பதலக்கூர் சீனிவாசலு என்றொரு எழுத்தாளர். தொண்ணூறுகளின் மத்தியில் குமுதம்
இதழில் ‘நடிகையின் கதை’ என்றொரு தொடர் எழுதினார். பல்வேறு திரைப்பட நடிகைகளின்
வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை (சில கிசுகிசுக்களையும் இணைத்து) பின்னணியாக வைத்து,
சுவாரஸ்யமான நாவலைப் போல தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார். தமிழ் திரைப்பட உலகமே
கொதித்துப் போனது. பதலக்கூரை சுளுக்கெடுக்க குமுதம் ஆபிஸுக்கு விரைந்து –குறிப்பாக ராதிகா பலத்த
ஆவேசமடைந்தார் என்று கேள்விப்பட்டேன்- பெரிய பஞ்சாயத்தெல்லாம் நடந்து தொடர் பாதியிலேயே
நிறுத்தப்பட்டது. திரைப்படத் துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, அத்தொடரை வாசித்த
வாசகர்கள் பலரும் பதலக்கூரை சரமாரியாக வசைபாடியதை காதால் கேட்டிருக்கிறேன். ஆனாலும்
வசைஞர்கள் ரகசியமாக வாசித்து ரசித்தார்கள் என்றே நம்புகிறேன். அப்போதே மனசுக்குள்
ரகசிய லட்சியம் ஒன்றினை பூண்டேன், என்றாவது ஒருநாள் பெரியவனாகி, பதலக்கூர் மாதிரி
வரவேண்டுமென்று. என் லட்சியத்தை எல்லாம் விடுங்கள். நம் மேட்டருக்கு வருவோம்.
நம் ரகசியங்களை எவனோ ஒரு பத்திரிகையாளன் இல்லாததும், பொல்லாததுமாக எழுதுவதா
என்று அன்று கொதித்தெழுந்த திரையுலகம், இன்று மதுர் பண்டார்க்கரை என்ன செய்யப்
போகிறது என்று தெரியவில்லை. பண்டார்க்கர் குமுதத்தில் நடிகையின் கதையை
வாசித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது இயக்கத்திலும், தயாரிப்பிலும்
வெளிவந்திருக்கும் ‘ஹீரோயின்’, சர்வநிச்சயமாக நமது ‘நடிகையின் கதை’யேதான்.
மதுர் பண்டார்க்கருக்கு இப்போது நாற்பத்தியாறு வயதாகிறது. ஏழாவது படிக்கும்போது,
குடும்பச்சூழல் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டார். ஏதேதோ வேலைகள் செய்து
பிழைப்பை ஓட்டியவர், இறுதியாக ஒரு வீடியோ கேசட் கடையில் பணிபுரிந்தார். அங்கே நிறைய இந்தி மற்றும் அயல்நாட்டுப் படங்களை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது மட்டுமின்றி பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களின் வீடுகளுக்கு கேசட் எடுத்துப்போய் கொடுப்பதின் மூலம் கொஞ்சம் திரையுலக அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். சில இயக்குனர்களின் அசிஸ்டெண்ட் ஆக பணிக்கு சேர்ந்து, பிற்பாடு ராம்கோபால்
வர்மாவிடம் வந்து சேர்ந்தார். ‘ரங்கீலா’ வர்மாவுக்கு மட்டுமின்றி, நிறைய பேருக்கு
வாழ்க்கை கொடுத்தது. அதில் மதுர் பண்டார்க்கரும் ஒருவர்.
