17 ஏப்ரல், 2013

கர்ணனின் கவசம்

வாராவாரம் காத்திருந்து கடைசியாக வாசித்த தொடர்கதை எது? இரண்டு மூன்று நாட்களாக மூளையை கசக்கோ கசக்குவென்றி கசக்கி, தூக்கிப் போட்டு துவைத்ததின் காரணமாக சற்று முன்னர்தான் நினைவுக்கு வந்தது. விகடனில் இருவன் எழுதிய ‘ஒன்று’. மூன்று ஆண்டுகள் முழுசாக முடிந்துவிட்டது. இடையில் வேறு தொடர்கதை எதையும் பார்த்ததாககூட நினைவில்லை. ஒரு காலத்தில் ரஜினி சினிமா ரிலீஸ் மாதிரி புதுத்தொடர்கதைகளின் அறிவிப்பை கொண்டாடிய தமிழ் வாசக சமூகத்துக்கு என்னமாதிரியான சோதனை?

சிறுகதைகளுக்கே இடம் ததிங்கிணத்தோம் எனும்போது தொடர்கதைகளை எதிர்ப்பார்ப்பதில் நியாயமில்லைதான். ரெண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தபோது, ஏதோ சினிமா போஸ்டர் என்றுதான் முதலில் நினைத்தேன். மீண்டும் பார்த்தபோதுதான் அது தொடர்கதைக்கான அறிவிப்பு என்பதை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. சன்பிக்சர்ஸ் ஸ்டைலில் ஊரெல்லாம் டபுள் பிட் போஸ்டர் அடித்து அமர்க்களப் படுத்தியிருந்தது குங்குமம். கே.என்.சிவராமன் எழுதும் ‘கர்ணனின் கவசம்’. அடியில் சின்னதாக அமானுஷ்யத் தொடர். அமானுஷ்யம் மாதிரி வார்த்தைகளை வாசித்து எத்தனை வருஷம் ஆகிறது என்று குஷி.

ஒரு காலத்தில் குங்குமம் எங்கள் வீட்டில் ஃபேவரைட். கலைஞரின் தொடர்கதை ஏதாவது ஒன்றுக்கு பர்மணெண்ட் ஸ்லாட். அடிக்கடி பாலகுமாரனின் தொடர்களும் வரும். குட்டி குட்டியாக கிளுகிளுக்கதைகளை தைரியமாக போடுவார்கள் (ஆறாவது படிக்கும்போதே அந்தக் கதைகளில் கிளுகிளுப்பாக ஏதுமில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்). குமுதம், விகடனில் ‘மிஸ்’ ஆகும் விஷயங்கள் சில குங்குமத்தில் இருக்கும். ரெகுலராக வாசிப்பதில்லை என்றாலும், அவ்வப்போது புரட்டிப் பார்ப்பதுண்டு. முன்பு குங்குமத்தில் சில கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். கர்ணனின் கவசத்தை வாசிப்பதற்காகவே மீண்டும் தொடர்ச்சியாக குங்குமம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

அமானுஷ்யத் தொடர்கதை என்றதுமே இந்திரா சவுந்திரராஜன் பாணியில் ரெண்டு காதுகளிலும் முழம் முழமாக பூச்சுற்றப் போகிறார் சிவராமன் என்றுதான் நினைத்தேன். இவர் சயிண்டிஃபிக்காகதான் காது குத்துகிறார். பகுத்தறிவை விட்டு ரொம்ப விலகிடவில்லை என்பதால் மன்னிக்கலாம். இதுவரை வந்த ஆறு அத்தியாங்களை வாசித்தவரையில் இதில் இந்திரா சவுந்திரராஜனும் இருக்கிறார். சுஜாதாவும் இருக்கிறார். பாலகுமாரனும் இருக்கிறார். ராஜேஷ்குமாரும் இருக்கிறார். வசனநடையில் ரா.கி.ரங்கராஜன் எட்டிப் பார்க்கிறார். இன்னும் யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ தெரியவில்லை.

