6 அக்டோபர், 2012

விகடன் டைம்பாஸ்

சிக்கென்ற வடிவில் ஸ்லிம் சைஸில் ஐந்து ரூபாய் விலைக்கு கிடைக்கும் டைம் பாஸை வாசிக்க ஐந்து நிமிடங்கள் முழுதாகப் பிடித்தது.

(பழைய) குமுதத்தின் சேட்டை + வண்ணத்திரை, சினிக்கூத்து ரக உள்ளடக்கம் = விகடன் டைம்பாஸ்

அட்டையோடு சேர்த்து அறுபத்தியெட்டு பக்கம். முழு வண்ணம். அட்டை மட்டும் ஆர்ட் பேப்பர். உள்ளே வழக்கமான நியூஸ் பிரிண்ட். என்றாலும் ஐந்து ரூபாய்க்கு தரும் டைம்பாஸ் சற்றே அதிகம்தான். மெயின் டிஷ் சினிமா. தொட்டுக்க ஊறுகாய் மாதிரி லேசாக அரசியல்.

குட்டி சாமியாரை ரிமைண்ட் செய்த ஐடியா குட். அம்மாவின் கைப்பேசி அசத்தல். தாண்டவம் ரிவ்யூ தாங்கலை. போட்டோவுக்கு காசு கொடுக்காத விஜயகாந்த், சீரியஸ் சீண்டல். ‘அத்த பெத்த ரத்தினமே’ போட்டோ காமிக்ஸ் சூப்பர். ஷகிலா பேட்டி சபாஷ்.  வில்பர் சர்குணராஜ் பேட்டி வேஸ்ட்.

விகடனின் சாபக்கேடாக அமைந்துவிட்ட வைகோ டைம்பாஸுக்குள்ளும் தொடர்கிறார். ‘மழை’ ஸ்ரேயா கணக்காக இரண்டு பக்கங்களுக்கு கவர்ச்சி போஸ். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் கிசுகிசுக்களும், துணுக்குகளும் நல்ல தேர்வு. ‘அவதூறு வழக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் ஜெயலலிதாவைப் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி?’ என்கிற கட்டுரைதான் இதழின் பெஸ்ட். இன்னும் இரண்டு பக்கங்களுக்கு நீண்டிருக்கக்கூடாதா என ஆசைப்பட வைத்தது.

ஏராளமான ஐட்டங்கள் இருந்தாலும், இதழை வாசித்து முடித்ததும் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது. ’சிரி’யஸ் பத்திரிகை என்று மொத்தமாக குத்து குத்துவென்று குத்தினாலும் சில சீரியஸ் ஆர்ட்டிக்கிள் இருந்தால் தப்பேதுமில்லை. ஒன்றோ, இரண்டோ ரியல் ஹ்யூமன் ஸ்டோரி இருக்குமேயானால் அந்த பத்திரிகையின் ரேஞ்சே வேறு.

விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இதழில் லே-அவுட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வது மன்மோகன் சிங்கின் டர்பன் ப்ளூ கலர் என்று சொல்வதை மாதிரி ஆகிவிடும். வழக்கம்போல ஆசிப்கானின் கேரிகேச்சர்கள் தத்ரூபம், பிரமாதம். தமிழ் பத்திரிகையுலகில் இவருக்கு முன்னுதாரணம் சொல்லக்கூடிய கேரிகேச்சர் ஆர்ட்டிஸ்ட்டுகள் யாராவது இருந்தார்களா என்றே எனக்கு நினைவில்லை. ஆனாலும் ஒரே மாதிரியான தன்மையுள்ள படங்கள் விரைவில் அலுத்துவிட வாய்ப்பிருக்கிறது. மாதநாவல்களின் அட்டைப்படங்களில் மாருதி தத்ரூபமாக பெண்களை வரைந்தபோது ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம், போகப்போக மங்கிக்கொண்டேப் போனதை மறந்துவிடக்கூடாது.

