11 மே, 2012

கரை மேல் தவிக்க வைத்தான்!


 “மீனுக்கு விலை சொல்ல சொன்னா, கப்பலுக்கு விலை சொல்லுறீயே?” மீன்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இப்போது வழக்கமாக எதிர்கொள்ளும் வசனம் இது.

“என்னம்மா பண்ணுறது, மீன் புடிக்க ஸ்ட்ரைக் நடக்குது. பயங்கர டிமாண்டு. மே மாசம் வரைக்கும் கொஞ்சம் முன்னபின்னதான் விலை இருக்கும்” மீன்காரர் இப்படித்தான் சமாதானம் சொல்கிறார். மீன்வாசம் இல்லாமல் சோறு இறங்காது என்பவர்கள், இன்னொரு புரட்டாசி மாதமாக இந்த காலக்கட்டத்தை நினைத்து, நாக்கை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மீனவர்கள் ‘ஸ்ட்ரைக்’ என்கிறார்கள். அரசும், மற்றவர்களும் இதை ‘தடை’
(Ban) என குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இந்த நாற்பத்து ஐந்து நாட்களும் மீன் பிடிக்க ‘கட்டுப்பாடு’ என்பதே சரி.

இந்தியாவில் மீன்பிடி என்பது மிக முக்கியமான பெரிய தொழில். உலகளவிலான மீன் தேவையை ஈடு செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இத்தொழிலில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். 1990க்கு பிறகு தானியங்கள், பால், முட்டை ஆகிய உற்பத்திகளை ஒப்பிடுகையில் மீன் உற்பத்தியின் வளர்ச்சி நம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இந்தியாவில் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு வாழ்வாதாரம் மீன்தான்.

1999ல் மத்திய கடல் மீன்பிடி ஆராய்ச்சி நிறுவனம் (Central Marine Fisheries Research Institute) இந்திய கடல் மீன்வளம் குறித்த ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில் 91ஆம் ஆண்டு வாக்கில் சென்னை கடலில் ஐம்பது மீட்டருக்கும் கீழான ஆழத்தில் ட்ராலர் இழுவலை கொண்டு ஒரு மணி நேரத்துக்கு 110.8 கிலோ மீன் பிடிக்க முடிந்ததாகவும், 97 ஆம் ஆண்டு 29.7 கிலோ தான் பிடிக்க முடிந்தது எனவும் தெரிவித்தது. மீன்வளம் குறித்து ‘அலாரம்’ அடித்த இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மீன்களின் இனப்பெருக்க காலத்தில் இயந்திரப்படகு கொண்டு கடலில் மீன்பிடிக்க கட்டுப்பாட்டினை 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா அரசுகள் கொண்டுவந்தது. வங்கக்கடல் எல்லையில் ஏப்ரல்-மே மாதங்களில் நாற்பத்து ஐந்து நாட்களுக்கு இயந்திரப் படகுகள் ட்ராலர் இழுவலை கொண்டு மீன் பிடிக்கக் கூடாது என்பதே அந்த கட்டுப்பாடு. அரபிக் கடல் எல்லையில் ஜூன் மாதம் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படும். கடல் எல்லையில் குறைந்த தூரத்துக்கு பயணித்து மீன்பிடிக்கும் ஃபைபர் படகுகளுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை. வல்லம், கட்டுமரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் மீனவர்களும் இக்காலக் கட்டத்தில் கடலில் மீன்பிடிக்கலாம்.

இந்த கட்டுப்பாட்டுக்கு மீனவர்களிடையே வரவேற்பும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. பாரம்பரிய நாட்டுப்படகு மீன்பிடித் தொழிலாளர்கள் இந்த கட்டுப்பாட்டினை முழுமனதோடு வரவேற்கிறார்கள். பெரிய மோட்டார் படகுகளில் வேலை பார்க்கும் மீனவர்களிடையே எதிர்ப்பும், ஆதரவும் கலந்திருக்கிறது.

“பெருமுதலாளிகளின் ஆதிக்கத்துக்கு மீன்பிடித்தொழில் கைமாறிவிட்டது” என்று வருத்தப்படுகிறார் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் மகேஷ்.