அமானுஷ்யக் கதை என்றாலே ஜமீன், பேய்பங்களா இருந்தே ஆக வேண்டும். அதில் இருந்து ‘கர்ணனின் கவசம்’ முற்றிலுமாக வேறுபடுகிறது. நாம் அறியாத, உலகின் காஸ்ட்லியான சமாச்சாரம் ஒன்றை புனைகிறது. பெட்ரோலை விட, தங்கத்தை விட காஸ்ட்லியான அது என்னவென்று வரப்போகும் அத்தியாயங்களில் தெரிந்துக் கொள்ளலாம். அனேகமாக ஏதோ தனிமமாக இருக்கலாம். அது இந்தியாவில் எங்கோ புதைந்திருக்கிறது. அதைத்தேடி சர்வதேசக் கும்பல் ஒன்று இங்கே தேடுதல் வேட்டை நடத்துகிறது. பரபரவென்று ஹாலிவுட் பாணியில் ஓடுகிறது திரைக்கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாலு பிரிவுகள். வெவ்வேறு பாத்திரங்கள், வெவ்வேறு லோக்கேஷன்.

தொடர்கதையின் அடிப்படை இது. எழுத்தாளர் அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஒரு தூண்டிலை போடவேண்டும். நான்கைந்து பக்கங்களில் முடிவதற்குள் நிச்சயமாக மீன் மாட்டியிருக்க வேண்டும். அடுத்த வார தூண்டிலுக்கும் கடைசி வரியில் அச்சாரம் இட்டிருக்க வேண்டும். வெற்றிகரமான எந்தவொரு தொடர்கதையிலும் இந்த பண்பினை நீங்கள் கவனிக்கலாம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிவராமன் ஒன்றுக்கு நாலாக தூண்டில் போடுகிறார். எனவே வாராவாரம் அவர் நாலு மீன் பிடித்தே ஆகவேண்டும். அதாவது ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நாலு ‘திடுக்’ ஏற்படுத்த வேண்டும். அந்த நாலு ‘திடுக்’கையும் லாஜிக்கலாக திடுக்கிடவைக்கும் வகையில் கதையின் போக்கினை ‘சுருக்’காக சுவாரஸ்யப்படுத்திட வேண்டும். கதை எழுதியவர்களுக்கும், எழுத முயற்சிப்பவர்களுக்கும் தெரியும் இது எவ்வளவு கடினமான முயற்சி என்று.

அவ்வகையில் கர்ணனின் கவசத்தை வெகுஜன தொடர்கதை பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான முயற்சியாக கருதலாம். இத்தொடர் வெற்றியடையும் பட்சத்தில் மற்றப் பத்திரிகைகளும் தொடர்கதைகளுக்கு இடமளிக்கும் (ராணி ஒரு மர்மத்தொடரை இவ்வாரம் ஆரம்பிக்கிறது). எழுதுவதையே மறந்துவிட்ட பழைய எழுத்தாளர்களும் மீண்டும் களம் காண்பார்கள். நம்மை மாதிரி கத்துக்குட்டிகளுக்கு ஏதோ சான்ஸு கிடைக்கும். அவ்வகையில் கர்ணனின் கவசம் ஒரு ஆரோக்கியமான போக்கினை தொடங்கியிருக்கிறது.

பிரும்மாண்ட விளம்பரங்கள் வந்தபோதே தொடர் பிரமாதமாக இருக்கப் போகிறது என்று யூகித்திருந்தேன். ஆனால் சர்ப்ரைஸ் போனஸ் ஒன்று கிடைத்திருக்கிறது. ராஜாவின் ஓவியங்கள். தினகரனில் சிறப்பு கட்டுரைகளுக்கு கிராஃபிக்ஸ் ஓவியங்கள் வரைந்துவருபவர். முதன்முறையாக ஒரு தொடர்கதைக்கு இப்போதுதான் படம் வரைகிறார். தீபிகா படுகோனே, ஜக்கிவாசுதேவ், லியானார்டோ டீகாப்ரியோ, ஜெட்லீ, ஹேராம் கெட்டப்பில் அர்னால்ட் என்று யார் யாரோ இவர் படங்களில் தெரிகிறார்கள். படங்கள் சூப்பர், ஆகா ஓகோவென்றெல்லாம் பாராட்டப் போவதில்லை. ஏனெனில் இம்மாதிரி வழக்கமான பாராட்டுகள் ராஜாவின் திறமைக்கு முன்பு ரொம்ப சாதாரணம். கீழே இருக்கும் ஓவியங்கள் தொடரில் இதுவரை வந்தவை. பார்த்துக் கொள்ளுங்கள். ராஜா எவ்வளவு ‘கெத்து’ என்று... படங்கள் இவ்வளவு பிரமாதமாக வந்திருந்தால், அதற்கு source ஆக கதை எப்படியிருக்கும் என்று நீங்களே guess செய்துக் கொள்ளுங்கள்.