இந்த பத்திரிகைக்கான ஐடியா ஆனந்த விகடன் உருமாற்றம் பெற்றபோது உருவான யூத்ஃபுல் விகடனில் தொடங்கியிருக்கும் என்று கருதுகிறேன். பிற்பாடு ‘என் விகடன்’ ஆகி, கடைசியாக டைம்பாஸில் விடிந்திருக்கிறது என்று தோன்றுகிறது. புதிய தலைமுறையின் வெற்றிக்கு அதன் ஐந்து ரூபாய் சூத்திரம் ஆரம்பக் காலங்களில் உதவியது. அதே உத்தியை இதற்கும் முயற்சித்திருக்கிறார்கள். ஐந்து ரூபாய் என்பது ஆரம்பக்கால usp (unique selling proposition). இது மூன்று மாத காலத்துக்குகூட தாக்குப்பிடிக்காது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு வாசகரையும் வாரந்தோறும் தக்கவைக்க வேறொரு மேஜிக் ஏதோ தேவைப்படுகிறது. இது பவளவிழா கண்ட விகடனுக்கு நிச்சயம் தெரியும். டைம்பாஸில் என்னென்ன பாய்ச்சலை விகடன் நிகழ்த்தப் போகிறது என்று ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தப் பத்திரிகை குமுதத்துக்கு சவால் விடும் என்று வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகையுலகத்தில் இருக்கும் நண்பர்களால் கிசுகிசுக்கப்பட்டது. குமுதத்துக்கு சவால் குமுதமாக மட்டுமே இருக்க முடியும் என்பது என் எண்ணம். முன்பு குமுதம் இதழே வெளியிட்ட ‘குமுதம் ஸ்பெஷல்’ என்றுமே என்னுடைய கனவுப் பத்திரிகை. குமுதம் குழுமமே நினைத்தாலும் அம்மாதிரியான ஒரு பத்திரிகையை மீண்டும் நடத்த முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அதுபோலவே குமுதத்தில் இருந்து வெளிவந்த ‘ஜங்ஷன்’ கூட என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க ஒரு முன்மாதிரிப் பத்திரிகைதான்.

விகடன் டைம் பாஸின் முதல் இதழ் ஜஸ்ட் பாஸ். விரைவில் டிஸ்டிங்ஷன் பெற அதன் ஆசிரியர் நண்பர் ரீ.சிவக்குமாரை வாழ்த்துகிறேன்.

5 அக்டோபர், 2012

இந்தியாவின் ஹெர்குலிஸ்


மனோகர் ஆயிச்சை உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சூப்பர் ஹீரோ. பாடிபில்டரான மனோகர் வங்கமாநிலத்தில் தம்தி என்கிற ஊரில் பிறந்தார் (இப்போது பங்களாதேஷில் இந்த ஊர் இருக்கிறது). 1950ஆம் ஆண்டு ‘மிஸ்டர் ஹெர்குலிஸ்’ பட்டம் வென்றவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியவர் இவர்தான். மூன்று முறை ஆசியப் போட்டிகளில் ‘பாடி பில்டிங்’ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர். ஆணழகரான மனோகருக்கு ஒரே ஒரு குறை. அவரது உயரம். நான்கு அடி பதினோரு அங்குலம் மட்டும்தான். எனவே அந்தக் காலத்தில் ‘பாக்கெட் ஹெர்குலிஸ்’ என்று ஊடகங்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

சிறுவயதிலேயே மனோகருக்கு உடல் ஆரோக்கியத்தில் பெரும் ஆர்வம் உண்டு. ஒருமுறை மல்யுத்தப் போட்டிகளை நேரில் கண்டபோது, வீரர்களின் திறமை கண்டு அதிசயித்து, இந்த ஆர்வம் அவருக்குள் துளிர்விட்டது. மல்யுத்தம், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டார். பண்ணிரெண்டு வயதில் அவருக்கு ஒரு மர்மக்காய்ச்சல் வந்தது. இதன் காரணமாக முற்றிலும் உடல்நலம் குன்றினார்.

வறுமை, தீவிரமான வாழ்க்கைப் போராட்டங்கள் எதுவுமே மனோகரின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. விசித்திரக் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர் கடுமையான உடற்பயிற்சிகள் மூலமாக மீண்டும் ஆணழகன் ஆனார். டாக்கா நகரில் இருந்த ஒரு பள்ளியில் படித்தார். இந்த காலத்தில் டாக்காவில் பிரபல மேஜிக் நிபுணரான பி.சி.சர்க்காரின் மேஜிக் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் உடல் அழகை பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டும் நிகழ்வுகளில் மனோகரும் இடம்பெற்றார்.

1942ஆம் ஆண்டு ராயல் ஏர்ஃபோர்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி மனோகருக்கு உதவினார். நவீனப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தினார்.

