எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ‘நீதானே என் பொன்வசந்தம்’. காதல்,
காதலர்கள், ஈகோ என்று ஏற்கனவே பார்த்து சலித்த கதையை ஃப்ரெஷ்ஷாக கவுதம் இயக்கியிருக்கிறார்.
ஆனாலும் இசைதான் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது.
முப்பத்தியெட்டு வருடங்களாக ஒரு இசையமைப்பாளர் எப்படி அதே consistencyயை தொடர்ச்சியாக maintain செய்ய முடியும் என்று எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. அதனால்தான் இளையராஜா
இசைஞானி. இதுவரை வந்த இளையராஜா படங்களிலேயே சிறைச்சாலையும், ரமணாவும்தான்
பின்னணியிசையில் தலைசிறந்தது, அந்த சாதனையை உடைக்கவே முடியாது என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். நீ.எ.பொ.வ மிகச்சுலபமாக உடைத்தெறிந்திருக்கிறது. எங்கே டிரம்ஸ்
அடிக்க வேண்டும், எங்கே கிடாரை மீட்டவேண்டும், எங்கே வயலினை முழங்கவேண்டும் என்பது
மட்டுமில்லாமல் எங்கே மவுனிக்க வேண்டும் என்கிற வித்தையை கற்றுத்
தேர்ந்திருப்பதில்தான் ராஜாவின் இமாலய வெற்றி அடங்கியிருக்கிறது. இயக்குனர்
எடுத்திருக்கும் காட்சிகளின் வீரியத்தை அல்லது பலகீனத்தை முழுமையாக உணர்ந்து, எங்கே மேம்படுத்த வேண்டும், எங்கே சரிக்கட்ட வேண்டும் என இளையராஜா அளவுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் உலகில் வேறு யாரும் இருந்துவிட
முடியாது.
பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட முக்கா மணி நேரத்துக்கு
ராஜா பாட்டுதான். பல பாடல்களை கவுதம் திரும்பத் திரும்ப
ரிபீட் அடித்திருப்பதால் எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீ.எ.பொ.வ
பாடல்களாலேயே நிறைந்திருக்கிறது. ஒரு சர்வதேசத்தரம் வாய்ந்த வீடியோ இசை ஆல்பத்தை
காணும் அனுபவம் இதனாலேயே படம் பார்க்கும்போது கிடைக்கிறது. இந்த அற்புதமான, அழகான அனுபவத்தை
உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்களை பார்த்து அனுதாபம்தான் கொள்ள முடிகிறது.
நீ.எ.பொ.வ.வின் எட்டு பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எட்டு
அதிசயங்கள். ‘காற்றை கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’ என்று கார்த்திக் பாடும்போது,
லேசாக காற்றடித்து உங்கள் முன்னந்தலை முடி அசைந்து நிற்கும் உணர்வு உங்களுக்கு
ஏற்படவில்லையெனில், உங்கள் காதில் ஏதோ கோளாறு என்று பொருள். ‘சாய்ந்து சாய்ந்து
உனை பார்க்கும்போது’ என யுவன்ஷங்கர் ராஜா உருகும்போது தேன்வந்து பாயுது
காதினிலே. அப்போது காதைத் தொட்டுப் பாருங்கள். நிஜமாகவே தேனின் பிசுபிசுப்பு.
‘என்னோடு வா வா’வுக்கு உங்கள் கால்கள் தாளம் போடவில்லையெனில், சைக்காலஜிக்கலாகவே எதனாலோ நீங்கள்
பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம். ‘பெண்கள் என்றால் பொய்யா
பொய்தானா’, ’சற்று முன்பு பார்த்த’, ’முதல் முறை’ என்று, படத்தின் எல்லாப்
பாடல்களிலுமே ராஜா நிகழ்த்தியிருக்கும் சாதனை அசாத்தியமானது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜாவின் இசையை மட்டுமே பிரதானமாக நம்பி
இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ராஜாவின் நண்பர்கள் அவருடைய இசையில் படமெடுத்திருக்கிறார்கள்.
ராஜாவே சொந்தமாக படம் எடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்த இயக்குனரும் தன்னுடைய
ஈகோவை சுத்தமாக விட்டுக் கொடுத்து, அவருக்கு தந்திராத மிகப்பெரிய இடத்தை,
கவுரவத்தை நீ.எ.பொ.வ.வில் கவுதம் தந்திருக்கிறார். நாடி, நரம்பெல்லாம் ராஜாவின்
இசைவெறி ஏறிப்போன ஒரு ரசிகனால் மட்டுமே இப்படிப்பட்ட படத்தை கொடுக்க முடியும்.
படத்தின் டைட்டிலே ராஜாவுக்கு செய்யப்பட்டிருக்கும் tributeதான்
எனும்போது, மேலும் விளக்கி விளங்கிக்கொள்ள ஏதுமில்லை.
once again thank you gautham!