10 மே, 2012

நெருப்புச்சுவர் தேசம்


சீனாவைக் காக்க அந்தக்கால அரசர்கள் பெருஞ்சுவர் கட்டினார்கள் என்பது வரலாறு. இப்போதைய சீன அரசு நெருப்புச்சுவர் கட்டி தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. இணையத்தில் குறிப்பிட்ட இணையத் தளங்களை மட்டும் ஒரு நாடோ, நிறுவனமோ தேவைப்பட்டால் ‘ஃபயர்வால்’ எனும் தொழில்நுட்பம் மூலமாக தடை செய்ய முடியும்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வின் படி குறைந்தபட்சம் பதினெட்டாயிரம் இணையத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது (மூவாயிரத்துக்கும் குறைவான இணையத்தளங்கள்தான் இங்கே தடை செய்யப்பட்டிருக்கிறது என்று சீனா இந்த ஆய்வை மறுக்கிறது). உலகின் டாப் 100 இணையத்தளங்களில் பத்துக்கும் மேற்பட்டவைக்கு சீனாவில் தடா. அரசியல் சட்டத்துக்கு எதிரானவை, ஆபாசமானவை, வன்முறையைத் தூண்டுபவை, சூதாட்டம் மற்றும் சமூகத்துக்கு எதிரானவை என்கிற பெயரில் இணையத்தள சுதந்திரத்தின் கழுத்து சீனாவில் நெரிக்கப்படுகிறது என்று கருத்து சுதந்திர ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள்.

2001ஆம் ஆண்டு வாங் ஜியானிங் என்பவர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்கள். இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் யாஹூ ஈமெயில் மூலமாக ‘க்ரூப் மெயில்’ அனுப்பினார்கள். அந்த மின்னஞ்சல் வாயிலாக அரசுக்கு எதிரான சிந்தனைகளை நிறைய பேருக்கு பரப்பினார்கள் என்பது. 2008ஆம் ஆண்டு ஹூவாங்க் கீ எனும் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.  அரசினால் கைவிடப்படும் பள்ளிகள் அதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர் அயல்நாட்டு பத்திரிகையாளர்களிடம் பேசினார், இதுகுறித்த தகவல்களை படங்களோடு இணையத்தளங்களில் பதிந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இந்த இரண்டு சம்பவங்களும் சாம்பிள்தான்.

சில தினங்களுக்கு முன்பாக கூட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சர்ச்சைக்குரிய பதினாறு இணையத்தளங்களோடு தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இணையத்தளங்கள் தலைநகர் பீஜிங்கின் வீதியில் இராணுவ வாகனங்கள் உட்புகுந்ததாகவும், இராணுவப் புரட்சி ஏற்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டன. இதையடுத்து சீன ராணுவத்தின் அதிகாரப் பூர்வமான செய்தித்தாளான ‘லிபரேஷன் ஆர்மி டெய்லி’யில் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு எச்சரிக்கை தொனியோடு கூடிய கட்டுரை ஒன்று வெளியானது. அக்கட்டுரையில் இராணுவப் புரட்சி தொடர்பான இணையத்தள வதந்திகளை நம்பவேண்டாம், சீன கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்கிற வேண்டுகோளும் இருந்தது. அரசுக்கு ஆதரவான செய்தித்தளங்களும் கூட கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் மீது சில சமயங்களில் விமர்சனங்கள் வைப்பதுண்டு. சில காலத்துக்கு அம்மாதிரி விமர்சனங்கள் ஏதும் இந்தச்சூழலில் வேண்டாம் என்று இந்த செய்தித்தளங்களுக்கு அரசு ஆணையிட்டிருக்கிறது.