தொழில் கற்றுக்கொண்டபிறகு தனிக்கடை போட்டார் பண்டார்க்கர். ஆரம்பத்தில்
காமாசோமோவென்று சில டெலிவிஷன் சீரியல்களை இயக்கியவருக்கு ஒருவழியாக படம் இயக்கும்
வாய்ப்பு வந்தது. ’த்ரிசக்தி’ படுமோசமாக ஊத்திக்கொண்டது. இருப்பினும் அவரது
இரண்டாவது படமான ‘சாந்தினி பார்’, அவருக்கு பாலிவுட்டில் தனித்துவமான ஓர் இடத்தை
பெற்றுக்கொடுத்தது. பண்டார்க்கர் படமென்றால் ‘அவார்டு’ நிச்சயம் என்கிற நம்பிக்கை
இன்று பாலிவுட்டில் உண்டு. சாந்தினி பார், பேஜ் 3, டிராஃபிக் சிக்னல்,
கார்ப்பரேட், ஃபேஷன், ஜெயில் என்று அவர் இயக்கிய படங்கள் அத்தனையுமே
விமர்சகர்களின் சாய்ஸ் ஆகிவிட்டது. பாக்ஸ் ஆபிஸிலும் குறை வைப்பதில்லை என்பதால்,
மும்பையில் கார்ப்பரேட் சினிமா நிறுவனங்களின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார்
பண்டார்க்கர். இன்ஃப்லிம் விளம்பரங்கள் மூலமாக பட்ஜெட்டின் சுமையை வெகுவாக
குறைக்கிறார் என்பது கூடுதல் பலம். எம்.பி.ஏ படித்த மார்க்கெட்டிங் ஜாம்பவான்கள்
கூட திணறும் இந்த பிசினஸில், ஏழாம் வகுப்பை கூட முழுமையாக முடிக்காத பண்டார்க்கர்
சக்கைப்போடு போடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டார்க்கர் படங்களில் சில பொதுத்தன்மைகள் வெளிப்படும். குறிப்பாக பெண் பாத்திரங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை அது பாட்டுக்கும் நகரும். ஓரினச் சேர்க்கை குறித்த காட்சி இலைமறைகாய்மறையாய் காட்டப்படும். அல்பமான சிறிய புகழுக்கோ, செல்வத்துக்கோ ஆசைப்பட்டு தன்னைத்தானே சிக்கல்படுத்திக் கொண்டு (கிட்டத்தட்ட மசோகிஸ்ட்டு போல), வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடத்தத் தெரியாதவர்கள்தான் பண்டார்க்கரின் மையப்பாத்திரங்கள். லேட்டஸ்ட் படமான ‘ஹீரோயின்’னில் இந்த எல்லா பொதுத்தன்மைகளையுமே காணலாம்.
பண்டார்க்கர் படங்களில் சில பொதுத்தன்மைகள் வெளிப்படும். குறிப்பாக பெண் பாத்திரங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை அது பாட்டுக்கும் நகரும். ஓரினச் சேர்க்கை குறித்த காட்சி இலைமறைகாய்மறையாய் காட்டப்படும். அல்பமான சிறிய புகழுக்கோ, செல்வத்துக்கோ ஆசைப்பட்டு தன்னைத்தானே சிக்கல்படுத்திக் கொண்டு (கிட்டத்தட்ட மசோகிஸ்ட்டு போல), வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடத்தத் தெரியாதவர்கள்தான் பண்டார்க்கரின் மையப்பாத்திரங்கள். லேட்டஸ்ட் படமான ‘ஹீரோயின்’னில் இந்த எல்லா பொதுத்தன்மைகளையுமே காணலாம்.
படம் வெளிவருவதற்கு முன்பாக போஸ்டர், ட்ரைலர் ஆகியவற்றை கண்டவர்கள் சமீபத்தில்
வெளிவந்த ‘டர்ட்டி பிக்ஸரின்’ காப்பி என்று வதந்தி பரப்பத் தொடங்கினார்கள். வழக்கமாக
தலைமீது மதுர்பண்டார்க்கரை விமர்சகர்கள் தூக்கிவைத்து ஆடுவார்கள். மாறாக
ஹீரோயினுக்கு கிடைத்திருப்பது மிக்ஸ்ட் ரெஸ்பான்ஸ்தான். அதனால் என்ன? ரசிகர்கள்
அவரை கைவிடவில்லை. இதுவரை இந்தியாவிலேயே ஒரு ஹீரோயின் ஓரியண்டட் படம் இவ்வளவு
பெரிய ஓப்பனிங்கை கண்டதே இல்லை என்கிற சாதனையை ‘ஹீரோயின்’ இன்று நிகழ்த்திக்
காட்டியிருக்கிறது (ஓபனிங் ஓக்கே என்றாலும் ஒட்டுமொத்த வசூலில் ‘டர்ட்டி பிக்சரை’
வீழ்த்திக் காட்டுமா என்பது ஒரு வாரம் போனபிறகே தெரியும்).
