துரோணர் தன் சிஷ்யர்களான பஞ்சபாண்டவர்களை பயிற்சிக்காக ஆரண்யத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஆற்றின் அடுத்த கரையில் இருக்கும் மாமரம் ஒன்றினை நோக்கி ஐவரையும் குறி வைக்கச் சொல்கிறார். ஒவ்வொருவரிடமும் “உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்கிறார். ஒருவர் மறுகரை தெரிகிறது என்கிறார். இன்னொருவர் மரம் தெரிகிறது என்கிறார். மற்றொருவர் கிளை தெரிகிறது என்கிறார். மற்றுமொருவர் கிளையில் அமர்ந்திருக்கும் கிளி தெரிகிறது என்கிறார். அர்ஜூனன் என்ன சொல்லியிருப்பான் என்பதை மகாபாரதத்தை வாசித்தவர்களும், டிவியில் பார்த்தவர்களும், சன் டிவியில் விரைவில் பார்க்கப் போகிறவர்களும் அறிவார்கள்.
அர்ஜூனன் சொல்கிறான். “ஐயாயிரம் வருடங்கள் கழித்து அந்த இடத்தில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் வரப்போகிறது. அதனுடைய பதினைந்தாவது மாடியில் கிளி மாதிரி ஒரு ஃபிகர் நின்றிருப்பது எனக்குத் தெரிகிறது”. அதாவது அர்ஜூனனின் பார்வைக் கூர்மை யுகங்களை தாண்டியதாம். இப்படியொரு ரகளையான ஓபனிங் காட்சியை சமீபத்தில் எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. அடுத்த காட்சியே அந்த அப்பார்ட்மெண்ட். அர்ஜூனனாக இருந்தவன் இந்த அப்பார்ட்மெண்டில் மாடிவீட்டு மாதுவாக –அதாவது கேர்டேக்கராக- வேலை பார்க்கிறான்.
மலையாளிகளுக்கு இலக்கியப் பெருமிதம் அதிகம். தங்களுடைய சினிமாவும் கூட இலக்கியத்தின் ஒரு கிளையாக வளரவேண்டும் என்று ஆவல் கொண்டவர்கள். ‘நாதொலி ஒரு செறிய மீனல்ல’ (நெத்திலி ஒரு சின்ன மீன் மட்டுமல்ல என்பது மாதிரி மீனிங்) என்பதை மூக்கை மூடிக்கொண்டு வாசித்தீர்களேயானால், மிகச்சரியாக அவர்களது ஸ்லாங்கில் வாசித்துவிடலாம். நாவலுக்கு வைக்கும் தலைப்பு மாதிரியே சினிமாவுக்கும். இலக்கியத்தையும், சினிமாவையும் இணைக்கும் புள்ளி எதுவென்ற புரிதல் அவர்களுக்கு நெடுங்காலமாகவே இருக்கிறது. ஓர் இலக்கியவாதியை வசனம் எழுதவைத்துவிட்டால் மட்டும் சினிமா இலக்கியமாகி விடாது என்கிற அறிவும் கொண்டவர்கள்.
இப்படம் ஒருவகையான நான்-லீனியர் மாதிரி என்றும் சொல்லலாம். அதாவது நான்லீனியர் படங்களில் சம்பவங்கள் முன்பின் மாறி அமைக்கப்படும். இப்படத்தில் கதையின் சம்பவங்களும், ஹீரோ நாவலில் எழுதும் சம்பவங்களும் மாறி மாறி ஆனால் நேர்க்கோட்டில் வருகிறது. நாயகன் ஓர் அப்பார்ட்மெண்ட் கேர்டேக்கர் மட்டுமல்ல. ரகசிய எழுத்தாளனும் கூட. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் சிலரால் சில வேண்டத்தகாத சம்பவங்கள் அவனுக்கு ஏற்படுகிறது. எனவே தான் எழுதும் நாவலில் அதே பாத்திரங்களை உருவாக்கி, எதிர்மறையாக பழிவாங்குகிறான். நாவலின் சம்பவம், நிஜக்கதையுமாக பரபரப்பான க்ளைமேக்ஸில் சுபம். நம்மூர் இலக்கியவாதிகள் அவ்வப்போது பிரதிக்குள் பிரதி என்றெல்லாம், சாதாரண வாசகனுக்கு புரியாத மாதிரி ஜல்லியடிப்பார்களே? அந்த மேட்டரைதான் மிக எளிமையாக பார்வையாளனுக்கு இப்படத்தில் முன்வைக்கிறார் இயக்குனர். ஓரளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா க்ளைமேக்ஸில் இந்த உயரத்தை எட்டினார் கவுதம் வாசுதேவ் மேனன்.