“சிறிய கண்ணிகளை கொண்டிருக்கும் டிராலர் இழுவலை எழுபதுகளில் இந்திய அரசாங்கத்தால் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இழுவலையை பயன்படுத்தும்போது மீன்கள் மட்டுமின்றி, பாசி, மீன்முட்டைகள் என்று கடலின் சகலமும் ஒட்டுமொத்தமாக வலையில் சுரண்டப்படுகிறது. இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மீன்வளம் குறைகிறது. ஒட்டுமொத்தமாக இந்த இனப்பெருக்க காலத்தில் தடைவிதிப்பது சரியல்ல. ட்ராலர் வலைகளை பயன்படுத்த வேண்டுமானால் தடை விதிக்கலாம். வருடத்துக்கு ஒன்றரை மாதம் வேலை இழக்கும் மீன்பிடித் தொழிலாளர்களின் சமூகக்கடமை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஜூன் மாதம் தங்கள் குழந்தைகளின் கல்விச்செலவை எதிர்நோக்கியிருக்கும் காலத்தில் வேலையிழந்து, சம்பளமின்றி இருப்பது கொடுமையான சூழல். தங்களது அடுத்த தலைமுறைக்கு தரமான கல்வியை மீனவன் வழங்குவதை இது தடுக்கிறது. கந்து வட்டி பெருகுகிறது. கடலைத் தாண்டிய மீனவர்களின் வாழ்வையும் அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஆவேசப்படுகிறார் மகேஷ்.

இந்த கட்டுப்பாடு இந்திய கடல் எல்லையில் இருக்கும் மீனவர்களை மட்டும்தான் கட்டுப்படுத்துகிறது. இதே காலக்கட்டத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் நம் கடல் எல்லையில் மீன்பிடித்துச் செல்லுகிறது. இதற்கு டங்கல் ஒப்பந்தம் வழி செய்கிறது என்றும் பாரம்பரிய மீனவர் சங்கம் குற்றம்  சாட்டுகிறது.

ஒரு சராசரி மீன்பிடி படகினை உருவாக்க தோராயமாக இன்றைய தேதியில் முப்பது லட்சத்திலிருந்து ஐம்பது லட்சம் வரை செலவாகிறது. அப்படகு ஒருமுறை கடலுக்குள் செல்ல (டீசல், மீனை பதப்படுத்த ஐஸ் என்று அடிப்படைச் செலவுகளுக்கு) குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயை முதலீடாக அப்படகு முதலாளி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆறு பேராவது படகில் செல்வார்கள். ஒரு வாரத்துக்கும் மேலாக கடலில் தங்கியிருப்பார்கள். பிடித்து வரும் மீனை விற்று வரும் தொகையில் முதலீட்டினை தவிர்த்து மீதமிருக்கும் லாபம் வேலைபார்த்த மீனவர்களுக்கும், படகு முதலாளிக்கும் பங்காக பிரியும். லாபமும் கிட்டத்தட்ட முதலீட்டு அளவுக்கே இருக்கும். இன்றைய தேதியில் மீன்பிடித் தொழில் ஒரு காஸ்ட்லியான தொழில். நாற்பத்தைந்து நாள் கட்டுப்பாடு என்றால் குறைந்தபட்சம் இரண்டு ட்ரிப்பாவது ஒரு மீனவருக்கு இழப்பாகிறது. முதலாளிக்கு மூன்று, நான்கு ட்ரிப்புகள் இழப்பு.  ஒரு மோட்டார் படகுக்கும், மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் இக்காலக் கட்டத்தில் எவ்வளவு பண இழப்பு ஏற்படும் என்பதை தோராயமாக நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் ஆறாயிரத்து எழுநூறு இயந்திரப் படகுகள் இந்த கட்டுப்பாட்டுக் காலத்தில் கடலுக்கு செல்ல முடியாது.

“இந்த ஒன்றரை மாத காலமும் தொழிலாளர்கள் பெரும்பாலும் சும்மாதான் இருக்கிறார்கள். வெளியூரில் வந்து வேலை பார்க்கும் மீனவர்களாக இருந்தால் ஊருக்கு சென்றுவிடுவார்கள். கடலைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் இந்த ஒன்றரை மாதத்துக்கு மட்டும் வேறு வேலை என்பது எப்படி சரிப்படும்?” என்கிறார் சென்னை-திருவள்ளூர்-காஞ்சி விசைப்படகு மீனவர் சங்கத்தில் கணக்காளராக பணிபுரியும் பிரபாகரன். அரசு இவர்களுக்கு ஏதேனும் செய்வதாக இருந்தால், இவர்களுக்கு இந்த கட்டுப்பாட்டுக் காலத்தில் தந்துவரும் உதவித்தொகையை நியாயமான அளவில் அதிகரிப்பதுதான்  என்பதும் பிரபாகரனுடைய கருத்து. இப்போது தமிழக மீனவர்களுக்கு இந்த நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு (ரேஷன் கார்டு அடிப்படையில்) ரூபாய் இரண்டாயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


