15 செப்டம்பர், 2012

மின்கம்பி வென்றான்


மடிப்பாக்கத்தில் மொத்தமாக முன்னூறு வீடுகள் இருந்தபோது அவர் ஒரு கிரவுண்டு நிலத்தை சல்லிசு விலைக்கு ‘இன்வெஸ்ட்மெண்ட்’ ஆக வாங்கிப் போட்டார். சொந்த ஊர் விழுப்புரத்துக்கு பக்கத்தில். அந்த காலத்தில் எப்படியோ அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். பல ஊர்களுக்கு மாற்றலாகி கடைசியாக சென்னைக்கு வந்தபோதுதான் மடிப்பாக்கத்தில் இடம் வாங்கினார்.

குரோம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். எலெக்ட்ரிக் ட்ரெயின் பயணத்தில் “உங்க ஊர்லே இடம் வாங்கிப் போட்டிருக்கேங்க...” என்கிற அறிமுகத்துடன் அப்பாவுக்கு நண்பர் ஆனவர். ஆறு மாதத்துக்கு ஒருமுறை வந்து இடத்தைப் பார்த்துச் செல்வார். அப்போது எங்கள் வீட்டுக்கும் வந்துவிட்டுப் போவார்.


ஒருமுறை வந்தபோது, “எதுக்கு வாடகையை கொட்டிக் கொடுத்து கஷ்டப் படுறீங்க... இடம்தான் இருக்கே. வீடு கட்டி இங்கேயே குடிவந்துடலாமே?” என்று அப்பா கேட்டார்.

“இந்த ஊர்லே மனுஷன் குடியிருக்க முடியுமா? மழைக்காலம் ஆச்சின்னா ஊரே ஏரி மாதிரி ஆயிடுது. அவசர ஆத்திரத்துக்கு பஸ் கிடைக்காது. ஒத்தையடிப் பாதையை ரோடுன்னு சொல்லிக்கிட்டு நீங்களும் இருக்கீங்க பாருங்க...” என்று கொஞ்சம் நக்கலாய் பதில் சொன்னார்.


அப்பாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவரது தாய்வழி குடும்பம் பரம்பரை, பரம்பரையாய் வசிக்கும் ஊர். யாரோ ஒரு வெளியூர்க்காரர் கொஞ்சம் எகத்தாளமாய் பேசியதும் அவரது முகம் சுண்டிவிட்டது. ஆனால் மடிப்பாக்கம் அப்போது அப்படிதான் இருந்தது. ரோடு இல்லை, பஸ் இல்லை என்பதால் யாரும் ஊர்க்காரனுக்கு பொண்ணுதர கூட அஞ்சிக் கொண்டிருந்தார்கள்.


ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென்று ஏதோ அதிசயம் நிகழ்ந்து மடிப்பாக்கமும் ‘சிட்டி’ ஆகிவிட்டது. ஏகப்பட்ட அரசு ஊழியர்கள் வீடு கட்டி குடியேறத் தொடங்கினார்கள். இடையில் ஏரிக்கரை ஐயப்பனும் ஃபேமஸ் ஆகிவிட்டதால், கோயிலை சுற்றி ஏராளமான குடியிருப்புகள். “மடிப்பாக்கத்துலே பதினைஞ்சு அடியிலே தண்ணீ. குடிச்சா இளநீர் மாதிரி இருக்கும் தெரியுமா?” என்று சென்னை நகரவாசிகள் ஆச்சரியத்தோடு பேசிக்கொள்வார்கள். ரியல் எஸ்டேட் கொழிக்கத் தொடங்கியது. இன்று மடிப்பாக்கத்தில் யாராவது இடம் வாங்கினால் அவர் பெரிய கோடீஸ்வரராக இருக்கவேண்டும்.

கதைக்கு வருகிறேன். மடிப்பாக்கம் லேசாக வளரத் தொடங்கிய காலத்தில் அப்பாவின் நண்பர் ஒருமுறை வந்தார். “பரவாயில்லையே. வேளச்சேரிக்கு லிங்க் ரோடு பக்காவா போட்டிருக்கான் போல. ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா சைதாப்பேட்டையிலேருந்து பஸ் கூட வருதுப்பா” என்று பெருந்தன்மையோடு எங்கள் ஊரின் வளர்ச்சியை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

அடுத்தமுறை வந்தபோது “வீடு கட்டலாம்னு இருக்கேம்பா. வாடகை வீடு ரொம்ப தொந்தரவு. வருஷாவருஷம் வாடகை ஏத்திக்கிட்டே போறானுங்க. அதுவுமில்லாமே மூணு, நாலு வருஷத்துக்கு ஒருக்கா மாத்திக்கிட்டே இருக்கவேண்டியிருக்கு. கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு. வைஃப் ஆபிஸ்லே லோன் போட்டிருக்கா. பத்தலைன்னா தெரிஞ்சவங்க கிட்டே கடனோ, உடனோ வாங்கி சமாளிச்சிக்கலாம்னு இருக்கேன்” என்றார்.

நல்லநாள் பார்த்து ஒருநாள் பூமிபூஜை போட்டார். இவர் பூமி பூஜை போட்ட அதே நாளன்று, இவரது இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் மின்வாரிய ஆட்கள் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிகச்சரியாக இவரது வீடு கட்டி முடிக்கப்பட்ட அன்று, இவரது வீட்டுக்கு மேலே செல்லுமாறு உயத்தில் மின்கம்பிகள் அமைக்கப்பட்டன. நொந்துப்போனார் அவர்.

மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, “அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புராஜக்ட் சார். இங்கே கம்பி வரப்போவுதுன்னு தெரிஞ்சுதான் நிறைய பேர் அந்த ரூட்டுலே இடம் வாங்காம இருந்தாங்க. நீங்க விவரம் தெரியாம வாங்கிப் போட்டுட்டீங்க போல. இது தேவையில்லாத அச்சம். கம்பி அறுந்து உங்க வீட்டு மேலே விழறதுக்கு சான்ஸே இல்லை. அப்படியே விழுந்தாகூட உடனே பவர்கட் ஆயிடும். விபத்துல்லாம் நடக்கவே நடக்காது” என்று உறுதி கொடுத்தார்கள்.

மனக்குறையோடே குடிவந்தார் அவர். மாடியில் போர்ஷன் கட்டி வாடகைக்கு விடும் அவரது ரகசிய திட்டம் தவிடுபொடியானது. தன் வீட்டுக்கும் மேலாக போகும் மின்கம்பிகளை அகற்ற சட்டப்படியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, அத்தனையையும் முயற்சித்தார். யாருக்காவது ‘மால், கீல்’ வெட்டி இப்பிரச்சினையை சரிசெய்ய முடியுமாவென்றும் பார்த்தார். மின்வாரியம் முரண்டு பிடித்தது. அரசு அடம் பிடித்தது. சகல முறைகளிலும் முயற்சித்து கடைசியாக அவருக்கு தோல்வியே மிஞ்சியது.

இடையில் அவரது வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் நிறைய வீடுகள் பெருகத் தொடங்க.. எல்லா வீடுகளுக்குமே அந்த மின்கம்பி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ‘மின்கம்பியால் பாதிக்கப்படுவோர் சங்கம்’ ஒன்றை (அஃபிஷியலாக இப்படி பெயரெல்லாம் வைக்காமல்) தொடங்கி, அதற்கு நம் தலைவரே தலைவரும் ஆனார்.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு அல்லவா? கூட்டமாக சேர்ந்தபிறகு இவர்களது கொடி உயரத் தொடங்கியது. மின்வாரிய தலைமை அலுவலகம், கோட்டை என்று எல்லாக் கதவுகளையும் தட்டி, கடைசியாக ஒரு சுபயோக சுபதினத்தில் வென்றார்கள். இவர்களது வீடுகளுக்கு மேலாக சென்ற மின்கம்பி ‘ரூட்’ மாற்றப்பட்டு சாலைகளுக்கு மேலாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வெற்றிக்காக அவர் கிட்டத்தட்ட பத்து, பண்ணிரெண்டு ஆண்டுகாலத்தை செலவழித்தார். இந்த வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்தையாவது இந்த மின்கம்பி பிரச்சினைக்காக செலவிட்டார். இப்போது அப்பகுதியில் எல்லாருமே மாடி மேல் மாடி கட்டி சந்தோஷமாக வாழ்கிறார்கள். தங்கள் நியாயமான உரிமைகளுக்காக அரசுக்கு எதிரான சிறு அளவிலான சிவிலியன் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பதற்கு இவர்களது வெற்றி நல்லதொரு உதாரணம்..

கடந்த வாரம் மின்கம்பி வென்றானை ஒரு டீக்கடையில் சந்தித்தேன். அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமாக இருக்கிறார். தினத்தந்தியை மேலோட்டமாக புரட்டிக்கொண்டே, பக்கத்திலிருந்தவரிடம் ஆவேசமாக அரசியல் பேசிக் கொண்டிருந்தார். “கவருமெண்டுதான் கூடங்குளம் இம்புட்டு பாதுகாப்புன்னு எடுத்து சொல்லியிருக்கே? அப்துல்கலாமே சொல்லியிருக்காரு. வேற யாரு சொல்லணும். அணுவுலை வந்தா என்னய்யா... ஊர்லே இருக்குறவனெல்லாம் செத்தாப் போயிடுவான். இந்த உதயகுமாரையும், ஊர்ஜனங்களையும் உள்ளே வெச்சி நல்லா நொங்கெடுக்கணும்”

13 செப்டம்பர், 2012

ஆளும் கருப்பு, அகமும் கருப்பு


ஸ்ரீரங்கத்து ரங்கநாயகியும், காவிரி தந்த கலைச்செல்வியும், ஈழத்தாயும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழினத் தலைவியாகவும் விளங்கும் தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம்.

சரித்திர பிரசித்தி வாய்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவிரி ஆற்றினால் சூழப்பட்டும், மிகப்பெரிய ராஜகோபுரத்தினை உடைய திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ ரங்கநாத சாமி ஆலயம் அமைந்திருப்பதுமான, அம்மா அவதரித்த ஸ்ரீரங்கத்தில் முழக்கமிட்டிருக்கிறார்.

“ஆளும் கருப்பு, அகமும் கருப்பு” - பேரரசு மாதிரி டைரக்டர்கள் கூட இப்படி ‘பஞ்ச்’ அடிக்க முடியாது. அதுதான் அகிலம் காக்கும் அம்மா.

இதுவரை தன்னை எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொண்டு கூலிங்க்ளாஸ் போட்டு, டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் குழந்தைகளான தமிழக மக்களை ஏமாற்றிவந்த குடிகார திம்மிக்கு சரியான கும்மாங்குத்து. இவர் குடிப்பவர் என்கிற உண்மையை கண்டுபிடித்து உலகுக்கு முதலில் சொன்னவரே அம்மாதான்.

குடிகாரராக இருந்தபோதிலும் தெய்வத்தாய் வாழும் ஆலயமான போயஸ்கார்டனுக்கு வந்து, “குடிக்கமாட்டேன்” என்று சத்தியம் செய்ததால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த கேடுகெட்ட மொடா குடிவெறியரை கூட்டணிக்கே நம் தங்கத்தாரகை சேர்த்துக்கொண்டார் என்கிற ரகசியம் ஸ்ரீமான் சோவை தவிர்த்து எத்தனை பேருக்கு தெரியும்?

அதிசயங்களுக்கு எல்லாம் அதிசயமாக வாழும் அம்மாவின் அருட்தொண்டனான நான் அப்போதே அபசகுனமாக நினைத்தேன். குடிகாரரை போய் கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறாரே, நாளைக்கு நாமே இவரது கட்சிக்காரர்களோடு சியர்ஸ் சொல்லவேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று.

அதுபோலவே ஆதிபராசக்தி அம்மாவின் கூட்டணியில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகிவிட்டதும் மீண்டும் ரகசியமாக குடிக்கத் தொடங்கினார் குடிகாரர். அதுவும் அம்மாவின் ஆட்சியில் சீரும் சிறப்புமாக நடைபெறும் நமது டாஸ்மாக்கிலேயே சரக்கு வாங்கி குடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் தினமும் கலாட்டா செய்திருக்கிறார். விடுவாரா நம் அம்மா? கூட்டணியை விட்டு டிஸ்போஸபிள் க்ளாஸ் மாதிரி தூக்கியெறிந்துவிட்டார்.

இவர் குடிவெறியர் என்று உலகத்துக்கே அறிவித்த அம்மாதான் இப்போது இவர் கருப்பு நிறமும் கொண்டவர் என்பதையும் கண்டறிந்து சொல்லியிருக்கிறார். இவ்வளவு நாட்களாக சினிமாவில் ரோஸ் பவுடர் மேக்கப் போட்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தவர், இப்போது சாயம் வெளுத்துப்போச்சே என்று குடித்துவிட்டு ஊளையிட்டுக் கொண்டிருப்பார். சைட் டிஷ்ஷாக ஊறுகாயை கொடுத்து தன் பக்கத்தில் அவரை சேர்த்துக்கொள்ள மூத்த திராவிட திம்மியும் நரித்தனமாக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பார்.

வேண்டுமென்றால் பாருங்களேன். குடிகாரர் கருப்பு நிறமுடையவர் அல்ல என்று கூட நிரூபிக்க மூத்த திராவிட திம்மி தலையால் தண்ணீர் குடிப்பார். அதையும் தாண்டி அம்மாவை கூட கருப்பு என்று வாய்கூசாமல் பொய் சொல்லவும் முனைவார். அதனால் எல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அம்மாவின் கலர் இங்கிலாந்தை ஆளும் எலிசபெத் ராணிக்கு கூட இல்லையென்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

இந்த குடிகாரரைப் போலவே நன்றி மறந்த இன்னொரு குடிகாரரும் இருக்கிறார். அம்மா தொலைக்காட்சி விழாவில் அருள்மிகு அம்மா முன்னிலையிலேயே மூத்தத் திம்மியின் பெயரை புகழ்ச்சியாக உச்சரித்திருக்கிறார். அதை தொலைக்காட்சியில் பார்த்த எனக்கே வாயும், வயிறும் எரிந்தது. நேரில் பார்த்த தாயுள்ளம் கொண்ட அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும். அவரும் கருப்புதான். அவரும் குடிவெறியர்தான். ஆற்றல்மிகு அம்மா ஒருநாள் அவருக்கும் பூசை வைப்பார். அப்போது நாம் பார்த்துக் கொள்வோம்.

அடுத்து மாண்புமிகு அம்மா என்ன சொல்வார், யாரை சொல்வார் என்பதை அவரது அரும்பெரும் தொண்டனான நான் அறியமாட்டேனா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதைதான் சொல்லப் போகிறார்.

“அவருக்கு தலைக்கு மேலும் ஒன்றுமில்லை. தலைக்கு உள்ளும் ஒன்றுமில்லை”

12 செப்டம்பர், 2012

விர்ச்சுவல் விபச்சாரம்!


“எப்படி.. எப்படி? பொண்ணு...” வாலியின் வைரவரிகளில் அடுத்த ‘ஏ’த்தனமான வார்த்தை ரிங்டோனாக தேனில் ஊறவைத்த குரலில் ஒலிப்பதற்குள்ளாக அவசரமாக போனை எடுத்தோம். நடுச்சாம நேரம். ஒலிம்பிக் பீச் வாலிபால் கண்டுகொண்டு, ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிளாய் குளிர்ந்துப் போயிருந்தோம். மலேசியாவில் இருந்த அஜால் குஜால் நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். இந்த நேரத்தில் அந்த நண்பர் அழைக்கிறார் என்றால் கடுமையான போதையில் ஏதேனும் ‘குமுக்’கான மேட்டரை அருளப் போகிறார் என்று அர்த்தம்.
நண்பரின் குரலும் ஜில்லோ ஜில்லென்று இருந்தது. சிகரத்தை எட்டிய சாதனைக்கு இணையான பெருமிதம் அவரது குரலில் வழிந்தோடியது. ஒருமாதிரியான ஹஸ்க்கி வாய்ஸில் மூச்சு வாங்கிக்கொண்டே பேசினார். அவர் பேசப்பேச, கேட்ட நமக்கு சில நேரம் ஜூஜுலிப்பாகவாகவும், சில நேரம் பகீராகவும், மீதி நேரம் டெர்ரர் ஆகவும், இதயம் துரந்தோ எக்ஸ்பிரஸ்ஸாக படபடவென பட்டாசாக தடதடத்தது. ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசல் புரசலாக கேள்விப்பட்டதுதான். அனுபவப்பட்டதில்லை. நூதனமுறை பணமோசடி. தூண்டில்? வழக்கம்போல செக்ஸ்.
பேச்சு முடிந்ததும், ’மேட்டர்’ அப்படியே ஆணியில் அடித்து மனசில் ஃப்ரேம் மாட்டிக் கொண்டது. மறுநாள் விடிந்ததில் இருந்து ஆணியைப் பிடுங்கி போடலாமென்றால், ம்ஹூம். நல்ல ஸ்ட்ராங்கான ஆக்கர். மனசைத் திடப்படுத்திக் கொண்டு வாசகர்களின் நன்மைக்காக ‘அந்த’ கெட்ட அனுபவத்துக்காக நம்மை நாமே ஆட்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டோம். இரவு 9.30 மணிக்காக லேப்டாப்பை முன்பாக கிடத்திக்கொண்டு தவம் கிடக்கத் தொடங்கினோம்.
சரியாக மணி 9.30. யாஹூ மெசஞ்சரில் நுழைந்தோம். நண்பர் சொன்ன விஷயங்கள் எல்லாமே ‘மேப்’ போட்டதுமாதிரி பளிச்சென்று மூளைக்குள் அமர்ந்திருந்தது. ‘சாட்’ பகுதிக்குச் சென்று ‘ரீஜனல்’ பகுதியில் ‘இந்தியா’வைத் தேர்ந்தெடுத்தோம். இந்தியாவுக்குள் இருந்த பிரபலமான நகரங்களின் பெயர் பட்டியலிடப்பட்டது. நம் மைண்ட் மேப்பில் பதிவாகியிருந்த பெங்களூரைத் தேர்ந்தெடுத்தோம். பெண்கள் பெயரில் ஏகப்பட்ட பேய்கள் உலவிக் கொண்டிருந்தன. நமக்கான பேயை தேர்ந்தெடுக்க டாஸ்மாக்கில் ஹாஃப் பாயில் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும் குடிமகனைப் போல பொறுமையாக காத்திருந்தோம்.
நான்கைந்து பெண்கள் (?) ‘வான்னா சாட் வி மீ?’ என்று பர்சனல் மெசேஜ்களாக அள்ளித் தெளிக்கத் தொடங்கினார்கள். ‘பர்சனல் சாட் கேமிரா டூ கேமிரா வேண்டுமா?’ என்றொரு குஜிலி மெசேஜ் அனுப்ப, சட்டென்று நமக்குள் பல்பு எரியத் தொடங்கியது. ‘ப்ளீஸ்’ என்று கூறி, அழைப்பை தாழ்மையோடு நாம் ஏற்றதும், சாட்டிங்கில் அவள் அந்தப் பக்கமாக இருந்து டைப்பத் தொடங்கினாள்.
“என் பெயர் ஜெனிஃபர். உங்கள் பெயர்?”
“என் பெயர் ஜூனியர் பதலக்கூர். சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறேன்” என்று தொடங்கினோம்.
ஆரம்பக்கட்ட வழக்கமான ‘சாட்டிங்’ சம்பிரதாய குசலவிசாரிப்புகள் முடிந்ததும், எந்த விகல்பமும் தோன்றாத வகையில், நாம் எதிர்ப்பார்த்த ‘மேட்டருக்கு’ அடிகோலினாள்.
“கேமிராவில் என்னை முழுமையாக பார்க்க விரும்புகிறீர்களா?”
“முழுமையாக என்றால்?”
“நான் உடனே ஒரு மூவி ஃபைல் அனுப்புகிறேன். என் செல்போனில் எடுத்தது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
சொல்லியபடியே ஒரு 3gp ஃபைல் அனுப்பினாள். ஃபைலில் அந்தப் பெண்ணின் கழுத்தில் தொடங்கி, பாதம் வரை அட்டகாசமான ஆங்கிளில் வீடியோ காட்சி விரிந்தது. மஞ்சள் புடவையில் மங்கலகரமான கவர்ச்சி. இரண்டாம் ஆட்டம் மலையாளப் படம் பார்ப்பது மாதிரி ‘ஜிவ்’வென்றிருந்தது.
“நீங்கள் பார்த்தது ஐம்பது சதவிகிதம்தான்”
“இல்லையே? முழுமையாகப் பார்த்தேனே? முகத்தை மட்டும்தான் பார்க்கவில்லை”
“முட்டாள். உடையணிந்தப் பெண் உனக்கு முழுமையான தோற்றத்தை எப்படி காட்டமுடியும்?”
அடிக்கோடிட்டு, கொஞ்சிக்கொண்டே அவள் மறைமுகமாக கேட்டதும், புரிந்துப் போனது. சில மாதங்களுக்கு முன்பாக செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில், இரவுவேளையில் ஒரு ’ஆண்ட்டி’ நம்மை இப்படித்தான் டபுள்மீனிங்கில் பேசி, ‘அதற்கு’ அழைத்தார். தகவல் தொழில்நுட்பப் புரட்சியைப் பயன்படுத்தி இவர் ‘விர்ச்சுவலாக’ அழைக்கிறார்.
“ஓக்கே. புரிகிறது. ப்ளீஸ், உங்களை முழுமையாக பார்க்க விரும்புகிறேன்”
“கொஞ்சம் செலவு ஆகுமே? நாற்பது நிமிடங்களுக்கு நானூறு ரூபாய். லைவ்வாக வெப்கேமிராவில் என்னைப் பார்க்கலாம். மஞ்சள் புடவையோ, ஜாக்கெட்டோ அல்லது வேறெந்த இடையூறுமோ இன்றி...”
கத்தரிக்காய் வாங்குவது மாதிரி பேரம் பேசத் தொடங்கினோம். “இருநூறு ரூபாய்க்கு முடியுமா?”
“ஓ, யெஸ். ஆனால் இருபது நிமிடம்தான். பரவாயில்லையா?”
“பரவாயில்லை. எனக்கு அவசரமாக உன்னை முழுமையாக பார்க்கத் தோன்றுகிறது”
உடனே அவள் ஒரு இணையத்தளத்தின் ‘லிங்க்’ அனுப்பினாள். இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனத்தின் இணையத்தளம் அது. ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து, இந்த எண்ணுக்கு ‘நெட் பேங்கிங்’ மூலமாக இருநூறு ரூபாயை, ‘டெபாசிட்’ செய்துவிடுமாறு சொன்னாள். இவ்வாறு அந்த எண்ணுடைய அக்கவுண்டுக்கு நாம் டெபாசிட் செய்யும் தொகையை, அந்த செல்போன் சேவையின் துணைச்சேவைகள் (டி.டி.எச்., லேண்ட்லைன், ப்ரீட்பெய்ட் ரீசார்ஜ் மாதிரி) மூலம் மற்றவர்களுக்கு அவள் பயன்படுத்தி காசாக்கிக் கொள்ள முடியும். பாதுகாப்பான பரிவர்த்தனை. டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட்.
“நான் பணம் கட்டியதும், நீ ஏமாற்றி விட்டால்...?”
ஒரு நிமிடம் என்று கூறியவள், வெப் கேம் அழைப்புக்கு நம்மை அழைத்தாள். அந்த அழைப்பை ஏற்றதும், நம் திரையில் ஓர் அப்சரஸ் தோன்றினாள். அனுஷ்கா முகவெட்டு. அசின் உடற்கட்டு. பார்த்ததுமே பச்சக்கென்று நம் மனசில் ஒட்டிக்கொண்டது அவர் தோற்றம். ஜூனியர் என்.டி.ஆர். மாதிரி தெலுங்கு ஹீரோக்கள் பார்த்தால், பார்த்ததுமே தங்கள் படத்துக்கு கொத்திக்கொண்டு போய்விடுவார்கள். கேமிராவை அட்ஜஸ்ட் செய்து, முகம் மட்டும் குளோஸப்பில் தெரியுமாறு பார்த்துக்கொண்டு, தெளிவான ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.
“இன்னும் நீ என்னை நம்பவில்லையா?” மஞ்சள் புடவை அணிந்து, நடுவகிட்டில் குங்குமம் வைத்த பெண்ணுக்கு ஜெனிஃபர் என்று பெயர் இருக்க சாத்தியமில்லை என்று பகுத்தறிவு நமக்குச் செப்பினாலும், தோற்றக் கவர்ச்சியில் அதையெல்லாம் ஆராய மனமில்லை. உடனடியாக ஒரு இருநூறு ரூபாயை அவர் குறிப்பிட்ட எண்ணுக்கு கட்டினோம். டிரான்சேக்‌ஷன் ஐடியை சாட்டிங்கில் கேட்டாள். இசைக்கு மயங்கின பாம்பு மாதிரி அதையும் கொடுத்தோம்.
“பணம் வந்துவிட்டது. உனக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறேன்”
கேமிராவுக்கு பின்னால் நகர்ந்தாள். இடுப்பு வரையான தோற்றம். மாராப்பை நழுவ விட்டாள். ஜாக்கெட்டையும் மெதுவாக கழற்றினாள். கிட்டத்தட்ட ஸ்லோமோஷனில் இதெல்லாம் நடந்துக் கொண்டிருந்தது. வைத்த கண் வாங்காமல் திரையையே பார்த்துக் கொண்டிருந்தோம். முழுமையாக கழற்றாமல் வெப்கேமிராவை ஆஃப் செய்துவிட்டு, “இருநூறுதானே அனுப்பி இருக்கிறாய்? நான் ஐநூறு அல்லவா கேட்டேன். இன்னும் முன்னூறு அதே எண்ணுக்கு அனுப்பி வை. அனைத்தையும் காட்டுகிறேன்” என்று திடீரென சாட்டிங்கில் வந்து பிகு செய்யத் தொடங்கினாள். ”இருநூறுக்கு இருபது நிமிடம் என்று ஒப்புக்கொண்டாயே?” என்று நாம் சமாதானப்படுத்தத் தொடங்க, எதிர்த்தரப்பில் இருந்து பதிலே இல்லை. திரும்பத் திரும்ப சாட்டிங்கில் கெஞ்சியும், அவள் நமக்கு எந்தப் பதிலும் தராமல் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டாள். நாம் பணம் கட்டிய செல்போன் எண்ணை ‘டயல்’ செய்தோம். ‘ரிங்’ போய்க்கொண்டே இருந்ததே தவிர, யாரும் எடுக்கவில்லை.
நமக்கு வழிகாட்டிய மலேசிய நண்பருக்கு தொலைபேசி அனைத்து விவரங்களையும் பகிர்ந்தோம். வாசகர்களுக்கு இந்த நூதன மோசடியை விளக்கவே நாம் இந்த திருவிளையாடலை விளையாடினோம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல், ஏதோ சிற்றின்பத்துக்கு ஏங்கி இந்த சோதனையை செய்துப் பார்த்தது மாதிரி நம்மை கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.
மறுநாளும் சரியாக அதே 9.30 மணிக்கு, அதே யாஹூ சாட்டிங், அதே இந்தியா ரீஜன், அதே பெங்களூர் சிட்டியில் நுழைந்தோம். நேற்று நம்மிடம் பேசிய அதே பெயர் திரையில் ஒளிர்ந்தது. நாமாக அவளை அழைத்தோம். நேற்று நடந்தது எதுவுமே தெரியாததைப் போல, மீண்டும் ‘அ’ன்னா, ‘ஆ’வன்னாவில் இருந்து பேசத் தொடங்கினாள். அதே ‘மணி ஈஸிலோட்’ லிங்க். இம்முறை காசு கொஞ்சம் கூடுதல். இருபது நிமிடத்துக்கு முன்னூறு ரூபாய். வேப்கேம் ஆன் ஆகி திரையில் இம்முறை தெரிந்தது வேறு ஒரு பெண். ஆங்கிலோ இந்தியத் தோற்றத்தில் இருந்தாள்.
நம் சந்தேகம் என்னவென்றால், ஒரே நிக் நேமில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு பெண்கள் வருகிறார்கள் (ஒருவேளை ரெக்கார்ட்டட் வீடியோவாக இருக்கலாம்). வழக்கம்போல அந்த செல்போன் சேவை நிறுவனத்தின் குறிப்பிட்ட எண்ணில் பணம் டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள். அந்த எண்ணுக்கு போன் செய்தால் ‘ரிங்’ போய்க்கொண்டே இருக்கிறது. ஒருவேளை அந்த செல்போன் சேவை நிறுவனமே இதுமாதிரி ஏற்பாடு செய்து இணையத்தில் புழங்குபவர்களிடம் பணம் கறக்கிறதா?
வெளியே சில விவரம் தெரிந்த ஆசாமிகளோடு பேசியபோது கமுக்கமாக சிரிக்கிறார்கள். நீ உள்ளூர் என்பதால் இருநூறு, முன்னூறோடு போய்விட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சிலர் ஈசல் மாதிரி மாட்டிக்கொண்டு, லட்சங்களை கூட இழந்திருக்கிறார்கள் என்றார்கள்.
பர்மாபஜாரில் பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கும் மேட்டர் டிவிடியில் இதைவிட நல்ல ‘சரக்கு’கள் கிடைக்கிறது. ஆனாலும் நம்மோடு ‘லைவ்’வாக ஒரு பெண் ‘ஸ்ட்ரீப்டீஸ்’ (ஆடை அவிழ்ப்பு) செய்கிறாள் என்கிற திருப்திக்காக இளசுகள் தினமும் ஆயிரக்கணக்கில் இதுமாதிரி இழந்துக் கொண்டிருக்கிறார்கள். நவீனத் தொழில்நுட்பம் எவ்வளவோ வசதிகளை நமக்கு ஏற்படுத்தித் தருவது ஒரு புறமென்றால், இன்னொரு புறம் விபச்சாரத்தை விர்ச்சுவலில் கொண்டுவருவது மாதிரியான இம்மாதிரி பக்கங்களையும் காண வேண்டியிருக்கிறது. கட்டற்ற சுதந்திரத்தோடு காட்டாறாய் பெருகி நிற்கும் இந்த டெக்னாலஜி அசுரனை யார்தான் முறைப்படுத்தி ஒழுங்குக்கு கொண்டுவருவார்களோ தெரியவில்லை.

