16 அக்டோபர், 2012

யாருக்கு மாப்பிள்ளை யாரோ?


மருத்துவர் அய்யா சமீபத்தில் வானூர் என்கிற ஊரில் வான்மழையாய் பொழிந்திருக்கிறார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒட்டுமொத்த வன்னியர்களும் மாம்பழத்துக்கு ஓட்டு போட்டால் வன்னியன் ஆளுவான். மண்ணில் நெற்பயிரோடு வீரத்தையும் விளைவித்தவன் வன்னியன்.

வெள்ளையன் என்பதை வன்னியன் என்று தவறுதலாக சொல்லிவிட்டாரா தெரியவில்லை. அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை வெள்ளையர் ஆண்டதாக பாடப்புத்தகங்களில் தவறுதலாக எழுதிவிட்டார்களா என்றும் தெரியவில்லை.

முன்பே அய்யா அருளியிருந்தார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு தலித்தான் தமிழகத்தின் முதல்வர் என்று. அய்யாவுக்கு செங்கல்பட்டு தாண்டினால் ‘செலக்டிவ் அம்னீசியா’ வந்துவிடுகிறது. ஏற்கனவே என் குடும்பத்தில் இருந்து யாராவது கோட்டையில் கால் வைத்தால், முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்று சாடியிருந்தார். ஆனால் சின்ன அய்யா செங்கோட்டைக்குள் கேபினட் அமைச்சராக நுழைந்தார். பெரிய அய்யா முதல்வரான அம்மாவை வாழ்த்தி ஆசிபெற செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் ஒருமுறை 'தேவுடு' காத்தார்.

மேலும் பேச்சில் ’நச்’சென்று ஒரு ‘பஞ்ச்’ வைத்திருக்கிறார் மருத்துவர் அய்யா. அதுதான் இப்போது பஞ்சாக பற்றிக் கொண்டிருக்கிறது.

யாதவர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சாதி கட்சிகளுடன் தான் கூட்டணி

ஒருவகையில் டாக்டர் ராமதாஸை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல் உளமாற ‘பட்’டென்று பட்டாசாய் வெடித்திருக்கிறார். மக்கள், சமூகம், நாடு என்று சல்லியடிக்காமல் சல்லிசாய் வெல்லுவதற்கு இதுதான் எங்களது வழியென்று ஆணியடித்தாற்போல ஆப்பு அடித்திருக்கிறார். ஆப்பு அவருக்கா, நமக்கா என்பது தேர்தல் முடிந்து ஓட்டுகளை எண்ணும்போது தெரியும். சாதிக்கு கட்சி நடத்துபவர், சாதிக்கட்சிகளோடு கூட்டணி வைப்பதுதான் இயல்பு. சாதியால்தான் சாதிக்க முடியுமென்கிற அவரது முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய முத்தான முடிவுக்கு மீண்டும் வந்திருக்கிறார். வாழ்க்கை மட்டுமல்ல. அரசியலும் ஒரு வட்டம்தான்.

அய்யாவைப் போலவே மற்ற அரும்பெரும் தமிழக தலைவர்களும் திறந்த மனதோடு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த தமது ‘ஹிட்டன் அஜெண்டாவை’ தம் உள்ளத்தைத் திறந்து அறிவித்தால், ஓட்டு போடும் யந்திரங்களிடம் உடனடி ‘ஹிட்’ ஆகும். அவர்கள் அறிவிக்காவிட்டாலும்அவர்களது சார்பில் அவர்களது குரலில் நாமே அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கலைஞர்

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் உடன்பிறப்புகள் அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோருக்கு மத்திய கேபினட் அமைச்சரவையில் இடம் தர முன்வருபவர்களோடுதான் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகள் வலியுறுத்துகிறார்கள். ஆனாலும் கூட்டணி விஷயத்தில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அண்ணா கண்ட கழகம் இருந்துவிடாது. நமது சுயமரியாதையை காக்கும் வகையில் பேராசிரியர் தலைமையில் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுவினை கூட்டி இதே முடிவினை எடுப்போம்.

