4 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : uncut version பார்க்க..

ஊடகங்களால் பிரபலமாகி விட்ட சத்தியவேடு சீனிவாசா தியேட்டர் கொஞ்சம் பெரிய சைஸ் ஆம்னி வேன் மாதிரி இருக்கிறது. நூற்றி ஐம்பது சீட்டுகள் இருந்தாலே அதிகம். அதிலும் பாதி சீட்டுகள் உடைந்திருக்கும் என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ‘சிசென்டருக்கும் கீழே லெவல் தியேட்டர். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் அந்த சிறிய அரங்கின் முன்பாக திரண்டிருந்தது கொடுங்கனவாக இன்னும் சில நாட்களுக்கு நடு இரவில்கூட ஞாபகத்துக்கு வரும். நேற்று காலை போய் முட்டி, மோதிப் பார்த்துவிட்டோம். நைட் ஷோ வரை டிக்கெட் கிடைக்காது என்றார்கள். ‘பிரெஸ்’சுக்கும் ஆந்திராவில் எந்த மதிப்புமில்லை.

கவுண்டரில் சாஸ்திரத்துக்கு இருபது, முப்பது டிக்கெட் வினியோகிக்கிறார்கள். ஐம்பது ரூபாய் விலை. மீதியெல்லாம் கள்ள மார்க்கெட்டில் ஓடுகிறது. நேற்று சிலர் ஐநூறு ரூபாய் கூட கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். நாற்காலிகள் முழுக்க நிரம்பிவிட ‘ஓவர்ஸ்’ டிக்கெட் வினியோகம் நடக்கிறது. பாதி பேர் தரையில் உட்கார்ந்தும், ஓரமாக நின்றுக்கொண்டும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தியேட்டர் ஓனரின் மகன் என்று சொல்லப்பட்டவர் திரையரங்கு முன்பாக திரண்டிருந்த ரசிகர்களிடையே பால்கனியில் இருந்து கமல் ஸ்டைலில் பேசினார். “நாகலாபுரம் இங்கிருந்து இருவத்தஞ்சி கிலோ மீட்டர் இருக்கும். அங்கேயும் வேல்முருகன் தியேட்டர்லே வெள்ளிக்கிழமையிலேருந்து தமிழ்லேதான் போட்டிருக்காங்க. தயவுசெஞ்சி எல்லாரும் அங்கே போய் பாருங்க”

கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொய் சொல்கிறார் என்று நினைத்து எல்லோரும் அப்படியே இருக்க, சில பேர் நாகலாபுரத்துக்கு போன் போட்டு விசாரித்து ‘மேட்டர் ஓக்கே’ என்றார்கள். சத்தியவேட்டில் இருந்த பாதி கூட்டம் நாகலாபுரத்துக்கு விரைந்தது.

வேல் முருகனும் தம்மாத்துண்டு தியேட்டர்தான். ஆனால் சத்தியவேடு சீனிவாசாவை விட கொஞ்சம் பெரியது. போன வாரம் முழுக்க ‘விஸ்வரூபலு’வாக ஈயடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று ‘பல்ப்’ எரிய விஸ்வரூபமாக்கி விட்டார்கள். ‘நாகலாபுரத்தில் தமிழில் விஸ்வரூபம்’ என்று கையால் எழுதி - தமிழில்தான் எழுதியிருக்கிறார்கள், ஆனாலும் ஜாங்கிரி சுட்டமாதிரிதான் இருக்கிறது ஊத்துக்கோட்டையில் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

காலை காட்சிக்கு எழுபது பேர் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் மதிய காட்சிக்கு வேல்முருகன் அதிரிப்போயிந்தி. ஹவுஸ்ஃபுல் ஆகி ஓவர்ஸ் விட தரையும் ஃபுல் ஆனது. டி.டி.எஸ்/க்யூப். சவுண்ட் படு சுமார். புரொஜெக்‌ஷன் ஓக்கே.

சென்னையிலிருப்பவர்கள் விஸ்வரூபத்தின் uncut versionஐ பார்க்க நாகலாபுரத்தை பரிசீலிக்கலாம். சத்தியவேடுக்கு போய் முட்டிப் பார்க்க முடிவெடுப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். ஒரு காட்சி ஃபுல் ஆகிவிட்டாலும், அடுத்த காட்சியை பார்த்துவிடலாம். சத்யவேடுவில் இந்த கேரண்டி இல்லை. பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் புத்தூர் வழியாக திருப்பதிக்குப் போகும் பேருந்தில் செல்லலாம். “நாகலாபுரம் நில்சுனா அண்ணய்யா...” என்று டிக்கெட் எடுப்பதற்கு முன்பாக கண்டக்டரிடம் விசாரித்துக் கொள்ளவும். நாகலாபுரம் ஆர்ச்சுக்கு முன்பாக பைபாஸில் நிறுத்துவார்கள். அங்கிருந்து ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். அல்லது கோயம்பேட்டிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து நாகலாபுரம் செல்லலாம். இந்த பஸ் ஊருக்குள்ளேயே போகும்.

