14 மே, 2012

சபாஷ் தினகரன்



பொதுவாக நாளிதழ்களில் ‘செய்தி’ மட்டுமே கிடைக்கும். செய்தியை தாண்டிய உணர்வுகள் கிடைப்பதில்லை. செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகளை மொழிபெயர்த்தோ, காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட துறைகளும் நிறுவனங்களும் தரும் செய்திக்குறிப்புகளை தட்டி, வெட்டி, ஒட்டி வழங்கும் செய்திகளையே பெரும்பாலும் நாளிதழ்களில் வாசிக்க முடிகிறது. தினமலர் மாதிரியான நாளிதழ்கள் ஒருபடி மேலேபோய் சிறப்புக் கட்டுரைகளை வார இதழ்களைப் போல எக்ஸ்க்ளூஸிவ்வாக வழங்குவதுண்டு. தினமலரைப் பொறுத்தவரை உள்ளடக்கத்தின் நோக்கம் எப்படியோ, காகிதத்தில் தொடங்கி, செய்திகளையும் கட்டுரை மற்றும் இதரப் பகுதிகளையும் ப்ரசண்டேஷன் செய்யும் வகையில் தரம் என்றும் நிரந்தரம் என்பது என் நம்பிக்கை.

பிரசித்தி பெற்ற தினத்தந்தியிலேயே கூட ‘தலையங்கம்’ சிலகாலமாகதான் வந்துக் கொண்டிருக்கிறது. வாசிக்கப் பொறுமையற்றவர்கள் தொலைக்காட்சிகளிலேயே செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள். அதிலும் செய்தி சானல்களில் சுடச்சுட ஃப்ளாஷ் நியூஸ், விஷூவலாகவே கிடைக்கிறது. தமிழில் புலனாய்வு இதழ்களே இப்போது வாரமிருமுறை வந்துக் கொண்டிருக்க செய்தித்தாள்களை வாசிக்காவிட்டால் அப்படியொன்றும் குடிமுழுகி போய்விடாது என்கிற நிலைமை உருவாகி விட்டது. நாளிதழ்கள் தங்கள் பாரம்பரிய வடிவினை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

தினகரன் நாளிதழ் இந்நிலைமையை நன்கு உணர்ந்திருக்கிறது என்று தெரிகிறது. சமீப சில மாதங்களாக இந்நாளிதழில் வெளிவரும் சிறப்புக் கட்டுரைகள் அபாரமான உழைப்போடு வெளியாகிறது. கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் ஆழமும், விரிவும் வெளிப்படுகிறது. சிறப்புக் கட்டுரைகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரச்சினைகளும் வாசகர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. ஒரு வார இதழில் பணிபுரிபவன் என்கிற முறையில் அவர்களது சில கட்டுரைகளை வாசிக்கும்போது ‘வட போச்சே’ என்று நினைத்து பொறாமைப்படத்தக்க அளவில் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

நேற்றைய தினகரன் ஞாயிறு இதழில் (மே 14, 2012) பாலகுமாரன் எழுதிய ‘நான் விட்ட பிறகும் அது விடவில்லையே...’ என்கிற அனுபவக் கட்டுரை தமிழ் நாளிதழ் வரலாற்றில் ஒரு மைல் கல். இவ்வகையிலான கட்டுரையை இதுவரை எந்த தமிழ் நாளிதழிலும் வாசித்ததாக நினைவில்லை. ‘விளையாட்டாகதான் அது ஆரம்பித்தது’ என்கிற வரிகளோடு தொடங்கும் இந்த அரைப்பக்க கட்டுரை பாலகுமாரன் எழுத்துகளில் மாஸ்டர்பீஸ். புனைவாற்றல் கைவிடலாம், ஆனால் அனுபவங்கள் ஓர் எழுத்தாளனை என்றுமே கைவிடுவதில்லை என்பதற்கு இக்கட்டுரை நல்ல உதாரணம். பத்தொன்பது வயதில் ஆரம்பித்த புகைப்பழக்கம், அறுபத்து ஆறாவது வயதிலும் தன்னை எவ்வாறாக எல்லாம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை சம்பவ உதாரணங்களோடு வெகுசுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் பாலகுமாரன். புகை வேண்டாம் என்கிற பிரச்சாரம்தான் இக்கட்டுரைக்கு அடிநாதம் என்கிறபோதிலும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்தாமல், புள்ளிவிவரங்களை அள்ளித் தெளித்து அயர்ச்சியடையச் செய்யாமல்.. புகைக்கும் தனக்குமான உறவு.. உடல்ரீதியான கட்டாயத்தின் அடிப்படையில் அப்பழக்கத்தை விடுவது.. விட்டபின்பும் பதினைந்து ஆண்டுகாலம் கழிந்த நிலையிலும் புகைக்கு ஏற்கனவே அடிமைப்பட்டுவிட்ட உடல் ஒத்துழைக்காதது என்று அவரது சுய வாக்குமூலமாக சுவாரஸ்யமாக ஓடுகிறது கட்டுரை. புகைப்பழக்கம் கொண்ட ஒவ்வொருவரையும் பன்மடங்கு குற்றவுணர்வுக்கு உடனடியாக ஆளாக்குகிறது.

