1 அக்டோபர், 2012

புல்லட் பாபா


இருபது வருடங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு. ராஜஸ்தானின் பாலி என்கிற ஊரில் இருந்து தன் ஊரான சோடில்லாவுக்கு விரைந்துக் கொண்டிருந்தார் ஓம் பாணா. புல்லட் பயணம். சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தவர் ஓரிடத்தில் நிலைதடுமாறி, எதிரில் இருந்த மரத்தில் மோதினார். கொஞ்சம் மோசமான விபத்து. சம்பவ இடத்திலேயே பாணாவின் உயிர் பறிபோனது.

மறுநாள் அவரது உடலை கைப்பற்றிய போலிஸார், விபத்தில் சேதம் ஏதுமின்றி தள்ளி விழுந்துக்கிடந்த புல்லட்டை காவல்நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர். அன்று இரவு அந்த வண்டி காணவில்லை. மறுநாள் விபத்து நடந்த இடத்திலேயே மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போலிஸார் குழம்பிப் போனார்கள். மீண்டும் புல்லட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். இம்முறை வண்டியிலிருந்த பெட்ரோலை முழுமையாக எடுத்துவிட்டே நிறுத்தினார்கள். பாதுகாப்புக்கு ஒரு சங்கிலியாலும் கட்டிவைத்தார்கள்.

அதிசயம் ஆனால் உண்மை. அன்றைய இரவும் ‘பைக்’கை காணோம். மறுநாள் காலையும் அதே மரத்தடியில் கம்பீரமாக நின்றிருந்தது அந்த புல்லட் 350. பயந்துப்போன போலிஸார் வேறு வழியின்றி பைக்கை, இறந்துபோன பாணாவின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்த குடும்பத்தாருக்கும் கொஞ்சம் அச்சம்தான். ராவோடு ராவாக குஜராத்தில் இருந்த ஒருவருக்கு புல்லட்டை விற்றுவிட்டார்கள்.

மீண்டும் அதிசயம். ஆனால் அதே உண்மை. இம்முறையும் பைக் விபத்து நடந்த அதே பழைய இடத்துக்கு வந்து, அதே மரத்தடியில் கம்பீரமாக வீற்றிருந்தது. முன்பாவது போலிஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே இருந்தது. இம்முறை புல்லட் பயணம் செய்து வந்திருப்பது சுமார் நானூறு கிலோ மீட்டர். இது ஏதோ பில்லி, சூனியவேலை என்று அச்சப்பட்டு பைக்கை வாங்கியவர், அதை அப்படியே கைவிட்டுவிட்டு போய்விட்டார்.

இம்முறை கிராமமக்கள் கொஞ்சம் தெளிவாகவே இருந்தார்கள். அந்த பைக்கை அங்கேயே விக்கிரகம் போல நிலைநிறுத்தி ‘புல்லட் பாபா’ கோயிலை உருவாக்கி விட்டார்கள்.
இந்த கதை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தேசிய நெடுஞ்சாலை 65ல் பாலியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் ஜோத்பூருக்கு செல்லும் சாலையில் புல்லட் பாபா கோயிலை நாம் பார்க்கலாம்.

பிற்பாடு ஒருநாள் இரவு, அதே இடத்தில் விபத்தில் மாட்டிய ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய உயிரை ஒரு ராஜபுத்திரர் காப்பாற்றினார் என்று போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அந்த ராஜபுத்திரர்தான் பாணா என்று  ‘புல்லட் பாபா’வின் புகழ் பரவ ஆரம்பித்தது. இன்று அந்த வழியாக செல்லும் வண்டிகளின் ஓட்டுனர்கள் எல்லாம் ‘புல்லட் பாபா’வை வணங்கத் தவறுவதே இல்லை. புல்லட்டுக்கு மாலை சூட்டி, அங்கே இடம்பெற்றிருக்கும் பாணாவின் படத்தை வணங்குகிறார்கள். பாணாவுக்கு பூஜையும் நடக்கிறது. பீர், நாட்டு சாராயம், இதர மதுவகைகளை படையலாக படைக்கிறார்கள். ஏனெனில் விபத்து நடந்த இரவு பாணா லேசாக ‘சரக்கு’ சாப்பிட்டிருந்தார் என்பது கதை.
வாகன ஓட்டிகளுக்கு குங்குமப் பிரசாதத்தோடு ஒரு ஸ்பெஷல் புல்லட் பாபா சிகப்புக் கயிறு வழங்கப்படுகிறது. இந்த கயிறை தங்கள் கையிலோ அல்லது வாகனத்திலோ கட்டிக் கொண்டால் வழித்துணையாக புல்லட் பாபா வருவார். விபத்துகள் நேராமல் காப்பார் என்பது நம்பிக்கை.

சென்னையிலும் இதேபோல ஒரு கோயில் உண்டு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே இது அமைந்திருக்கிறது. பாடிகாட் முனீஸ்வரன் கோயில். பாடிகாட் என்றால் பாதுகாவலர் (bodyguard) என்று பொருள். சென்னை நகரில் புதியதாக வாகனங்கள் வாங்குபவர்கள் நேராக இந்த கோயிலுக்கு வந்துதான் பூஜை செய்கிறார்கள். சுருட்டு முனீஸ்வரருக்கு பிடித்த படையல். முன்புசரக்கும் படையலாக படைக்கப்பட்டதுண்டு. இப்போது சுருட்டே அதிகளவில் படைக்கப்படுகிறது. இங்கே பூஜை செய்யப்படும் வாகனங்கள் எந்தவித விபத்துமின்றி சாலைகளில் பயணிக்க வழித்துணையாக பாடிகாட் முனீஸ்வரர் வருகிறார் என்கிறார்கள் அவரது பக்தர்கள்.

காஷ்மீரில் தொடங்கி குமரி வரைக்கும் மக்கள் ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

11 கருத்துகள்:

  1. கோவையிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஒரு கோயில் உண்டு. இங்கும் புதிய வண்டிகள் பூஜையுடன் ஊட்டி செல்லும் பல வண்டிகள் நிறுத்தி வணங்கி செல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. எல்லோரையும் காப்பாத்துல புல்லட் சாமி, பாணாவை ஏன் காப்பாத்தலை?

    பதிலளிநீக்கு
  3. மஞ்சூர் அண்ணா நீங்கள் சொல்வது ஒன்னிபாளையம் பிரிவில் இருக்கும் கோவில்...

    அந்த இடத்தில் சாலை குறுகலாக இருக்கும் , அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி இன்னும் குறுகலாக ஆக்குவார்கள்...

    புல்லட் கோவில் வித்தியாசமானது...ஆனா , எல்லா ஊரிலும் ஒரு கோயில் இருக்கு வாகன பூஜைக்கு...மேடவாக்கம் கூட் ரோடில் கூட சின்னதாய் ஒரு கோயில் இருக்கு...

    பதிலளிநீக்கு
  4. நாசமா போக.

    இந்த எளவு என்னிக்குதான் மாறும்?

    பதிலளிநீக்கு
  5. எவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் -




    தந்தை பெரியார்

    பதிலளிநீக்கு
  6. ஆம் எல்லாப் பக்கமும் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  7. Guru bhagavaanukku uriya niram manjal.. Sila thimmigal ..kalutthukku kulumai enraarkal..Sila thimmigal P.M.K niruvanar gyabhakam enraarkal..Moottha thimmiyo neratthirkku onraaga ulari varugiraar..... Intha bullet baba entha alavukku mooda nambikkaiyo...satrrum kuraiyaathathu mootha thimmiyin nambikkaiyum...thalaivi pacchai enraal...ayaa manjal...Yuvi...ithai nakkaladitthum oru pathivu podalaame...:-)

    பதிலளிநீக்கு
  8. u r an iconoclast. u only believe in MK & DMK. u will do any thing for getting a post in that party. "JAI BANAJI.". u should not play with human emotions.

    பதிலளிநீக்கு
  9. ILA, that Bana has become bullet raj, after his end. that is not death of / for him. he is an incarnation and he himself vanished and became god to save others.

    பதிலளிநீக்கு
  10. சிந்திப்பவன்3:08 PM, அக்டோபர் 05, 2012

    பகுத்தறிவிற்கு சற்றும் ஒவ்வாத இத்தகைய செயல்களைப்பற்றி எழுதி,நாம் ஏன் நேரத்தை வீணாக்கவேண்டும் இளைய கிருட்டினரே?

    பி.கு: நம்ம "பகுத்தறிவு பகலவன்" கட்டளைப்படி கருப்பு சட்டை அணிய ஆரம்பித்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு