1 மார்ச், 2013

பாவமன்னிப்பு?

பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக்கூடிய நிலைக்கு நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும்.

- ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், பிப். 20, 2013 அன்று எழுதியது... 

“அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறைய பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத்தவனிடம் நான் செய்தது சரியா, தவறா என்று கேட்கப்போகிறேன்” மரணப்படுக்கையில் ஜெனரல் டயர் சொன்ன வாசகம் இது. பாரிசநோய் தாக்கியிருந்ததால் அப்போது பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். உயிரைவிடும் கடைசி நொடியிலும் கூட அவருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை மட்டும் மறக்கவேயில்லை. 

டயரால் மட்டுமல்ல. ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. இருந்தும் இன்னும் இந்தியர்களால் மறக்க முடியாத, ஜீரணிக்க முடியாத துயர சம்பவம் அது.

முதல் உலகப்போரின் போது சுமார் பண்ணிரெண்டு லட்சம் இந்தியர்களை இராணுவ வீரர்களாகவும், தொழிலாளர்களாகவும் போரில் ஈடுபடுத்தியது பிரிட்டிஷ் அரசு. மனிதவளம் மட்டுமின்றி உணவு, செல்வம் என்று போருக்காக இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டன. வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த அநியாய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. போரின் முடிவில் 43,000 இந்தியர்கள் பிரிட்டனுக்காக போர்க்களத்தில் உயிரிழந்தார்கள் என்கிற தகவலை சிவில் மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் போடவோ, போராட்டங்கள் நடத்தவோ தடை விதித்திருந்தார். 

1919, ஏப்ரல் 13. பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் வைசாகி பண்டிகைக்காக அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மும்மதத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் இருபதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெனரல் டயர் சுமார் நூறு வீரர்களோடு மைதானத்துக்கு வந்தார். அவர்களில் ஐம்பது பேர் ஆயுதம் தரித்திருந்தார்கள். மெஷின்கன் ஏந்திய இரண்டு வாகனங்களும் வந்தன. ஆனால் மைதானத்துக்குள் நுழையும் பாதை குறுகியதாக இருந்ததால், அவ்வாகனங்கள் உள்ளே நுழைய முடியவில்லை.

மக்களை கலைந்துப்போகச் சொல்லி அவர் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. பிற்பாடு விசாரணையின் போது இதற்கு அவர் சொன்ன விளக்கம் வேடிக்கையானது. “கூட்டத்தை கலைக்க நான் அங்கே செல்லவில்லை. அவர்களது ஒழுங்கீனத்துக்காக தண்டிக்க மட்டுமே விரும்பினேன்”.

சுடுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிகள் வெறித்தனமாக பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக முழங்கிக்கொண்டே இருந்தது. தோட்டாக்கள் தீரும் வரை. மொத்தமாக 1,650 ரவுண்டுகள். முதற்கட்டமாக பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் உயிரிழந்தனர். எங்கும் மரண ஓலம். சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால் தப்பிக்க வழியே இல்லை. உயிர்பிழைக்க வழி தெரியாமல் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த கிணற்றுக்குள் நிறைய பேர் குதித்தார்கள். துப்பாக்கி குண்டுக்கு தப்பி நெரிசலில் இறந்தவர்களும் கணிசமானவர்கள்.

“துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்துவிட்டதால் மட்டுமே என்னால் நடவடிக்கையை தொடரமுடியவில்லை. அவை இன்னும் கூடுதலாக இருந்திருந்தால் தீரும் வரை சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்” லண்டனில் நடந்த கமிஷன் விசாரணையில் ஜெனரல் டயர் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இச்சம்பவத்தை விவரிக்கும்போது சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மாதங்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த மரணக் கிணற்றில் இருந்து மட்டுமே 120 உடல்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருந்த கண்துடைப்பு விசாரணைக்குழு மொத்தமாக 379 பேர் மட்டுமே மரணித்தார்கள் என்று அநியாயமாக புளுகியது. பிற்பாடு அக்குழுவில் இருந்த ஒருவரே உண்மை எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்று ஒப்புக்கொண்டார். 

கூடியிருந்த மக்களின் எண்ணிக்கையும், சுடப்பட்ட ரவுண்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் அரசு சொல்லும் எண்ணிக்கை நம்பவே முடியாதது. எனவே இந்திய தேசிய காங்கிரஸ் இப்படுகொலைகளை விசாரிக்க தனியாக ஒரு குழுவை நியமித்தது. 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், தோராயமாக 1,000 பேர் உயிரிழந்ததாகவும் அக்குழு சொன்னது.

இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரியளவிலான இந்த படுகொலைகளை மூடிமறைக்க இங்கிருந்த இராணுவ அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். பிரிட்டனுக்கே கூட ஆறு மாதங்கள் கழித்து டிசம்பரில்தான் விஷயம் தெரிந்தது. நம்மூர் தலைவர்களுக்கே கூட உடனடியாக தெரியவில்லை. கல்கத்தாவில் இருந்த தேசியகவி இரபிந்திரநாத் தாகூருக்கு சம்பவம் நடந்து நாற்பது நாள் கழித்து 22 மே, 1919 அன்றுதான் தெரிந்ததாம். உடனடியாக கல்கத்தாவில் இதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினார்.

தனது மேலதிகாரியாக பஞ்சாப்பை ஆண்டுக்கொண்டிருந்த கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையருக்கு, ஜெனரல் டயர் இச்சம்பவம் குறித்த ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். அதில் ‘இந்தியர்கள், புரட்சிகர ராணுவத்தை கட்டமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினேன்’ என்று தன் வீரபிரதாபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், ‘நீங்கள் செய்ததுதான் சரி’ என்று ஒப்புக்கொண்டு டயரை பாராட்டியும் இருக்கிறார். பிற்பாடு இருபத்தோரு ஆண்டுகள் கழித்து இச்செயலுக்காக லண்டனில், பஞ்சாபை சேர்ந்த உத்தம்சிங் எனும் வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஓ’ட்வையர்.

