24 மே, 2012

பெட்ரோல், ஐ.பி.எல்

பெட்ரோல் விலை உயர்வு ஏன் என்று இன்றோ, நாளையோ மன்மோகன்சிங்கோ, ப.சிதம்பரமோ அல்லது யாரோ விளக்கம் அளிக்கப் போகிறார்கள். மம்தா, ஜெயலலிதா வழக்கம்போல எதிர்த்திருப்பார்கள். வைகோவின் அறச்சீற்ற எதிர்ப்பு நாளிதழ்களின் ஆறாம் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக வரும். எதிர்க்கிறாரா இல்லையா என்கிற குழப்பம் கலைஞரின் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பத்து பேர் கூடும் மாபெரும் அறப் போராட்டத்தை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தும். பூப்புனித நீராட்டு விழா மாதிரி இதெல்லாம் வழக்கமாக நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள்.

இருபத்து மூன்றாம் புலிகேசி பரம்பரையில் வந்த நமக்கு இந்த சடங்குகளில் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. அடுத்த முறை பெட்ரோல் போடும்போது மட்டும் இதற்கு காரணமானவர்களின் தாயின் கற்பை பழித்துவிட்டு, பிற்பாடு மறந்துபோய்விடுவோம். ஆனால் பெட்ரோல் விலை உயர்வு என்று கேள்விப்பட்டதுமே, ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தானுக்கு படையெடுத்த அமெரிக்கத் துருப்புகள் மாதிரி பெட்ரோல் பங்குக்கு படையெடுத்து பெட்ரோல் போடுபவர்களின் தாலியறுத்து, மொத்த பெட்ரோலையும் தீர்த்து ‘பெட்ரோல்’ ஸ்டாக் இல்லை என்று பங்க் ஓனரை போர்டு மாட்டவைத்து, பங்குகளின் வாசலில் நீண்ட க்யூவில் கசகசவென நின்று, சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கோயிந்தசாமிகளை பிடித்து குப்புறப் படுக்கவைத்து நாலு சாத்து சாத்தலாமா என்றுதான் ஆத்திரம் வருகிறது.
இரவு 12.01க்கு பெட்ரோல் ரூ.7.50 ஏறுகிறது என்றால், பதினோரு மணிக்கு போய் பெட்ரோல் போட்டு பணத்தைச் சேமித்து பங்களாவா கட்டிதொலைக்கப் போகிறார்கள். ஏழரை ரூபாய்க்கு ஒரு கிங்ஸும், சாந்தி பாக்கும் கூட கிடைக்காது என்று தெரியாத அறிவிலிகளா நம் மக்கள். மிஞ்சிப்போனால் ஒரு டூவீலரை கொண்டுபோய் மூன்று லிட்டர் போடுவார்களா. இருபத்து இரண்டு ரூபாய் பைசா மிச்சப்படுத்தி எலெக்‌ஷனில் நின்று வாக்காளர்களுக்கா துட்டு கொடுக்கப் போகிறார்கள். நம் ஜனங்களின் மிடில் க்ளாஸ் அற்பத்தனத்துக்கு ஓர் அளவேயில்லையா?

நம் சமகாலத்தில் நாம் பார்க்கும் மிகப்பெரிய அநியாயம் மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து அடிக்கும் கொள்ளையென்றால், அதற்கு நம் மக்கள் கொடுக்கும் உடனடி ரியாக்‌ஷன்தான் மிகப்பெரும் அபத்தம்.


