அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே மறுத்து விட்டார். அவருடைய பிரத்யேக அலுவல் பயணங்களுக்காக
பரிந்துரைக்கப்பட்ட ஏடபிள்யூ-101 ரக ஹெலிகாஃப்டருக்கு சொல்லப்பட்ட விலை அப்படி.
2009ஆம் ஆண்டு ஒபாமா மறுத்த அதே ரக ஹெலிகாப்டர்கள் பன்னிரெண்டு வேண்டுமென ரூபாய்
மூவாயிரத்து ஐநூற்றி நாற்பத்தியாறு கோடி விலைக்கு ஒப்புக்கொண்டு 2010ல் இந்தியா
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இந்த மொத்த ஒப்பந்தத் தொகையில் முன்னூற்றி
அறுபத்தி இரண்டு கோடி ரூபாய், இந்தியாவில் ‘யார் யாருக்கோ’ கமிஷனாக கைமாற்றப்பட்டிருக்கிறது
என்பதுதான் ஊடகங்களில் பரபரப்பாக அடிபடும் பாதுகாப்புத்துறையின் ஹெலிகாப்டர் ஊழல்.
இந்த ஊழலை கண்டுபிடித்ததும் கூட இந்தியா அல்ல. இந்தியாவோடு ஒப்பந்தம் போட்ட
நிறுவனத்தின் தலைமை அதிகாரி, இத்தாலியில் வேறு மோசடிவிவகாரங்களில் கைது
செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, போனஸாக இதுவும் தெரியவந்திருக்கிறது.
குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் இப்போது நாட்டுக்குள்
பறக்க ருஷ்யத் தயாரிப்புகளான எம்.ஐ.-8 மற்றும் எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களைதான்
பயன்படுத்துகிறார்கள். பழங்கால சரக்குகளான இவற்றை காலாவதியாக்கிவிட்டு, மேம்பட்ட
பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புது ஹெலிகாப்டர்கள் தேவையென்று பாதுகாப்புத்துறையில்
நீண்டநாட்களாகவே கோரப்பட்டு வந்தது.
பல நூறு கோடி செலவில் ஏற்கனவே வி.வி.ஐ.பி.களுக்காக விமானங்கள் ஏராளமாக
இருக்கின்றன. ஆனாலும் விமானங்களை விட ஹெலிகாப்டர்களை உள்நாட்டு பயணங்களுக்கு
பயன்படுத்துவது சுலபமானது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
விமான நிலையமே இல்லாத ஊர்களிலும் கூட ஹெலிபேட் அமைத்து ஹெலிகாப்டர்களை
தரையிறக்கலாம்.
மூவாயிரத்து சொச்சம் கோடியை முழுங்கிய ஒப்பந்தம் மூலமாக கடந்த ஆண்டு மூன்று
ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டன. அடுத்த மாதம் மூன்று ஹெலிகாப்டர்கள்
வந்துவிடுமாம். மீதமுள்ள ஆறு ஹெலிகாப்டர்களும் முறையே மே மற்றும் ஜூலையில்
வந்துவிடும் என்கிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா (இத்தாலி அரசுக்கு இந்நிறுவனத்தில் 30%
பங்கு உண்டு) என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட்
நிறுவனத்தோடுதான் இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம்
கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னூற்றி அறுபத்தி இரண்டு கோடி ரூபாய் இந்தியாவில்
சிலருக்கு தரப்பட்டிருக்கிறது. அதில் இருநூறு கோடி ரூபாய் லண்டன் வழியாக மீண்டும்
இத்தாலிக்கே சென்றிருக்கிறது. அங்கு தேர்தல் நடந்தபோது ஒரு கட்சியின் தேர்தல்
செலவுக்கு இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு சக்திகள் தங்கள் ஊர்
அரசியலில் தலையிடுவதை இத்தாலிய அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான்
ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவர் கிஸ்பி ஓர்ஸி, அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட்
நிறுவனத்தின் தலைவர் பர்னோ ஸ்பங்க்நோலினி ஆகியோர் கைது செய்யப்பட்டு
விசாரிக்கப்பட்டார்கள்.
அறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையை இத்தாலிய
நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள் விசாரணை அதிகாரிகள். இந்திய விமானப்படையின்
தலைமை அதிகாரியாக இருந்த எஸ்.பி.தியாகிக்கு கமிஷன் பணம் வழங்கப்பட்டிருப்பதாக அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘நிறைய பணம், ஆனால் குறிப்பாக எவ்வளவு என்று
தெரியவில்லை’ என்கிற வாசகம் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. தியாகியின் உறவினர்கள்
மூன்று பேருக்கும், இத்தாலிய நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே ‘புரோக்கர்கள்’ சிலர்
பாலமாக பணிபுரிந்தனர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கமிஷனை எப்படி பெற்றார்கள்? ஐ.டி.எஸ். இந்தியா என்கிற பெயரில் இந்தியாவில் ஒரு
டுபாக்கூர் ஐ.டி. நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிறுவனம் இத்தாலிய
நிறுவனத்துக்கு பல்வேறு ஐ.டி. துறை சேவைகளை செய்ததாக பொய்யான ஆவணங்கள்
தயாரிக்கப்பட்டு, அந்த சேவைக்காக சுமார் நூற்றி நாற்பது கோடி ரூபாய் பணம்
கைமாறியிருக்கிறது. பணத்தை வெள்ளையாகவே மாற்ற இதுமாதிரி நிறைய டெக்னிக்குகளை
கையாண்டிருக்கிறார்கள்.
தன் மீதும், தன் உறவினர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டை
முன்னாள் தலைமை அதிகாரி எஸ்.பி.தியாகி கடுமையாக மறுத்திருக்கிறார். “இந்த
விவகாரத்தில் குறிப்பிடப்படும் புரோக்கரை நான் என்னுடைய உறவினர்களின் இடத்தில்
வைத்து சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்களுடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று
கேட்டால் நிச்சயமாக இல்லை. நான் ஓய்வு பெற்ற பிறகே மொத்த கொடுக்கல் வாங்கலும்
நடந்திருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் தியாகி.
என்ன நடந்தது என்பதை அறிய மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு
உத்தரவிட்டிருக்கிறது. ராணுவ அமைச்சகம் முறைப்படி சி.பி.ஐ.யிடம் புகார் செய்தபிறகு
விசாரணை தொடங்கியிருக்கிறது. ஊழல் நடந்ததா. நடந்திருந்தால் கமிஷன் கைமாறியதா.
அதில் இந்தியர்களின் பங்கு என்னவென்று சி.பி.ஐ. விசாரணையை நடத்துகிறது. இதற்கிடையே
இந்த ஒப்பந்தத்தையே மொத்தமாக ரத்து செய்யவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, தீ என்று பஞ்சபூதங்களிலும் ஊழல் ஊழித்தாண்டவம்
ஆடும் காலம் இது. முதன்முறையாக நாட்டின் முக்கியமான துறையின் தலைமை அதிகாரியாக இருந்த ஒருவரே
ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கடவுள் என்று
ஒருவர் இருந்தால் அவர்தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.
தேவையா இவ்வளவு செலவு?
நாட்டில் எழுநூற்றி அறுபத்தியோரு பேருக்கு ஒரு போலிஸ்தான் பாதுகாப்புக்கு
இருக்கிறார். அதே சமயம் ஒரு வி.ஐ.பி.யை மூன்று போலிஸார் பாதுகாக்கிறார்கள். நாடு
முழுக்க சுமார் பதினைந்தாயிரம் வி.ஐ.பி.க்கள் ‘பாதுகாக்கப்பட்டவர்களாக’
இருக்கிறார்கள். இவர்களுக்காக சுமார் ஐம்பதாயிரம் போலிஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கான செலவு வருடா வருடம் பல கோடிகளை விழுங்குகிறது.
வி.ஐ.பி.க்களை விட பொதுமக்களுக்குதான் பாதுகாப்பு அவசியமென்று சமீபத்தில்
உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்திருக்கிறது.
அதிருக்கட்டும். இப்போது சர்ச்சைக்குள்ளான ஹெலிகாப்டர்களும் கூட
வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை உத்தேசித்து வாங்கப்பட்டவைதான். ஒரு ஹெலிகாப்டரின்
விலை தோராயமாக முன்னூறு கோடி ரூபாய்.