வின்ஸ்டன் சர்ச்சில், ஹென்றி அஸ்க்வித் போன்ற பிரிட்டன் தலைவர்கள் அப்போதே இப்படுகொலைகளை கடுமையாக கண்டித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. படுகொலைகளை விசாரிக்க பிரிட்டிஷ் அரசு நியமித்த ஹண்டர் கமிஷனால் உருப்படியான நியாயம் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. ஜெனரல் டயர் மட்டும் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். படுகொலைகளுக்கு காரணமானவர்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்தே அறுபத்து ஆறு ஆண்டுகளும் ஆகிவிட்டது. ஆனால் அதற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்குமென்று இந்தியர்கள் இன்றும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் சுதந்திரத்துக்குப் பிறகு 1961லும், 1983லும் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் குறித்து எதுவுமே பேசவில்லை. பிறகு 1997ல் வந்தபோது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மவுன அஞ்சலி செலுத்தினார். “நம் கடந்தகாலத்தில் எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஜாலியன் வாலாபாக் மாதிரி. வரலாற்றை திரும்பவும் மாற்றி எழுத முடியாது. வரலாறு ஏராளமான வருத்தங்களும், ஏராளமான மகிழ்ச்சிகளும் நிறைந்தது. வருத்தங்களை பாடமாக படித்து, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன்னதாக இதைப்பற்றி பேசினார். இது நேரடி மன்னிப்பு இல்லையே என்று அப்போதே இந்தியர்கள் அங்கலாய்த்தார்கள்.

இப்போதும் அதேமாதிரிதான். பிரிட்டனின் பிரதமர் ஒருவர் ஜாலியன் வாலாபாக்குக்கு வருகை புரிந்தது இதுதான் முதல்முறை. வருகை பதிவேட்டில் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே தவிர, மன்னிப்பு கேட்கவில்லை என்று மீண்டும் குரல்கள் உயரத் தொடங்கியிருக்கின்றன.

எலிசபெத் ராணி மன்னிப்பு கேட்கவில்லை என்று வருத்தம் பரவியபோது, இந்தியப் பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் சொன்னதை நாம் நினைவுறுத்திப் பார்ப்போம். “தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா என்ன?”

(நன்றி : புதிய தலைமுறை)

25 பிப்ரவரி, 2013

கிராந்திவீரா சங்கொலி ராயண்ணா

கர்னாடகாவில் கித்தூர் என்றொரு சமஸ்தானம் இருந்தது. அதன் ராஜா மறைந்ததுமே பிரிட்டிஷார் அந்த சமஸ்தானத்தை தாங்கள் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ராணி சென்னம்மாவோ வெள்ளையர்களுக்கு ஒரு பிடி மண் தரமாட்டேன் என்று வீரமாக போரிடுகிறார். 1824ல் நடந்த போரில் ராணி சென்னம்மா தோற்று பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு, ஒரு கோட்டையில் சிறை வைக்கப்படுகிறர்.


ராணி மீது விசுவாசம் கொண்டோர் சிலர் வெளியே பிரிட்டிஷாருக்கு எதிராக தொடர்ச்சியாக கலகம் விளைவித்து வந்தனர். அவர்களை ஒன்றிணைத்துப் போராடிய மாவீரன்தான் சங்கொலி ராயண்ணா. உள்ளூர் மக்களை திரட்டி வெற்றிகரமான கொரில்லா ராணுவம் ஒன்றினை உருவாக்கினார். பிரிட்டிஷாரின் அரசு அலுவலகங்களை, குறிப்பாக கஜானா இருக்கும் அலுவலகங்களை திடீர் திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தி ஸ்தம்பிக்க செய்வார். பிரிட்டிஷ் படையினரை குழப்பி, மறைந்திருந்து தாக்கி சிறுசிறு குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இந்நிலை நீடித்தது. வெள்ளை இராணுவம் இவரைப் பிடிக்க தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் கொரில்லா படை அமைத்த முன்னோடியாக இவரை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 1830ஆம் ஆண்டு இவர் வெள்ளையரிடம் பிடிபட்டார். தூக்கில் தொங்கவிடப்பட்டார். நம்மூரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் இங்கே போற்றப்படுவதைப் போல, கர்னாடகாவில் சங்கொலி ராயண்ணா.

akkam in
தமிழில், தெலுங்கில், மலையாளத்தில் எல்லாம் அவ்வப்போது சரித்திரப் படங்கள் பிரும்மாண்டமாக தயாரிக்கப்படும் போது கர்நாடகத்தில் இருப்பவர்கள் மட்டும் வாயில் குச்சி ஐஸ் வைத்துக்கொண்டு ஏக்கமாக வேடிக்கை பார்ப்பார்கள். கர்நாடகாவின் சினிமா எல்லை மிகச்சிறியது என்பது முதல் காரணம். ஓவர்சீஸ் மார்க்கெட் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. எனவே ஏழு, எட்டு கோடியில் படம் எடுத்தாலே பட்ஜெட்டை வசூலிப்பதற்குள்ளாகவே தாவூ தீர்ந்துவிடும்.


நம்மூர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு ராயண்ணாவாக நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. தமிழிலும், தெலுங்கிலும் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவரது தாய்மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏதாவது செய்ய ஆசைப்பட்டது இயல்புதான். விலங்குகளை துன்புறுத்தியதாக கூறி இம்சை அரசன் படத்துக்கு பிரச்சினை வந்தபோது, எதற்கு வம்பு என்று ராயண்ணா ஆசையை அர்ஜூன் ஏறக்கட்டினார்.

ஆனாலும் அர்ஜூன் கிளப்பிவிட்ட ஆசைப்பொறி தீயாய் நிறைய பேருக்கு பரவ ஆரம்பித்தது. தயாரிப்பாளர் ஆனந்த் அப்புகோல் துணிச்சலாக செலவு செய்ய முடிவெடுத்தார். கிட்டத்தட்ட 30 கோடி செலவாகும் என்று தெரிந்தாலும் ராயண்ணா முதலுக்கு மோசம் செய்ய மாட்டார் என்று நம்பினார்.

kranthi-01
நிறைய படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க ஹிட்கள் கைவசமிருந்தாலும், தனக்கான நிலையான இடத்தை தக்கவைக்க போராடிக் கொண்டிருந்த நடிகர் தர்ஷன் ராயண்ணாவாக நடிக்க முன்வந்தார். இந்த படம் தன்னுடைய வாழ்வை மட்டுமின்றி கன்னட சினிமாவின் தலையெழுத்தையே புரட்டிப் போடப்போகிறது என்றும் அவர் தீவிரமாக நம்பினார். இயக்குனர் நாகன்ணாவோடு சேர்ந்து கேசவாதித்யாவும் ராயண்ணாவின் வாழ்க்கையை கச்சிதமான சினிமாவாக எழுதத் தொடங்கினார்கள்.


ஹீரோயினாக நடிக்க ப்ரியாமணியை அணுகினர். ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டவர், பிற்பாடு ஏனோ சரித்திரப் படத்தில் நடிப்பது தனக்கு ஒத்துவராது என்று விலகிவிட்டார். அந்த கேரக்டருக்கு நிகிதாவை ஒப்பந்தம் செய்தார்கள் (சரோஜாவில் கோடான கோடிக்கு குத்தாட்டம் போட்டவர்). ராணி சென்னம்மா கேரக்டரில் ‘கித்தூர் சென்னம்மா’ (1963) என்கிற படத்தில் சரோஜாதேவி சிறப்பாக நடித்திருந்தார். எனவே அதைவிட சிறப்பாகவோ அல்லது அதற்கு இணையாகவோ சென்னம்மாவாக நடிப்பவர் செய்யவேண்டும். எனவே கொஞ்சம் தாராளமாக பட்ஜெட்டில் இந்த கேரக்டருக்கு இடஒதுக்கீடு செய்து, ஜெயப்ரதாவை அணுகினார்கள். அவரும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டார். படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயப்ரதா சொன்னதுதான் ஹைலைட். “இதுவரை சுமார் 700 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தென்னிந்தியாவில் இருந்து இவ்வளவு பிரும்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படத்தில் நான் நடிப்பது இதுவே முதன்முறை”

அவர் சொல்வது உண்மைதான். போர்க்காட்சிகளுக்காக மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை தண்ணீராக செலவழித்திருந்தார் தயாரிப்பாளர் ஆனந்த் அப்புகோல். ஆயிரம் பேர் கொண்ட டீம் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் போனது. முப்பது யானைகள். நூற்றுக்கணக்கான குதிரைகள். நன்கு பயிற்சி பெற்ற முன்னூற்றி இருபது ஸ்டண்ட் கலைஞர்கள். ஏழு கேமிராக்கள். அதில் ஒன்று லேட்டஸ்ட் மாடலான போட்டோஜெனிக் 500. இடையில் மனைவியுடனான தகராறு, போலிஸ் கம்ப்ளையண்ட், கைது என்று தர்ஷன் பிஸியாகிவிட்டதால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமானது. ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பின் போது, ஓடிக்கொண்டிருந்த குதிரையிலிருந்து பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசமூர்த்தி எதிர்பாராவிதமாக விழுந்தார். படத்தின் ஹீரோவே நிஜ ஹீரோவாகவும் மாறி அவரை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா சிரமங்களையும் மீறி படம் தயாரானது. எதிர்ப்பார்த்த பட்ஜெட்டை விட பத்து கோடி அதிகமாகவே செலவாகியது என்றும் சொல்கிறார்கள். தலையில் துண்டு போட்டுக்கொண்டு தயாரிப்பாளர் படத்தை கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்தார். பொதுவாக கன்னடப் படங்கள் வெள்ளிக்கிழமைதான் வெளியாகும். கிராந்திவீரா சங்கொலி ராயண்ணா வியாழக்கிழமை களமிறக்கப்பட்டார். அன்று அரசு விடுமுறை தினம் என்பது முக்கியமான காரணம். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ ஹீரோ தர்ஷன் குதிரையில் தியேட்டருக்கு வந்தார்.
 sangolli_rayanna                              
பெங்களூர் நகரத்தில் மட்டுமே 20 மல்டிப்ளக்ஸ்களில் வெளியானது. ஒட்டுமொத்தமாக 130 தியேட்டர்கள். ரசிகர்கள் தங்கள் அபிமான வரலாற்று வீரனை கைவிடவில்லை. ஓப்பனிங் மட்டுமே பதினாறு கோடி. கன்னட சினிமா வரலாறு இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொகை. வெளியாகிய தியேட்டர்களில் 43 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. செகண்ட் ரிலீஸாக வெளியாகிய ‘பி’ மற்றும் ‘சி’ சென்டர் தியேட்டர்களிலும் இப்போது வசூல் சுனாமி. கன்னட பாக்ஸ் ஆபிஸின் மிகப்பெரிய சாதனையான ‘முங்காருமலே’வின் சாதனையை அனாயசமாக உடைத்தெறிந்தது சங்கொலி ராயண்ணா. இதுவரை தோராயமாக 50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். கன்னட சினிமா அடைந்திருக்கும் அதிகபட்ச உயரம் இதுதான்.

படத்தின் பட்ஜெட்டை வைத்து கணக்கிடும்போது இந்த வசூல் ஆஹா ஓஹோ என்றில்லை என்றாலும், கன்னட சினிமாவாலும் மற்ற தென்னிந்திய சினிமாக்களோடு போட்டி போட இயலும் என்கிற தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சங்கொலி ராயண்ணா உருவாக்கியிருக்கும் இந்த புதுப்பாதையை, அடுத்த தலைமுறை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள். முன்னோடிகளை வரலாறு மறப்பதில்லை, மறுப்பதுமில்லை.

(நன்றி : cinemobita.com)

23 பிப்ரவரி, 2013

வானத்தில் பறக்குது நம் மானம்!


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே மறுத்து விட்டார். அவருடைய பிரத்யேக அலுவல் பயணங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஏடபிள்யூ-101 ரக ஹெலிகாஃப்டருக்கு சொல்லப்பட்ட விலை அப்படி. 2009ஆம் ஆண்டு ஒபாமா மறுத்த அதே ரக ஹெலிகாப்டர்கள் பன்னிரெண்டு வேண்டுமென ரூபாய் மூவாயிரத்து ஐநூற்றி நாற்பத்தியாறு கோடி விலைக்கு ஒப்புக்கொண்டு 2010ல் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இந்த மொத்த ஒப்பந்தத் தொகையில் முன்னூற்றி அறுபத்தி இரண்டு கோடி ரூபாய், இந்தியாவில் ‘யார் யாருக்கோ’ கமிஷனாக கைமாற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் ஊடகங்களில் பரபரப்பாக அடிபடும் பாதுகாப்புத்துறையின் ஹெலிகாப்டர் ஊழல்.
இந்த ஊழலை கண்டுபிடித்ததும் கூட இந்தியா அல்ல. இந்தியாவோடு ஒப்பந்தம் போட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரி, இத்தாலியில் வேறு மோசடிவிவகாரங்களில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, போனஸாக இதுவும் தெரியவந்திருக்கிறது.
குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் இப்போது நாட்டுக்குள் பறக்க ருஷ்யத் தயாரிப்புகளான எம்.ஐ.-8 மற்றும் எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களைதான் பயன்படுத்துகிறார்கள். பழங்கால சரக்குகளான இவற்றை காலாவதியாக்கிவிட்டு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புது ஹெலிகாப்டர்கள் தேவையென்று பாதுகாப்புத்துறையில் நீண்டநாட்களாகவே கோரப்பட்டு வந்தது.
பல நூறு கோடி செலவில் ஏற்கனவே வி.வி.ஐ.பி.களுக்காக விமானங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும் விமானங்களை விட ஹெலிகாப்டர்களை உள்நாட்டு பயணங்களுக்கு பயன்படுத்துவது சுலபமானது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள். விமான நிலையமே இல்லாத ஊர்களிலும் கூட ஹெலிபேட் அமைத்து ஹெலிகாப்டர்களை தரையிறக்கலாம்.
மூவாயிரத்து சொச்சம் கோடியை முழுங்கிய ஒப்பந்தம் மூலமாக கடந்த ஆண்டு மூன்று ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டன. அடுத்த மாதம் மூன்று ஹெலிகாப்டர்கள் வந்துவிடுமாம். மீதமுள்ள ஆறு ஹெலிகாப்டர்களும் முறையே மே மற்றும் ஜூலையில் வந்துவிடும் என்கிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா (இத்தாலி அரசுக்கு இந்நிறுவனத்தில் 30% பங்கு உண்டு) என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தோடுதான் இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னூற்றி அறுபத்தி இரண்டு கோடி ரூபாய் இந்தியாவில் சிலருக்கு தரப்பட்டிருக்கிறது. அதில் இருநூறு கோடி ரூபாய் லண்டன் வழியாக மீண்டும் இத்தாலிக்கே சென்றிருக்கிறது. அங்கு தேர்தல் நடந்தபோது ஒரு கட்சியின் தேர்தல் செலவுக்கு இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு சக்திகள் தங்கள் ஊர் அரசியலில் தலையிடுவதை இத்தாலிய அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவர் கிஸ்பி ஓர்ஸி, அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைவர் பர்னோ ஸ்பங்க்நோலினி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள்.
அறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையை இத்தாலிய நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள் விசாரணை அதிகாரிகள். இந்திய விமானப்படையின் தலைமை அதிகாரியாக இருந்த எஸ்.பி.தியாகிக்கு கமிஷன் பணம் வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘நிறைய பணம், ஆனால் குறிப்பாக எவ்வளவு என்று தெரியவில்லை’ என்கிற வாசகம் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. தியாகியின் உறவினர்கள் மூன்று பேருக்கும், இத்தாலிய நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே ‘புரோக்கர்கள்’ சிலர் பாலமாக பணிபுரிந்தனர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கமிஷனை எப்படி பெற்றார்கள்? ஐ.டி.எஸ். இந்தியா என்கிற பெயரில் இந்தியாவில் ஒரு டுபாக்கூர் ஐ.டி. நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிறுவனம் இத்தாலிய நிறுவனத்துக்கு பல்வேறு ஐ.டி. துறை சேவைகளை செய்ததாக பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அந்த சேவைக்காக சுமார் நூற்றி நாற்பது கோடி ரூபாய் பணம் கைமாறியிருக்கிறது. பணத்தை வெள்ளையாகவே மாற்ற இதுமாதிரி நிறைய டெக்னிக்குகளை கையாண்டிருக்கிறார்கள்.
தன் மீதும், தன் உறவினர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டை முன்னாள் தலைமை அதிகாரி எஸ்.பி.தியாகி கடுமையாக மறுத்திருக்கிறார். “இந்த விவகாரத்தில் குறிப்பிடப்படும் புரோக்கரை நான் என்னுடைய உறவினர்களின் இடத்தில் வைத்து சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்களுடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. நான் ஓய்வு பெற்ற பிறகே மொத்த கொடுக்கல் வாங்கலும் நடந்திருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் தியாகி.
என்ன நடந்தது என்பதை அறிய மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ராணுவ அமைச்சகம் முறைப்படி சி.பி.ஐ.யிடம் புகார் செய்தபிறகு விசாரணை தொடங்கியிருக்கிறது. ஊழல் நடந்ததா. நடந்திருந்தால் கமிஷன் கைமாறியதா. அதில் இந்தியர்களின் பங்கு என்னவென்று சி.பி.ஐ. விசாரணையை நடத்துகிறது. இதற்கிடையே இந்த ஒப்பந்தத்தையே மொத்தமாக ரத்து செய்யவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, தீ என்று பஞ்சபூதங்களிலும் ஊழல் ஊழித்தாண்டவம் ஆடும் காலம் இது. முதன்முறையாக நாட்டின் முக்கியமான துறையின் தலைமை அதிகாரியாக இருந்த ஒருவரே ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர்தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.
 தேவையா இவ்வளவு செலவு?
நாட்டில் எழுநூற்றி அறுபத்தியோரு பேருக்கு ஒரு போலிஸ்தான் பாதுகாப்புக்கு இருக்கிறார். அதே சமயம் ஒரு வி.ஐ.பி.யை மூன்று போலிஸார் பாதுகாக்கிறார்கள். நாடு முழுக்க சுமார் பதினைந்தாயிரம் வி.ஐ.பி.க்கள் ‘பாதுகாக்கப்பட்டவர்களாக’ இருக்கிறார்கள். இவர்களுக்காக சுமார் ஐம்பதாயிரம் போலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கான செலவு வருடா வருடம் பல கோடிகளை விழுங்குகிறது. வி.ஐ.பி.க்களை விட பொதுமக்களுக்குதான் பாதுகாப்பு அவசியமென்று சமீபத்தில் உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்திருக்கிறது.
அதிருக்கட்டும். இப்போது சர்ச்சைக்குள்ளான ஹெலிகாப்டர்களும் கூட வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை உத்தேசித்து வாங்கப்பட்டவைதான். ஒரு ஹெலிகாப்டரின் விலை தோராயமாக முன்னூறு கோடி ரூபாய்.