வேலையில்லாமல் இருக்கும் மீனவர்களில் சிலர் ஃபைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்வதுண்டு. இக்காலக் கட்டத்தில் மோட்டார் படகுகளுக்கு செய்யவேண்டிய மராமத்து பணிகளை முதலாளிகள் மேற்கொள்கிறார்கள். மீனவர்கள் வலை, தூண்டில் உள்ளிட்ட மீன்பிடித் தொழிலுக்கு தேவையான விஷயங்களை பராமரிப்பு செய்து வைத்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு நாம் சென்றிருந்தபோது, அங்கு கார்பெண்டர்களும், மெக்கானிக்குகளும் பம்பரமாக பணியாற்றி சுழன்றுக் கொண்டிருந்ததை காணமுடிந்தது. மீனவர்களுக்கு வேலையிழப்பாக இருந்தாலும், இவர்களுக்கு இக்காலக்கட்டத்தில் வேலை இரவுபகலாக கிடைக்கிறது. படகுகளை சீரமைக்க பாண்டிச்சேரி அரசாங்கம் படகு உரிமையாளருக்கு மானியம் வழங்குகிறதாம். அம்மாதிரி தமிழக விசைபடகு உரிமையாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கினால் நல்லது என்று படகு உரிமையாளர் ஒருவர் நம்மிடம் ஆதங்கப்பட்டார்.

“தடைக்காலம் நல்லதுதான். மீன்களின் இனப்பெருக்க காலத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பால் மீன்வளம் குறையும். இதனால் வருடம் முழுக்க மீனவர்கள் துன்பப்பட வேண்டியிருக்கும். கட்டுப்பாடுக் காலம் முடிந்ததும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு நல்ல அளவில் மீன் கிடைக்கிறது. ஆனாலும் ஓர் ஒன்றரை ரெண்டு மாத காலத்தில் பழைய குருடி, கதவைத் திறடி கதைதான். ” என்கிறார் மீனவர் கலைமணி.

தடையை யாரேனும் மீறினால்? அதற்கு வாய்ப்பேயில்லை. மீனவர் சங்கங்கள் இதை உறுதி செய்கின்றன. அவ்வாறு தடையை மீறும் படகுகளுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. டீசல் மானியம் கிடைக்காது.

“இறால் போன்ற லாபம் தரும் மீன்கள் ஆற்று முகத்துவாரத்தில்தான் உருவாகும். இன்று ஆறுகளில் போதிய நீரின்மையால் இந்த வளம் முற்றிலுமாக குறைந்துபோயிருக்கிறது. நிலத்தின் கழிவுகளை கொட்டும் இடமாக ஆறுகள் மாறிவருகின்றன. இந்த கழிவுகள் மொத்தமாக சென்று சேருவது கடலில்தான். நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு கடல் என்ன குப்பைத் தொட்டியா?” என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் கபடி மாறன். ஆலை மற்றும் அணு உலைக் கழிவுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்றெல்லாம் தீட்டப்படும் திட்டங்களும் கடலில் மீன்வளம் குறைய காரணமாக இருக்கின்றன என்கிறார் இவர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலத்தில் மேற்கொள்ளும் கண்காணிப்பை கடலுக்கும் செலுத்த வேண்டும் என்பது இவரது வேண்டுகோள்.

“நாற்பத்து ஐந்து நாள் கட்டுப்பாட்டினை மீனவர்களுக்கு விதிப்பவர்கள், அதே காலக்கட்டத்தில் கடலில் கொட்டப்படும் கழிவுகளுக்கும் தடை விதிப்பார்களேயானால் மீன்வளம் மீது அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்” என்று பாரம்பரிய மீனவர் சங்கத்தின் மகேஷ் சொல்கிறார்.

“தடையை
விதித்து சட்டம் போடுபவர்கள் அடிப்படை அறிவோடு செயல்பட வேண்டும். மீனவர்களுக்கான சட்டத்தைப் பற்றி பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ பேச எங்களுக்கு போதுமான பிரதிநிதிகள் இல்லை. பழங்குடி இனமான மீனவர் இனம் இன்னமும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில்தான் இருக்கிறது. மண்டல் பரிந்துரை எங்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டுமென கோருகிறது. இதுவரை இந்த பரிந்துரையை முன்வைத்து எங்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை. மீனவர்களுக்கு தனித் தொகுதியும் இல்லை. அரசியலில் எங்களுக்கான பிரதிநிதித்துவம் சரியாக கிடைக்குமேயானால் கடல்சார்ந்த தொழில் குறித்த சட்டங்களோ, திட்டங்களோ போடும்போது இத்தொழில் குறித்த அக்கறையான பார்வை கொண்டவர்களின் பங்கு இருக்கும்” என்கிறார் மீனவ சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான அருள்.

மீன்களின் இனப்பெருக்க பருவத்தில் நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு மீன் பிடிக்கக் கூடாது மாதிரியான பாரம்பரியக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. இவை தவிர்த்து மீனவர்களுக்கு சில நவீன வசதிகளை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியாக வேண்டும்.