டூவீலரிலோ, காரிலோ செல்பவர்கள் திருவள்ளூர், பூண்டி தாண்டி ஆந்திர எல்லைக்குள் நுழைந்து லெஃப்ட் எடுத்து நாகலாபுரம் செல்லலாம். தோராயமாக எண்பது கி.மீ. தூரம் வரும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு ஆந்திரா போய்தான் பார்க்க வேண்டுமா, எட்டாம் தேதி ரிலீஸ் ஆகும்போது உள்ளூரிலேயே பார்த்துக் கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு நம்மிடம் பதிலில்லை. தமிழக அரசின் கட்டப் பஞ்சாயத்தால் வெட்டப்படும் காட்சிகள் என்று கேள்விப்படும் காட்சிகள் எல்லாமே படத்தின் உயிர்நாடி. அக்காட்சிகளோடு முழுமையாக பார்க்கும் அனுபவம் அலாதியானது. விஸ்வரூபம் இதுவரை உங்களுக்கு சினிமாவில் வழங்கப்படாத புது அனுபவத்தை வழங்குகிறது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறோம். நமக்கு கிடைத்த அந்த அற்புதமும், பரவசமும் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஆப்ஷன் ஒன்று : வழியில் சுருட்டப்பள்ளியில் ஈஸ்வரன் கோயில் இருக்கிறது. ஆலகால விஷத்தை முழுங்கிய ஈஸ்வரன், டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்க அம்மையின் மடியில் தலை வைத்து இருபது அடி நீளத்துக்கு படுத்தவாக்கில் வீற்றிருக்கிறார். ஈரேழு உலகிலும் ஈஸ்வரனுக்கு இப்படியொரு சிலை இருப்பது சுருட்டப்பள்ளியில்தான். அங்கிருக்கும் அம்மனும் சக்தி வாய்ந்தவராம். விஷத்தால் சிவனுக்கு ஆபத்து ஏற்படாமல் காத்தவர் அவர்தானாம். மிகப்பழமையான இந்த ஆலயம் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. நாகலாபுரத்தில் இருக்கும் பெருமாள் (விஷ்ணு? அல்லது ஏதோ ஒண்ணு) கோயிலும் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் பிரமாதமாக புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் ஒரு கலை அதிசயம். படம் பார்க்கும் சாக்கில் இப்படி ஓர் ஆன்மீக டூரும் அடிக்கலாம்.


ஆப்ஷன் இரண்டு : ஆன்மீகத்தில் அக்கறை இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கு ஆந்திராவின் ஒரிஜினல் சரக்கு. நம்மூர் டாஸ்மாக்கில் கலப்பட சரக்கு அடித்து வயிறு புண் ஆனவர்களுக்கு ஆந்திர சரக்குதான் சிறந்த மருந்து.

நீங்கள் தேவனோ, சாத்தானோ தெரியாது. ஆனால் இருவருக்குமான ஆப்ஷனும் மேலே இருக்கிறது. choose your best choice!


7 கருத்துகள்:

  1. "choose your best choice"
    "படுத்தவாக்கில் வீற்றிருக்கிறார்"
    KILLED TWO LANGUAGES IN SINGLE FUCKING POST

    பதிலளிநீக்கு
  2. அனானி பெருசு அவர்களே! இது யூத்கள் வெளையாடுற எடம். நீங்க வாக்கிங் ஸ்டிக் வெச்சிக்கிட்டு இங்கே வாக்கிங் போவக்கூடாது. மேலே கீழே பசங்க விழுந்து பிராண்டிடப் போறானுங்க. ஓரமா போய் நடங்க தாத்தா :-)

    பதிலளிநீக்கு
  3. "choose your best choice"
    "படுத்தவாக்கில் வீற்றிருக்கிறார்"

    ஜோக்குகள் இருக்கட்டும், இவ்வாறு திருத்திக் கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்க?

    "take your best choice" or "choose your best option"
    "படுத்தவாக்கில் காட்சி த்ருகிறார்"

    அனானி எழுதியது அராஜகமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  4. இதையும் படியுங்கள்

    http://pirabala-pathivar.blogspot.in/2013/02/blog-post_4.html

    பதிலளிநீக்கு
  5. டோண்டு சார்,

    இலக்கண சுத்தமாக, தர்க்கப் பிழையில்லாமல் எழுதினால் என்னுடைய வலைப்பூ ‘குண்டலகேசி’ ‘சீவக சிந்தாமணி’ ரேஞ்சுக்கு ஆகிவிடுமோ என்று ஓர் அச்சம்.

    பல நேரங்களில் வேண்டுமென்றே, விரும்பியே பிழை செய்தும் (சும்மா வாசிப்பு சுவாரஸ்யத்துக்காக) எழுதுவதுண்டு. சில நேரங்களில் அறியாமையாலும் பிழைகள் ஏற்படுவதுண்டு.

    ”படுத்தவாக்கில் வீற்றிருக்கிறார்” என்பதில் என்ன பிழையென்று புரியவில்லை. கம்பீரத் தொனிக்காக வீற்றிருக்கிறார் என்கிற பதத்தை பயன்படுத்தியிருக்கிறேன்.

    என் வலைப்பூவில் வேண்டுமென்றே ஆங்கிலத்தை பிழையாக எழுதுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்து வாசிக்கும் நீங்கள் இதை அறிவீர்கள். மற்றபடி ஆங்கிலத்தை வாசிப்பதிலோ, புரிந்துக் கொள்வதிலோ, எழுதுவதிலோ எனக்குப் பெரிய பிரச்சினையில்லை. பேசும்போதுதான் கொஞ்சம் திக்கும் :-)

    பதிலளிநீக்கு
  6. பாக்கியவான்கள்... எங்களுக்கு அந்த குடுப்பினையும் இல்லை.... இங்க எப்போ ரிலீஸ் ஆகுமோ (துபாயில்)...!!! கொஞ்சம் கேட்டு சொல்லுங்கோ, யுவா

    பதிலளிநீக்கு
  7. படம் இன்னும் அங்கு யாரும் பார்க்காததால் அனைத்தையும் சொல்ல மாட்டேன். பாட்ஷா உள்ளே-போ மாதிரியான ஒரு காட்சியை கமல் , ரசிகர்கள் ரசிக்கட்டுமே என்று இரண்டுதடவை வைத்திருப்பார் பாருங்கள் சூப்பர்.

    பதிலளிநீக்கு