படத்தின் இயக்குனர் வி.கே.பிரகாஷ். பெங்களூரில் ஒரு விளம்பர நிறுவனம் வைத்திருக்கிறார். 2000ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் படத்துக்கே தேசிய, மாநில விருதுகள் கிடைத்தது. ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ சிந்திக்கிறவர் என்று மலையாளத் திரையுலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவர். மிக சீரியஸான கதையாக இருந்தாலும், அதை ‘சிரி’யஸான வடிவில் வழங்குவதில் கில்லாடி.
படத்தின் ஹீரோ பஹாத் ஃபாசில். இயக்குனர் ஃபாசிலின் மகன். எனவே ஃபாசிலின் முதல் படமான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்களை’ செம கலாய் கலாய்க்கிறார்கள். நாவலில் வரும் ஹீரோவுக்கு பெயர் நரேந்திரன். மஞ்சில் விரிஞ்சவில் வில்லனாக அறிமுகமான மோகன்லாலின் பெயர். மேலும் அதே படத்தின் வேறு இரண்டு பாத்திரங்களின் பெயரையும் இப்படத்தில் பயன்படுத்துகிறார்கள்.
பஹாத்தை பதினெட்டு வயதில் 2002ஆம் ஆண்டு அவரது அப்பா ஃபாஸிலே அறிமுகப்படுத்தினார். படம் பயங்கர ப்ளாப். “என் அப்பாவை யாரும் திட்டாதீர்கள். இந்தப் படத்தின் தோல்விக்கு நான்தான் காரணம். நடிக்க ஆசைப்பட்டேனே தவிர, அதற்கான எந்த தகுதியையும் நான் கொண்டிருக்கவில்லை” என்று அப்போது அறிக்கை விட்டுவிட்டு, அமெரிக்காவுக்கு படிக்கப் போனார். 2009ஆம் ஆண்டு ஊர் திரும்பினார். மலையாளத் திரையுலகமே ஒன்றிணைந்து வேலை பார்த்து, சொல்லி அடித்த கில்லியான சூப்பர்ஹிட் படமான ‘கேரளா கஃபே’வில் நடித்தார். அதிலிருந்து ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் நான்கு ஆண்டுகளாக நடித்துக் கொண்டே இருக்கிறார். நான்கு ஆண்டுகளில் பதிமூன்று படங்கள். இதில் டயமண்ட் நெக்லஸ், 22 ஃபீமேல் கோட்டயம் மாதிரி சூப்பர் டூப்பர் ஹிட்டுகளும் அடக்கம். அடுத்து இப்போதே ஆறு படங்கள் புக் ஆகிவிட்டது. லேசான முன் தலை வழுக்கை, சுமாரான உடல்வாகு என்றாலும் பஹாத்துக்கு ஒருமாதிரியான கவர்ச்சி இருக்கிறது. மிகச்சுலபமாக கேரளத்து இளம்பெண்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்டார்.
நாதொலியை எழுதியவர் ஷங்கர் ராமகிருஷ்ணன். இவர் முன்பாக எழுதியது உருமி. அதற்கும் முன்பாக கேரளா கஃபேவில் (மொத்தம் 10 குறும்படங்கள் சேர்ந்தது இந்தப்படம்) ஓர் குறும்படத்தை எழுதி, இயக்கினார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ‘நாதொலி’ அபோவ் ஆவரேஜ் என்று ரிசல்ட் வந்துவிட்டதால், மலையாளத்தின் இளம் இயக்குனர்கள் பலரும் ஷங்கர் ராமகிருஷ்ணனோடு வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் உலகத்தரம் என்பதில் சந்தேகமேயில்லை. எடிட்டர் மகேஷ் நாராயணன். எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது இல்லையா? நம்மூர் விஸ்வரூபத்தின் எடிட்டர்தான். திறமை எங்கிருந்தாலும் அதை தேடி கண்டுபிடிப்பதில் கமலுக்கு நிகர் கமலேதான்.
நாதொலி ஒரு செறிய மீனல்ல, தவற விட்டுவிடக்கூடாத படம். சிக்கலான கதையை எப்படி குழப்பமில்லாமல் ரசிகனுக்கு பிரசண்ட் செய்வது என்பதற்கு இப்படத்தை ஒரு பாடமாக மற்ற சினிமாக்காரர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இந்தியில் எடுக்கப்பட்டால் ஓவர்சீஸ் கலெக்ஷன் அள்ளும். துரதிருஷ்டவசமாக குறைந்தளவு பரப்பளவே கொண்ட ஓவர்சீஸ் ஏரியாதான் மலையாளப்படங்களுக்கு வாய்த்திருக்கிறது.
(நன்றி : cinemobita.com)
(நன்றி : cinemobita.com)
அறிமுகத்திற்கு நன்றிங்க..
பதிலளிநீக்குநன்றி!
பதிலளிநீக்கு'நத்தோலி' ஒரு செறிய மீனல்ல
நல்லதொரு விமர்சனம். நன்றி.
பதிலளிநீக்கு