3 மே, 2012

கிருஷ்ணா டாவின்ஸி


அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. தொண்ணூறுகளின் துவக்கம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். வெகுஜன இதழ்கள் மூலமாக வாசிப்புப் பழக்கம் ஏற்படத் தொடங்கியிருந்த பருவம். கடலை மடித்துத் தரும் தாளில் அச்சிட்டிருந்ததைக் கூட விட்டுவைக்காமல் படிக்கும் ஆர்வம்.

நாற்பதாண்டுக்கும் மேலாக குமுதத்தில் அரசாட்சி செலுத்திய எஸ்.ஏ.பி.யின் ஆசிரியர் குழுவினர் வயது காரணமாக ஒவ்வொருவராக ஓய்வு பெற ஆரம்பித்தார்கள். அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஆசிரியர் எஸ்.ஏ.பி., வாசகர்கள் உணர்ந்துக்கொள்ள இயலாத வகையில் இயல்பான முறையில் குமுதத்துக்கு புது ரத்தம் பாய்ச்சத் தொடங்கினார். எஸ்.ஏ.பி.க்கு அடுத்தடுத்து குமுதத்துக்கு ஆசிரியர்களானவர்கள் பெரும் பத்திரிகை ஜாம்பவான்களாக இருந்தபோதிலும், பத்திரிகையின் அடித்தளத்தை ஆக்கிரமித்தவர்கள் துடிப்பான இளைஞர்கள். அவர்களில் ஒருவர் இவர்.

சில பேரை பார்த்ததுமே பிடிக்கும். சிலர் பெயரை கேட்டதுமே பிடிக்கும்.
கிருஷ்ணா டாவின்ஸி என்கிற பெயரை முதன்முறை அச்சில் வாசித்தபோதே நிரம்பவும் பிடித்துப் போனது. குறும்பான இந்தியக் கடவுளின் பெயர் முன்பாதியிலும், இத்தாலிய மேதையின் பெயர் பிற்பாதியிலுமாக கவர்ச்சியான கலவையில் அமைந்த புது பெயர்.

குமுதத்தில் எழுதுவதற்கு முன்பாகவே ‘சாவி’யில் சக்கைப்போடு போட்டிருக்கிறார் கிருஷ்ணா. ஒரே இதழில் அவரது மூன்று சிறுகதைகள் அடுத்தடுத்து பிரசுரிக்கப்படும் அளவுக்கு சாவியை கவர்ந்திருக்கிறார். ஆசிரியர் சாவியே வியந்துப்போய் தொடர் எழுதும் வாய்ப்பையும் இவருக்கு தந்திருக்கிறார். அப்போது கிருஷ்ணாவுக்கு வயது இருபத்தியொன்றோ, இருபத்திரண்டோ இருக்கலாம். வெகுஜன இதழ்களில் எழுதுபவர்களுக்கு தெரியும். தொடர் எழுதும் வாய்ப்பெல்லாம் அவ்வளவு சீக்கிரமாக கிடைத்துவிடாது.

குமுதம் இதழில் கிருஷ்ணா டாவின்ஸியின் பணி பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருந்திருக்கிறது. அரசியல், சமூகம், கலை, நகைச்சுவை என்று எல்லா திசைகளிலும் பவுண்டரி விளாசக்கூடிய பத்திரிகையாளராக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தபடியே, பகுதிநேரமாக குமுதத்துக்கு எழுதிக் கொண்டிருந்தார். பிற்பாடு அரசு வேலையை துறந்து, முழுமூச்சாக குமுதத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

கார்கில் போரின் போது நேரடியாக களத்துக்குச் சென்று செய்தி எழுதியவர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற பத்திரிகையாளர் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியான சாதனை மைல் கற்கள் அவருக்கு உண்டு. ‘நையாண்டி பவன்’ என்கிற தலைப்பில் குமுதத்தில், கின்ஸி என்கிற பெயரில் கிருஷ்ணா எழுதிய நகைச்சுவைப் பத்தி, இன்றைய வெகுஜன இதழ்களின் போக்குக்கு முன்னோடியாக அமைந்தது. பத்திரிகையுலகில் பணியாற்றுவதை லட்சியமாகக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு சந்தேகமில்லாமல் கிருஷ்ணா டாவின்ஸி ஒரு ஹீரோ.

அவருடனான நேரிடை சந்திப்புகள் எனக்கு இரண்டு, மூன்று முறை தான் வாய்த்திருக்கிறது. முதன்முறை நேரில் சந்தித்த பிரமிப்பில் அவர் குறித்த என்னுடைய எண்ணங்களை பாராட்டு மழையாக கொட்டியபோது, அதுகுறித்த எந்த பெருமையும் அவர் முகத்தில் தென்படக் காணோம். “குமுதம் எனக்கு தாய்ப்பால்” என்று எங்கோ, எப்போதோ இணையத்தில் எழுதி, அதை நானே மறந்துவிட்டேன். அதை நினைவுகூர்ந்து, “நல்ல
wordplay. ஆனா, பத்திரிகையில் வேலை பார்க்கிறவன் இப்படியெல்லாம் extreme statement விடக்கூடாது” என்று சொல்லி சிரித்தார்.

கிருஷ்ணா தன்னுடைய கதைகளில் கூட ‘ரிப்போர்ட்டிங்’குக்கான இலக்கணங்களை கடைபிடித்திருப்பார். கிருஷ்ணா டாவின்ஸி குமுதத்தில் தொடராக எழுதிய ‘நான்காவது எஸ்டேட்’ பல வாசகர்கள் இன்றும் நினைவுகூர்வது. டெஹல்கா டாட் காம், சூட்கேஸும் கையுமாக பங்காரு லெட்சுமணனை கேமிராவில் சிறைபிடித்து வெளியுலகத்துக்கு ஸ்கூப் செய்தியாக அம்பலப்படுத்திய நேரம் அது. அந்த சம்பவத்தை கருவாக கொண்டு எழுதப்பட்ட நான்காவது எஸ்டேட்டின் முதல் அத்தியாயம், கலைஞரின் நடு இரவு கைதுக் கொடுமையை உருவகப்படுத்தித் தொடங்கும். அயல்நாட்டுச் செய்தியையே எழுதுவதாக இருந்தாலும், கட்டுரையின் தொடக்கத்தில்  ‘உள்ளூர் டச்’ இருந்தாக வேண்டும் என்பது இதழியலின் எழுதப்படாத வரையறை. கிருஷ்ணா டாவின்ஸியின் எந்த கட்டுரையும், கதையும் வாசகர்களுக்கு அந்நியமாக என்றுமே தோன்றியதில்லை.

குமுதத்தில் இருந்து விலகியபிறகு, சினிமாக்காரர்களோடு நிறைய கதை விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். இயக்குனராக முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார். சில படங்களின் ‘டைட்டிலில்’ அவரது பெயரை காணமுடிந்தது.

