15 செப்டம்பர், 2012

மின்கம்பி வென்றான்


மடிப்பாக்கத்தில் மொத்தமாக முன்னூறு வீடுகள் இருந்தபோது அவர் ஒரு கிரவுண்டு நிலத்தை சல்லிசு விலைக்கு ‘இன்வெஸ்ட்மெண்ட்’ ஆக வாங்கிப் போட்டார். சொந்த ஊர் விழுப்புரத்துக்கு பக்கத்தில். அந்த காலத்தில் எப்படியோ அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். பல ஊர்களுக்கு மாற்றலாகி கடைசியாக சென்னைக்கு வந்தபோதுதான் மடிப்பாக்கத்தில் இடம் வாங்கினார்.

குரோம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். எலெக்ட்ரிக் ட்ரெயின் பயணத்தில் “உங்க ஊர்லே இடம் வாங்கிப் போட்டிருக்கேங்க...” என்கிற அறிமுகத்துடன் அப்பாவுக்கு நண்பர் ஆனவர். ஆறு மாதத்துக்கு ஒருமுறை வந்து இடத்தைப் பார்த்துச் செல்வார். அப்போது எங்கள் வீட்டுக்கும் வந்துவிட்டுப் போவார்.


ஒருமுறை வந்தபோது, “எதுக்கு வாடகையை கொட்டிக் கொடுத்து கஷ்டப் படுறீங்க... இடம்தான் இருக்கே. வீடு கட்டி இங்கேயே குடிவந்துடலாமே?” என்று அப்பா கேட்டார்.

“இந்த ஊர்லே மனுஷன் குடியிருக்க முடியுமா? மழைக்காலம் ஆச்சின்னா ஊரே ஏரி மாதிரி ஆயிடுது. அவசர ஆத்திரத்துக்கு பஸ் கிடைக்காது. ஒத்தையடிப் பாதையை ரோடுன்னு சொல்லிக்கிட்டு நீங்களும் இருக்கீங்க பாருங்க...” என்று கொஞ்சம் நக்கலாய் பதில் சொன்னார்.


அப்பாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவரது தாய்வழி குடும்பம் பரம்பரை, பரம்பரையாய் வசிக்கும் ஊர். யாரோ ஒரு வெளியூர்க்காரர் கொஞ்சம் எகத்தாளமாய் பேசியதும் அவரது முகம் சுண்டிவிட்டது. ஆனால் மடிப்பாக்கம் அப்போது அப்படிதான் இருந்தது. ரோடு இல்லை, பஸ் இல்லை என்பதால் யாரும் ஊர்க்காரனுக்கு பொண்ணுதர கூட அஞ்சிக் கொண்டிருந்தார்கள்.


ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென்று ஏதோ அதிசயம் நிகழ்ந்து மடிப்பாக்கமும் ‘சிட்டி’ ஆகிவிட்டது. ஏகப்பட்ட அரசு ஊழியர்கள் வீடு கட்டி குடியேறத் தொடங்கினார்கள். இடையில் ஏரிக்கரை ஐயப்பனும் ஃபேமஸ் ஆகிவிட்டதால், கோயிலை சுற்றி ஏராளமான குடியிருப்புகள். “மடிப்பாக்கத்துலே பதினைஞ்சு அடியிலே தண்ணீ. குடிச்சா இளநீர் மாதிரி இருக்கும் தெரியுமா?” என்று சென்னை நகரவாசிகள் ஆச்சரியத்தோடு பேசிக்கொள்வார்கள். ரியல் எஸ்டேட் கொழிக்கத் தொடங்கியது. இன்று மடிப்பாக்கத்தில் யாராவது இடம் வாங்கினால் அவர் பெரிய கோடீஸ்வரராக இருக்கவேண்டும்.