அந்தக் காலத்து இளைஞர்களுக்கு இருந்த சுதந்திர தாகம் மனோகருக்கும் இருந்தது. வெள்ளையர் ஆட்சியை எதிர்க்கும் போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இதனால் வெள்ளையரான தனது மேலதிகாரியை ஒருமுறை கன்னத்தில் அறையவேண்டிய சூழலும் வந்தது. உடனடி தண்டனையாக பணிநீக்கம். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிந்து, சிறைத்தண்டனையும் மனோகருக்கு கிடைத்தது. சிறையிலும் கூட தனது உடற்பயிற்சிகளை மனோகர் தொடர்ந்தார். இவரது பயிற்சியை கண்டு வசீகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகள், மனோகருக்கு என்றே சிறப்பு உணவினை ஏற்பாடு செய்தார்கள்.

சிறை சென்றதற்காக நான் வருத்தப்படவில்லை. உலக ஆணழகன் போட்டியில் பட்டம் வெல்வதே என்னுடைய அப்போதைய லட்சியமாக இருந்தது. எந்த உபகரணங்களின் துணையுமின்றி தீவிரமான பயிற்சிகளை அப்போது மேற்கொண்டேன். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பண்ணிரெண்டு மணி நேரத்தை பயிற்சி செய்வதிலேயே செலவிட்டேன்” என்று இன்று மலரும் நினைவுகளில் மூழ்குகிறார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகு மனோகருக்கும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. கையில் வேலை இல்லை. நான்கு குழந்தைகள். வாழ்வின் மிக மோசமான காலக்கட்டத்தில்தான் முதல் பாராவில் சொல்லப்பட்ட சாதனைகளை அவர் நிகழ்த்திக் காட்டினார்.மிஸ்டர் ஹெர்குலிஸ்பட்டம் வெல்லும்போது அவரது வயது முப்பத்தியேழு. 1952ஆம் ஆண்டு மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர், 1955ல் இதே போட்டியில் மூன்றாவது இடம் பெற்றார். 1960ல் கடைசியாக இதே போட்டியில் நான்காவது இடம் வந்தபோது அவருக்கு வயது நாற்பத்தியேழு.

1500 பக்க அளவுள்ள புத்தகத்தை அப்படியே காகிதத்தை கிழித்தெறிவது மாதிரி கிழிப்பது மாதிரி ‘ட்ரிக்’குகளில் மனோகர் கில்லாடி. பிற்பாடு கொல்கத்தா நகரில் ‘பிசிக்’ என்கிற பெயரில் உடற்பயிற்சி நிலையத்தை நடத்தினார். இந்த நிலையத்தில் இருந்து சத்யன் தாஸ், சுந்தீபன் சென், சத்யா பால், ஹிதேஷ் சாட்டர்ஜி போன்ற இந்திய அளவிலான ஆணழகர்கள் வெளிவந்தார்கள்.

அவர் உடல் பலத்தில் உச்சத்தை எட்டி அறுபது ஆண்டுகள் கழிந்துவிட்டது. 1912ல் பிறந்த மனோகர், தன்னுடைய நூற்றாண்டு நிறைவினை சில மாதங்களுக்கு முன்பாக கொண்டாடினார். கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறியளவிலான ‘ஹார்ட் அட்டாக்’ தவிர்த்து அவரது உடலில் இன்றும் வேறெந்த குறையுமில்லை. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற பழமொழிக்கு நல்ல உதாரணம் மனோகர்.

அவரது மகன்கள் இப்போது கொல்கத்தாவில் ‘ஃபிட்னஸ் சென்டர்’ நடத்துகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனோகர் அங்கேபோய் உடற்பயிற்சி செய்கிறார். இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். 
“பால், பழம், காய்கறிகள், அரிசி, தானியங்கள், மீன் இவைதான் என் நீண்டகால ஆரோக்கியத்துக்கு காரணம்” என்று நூறுவயதையும் சிரமமின்றி கடந்த ரகசியத்தை ‘பளிச்’சென்று போட்டு உடைக்கிறார். சிகரெட்டை தொட்டதேயில்லை. மதுபானம் வாய்ப்பேயில்லை.

“எவ்வளவு சிரமமான வாழ்க்கையாக இருந்தாலும், அந்த ‘டென்ஷன்’ உங்கள் கழுத்தை நெரிக்காதது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நெருக்கடியையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்பவனுக்கு தோல்வியே இல்லை. என் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் பணம் சம்பாதிக்க நான் சிரமப்பட்டுக்கொண்டேதான் இருந்திருக்கிறேன். ஆனால் மகிழ்ச்சியை மட்டும்  எப்போதும் கைவிட்டதேயில்லை” என்கிறார்.

நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கும் மனோகருக்கு ஒரு சின்ன ஆசை உண்டு. ஹாலிவுட் நடிகரும், உலகப் புகழ்பெற்ற ஆணழகருமான அர்னால்ட் ஸ்வாஸ்நெகரின் தீவிரமான ரசிகர் இவர். அர்னால்ட் நடித்த அத்தனை படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறார். அர்னால்ட்டும் மனோகரைப் போலவே ‘பாடிபில்டிங்’ பிரிவில் சாதனை மன்னன்.

“ஒரே ஒருமுறை அவரை நேரில் சந்திக்கவேண்டும். கண்ணை மூடுவதற்குள் இது நடக்கவேண்டும்”
சொல்லும்போது மனோகரின் கண்கள் சிறுகுழந்தையின் கண்களாய் மினுமினுக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

1 அக்டோபர், 2012

புல்லட் பாபா


இருபது வருடங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு. ராஜஸ்தானின் பாலி என்கிற ஊரில் இருந்து தன் ஊரான சோடில்லாவுக்கு விரைந்துக் கொண்டிருந்தார் ஓம் பாணா. புல்லட் பயணம். சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தவர் ஓரிடத்தில் நிலைதடுமாறி, எதிரில் இருந்த மரத்தில் மோதினார். கொஞ்சம் மோசமான விபத்து. சம்பவ இடத்திலேயே பாணாவின் உயிர் பறிபோனது.

மறுநாள் அவரது உடலை கைப்பற்றிய போலிஸார், விபத்தில் சேதம் ஏதுமின்றி தள்ளி விழுந்துக்கிடந்த புல்லட்டை காவல்நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர். அன்று இரவு அந்த வண்டி காணவில்லை. மறுநாள் விபத்து நடந்த இடத்திலேயே மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போலிஸார் குழம்பிப் போனார்கள். மீண்டும் புல்லட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். இம்முறை வண்டியிலிருந்த பெட்ரோலை முழுமையாக எடுத்துவிட்டே நிறுத்தினார்கள். பாதுகாப்புக்கு ஒரு சங்கிலியாலும் கட்டிவைத்தார்கள்.

அதிசயம் ஆனால் உண்மை. அன்றைய இரவும் ‘பைக்’கை காணோம். மறுநாள் காலையும் அதே மரத்தடியில் கம்பீரமாக நின்றிருந்தது அந்த புல்லட் 350. பயந்துப்போன போலிஸார் வேறு வழியின்றி பைக்கை, இறந்துபோன பாணாவின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்த குடும்பத்தாருக்கும் கொஞ்சம் அச்சம்தான். ராவோடு ராவாக குஜராத்தில் இருந்த ஒருவருக்கு புல்லட்டை விற்றுவிட்டார்கள்.

மீண்டும் அதிசயம். ஆனால் அதே உண்மை. இம்முறையும் பைக் விபத்து நடந்த அதே பழைய இடத்துக்கு வந்து, அதே மரத்தடியில் கம்பீரமாக வீற்றிருந்தது. முன்பாவது போலிஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே இருந்தது. இம்முறை புல்லட் பயணம் செய்து வந்திருப்பது சுமார் நானூறு கிலோ மீட்டர். இது ஏதோ பில்லி, சூனியவேலை என்று அச்சப்பட்டு பைக்கை வாங்கியவர், அதை அப்படியே கைவிட்டுவிட்டு போய்விட்டார்.

இம்முறை கிராமமக்கள் கொஞ்சம் தெளிவாகவே இருந்தார்கள். அந்த பைக்கை அங்கேயே விக்கிரகம் போல நிலைநிறுத்தி ‘புல்லட் பாபா’ கோயிலை உருவாக்கி விட்டார்கள்.
இந்த கதை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தேசிய நெடுஞ்சாலை 65ல் பாலியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் ஜோத்பூருக்கு செல்லும் சாலையில் புல்லட் பாபா கோயிலை நாம் பார்க்கலாம்.