மஹி அரோரா என்கிற நட்சத்திர நடிகை. ஏற்கனவே திருமணமான உச்ச நட்சத்திரமான
ஆர்யனை காதலிக்கிறாள். இயல்பிலேயே மஹி கொஞ்சம் ஆத்திரக்காரி. மிக சுலபமாக
உணர்ச்சிவசப்படுபவள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற மனோபாவம். இதனால் ஆர்யனின்
உறவு உடைகிறது. தனது நட்சத்திர அந்தஸ்தை தக்கவைக்க போராடுகிறாள். அடுத்து ஒரு
கிரிக்கெட் வீரரோடு காதல். இந்த காதலைகூட தன்னுடைய அந்தஸ்துக்காகவே பயன்படுத்திக்
கொள்கிறாள். அந்த காதலும் உடைய, மீண்டும் ஆர்யனோடு இணையும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அதே நேரம் தொழிலில் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை மீட்க, மஹி செய்யும் ஒரு
அவசரக்காரியம் அவளது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது. ஒரு நடிகை நட்சத்திரம்
ஆகவேண்டுமா அல்லது நல்ல நடிகை என்று பெயரெடுக்க வேண்டுமா என்கிற சஞ்சலமான
காட்சிகளில், விரல்களில் சிகரெட் புகைவழிய படபடப்பாக கரீனா காட்டியிருக்கும் திறமை
வெகுசிறப்பானது. நட்சத்திரமாக இருக்க வெற்றி போதுமானது. திறமை இரண்டாம் பட்சம்தான்
என்கிற யதார்த்தத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
‘ஹீரோயின்’ சித்தரித்திருப்பது தற்கால இந்திய சினிமாவின் அப்பட்டமான பின்னணி முகத்தை. நடிக நடிகையர், இயக்குனர், தயாரிப்பாளர், சினிமா பத்திரிகையாளர்கள், பிராண்ட் மேனேஜர்கள் என்று சினிமாவில் இயங்குபவர்களின் மனோபாவத்தை candid ஆக படம் பிடித்ததைப் போல காட்சிகள். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், சமகால உதாரணங்களை ரசிகமனம் தேடிக்கொண்டே இருக்கும் வகையில் சுவாரஸ்யமான புதிர் விளையாட்டை விளையாடியிருக்கிறார் மதுர் பண்டார்க்கர்.
சினிமாவுக்குள்ளே இருந்துகொண்டு சினிமாவை பகடி செய்யும் கலாச்சாரம் நமக்கு புதிதல்ல. ஆனால் ‘ஹீரோயின்’ செய்திருப்பது வேறு. அதை படம் பார்த்தால் மட்டுமே நீங்கள் உணரமுடியும்.
பதலக்கூர் சீனிவாசலு - நடிகையின் கதை
பதிலளிநீக்குநான் சிறுவனாக இருந்தபோது தொடர்ந்து வாசித்தேன். இன்றுவரை அந்தப்பெயர் ஞாபகத்தில் அழியாமல் இருக்கிறது! ஸ்ரீனிவாஸ் என்றாலே 'பதலக்கூர் சீனிவாசலு'வா என நினைக்கும் அளவிற்கு! நாங்கள அப்போதெல்லாம், அப்போதைய டிரென்ட்படி அது ரம்பாவின் கதையாக இருக்குமோ என இன்பமாக சந்தேகப்பட்டுக் கொண்டோம்!
லக்கி
பதிலளிநீக்குஅவர் நமக்கு தெரிந்தவர்தானா?
நடிகையின் கதைக்கும் இந்தத் திரைப் படத்துக்கும் ஆதாரமாக வித்தியாசம் இருக்கிறது என்று கருதுகிறேன். கதையை வெளியிடுமுன் அது உண்மைக் கதை என்று விளம்பரம் செய்த குமுதம் அது நிறுத்தப்படும் போது கற்பனை என்று கூறி பல்டி அடித்தது சீப்பான ஸ்டன்ட். மதுர் ஹீரோயின் திரைப் படத்தை உண்மைக் கதை என்று சொல்லி மார்க்கெட்டிங் செய்தாரா? என்பதைத் தெளிவு படுத்தவும்.
பதிலளிநீக்கு//ஆனால் ‘ஹீரோயின்’ செய்திருப்பது வேறு. அதை படம் பார்த்தால் மட்டுமே நீங்கள் உணரமுடியும்.//
பதிலளிநீக்குwell-said! it was an awesome movie! in fact after watching the movie, I feel sympathetic towards the heroines. Bcos it's basically 'the survival of the fittest'
பாஸ் பாஸ் ப்ளீஸ் பாஸ் சீக்கிரம் உங்க லட்ச்சியத்த நிறைவேத்துங்க பாஸ் . உங்கள் வாசகனின் அன்பான வேண்டுகோள் பாஸ் இது. ப்ளீஸ்.....
பதிலளிநீக்கு***********
''படமும் முழுகாமல் ஆகிவிட்டது '' என்பதை ரசித்தேன்.
''படம் முழுகாமல் ஆகிவிட்டது ' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ ?!!!!
ஆமாம் முரளிக்கண்ணன்.
பதிலளிநீக்கு