(சமீபத்தில் குமுதத்தில் வாசித்த கட்டுரை ஒன்றினை கொஞ்சம் மாற்றி எழுதிப் பழகிப் பார்த்தேன்)

10 செப்டம்பர், 2012

ஒரு தலைகுனிவு. ஒரு பெருமிதம்.


தமிழக முதல்வரையும், இந்தியப் பிரதமரையும் தரக்குறைவாக சித்தரித்து சிங்கள ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ‘கார்ட்டூன்’ உலகளாவிய பத்திரிகையுலகத்தையே கறைப்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு ‘கண்டனம்’ தெரிவித்துக் கொண்டிருந்தபோது புரியவில்லை. ஃபேஸ்புக்கில் படம் போடும் நண்பர் கார்ட்டூன் பாலாவை விடவா மோசமாக கார்ட்டூன் போட்டுவிட்டார்கள் என்று சாதாரணமாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன். கார்ட்டூனை பார்த்ததும்தான் புரிந்தது. நம்ம ஊரு ஆட்கள் ’ஹசந்தா விஜநாயகே’ என்கிற அந்த கார்ட்டூன் மனநோயாளியின் பக்கத்திலேயே வரமுடியாது என்று. ‘லக்பீமா நியூஸ்’ செய்வது பத்திரிகை வியாபாரம் அல்ல. பத்திரிகை விபச்சாரம். பத்திரிகையில் பணிபுரிபவன் என்கிற வகையில் இச்சம்பவத்துக்காக தலைகுனிகிறேன்.

* - * - * - * - *

எமெர்ஜென்ஸிக்குப் பிறகு பிறந்த தலைமுறை சூடு, சுரணையற்றது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சுயமரியாதை இயக்கத்தின் உரிமைப்போர், இந்திய சுதந்திரப் போர், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர், எமர்ஜென்ஸி அடக்குமுறைக்கு எதிரான போர் என்று தமிழக அளவில் நாம் கேள்விப்பட்ட சிவிலியன்கள் பங்குபெற்ற போராட்டங்களின் தீவிரம் கடந்த நாற்பதாண்டுகளாய் காணப்பட்டதாக நினைவேயில்லை. ஈழத்தமிழருக்கு ஆதரவான போக்கு எப்போதுமே பரவலாக இருந்ததாக நினைவில்லை. இடஒதுக்கீடு, ஊழலுக்கு எதிரான சிந்தனை போன்ற சமூகக்கோபங்களும் கூட மெஜாரிட்டியான மக்களின் உணர்வாக இல்லாமல் சிறு சிறு குழுக்களின் போராட்டங்களாகவே இருக்கிறது.

நான் பிறந்ததிலிருந்து முதன்முறையாக மாபெரும் மக்கள் பங்கேற்புடன் கூடிய போராட்டத்தை கூடங்குளம் விவகாரத்தில் காண்கிறேன். தங்கள் வாழ்வாதாரத்தை காக்க மக்கள் குடும்பம், குடும்பமாக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதை தமிழகத்தில் காண்பது இமாலய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம்தான் மேற்கு எல்லையோர தமிழகத்தை முல்லைப் பெரியாறுக்காக திரளவைத்தது.

போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது எத்தனையோ கொச்சைப் பிரச்சாரங்கள் நடந்தது. அரசுடன், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதற்கு துணைபோனார்கள். ஆனால் முழுக்க முழுக்க மக்களை மட்டுமே நம்பி, இன்று நாட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் கூடங்குளம் போராளிகள். அணு உலையை மூடவேண்டும் என்கிற அவர்களது நோக்கம் வெல்லாமல் போகலாம். ஆனால் தமிழனுக்கு போர்க்குணம் இன்னமும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்த வகையில் மகத்தான வெற்றியை கண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இன்னுமோர் இடத்தில் அணுவுலை அமைக்க அரசு திட்டமிட்டால், ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கூடங்குளம் மக்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கூடங்குளம் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.

