சமூகத்தில் ‘ஹீரோ’ உருவானதுமே, முதலில் சுறுசுறுப்படைவது திரைத்துறைதான். எழுபதுகளின் அந்த சமூகப் பின்னணி மசாலா ஆக்ஷன் படங்களின் களமானது. பண்ணையார்கள் வில்லன்கள். அவர்களை அழித்தொழிப்பது அல்லது திருத்துவது ஹீரோக்களின் வேலை. ஆனாலும் ஹீரோ நக்சல்பாரியாக இருக்க மாட்டார். தேசம் மீது விமர்சனமற்ற பற்றும், இந்திய அரசியல் சட்டத்தின் மீது மரியாதையும் கொண்டவராக.. சாதிய சமய வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளாதவராக.. சமத்துவத்தை வலியுறுத்தும் இலட்சியவாத இளைஞனாக இருப்பார்.
குறிப்பாக இவரது அப்பா சிறுவயதில் பண்ணையாரின் அட்டூழியங்களை தட்டிக் கேட்டதற்காக கொல்லப்பட்டிருப்பார். அம்மாவையும், தங்கையையும் பிரிந்து நகரத்துக்கு வந்திருப்பார் ஹீரோ. அங்கே ஓடிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது ரவுடிகளை துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போதோ ரெண்டு மூன்று சீன்களில் வளர்ந்து கன்னியர் மயங்கும் கட்டழகுக் காளையாக வளர்ந்துவிடுவார். வளர்ந்ததுமே தன்னுடைய கிராமத்து கடமை நினைவுக்கு வரும். ஊருக்கு வருவார். அம்மாவிடமும், தங்கையிடமும் பாசமழை பொழிவார். ஊராருக்கு எல்லாம் உதவுவார். பண்ணையாரின் அடியாட்களை தூக்கிப் போட்டு பந்தாடுவார். பண்ணையாரின் மகளை காதலிப்பார். இறுதியில் சூழ்ச்சிகளை வென்று தர்மத்தை நிலைநாட்டுவார்.
எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இந்திய சினிமாவில் இதே மரணமொக்கை கதையை வைத்து நூற்றுக்கணக்கில் படங்கள் தயாராகின. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சூப்பர்ஸ்டார் இம்மாதிரி கதைகளை வைத்துதான் உருவானார்கள். இந்த போக்கின் உச்சம் 1981ல் தெலுங்கில் வெளிவந்த ‘ஊரிக்கி மொனகடு’. (ஊருக்கு உழைப்பவன் என்பது மாதிரி மீனிங் இருக்கலாம் என்று நினைக்கிறேன்). இளைஞர்களுக்குள் மூண்டெழுந்த சமூக கோபத்தை சினிமா அப்படியே வியாபாரமாக்கிவிட்டது. அதை கச்சிதமாக செய்தவர் கே.ராகவேந்திர ராவ்'
அப்போது தெலுங்கின் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணா ஹீரோ. கொஞ்சம் வேகமாக நடக்கும் காட்சி இருந்தாலே ‘டூப்’ போட சொல்லுபவர் இவர். டோலிவுட்டின் கனவுக்கன்னி ஜெயப்ரதா ஹீரோயின். அவரது இடுப்பைப் பார்த்து கிறங்கிய அந்தகால டோலிவுட் ரசிகர்கள் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில் இன்னமும் கிறக்கத்தில் இருந்து மீளவில்லை. கரம் மசாலா காட்சிகள், காமத்தைத் தூண்டும் கலக்கல் சாங்க்லு + டேன்ஸ்லு, கல்மனம் கொண்டோரின் கண்களையும் கசியவைக்கும் அம்மா, தங்கை பாசம் என்று பக்கா காக்டெயிலாக உருவானதால் படம் பம்பர் ஹிட். இந்தப் படத்தின் தாக்கம் அப்போது எல்லா மொழிகளில் உருவான படங்களிலும் இருந்தது. குறிப்பாக நம்மூர் எவர்க்ரீன் மசாலா எண்டெர்டெயினரான சகலகலா வல்லவனில் பல காட்சிகள் ‘ஊரிக்கி மொனகடு’வில் இருந்து இன்ஸ்பையர் ஆனவைதான்.