15 ஏப்ரல், 2013

தமிழக அரசின் நரபலி

சமீபத்தில் சென்னையில் மூன்று வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தித்தாளில் வாசித்தோம். ஒரு குடுகுடுப்பைக்காரனின் பேச்சை கேட்டு ஓர் அப்பாவிப்பெண் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதாக தகவல். மத அடிப்படைவாதம் பெற்ற பிள்ளை மூடநம்பிக்கை. எனவே இச்செயலில் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.

தினமலரில் வாசித்த இன்னொரு செய்தி.

புதுக்கோட்டையில் வசிப்பவர் ஜாஹீர் உசேன். இவரது ஒரே மகள் நிலோபர்பானு, பதினெட்டு வயது (திமுக பொதுக்குழு உறுப்பினரான அப்துல்லாவின் உறவினர்கள் இவர்கள்). நிலோபர்பானு +2வில் 1100 மதிப்பெண் எடுத்து என்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் செலவு செய்ய ஜாஹீரிடம் பணமில்லை. உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ பணம் கேட்க ஜாஹீருக்கு தயக்கம். எனவே மகளை கலைக்கல்லூரி ஒன்றில் சேர்த்திருக்கிறார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து வந்தார் பானு.

குடும்பச் செலவுக்காக அருகிலிருந்த ஜெராக்ஸ் கடை ஒன்றில் பகுதிநேரமாக பணியும் செய்து வந்திருக்கிறார் பானு. இதில் கிடைக்கும் சொற்ப வருமானம் மூலமாக தந்தையுடைய நிதிச்சுமையை குறைத்திருக்கிறார். கடையில் பணிபுரியும்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டிருக்கிறது. மின்தடை ஏற்படும் போதெல்லாம் ஜெனரேட்டரை இக்கடையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். போனவாரத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின் தடையின் போது ஜெனரேட்டரை ‘ஆன்’ செய்திருக்கிறார் பானு. இருட்டில் கொஞ்சம் தடுமாறிய அவரது தாவணி ஜெனரேட்டர் மோட்டாரில் சிக்கிக் கொண்டது. இதை எடுக்க முயற்சிக்கும்போது அவரது தலைமுடியும் மோட்டாரில் சிக்கி, ஏடாகூடமாக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். தலையில் பலத்த காயமடைந்த பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

பானுவின் மரணத்துக்கு நேரடித்தொடர்பு அரசுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் காரணம் அரசுதான் என்பதை மறுக்க முடியுமா? வியாசர்பாடி பெண் அறியாமையால் பக்கத்து வீட்டு குழந்தையை பலி கொடுத்ததற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா என்ன? தமிழக அரசின் வரலாறு காணாத சாதனையான மின்வெட்டுக்கு நம் கண் முன்னே பலி கொடுக்கப்பட்டிருக்கிறார் படிப்பில் படுசுட்டியான பானு. கண்ணுக்கு தெரியாத நரபலிகள் இன்னும் எத்தனை எத்தனையோ?

13 ஏப்ரல், 2013

மரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்

“தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று மரணத்தண்டனை குறித்த திமுகவின் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கலைஞர்.

மரணத்தண்டனை குறித்த அச்சத்தை மத்தியில் இருக்கும் அரசும், குடியரசுத்தலைவரும் ஏற்கனவே விதைத்து விட்டார்கள். அதை ஊதிப்பெருக்கும் விதமாக சமீபமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்திய அரசியலின் மூத்தத் தலைவரான கலைஞரின் இக்கருத்து மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் தரக்கூடியது.

மத்திய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு மரணத்தண்டனையாக நிறைவேற்றிக் கொண்டே வருவதை காணும்போது, அடுத்து எங்கே பாசக்கயிறு வீசப்போகிறார்கள் என்பதை சுலபமாகவே யூகிக்க முடிகிறது. ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணத்தண்டனை உறுதியான நால்வரில் நளினிக்கு மட்டும் 2000ஆம் ஆண்டு திமுக அரசு தண்டனையை குறைத்தது. முன்னதாக தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவர்களின் மரணத்தண்டனையையும் திமுக அரசு மாற்றியமைத்திருக்கிறது. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கும் 2006-11 ஆட்சிக்காலத்திலாவது கலைஞர் பெரிய மனது வைத்து தண்டனையை குறைத்திருக்கலாம். ஆனால் கலைஞர் என்கிற விக்கிரமாதித்தனின் முதுகில் காங்கிரஸ் என்கிற வேதாளம் அல்லவா ஏறிக்கொண்டிருந்தது?

கலைஞர் செய்யத் தவறியதை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அவர்களாவது உடனடியாக செய்துக்காட்ட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் இதுவரை போடப்பட்ட தீர்மானங்களால் உருப்படியாக எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. பொதுவாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் போட்டுவிட்டு, பந்தை மத்திய அரசின் பக்கமாக தள்ளிவிடுவதுதான் அம்மாவின் சமீபகால மோஸ்தராக இருக்கிறது.

அப்படியில்லாமல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவருக்குமான மரணத்தண்டனையை குறைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முன்பு திமுக அரசு இப்படித்தான் சிலருக்கான மரணத்தண்டனையை மாற்றியமைத்திருக்கிறது. இந்த தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ள நெருக்கடி தரவேண்டும். வரலாற்றிலேயே முதன்முறையாக அம்மாவுக்கும், ஒரு ஆளுநருக்கும் பிரச்சினை இல்லாமல் இருப்பது இதுதான் முதன்முறை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நித்தமும் அம்மா புகழ் பாடி புண்ணியம் தேடிக்கொள்ளும் ஊடகங்களும், வைகோசீமாதாபா பஜனைக் கோஷ்டியினரும் இதற்காக வேண்டுகோளோடு நிறுத்திவிடாமல் புரட்சித்தலைவிக்கு நெருக்கடி தந்து, தங்களுக்கும் நிஜமாகவே தமிழுணர்வு இருக்கிறது என்பதை  நிரூபிக்க வேண்டும்.

தமிழக அரசை சங்கடப்படுத்திவிடக் கூடாது, அதே நேரம் தமிழுணர்வு இமேஜுக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்று இரட்டை வேடம் போடும் வேடதாரிகளுக்கு இது அக்னிப்பரிட்சை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிஜமாகவே ஈழத்தாய் தானா என்பதை உரசிப்பார்க்கும் சோதனையும் கூட.

எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்.


மரணத்தண்டனை குறித்த நமது முந்தைய கதறல்கள் :

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

9 ஏப்ரல், 2013

ஹிம்மத்வாலா

எழுபதுகளில் இந்தியா கொதித்துக் கொண்டிருந்தது. இந்திய கிராமங்களில் பண்ணையார்களின் சாதிய, வர்க்க அராஜகத்தால் எழுந்த அனல் அது. அதிகார மட்டத்தில் செல்வாக்கு கொண்ட இவர்களை அடக்க, மக்கள் மத்தியிலிருந்து நக்சல்பாரிகள் தோன்றவேண்டியிருந்தது. மத்திய, மாநில அரசுகள் அவர்களை வில்லன்களாக்கி துரத்தி, துரத்தி வேட்டையாடினாலும் அடித்தட்டு மக்களால் ஹீரோக்களாகதான் பார்க்கப்பட்டார்கள்.

சமூகத்தில் ‘ஹீரோ’ உருவானதுமே, முதலில் சுறுசுறுப்படைவது திரைத்துறைதான். எழுபதுகளின் அந்த சமூகப் பின்னணி மசாலா ஆக்‌ஷன் படங்களின் களமானது. பண்ணையார்கள் வில்லன்கள். அவர்களை அழித்தொழிப்பது அல்லது திருத்துவது ஹீரோக்களின் வேலை. ஆனாலும் ஹீரோ நக்சல்பாரியாக இருக்க மாட்டார். தேசம் மீது விமர்சனமற்ற பற்றும், இந்திய அரசியல் சட்டத்தின் மீது மரியாதையும் கொண்டவராக.. சாதிய சமய வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளாதவராக.. சமத்துவத்தை வலியுறுத்தும் இலட்சியவாத இளைஞனாக இருப்பார்.