(படம் உதவி : வினவு தளம்)

7 செப்டம்பர், 2012

ஆயிரம் கொக்குகளின் கதை!


ஆகஸ்ட் 6, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ’பியர்ல் ஹார்பர்’ தாக்குதல் மூலம் தன் நாட்டை சிதைத்த ஜப்பானை பழிக்குப்பழி வாங்க அமெரிக்கா தொடை தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்க விமானப்படை முதன்முதலாக அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. நொடிப்பொழுதில் பேரழிவு. புழுதி அடங்கியதும் பார்த்தபோது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருந்தார்கள்.
சடாகோ சஸாகிக்கு அப்போது வயது இரண்டு. குண்டு வீசப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில்தான் அவளது வீடு இருந்தது. அணுகுண்டின் வீரியத்தால் பூகம்பம் வந்ததுபோல அவளது வீடு அதிர்ந்தது. சஸாகி ஜன்னல் வழியாக தூக்கியெறியப் பட்டாள். அவளது அம்மா அலறியவாறே தெருவுக்கு வந்து சிதிலங்களுக்கு இடையே சஸாக்கியின் உடலை கண்டெடுத்தாள். தன் செல்லமகள் இறந்துவிட்டாள் என்று கருதி கதறியபடியே சஸாக்கியை கட்டியணைத்தாள். உடலில் சூடு மிச்சமிருந்தது. இதயம் துடித்துக் கொண்டிருந்தது. ஆண்டவனுக்கு நன்றி சொல்லியவாறே சஸாக்கியை தூக்கிக்கொண்டு மருத்துவர்களிடம் ஓடினாள். சஸாக்கி பிழைத்தாள். காதுக்குப் பின்னான கழுத்துப் பகுதியிலும், கால்களிலும் காயம்.

கொடுங்கனவாய் இரவுகளில் மிரட்டிக் கொண்டிருந்த போர் ஒருவாறாய் முடிவுக்கு வந்தது. ஜப்பானிய மக்கள் தன்னிகரற்ற தன்னம்பிக்கையால் மேலெழத் தொடங்கினார்கள். சஸாக்கியோடு சேர்த்து அவளது தாய்க்கு மூன்று குழந்தைகள். காலனை வென்றவள் என்பதால் சஸாக்கி மீது தனி பிரியம். சஸாக்கி ஆரோக்கியமான குழந்தையாக வளர்ந்தாள். படுசுட்டி. பள்ளியிலேயே வேகமாக ஓடக்கூடியவள் என்பதால், அவள் ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருவெடுப்பாள் என்று அனைவரும் நம்பினர்.
பன்னிரெண்டு வயதாகி இருந்தபோது தன்னுடைய கால்களின் வலுவை இழந்துவருவதாக சஸாக்கி நினைத்தாள். பரிசோதித்த மருத்துவர் கண்ணாடியை கழட்டிக்கொண்டே உதட்டைப் பிதுக்கினார். ஏதோ தீவிரமான நோய் என உணர்ந்த பெற்றோர் உடனடியாக ஹிரோஷிமா ரெட்க்ராஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். போர் முடிந்துப்போன கொடுங்கனவாக இல்லாமல் சஸாக்கியை வேறு வடிவில் துன்புறுத்தியது. அணுகுண்டு வெளிப்படுத்திய கதிர்வீச்சால் அவளுக்கு லுக்கேமியா எனப்படும் கேன்சர் நோய் பாதித்திருந்தது. சஸாக்கியின் வாழ்நாள் இன்னும் சிறிது மாதங்களில் முடிந்துவிடுமென மருத்துவர்கள் சொன்னார்கள்.

நாளுக்கு நாள் சஸாக்கி மெலிந்துவந்தாள். நோய் அவளை தீவிரமாக படுத்தத் தொடங்கியது. மரணம் நிச்சயம் என்று தெரிந்தநிலையில் இன்னும் கொஞ்சநாள் வாழ அவள் ஆசைப்பட்டாள். ஒருநாள் அவளைப் பார்க்க மருத்துவமனைக்கு அவளின் உயிர்த்தோழி சிஸுகோ வந்தாள். அவளிடம் நிறைய பேப்பர் துண்டுகள் இருந்தன. ஒரு துண்டை எடுத்து ஓரிகாமி (பேப்பர் மூலமாக பொம்மைகளை உருவாக்கும் கலை) முறையில் கொக்கு ஒன்றை செய்து பரிசாகக் கொடுத்தாள். நம்மூரில் கருடனை வணங்குவதுபோல, ஜப்பானியர்களுக்கு கொக்கு வழிபடக்கூடிய பறவை. “இதே மாதிரி ஆயிரம் கொக்குகளை நீயும் உருவாக்கு. உன் கோரிக்கைக்கு கடவுள் செவிமடுப்பார்” என்று ஆறுதல் சொன்னாள் சிஸுகோ. நாம் ஆயிரத்தெட்டு முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவதைப் போல, இது ஜப்பானியர்களின் பாரம்பரிய நம்பிக்கை.