ஜெயலலிதா
1952ல் தொடங்கி தமிழகத்தில் நடந்த ஆட்சிகளிலேயே நல்லாட்சி எனது ஆட்சிதான் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள். தங்கள் சகோதரியின் உத்தமமான ஒளிமிகுந்த ஆட்சி தங்கள் மாநிலத்திற்க்கு மட்டுமின்றி, இருளாய் கிடக்கும் இந்திய நாட்டுக்கே விளக்கேற்றி பயன்பட வேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை. எனவே என்னை, உங்களது ஆருயிர் சகோதரியை பிரதமராக ஒப்புக்கொள்ளும் கட்சியுடன் மட்டுமே புரட்சித்தலைவர் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்கும். தேர்தல் முடிந்து, நான் செங்கோட்டையில் பதவி ஏற்றுக் கொண்டவுடனேயே அந்த கூட்டணி முடிந்தும் போகும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்
யார் கூடவும் கூட்டணி கிடையாது. மக்களோடும், இறைவனோடும் மட்டும்தான் தேமுதிகவுக்கு கூட்டணி. அதுவும் மக்களோடு மட்டுமா அல்லது இறைவனோடும் சேர்த்தா என்பதை இன்றைக்கு இரவு அறிவிப்பேன். ஆனா யாராவது கூட்டணிக்கு கூப்பிட்டா அதை மக்களும், இறைவனும் ஒத்துக்கிட்டா.. அவங்களோட கூட்டணி வெச்சுக்கிறதுக்கு நான் ரெடி. ஆனா கூட்டணிக்கு முன்னாடியே ஜெயிச்சவுடனேயே கழட்டி விட மாட்டோம்னு ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி கைநாட்டு வெச்சி மக்களுக்கும், கடவுளுக்கும் முன்னாடி கற்பூரம் ஏத்தி அடிச்சி, அந்த கட்சி எங்கிட்டே ஒப்பந்தம் போடணும். போடவைப்பேன்.

கம்யூனிஸ்ட்டுகள்
எங்களை மதிக்கணும்லாம் அவசியமில்லைங்க. ஏதோ ஒண்ணோ, ரெண்டோ சீட்டு பார்த்து போட்டு கொடுத்தா போதும். நாப்பது தொகுதியிலேயேயும் கவுரவம் பார்க்காம ‘ஜிந்தாபாத்’ போட நாங்க தயார்.

(தா.பாண்டியன் குறுக்கிட்டு) சீட்டு கொடுக்கலைன்னா கூட ஜெயலலிதாவோட ஆட்சி டெல்லியி
லும் மலரணும்னு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். ஜெயலலிதாவை கோபப்படுத்தாம பாத்துக்கணும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை.

வைகோ 
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?
நேரத்திலே நான் ஊர் செல்லவேண்டும்,
வழி போக துணையாய் அன்பே வாராயோ?


முகாரி ராகத்தில் சோகமாகப் பாடுகிறார். நாஞ்சில் சம்பத் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்து திடீரென ஆவேசமாகி,

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

16 கருத்துகள்:

  1. செம செம:-))) விசயகாந்தும், அம்மாவும் டாப்போ டாப்பு, தாபா - மகா உண்மை:-))

    பதிலளிநீக்கு
  2. காங்கிரஸ் மற்றும் திருமா எங்கப்பா ?

    பதிலளிநீக்கு
  3. அரசியலில் எதுவும் நடக்கலாம் பொறுத்திருந்து பாப்போம்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு
    கேலியாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை
    நிஜமாகவே இப்படி பேட்டி கொடுத்தால்
    ஆச்சரியப்படுவதற்கில்லை
    மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. சுவையான கட்டுரை. சிந்திக்கவும் செய்தது.

    பதிலளிநீக்கு
  6. Vanniar ruled TN 150 years ago?. Thats a lie... The only people who ruled Tamilnadu 500 years before british are the Naickers, few muslim nawabs and few thevers

    பதிலளிநீக்கு
  7. பொன்.முத்துக்குமார்9:52 PM, அக்டோபர் 16, 2012

    "ஏற்கனவே என் குடும்பத்தில் இருந்து யாராவது கோட்டையில் கால் வைத்தால், முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்று சாடியிருந்தார்."

    மருத்துவர் மாலடிமை அப்படி சொல்லலையாம். தனது கட்சி எம்மேலேக்கள் தவறு செய்தா-தான் முச்சந்தில நிறுத்தி சாட்டையால் அடிப்பேன்-ன்னு சொன்னாராம்.

    ஐயாவோட இணைய முகவர் ஒருத்தர் (பேரு அருள்-ன்னு நினைக்கிறேன்) 'தெளிவா' விளக்கமளித்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  8. nalla kamedi

    vanniyar enpathai vellaiyar enru thavaraaga eluthivittarkalaa? enra kelvei

    பதிலளிநீக்கு