நீங்கள் சென்னை வாசியாக இருந்து அடிக்கடி இலக்கியக் கூட்டங்களிலோ அல்லது
ஈழத்தமிழர் தொடர்பான நிகழ்வுகளிலோ கலந்துக் கொள்பவராக இருந்தால் வேலு சாரை
பார்த்திருப்பீர்கள். இல்லையேல் ஏதேனும் திரைப்பட விழாக்களிலும் அவரை கண்டிருக்க
முடியும். ஒரு சமூக ஆர்வலராக வேலு சாரை அறிவதற்கு முன்பாகவே அவர் எனக்கு வேறுவிதமாக
அறிமுகம் ஆகியிருந்தார்.
அப்போது விளம்பர ஏஜென்ஸி ஒன்றுக்கு பணிக்காக விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத்
தேர்வுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது. ஏஜென்ஸிகளில் நேர்முகத்தேர்வு என்றாலே
கொஞ்சம் அலர்ஜி. அலட்டிக்கொள்ளும் ஆங்கிலத்தில் அச்சுறுத்துவார்கள். என்னுடைய
ஆங்கிலமோ இலக்கணச் சுத்தமான திக்குவாய் ஆங்கிலம். நடுங்கிக் கொண்டே போனபோது,
“வாங்க தம்பி. நீங்கதான் கிருஷ்ணாவா?” என்று தமிழில் ஒருவர் பேச ஆனந்த அதிர்ச்சி
அடைந்தேன். அவர்தான் வேலு சார். என்னுடைய ஆங்கில அச்சம் அவரது தோற்றத்தை கண்டபிறகே
அகன்றது. அப்போது அந்த ஏஜென்ஸியில் ப்ரீலான்ஸ் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிக்
கொண்டிருந்தார். அவரது மேற்பார்வையில் சீனியர் விஷுவலைஸராக பணிக்கு சேர்ந்தேன்.
அவருடைய முழுப்பெயர் ஆறுமுகவேலு. பெயருக்கு ஏற்றதுமாதிரி கம்பீரமான தோற்றம். ‘குரு’
கமல் மாதிரி அல்லது பழைய சீனத்துப் பாணியில் நீளமான தொங்குமீசை. நறுக்கென்ற உடல்வாகுக்கு பொருத்தமான உயரம். ஃபார்மலும் இல்லாமல் கேஸுவலும் இல்லாமல் ஒருமாதிரி புதிய
பாணி உடையலங்காரம். அவரது பேச்சு வழக்கை வைத்து மதுரையா, திருநெல்வேலியா என்று
முடிவு செய்யமுடியாது. கிட்டத்தட்ட ஈழத்தமிழ்.
தினமும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோதான் வேலு சார் ஏஜென்ஸிக்கு வருவார்.
நானும், சக விஷூவலைஸர் ஒருவரும் செய்த வேலைகளை சரி பார்ப்பார். லேசான திருத்தங்களை
அவரே மேற்கொள்வார். பெரும்பாலும் வண்ணங்களை கூட்டுவதோ அல்லது குறைப்பதாகவோ
இருக்கும். அழகுணர்ச்சி மிகுந்தவர். எந்த ஒரு விளம்பரமும் அச்சுக்கு போகும் வரை
செதுக்கிக் கொண்டே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவார். விளம்பரத்தின் ஒவ்வொரு
மில்லி மீட்டரையும் அழகியல் தன்மையோடு உருவாக்க மெனக்கெடுவார். ஃபைன் ஆர்ட்ஸ் பட்டதாரி.
விளம்பர ஏஜென்ஸிகளில் அவ்வப்போது ராக்கூத்து நடக்கும். குறிப்பாக விழாக்காலங்களில்
முழுப்பக்க, அரைப்பக்க விளம்பரங்களாக வந்து குவியும். நான்கைந்து டிசைன்கள்
செய்து, அவற்றில் ஒன்றிரண்டு கிளையண்டுகளுக்கு பிடித்து, அவர்கள் விரும்பும்
மாற்றங்களை செய்து, கடைசியாக பிரெஸ்ஸுக்கு அனுப்புவதற்குள் தாவூ தீர்ந்துவிடும்.
