற்சித்தேன். மீண்டும் அதே ‘ங்கொய்..’. கண்களை இமைகளால் மூட முடிவதைப் போல, காதுகளை மடல்களால் மூட முடிந்தால் எத்தனை சுளுவாக இருக்கும். இயற்கைக்கு படைப்பாற்றல் போதவில்லை. கடவுள் ஒரு எழுத்தாளனாக இருந்திருக்கும் பட்சத்தில் காதை மட்டுமல்ல, மூக்கை மூடவும் ஏதேனும் வசதி படைத்திருப்பான்.

‘ங்கொய்..’ சத்தத்தை கூர்ந்து கவனித்தேன். என்னுடைய முப்பதாண்டுகால வாழ்வியல் தரிசன கவனத்தை மொத்தமாய் குவித்ததின் மூலமாக அது என்னவென்று உணரமுடிந்தது. கொசு. கொசுவின் ரீங்காரம். கொசுவுக்கு வாய் உண்டா? வாய் இருப்பின் ஏன் இப்படி சத்தமிடுகிறது? துணை தேடுகிறதா? பசிக்கிறதா? தாகமெடுக்கிறதா? அல்லது சக கொசு ஏதேனும் அதை பாலியல் வன்முறை செய்ததா? இவ்வாறாக ஓர் உயிரினத்துக்கு சக உயிரினத்தாலோ அல்லது தன்னாலேயோ ஏற்படும் தொல்லைகள் குறைந்தது ஆயிரத்தை பட்டியலிட்டேன்.

அந்த கொசுவை என் கண்களால் பார்க்க முற்பட்டு தலையை திருப்பினேன். சத்தம் நின்றது. கொசு பறந்தது. இருட்டில் முழுமையாக அதனுடைய உடலுருவை காண இயலவில்லை. போர்வையை விலக்கினேன். எழுந்தேன். அறையிலிருந்த அறுபது வாட்ஸ் சக்திகொண்ட குண்டுவிளக்கினை போட முற்பட்டு, சுவரில் சுவிட்ச் தேடினேன். தடவினேன். போட்டேன். மஞ்சள் வெளிச்சம் அறையில் விரவியது. மெல்லிய ஊதாநிற சுண்ணாம்புப் பூச்சு சுவர்களில் வெளிச்சம் பட, மஞ்சளும் ஊதாவும் இணைந்து உருவாக்கிய புதிய நிறம் மனதை கொள்ளை கொண்டது.

ஒரு படைப்பாளியின் பிரச்சினையே இதுதான். எதை நோக்கி நகர்ந்தாலும், அவனது நகரல் குறிப்பான இலக்கினை நோக்கிய பயணத்தினூடே நேர்க்கோட்டில் பயணிக்காமல், பரவலாகி பக்கத்து இலக்குகளையும் கவனித்து, குறிபார்க்கப்பட்ட இலக்கினை தேடி சேர்வது தாமதமாகும். அவ்வாறாகவே ரீங்கரித்த கொசுவினை காணும் என்னுடைய நோக்கம் அறையில் பரவிய ஒளி, சுவரில் பூசப்பட்ட வண்ணம் என்று கல்லெறிந்து நொறுங்கிய கண்ணாடியாய் சிதறியது. எங்கே கொசு?

பத்துக்கு பதினைந்து அளவில் கட்டப்பட்ட அறை முழுக்க துல்லியமாய் அங்குலம் விடாமல் தேடினேன். ரீங்கரிப்பு சங்கீதம் காதுகளில் விழுகிறதா என்று உன்னிப்பாய் அவதானித்தேன். மின்விசிறி சுழலும் சத்தம் மட்டுமே கேட்கிறது. தூரத்தில் எங்கோ நாய் அழுகிறது. அதற்கு பசியாக இருக்கலாம். அல்லது துணை தேடலாம். இல்லையேல் இரவுக்காட்சி முடித்துவந்த யாரையோ பார்த்து குலைத்திருக்கலாம். குலைக்கப்பட்டவன் குரோதத்தில் கல்லெறிந்து காயப்படுத்தியிருக்கலாம். வலி தாங்காமல் அந்த நாய் அழுதிருக்கலாம். மின்விசிறியை அணைத்தேன்.