குறிப்பாக இவரது அப்பா சிறுவயதில் பண்ணையாரின் அட்டூழியங்களை தட்டிக் கேட்டதற்காக கொல்லப்பட்டிருப்பார். அம்மாவையும், தங்கையையும் பிரிந்து நகரத்துக்கு வந்திருப்பார் ஹீரோ. அங்கே ஓடிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது ரவுடிகளை துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போதோ ரெண்டு மூன்று சீன்களில் வளர்ந்து கன்னியர் மயங்கும் கட்டழகுக் காளையாக வளர்ந்துவிடுவார். வளர்ந்ததுமே தன்னுடைய கிராமத்து கடமை நினைவுக்கு வரும். ஊருக்கு வருவார். அம்மாவிடமும், தங்கையிடமும் பாசமழை பொழிவார். ஊராருக்கு எல்லாம் உதவுவார். பண்ணையாரின் அடியாட்களை தூக்கிப் போட்டு பந்தாடுவார். பண்ணையாரின் மகளை காதலிப்பார். இறுதியில் சூழ்ச்சிகளை வென்று தர்மத்தை நிலைநாட்டுவார்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இந்திய சினிமாவில் இதே மரணமொக்கை கதையை வைத்து நூற்றுக்கணக்கில் படங்கள் தயாராகின. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சூப்பர்ஸ்டார் இம்மாதிரி கதைகளை வைத்துதான் உருவானார்கள். இந்த போக்கின் உச்சம் 1981ல் தெலுங்கில் வெளிவந்த ‘ஊரிக்கி மொனகடு’. (ஊருக்கு உழைப்பவன் என்பது மாதிரி மீனிங் இருக்கலாம் என்று நினைக்கிறேன்).  இளைஞர்களுக்குள் மூண்டெழுந்த சமூக கோபத்தை சினிமா அப்படியே வியாபாரமாக்கிவிட்டது. அதை கச்சிதமாக செய்தவர் கே.ராகவேந்திர ராவ்'

அப்போது தெலுங்கின் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணா ஹீரோ. கொஞ்சம் வேகமாக நடக்கும் காட்சி இருந்தாலே ‘டூப்’ போட சொல்லுபவர் இவர். டோலிவுட்டின் கனவுக்கன்னி ஜெயப்ரதா ஹீரோயின். அவரது இடுப்பைப் பார்த்து கிறங்கிய அந்தகால டோலிவுட் ரசிகர்கள் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில் இன்னமும் கிறக்கத்தில் இருந்து மீளவில்லை. கரம் மசாலா காட்சிகள், காமத்தைத் தூண்டும் கலக்கல் சாங்க்லு + டேன்ஸ்லு, கல்மனம் கொண்டோரின் கண்களையும் கசியவைக்கும் அம்மா, தங்கை பாசம் என்று பக்கா காக்டெயிலாக உருவானதால் படம் பம்பர் ஹிட். இந்தப் படத்தின் தாக்கம் அப்போது எல்லா மொழிகளில் உருவான படங்களிலும் இருந்தது. குறிப்பாக நம்மூர் எவர்க்ரீன் மசாலா எண்டெர்டெயினரான சகலகலா வல்லவனில் பல காட்சிகள் ‘ஊரிக்கி மொனகடு’வில் இருந்து இன்ஸ்பையர் ஆனவைதான்.
கே.ராகவேந்திரராவ், கசாப்புக் கடை மாஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆடுகளை போட்டுத்தள்ளி வரிசையாக மாட்டுவதைப் போல வருடாவருடம் ஏழு, எட்டு படங்களை அசால்டாக இயக்கித் தள்ளுவார். ’ஊரிக்கி மொனகடு’ மூலமாக 1981ன் சூப்பர் டூப்பர் ஹிட்டைக் கொடுத்த இவர், அவ்வருடம் மட்டுமே எட்டு படங்களை இயக்கியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஹீரோயின் அறிமுகக் காட்சிக்கு பயங்கரமாக மெனக்கெடுவார். குட்டியூண்டு குட்டைப் பாவாடையோடு இரண்டு கால்களையும் ‘A’ ஷேப்பில் ஹீரோயின் விரித்து நிற்க, பின்புறமாக கேமிராவை இடுப்புக்கு கீழாக ‘ஷாட்’ வைத்து காட்டுவதுதான் இவரது ஸ்பெஷல் டேலண்ட். வ்யூபாயிண்டில் ரசிகன் பார்க்கும் ‘A’வுக்கு நடுவில் தெரியும் கேப்பில் ஹீரோவை இண்ட்ரொட்யூஸ் செய்வார். தியேட்டர்களில் அப்ளாஸ் எப்படி அள்ளும் என நீங்களே கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.