அதுமாதிரி நேரங்களில் ராத்திரியில் வந்து வேலு சாரும் வேலை பார்ப்பதுண்டு.
இளையராஜா ரசிகர். எண்பதுகளின் தொடக்கத்து ராஜாவின் பாடல் எதையாவது முணுமுணுத்துக்
கொண்டே வேலை பார்ப்பார்.
ஒருமுறை ஏதோ ஒரு விளம்பர வாசகத்தைப் பார்த்து “அட்டகாசமா இருக்குய்யா.. யார்
எழுதினது?” என்று கேட்டார். “நான்தான் எழுதினேன்” என்றதுமே, “அட.. தமிழ் தெரிஞ்ச
ஒருத்தன் இங்கிருக்கறதே எனக்குத் தெரியாதே?” என்றார். அதன்பிறகு அரசியல்,
இலக்கியம் என்று கொஞ்சம் கொஞ்சமாக உரையாட ஆரம்பித்தார். அவருடைய அரசியல் பார்வை
என்னவென்று இன்னும் கொஞ்சம் குழப்பம்தான். தமிழ் தேசியமாக இருக்கக்கூடும். ஆனால்
திராவிட அரசியல்/அரசியல்வாதிகள் மீது சில நியாயமான, தீவிரமான விமர்சனங்கள்
அவருக்குண்டு.
தீவிரமான படிப்பாளி. ஜெயமோகன் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது,
“கலைஞனையும், அவனது படைப்புகளையும் ஒண்ணா போட்டுக் குழப்பிக்கக்கூடாது” என்றார்.
பின்னர் ‘ஜெயமோகனின் குறுநாவல்கள்’ புத்தகத்தை கொடுத்து, “இவரை பிடிக்குதோ இல்லையோ,
ஆனா தொடர்ந்து படிச்சாகணும்” என்றார் (அந்த புத்தகம் இன்னும் என்னிடம்தான்
இருக்கிறது, திருப்பிக் கொடுப்பதற்குள் வேலு சார் வேலையை விட்டுவிட்டார்). ஜெயமோகனை தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான்.
ஒருமுறை நடிகர்களை, தலைவர்களை மாதிரி மிமிக்ரி செய்து நடித்துக் காட்டினார்.
அப்போதுதான் தெரியும். வேலு சார் ஒரு நடிகரும் கூட என்று. நவீன நாடகங்களில் நடித்துக்
கொண்டிருந்தார். ‘நிழல்’ என்று ஒரு குறும்படம் நடித்திருக்கிறேன் என்று சிடி ஒன்றை
தந்தார். நிழலில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இருபது நிமிட குட்டி
கமர்சியல் சினிமா. இரண்டே இரண்டு கேரக்டர்கள்தான். அந்தப் படத்தை பார்த்தபிறகு, சினிமாதான் அவரது லட்சியமென்று புரிந்தது. ஆனால் நடிப்பா, இயக்கமா என்று
தெரியவில்லை. “சினிமாதாம்பா அல்டிமேட் எய்ம்” என்றார் ஒருமுறை.
அந்த ஏஜென்ஸியில் இருந்து வேலு சார் நின்றபிறகு எப்போதாவது வருவார்.
அயல்நாட்டில் இருந்து ஆர்டர் பெற்று சில விளம்பரப் படங்களை இயக்கியிருந்தார். வேலு
சாரின் இயல்பான அழகியல் வேட்கை அந்த விளம்பரங்களை பிரமாதப்படுத்தியதில் ஆச்சரியம்
ஏதுமில்லை. மிக விரைவில் அவர் இயக்கத்தில் ஒரு சினிமா வருமென்று
எதிர்ப்பார்த்தேன்.