கண்டேன் கொசுவை. ஒருவழியாய். ஒன்றல்ல, இரண்டு. இப்போது என் குழப்பம் அதிகரித்தது. என் காதில் கத்தியது எந்த கொசு. இரண்டு கொசுவும் அளவில் ஒரே மாதிரியாக இருக்கிறது. இரண்டுக்குமே இறக்கைகள் இருக்கிறது. கண்களும், காதுகளும், மூக்கும், வாயும், உதடுகளும், பற்களும் இருக்கிறதா என்று என்னுடைய வெறும் கண்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் உயிர் இருக்கிறது. ஓர் உயிரினத்துக்கு முக்கியமானது உயிர். நான் பார்த்த இரண்டு கொசுவுக்கும் உயிர் இருந்தது.

மின்விசிறியை அணைத்ததால் அந்த கொசுக்களால் இயல்பாக பறக்க முடிந்தது. கொசுக்கள் பறவைகள் அல்ல என்றபோதிலும் அவற்றால் பறக்க முடிவது படைப்பாற்றலுக்கே உரிய தனித்துவம். இந்த இரு கொசுக்களும் காதலர்களாக இருக்கலாம். கணவன் மனைவியாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம். எதிரிகளாக இருக்கலாம். ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும்.. இல்லையேல் இரண்டுமே ஆணாகவும்.. இரண்டுமே பெண்ணாகவும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். நிகழ்கால நிகழ்தகவு இதைதான் கற்பிக்கிறது.

இந்த இரண்டு கொசுக்களில் ஏதோ ஒரு கொசு என் காதில் சற்றுமுன் ரீங்கரித்தது. அல்லது இரண்டுமே தலா ஒரு காதினை வாடகைக்கு பிடித்து ரீங்கரித்திருக்கலாம். அந்த ரீங்கார மொழியின் மூலம் இக்கொசுக்கள் என்னிடம் சொல்ல முயல்வது என்ன?

நான் கொசு. நீ மனிதன். உன்னுடைய ஒருநாள் உறக்கத்துக்கு எங்கள் உயிரை கொல்லாதே என்றா? அல்லது அவை என்னிடம் அவற்றின் இருப்பை வெளிப்படுத்தி நாங்களும் உயிர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று சொல்ல முயற்சித்தனவா? குறிப்பாக இதையெல்லாம் சொல்ல அவை என்னை தேர்ந்தெடுத்தது எதனால்? படைப்பாளி என்பதால் எனக்கு கொசுக்களின் மொழி புரியலாம் என்று அவை நினைத்திருக்கலாம்.

உண்மையை சொல்லப்போனால் சில நேரங்களில் என்னுடைய மொழியே எனக்கு சமயங்களில் புரிவதில்லை. அவற்றை வாசித்து புரிந்துகொள்ளும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதாலேயே மட்டுமே இன்னமும் நான் எழுத்தாளனாக எழுத முடிகிறது.

நடு நிசி தாண்டி நாலு மணி நேரம் ஆகிவிட்டது. மனம் சுறுசுறுப்பாக இயங்கினாலும், கண்கள் ஓய்வை வேண்டியது. குண்டு விளக்கை அணைத்தேன். மின்விசிறியை சுழல செய்தேன். படுக்கையில் விழுந்தேன். ரீங்காரம் கேட்காதா என்று ஏங்கியது என் காதுகள். அந்த கொசுக்கள் என்ன நினைத்தனவோ, அதற்குப் பிறகு என்னை தொல்லைப்படுத்தவேயில்லை.

நாளை காலை என்னுடைய இணையத்தளத்தில் நான் படைக்க வேண்டிய இலக்கியம் ஒருவாறாக இவ்வாறு தயாராகிவிட்டது. எப்படியும் ஒரு ஐநூறு வார்த்தைகள் தேத்திவிடலாம் என்கிற நினைப்பே எனக்கு நிம்மதி தந்து துயில ஆரம்பித்தேன்.

(Thanks : Inspiration to achieve this ilakkiyam from முறையீடு)