பாதுகாப்பை முன்வைத்து சில ஊழல்கள்
1987ல் பாதுகாப்புத்துறை அமைச்சராக வி.பி.சிங் இருந்தார். ஜெர்மனியில் இருந்த இந்தியத் தூதரிடமிருந்து ஒரு டெலிகிராம் அவருக்கு வந்தது. நீர்மூழ்கி நிறுவனம் ஒன்றோடு நடந்த ஒப்பந்தத்தில் ஏழு சதவிகிதம் (அதாவது 20 கோடி) கமிஷனாக யாரோ ஒரு புரோக்கருக்கு வழங்கப்பட்டதாக அதில் செய்தி இருந்தது. இந்த ஊழல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே வி.பி.சிங் ராஜினாமா செய்தார். பிற்பாடு அவரோ பிரதமர் ஆனபிறகு 1990ல் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார். 2005ல் இவ்வழக்குக்கு பால் ஊற்றப்பட்டது.
இந்திய ஊழல்களிலேயே அதிக புகழ்பெற்றது எனும் பெருமைக்குரியது போபர்ஸ் ஊழல்.
இந்தியாவுக்கு பீரங்கி விற்ற போபர்ஸ் நிறுவனத்திடம் நாட்டின் பிரதமராக இருந்த
ராஜிவ்காந்தியும், புகழ்பெற்ற ஹிந்துஜா குடும்பத்தினரும் லஞ்சம் பெற்றதாக
குற்றச்சாட்டு. புரோக்கராக செயல்பட்ட குவாத்ரோச்சியை இந்திய அரசின் அதிகாரத்தில்
உயர்மட்டத்தில் இருந்தவர்களே இத்தாலிக்கு தப்பவிட்டதாக அப்போது பரபரப்பாக
பேசப்பட்டது. எது எப்படியோ ஊழலுக்கு சம்பந்தப்படாத இன்னொரு விஷயம். கார்கில் போரில்
போபர்ஸ் பீரங்கிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அவை சிறப்பாக இயங்கியதாகவும், அதனாலேயே
பாகிஸ்தானை விரைவில் வெல்ல முடிந்தது என்றும் அப்போது இராணுவ அதிகாரிகள் சிலர்
சொன்னார்கள்.
தெஹல்காவின் இரண்டு நிருபர்கள் தங்களை ஆயுத நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாக நடித்து அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் என்று பலரோடு பேசி ரகசியமாக ‘ரெகார்ட்’ செய்தார்கள். ஆயுதங்கள் வாங்குவதில் நடக்கும் பேரங்கள், திரைமறைவு கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ராஜினாமா செய்யவேண்டி வந்தது. அப்போதிலிருந்து சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்துக்கொண்டே இருக்கிறது. இன்றுவரை உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
பெங்களூரில் ஒரு நிறுவனம் இந்திய இராணுவத்துக்கு தேவையான வாகனங்களை தயாரித்து வழங்கி வந்தது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஆர்டர் வாங்குவதற்காக பதினான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட எழுநூற்றி ஐம்பது கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகவும், கமிஷனாகவும் அந்நிறுவனம் வழங்கியிருக்கிறது.
தெஹல்காவின் இரண்டு நிருபர்கள் தங்களை ஆயுத நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாக நடித்து அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் என்று பலரோடு பேசி ரகசியமாக ‘ரெகார்ட்’ செய்தார்கள். ஆயுதங்கள் வாங்குவதில் நடக்கும் பேரங்கள், திரைமறைவு கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ராஜினாமா செய்யவேண்டி வந்தது. அப்போதிலிருந்து சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்துக்கொண்டே இருக்கிறது. இன்றுவரை உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
பெங்களூரில் ஒரு நிறுவனம் இந்திய இராணுவத்துக்கு தேவையான வாகனங்களை தயாரித்து வழங்கி வந்தது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஆர்டர் வாங்குவதற்காக பதினான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட எழுநூற்றி ஐம்பது கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகவும், கமிஷனாகவும் அந்நிறுவனம் வழங்கியிருக்கிறது.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவமானப்படவும், இந்த நாட்டில் பிறந்துத்
தொலைத்ததற்காக வேதனைப்படவும் வேண்டிய ஊழல் சவப்பெட்டி ஊழல். கார்கில் போரில்
வீரமரணமடைந்த மாவீரர்களின் உடல்களை வைக்க வாங்கப்பட்ட சவப்பெட்டிகளிலும் சுரண்டி
தின்றார்கள் ஊழல் பெருச்சாளிகள். ஒரு சவப்பெட்டிக்கு 2500 டாலர் கொடுத்து இந்திய
அரசு வாங்கியது. அதே பெட்டி முன்பாக 172 டாலருக்குதான் வாங்கப்பட்டது.
(நன்றி : புதிய தலைமுறை)
(நன்றி : புதிய தலைமுறை)