பிற்பாடு ஒருநாள் இரவு, அதே இடத்தில் விபத்தில் மாட்டிய ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய உயிரை ஒரு ராஜபுத்திரர் காப்பாற்றினார் என்று போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அந்த ராஜபுத்திரர்தான் பாணா என்று  ‘புல்லட் பாபா’வின் புகழ் பரவ ஆரம்பித்தது. இன்று அந்த வழியாக செல்லும் வண்டிகளின் ஓட்டுனர்கள் எல்லாம் ‘புல்லட் பாபா’வை வணங்கத் தவறுவதே இல்லை. புல்லட்டுக்கு மாலை சூட்டி, அங்கே இடம்பெற்றிருக்கும் பாணாவின் படத்தை வணங்குகிறார்கள். பாணாவுக்கு பூஜையும் நடக்கிறது. பீர், நாட்டு சாராயம், இதர மதுவகைகளை படையலாக படைக்கிறார்கள். ஏனெனில் விபத்து நடந்த இரவு பாணா லேசாக ‘சரக்கு’ சாப்பிட்டிருந்தார் என்பது கதை.
வாகன ஓட்டிகளுக்கு குங்குமப் பிரசாதத்தோடு ஒரு ஸ்பெஷல் புல்லட் பாபா சிகப்புக் கயிறு வழங்கப்படுகிறது. இந்த கயிறை தங்கள் கையிலோ அல்லது வாகனத்திலோ கட்டிக் கொண்டால் வழித்துணையாக புல்லட் பாபா வருவார். விபத்துகள் நேராமல் காப்பார் என்பது நம்பிக்கை.

சென்னையிலும் இதேபோல ஒரு கோயில் உண்டு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே இது அமைந்திருக்கிறது. பாடிகாட் முனீஸ்வரன் கோயில். பாடிகாட் என்றால் பாதுகாவலர் (bodyguard) என்று பொருள். சென்னை நகரில் புதியதாக வாகனங்கள் வாங்குபவர்கள் நேராக இந்த கோயிலுக்கு வந்துதான் பூஜை செய்கிறார்கள். சுருட்டு முனீஸ்வரருக்கு பிடித்த படையல். முன்புசரக்கும் படையலாக படைக்கப்பட்டதுண்டு. இப்போது சுருட்டே அதிகளவில் படைக்கப்படுகிறது. இங்கே பூஜை செய்யப்படும் வாகனங்கள் எந்தவித விபத்துமின்றி சாலைகளில் பயணிக்க வழித்துணையாக பாடிகாட் முனீஸ்வரர் வருகிறார் என்கிறார்கள் அவரது பக்தர்கள்.

காஷ்மீரில் தொடங்கி குமரி வரைக்கும் மக்கள் ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 செப்டம்பர், 2012

துரத்துதலும், ஓட்டமும்!


புலிகள் துரத்துகின்றன. கனவில் அல்ல. எருமைமாடு அளவில் ஒன்பது புலிகள். மஞ்சள் உடலில் கறுப்பு கோடுகள். ஒன்பதுமே அச்சு அசலாக ஒரே மாதிரி. நேற்று துரத்திய புலி இன்றைய கூட்டத்தில் இருக்கிறதா என்று அடையாளம் தெரியவில்லை. பெண் புலி தன் கணவனையும், மகனையும் எப்படி பிரித்தறிந்து அடையாளம் காணும்? ஓடுவதிலோ, துரத்துவதிலோ சுணக்கம் ஏற்பட்டால் ஒரு தரப்புக்கு வெற்றி. ஒரு தரப்புக்கு தோல்வி. வெற்றி, தோல்வி இரண்டுமே தவிர்க்க முடியாதது.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன். ஸ்பார்ட்டாவிலிருந்து ஒலிம்பியாவுக்கு ஓடிய கிரேக்க வீரனை போல். அடர்கானகத்தில் நான் மட்டும் மனிதன். என்னை துரத்துவது ஒன்பது புலிகள். என்னுடைய பூட்ஸ் சத்தம் நாராசமாக கேட்கிறது. கீச் கீச்சென்று அசந்தர்ப்பமாக கத்தும் பட்சிகள் எங்கே போனது. புலிகளின் குளம்புச் சத்தம் துளியும் கேட்கவில்லை. குதிரை ஓடினால் மட்டும் எப்படி டக் டக்கென்று சத்தம் வருகிறது? குதிரைக்கு லாடம் அடிக்கலாம். புலிகளுக்கு யார் அடிப்பது?

நான் ஓடுவதின் நோக்கம் உயிர்வாழ்வது. துரத்தும் புலிகளின் நோக்கமும் அதுதான். அடுத்த சில நாட்கள் உயிர்வாழ நான் மட்டுமே அவற்றுக்கு இரை. ஒளிபுகமுடியா கானகத்தில் நான் மட்டுமே மனிதன். எஞ்சியிருந்த மான்களையும், காட்டெருமைகளையும் இந்த அடாத புலிகள் ஏற்கனவே புசித்து விட்டது. புதர்களுக்குள் ஒளிந்திருந்த நான்கைந்து நரிகளும் நாட்டுக்கு போய்விட்டது. மிஞ்சியிருப்பது நானும், ஒரு சில முயல்களும். புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, முயலையும் தின்னாது. புலிப்பசிக்கு சோளப்பொறி போல முயல்கறி. கட்டுப்படியாகுமா?