பாதுகாப்பை முன்வைத்து சில ஊழல்கள்
இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டது 1948ல் நடைபெற்ற ஜீப் ஊழல். லண்டனில் ஹைகமிஷனராக இருந்த வி.கே.கிருஷ்ணமேனன் எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றாமல் ஓர் அயல்நாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தமிட்டார். இந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கைக்காக ஜீப்கள் தேவைப்பட்டன. 1500 ஜீப் ஆர்டர் செய்யப்பட்டு, ஒன்பது மாதங்கள் வரை ஒரு ஜீப் கூட வந்து சேரவில்லை. 1949ல் 155 ஜீப்கள் வந்தன. அவையும் நேரடியாக காயலான் கடையில் போட்டுவிடக்கூடிய தரத்தோடுதான் இருந்தது. வழக்கம்போல விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 1955ல் இந்த பிரச்சினை முடித்துக்கொள்ளப்பட்டது. 1956ல் கிருஷ்ணமேனனுக்கு ‘ப்ரமோஷன்’ மாதிரி நேருவின் அமைச்சரவையில் இடம் கிடைத்தது.

1987ல் பாதுகாப்புத்துறை அமைச்சராக வி.பி.சிங் இருந்தார். ஜெர்மனியில் இருந்த இந்தியத் தூதரிடமிருந்து ஒரு டெலிகிராம் அவருக்கு வந்தது. நீர்மூழ்கி நிறுவனம் ஒன்றோடு நடந்த ஒப்பந்தத்தில் ஏழு சதவிகிதம் (அதாவது 20 கோடி) கமிஷனாக யாரோ ஒரு புரோக்கருக்கு வழங்கப்பட்டதாக அதில் செய்தி இருந்தது. இந்த ஊழல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே வி.பி.சிங் ராஜினாமா செய்தார். பிற்பாடு அவரோ பிரதமர் ஆனபிறகு 1990ல் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார். 2005ல் இவ்வழக்குக்கு பால் ஊற்றப்பட்டது.

இந்திய ஊழல்களிலேயே அதிக புகழ்பெற்றது எனும் பெருமைக்குரியது போபர்ஸ் ஊழல். இந்தியாவுக்கு பீரங்கி விற்ற போபர்ஸ் நிறுவனத்திடம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியும், புகழ்பெற்ற ஹிந்துஜா குடும்பத்தினரும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு. புரோக்கராக செயல்பட்ட குவாத்ரோச்சியை இந்திய அரசின் அதிகாரத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்களே இத்தாலிக்கு தப்பவிட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. எது எப்படியோ ஊழலுக்கு சம்பந்தப்படாத இன்னொரு விஷயம். கார்கில் போரில் போபர்ஸ் பீரங்கிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அவை சிறப்பாக இயங்கியதாகவும், அதனாலேயே பாகிஸ்தானை விரைவில் வெல்ல முடிந்தது என்றும் அப்போது இராணுவ அதிகாரிகள் சிலர் சொன்னார்கள்.

தெஹல்காவின் இரண்டு நிருபர்கள் தங்களை ஆயுத நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாக நடித்து அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் என்று பலரோடு பேசி ரகசியமாக ‘ரெகார்ட்’ செய்தார்கள். ஆயுதங்கள் வாங்குவதில் நடக்கும் பேரங்கள், திரைமறைவு கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ராஜினாமா செய்யவேண்டி வந்தது. அப்போதிலிருந்து சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்துக்கொண்டே இருக்கிறது. இன்றுவரை உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
பெங்களூரில் ஒரு நிறுவனம் இந்திய இராணுவத்துக்கு தேவையான வாகனங்களை தயாரித்து வழங்கி வந்தது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஆர்டர் வாங்குவதற்காக பதினான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட எழுநூற்றி ஐம்பது கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகவும், கமிஷனாகவும் அந்நிறுவனம் வழங்கியிருக்கிறது.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவமானப்படவும், இந்த நாட்டில் பிறந்துத் தொலைத்ததற்காக வேதனைப்படவும் வேண்டிய ஊழல் சவப்பெட்டி ஊழல். கார்கில் போரில் வீரமரணமடைந்த மாவீரர்களின் உடல்களை வைக்க வாங்கப்பட்ட சவப்பெட்டிகளிலும் சுரண்டி தின்றார்கள் ஊழல் பெருச்சாளிகள். ஒரு சவப்பெட்டிக்கு 2500 டாலர் கொடுத்து இந்திய அரசு வாங்கியது. அதே பெட்டி முன்பாக 172 டாலருக்குதான் வாங்கப்பட்டது.