கதைக்கு வருகிறேன். மடிப்பாக்கம் லேசாக வளரத் தொடங்கிய காலத்தில் அப்பாவின் நண்பர் ஒருமுறை வந்தார். “பரவாயில்லையே. வேளச்சேரிக்கு லிங்க் ரோடு பக்காவா போட்டிருக்கான் போல. ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா சைதாப்பேட்டையிலேருந்து பஸ் கூட வருதுப்பா” என்று பெருந்தன்மையோடு எங்கள் ஊரின் வளர்ச்சியை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

அடுத்தமுறை வந்தபோது “வீடு கட்டலாம்னு இருக்கேம்பா. வாடகை வீடு ரொம்ப தொந்தரவு. வருஷாவருஷம் வாடகை ஏத்திக்கிட்டே போறானுங்க. அதுவுமில்லாமே மூணு, நாலு வருஷத்துக்கு ஒருக்கா மாத்திக்கிட்டே இருக்கவேண்டியிருக்கு. கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு. வைஃப் ஆபிஸ்லே லோன் போட்டிருக்கா. பத்தலைன்னா தெரிஞ்சவங்க கிட்டே கடனோ, உடனோ வாங்கி சமாளிச்சிக்கலாம்னு இருக்கேன்” என்றார்.

நல்லநாள் பார்த்து ஒருநாள் பூமிபூஜை போட்டார். இவர் பூமி பூஜை போட்ட அதே நாளன்று, இவரது இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் மின்வாரிய ஆட்கள் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிகச்சரியாக இவரது வீடு கட்டி முடிக்கப்பட்ட அன்று, இவரது வீட்டுக்கு மேலே செல்லுமாறு உயத்தில் மின்கம்பிகள் அமைக்கப்பட்டன. நொந்துப்போனார் அவர்.

மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, “அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புராஜக்ட் சார். இங்கே கம்பி வரப்போவுதுன்னு தெரிஞ்சுதான் நிறைய பேர் அந்த ரூட்டுலே இடம் வாங்காம இருந்தாங்க. நீங்க விவரம் தெரியாம வாங்கிப் போட்டுட்டீங்க போல. இது தேவையில்லாத அச்சம். கம்பி அறுந்து உங்க வீட்டு மேலே விழறதுக்கு சான்ஸே இல்லை. அப்படியே விழுந்தாகூட உடனே பவர்கட் ஆயிடும். விபத்துல்லாம் நடக்கவே நடக்காது” என்று உறுதி கொடுத்தார்கள்.

மனக்குறையோடே குடிவந்தார் அவர். மாடியில் போர்ஷன் கட்டி வாடகைக்கு விடும் அவரது ரகசிய திட்டம் தவிடுபொடியானது. தன் வீட்டுக்கும் மேலாக போகும் மின்கம்பிகளை அகற்ற சட்டப்படியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, அத்தனையையும் முயற்சித்தார். யாருக்காவது ‘மால், கீல்’ வெட்டி இப்பிரச்சினையை சரிசெய்ய முடியுமாவென்றும் பார்த்தார். மின்வாரியம் முரண்டு பிடித்தது. அரசு அடம் பிடித்தது. சகல முறைகளிலும் முயற்சித்து கடைசியாக அவருக்கு தோல்வியே மிஞ்சியது.

இடையில் அவரது வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் நிறைய வீடுகள் பெருகத் தொடங்க.. எல்லா வீடுகளுக்குமே அந்த மின்கம்பி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ‘மின்கம்பியால் பாதிக்கப்படுவோர் சங்கம்’ ஒன்றை (அஃபிஷியலாக இப்படி பெயரெல்லாம் வைக்காமல்) தொடங்கி, அதற்கு நம் தலைவரே தலைவரும் ஆனார்.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு அல்லவா? கூட்டமாக சேர்ந்தபிறகு இவர்களது கொடி உயரத் தொடங்கியது. மின்வாரிய தலைமை அலுவலகம், கோட்டை என்று எல்லாக் கதவுகளையும் தட்டி, கடைசியாக ஒரு சுபயோக சுபதினத்தில் வென்றார்கள். இவர்களது வீடுகளுக்கு மேலாக சென்ற மின்கம்பி ‘ரூட்’ மாற்றப்பட்டு சாலைகளுக்கு மேலாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வெற்றிக்காக அவர் கிட்டத்தட்ட பத்து, பண்ணிரெண்டு ஆண்டுகாலத்தை செலவழித்தார். இந்த வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்தையாவது இந்த மின்கம்பி பிரச்சினைக்காக செலவிட்டார். இப்போது அப்பகுதியில் எல்லாருமே மாடி மேல் மாடி கட்டி சந்தோஷமாக வாழ்கிறார்கள். தங்கள் நியாயமான உரிமைகளுக்காக அரசுக்கு எதிரான சிறு அளவிலான சிவிலியன் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பதற்கு இவர்களது வெற்றி நல்லதொரு உதாரணம்..