·     கடலில் கொட்டப்படும் நச்சுக் கழிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

·     ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

·     நாற்பத்து ஐந்து நாட்கள் வேலை செய்யமுடியாத மீனவர்களுக்கு தற்காலிக (மீன்பிடி சார்ந்த) மாற்றுத் தொழிலினை அரசே அறிமுகப்படுத்த வேண்டும்.

·     ஆபத்து மிகுந்த மீன்பிடித் தொழிலுக்கு செல்வோருக்கான அடிப்படைப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.

·     மீன்பிடித் துறைமுகங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். மீன்களை பதப்படுத்தி வைக்கும் ஐஸ் பேக்டரிகளை இங்கே உருவாக்க வேண்டும். சர்வதேசத் தரம் இல்லாத மீன்பிடித் துறைமுகங்களில் வணிக பரிமாற்றம் செய்துக்கொள்ள அயல்நாட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன. கேரளாவில் இருக்கும் கொச்சி போன்ற மீன்பிடித் துறைமுகங்களின் பாணியின் தமிழகத்தின் காசிமேடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கொளச்சல், கடலூர், நாகப்பட்டினம் ராமேஸ்வரம் ஆகிய துறைமுகங்களை தரமுயர்த்த வேண்டும்.

·     மீன்வளத்தை கண்டறிந்து மீனவர்களுக்கு தெரிவிக்க தகவல் பரிமாற்ற மையம் தேவை. இந்த மையத்துக்கு ஜி.பி.எஸ். மாதிரியான நவீன வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். அயல்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தும் ஈக்கோசவுண்டர், சர்ச் லைட் போன்ற வசதிகளை நம் மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.

·     இயற்கை சீற்ற காலங்களில் மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் கடலோர காவல்படையினர் பிராந்திய மொழி தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். மீனவர்களுக்கு அவரவர் தாய்மொழி தவிர்த்து மற்றமொழி தெரிந்திருப்பது அரிதான விஷயம். நம் கடலோர ரோந்து படையில் தமிழ், தெலுங்கு மொழி தெரிந்த வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

·     இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக கடலோர மீனவர்களின் குடியிருப்புகளை ‘காலி’ செய்யும் அரசின் மனப்போக்கு மாறவேண்டும். மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கடலுக்கு அருகே வசிப்பதுதான் அவர்களது இயல்பான வாழ்வுமுறை. கடலையும் அவர்களையும் தூரப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 கடலில் நாம் எதையும் விதைப்பதில்லை. அறுவடையை மட்டுமே அனுபவிக்கிறோம். இதை மனதில் கொண்டு இருக்கும் வளத்தை தக்க வைப்பதற்கான, பெருக வைப்பதற்கான முயற்சிகள் என்னென்ன இருக்கிறதோ, அத்துணையையும் மத்திய-மாநில அரசுகள் முயற்சிப்பது அவசியம்.


சில புள்ளி விவரங்கள் :
தமிழக கடற்கரை நீளம் : 1,076 கி.மீ

கடலோர மாவட்டங்கள் : 13

மீனவ கிராமங்கள் : 591

கடலோர மீனவர்கள் எண்ணிக்கை : 8.92 லட்சம்

நேரடி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் : 2.60 லட்சம்

மீன்பிடி வாகனங்கள் : 6,700 இயந்திரப் படகுகள்
                                               54,163 பாரம்பரியப் படகுகள்
                                      
         (21,898 வல்லம்
                                               32,265 கட்டுமரம்)

மீன் உற்பத்தி (2010-11) : 4.04 லட்சம் டன்
                                                (ரூ.4,086 கோடி மதிப்பு)

ஏற்றுமதி (2010-11) : 84,495 டன்
                                         (ரூ.2802.02 கோடி)



(நன்றி : புதிய தலைமுறை)

4 கருத்துகள்:

  1. ரூ.4,086 கோடி மதிப்பு மீன்

    கடலோர மீனவர்கள் எண்ணிக்கை : 8.92 லட்சம்

    அப்போ ஒருஒருவருக்கும் சராசரி ரூ. 46 ஆயிரம் வருட வருமானம்.

    நேரடி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் : 2.60 லட்சம்

    ஒருஒரு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்கு வருட சராசரி வருமானம் ரூ.157,154. இது corporate நிறுவனத்தில் வேலை செய்பவனது வருட சராசரி வருமானத்திற்கு ஒப்பிடலாம்.

    இவர்களுக்கு தேவை பணத்தினை எப்படி பராமரிப்பது என்ற கல்விதான்.
    மற்ற நாடுகளில், மீனவன் ஏழையாக இருப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6:23 AM, மே 12, 2012

    Let these fisherman pay the taxes on their income, first and expect aid from the govt.

    பதிலளிநீக்கு