போட்டோ உதவி : தோழர் கவாஸ்கர்


*************************

ஐ.பி.எல். திட்டமிட்டு படமாக்கப்படும் ஒன்றரை மாத மெகாசீரியல் என்கிற மனோபாவத்துக்கு எப்போதோ வந்துவிட்டாலும், வாய் நமநமவெனும் போதெல்லாம் மாணிக்சந்த் போடுவதைப் போல ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல்.லுக்கு அடிக்ட் ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. இறுதிப் போட்டியும், அதற்கு முந்தையப் போட்டியும் சென்னையில் நடக்கிறது என்பதால் மற்ற அணிகள் போட்டி போட்டு கஷ்டப்பட்டு தோற்று, சென்னையை ஃபைனலுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்ததை காணும்போது, ‘அடடா.. இதுவல்லவா விளையாட்டு?’ என்று தோன்றுகிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சில சமயங்களில் மைதானத்தை தாண்டிய ஓரிரு சுவாரஸ்யங்கள் ஐ.பி.எல்.லை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மும்பை வீரர் போலார்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) சென்னை வீரர் பிராவோவுக்கு (இவரும் மேற்கிந்தியத் தீவுகள்தான்) முந்தாநாள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாராம். “மூட்டை கட்டிக்கொண்டு ரெடியாக இரு. நாளைய போட்டியில் சென்னை தோற்றதும் நீ விமானம் பிடித்து நம்மூருக்கு செல்லவேண்டும்”. பிராவோவுக்கு சமர்த்து போதாது. பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை.

மாறாக நேற்றையப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் போலார்டின் விக்கெட்டை பிராவோ வீழ்த்தினார். தலையை தொங்கப் போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த போலார்டிடம் பிராவோ நேரடியாக சொல்கிறார். “தம்பி, நேரா போய் மூட்டை முடிச்சுகளை ரெடி பண்ணு. இன்னிக்கு நைட்டே கூட நம்மூருக்கு ஃப்ளைட் பறக்குதாம்”. பீமன் சைஸில் இருக்கும் போலார்ட், அவருக்கு எதிரில் தத்தணூண்டாக தெரியும் பிராவோவை உடனடியாக ஒரு அப்பு அப்பியிருந்தால் இன்னும் ஆட்டம் களைகட்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக போலார்ட் ஹர்பஜன்சிங்கும் அல்ல. பிராவோ, வாயை மட்டுமே வைத்து கிரிக்கெட்டில் காலம் தள்ளும் ஸ்ரீசாந்துமல்ல.

11 கருத்துகள்:

  1. பெட்ரோல் பதிவில் உண்மையை சொல்லிவிட்டீர்... நான் வழக்கமாக பெட்ரோல் போடும் பங்கில் வேலை செய்யும் பெண் இன்று காலை என்னை பார்த்து, நேற்று பெட்ரோல் போட வந்தவர்களின் சண்டையை சொல்லி நோந்து கொண்டார்.... கலிகாலம்....

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் நடப்பதால் மத்த அணிகள் விட்டுக்கொடுப்பதாக வைத்துக் கொண்டால் அடுத்த ஆண்டும் விட்டுக் கொடுக்கணும். ஏனெனில் சேம்பியன்ஸின் ஹோம் கிரவுன்டில் தான் ஃபைனல் ஆடப்பட வேண்டும்..

    ஃபிக்ஸிங் நடக்கவேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அது 3வது பால் நோபால், அல்லது ஒரே ஒரு பேட்ஸ்மென் 5 ரன் என்ற அளவில் தான் இருக்க முடியும்.. காச வாங்கிட்டு ஹில்வெனாஸ் ஃபுல் டாஸ் போட்டால் மட்டுமே 3 பந்தில் 14 ரன் அடித்து விட முடியாது என்பதை பேட்டை பிடிச்சி கிரிக்கெட் ஆடும் அனைவருக்கும் தெரியும்தானே,,

    பதிவு சுவாரஸ்யம்..

    பதிலளிநீக்கு
  3. பிராவோ, போல்லார்டை ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜனோடு ஒப்பிட்டு எழுதிய அந்த கடைசி வரி .... நச்!!!