கடந்த வாரம் மின்கம்பி வென்றானை ஒரு டீக்கடையில் சந்தித்தேன். அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமாக இருக்கிறார். தினத்தந்தியை மேலோட்டமாக புரட்டிக்கொண்டே, பக்கத்திலிருந்தவரிடம் ஆவேசமாக அரசியல் பேசிக் கொண்டிருந்தார். “கவருமெண்டுதான் கூடங்குளம் இம்புட்டு பாதுகாப்புன்னு எடுத்து சொல்லியிருக்கே? அப்துல்கலாமே சொல்லியிருக்காரு. வேற யாரு சொல்லணும். அணுவுலை வந்தா என்னய்யா... ஊர்லே இருக்குறவனெல்லாம் செத்தாப் போயிடுவான். இந்த உதயகுமாரையும், ஊர்ஜனங்களையும் உள்ளே வெச்சி நல்லா நொங்கெடுக்கணும்”

23 கருத்துகள்:

  1. கடைசிப் பேராவில செம பஞ்ச்! அணு உலை ஆதரவாளர்களின் முகமூடியக் கிழிச்சு பலே நெத்தியடி...

    பதிலளிநீக்கு
  2. சிந்திப்பவன்3:00 PM, செப்டம்பர் 15, 2012

    Brilliant, Yuva!
    Simply Brilliant!!

    25%கல்கி,+
    25%ரா.கி.ர.,+
    25%சுஜாதா,+
    25%பாலகுமாரன்
    =
    யுவகிருஷ்ணா

    பதிலளிநீக்கு
  3. லக்கி

    உங்க டிரேட் மார்க் கலக்கல். அசத்தல்

    பதிலளிநீக்கு
  4. காய்ச்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான்
    என்கிற பழ்மொழி மிகச் சரியானதுதான்
    எனப்தை மிகச் சரியாகச் சொல்லிப்போகும்
    பதிவு மிக மிக அருமை
    சொல்லிச் சென்ற விதமும் இறுதியாக
    மிக லேசாக சொல்வதுபோல் அனைவரின்
    மன் இயல்பை அழுத்தமாய்
    சொல்லிப்போன விதம் மனம் கவர்ந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பூர்ணம் அவர்களே
    லக்கியின் உள்குத்து உண்மையாகவே உங்களுக்கு விளங்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  6. @poornam - நெசமாவே புரியலியா ராசா...??

    பதிலளிநீக்கு
  7. செம caption ..கடைசி பாரா நெஜமா ன்னு தெரியல..ஆனா ஒரு அருமையான சிறுகதைக்கு உண்டான விஷயம்...

    பதிலளிநீக்கு
  8. Idhu kapanai kalandhaunmayaillamuttrum unmaya? Any how Nice post

    பதிலளிநீக்கு
  9. @ Velu:
    தன் வீட்டு மேல மின் கம்பி போகறதைக் கூட தாங்க முடியாதவர் அணு உலைய ஆதரிக்கிறார். அணு உலைய ஆதரிக்கிற எல்லாருமே தனக்கு ஆபத்து இல்லைன்னு தான் ஆதரிக்கிறாங்க. இதானே லக்கி சொல்வதின் உள்குத்து? (இது தவிர ஏதாவது இருந்தா சொல்லுங்க) எமது கமென்டில் என்ன குற்றம் கண்டீர், சொல்லிலா, பொருளிலா?

    பதிலளிநீக்கு
  10. தனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் !!

    அவ்வப்பொழுது உங்கள் ஊரைப் பற்றிய பதிவுகளை போட்டு விடுகிறீர்கள்!!

    நல்லா இருக்கு !!

    பதிலளிநீக்கு
  11. வேலு மற்றும் அகல்விளக்கு!

    பூர்ணம் சொல்வது லக்கியின் உள்குத்தைப் பற்றிய தெளிவான கருத்து. உங்கள் இருவருக்கு மட்டுமே வேறு உள்குத்து கிடைத்திருப்பது போல் தெரிகிறது! கொஞ்சம் அதை பகிரங்கப் படுத்தவும்! எங்களுக்கும் புரியும் சாமி!

    நீங்கள் இருவரும் அணு உலையை ஆதரிக்கும் திருவாளர்கள் என்றால் உள்குத்து பலமாகத்தான் விழுந்திருக்கும் என நினைக்கிறேன்!