அதற்காக ராகவேந்திரராவை காமவெறி இயக்குனர் என்று அவசரமாக முடிவுகட்டிவிட வேண்டாம். இப்போது எழுபத்தியொன்று வயதாகும் இவர், இதுவரை 104 படங்கள் இயக்கியிருக்கிறார். இன்னமும் எப்படியும் ஒரு இருபத்தைந்து படங்களாவது இயக்கிவிட்டுதான் ஓய்வெடுப்பார் என்று நினைக்குமளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பம்பரமாக இப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் ஃபெமினிஸ படங்களும் நிறைய எடுத்திருக்கிறார். அன்னமய்யா, பாண்டுரங்கடு, மஞ்சுநாதா, ஷிர்டிசாய்பாபா மாதிரி ஏகப்பட்ட பக்திப்படங்களையும் பக்திரசம் சொட்டச் சொட்ட கொடுத்திருக்கிறார். ஆந்திராவின் ஏ.பி.என். அவர். தெலுங்கில் இவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை எனலாம். பழம்பெரும் இயக்குனர் பிரகாஷ்ராவின் (வசந்தமாளிகை, அவன் ஒரு சரித்திரம்) மகன்தான் ராகவேந்திரராவ். என்.டி.ஆரில் தொடங்கி கிருஷ்ணா, ஷோபன்பாபு, கிருஷ்ணம்ராஜூ, சிரஞ்சீவி, மோகன்பாபு, ராஜசேகர், ஸ்ரீகாந்த், வெங்கடேஷ், விஜயசாந்தி, ராதா, ராதிகா, ரம்யாகிருஷ்ணன், ரம்பா, ரவளி என்று பிரபலமான எல்லா நட்சத்திரங்களுக்கும் ‘பிரேக்’ கொடுத்த சாதனைக்கு சொந்தக்காரர். இவரை மாதிரி மூன்று தலைமுறை நட்சத்திரங்களை கையாண்ட இயக்குனர்கள் இந்திய திரையுலகில் மிகவும் குறைவு. அவர் இயக்கிய படங்களில் நாலில் ஒன்றாவது வெள்ளிவிழா கொண்டாடியிருக்கிறது. இதுவரை இருபத்தியேழு வெள்ளிவிழாப் படங்களை இயக்கியிருக்கிறார். அப்படியென்றால் நூறு நாள், எழுபத்தைந்து நாள், ஐம்பது நாள் படங்கள் எவ்வளவு இருக்குமென்று யூகித்துக் கொள்ளுங்கள். உலக அளவில் எந்த ஒரு இயக்குனருக்காவது இவ்வளவு துல்லியமான வெற்றிசதவிகிதம் இருக்குமாவென்று தெரியவில்லை.
‘ஊரிக்கி மொனகடு’வை இந்தியில் ஹிம்மத்வாலாவாக ரீமேக்கும்போதும் ராகவேந்திராராவையே இயக்க அழைத்தார்கள். ஜீதேந்திரா ஹீரோவாக நடிக்க, ஸ்ரீதேவி ஹீரோயின். இருபது வயது ஸ்ரீதேவியின் இளமையில் அன்று விழுந்த இந்தி ரசிகர்கள், மீண்டு எழ பதினைந்து ஆண்டுகள் பிடித்தது. சாதாரணமாகவே ஹீரோயினை உரித்து கலைநயத்தோடு காட்டும் ராகவேந்திரராவ், பேரழகியான ஸ்ரீதேவியை பார்த்ததுமே ‘குஷி’யாகி விட்டார். காட்சியமைப்புகளில் புகுந்து விளையாடினார். தமிழ், தெலுங்கை விட்டு இந்தியில் ‘செட்டில்’ ஆக ஸ்ரீதேவிக்கு தைரியம் கொடுத்தது ‘ஹிம்மத்வாலா’தான். 1983ஆம் ஆண்டின் ப்ளாக்பஸ்டர் இப்படம்தான். ஹிம்மத்வாலா என்றால் ‘தில்லு தொரை’ என்பது மாதிரி மீனிங்.