    பதிலளிநீக்கு
  4. //பெட்ரோல் விலை உயர்வு ஏன் என்று இன்றோ, நாளையோ மன்மோகன்சிங்கோ, ப.சிதம்பரமோ அல்லது யாரோ விளக்கம் அளிக்கப் போகிறார்கள். மம்தா, ஜெயலலிதா வழக்கம்போல எதிர்த்திருப்பார்கள். வைகோவின் அறச்சீற்ற எதிர்ப்பு நாளிதழ்களின் ஆறாம் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக வரும். எதிர்க்கிறாரா இல்லையா என்கிற குழப்பம் கலைஞரின் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பத்து பேர் கூடும் மாபெரும் அறப் போராட்டத்தை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தும். பூப்புனித நீராட்டு விழா மாதிரி இதெல்லாம் வழக்கமாக நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள்.
    ///


    இவ்வளவு நாடகமாடும் கட்சிகள் விலையை குறைக்காவிட்டால் ஆதரவு வாபஸ் அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் என சொல்லாமல் இருப்பது ஏன் ?

    பதிலளிநீக்கு
  5. பொருளாதாரக் கொள்கைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததினால்தான் பழிசொற்களோடு மக்கள் விட்டுவிடுகிறார்கள். மேலை நாடுகளில் அவ்வாறல்ல. ஆட்சியையே மாற்றும் சக்தி அதிபர் எடுக்கும் பொருளாதார கொள்கைகளுக்கு உண்டு. உதாரணம் பிரான்ஸ், பிரிட்டன். மக்கள் தம் பொருளாதார நிலையை பற்றியே பெருங்கவலை கொள்கின்றனர். நாட்டைபற்றி கவலை கொள்ளும்போது நிலைமை மாறும்.

    கட்டுரை மிக அருமை. அருமையான எழுத்து நடை யுவா அண்ணே..

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:15 PM, மே 24, 2012

    Dear Lucky,

    Super article. I was angry because of petrol price hike. But after reading below lines, bit relaxed.

    வைகோவின் அறச்சீற்ற எதிர்ப்பு நாளிதழ்களின் ஆறாம் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக வரும். :)
    பத்து பேர் கூடும் மாபெரும் அறப் போராட்டத்தை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தும். :):):) lol

    Last but not least,
    துரதிருஷ்டவசமாக போலார்ட் ஹர்பஜன்சிங்கும் அல்ல. பிராவோ, வாயை மட்டுமே வைத்து கிரிக்கெட்டில் காலம் தள்ளும் ஸ்ரீசாந்துமல்ல. Rocks!!!!!

    -Siva

    பதிலளிநீக்கு
  7. கம்யூனிஸ்ட் கட்சிகளை குறை சொல்வதற்கு முன், பெட்ரோல் விலையை எதிர்க்க பதிவு போட்டு பின்னூட்டம் வாங்கி சந்தோஷப்படுவதுடன் நிறுத்திவிடாமல்,நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லிவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகளை திட்டவும்.

    பதிலளிநீக்கு
  8. வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம்,(பத்திரிக்கை, பேஸ்-புக்,டுவிட்டர்,இணைய தளம்) கிழித்து நார் நாரா தொங்க விடும் ஒரு பத்திரிக்கையாளரின் பங்கை அருமையாக செய்து கொண்டிருக்கிறார்.யுவ கிருஷ்ணா!!! அவர் பணியை செய்யாமல் இருந்தால் உங்கள் கோவம் நியாயம்.உங்கள் ஆவேசம் சந்தேகத்தையே கிளப்பும்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டு விளையட்டுலயும், ஆடுபவர்கள் கோடிஸ்வரர்கள், பாதிக்கபடுபவர்கள் (முட்டாளகபடுபவர்கள்) மக்களே...

    பதிலளிநீக்கு
  10. வழக்கம்போல அசத்தலான பதிவு !!

    பதிலளிநீக்கு
  11. Hi YuvaKrishna,

    I dont want to tell you that 5 Pisa story... Please goto youtube and see that clip in Anniyan movie...

    Intha Kollai adikkum kootathidam irunthu ovoruvarum avargal 7.50 paisavai per literuku kappatrikolvathu nam kadamai.. Appothavathu Koodi koodi ai kollai adikum intha oil niruvarathukkum, 50% share vaithirukkum mathiya arasukkum panthin mathippai patriyum, avargal eppadi india makkalin rathathai urikirom enna konjamavathu sinthikka vendama...

    பதிலளிநீக்கு