நந்தகுமாரின் போனவருடத்து டயரியிலிருந்து…
காத்தாடி விடுவது சிறுவயதிலிருந்தே பிடித்தமான செயல். எட்டு வயதில் வால் வைத்த கலர் காத்தாடி. பத்து வயதில் பாம்பே ரெடிமேட் காத்தாடி. பண்ணிரெண்டு வயதில் ஃபுல்ஷீட் பாணா காத்தாடி. நூல்கண்டு முழுக்க தீரும் வரையில் பறக்க விட்டு.. எண்ணிப் பார்க்க முடியாத உயரத்தில் அமைதியாக, நிலையாக நாம் விடும் காத்தாடி பறப்பதை காணும்போது, ஒருவகையான மோனநிலையில் மனம் அமைதி கொள்ளும்.
இதில் இரண்டு பிரச்னைகள்.
ஒன்று, மாஞ்சா போடுவது. முன்பெல்லாம் ரெடிமேட் மாஞ்சா நூல்கண்டு கிடைக்காது. வெள்ளை நூல் வாங்கி, பிரத்யேகமாக மாஞ்சா தடவவேண்டும். பெருவண்டு, சிறுவண்டு என்று இருநூல் வகை. பெருவண்டு நூலில் காத்தாடி விட்டால் இடையில் ‘தொப்பை’ விழும். சிறுவண்டு ஸ்ட்ரிப்பாக இருக்கும். ஆனால் டீலுக்கு தாங்காது. மாஞ்சாநூல் இல்லாமல் காத்தாடி விடுபவன் சப்பை. அவனால் ‘டீல்’ போக முடியாது. எனவே உயரவும் பறக்க மாட்டான். தன் காத்தாடிக்கு அருகில் வேறொரு காத்தாடியை பார்த்ததுமே பயந்துப்போய் தரையிறங்கிவிடுவான்.
மாஞ்சாவுக்கான கச்சாவான கலவையை தயாரிப்பது கல்யாணவேலை. தனிமனித முயற்சியில் சாத்தியமாகாது. கலர் பவுடர், வஜ்ஜிரம், நைஸ் கண்ணாடி பீஸ், இன்னபிற சமாச்சாரங்கள் போட்டு, சுண்டக் காய்ச்ச வேண்டும். காத்தாடியை பறக்கவிட்டு வெள்ளைநூலில் திக்காக மாஞ்சாவை தடவிக்கொண்டே வரவேண்டும். விரல் அறுபடாமல் மாஞ்சா போடுவது தனி கலை. எல்லோருக்கும் வராது. முழு நூல்கண்டும் முடிந்தவுடன், மாஞ்சா காய்வதற்கு கொஞ்சம் நேரமெடுக்கும். மாஞ்சா போடும்போது எவனாவது டீல் விட்டால் முடிந்தது கதை.
கை மாஞ்சா என்றொரு ரிஸ்க் இல்லாத முறை இருக்கிறது. காத்தாடி இல்லாமல் மாஞ்சா போடும் முறை. இரண்டு மரங்களுக்கு இடையே நூலை இழுத்து, இழுத்து கிட்டத்தட்ட நெசவு பாவும் வேலை போல மாஞ்சா போடும் முறை. கை மாஞ்சா போடும் பயல்களுக்கு ஏரியாவில் மரியாதையே இருக்காது.
சில டொக்குகள் ட்வைன் நூல் வாங்கி மாஞ்சா போட்டு வைத்துக் கொள்வார்கள். ட்வைன் நூலில் காத்தாடி விடுவதைப் போல கோழைத்தனம் வேறில்லை. ரொம்ப உயரப்போக முடியாது என்பதோடு டீலும் போடமுடியாது. டீல் போட்டால் ட்வைன் நூல் அறவே அறாது. அதே நேரம் அறுக்கவும் செய்யாது.
இரண்டு, காற்று. காலை பத்து மணிக்கு மேல் கிரவுண்டில் காற்று அடிப்பது கிட்டத்தட்ட நின்றுவிடும். மரங்களில் இலைகள் அசையவே அசையாது. அந்த நேரத்தில் காத்தாடி விட நினைப்பவனை விட பெரிய துரதிருஷ்டசாலி வேறு யாரும் இருந்துவிட முடியாது. காத்தாடி ‘டேக் ஆஃப்’ ஆகாது. யாராவது காத்தாடியை பிடித்து தூக்கிவிட்டு உதவினால் மட்டுமே, தட்டி தட்டி மேலே ஏற்ற முடியும். அதற்கும் கூட சூத்திரநூல் நேர்த்தியாக போடப்பட்டிருக்க வேண்டும். எல்லா காத்தாடிக்கும் சூத்திரம் நறுக்காக அமையாது. அவ்வாறு அமையப்பெறாத காத்தாடிகள் எழும்புவது நல்ல காற்று அடிக்கும்போது மட்டுமே சாத்தியம்.