பின்னர் நானும் அந்த ஏஜென்ஸியில் இருந்து வெளியேறி, வேறு நிறுவனத்தில்
பணியாற்றத் தொடங்கினேன். நான் பணிபுரிந்தது கார்ப்பரேட் சினிமா நிறுவனம் என்பதால்,
அவ்வப்போது ப்ரிவ்யூ காட்சிகளுக்கு செல்லவேண்டி இருந்தது. அம்மாதிரி செல்லும்போது,
சில நேரங்களில் வேலு சாரை பார்க்க முடியும். அவரோடு பேசுகையில் சூப்பர் குட்
பிலிம்ஸ் நிறுவனத்தோடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையவர் என்று தெரிந்தது.
எப்போதாவது எங்காவது திடீரென்று சந்திப்போம். அழகான புன்னகையோடு
எதிர்கொள்வார். “பிளாக் எழுதறே போல. நல்லா இருக்கு. நிறைய எழுது” என்பார்.
போன வருடம் ‘ரெளத்திரம்’ ரிலீஸ் ஆனபோது தியேட்டருக்குப் போய்ப் பார்த்தேன்.
ஜீவாவிடம் அடிவாங்கும் ஒரு கராத்தே கோமாளி கேரக்டரில் வேலு சார். கடுப்பாக
இருந்தது. எவ்வளவு நல்ல நடிகரை, எவ்வளவு மோசமான பாத்திரத்துக்கு பயன்படுத்தி
இருக்கிறார்கள் என்று கோபப்பட்டேன். ஆனாலும் சினிமா வாய்ப்பு என்பது அவ்வளவு
சுலபமாக கிடைக்காது என்கிற யதார்த்தம் உறைத்தது. கிடைப்பதை பயன்படுத்தி, ஏதேனும்
ஒரு கட்டத்தில் ‘க்ளிக்’ ஆவதுதான் சினிமா.
போன மாதம் அட்டக்கத்தி பார்த்தேன். படம் வெளிவந்து இரண்டு நாட்கள் கழித்து
வேலு சார் கைப்பேசியில் அழைத்தார்.
“அட்டக்கத்தி பாத்தியா?”
“பார்த்தேன் சார்”
“ஒண்ணுமே சொல்லலை”
“என்ன சார் சொல்லணும்”
“யோவ். நான் நடிச்சிருக்கேன்யா”
நம்பவே முடியவில்லை. படத்தில் வேலு சாரை பார்த்த ஞாபகமே இல்லை. ஏதேனும் துண்டு துக்கடா காட்சியில் நடித்திருப்பாரோ என்று குழப்பம்.
“எந்த கேரக்டர் சார்?”
“கிழிஞ்சது. என்னத்தைப் படம் பார்த்தியோ? ஹீரோவுக்கு அப்பாவே நான்தான்யா”
“அட்டக்கத்தி பாத்தியா?”
“பார்த்தேன் சார்”
“ஒண்ணுமே சொல்லலை”
“என்ன சார் சொல்லணும்”
“யோவ். நான் நடிச்சிருக்கேன்யா”
நம்பவே முடியவில்லை. படத்தில் வேலு சாரை பார்த்த ஞாபகமே இல்லை. ஏதேனும் துண்டு துக்கடா காட்சியில் நடித்திருப்பாரோ என்று குழப்பம்.
“எந்த கேரக்டர் சார்?”
“கிழிஞ்சது. என்னத்தைப் படம் பார்த்தியோ? ஹீரோவுக்கு அப்பாவே நான்தான்யா”
திரும்பவும் நம்பமுடியவில்லை. நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் நடித்திருக்கிறார்,
ஆனால் அது அவர்தான் என்று தெரியவேயில்லை. இதுதான் நடிப்பு. ஒரு கதாபாத்திரத்தை
திரையில் காணும்போது, தெரிந்தவர்களால் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியாதபோதுதான்
நடிப்பு வெற்றி காண்கிறது. ‘அட்டக்கத்தி’ படம் பார்த்தவர்கள் அந்த குடிகார அப்பாவை
மறக்கவே முடியாது. ஒருவழியாக வேலு சார் வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்தடுத்து
அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமையலாம். தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான நடிகராக
உருவெடுக்கலாம். ஆனால் வேலு சார் அடையவேண்டிய தூரம் இதுவல்ல என்று நினைக்கிறேன்.