(நன்றி : புதிய தலைமுறை)

22 பிப்ரவரி, 2013

பைக் கொடுத்த லைஃப்

கடைசியாக ராகுலனிடம் இருந்தது பெட்ரோல் நிரப்பிய ஒரு பைக். நிறைய தன்னம்பிக்கை. சிறுவயதிலேயே தந்தையின் பணி காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்திருந்தார். தந்தையின் மரணம் காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வாழ்க்கையை நகர்த்த எடுத்த சில முயற்சிகள் எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. கையில் எதுவுமே மிஞ்சவில்லை. அடுத்தது என்ன?
பைக்கை ஓட்ட ஆரம்பித்தார். பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்கே நிற்கிறதோ, அங்கே வாழ்க்கையை தொடங்கலாம் என்பது திட்டம். வண்டி நின்ற இடம் கரூர். அந்நகரில் அப்போது ஏற்றுமதித் தொழில் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்ததை கண்டார். சில நிறுவனங்களில் சிலகாலம் பணியாற்றிவிட்டு, சொந்தமாகவே ஓர் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இம்முறை அதிர்ஷ்டத் தேவதை ராகுலன் பக்கம் இருந்தாள். ஹாலந்து நாட்டிலிருந்து நிறைய ‘ஆர்டர்கள்’ இவரது நிறுவனத்துக்கு கிடைத்தது.
ஒருகட்டத்தில் வணிகத்தைப் பெருக்க ஹாலந்துக்கே குடிபெயர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. மனைவி, மகன், மகளோடு குடும்பமாக புலம் பெயர்ந்தார். அந்நாட்டின் குடியுரிமையும் அவருக்குக் கிடைத்தது.
இப்போது நாற்பத்தியோரு வயதாகும் ராகுலனின் பின்புலம் இதுதான். ஹாலந்தில் அவரது வாழ்க்கை நிலைபெற்று விட்டாலும், தாய்மண்ணான கும்பகோணம் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது. கும்பகோணத்துக்கு அருகில் திருப்பனந்தாள் என்கிற கிராமம். விடுமுறைக்காக ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு இங்கே வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இம்மாதிரி வந்தபோதுதான் சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்தார். குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துவருவதாக நினைத்தார். விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்ந்திருந்த காலக்கட்டம் மாறியிருந்தது. விவசாய நிலங்களில் பணிக்குச் சென்றதால் பணம் சம்பாதித்து, குடும்பத்தை கவுரவமாக நடத்திக் கொண்டிருந்த பெண்கள் அப்போது மிகச்சிரமமான நிலையில் இருந்ததை உணர்ந்தார்.
விளைநிலங்கள் பெருமளவில் ரியல் எஸ்டேட் கபளீகரங்களுக்கு விலைபோன பின்னர், விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பலரும் வேறு வேறு பணிகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனவே வேலையிழந்து கொடுமையான வறுமைக்கு ஆளானார்கள். அடிப்படைச் செலவுகளுக்கும் மீண்டும் குடும்பத்து ஆண்களையே நாடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். தன் சொந்த மண்ணின் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இதை கருதினார் ராகுலன்.
ஹாலந்து திரும்பிய பிறகும் இதே நினைவுகள் அவரை வருத்திக்கொண்டே இருந்தன. பகுத்தறிவுச் சிந்தனைகள் நிரம்பியவரான ராகுலனுக்கு பெண்கள் வெறுமனே அடுப்பூதி வாழ்க்கையை கட்டாயத்தின் பேரில் வாழ்ந்து முடிப்பதில் ஒப்புதல் இல்லை. என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தவர் தன்னுடைய துறை தொடர்பான பணிகளை, தமது ஊர் பெண்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க ஒரு திட்டம் தீட்டினார்.
இப்படித்தான் ‘க்ரீன் இன்னோவேஷன்ஸ்’ நிறுவனம் தொடங்கியது.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உலகை குப்பைக்கூடை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றவுணர்ச்சி உண்டு. எனவே சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருட்களையே கூடுதல் விலையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹாலந்தில் வசிக்கும்போது இந்நிலையை உணர்ந்தார் ராகுலன். அவருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறை தோன்றியது.
நம்மூரில் உரமூட்டை, டீத்தூள் சாக்கு, ஃபயர் சர்வீஸில் பயன்படுத்தி காலாவதியான ஓஸ் பைப் போன்றவற்றை குப்பையில்தான் எறிகிறார்கள். இவற்றை காயலான் கடைகள் மற்றும் குப்பைப் பொறுக்கும் தொழிலாளர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி ‘உயர்சுழற்சி’ (upcycling) முறையில் லேப்டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் போன்றவற்றை உருவாக்குகிறது க்ரீன் இன்னோவேஷன்ஸ்.
உயர்சுழற்சி என்பது வீணான பொருட்களையும், உபயோகமில்லாத தயாரிப்புகளையும் கொண்டு புதிய பொருட்களை தரமான முறையில் உருவாக்குவது. மறுசுழற்சி (recyling) என்பதற்கும், இதற்கும் பெரியளவில் வேறுபாடு உண்டு. உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல மவுசு. அதிலும் சமூகநல நோக்கோடு, மகளிர் மேம்பாட்டை முன்னிறுத்தி நடைபெறும் தொழில் என்பதால் ராகுலனின் தயாரிப்புகள் சக்கைப்போடு போடுகிறது. நம்மூரில் ஒரு பொருளை வாங்கும் முன்பாக நுகர்வோர் இதுபோன்ற அம்சங்களை கணக்கில் எடுப்பதில்லை. பெரிய நிறுவனங்களாவது சுற்றுச்சூழலுக்கு ஏதுவான உயர்சுழற்சி, சமூகநலம் ஆகிய காரணிகளை பரிசீலித்து இதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கலாம்.
இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகாலட்சுமிக்கு வயது முப்பத்தியேழு. அவரது கணவர் கட்டிடவேலை செய்கிறார். மகள் கல்லூரியில் படிக்கிறாள். “என் மகளின் கல்விச்செலவு, குடும்பத்துக்கு ஆகும் கூடுதல் செலவுகள் போன்றவற்றுக்கு, கணவரின் கையை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் இப்போது என்னாலேயே சமாளித்துக்கொள்ள முடிகிறது. கவுரவமான வேலை என்பதால் சுற்றத்திலும் நல்ல மரியாதை கிடைக்கிறது” என்கிறார் இவர்.
க்ரீன் இன்னோவேஷன் நிறுவனத்தில் இப்போது இருபத்தைந்து பெண்கள் பணிபுரிகிறார்கள். விவசாயப் பணிகளிலேயே ஊறிப்போன இப்பெண்களுக்கு ஆரம்பத்தில் புதிய வேலையில் ஈடுபடுவது சிரமமாக இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் கற்றுக்கொண்டு இப்போது சிறப்பாக செயல்படுகிறார்கள். சிறிய அளவில் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்துக்கு நிறைய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து, தொழில் பெருகும் பட்சத்தில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே மகாலட்சுமியைப் போன்ற சில நூறு மகளிருக்காவது வேலைவாய்ப்பினை உருவாக்கித்தர முடியும் என நம்புகிறார் ராகுலன். இவரது நிறுவனத்தில் தொழிலாளர் உரிமை, சம்பளம், நிர்வாக விஷயங்கள் ஐரோப்பிய தர அளவீட்டிலேயே அமைந்திருக்கிறது.
“இதை சமூகச்சேவை என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. என்னுடைய தொழிலை நான் செய்கிறேன். எனக்கு இதில் நல்ல லாபமும் கிடைக்கிறது. இதில் என் ஊரைச் சேர்ந்த பெண்களுக்கும் நல்லது நடக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செய்யும் எதிலும் மறைமுகமான சமூகநோக்கு இருக்க வேண்டுமென்பது எனக்கு ஐரோப்பா கற்றுத்தந்த பாடம்” என்கிறார் இவர்.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ?(நன்றி : புதிய தலைமுறை)

18 பிப்ரவரி, 2013

நாதொலி ஒரு செறிய மீனல்ல


துரோணர் தன் சிஷ்யர்களான பஞ்சபாண்டவர்களை பயிற்சிக்காக ஆரண்யத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஆற்றின் அடுத்த கரையில் இருக்கும் மாமரம் ஒன்றினை நோக்கி ஐவரையும் குறி வைக்கச் சொல்கிறார். ஒவ்வொருவரிடமும் “உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்கிறார். ஒருவர் மறுகரை தெரிகிறது என்கிறார். இன்னொருவர் மரம் தெரிகிறது என்கிறார். மற்றொருவர் கிளை தெரிகிறது என்கிறார். மற்றுமொருவர் கிளையில் அமர்ந்திருக்கும் கிளி தெரிகிறது என்கிறார். அர்ஜூனன் என்ன சொல்லியிருப்பான் என்பதை மகாபாரதத்தை வாசித்தவர்களும், டிவியில் பார்த்தவர்களும், சன் டிவியில் விரைவில் பார்க்கப் போகிறவர்களும் அறிவார்கள்.

அர்ஜூனன் சொல்கிறான். “ஐயாயிரம் வருடங்கள் கழித்து அந்த இடத்தில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் வரப்போகிறது. அதனுடைய பதினைந்தாவது மாடியில் கிளி மாதிரி ஒரு ஃபிகர் நின்றிருப்பது எனக்குத் தெரிகிறது”. அதாவது அர்ஜூனனின் பார்வைக் கூர்மை யுகங்களை தாண்டியதாம். இப்படியொரு ரகளையான ஓபனிங் காட்சியை சமீபத்தில் எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. அடுத்த காட்சியே அந்த அப்பார்ட்மெண்ட். அர்ஜூனனாக இருந்தவன் இந்த அப்பார்ட்மெண்டில் மாடிவீட்டு மாதுவாக –அதாவது கேர்டேக்கராக- வேலை பார்க்கிறான்.


மலையாளிகளுக்கு இலக்கியப் பெருமிதம் அதிகம். தங்களுடைய சினிமாவும் கூட இலக்கியத்தின் ஒரு கிளையாக வளரவேண்டும் என்று ஆவல் கொண்டவர்கள். ‘நாதொலி ஒரு செறிய மீனல்ல’ (நெத்திலி ஒரு சின்ன மீன் மட்டுமல்ல என்பது மாதிரி மீனிங்) என்பதை மூக்கை மூடிக்கொண்டு வாசித்தீர்களேயானால், மிகச்சரியாக அவர்களது ஸ்லாங்கில் வாசித்துவிடலாம். நாவலுக்கு வைக்கும் தலைப்பு மாதிரியே சினிமாவுக்கும். இலக்கியத்தையும், சினிமாவையும் இணைக்கும் புள்ளி எதுவென்ற புரிதல் அவர்களுக்கு நெடுங்காலமாகவே இருக்கிறது. ஓர் இலக்கியவாதியை வசனம் எழுதவைத்துவிட்டால் மட்டும் சினிமா இலக்கியமாகி விடாது என்கிற அறிவும் கொண்டவர்கள்.

இப்படம் ஒருவகையான நான்-லீனியர் மாதிரி என்றும் சொல்லலாம். அதாவது நான்லீனியர் படங்களில் சம்பவங்கள் முன்பின் மாறி அமைக்கப்படும். இப்படத்தில் கதையின் சம்பவங்களும், ஹீரோ நாவலில் எழுதும் சம்பவங்களும் மாறி மாறி ஆனால் நேர்க்கோட்டில் வருகிறது. நாயகன் ஓர் அப்பார்ட்மெண்ட் கேர்டேக்கர் மட்டுமல்ல. ரகசிய எழுத்தாளனும் கூட. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் சிலரால் சில வேண்டத்தகாத சம்பவங்கள் அவனுக்கு ஏற்படுகிறது. எனவே தான் எழுதும் நாவலில் அதே பாத்திரங்களை உருவாக்கி, எதிர்மறையாக பழிவாங்குகிறான். நாவலின் சம்பவம், நிஜக்கதையுமாக பரபரப்பான க்ளைமேக்ஸில் சுபம். நம்மூர் இலக்கியவாதிகள் அவ்வப்போது பிரதிக்குள் பிரதி என்றெல்லாம், சாதாரண வாசகனுக்கு புரியாத மாதிரி ஜல்லியடிப்பார்களே? அந்த மேட்டரைதான் மிக எளிமையாக பார்வையாளனுக்கு இப்படத்தில் முன்வைக்கிறார் இயக்குனர். ஓரளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா க்ளைமேக்ஸில் இந்த உயரத்தை எட்டினார் கவுதம் வாசுதேவ் மேனன்.

VK-prakash 2
படத்தின் இயக்குனர் வி.கே.பிரகாஷ். பெங்களூரில் ஒரு விளம்பர நிறுவனம் வைத்திருக்கிறார். 2000ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் படத்துக்கே தேசிய, மாநில விருதுகள் கிடைத்தது. ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ சிந்திக்கிறவர் என்று மலையாளத் திரையுலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவர். மிக சீரியஸான கதையாக இருந்தாலும், அதை ‘சிரி’யஸான வடிவில் வழங்குவதில் கில்லாடி.


படத்தின் ஹீரோ பஹாத் ஃபாசில். இயக்குனர் ஃபாசிலின் மகன். எனவே ஃபாசிலின் முதல் படமான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்களை’ செம கலாய் கலாய்க்கிறார்கள். நாவலில் வரும் ஹீரோவுக்கு பெயர் நரேந்திரன். மஞ்சில் விரிஞ்சவில் வில்லனாக அறிமுகமான மோகன்லாலின் பெயர். மேலும் அதே படத்தின் வேறு இரண்டு பாத்திரங்களின் பெயரையும் இப்படத்தில் பயன்படுத்துகிறார்கள்.

பஹாத்தை பதினெட்டு வயதில் 2002ஆம் ஆண்டு அவரது அப்பா ஃபாஸிலே அறிமுகப்படுத்தினார். படம் பயங்கர ப்ளாப். “என் அப்பாவை யாரும் திட்டாதீர்கள். இந்தப் படத்தின் தோல்விக்கு நான்தான் காரணம். நடிக்க ஆசைப்பட்டேனே தவிர, அதற்கான எந்த தகுதியையும் நான் கொண்டிருக்கவில்லை” என்று அப்போது அறிக்கை விட்டுவிட்டு, அமெரிக்காவுக்கு படிக்கப் போனார். 2009ஆம் ஆண்டு ஊர் திரும்பினார். மலையாளத் திரையுலகமே ஒன்றிணைந்து வேலை பார்த்து, சொல்லி அடித்த கில்லியான சூப்பர்ஹிட் படமான ‘கேரளா கஃபே’வில் நடித்தார். அதிலிருந்து ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் நான்கு ஆண்டுகளாக நடித்துக் கொண்டே இருக்கிறார். நான்கு ஆண்டுகளில் பதிமூன்று படங்கள். இதில் டயமண்ட் நெக்லஸ், 22 ஃபீமேல் கோட்டயம் மாதிரி சூப்பர் டூப்பர் ஹிட்டுகளும் அடக்கம். அடுத்து இப்போதே ஆறு படங்கள் புக் ஆகிவிட்டது. லேசான முன் தலை வழுக்கை, சுமாரான உடல்வாகு என்றாலும் பஹாத்துக்கு ஒருமாதிரியான கவர்ச்சி இருக்கிறது. மிகச்சுலபமாக கேரளத்து இளம்பெண்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்டார்.

560
நாதொலியை எழுதியவர் ஷங்கர் ராமகிருஷ்ணன். இவர் முன்பாக எழுதியது உருமி. அதற்கும் முன்பாக கேரளா கஃபேவில் (மொத்தம் 10 குறும்படங்கள் சேர்ந்தது இந்தப்படம்) ஓர் குறும்படத்தை எழுதி, இயக்கினார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ‘நாதொலி’ அபோவ் ஆவரேஜ் என்று ரிசல்ட் வந்துவிட்டதால், மலையாளத்தின் இளம் இயக்குனர்கள் பலரும் ஷங்கர் ராமகிருஷ்ணனோடு வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் உலகத்தரம் என்பதில் சந்தேகமேயில்லை. எடிட்டர் மகேஷ் நாராயணன். எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது இல்லையா? நம்மூர் விஸ்வரூபத்தின் எடிட்டர்தான். திறமை எங்கிருந்தாலும் அதை தேடி கண்டுபிடிப்பதில் கமலுக்கு நிகர் கமலேதான்.

நாதொலி ஒரு செறிய மீனல்ல,  தவற விட்டுவிடக்கூடாத படம். சிக்கலான கதையை எப்படி குழப்பமில்லாமல் ரசிகனுக்கு பிரசண்ட் செய்வது என்பதற்கு இப்படத்தை ஒரு பாடமாக மற்ற சினிமாக்காரர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இந்தியில் எடுக்கப்பட்டால் ஓவர்சீஸ் கலெக்‌ஷன் அள்ளும். துரதிருஷ்டவசமாக குறைந்தளவு பரப்பளவே கொண்ட ஓவர்சீஸ் ஏரியாதான் மலையாளப்படங்களுக்கு வாய்த்திருக்கிறது.

(நன்றி : cinemobita.com)