24 செப்டம்பர், 2012

திலகன்


“நீ மறுபடியும் வரணும் பன்னீர்செல்வம். பழைய ஐ.பி.எஸ். பன்னீர் செல்வமா வரணும்” இருபது ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வசனம். மிக சாதாரணமான இந்த வசனம் இவ்வளவு பிரபலமடைய காரணம் திலகன். ஏற்ற இறக்கத்தோடு, முகத்தில் ஒரு அனாயசமான புன்முறுவலோடு அவர் சொன்னபோது, தியேட்டரில் விஜயகாந்தின் ரசிகர்கள் பரவசப்பட்டுப்போய் விசிலடிப்பார்கள்.

எண்பதுகளின் இறுதியில் சினிமாவில் வில்லன்கள் புதுப்பரிமாணம் பெற்றார்கள். அதுவரை வில்லன் என்றால் கற்பழிக்க வேண்டும், ஹீரோவோடு மல்லுக்கட்டி சண்டை போடவேண்டும், எந்த காரியத்தை எடுத்தாலும் வில்லத்தனமாக நரி மாதிரி செயல்படவேண்டும்  என்றெல்லாம் விதிகள் இருந்தது. மணிரத்னம் மாதிரி இயக்குனர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் ஜெண்டில்மேன் வில்லன்களை உருவாக்கத் தொடங்கினார்கள். ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதிக்கு நடிப்பே வராது. இருந்தாலும் அந்த நடிப்பே வராத தன்மைதான் அக்னிநட்சத்திரத்துக்கு தேவைப்பட்டது.

விஜயகாந்தின் ‘சத்ரியன்’ இன்றுவரை நினைவுகூறப்படுவதற்கு கேப்டனுடைய போலிஸ் உடுப்பு கம்பீரத்தோடு, அருமை நாயகமாக நடித்த திலகனின் அலட்டிக்கொள்ளாத நடிப்பும் காரணமாக இருக்கிறது. அவரது குரல் தனித்துவமானது. ஸ்ட்ராங்கான மலையாளவாடை கொண்டது. ஆனால் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு நிறுத்தி, நிதானமாக உச்சரிப்பார். இருபது ஆண்டு காலத்தில் அவரது தோற்றத்தில் எந்த வித்தியாசமும் ஏற்பட்டதாகவே தெரியவில்லை. 91ல் எப்படி இருந்தாரோ அப்படியே 2011லும் இருந்தார்.

திலகனை தமிழில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. வசனத்திலும், தோற்றத்திலும் அப்பட்டமாக அடித்த மலையாளவாடை இதற்கு காரணமாக இருக்கலாம். இவருக்குப் பிறகு தமிழுக்கு அறிமுகமான ராஜன் பி.தேவ் (சூரியன் படத்து கோனாரை மறக்க முடியுமா?) போன்றவர்கள் பெரிய ரவுண்டு அடித்தார்கள். சத்ரியனை விட மேட்டுக்குடியில் திலகனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிஜவாழ்க்கையில் நாம் பார்க்கும் சாமியாடி எப்படி இருப்பாரோ, அப்படியே திரையில் நடித்துக் காட்டியிருந்தார். கரம் மசாலாவான மேட்டுக்குடிக்கு அவ்வளவு சிரத்தை தேவையில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்திருந்தார் திலகன். ‘நீ வேணுண்டா செல்லம்’ மாதிரி மொக்கைப் படங்களில் கூட தனித்து தெரிந்தது திலகனின் நடிப்பு.


தமிழில் அஜீத் நடித்த ‘க்ரீடம்’ பார்த்திருப்பீர்கள். அஜீத்தின் அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருப்பார். ஒரிஜினல் மலையாள க்ரீடத்தில் மோகன்லால் ஹீரோ. ராஜ்கிரணின் வேடத்தில் திலகன். திலகன் நடித்து நான் பார்த்த திரைப்படங்களில் ‘க்ரீடம்’ ஒரு மைல்கல். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்கக்கூடாதா என்று ஒவ்வொரு மகனையும் ஏங்கவைக்கும் நடிப்பு.

தொடர்ச்சியாக இவர் நடித்த படங்களை பார்த்தவர்கள் இவரது நடிப்பினை சுலபமாக யூகிக்க முடியும். காட்சி தொடங்கும்போது லேசான கவலை அல்லது மகிழ்ச்சியை முகத்தில் தேக்கி ஆரம்பிப்பார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டே செல்வார். காட்சியின் நடுவில் உச்சக்கட்டத்தை அடையும் உணர்ச்சி அதே பாணியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, முடியும்போது தொடக்கத்தில் இருந்த பாவனையில் அவரது முகம் இருக்கும். செவ்வாய்க்கிழமை டி.டி. நாடக நடிகர்களின் நடிப்புப் பாணிதான் இது. நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலோனரது நடிப்பு டெக்னிக். வசன உச்சரிப்பும் கூட இதே பாணியில்தான் மெதுவாக தொடங்கி, உச்சத்துக்குப் போய் மீண்டும் நிதானம் பெறும்.

மம்முட்டி, மோகன்லாலில் தொடங்கி நேற்றைய பிருத்விராஜ் வரை அத்தனை ஹீரோக்களுக்கும் அப்பாவாக நடித்து கேரளாவில் பெரும் புகழ் பெற்றவர். இயல்பிலேயே கம்யூனிஸ சிந்தனைகளில் ஊறிப்போனவர் என்பதால், அவ்வப்போது மலையாளத் திரையுலகின் போக்கை அப்பட்டமாக கண்டித்து தன்னுடைய இடத்தை தானே அடுத்தடுத்து சிக்கலாக்கிக் கொண்டவர். ஒரு கட்டத்தில் மலையாளத் திரையுலகமே இவருக்கு எதிராக நின்றபோதும் கூட, ரசிகர்கள் இவரை கைவிட்டதே இல்லை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது திலகனின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகள் வரும். அவ்வளவுதான், முடிந்தது அவரது மூச்சு என்றெல்லாம் கேள்விப்படும்போது, மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்துவந்து மேக்கப்போடு படப்பிடிப்புத் தளத்தில் நிற்பார். இதய நோயோடு மிகக்கடுமையாக அவர் போராடிக்கொண்டிருந்த இந்த காலக்கட்டதிலும் கூட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, நடிகனுக்குரிய கடமையை நிறைவு செய்தார்.

தன்னுடைய இணையற்ற நடிப்பாற்றலால் மலையாளப் படங்களை செதுக்கிக் கொண்டேயிருந்த பெருந்தச்சனின் காலம் இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. ஈடு செய்யமுடியாத இழப்பு என்கிற சொல்லுக்கு நியாயம் கற்பிக்கிறது திலகனின் இழப்பும்.

9 கருத்துகள்:

  1. Good tribute to Thilagan

    -Venu

    பதிலளிநீக்கு
  2. பொன்.முத்துக்குமார்3:19 AM, செப்டம்பர் 25, 2012

    திலகன் என்ற பதிவின் பெயரை பார்த்ததுமே அதே வசனம்தான் என் நினைவிலும்.

    நல்ல கலைஞனுக்கு அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  3. அலிபாபா படம் பற்றி சொல்லி இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  4. <<<<<>>>>>


    யெஸ்!! உங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே கிரீடம் படம் பற்றி யுவா சொல்வாரா என்று எதிர்பார்த்துகொண்டே தான் வாசித்தேன்.

    சரியாக சொல்லிவிட்டீர்கள்!! நீங்கள் என் இணை மனம் அல்லவா? ;-)

    ஆம் எனது அப்பா திலகனின் சாயலில் தான் இருப்பார்! ஸ்படிகம் பட திலகனைப் போலவே தோற்றத்திலும் அன்பிலும் .

    நான் கொடுத்து வைத்தவன் தான் !!

    ஆகையால் திலகனின் மறைவு எனக்கு அந்தரங்கமான பாதிப்பாகவே தெரிகிறது !!

    பதிலளிநீக்கு
  5. thank you to share this article. yuva

    yes tamil cinema not utilize this great actor any way his character still live long time. we salute such great actor

    பதிலளிநீக்கு
  6. One of his best scenes from 4:25

    https://www.youtube.com/watch?v=KzEvg0MjAQQ

    பதிலளிநீக்கு
  7. indian cinema has lost a great actor.may his soul rest in peace....

    பதிலளிநீக்கு