இயல்பிலேயே படைப்புத்திறமையும், அழகியல் தன்மையும் வாய்ந்த அவர் ஒரு இயக்குனராக வெற்றி காண்பதுதான் முக்கியம். மண்வாசனை கொண்ட மனிதர். நிறைய கதைகளை போகிறபோக்கில் சொல்லக்கூடிய நல்ல கதைசொல்லி. தீர்க்கமான வாசிப்பும், பரவலான அனுபவமும் பெற்ற வேலு சாரால் உருப்படியான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். அவரிடம் பணியாற்றியவன் என்கிற முறையில் அவரது வேலை எவ்வளவு முழுமையாக இருக்குமென்று எனக்குத் தெரியும். விரைவில் வாய்ப்பு கிடைத்து வேலு சார் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும். அந்தப் படத்துக்காக முதல் ரசிகனாக காத்திருக்கிறேன்.
அபாரம்.
பதிலளிநீக்குஉருவத்துல நிறைய வித்தியாசம். நானும் இப்பத்தான் கவனிக்கிறேன். இது ரஞ்சித்தோட வெற்றியும் ஒரு காரணமில்லையா?
வேலு சாரின் படத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குi agree 100%. velu in father role was awesome. so was the lady who acted as his wife. all in all a great movie. good blogposting. :)
பதிலளிநீக்குஉங்கள் இடம் இருந்து மற்றும் ஒரு அருமையான பதிவு
பதிலளிநீக்குஅருமை..அவரை அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை என்பது இக்கட்டுரையின் அழகுக்காக சேர்க்கப்பட்டதாக இருக்கலாமோ என ஒரு சம்சயம்.
பதிலளிநீக்குவேலு சாரைப்போல் எனக்கு ஒரு நூறுபேரைத் தெரியும். என்ன செய்வது அரைவேக்காடுகள் அதிகம் ஜெயிக்கிற துறை சினிமா.
பதிலளிநீக்குஊர் பேர் தெரியாத ஒருத்தரைப் பத்தி திடீர்னு எழுதவும் கடைசிவரியில 'அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி'னு முடிப்பீங்கன்னு நினைச்சேன். நல்லவேளை அப்படி எதுவும் ஆகலை. என்ன பண்றது, வாழும்போது ஒருத்தனும் கண்டுக்க மாட்டான், செத்துட்டா பக்கம் பக்கமா கண்ணீர் அஞ்சலியை ஒட்டிடறானுக. இருக்குறப்ப 360 கோணத்துலயும் விமர்சிக்கும் உலகம், இறந்தபின் 360 கோணங்களிலும் பாராட்டுரை வாசிக்கிறதைத்தானே வழக்கமாக்கியிருக்கு. வளரும் கலைஞனை அறிமுகப்படுத்தி வாழ்த்தியமைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குசெரிவான எழுத்து
பதிலளிநீக்குநல்ல பதிவு கிருஷ்ணா சார்..வேலு சாரை நான் கூத்துப்பட்டறை நாடகங்களுக்கான அழைப்பிதழ் வடிவமைக்கும் சந்தர்ப்பங்களில் தான் அறிமுகம். எனக்கு அப்போதிருந்தே அவர் தோற்றத்தின் மீது ஒரு இது.....இப்பொழுது அவர் எனக்கு வேலு அண்ணன். அவரைக் குறித்த உங்களது இந்தப் பதிவு ஒரு நெகிழ்வான அனுபவமாக இருக்கிறது.
பதிலளிநீக்கு