தியேட்டரை விட்டு வெளியேறும்போது உணர்ச்சிகரமாக மூக்கை சிந்திக்கொண்டே, கசியும் கண்ணீரை மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டோ பார்வையாளர்கள் வெளியேறுவது அத்திபூத்தாற்போல சினிமாவில் நடக்கும் அபூர்வ நிகழ்வு. அதிசயங்கள் ஆச்சர்யமானவை. ஆனாலும் அவற்றுக்கு பஞ்சமேதுமில்லை.
1997ல் ‘மென் இன் ப்ளாக்’ வெளிவந்தபோது பெரிய வரவேற்பை பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முன்பாக அது காமிக்ஸாக வந்து சக்கைப்போடு போட்ட ஃபேண்டஸி கதை. ரோட்டன் டொமாட்டோஸ் போன்ற கறார் விமர்சனத் தளங்கள் தூக்கிவைத்து கொண்டாடியதில் கொட்டோ கொட்டுவென்று வசூல் மழை பேய்மழையாய் கொட்டி தீர்த்தது. இண்டிபெண்டன்ஸ் டே திரைப்படம் வெளியானபோது பலரையும் கவர்ந்த வில் ஸ்மித், மென் இன் ப்ளாக் மூலம் ஓவர்நைட் சூப்பர் ஸ்டார் ஆனார்.
கதை ரொம்ப சிம்பிள். மென் இன் ப்ளாக் என்பது அமெரிக்க அரசின் ஓர் ரகசிய அமைப்பு. பூமியில் இருக்கும் வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு இவ்வமைப்புக்கு இருக்கிறது. இவ்வமைப்பில் பணியாற்றும் ஏஜெண்ட் ஜே (வில் ஸ்மித்), ஏஜெண்ட் கே (டாம்மி லீ ஜோன்ஸ்) இவர்களது சாகஸங்களும், வினோத அனுபவங்களும் தான் கதை. ஏஜெண்ட் ஜே லொடலொடவென வம்படியாக பேசிக்கொண்டேயிருக்கும் பாத்திரம். ஏஜெண்ட் கே அவருக்கு நேரெதிர். வயது தந்த அனுபவங்களின் காரணமாக வேலையில் சின்சியராக, கறாராக, உம்மணாம் மூஞ்சியாக இருப்பவர். நடிகர்கள், கதை, திரைக்கதை மற்ற கந்தாயங்களைவிட கிராஃபிக்ஸ் துல்லியமாக இருப்பது இப்படவரிசைக்கு மிக அவசியம்.
முதல் படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பையடுத்து 2002ல் இரண்டாம் பகுதி
வெளிவந்தது. வசூலில் சோடை போகாவிட்டாலும், விமர்சகர்கள் டவுசரை கயட்டி
விட்டார்கள். முந்தைய பாகத்தை கொண்டாடிய ரோட்டன் டொமாட்டோஸ் காறித் துப்பிவிட்டது.
இதனால் எல்லாம் சற்றும் மனம் தளராத
விக்கிரமாதித்தனான வில்ஸ்மித்துக்கு மட்டும் இந்த கான்செப்டில் நல்ல நம்பிக்கை
இருந்தது. மூன்றாவது பாகத்தை எடுத்து, பழைய வரவேற்பை பெற்றே தீரவேண்டும் என்பதில்
தீவிரமாக இருந்தார்.
போனவாரம்
மூன்றாம் பாகம் வெளிவந்துவிட்டது. 1969ல் ஏஜெண்ட் கே, கையை வெட்டி, கைது செய்து
நிலவில் சிறைவைத்திருக்கும் போரிஸ் என்கிற கிரிமினல் முப்பதாண்டுகளுக்கும் மேலான கடுஞ்சிறையில் இருந்து தப்பிக்கிறான். தப்புவதோடு
இல்லாமல், தான் கைதான 1969க்கு மீண்டும் கடந்தகாலத்தில் பயணித்து, தனது கையை வெட்டுவதற்கு முன்பாகவே ஏஜெண்ட் கே-யை
போட்டுத் தள்ள திட்டமிடுகிறான். விஷயத்தை கேள்விப்பட்டு தானும் அதே காலத்துக்குப்
பயணித்து ஜே-வை, கே காப்பாற்றுவதுதான் கதை. ஃபேண்டஸிக்கே காதுகுத்தும் மெகா
ஃபேண்டஸி. நிலாவுக்கு அப்போலோ விண்கலத்தில் நீல்ஆர்ம்ஸ்ட்ராங் கும்பல் பயணிக்கும் தேதியில் கதை
நடக்கிறது. அந்த குழு பயணிக்கும் விண்கப்பலில் ஒரு இன்ஸ்ட்ரூமெண்டை செருகி ஜே-வும்,
கே-வும் உலகை காப்பாற்றுகிறார்கள். இதன் மூலமாக வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு
படையெடுப்பதை தடுக்கும் ஒரு சேஃப்டி ஷீல்டை (கோல்கேட் நம் பற்களை பாதுகாக்க
ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு வளையம் மாதிரி) நிறுவுகிறார்கள். இதைத் தடுத்து,
கே-வை போட்டுத் தள்ள நினைக்கும் போரிஸையும் போட்டுத் தாக்குகிறார்கள். கடந்த
காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் சிறு கரெக்ஷன் செய்துவிட்டு வெற்றிகரமாக
நிகழ்காலத்துக்கு திரும்புகிறார் ஜே. டென்ஷனான க்ளைமேக்ஸ். உலகை காப்பதை மட்டுமே
தொழிலாக கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் தியாகம். கடைசியாக ‘நாம
ஜெயிச்சிட்டோம்’ என்று ஆனந்தக் கூத்தாடும் அதே வழக்கமான
ஹாலிவுட் க்ளைமேக்ஸ். கிட்டத்தட்ட டிபிக்கல் ஹாலிவுட் படமாக மாறிவிட்ட இதை
க்ளைமேக்ஸுக்கு பிந்தைய ஒரு சிறிய ட்விஸ்ட் க்ளைமேக்ஸால் ஒட்டுமொத்தமாக
பார்வையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை மாற்றியமைத்திருக்கிறார்கள். அந்த ஒன்றரை
நிமிட காட்சியால் மூன்றாவது பாகம் மட்டுமின்றி, மென் இன் ப்ளாக் சீரியஸுக்கே பெரிய
மரியாதை ஏற்பட்டிருக்கிறது. காமெடி, ஃபேண்டஸி, காதுகுத்து காட்சிகள் என்று
ஜூகல்பந்தியாக கும்மியடிக்கும் மென் இன் ப்ளாக்குக்கு புதுவண்ணத்தை
வாரியிறைத்திருக்கிறது இந்த செண்டிமெண்ட் காட்சி. ஜே-வுக்கும், கே-வுக்கும்
இடையிலிருக்கும் உறவு வெறுமனே பணி சார்ந்ததில்லை என்கிற ரகசியத்தை
போட்டுடைக்கிறது. “உன் அப்பா ஒரு ஹீரோன்னு மட்டும் நினைவு வெச்சிக்க” என்கிற வசனம் யாரைத்தான்
சிலிர்க்க வைக்காது. திரையில் பாருங்கள் நீங்களும் நிச்சயம் சிலிர்ப்பீர்கள். நம்மூரில்
சேரன் எடுத்த ‘தவமாய் தவமிருந்து’ ஏற்படுத்திய உணர்வுகளை
வெறும் ஒன்றரை நிமிடங்களில் பன்மடங்காய் பெருக்கிக் காட்டுகிறது இப்படம்.
மூன்றாவது
பாகம் முப்பரிமாணத்தில் வந்திருப்பதும் பெரிய ப்ளஸ். வில்ஸ்மித் 1969க்குப்
பயணிக்கும் காட்சியை விஷூவல் ட்ரீட் என்றெல்லாம் வெறுமனே பாராட்டிவிட முடியாது. இக்காட்சியை
ஸ்க்ரிப்ட் ரைட்டர் எப்படி எழுதியிருப்பார் என்று கிராபிக்ஸ் செய்துகூட கற்பனை
செய்துவிடமுடியவில்லை. ‘ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுத்திருக்கிறோம்’ என்று நம்மூரில் யாராவது
சொன்னால், அதை ‘ஜோக்’காகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும்
1992ல் வெளியான ‘ஜட்ஜ்மெண்ட் டே’ தரத்துக்கு கூட நாம் தொழில்நுட்பத்திலோ,
கதை சொல்லும் உத்தியிலோ வளரவில்லை என்பதுதான் யதார்த்தம்.
“நம்மூருக்கு
இதெல்லாம் தேவையா, நம் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம்பிடித்துக் காட்டவே எமக்கு தாவூ தீருகிறதே?” என்று நம் படைப்பாளிகள் கேட்கலாம். ஆனால் எம்.ஐபி.-3
போன்ற பிரும்மாண்ட ஃபேண்டஸி திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகும் அதே நாளில்,
தமிழ்நாட்டின் குக்கிராமமான கிடாரம் கொண்டானைச் சேர்ந்த முருகேசனும் க்யூப்
ப்ரொஜக்ஷனில், டி.டி.எஸ். ஒலியமைப்பில் தன் தாய்மொழியான தமிழிலேயே
பார்த்துவிடுகிறான் என்கிற சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘எந்திரன்’ மாதிரி முயற்சிகளை அவன்
வரவேற்கிறான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சினிமா நம்மூரில் சர்வநிச்சயமாக வெறும்
கலை மட்டும் அல்ல. தயாரிப்பவர்களுக்கு தொழில். பார்வையாளனுக்கு பொழுதுபோக்கு.
இதனைப் புரிந்துகொண்டு தமது சிந்தனைத் தளத்தை (ஹாலிவுட்டையோ, கொரியன் படங்களையோ ’பிட்’ அடிக்காமல்) விரிவாக்கிக்
கொள்வதே நம்மூர் படைப்பாளிகளை வரலாற்றில் இடம்பெற வைக்கும்.
இரண்டாம்
பாகத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை மூன்றாம் பாகத்தில் போக்கிவிட்ட திருப்தி வில்ஸ்மித் க்ரூப்புக்கு
வந்துவிட்டதாக தெரிகிறது. ரோட்டன் டொமாட்டோஸும் இரண்டாம் பாகம் அளவுக்கு
மோசமில்லை, முதல் பாகம் அளவுக்கு சூப்பருமில்லை என்று ரெண்டுங்கெட்டான்தனமாக
படத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களைப் பொறுத்தவரை எம்.ஐ.பி. 3-க்கு
பெரிய வரவேற்பு. குறிப்பாக ஆசியாவில் கன்னாபின்னா ஹிட். நான்காவது பாகம் எடுத்தால்
நிச்சயம் நடிப்பேன் என்று சொல்லாமல், அதுகுறித்து பரிசீலிப்பேன் என்று ‘ஜோக்’ அடிக்கிறார் வில்ஸ்மித்.
இயக்குனருக்கு வில்ஸ்மித்தை விட நகைச்சுவையுணர்ச்சி அதிகம். “ஓக்கே நோ ப்ராப்ளம். நான்காவது பாகத்தில் நிஜமாகவே வில்ஸ்மித் இல்லை. அவரது மகன்
ஜேடன் ஸ்மித்தான் நடிக்கப் போகிறார்” என்று பதிலுக்கு ஜோக்
அடிக்கிறார். இதெல்லாம் ‘ஜோக்’காக இல்லாவிட்டாலும் பெரிய
பிரச்சினை இல்லை. தன்னுடைய வாய்ப்பை தனது மகன்தானே தட்டிப் பறிக்கப் போகிறான்
என்று வில்ஸ்மித் திருப்தி அடைந்துக் கொள்வார். மகனிடம் தோற்பதைவிட சந்தோஷமான விஷயம் ஒரு தகப்பனுக்கு வேறென்ன இருந்துவிடப் போகிறது?