பொதுவாக வார இதழ்கள்தான் இம்மாதிரி பிரபலங்களிடம் அனுபவங்களை கேட்டு தொகுத்து வெளியிடுவது வழக்கம். அது நாளிதழ்களில் பிரசுரிக்கப்படக்கூடாது என்றெல்லாம் விதிகள் ஏதுமில்லை. ஆனாலும் நாளிதழ்கள் பெரும்பாலும் செக்ஸ், க்ரைம், பாலிடிக்ஸ் என்றே தங்கள் வரையறையை சுருக்கிக் கொண்டிருக்கிறது. தினகரன் இந்த எல்லையை தாண்ட முயற்சித்து வருகிறது. பாலகுமாரனின் தீவிர வாசகன் என்கிற அடிப்படையில் நீண்டநாள் கழித்து அவரது சிறப்பான எழுத்துகளை வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தினகரன் ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

மேலும் நேற்றைய தினகரனின் 19வது பக்கத்தில் (சென்னை பதிப்பு) வெளியான ஒரு வழக்கமான மாமூல் செய்தியில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் வார்த்தையும் சட்டென்று கவர்ந்தது. நாளிதழ்களின் சம்பிரதாய வார்த்தையான ‘விபச்சாரம்’ என்பதைத் தவிர்த்து ‘பாலியல் தொழில்’ என்று ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கைதான பெண்களை அழகிகள் என்று குறிப்பிடாமல் இருந்ததும் மிகப்பெரிய ஆறுதல்.

15 கருத்துகள்:

  1. சில விசயங்களை நீங்கள் தொட்டுச்செல்லும் நடை மிகுந்த அலாதியானது.உங்களின் கட்டுரைகளை வாசிக்கும் போது அவ்வப்போது நினைவில் வருகிறது பா.ரா வின் ஒருநாள் எழுத்துமுகாம் !!!!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:36 PM, மே 14, 2012

    Please let us know if you have the links.

    பதிலளிநீக்கு
  3. அழகி என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை செய்தவர் சி.பா. ஆதித்தனார் அவர்கள்.
    குத்தினான் என்று எழுதக்கூடாது “சதக் சதக்” என்று குத்தினான் என்றுதான் எழுத வேண்டும் என்பார். நான் 60 ஆண்டுகளுக்கு முன்பு தந்தியில் பணியாற்றியவன்.

    பதிலளிநீக்கு
  4. வழிப்போக்கன் சார்!

    ஒருவேளை அறுவது வருஷத்துக்கு முன்னாடி அழகிகள் இருந்தாங்களோ என்னவோ...

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா12:50 PM, மே 14, 2012

    ' தினமலரைப் பொறுத்தவரை உள்ளடக்கத்தின் நோக்கம் எப்படியோ '
    வாழைப்பழத்தில் ஊசி ?

    பதிலளிநீக்கு
  6. http://epaper.dinakaran.com/pdf/2012/05/13/20120513a_012101011.jpg

    பதிலளிநீக்கு
  7. Interesting Thozhar... your skill aheads your own..

    பதிலளிநீக்கு
  8. பால குமாரனின் கட்டுரையை படித்துவிட்டு ஒருவராவது புகைப்பதை விட்டால், நாட்டுக்கும் அவரது வீட்டுக்கும் அவருக்கும் நல்லது.

    பதிலளிநீக்கு
  9. மூணு பேப்பருக்கும் தந்த விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  10. ஐயா! உங்கள் எழுது திறமையால் திரு. பாலகுமாரன் சொல்லிய கருத்துக்களை, இன்னும் கொஞ்சம் விவரித்து இருப்பீர்களானால், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு புகையின் பகையை ஆணி அடித்தது போல் பரப்பியவராக இருந்திருப்பீர். Twiter ல் குடிக்கு எதிராக தினமும் பொங்கும் நீங்கள், உங்கள் ஆதரவு இயக்க பத்திரிகைக்கு வழக்கம்போல், சொம்பு தூக்கி உள்ளீர்கள். உங்கள் இயக்கத்திற்கு உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த வைகோ, தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் ஆகியவர்கள் சம்பாதித்தது என்ன என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. http://epaper.dinakaran.com/pdf/2012/05/13/20120513a_012101011.jpgபால குமாரனின் கட்டுரையை படித்துவிட்டு இனியாவது திருந்துங்கள் குடி,புகை வெறியர்களே :) @athisa, @yuvakrishna

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா6:49 PM, மே 15, 2012

    பாலகுமாரன் அவர்களின் கட்டுரையை படித்த அன்று எங்கள் வீட்டில் ஒரு பெரிய புயலையே கிளப்பி இருக்கிறது என்பது உண்மை.என் சித்தப்பாவிற்கு புகைப்பிடிக்கும் பழக்கம், பாலகுமாரன் எழுதியதை போலவே சிறு வயது முதல் தொற்றிக்கொண்டது. அவரால் இன்னமும் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்.அதை பற்றி நாங்கள் பேசினாலே,வீடே ஒரு போர்க்களம் போல் மாறிவிடுகிறது.அந்த அளவு அவருக்கு கோபம் தலைக்கேறுகிறது.இதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை இருந்தால் தயவுசெய்து யாராவது தெரிய படுத்துங்கள்.இந்த பழக்கத்திலிருந்து மட்டும் அவர் வெளியே வந்து விட்டால்,அவரை விட அன்பான சித்தப்பாவை அருமையான மனிதாபிமான மனிதரை பார்க்க முடியாது.அவரை மீட்டுத்தர யாராவது ஆலோசி சொன்னால் எங்கள் குடும்பவே உங்களுக்கு கடமை பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  13. லக்கி சார்,

    பாலகுமாரன் கட்டுரை இப்போதுதான் படித்தேன்! உண்மையிலேயே அற்புதம்!

    நன்றி!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.in

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா10:29 PM, மே 20, 2012

    hi, Super.......

    பதிலளிநீக்கு
  15. பாலகுமாரன் கட்டுரை இப்போதுதான் படித்தேன்! உண்மையிலேயே மற்றவர்கள் இதை சொல்வதைவிட ஒரு நல்ல எழுத்தாளர் எழுதி இருப்பது மிகவும் அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு