30 அக்டோபர், 2012

தலைமுறைகளை தாண்டிய ஹீரோ


எனக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முதலாக ஜேம்ஸ்பாண்டை திரையரங்கில் பார்த்தேன். டிமோதி டால்டன் நடித்த ‘லிவிங் டேலைட்ஸ்’.

டிமோதியின் ஸ்டைலில் மிரண்டுப்போய் அப்பாவிடம் சொன்னேன். “ஜேம்ஸ் பாண்ட் எவ்ளோ அழகா இருக்காம்பா...”

“இவனெல்லாம் என்ன அழகு? ‘டாக்டர் நோ’வுலே சான் கானரியைப் பார்க்கணும். ஜேம்ஸ்பாண்டுன்னா அவன் தான் ஜேம்ஸ்பாண்ட்” அப்பா கானரி ரசிகர்.

போன வருடம் என்ஜினியரிங் முடித்த அண்ணன் பையன் சொல்கிறான். “டேனியல் கிரேக்தான் ஜேம்ஸ்பாண்டுலேயே பெஸ்ட். அவனோட கண்ணு மாதிரி உலகத்துலே எவனுக்குமே இல்லை”

ஒன்று மட்டும் புரிகிறது. ஐம்பது ஆண்டுகளாக சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக்  என்று ஆறு பேர் ஜேம்ஸ்பாண்ட்களாக நடித்துவிட்டார்கள். முதல் தலைமுறை ஜேம்ஸ்பாண்ட் நடிகரை, அடுத்த தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதற்கடுத்த தலைமுறை அத்தனை பேரையும் தூக்கிப் போட்டுவிட்டு புதுநடிகருக்காக சண்டை பிடிக்கிறார்கள். ஆனால் மூன்று தலைமுறையுமே ஒன்றுபட்டு ஒற்றுமையாக ‘ஜேம்ஸ் பாண்டை’ தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.

1962ல் ஜேம்ஸ்பாண்டின் முதல் படமான ‘டாக்டர் நோ’ வெளியானது. அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் ‘ஸ்கை ஃபால்’, ஜேம்ஸ்பாண்டின் இருபத்தி ஐந்தாவது திரைப்படம். முதல் படத்துக்கு அப்போது என்ன வரவேற்பு இருந்ததோ, அதைவிட பன்மடங்கு வரவேற்பு வரவிருக்கும் படத்துக்கும் இப்போது இருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக ஒரு நாயகனுக்கு உலகம் முழுக்க மவுசு குறையாமல் இருக்கும் அதிசயம் ஜேம்ஸ்பாண்டுக்குதான் சாத்தியம். சினிமாவில் அவர் ஓர் அதிசயம். ஸ்டார்வார்ஸ் திரைப்படங்களுக்குப் பிறகு, உலகில் அதிகம் பிரபலமான திரைத்தொடர் ஜேம்ஸ்பாண்ட் படங்கள்தான்.

ஏன் ஜேம்ஸ்பாண்டை எல்லோருக்கும் பிடிக்கிறது?

நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார்

நல்ல லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார்

கெட்டவர்களிடம் சண்டை போட தயங்கியதேயில்லை

அழகான பெண்கள் எல்லோருக்குமே அவரைப் பிடிக்கும்

அனாயசமாக அசுரவேகத்தில் அட்டகாசமான ஸ்டைலில் கார் ஓட்டுவார்

படத்துக்குப் படம் வெவ்வேறு நாடுகளை சுற்றுவார். உலகம் சுற்றும் வாலிபன்

நவீன ஆயுதங்களை பயன்படுத்துவார்

பாப் கலாச்சாரத்தின் அடையாளம்

இனம், மொழி, நாடு, அரசியல் என்று அனைத்து எல்லைகளையும் உடைத்து உலகுக்கே பொதுவானவர் 

இன்னும் நிறைய காரணங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம் உண்டு. அவர் நிஜமான ‘ஆண்மகன்’. அதுவும் தைரியமான ஆண்மகன். ஓர் ஆண் எப்படி இருக்கவேண்டுமென்று உலகம் விரும்புகிறதோ, குறிப்பாக பெண்கள் விரும்புகிறார்களோ அப்படியே ஜேம்ஸ் இருக்கிறார். ஜேம்ஸை திரையில் பார்க்கும் ஆண்கள் ஆரம்பத்தில் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னையே (வேறு வழியின்றி) ஜேம்ஸாக கருதிக்கொண்டு கொண்டாடத் தொடங்குகிறார்கள். எனவேதான் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஷாருக்கான், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க விரும்புகிறேன் என்று அறிவிக்கிறார்.

ஜேம்ஸ்பாண்டை முதன்முதலாக உருவாக்கிய நாவலாசிரியர் இயான்ஃப்ளெமிங்குக்கு ஆரம்பத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த சுவாரஸ்யமான ஐடியாவும் இல்லை. “1953ல் முதன்முதலாக நாவல் எழுதும்போது என் நாயகனை மந்தமானவனாகவே சித்தரிக்க விரும்பினேன். எந்த சுவாரஸ்யமும் அற்ற ஒருவன் சந்திக்கும் அதிசுவாரஸ்யமான நிகழ்வுகள் என்றே யோசித்தேன். நிகழ்வுகள்தான் முக்கியம். ஹீரோ சும்மா ஒப்புக்குச் சப்பாணி என்பதுதான் அடிப்படை. இதற்காகவே உச்சரிக்கும்போது எந்த சுவாரஸ்யமும் தராத ஒரு பெயரை என் பாத்திரத்துக்கு சூட்டினேன். அதுதான் ஜேம்ஸ்பாண்ட். நான் பிறந்ததிலிருந்து கேட்டதிலேயே ரொம்ப மொக்கையான பெயர் இதுதான்” என்று நியூயார்க்கர் பத்திரிகைக்கு தந்த பேட்டியில் இயான்ஃப்ளெமிங் கூறினார். ஜேம்ஸ்பாண்ட் என்பவர் அப்போது அமெரிக்காவின் பிரபலமான பறவையியல் நிபுணர்.
 வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஃப்ளெமிங். அக்காலத்தில் பிரபலமான ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி இவர்களது குடும்பத்துக்கு சொந்தமானது. முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் படித்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் கடற்படையின் உளவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் கடற்படையில் இருந்து விலகி பத்திரிகையாளர் ஆனார். கடற்படையில் பணிபுரியும்போதே தனது நண்பர்களிடம் உளவாளியை நாயகனாக்கி ஒரு நாவல் எழுதப்போவதாக சொல்லியிருந்தார். அவரது போர் அனுபவங்களும், பத்திரிகையுலகம் தந்த அறிவும்தான் ஜேம்ஸ்பாண்ட் என்கிற பாத்திரத்தின் துல்லியத்துக்கு அச்சாரம்.

ஜேம்ஸ்பாண்ட் எம்-ஐ6 என்கிற பிரிட்டிஷ் ரகசிய உளவு ஸ்தாபனத்தின் ஏஜெண்ட்.  007 என்பது அவரது ரகசியக் குறியீட்டு எண். ஆரம்பத்தில் ஃப்ளெமிங் நினைத்தமாதிரியாக இல்லாமல் எழுத, எழுத 007 மிகசுவாரஸ்யமானவராக மாறிப்போனார். தன்னையே ஜேம்ஸாக நினைத்து எழுதித்தள்ளினார். உணவு, மது, உடை, சிகரெட்டு என்று தான் எதையெல்லாம் விரும்பினாரோ, அதையெல்லாம் ஜேம்ஸ்பாண்டுக்கும் விருப்பமானதாக ஆக்கிவிட்டார். நியூயார்க்கர் பேட்டியில் அவர் குறிப்பிட்ட ‘மந்தமான ஏஜெண்ட்’ நிஜத்தில் ஃப்ளெமிங்தான். என்ன எழுதும்போது அவரையறியாமலேயே சுவாரஸ்யமானவராக அவரை அவரே சித்தரித்துக் கொண்டார். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். சந்தேகமிருந்தால் ஸ்டைலாக புகைபிடிக்கும் ஃப்ளெமிங்கின் புகைப்படத்தைக் காணுங்கள்.

1964ல் ஃப்ளெமிங் மறைந்துவிட்டார். உயிரோடு இருக்கும்போதே தனது பாத்திரத்தை திரையில் பார்க்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. ஃப்ளெமிங்குக்கு பிறகு ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமானோர் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி ஃப்ளெமிங்கின் பாத்திரத்துக்கு சாகாவரம் வழங்கியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி தொடர், சினிமா, வீடியோ கேம்ஸ் என்று விஷூவலின் அத்தனை வடிவிலும் ஜேம்ஸ் சக்கைப்போடு போட்டிருக்கிறார். ராணிகாமிக்ஸ் படித்துவிட்டு ‘பாண்ட்... மை நேம் ஈஸ் ஜேம்ஸ்பாண்ட்’ என்று அலட்டிக்கொண்டு பேசும் பொடிசுகளை நீங்களும் பார்த்திருக்கிறீர்கள்தானே?
துப்பாக்கி, அழகிகள், நவீன கார், மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட், வித்தியாசமான வில்லன்கள், ஆக்ன், நீரிலும் நிலத்திலும் வானத்திலும் சேஸிங்... உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த ஃபார்முலா மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

எல்லா நாடுகளிலுமே ஜேம்ஸ்பாண்டின் தாக்கம் அளப்பரியது. சூப்பர் ஹீரோ போன்ற காதுச்சுற்றல்கள் இல்லாத ஜேம்ஸ்பாண்ட் பாணி, உலகளாவிய ஆக்‌ஷன் இயக்குனர்களை பாதித்ததில் ஆச்சரியமேதுமில்லை. மற்ற ஹீரோக்களைப் போல இல்லாமல் ஜேம்ஸ் கொஞ்சமாகதான் பூச்சுற்றுவார். உலகம் முழுக்கவே கதாநாயகன் என்பவன் நல்லவனாக மட்டுமின்றி வல்லவனாகவும் இருக்க வேண்டும். அநீதியை எதிர்த்து, அஞ்சாமல் போராட வேண்டும். அழகாகவும் இருக்கவேண்டும் என்றுதான் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் முழுக்க பூர்த்தி செய்கிறார் 007. ஹீரோவுக்கு சம்பளம் கொடுத்து பட்ஜெட் கட்டுப்படி ஆகவில்லையென்றால், பெண்களை கூட ‘லேடி ஜேம்ஸ்பாண்ட்’ ஆக சித்தரித்து, படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய இந்தித் திரைப்படமான ‘ஏக் தா டைகர்’ கூட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தில் வெளிவந்து நூறுகோடி ரூபாய் வசூலித்தது. முன்னதாக ‘ஏஜெண்ட் வினோத்’ என்கிற திரைப்படம். உளவுத்துறை அதிகாரியை ஹீரோவாக்கும்போது தம்மையறியாமலேயே ஜேம்ஸை பிரதியெடுத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள். நம்மூரில் அந்தகால மாடர்ன் ஆர்ட்ஸ் தயாரிப்புப் படங்கள் பலவும் அச்சு அசலாக ஜேம்ஸ் படங்களை ‘உல்டா’ அடித்து எடுக்கப்பட்டவையே. வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர் போன்ற படங்களை பார்க்கும்போது, அவற்றில் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களின் காட்சி அப்பட்டமாக இடம்பெற்றிருப்பதை காணலாம். இவற்றில் பெரும்பாலும் ஜெய்சங்கர்தான் ஹீரோ என்பதால் அவரையே ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அடுத்து ரஜினி-கமல் சகாப்தம் உருவான காலத்திலும், அவர்களை உயர்த்திப் பிடிக்க ஜேம்ஸ்பாண்டே கைகொடுத்தார். என்ன.. உளவாளி என்பதை சிஐடியாகவோ அல்லது போலிஸ் இன்ஸ்பெக்டராகவோ, இல்லையென்றால் பிரைவேட் டிடெக்டிவ்வாகவோ நம்மூருக்கு ஏற்றமாதிரியாக மாற்றிக் கொள்வார்கள்.

ஜேம்ஸ்பாண்டின் தாக்கம் சினிமாவில் மட்டுமல்ல. கதைகளிலும் வெளிப்படுகிறது. சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று நம்மூர் எழுத்தாளர்களின் க்ரைம் கதைகளிலும் உளவாளிதான் பெரும்பாலும் ஹீரோ. பெண்கள், ஆக்ஷன் என்று ஜேம்ஸ்ரக கரம்மசாலாதான் கதை என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

பிரிட்டிஷ் உளவுப்படையின் ஏஜெண்டான ஜேம்ஸ், இன்று ஒரு பிரபஞ்ச ஹீரோ. ஏனெனில் வில்லன்களிடம் இருந்து அவர் காப்பாற்றிக் கொள்வது தன்னையோ, தன் நாட்டை மட்டுமோ அல்ல. ஒட்டுமொத்த உலகையும் சேர்த்துதான். எனவேதான் உலகின் எந்த மொழியில் எழுதப்படும் கதைகளிலும், எடுக்கப்படும் படங்களிலும் அவரது பாதிப்பு நீடிக்கிறது. அதற்கேற்றாற்போல ஜேம்ஸும் வருடங்கள் ஆக, ஆக தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்கிறார். உடையில் தொடங்கி செல்போன் வரை இன்றைய ஜேம்ஸ் பயன்படுத்துவது அதிசமீபத்திய பொருட்களைதான். எனவேதான் ஜேம்ஸ் இத்தனை ஆண்டுகள் கழித்தும் நமக்கு சலிக்காமலேயே இருக்கிறார்.



007 பிட்ஸ்

உலகப் பிரபலமான பின்னணி இசையோடு ஸ்டைலான நடை நடந்து வந்து ஜேம்ஸ் திரையை சுடுவார். திரை முழுக்க ரத்தமயமாகி ‘டைட்டில்’ வரும். ஓரிரு படங்கள் தவிர்த்து, ஜேம்ஸ்பாண்டின் எல்லா படங்களிலும் இதுதான் டைட்டில் கார்ட்.

இவரது படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ பிரசித்தம். அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்தி முடித்துவிட்டு, ஒரு பஞ்ச் கட்டாயம் வைப்பார்.

டைட்டில் கார்டில் எப்போதுமே அப்போதைய பிரபல பாடகரின் பாடல் இடம்பெறும். பாடல் வரியிலும் படத்தின் பெயர் இடம்பெறும்.

அலுவலகத்தில் நுழைந்ததுமே தன் தொப்பியை கழற்றி, தொப்பி மாட்டும் ஸ்டேண்டின் மீது சரியாக வீசுவார்.

மதுபான விடுதிகளுக்கு செல்லும்போது ‘வோட்கா மார்டினி’ என்கிற வகையைதான் அருந்துவார்.

ஜேம்ஸின் பாஸ் மிஸ் எம்மின் உதவியாளராக மணிபென்னி என்றொரு பெண்மணி இருப்பார். அவர் ஜேம்ஸை ஒருதலையாக ஐம்பது ஆண்டுகளாக காதலித்துக் கொண்டே இருக்கிறார்.

பெண்கள் இன்றி ஜேம்ஸ் படங்களை கற்பனைகூட செய்துப் பார்க்க முடியாது. இவரால் காப்பாற்றப்படும் பெண்கள் இவரை காதலிப்பார்கள். அல்லது இவரைப்போன்ற சக ரகசிய பெண் ஏஜெண்டுகள் காதலிப்பார்கள். அதுவுமில்லையேல் வில்லனின் ஆசை நாயகிகளுக்கு, நம் ஹீரோ மீது காதல் வந்துவிடும். காதலே இல்லாமல் ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கவே முடியாது.

படத்தின் கடைசி காட்சியில் கதாநாயகியோடு இருப்பதுபோல படம் முடிக்கப்படும். ஒரு சில படங்களில் மட்டும் கதாநாயகி இறந்துவிடுவதால் கடைசிக்காட்சியில் இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிக்க முடிவதில்லை.

14 கருத்துகள்:

  1. pierce brosnon is real handsome personality for james bond...than any other.

    பதிலளிநீக்கு
  2. அருமையான‌ க‌ட்டுரை யுவா.. ஒவ்வொரு த‌லைமுறையும் முத‌ல்ல‌ பாக்குற‌ ஜேம்ஸ்பாண்டைத்தான் அவ‌ங்க‌ளுக்கு பெஸ்ட்னு சொல்லிக்குவாங்க‌ன்ற‌து ச‌ரிதான். நான் பார்த்த‌ முத‌ல் ஜேம்ஸ்பாண்ட் ப‌ட‌ம் கோல்ட‌ன் ஐ. அதுக்கு முன்னால‌ காமிக்ஸ்ல‌ படிச்சிருந்தாலும் ப‌ட‌த்துல‌ பார்த்த‌து அதுதான். அத‌னால்தானோ என்ன‌வோ ப்ராஸ்ன‌ன் தான் என‌க்கு புடிச்ச‌ பான்ட். க்ரெய்க் பிடிச்சிருக்குன்னாலும் ப்ராஸ்ன‌ன் அளவுக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு Pierce Brosnan தான் ரொம்ப பிடிக்கும்....

    பதிலளிநீக்கு
  4. என்னை போன்ற ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு தங்கள் கட்டுரை பெறும் விருந்து.
    எனக்கு பிடித்த ஜேம்ஸ் கானரியும் மூரும் தான் .மிகப்பிடித்த படம் தண்டர் பால ...லீவ் அன்ட் லேட் டை

    பதிலளிநீக்கு
  5. ஜேம்ஸின் பாஸ் மிஸ் எம்மின் உதவியாளராக மணிபென்னி என்றொரு பெண்மணி இருப்பார். அவர் ஜேம்ஸை ஒருதலையாக ஐம்பது ஆண்டுகளாக காதலித்துக் கொண்டே இருக்கிறார்.

    ஹாஹா... நானும் இத யோசிச்சதுண்டு... அப்புறம் அந்த மிஸ். எம்... :-))

    பதிலளிநீக்கு
  6. ஜேம்ஸ்பாண்டின் வெற்றிக்குக் காரணத்தை அழகாச் சொல்லிருக்கிங்க.

    ஆண்களிலும் பெண்களிலும் சிறப்பானவர்களை ஆல்பா என்ற வகையில் வைக்கிறார்கள். தலைமைக்குணம், போர்க்குணம் எல்லாம் மிகுந்து அனைத்தையும் ஆளும் திறனோடு இருப்பவை ஆல்பா வகை. இதே போல காமா தீட்டா வகைகளும் உண்டு.

    ஜேம்ஸ்பாண்டு ஆல்பா வகையில் வருகிறார். நம்ம செய்ய விரும்பி செய்ய முடியாததை சினிமாவில் ஒருவர் செய்தால் அது வெற்றியாகிறது. அதுதான் ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கு அடித்தளம். மசாலாவா போராட்டம், நேர்மை, பெண்கள், உலகம் சுற்றுதல், டெக்னாலஜி என்று பலவிதங்கள்.

    அப்புறம் ஏன் ஜேம்ஸ்பாண்டு பிடிக்காமல் போகும்? :) ஸ்கைஃபாலை நானும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.

    சான்கானரி தொடங்கி முந்தைய ஜேம்ஸ்பாண்டுகள் நிலைநிறுத்தியிருந்த sophisticationஐ டேனியல் கெரெய்க் உடைத்தார். ஒருவித முரட்டுத்தனத்தை உள்ளே கொண்டு வந்தார். நெதர்லாந்தில் நான் வேலை பார்த்த போது ஒரு அலுவலக டச் தோழி he is raw என்றார். அதுவே அவருக்கு வெற்றியையும் கொடுத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. என் பேவரைட் ரோஜர் மூர்................
    கெவின் காஸ்ட்னர் ஜேம்ஸ்பாண்டாக நடித்தால் நன்றாக இருந்திருக்கும் என்று முன்னர் நினைத்ததுண்டு ,,,,,,

    பதிலளிநீக்கு
  8. நிச்சயமாக முதல் பாண்ட்தான் பெஸ்ட்..

    பதிலளிநீக்கு
  9. கட்டுரை அவ்வளவு திருப்தி இல்லாதது போல தோணுது. பெட்டரா பண்ணியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. #ஜேம்ஸின் பாஸ் மிஸ் எம்மின் உதவியாளராக மணிபென்னி என்றொரு பெண்மணி இருப்பார். அவர் ஜேம்ஸை ஒருதலையாக ஐம்பது ஆண்டுகளாக காதலித்துக் கொண்டே இருக்கிறார்.#

    பாவம்பா அந்த பொண்ணு! :D

    பதிலளிநீக்கு
  11. ஆனா இதே விஷயங்களாஇ தமிழ்ப் பட ஹீரோ யாரவது பண்ணினா மட்டும் ஆயிரம் கேள்வி கேப்பீங்க...

    பதிலளிநீக்கு
  12. I saw the movie..haiyaa.. ;)
    Its released here in Belgium..movie is nice and action packed..Daniel Craig is impressive..watch and enjoy..House full show on monday@10 PM (missed 8pm because of no ticket), undoubtedly the character is predominant in world level.

    பதிலளிநீக்கு
  13. post something about sherlock holmes too. He's far smarter than Bond.

    பதிலளிநீக்கு
  14. ஏதோ ஒரு படத்தில் இறுதி காட்சியில் விண்ணிலிருந்து சீறி பாய்ந்து வரும் ராக்கெட்டில் நம் ஜேம்ஸ் பான்ட் ஹீரோயினோடு குஜால் செய்து கொண்டிருப்பார் ...

    பதிலளிநீக்கு