இந்த நம்பிக்கை சஸாக்கியை தொற்றிக் கொண்டது. தோழி கொடுத்த பேப்பர்களை மடக்கி, மடக்கி கொக்குகளை உருவாக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அவளால் இருபது கொக்குகளை உருவாக்க முடிந்தது. நாளுக்கு நாள் உடல் மோசமடைந்துக் கொண்டே செல்ல அவளால் நிறைய கொக்குகளை உருவாக்க முடியவில்லை. படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் ஒரு நாளுக்கு மூன்று கொக்குகளையாவது செய்துக் கொண்டிருந்தாள். இந்த வேண்டுதல் கடவுளின் காதை எட்டும். தன் உயிரை காப்பார் என்று தீவிரமாக நம்பினாள்.
கடவுளுக்கு கண் மட்டுமல்ல. காதுமில்லை. 1955, அக்டோபர் 25ஆம் தேதி சஸாக்கி மரணமடைந்தாள். மொத்தம் 644 கொக்குப் பொம்மைகளை அவள் கைப்பட செய்திருந்தாள். கடைசிவரை தன்மீது நம்பிக்கை வைத்து செயல்பட்ட தன்னுடைய குழந்தையை கடவுள் கைவிட்டுவிட்டார்.

ஆனாலும் அவளது நண்பர்களும், பெற்றோரும் கடவுளை பழிக்காமல் சஸாக்கியின் ஆசையை நிறைவேற்றினார்கள். மீதி 356 கொக்குகளை சஸாக்கியின் சார்பாக அவர்களே உருவாக்கினார்கள். ஆயிரம் கொக்குகளும் சஸாக்கியோடு சேர்த்து புதைக்கப்பட்டது.

“என் குழந்தை ஒவ்வொரு கொக்கையும் மிகக்கவனமாக பேப்பரை மடித்து உருவாக்கினாள். ஒரு கட்டத்தில் பேப்பர் காலியானபோது, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு பொம்மைகளை செய்தாள். அந்த வேலையை செய்யும்போது அவளது கண்கள் மின்னுவதை கண்டிருக்கிறேன். குறுநகையால் உதட்டில் மகிழ்ச்சி வெளிப்படும். ஒட்டுமொத்தமாக அவளது முகம் நம்பிக்கையில் ஜொலிக்கும். இதை செய்வதின் மூலம் எப்படியும் உயிர் பிழைத்துவிடுவாள் என்று அவள் தீவிரமாக நம்பினாள்” என்று பிற்பாடு சொன்னார் சஸாக்கியின் தாய்.

சஸாக்கியின் உருக்கமான கதை ஜப்பான் எங்கும் பரவியது. எந்த பாவமும் அறியாமல் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பால் இறந்த ஆயிரமாயிரம் ஜப்பானிய குழந்தைகளின் உருவகமாக சஸாக்கி பார்க்கப்பட்டாள். சஸாக்கியின் பள்ளி தோழர்கள் ஓர் இயக்கமாக உருவாகி, அவளுக்கு நினைவுச்சிலை எழுப்ப நிதி திரட்டத் தொடங்கினார்கள். உலகெங்கும் சுமார் 3,100 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் பாக்கெட் மணியில் இருந்து காசு கொடுத்தார்கள். சிறுகச்சிறுக சேர்ந்த பணத்தில் ஒன்பது மீட்டர் உயரத்தில் சஸாக்கிக்கு ஒரு வெண்கலச்சிலை உருவாக்கப்பட்டது. ஹிரோஷிமா நகரில் போர் நினைவாக உருவாக்கப்பட்ட அமைதிப்பூங்காவில் இந்த சிலை 1958ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சிலையின் கையில் ஒரு கொக்கு. பீடத்தில் இவ்வாறாக எழுதப்பட்டது. “இது எங்கள் அழுகை. இது எங்கள் பிரார்த்தனை. உலகம் அமைதியாக இருக்கட்டும்”
 இன்று வருடா வருடம் ஆயிரக்கணக்கானோர் ஹிரோஷிமா நகருக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள். போர் நினைவு அமைதிப்பூங்காவைப் பார்க்கிறார்கள். சஸாக்கியின் சிலையைப் பார்க்க வரும் குழந்தைகள் தவறாமல் தங்கள் கையால் பேப்பரில் உருவாக்கப்பட்ட கொக்கு பொம்மையோடு வரத்தவறுவதே இல்லை.

பிற்பாடு ஜப்பான் மீது குண்டு போட்ட அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஓர் அமைதிப்பூங்கா உருவாக்கப்பட்டது. அந்தப் பூங்காவிலும் சஸாக்கியின் முழு உருவச்சிலை 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்தச் சிலை சில விஷமிகளால் 2003ஆம் ஆண்டு சேதம் அடைந்தது. பின்னர் சஸாக்கி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று அதே சிலையை சியாட்டில் நகரின் முக்கியமான இடமான க்ரீன்லேக் பூங்காவில் மீண்டும் நிறுவினார்கள்.

இன்று ஜப்பானில் சஸாக்கியின் கதை ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக சொல்லப்படுகிறது. ஜப்பானியப் பெண்களுக்கு சஸாக்கி ஒரு கதாநாயகி. ஹிரோஷிமாவில் குண்டுவீசப்பட்ட ஆகஸ்ட் 6, தேசிய அமைதிநாளாக அங்கே கொண்டாடப்படுகிறது. அன்று சஸாக்கிக்கு அஞ்சலி செலுத்த ஜப்பானியர்கள் தவறுவதேயில்லை.
கடந்த ஆகஸ்ட் 6 அன்று, க்ளிஃப்டன் ட்ரூமேன் டேனியல் என்பவர், சஸாக்கியின் அண்ணன் மஸாஹிரோவை சந்தித்தார். ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு நாசத்தில் பிழைத்து உயிர்வாழ்பவர்களுக்கு தன்னுடைய மரியாதைகளை தெரிவித்தார். ஜப்பான் முழுக்க இது பெரிய சம்பவமாக, தங்களது அமைதி கோரிக்கையை கடவுள் ஆசிர்வதித்ததாக பார்க்கப்படுகிறது. விஷயம் என்னவென்றால் க்ளிஃப்டனின் தாத்தா பெயர் ஹாரி ட்ரூமேன். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது இவர்தான் அமெரிக்க அதிபராக இருந்தார்.

(நன்றி : புதிய தலைமுறை)