நம் நாட்டில் கத்தரிக்காய் மாதிரி மலிவானதாக கிடைக்கும் கருத்துச் சுதந்திரம், உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் தங்கம் மாதிரி காஸ்ட்லியான சமாச்சாரமாகி விட்டது. நாம் இங்கே சகஜமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், யூட்யூப், வலைப்பூ, பிகாஸா மாதிரியானவை சீனர்களுக்கு இல்லை. அவ்வளவு ஏன்? நாம் இங்கே தகவல்களுக்காக பயன்படுத்தும் விக்கிப்பீடியாவை கூட சீனர்கள் பயன்படுத்த முடியாது (சீன மொழி விக்கிப்பீடியாவுக்கு மட்டும் விலக்கு). உலகளாவிய நாடுகளின் ரகசியங்கள் அம்பலப்படுத்தப்படுகிறது என்பதால் விக்கிலீக்ஸுக்கு தடை. தங்கள் அரசுக்குப் பிடிக்காதவர்களுக்கு பரிசு வழங்குகிறார்கள் என்பதால் நோபல் பரிசு இணையத்தளத்துக்கு தடை. மனித உரிமையை சீனர்கள் தெரிந்துக் கொண்டுவிடுவார்களோ என்கிற அச்சத்தில் மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் தளத்துக்கும் தடையென்று சகட்டுமேனிக்கு கண்ணை மூடிக்கொண்டு ‘தடை’க்கிக் கொண்டே போகிறது சீன அரசு. தங்கள் நாட்டுக்கு எதிரான செய்திகளை பகிரும் தளங்கள் என்று சந்தேகிக்கும் செய்தித்தளங்களுக்கும் தடை. கூகிள் தேடுதளம் மூலமாக எதையாவது விவகாரமாக தேடிவிடுவார்களோ என்று அதைகூட தடை செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பத்திரிகையாளர்களும், இணையத் தள செயல்பாட்டாளர்களும் சிறையில் இருப்பது சீனாவில்தான்” என்று ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு நேரடியாகவே குற்றம் சாட்டுகிறது. இணையத்தளங்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மட்டுமே முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போலிஸார் சீனாவில் பணிபுரிகிறார்களாம். எகிப்து, லிபியாவில் எல்லாம் நடந்த மாதிரி இணையத்தளங்களால் புரட்சி மாதிரி ஏதாவது ஏற்பட்டுவிடுமோ என்று பகிரங்கமாகவே அச்சப்படுகிறது சீனா.

“காற்றுக்காக கதவைத் திறந்தால் கொசுக்களும், பூச்சிகளும் நுழைவதையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்” என்பது சீனாவில் பிரபலமான வாசகம். இரும்புத்திரை நாடான சீனா சந்தைப் பொருளாதாரத்துக்கான தனது கதவுகளை 90களில் விஸ்தாரமாக திறந்து வைத்தது. அப்போது நுழைந்துவிட்ட கொசுவாகவே ‘இண்டர்நெட்’டை சீனா கருதுகிறது. 1994ல் சீனாவுக்கு இண்டர்நெட் வந்தது. தொடர்ச்சியான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளையடுத்து, தவிர்க்க முடியாத சக்தியாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. செய்திகளை விரைவாகவும், விரிவாகவும் பரிமாறிக் கொள்ள இணையத்தளங்கள் வகை செய்தன. இந்தப் போக்கினை அவதானித்த சீன கம்யூனிஸ்ட்டு கட்சி, இணையத்தளங்களை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டு மக்களையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்று கருதியது. வாக்கில் இணையத்தளங்களை தடை செய்யவும், அரசுக்கு எதிராக இவற்றை பயன்படுத்துபவர்களை கைது செய்யவும் தொடங்கியது சீனா. 1998ல் Golden Shied Project என்கிற பெயரில் இணையத்தளங்களை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஒரு மெகா திட்டம் செயல்படத் தொடங்கியது. அதன் விளைவுகள்தான் தற்போது சீனாவில் நடந்துக் கொண்டிருப்பவை. இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் சட்டரீதியாக என்னென்ன நடைமுறைகளை செய்யவேண்டுமோ, அத்தனையையும் சீனா ஏற்கனவே செய்துவிட்டது.