    -பாலா.

    பதிலளிநீக்கு
  12. சென்னை பெரிய சிட்டி என்பதால் அங்குள்ளவர்கள் மின் கம்பிக்கு எதிராக போராடி இருக்கிறார்கள், எங்கள் ஊரில் நாங்கள் கேபிள் டிவி கம்பிகளுக்கு எதிராக எல்லாம் போராடி இருக்கிறோம்

    பதிலளிநீக்கு

  13. @ Poornam

    கடைசி பார யுவாவின் கருத்து என அவரை பாராட்டி உள்ளீர்கள்

    ஆனால் அது கதையில் வரும் மின்கம்பி வென்றான் -ன் கருத்து

    உண்மையில் யுவாவின் கருத்தை அறிய விரும்பினால் இதை படிக்கவும்

    http://www.luckylookonline.com/2012/09/blog-post_10.html

    என்னுடைய பார்வையில் இந்த கதை, ரமணி சொன்னது போல்
    காய்ச்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான்


    என்ற கருத்தை வைத்தே யுவா எழுதியுள்ளார்

    இனி forward டு யுவா

    பதிலளிநீக்கு
  14. அய்யா வேலு....இன்னும் எத்தனை பேர் இப்படிக் கிளம்பியிருக்கிறீர்கள்?

    கண்ணிருந்தும் குருடராயீரே! மின்கம்பி வென்றானின் கருத்தானது எவ்வளவு அபத்தமானது மற்றும் சுயநலநோக்கமுடையது என்பதுதான் இந்தப் பதிவின் நோக்கமே! அதையேதான் பூர்ணம் தெளிவாகக் கூறினார்! அதில் எங்கிருந்து குற்றம் கண்டீர்? நீர் உண்மையில் அணுவுலை ஆதரிப்பவர் தானே? அதனால் தான் இங்கு வந்து குட்டையை குழப்புகிறீர்.

    லக்கி...உடனடியாக இந்த வம்பு பிடித்தவர்களுக்கு சரியான பதி கொடுக்கவும்!

    -பாலா.

    பதிலளிநீக்கு
  15. Charu style short story. Awesome!!!

    Raj, Hyderabad.

    பதிலளிநீக்கு
  16. @ Velu: நீங்க தந்த லிங்கைப் படித்தேன். ஏற்கெனவே நான் படித்த போஸ்ட் தான். அதிலயும் அணு உலைக்கு ஆதரவாக யுவா எதுவும் சொல்லவில்லையே? போராடுபவர்களுக்கு ஆதரவா தானே எழுதியிருக்கிறார். இதில் உள்ள உள், வெளி குத்துகளைத் தெளிவாக எடுத்துரைக்கவும்......

    பதிலளிநீக்கு
  17. வேலு குடுத்த லிங்கின் கடைசி பாரா இது, //போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது எத்தனையோ கொச்சைப் பிரச்சாரங்கள் நடந்தது. அரசுடன், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதற்கு துணைபோனார்கள். ஆனால் முழுக்க முழுக்க மக்களை மட்டுமே நம்பி, இன்று நாட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் கூடங்குளம் போராளிகள். அணு உலையை மூடவேண்டும் என்கிற அவர்களது நோக்கம் வெல்லாமல் போகலாம். ஆனால் தமிழனுக்கு போர்க்குணம் இன்னமும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்த வகையில் மகத்தான வெற்றியை கண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இன்னுமோர் இடத்தில் அணுவுலை அமைக்க அரசு திட்டமிட்டால், ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கூடங்குளம் மக்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கூடங்குளம் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.// இதில் எங்கே அணு உலையை ஆதரித்தார் லக்கி என்பதை யாராவது விளக்கவும்.

    //உண்மையில் யுவாவின் கருத்தை அறிய விரும்பினால் இதை படிக்கவும்

    http://www.luckylookonline.com/2012/09/blog-post_10.html

    என்னுடைய பார்வையில் இந்த கதை, ரமணி சொன்னது போல்
    காய்ச்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான்


    என்ற கருத்தை வைத்தே யுவா எழுதியுள்ளார்

    இனி forward டு யுவா //அனைதுக்கும் லக்கிதான் விளக்க வேண்டும் என்பது கிடையாது.

    பதிலளிநீக்கு