இம்மாதிரி நேரங்களில் காத்தாடியை கிளப்ப சில நேரங்களில் இரண்டு மணி நேரம்கூட ஆகும். எத்தனையோ முறை வியர்வை தெறிக்க ஓடி ஓடி கிளப்பியிருக்கிறேன். அவ்வாறு கிளப்ப முடியாத சந்தர்ப்பங்களில் சில முறை வெறுத்துப் போய் காத்தாடியை கிழித்துப் போட்டுவிடுவேன். வேறு புது காத்தாடி வாங்க அப்பாவிடம் காசு கேட்டு கெஞ்சுவேன்.
புது காத்தாடி வாங்கி முதல்முறையாக பறக்க விட்டதுமே ‘டீல்’ போட மனம் வராது. அப்படியும் யாராவது டீலுக்கு வர்றியா என்று கேட்டுக்கொண்டே இருப்பான். கேட்டுக்கொண்டே இருப்பான் என்றால் வாய்திறந்து கேட்கமாட்டான். அவனுடைய காத்தாடியும், நம்முடைய காத்தாடியும் வானத்தில் சமிக்ஞை மூலமாக பேசிக்கொள்ளும். டீலுக்கு ரெடி என்றதுமே ‘சர்’ரென்று சப்தம் எழுப்பிக்கொண்டே அவனுடைய காத்தாடி நம் காத்தாடிக்கு அருகில் வரும். நாமும் அவனை நெருங்குவோம். டீல் விழுந்ததுமே நம் கைவிரல்கள் ஒரு அதிர்வை உணரும். வேகமாக நூல் விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். க்ரிப் இல்லாமல் காத்தாடி அப்படியே வானில் நழுவி விழுவது மாதிரி தெரியும். நூல்கண்டு முடிந்துவிட்டாலோ அல்லது நூல்விடுவதில் போதிய திறமையில்லாமல் இருந்தாலோ டீலில் தோற்றுவிடுவோம். நூல் அறுந்து, நம் காத்தாடி நான்கைந்து கிலோ மீட்டர் தாண்டி எங்காவது போய் விழும். சாமர்த்தியமிருப்பவர்கள் ஓடிப்போய் எடுத்துக்கொள்ளலாம். இல்லாதவர்கள் புது நூல்கண்டும், புது காத்தாடியும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். நான் பல டீல்களில் வென்றிருக்கிறேன். போலவே பல டீல்களில் தோற்றுமிருக்கிறேன். டீலில் தோற்ற நேரங்களில் அறுந்து, வீழும் என்னுடைய காத்தாடிகள் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை. நான் காத்தாடி பிடிக்க ஓடியதுமில்லை.
02-01-2013 தினகடிதம் நாளிதழிலிருந்து…
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (34). சோழிங்கநல்லூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புனிதா (27) என்கிற மனைவியும், சம்யுக்தா (2) என்கிற அழகான பெண் குழந்தையும் உண்டு. இவர் குடும்பத்தோடு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினார். மதியத்துக்கு மேல் தன் மனைவியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு பிரியாணி வாங்கிக்கொண்டு, புளியந்தோப்பில் இருக்கும் மாமியார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (34). சோழிங்கநல்லூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புனிதா (27) என்கிற மனைவியும், சம்யுக்தா (2) என்கிற அழகான பெண் குழந்தையும் உண்டு. இவர் குடும்பத்தோடு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினார். மதியத்துக்கு மேல் தன் மனைவியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு பிரியாணி வாங்கிக்கொண்டு, புளியந்தோப்பில் இருக்கும் மாமியார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சென்ட்ரல் தாண்டி வால்டாக்ஸ் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பறந்துவந்த பட்டம் ஒன்றின் மாஞ்சா நூல் சிக்கி பைக் விபத்துக்குள்ளானது. நந்தகுமாரின் மனைவியும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.