உயிர்வேட்கையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். புலிகள் என்னை துரத்துவது போல நான் புலிகளை துரத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யோசித்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புலிகள் போல எனக்கு கூரிய பற்களும், நகங்களும் இல்லையே? ஒரு நரியை கூட துரத்திப் பிடிக்க என்னால் ஆகாது. ஆயினும் இன்று புலிகளை விட வேகமாய் ஓடுகிறேன். துரத்துதலும், ஓடுதலும் தவிர்க்க முடியாதது. துரத்தும்போது இருப்பதை காட்டிலும் ஓடும்போது உடலில் சக்தி அபரிதமாக அதிகரிக்கிறது.

பிறந்ததிலிருந்து ஓடிக்கொண்டு தானிருக்கிறேன். இப்போது ஓடுவதை விட முன்னெப்போதும் வேகமாக ஓடியதில்லை. காடதிர, நிலம் குலுங்க உறுமும் புலிகள் இன்று சத்தமில்லாமல் ஏன் துரத்துகிறது? உறுமி நேரத்தை வீணடிப்பானேன்? துரத்துவதில் உன்னிப்பாக இருக்கலாம், வேட்டையை விரைவில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கலாமோ? என் பூட்ஸ் ஒலி மட்டும் எனக்கு கேட்கிறது. புலிகளின் வேகத்தால் காற்று தடைபடும் விஸ்ஸென்ற மெல்லிய ஓசை மட்டுமே புலிகள் என்னை துரத்துவதற்கு அடையாளம். இரண்டு புலிகள் நெருங்கி விட்டிருக்கலாம். நான்கு புலிகள் பரவி ஓடி என்னை மடக்க முயற்சிக்கலாம். மூன்று புலிகள் பின் தங்கியிருக்கலாம். கிழட்டுப் புலிகள்.

பிறந்த மேனியாய் ஓடுவது அசவுகரியம். குளிர் காற்று உடலை ஊடுருவுகிறது. இடுப்பு வரை வளர்ந்த மயிர் அவ்வப்போது முகத்தில் விழுந்து பார்வையை மறைக்கிறது. தாவரங்களின் முள் மார்பையும், இடையையும், இடைக்கு கீழான பகுதிகளையும் இரக்கமின்றி குத்தி ரணமாக்குகிறது. இந்த பூட்ஸ் கூட எனக்கு எங்கேயோ மலைப்பிரதேசத்தில் எப்போதோ கிடைத்தது. ஒரு எலும்புக்கூட்டின் காலெலும்பில் கண்டெடுத்தேன். இதன் பெயர் பூட்ஸ் என்று கூட எனக்குத் தெரியாது. இடதுபூட்ஸை இடது காலுக்கும், வலது பூட்ஸை வலது காலுக்கும் போடவேண்டும் எனுமளவுக்கும் எனக்கு அறிவு கிடையாது. நகர மனிதனுக்கும், காட்டுமிராண்டிக்கும் இதுதான் வித்தியாசம். ஆனால் காடு சொர்க்கம், நகரம் நரகம் என்றே எண்ணுகிறேன்.

நகரத்திலும் ஓடுவார்களா? அவர்களை புலி துரத்துமா? புலிகள் வசிக்க நகரத்தில் குகையுண்டா? அங்கு முயல்கள் இருக்குமா? மரங்கள் இருக்குமா? மரத்தில் பழங்கள் காய்க்குமா? நீரருந்த குளங்கள் இருக்குமா? நகரம் எப்படியிருக்கும்? அங்கு யார் ஓடுவார்கள்? யார் துரத்துவார்கள்? ஓடுவதும், துரத்துவதும் உயிர்கள் பிறந்ததிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அங்கும் யாராவது ஓடுவார்கள். அல்லது விரைவாக நடப்பார்கள். யாராவது துரத்துவார்கள். அல்லது மெதுவாக துரத்துவார்கள். காட்டு மனிதனாகட்டும், நாட்டு மனிதனாகட்டும். உயிர் வாழ்வது அவசியம் தானே?