இப்போது இந்தியில் கதைக்கு பஞ்சம். எனவே பழைய மெகாஹிட் படங்களையே பாதுகாப்பாக ரீமேக் செய்து வசூலை அள்ளுகிறார்கள். தொடர்ச்சியாக நூறு கோடி வசூல் படங்களிலேயே நடித்துக் கொண்டிருப்பதால் அஜய்தேவ்கனுக்கு அடுத்தடுத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மீறிய படங்களை தரவேண்டிய கட்டாயம்.

சினிமா குடும்பத்தில் பிறந்து தொலைத்த ஒரே காரணத்தினாலேயே சினிமாக்காரர் ஆகிவிட்டவர் இயக்குனர் சஜித். நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று இவருக்கு ஏகப்பட்ட முகம். ஷாருக்கானின் நண்பரும் பாலிவுட்டின் பிரபலமான நடன அமைப்பாளரும், சூப்பர்ஹிட் படங்களின் டைரக்டருமான ஃபராகான் இவருடைய அக்காதான். ஃபரான் அக்தர், ஸோயா அக்தர், ஹனி இரானி, ஜாவேத் அக்தர் என்று இந்திப் படங்களின் டைட்டில்களில் நீங்கள் பார்க்கும் பெயர்கள் எல்லாம் இவருடைய சொந்தக்காரர்கள்தான்.

மற்ற மொழி படங்களை ரீமேக் செய்வதுதான் சஜித்தின் ஸ்டைல். நம்மூரில் ஃப்ளாப் ஆன ‘காதலா காதலா’வை ரீமேக் செய்து, ‘ஹவுஸ்ஃபுல்’லாக 100 கோடி வசூல் செய்தவர். அடுத்து எடுத்த ’ஹவுஸ்ஃபுல்-2’வும் கூட இருநூறு கோடி வசூலை நெருங்கியது. இதுவும் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்தான். மற்ற மொழிப் படங்களையே ரீமேக் செய்து அலுத்துப்போனவர் பழைய இந்திப் படத்தையே திரும்ப செய்ய நினைத்ததுதான் இப்போது கையை சுட்டுவிட்டது.
பெரிய எதிர்ப்பார்ப்போடு போனவாரம் வெளியான ‘ஹிம்மத்வாலா’, பழைய படம் மாதிரி பரபரப்பாக இல்லையென்று விமர்சகர்களால் கழுவி கழுவி ஊற்றப்படுகிறது. ஐந்துக்கு ஒரு நட்சத்திரம் கூட கொடுக்க தகுதியில்லாத படம் என்று ஊடகங்கள் நிராகரித்தாலும், சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வசூல்தான். இதுவரை ஐம்பது கோடி வசூலை நெருங்கிவிட்டாலும் ஏனோ ‘ஹிம்மத்வாலா-2013’ ஃப்ளாப் என்றே அறிவிக்கப்படுகிறது.

சஜித் செய்த தவறு ஒன்றுதான். புலியைப் பார்த்து பூனையாக சூடு போட்டுக் கொண்டது. அதனால்தான் ஒரிஜினல் படம் பத்தரைமாத்து தங்கம், சஜித்தின் டூப்ளிகேட் அலுமினியம் என்று எல்லோரும் அலுத்துக் கொள்கிறார்கள். இரண்டையும் ஒப்பிடும் பட்சத்தில் ராகவேந்திராவின் திரைநுணுக்கம் குறித்த பிரமிப்பு மலையளவு உயர்கிறது. காலத்துக்கு ஏற்ப மாற்றுகிறேன் என்று சஜித் திரைக்கதையில் செய்த மாற்றங்கள் எல்லாமே பல்லிளித்துப் போய்விட்டது. ஆனால் பழைய ஹிம்மத்வாலா பார்க்காதவர்கள், புது ஹிம்மத்வாலாவை பார்த்தால் சுவாரஸ்யமாகதான் இருக்கிறது என்கிறார்கள்.

எது எப்படியோ நம்ம தமன்னாவை எக்ஸ்ரே மாதிரி ஸ்கேன் செய்துக் காட்டியதில் மட்டும் சஜித் வென்றிருக்கிறார். தமன்னாவின் பனிநிற தொப்புளைப் பார்த்து வட இந்தியாவே கிறுக்குப் பிடித்து அலைகிறது. பாலிவுட்டில் அவரது இன்னிங்ஸை ஸ்டெடியாக ஆட ‘ஹிம்மத்வாலா’ உதவும் என்பதுதான் நமக்கான ஆறுதல்.