தடை, கைது என்று அரசியல்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் என்னதான் சீனாவை பொத்திப் பொத்தி பாதுகாத்தாலும், அதே சீனாவில் தடைகளை உடைக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் ரகசியப் புரட்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். Bringing transparency to the great firewall of China என்பது மாதிரி புதிய புதிய இணையத்தளங்களை உருவாக்கி, இந்த இணையத்தளங்கள் மூலமாக எல்லா இணையத்தளங்களையுமே தடையின்றி பார்க்க வகை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதையுமே தடை செய்யும்போதுதான், அந்த தடையை மீறவேண்டும் என்று கூடுதல் உத்வேகம் ஏற்படுகிறது. ஐம்பது லட்சம் பேர் இணையத்தளங்களை சீனாவில் பாவிக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியையும் தடைகள் மூலமாக கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதுதான் வரலாறு. இந்த வரலாறு சீனாவில் கட்டுடைக்கப்படுமா என்பது அடுத்து வரும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

(நன்றி : புதிய தலைமுறை)

5 கருத்துகள்:

  1. //கண்ணை மூடிக்கொண்டு ‘தடை’க்கிக் கொண்டே போகிறது சீன அரசு.//

    இப்படி, 'தடை' என்பது வேற்றுமொழிச் சொல் போல் மேற்கோட்குறிக்குள் ஏன் எழுதப்பட வேண்டும்? 'ஐ' முடிபின் பெயர்ச்சொற்கள் வினைச்சொற்கள் ஆகுகையில், 'இ' சேர்க்கப்படும்:

    தடை > தடைஇ. (கண்ணை மூடிக்கொண்டு தடைஇக்கொண்டே போகிறது சீன அரசு).

    ||இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
    நிலம்என்னும் நல்லாள் நகும்.|| (குறள் 104:10)

    பதிலளிநீக்கு
  2. Nice Info - follow my Classified Website


    classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

    New Classified Website Launch in India - Tamil nadu

    No Need Registration . One time post your Articles Get Life time
    Traffic. i.e No expired your ads life long it will in our website.
    Don't Miss the opportunity.
    Visit Here -------> www.classiindia.in

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10:12 PM, மே 10, 2012

    // தடை, கைது என்று அரசியல்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் என்னதான் சீனாவை பொத்திப் பொத்தி பாதுகாத்தாலும், அதே சீனாவில் தடைகளை உடைக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் ரகசியப் புரட்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.//

    அப்படி புரட்சி செய்வதற்கான அவசியம் அங்கு என்ன ? அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறையா ? இன மத சாதி வெறியில் மக்கள் சாகிறார்களா? பஞ்சம் பட்டினியா ? வெறும் சுதந்திரம் மட்டும் போதுமா ? வரை முறையின்றி இணையம் பாவிப்பதால், கண்டதையும் எழுதும் , பேசும் சுதந்திரம் இருப்பதால் என்ன நடந்து விட்டது இங்கு ? நம் நாட்டில் தேனும் பாலும் ஓடுகிறதா ? அரசியல் வாதிகளையும், போலி சாமியார்களையும் கிழித்து தொங்க விட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்..என்னய்யா நடந்தது ? அதே தொழில் நுட்ப வளர்ச்சியால் மாட்டாமல் தப்பு செய்யவே அவர்கள் முயல்வார்கள். நமது ஊரைப் போன்ற பொறுப்பற்ற ஜன நாயக முறையில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்ற எண்ணம் சரியா ?

    பதிலளிநீக்கு
  4. அரச அதிகாரத்தை உதிர்த்தல் பற்றி பேசுகிறது கம்யுனிசம். ஆனால் சீன அரசு மேலும் மேலும் அதிகாரங்களை நம்புகிறது!அதோடு,அது தேசியவாத அரசுதான்.சொந்த மக்களின் மீது நம்பிக்கையில்லாத அரசுகள் இருப்பதை விட்டவும் இறப்பது மேல்.நீச்சயமாக சின மக்கள் அரசை உதிர்க்க வேண்டும்!!!

    பதிலளிநீக்கு
  5. அம்மையார் பிரதமர் ஆனால் நமக்கும் சீனர்கள் கதிதான்.

    பதிலளிநீக்கு