புலிகள் துரத்துகின்றன. நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

பேட்மேன்

ஒலி மூலமாக ஒளி காண்கிறார் ஓர் அமெரிக்கர்
நம் எல்லோருக்குமே தெரிந்த அறிவியல் உண்மை இது. வவ்வால்களுக்கு பார்வை இல்லை. ஆனாலும் அவை அடர்த்தியான இரவுகளில் கூட, அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். ஒலி அலைகளை எதிரொலித்து தன்னுடைய புவியியல் சவாலை அவை எதிர்கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் echolocation என்கிறார்கள்.

நாற்பத்தியாறு வயது டேனியல் கிஷ் அமெரிக்கர். இவர் பிறந்து பதிமூன்றே மாதங்கள் ஆனபோது கேன்சர் நோயால் முற்றிலும் பார்வை இழந்தார். எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார். இவரே தன்னிச்சையாக, யாருடைய ஆலோசனையுமின்றி பார்வை சவாலை எதிர்கொண்ட முறை இது. இவரது இந்த தன்மையை ஒரு சினிமா ஹீரோவுக்கு சித்தரித்து, தமிழில் ‘தாண்டவம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டேனியல்.

‘புதிய தலைமுறை’ உடனான பிரத்யேக உரையாடலுக்கு ஒப்புக்கொண்டவரை நட்சத்திர ஓட்டல் அறையில் சந்தித்தோம். யாருடைய உதவியுமின்றி டேனியல் தனியாகதான் தங்கியிருக்கிறார். துணைக்கு யாரையும் ஊரில் இருந்து அழைத்து வரவில்லை. அவர் பார்வையற்றவர் என்கிற எண்ணமே ஓட்டல் பணியாளர்களுக்கு சற்றும் ஏற்படவில்லை. பார்வையற்றவர்கள் வழக்கமாக குளிர்கண்ணாடி அணிவார்கள். அவர்கள் மற்றவர்களை பார்த்து பேசும்போது விழி வேறு திக்கை நோக்கும் என்பதால் உரையாடல் சிரமமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. டேனியல் நம் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுகிறார். “நீங்கள் ஒளி மூலமாக உலகை எதிர்கொள்வதைப் போல, நான் ஒலி மூலமாக எதிர்கொள்கிறேன். இரண்டுமே ஆற்றல்தான். இவற்றுக்கிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒளிக்குப் பதிலாக ஒலி. அவ்ளோதான்”
பார்வையற்றவர் என்று நினைத்து அவரை யாரேனும் தொட்டுப் பேசினால் கோபப்படுகிறார். “எப்போதும் மற்றவரை இப்படி தொட்டு தொட்டுதான் பேசுகிறீர்களா? நீங்கள் எதிரே சோஃபாவில் அமர்ந்திருப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. அங்கிருந்தே பேசுங்கள்” என்று செல்லமாக கடிந்துக் கொள்கிறார். புகைப்படங்களுக்கு இயல்பாகவே ‘போஸ்’ கொடுக்கிறார். “இடது பக்கம் திரும்புங்கள், லேசாக வலது பக்கம்” என்று நம் புகைப்படக்காரரின் கோரிக்கைகளுக்கு மிகச்சரியாக செவிசாய்க்கிறார்.

“சிறுவயதில் தூக்கம் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. பார்வையற்றவனுக்கு எது பகல், எது இரவு என்று தெரியாது இல்லையா? பல நாட்களில் என் பெற்றோர் இரவுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் கேட்கும் ஒலி மிக மிக துல்லியமானதாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதுமே உங்கள் மூளைக்குள் ஒரு ‘இமேஜ்’ எப்படி தோன்றுகிறதோ, அதுமாதிரியே எதையாவது கேட்டதும் என் மூளைக்குள்ளும் ஒரு ‘இமேஜ்’ உருவாகிறது.

என் வீட்டுக்குப் பின்னால் நான் விளையாட நீளமான வராந்தா மாதிரியான பகுதி இருந்தது. அது என்னுடைய ராஜ்ஜியம். அந்த வராந்தாவுக்கு அந்தப் பக்கமாக பெரிய காம்பவுண்டுச் சுவார். இங்கே விளையாடும்போது ‘சீட்டி’ அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை ஆர்வமாக கவனிப்பேன். நாளாக நாளாக இம்மாதிரி சீட்டியடித்து, எனக்கும் எதிரில் இருக்கும் ஏதோ பொருட்களுக்குமான தூரத்தையெல்லாம் சுலபமாக கணிக்க ஆரம்பித்தேன். நாளாக, நாளாக இந்த திறமை எனக்குள் வளர்ந்துக் கொண்டே போனது. பெற்றோரின் அபரிதமான ஆதரவும் இருந்ததால் ஒரு கட்டத்தில் நான் இந்த விஷயத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டேன்.
பள்ளி, கல்லூரிகளுக்கு போகும்போதெல்லாம் நான் மற்ற மாணவர்களைப் போல சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து சிறப்பாக தேறினேன். எனக்கு கார், மோட்டார் பைக் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டத் தெரியும். சைக்கிளை வைத்து மலைகூட ஏறுவேன் தெரியுமா?”

பேசிக்கொண்டே லேப்டாப்பை திறந்து வேகமாக ஏதோ பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.

“லேப்டாப்பெல்லாம் பயன்படுத்துகிறீர்களா?”

“இரண்டுவகையான லேப்டாப்புகளை பயன்படுத்துகிறேன். ஒன்று நீங்கள் பயன்படுத்தும் அதே ஆப்பிள் வகை லேப்டாப். இதில் ஆணைகளை எல்லாம் ஒலியாக மாற்றும் சிறப்பு மென்பொருள் இருக்கிறது. இதைவைத்துதான் என் வேலைகளை பார்த்துக் கொள்கிறேன். ‘தாண்டவம்’ படம் தொடர்பாக உங்கள் ஆட்கள் என்னோடு முழுக்க முழுக்க ஈமெயில் மூலமாகதான் பேசினார்கள். இது தொடர்பாக மட்டுமே கிட்டத்தட்ட இருநூறு ஈமெயில்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இன்னொரு வகை லேப்டாப் பார்வையற்றவர்களுக்கானது. இது எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை”

“இந்த லேப்டாப்பின் வடிவத்தை நீங்கள் மனதுக்குள் எப்படி உணர்கிறீர்கள்?”

“ஒரு வடிவத்தை நீங்கள் உணர்வதற்கும், நான் உணர்வதற்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல செவ்வகம், சதுரம், வட்டம் என்றெல்லாம் நான் உணர்ந்துக் கொள்வதில்லை. என் மனதுக்குள் ஒவ்வொரு பொருளுக்கும் நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜ்’ வேறானது. தனித்துவமானது. ஆனால் செயற்கையாகவோ, இயற்கையாகவோ உலகில் அமைந்திருக்கும் எல்லாவற்றையுமே நான் உங்களுக்கு இணையாக புரிந்துகொள்கிறேன் என்பதுதான் மேட்டர்”

“பேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சமூகவலைத் தளங்களில் இயங்குகிறீர்களா டேனியல்?”

“உருப்படியாக பயன்படுத்துவதற்கே நேரம் போதவில்லை. இதெல்லாம் வேறா? மின்னஞ்சலை வாசித்து பதில் சொல்லவே சரியாக இருக்கிறது. ஆனால் எனது நிறுவனத்துக்கு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கணக்கு உண்டு”

‘வேர்ல்ட் ஆக்சஸ் ஃபார் ப்ளையண்ட்’ என்கிற லாபநோக்கில்லாத நிறுவனத்தை பண்ணிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் டேனியல். உலகமெங்கும் வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். சுயமாகவே தான் கண்டறிந்த எக்கோலொகேஷன் முறையை, இதுவரை குறைந்தபட்சம் 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறார் இவர். வாழும் அதிசயம் என்பதால் இவரது முறை குறித்து பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, இவரது மூளை எக்கோலொகேஷன் க்கு ஏற்றவாறாக மாற்றம் கண்டிருப்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
“எங்கள் ஊர் எப்படியிருக்கிறது?”

“பார்ப்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பவரிடம் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். ஏற்கனவே ஒருமுறை கொல்கத்தா சென்றிருக்கிறேன். மற்ற நகரங்களை ஒப்பிடும்போது உங்கள் சென்னை ரொம்ப அமைதியான நகரம். ஒலிமாசு குறைவு. அன்பாகவும், பண்பாகவும் நடந்துக் கொள்கிறீர்கள். கய்யா முய்யாவென்று கத்தாமல் அமைதியாக பேசுகிறீர்கள். சாந்தமான சுபாவம் கொண்டவர்கள் தமிழர்கள்” ஜில்லென்று நம் தலையில் டன் கணக்காக ஐஸ் வைத்தார் டேனியல்.

(நன்றி : புதிய தலைமுறை)