‘ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட்’ என்பதை அஜய்தேவ்கன் புரிந்துக் கொண்டிருப்பார்.

(நன்றி : cinemobita.com)

8 ஏப்ரல், 2013

பொற்காலம் திரும்புகிறது

என்னுடைய சீனியர் கருணாகரன் சார் ரெண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயம் சுவாரஸ்யமாக இருந்தது. முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி நேரத்துக்கு அவர் வசிக்கும் ஏரியாவில் கரண்ட் கட். பையனோடு ஜாலியாக விளையாடியிருக்கிறார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுவரில் முயல், நரி, பாம்பு என்று உருவங்களை நிழலாக்கி விளையாடும் விளையாட்டு. கரண்ட் கட் என்று ஒன்று இருக்காவிட்டால் தகப்பனும், மகனும் இதுபோல இப்போது விளையாட வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. டிவி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று பெருகிவிட்ட சாதனங்கள் உறவுகளுக்குள் ஏற்படுத்தும் இடைவெளி பற்றிய ஓர்மை நமக்கு எந்தளவுக்கு இருக்கிறது?

எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் இருந்த நெருக்கம், எனக்கும் என்னுடைய மகளுக்கும் இருக்கிறதாவென்று சந்தேகமாகவே இருக்கிறது. தூங்குவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளோடு துணைவியார் மல்லு கட்டிக் கொண்டிருக்கும்போது, இல்லறத்தை தற்காலிகமாக துறந்து நள்ளிரவில் ஐ.பி.எல். பார்க்கும்போது கொஞ்சம் குற்றவுணர்ச்சியாகதான் இருக்கிறது. ஐந்துவயது வரை அப்பா என்னை தோளில் சாய்த்து, தெருவெல்லாம் அப்படியும் இப்படியுமாக நடந்துகொண்டே பாட்டு பாடி தூங்கவைப்பார்.

அப்பாக்கள் மட்டும் மாறிவிடவில்லை. முன்பெல்லாம் இடுப்பில் குழந்தையை இடுக்கியபடி சோறூட்டும் தாய்மார்களை நிறைய பார்க்க முடிந்தது. இப்போது சென்னையில் இதுவொரு அரிதான, அதிசயமான நிகழ்வாகி விட்டது. மெகாசீரியலின் எஃபெக்ட்தான். வேறென்ன. அப்போதெல்லாம் சென்னையை சுவாரஸ்யப்படுத்துவதே குழாய்ச்சண்டைகள்தான். இப்போது சண்டை போட யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இந்த நேரத்தை சீரியல் பார்த்து பயனுள்ளதாக கழிக்கலாம்.

ஒருவகையில் பார்த்தால் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ‘ஜெய் ஹோ’ ஆட்சி நம்முடைய மரபினை மீட்டு தந்துக் கொண்டிருக்கிறது. பனையோலை விசிறி, டார்டாய்ஸ் கொசுவர்த்தி என்று தொலைந்துப்போன தலைமுறையின் அடையாளங்களை மீட்டுத் தருகிறது. தூளி கட்டி குழந்தைக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள் தமிழக தாய்மார்கள். இளம் அப்பாக்கள் குழந்தைகளோடு யானைசவாரி விளையாடுகிறார்கள். புதிதாக மணமான தம்பதிகள் ‘நிலா காயுது, நேரம் நல்ல நேரம்’ என்று டூயட் பாடுகிறார்கள். அப்பா, அம்மா, மகன், மகள், மருமகள், குழந்தைகள் என்று குடும்பம் கூடி நிலாச்சோறு சாப்பிடுகிறது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் புரட்சித்தலைவியின் ஆட்சி நமது பொற்காலத்தை மீட்டுத்தரும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவருவதாகவே தெரிகிறது. மாண்புமிகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனிமனிதராக நம்மை முப்பதாண்டுகளுக்கு பின்னே முன்னேற்றியிருக்கிறார். மற்ற அமைச்சர்களும் கொஞ்சம் மெனக்கெட்டால் ராஜராஜசோழன் ஆட்சி காலத்துக்கே கூட தமிழகம் கால இயந்திரத்தில் பயணிக்கும் அற்புதம் நேரலாம். மேலும் கொஞ்சம் முக்கி கற்காலத்துக்கும் போய்விட முடியுமானால் அனாவசியமாக டிரெஸ் வாங்கும் செலவாவது மிச்சம்.