அருமையாக கிடார் வாசிப்பார். இரவுகளில் தன்னுடைய தனித்துவக் குரலால் பாடி குடும்பத்தாரையும், நண்பர்களையும் மகிழவைப்பார் போன்ற செய்திகளெல்லாம் அவரது திடீர் மரணத்துக்குப் பிறகுதான் எல்லோருக்கும் தெரியவருகிறது. இயக்குனர் ராம் ஏற்பாடு செய்திருந்த கிருஷ்ணாவுக்கான நினைவேந்தல் கூட்டத்தில் கூடியிருந்த பல பத்திரிகையாளர்களுக்கு துரதிருஷ்டவசமாக அன்றுதான் அவரது பத்திரிகை ஆற்றலைத் தாண்டிய தனித்திறமைகள் சில முதன்முதலாக தெரிய வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி கடைசியாக ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதையின் தலைப்பே, அவர் வாழ்க்கையை கடைசி நிமிடம் வரை எவ்வளவு நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார் என்பதை புரியவைக்கிறது. “காலா அருகே வாடா”. துரதிருஷ்டவசமாக இக்கதை பிரசுரமானபோது அவர் உயிரோடு இல்லை. . 1968 மே 7 அன்று பிறந்த கிருஷ்ணாடாவின்ஸி, கடந்த ஏப்ரல் 4 அன்று தன்னை இயற்கையோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும். மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் துவக்கம். மரணித்தவர் தன்னுடைய நினைவுகளை நம்மிடம் வாழவைத்திருக்கிறார் என்பது மாதிரியாக தத்துவங்கள் பேசி மரணித்தவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நாம் ஆறுதல் கூறலாம். ஆறு வயது குழந்தை அப்பாவை இழந்திருக்கிறாள். இச்சூழலில் ஆறுதல்களும், அஞ்சலிகளும் எவ்வளவு அபத்தமானவை என்பதே நமக்கே தெரிந்தபோதிலும், நாமும் அதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன் – மைக்கேல் ஜாக்சனின் பாடல் வரிகளில் ஒன்று. உண்மைதான். அவரது இசை என்றும் மரணமடையாது” - ஜாக்சனின் மறைவின் போது கிருஷ்ணா டாவின்ஸி ஒரு அஞ்சலிக் கட்டுரையில் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தார். க்ளிஷேவாக இருந்தாலும் இதைத்தான் கிருஷ்ணாவுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழ் வெகுஜன பத்திரிகையுலகுக்கான கிருஷ்ணாவின் பங்களிப்பு என்றென்றும் நம் நினைவில் நிற்கும்.

(நன்றி : உயிர்மை, மே 2012)

9 கருத்துகள்:

  1. பகிர்ந்தமைக்கு நன்றிங்க.....

    பதிலளிநீக்கு
  2. //கிருஷ்ணா டாவின்ஸி என்கிற பெயரை முதன்முறை அச்சில் வாசித்தபோதே நிரம்பவும் பிடித்துப் போனது.// எனக்கும்!

    பதிலளிநீக்கு
  3. க்ரோம்பேட்டையில் பணி செய்தபோதுதான் எனக்கு அறிமுகம்..வர்ணம் படக்காட்சியின்போதுதான் கடைசியாக பார்த்தது..மிக சுவாரசியமான மனிதர் வெங்கடகிருஷ்ணன் என்கிற கிருஷ்ணா டாவின்சி..சரக்கு அடித்து விட்டு என் இனிய பொன்நிலாவும், இளைய நிலாபொழிகிறதும் அவர் வாசித்து ,பாடி கேட்க வேண்டும்..டிவைன்..

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு யுவகிருஷ்ணா... ஆனந்த விகடனில் வந்த அவரது கடைசிக்கதையைப் படித்த போது, ஏதோ ஒரு மருத்துவ முறையினால் அவரும் இப்படி பிழைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஏற்பட்டது...


    We will miss Krishna's writings all way...

    பதிலளிநீக்கு
  5. நெகிழ்ச்சியான நினைவேந்தல்...ஈரமான பதிவு கிருஷ்ணா!

    பதிலளிநீக்கு
  6. பகிர்ந்தமைக்கு நன்றி. அவர் இறந்த பிறகுதான் பலருக்கும் அவரது அருமை தெரியவந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா3:43 PM, மே 03, 2012

    குமுதமும் மாலைமதியுமே கிருஷ்ணா டாவின்சி என்னும் பெயரை மனதிற்கு நெருங்க செய்தது. நான் சந்திக்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசைப்பட்டிருந்தேன். நான் மிகவும் விரும்பிய எழுத்து கிருஷ்ணா டாவின்சியுடையது.
    - ஜெகன்

    பதிலளிநீக்கு