அதற்காக ராகவேந்திரராவை காமவெறி இயக்குனர் என்று அவசரமாக முடிவுகட்டிவிட வேண்டாம். இப்போது எழுபத்தியொன்று வயதாகும் இவர், இதுவரை 104 படங்கள் இயக்கியிருக்கிறார். இன்னமும் எப்படியும் ஒரு இருபத்தைந்து படங்களாவது இயக்கிவிட்டுதான் ஓய்வெடுப்பார் என்று நினைக்குமளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பம்பரமாக இப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் ஃபெமினிஸ படங்களும் நிறைய எடுத்திருக்கிறார். அன்னமய்யா, பாண்டுரங்கடு, மஞ்சுநாதா, ஷிர்டிசாய்பாபா மாதிரி ஏகப்பட்ட பக்திப்படங்களையும் பக்திரசம் சொட்டச் சொட்ட கொடுத்திருக்கிறார். ஆந்திராவின் ஏ.பி.என். அவர். தெலுங்கில் இவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை எனலாம். பழம்பெரும் இயக்குனர் பிரகாஷ்ராவின் (வசந்தமாளிகை, அவன் ஒரு சரித்திரம்) மகன்தான் ராகவேந்திரராவ். என்.டி.ஆரில் தொடங்கி கிருஷ்ணா, ஷோபன்பாபு, கிருஷ்ணம்ராஜூ, சிரஞ்சீவி, மோகன்பாபு, ராஜசேகர், ஸ்ரீகாந்த், வெங்கடேஷ், விஜயசாந்தி, ராதா, ராதிகா, ரம்யாகிருஷ்ணன், ரம்பா, ரவளி என்று பிரபலமான எல்லா நட்சத்திரங்களுக்கும் ‘பிரேக்’ கொடுத்த சாதனைக்கு சொந்தக்காரர். இவரை மாதிரி மூன்று தலைமுறை நட்சத்திரங்களை கையாண்ட இயக்குனர்கள் இந்திய திரையுலகில் மிகவும் குறைவு. அவர் இயக்கிய படங்களில் நாலில் ஒன்றாவது வெள்ளிவிழா கொண்டாடியிருக்கிறது. இதுவரை இருபத்தியேழு வெள்ளிவிழாப் படங்களை இயக்கியிருக்கிறார். அப்படியென்றால் நூறு நாள், எழுபத்தைந்து நாள், ஐம்பது நாள் படங்கள் எவ்வளவு இருக்குமென்று யூகித்துக் கொள்ளுங்கள். உலக அளவில் எந்த ஒரு இயக்குனருக்காவது இவ்வளவு துல்லியமான வெற்றிசதவிகிதம் இருக்குமாவென்று தெரியவில்லை.
இப்போது இந்தியில் கதைக்கு பஞ்சம். எனவே பழைய மெகாஹிட் படங்களையே பாதுகாப்பாக ரீமேக் செய்து வசூலை அள்ளுகிறார்கள். தொடர்ச்சியாக நூறு கோடி வசூல் படங்களிலேயே நடித்துக் கொண்டிருப்பதால் அஜய்தேவ்கனுக்கு அடுத்தடுத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மீறிய படங்களை தரவேண்டிய கட்டாயம்.
சினிமா குடும்பத்தில் பிறந்து தொலைத்த ஒரே காரணத்தினாலேயே சினிமாக்காரர் ஆகிவிட்டவர் இயக்குனர் சஜித். நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று இவருக்கு ஏகப்பட்ட முகம். ஷாருக்கானின் நண்பரும் பாலிவுட்டின் பிரபலமான நடன அமைப்பாளரும், சூப்பர்ஹிட் படங்களின் டைரக்டருமான ஃபராகான் இவருடைய அக்காதான். ஃபரான் அக்தர், ஸோயா அக்தர், ஹனி இரானி, ஜாவேத் அக்தர் என்று இந்திப் படங்களின் டைட்டில்களில் நீங்கள் பார்க்கும் பெயர்கள் எல்லாம் இவருடைய சொந்தக்காரர்கள்தான்.
மற்ற மொழி படங்களை ரீமேக் செய்வதுதான் சஜித்தின் ஸ்டைல். நம்மூரில் ஃப்ளாப் ஆன ‘காதலா காதலா’வை ரீமேக் செய்து, ‘ஹவுஸ்ஃபுல்’லாக 100 கோடி வசூல் செய்தவர். அடுத்து எடுத்த ’ஹவுஸ்ஃபுல்-2’வும் கூட இருநூறு கோடி வசூலை நெருங்கியது. இதுவும் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்தான். மற்ற மொழிப் படங்களையே ரீமேக் செய்து அலுத்துப்போனவர் பழைய இந்திப் படத்தையே திரும்ப செய்ய நினைத்ததுதான் இப்போது கையை சுட்டுவிட்டது.
சஜித் செய்த தவறு ஒன்றுதான். புலியைப் பார்த்து பூனையாக சூடு போட்டுக் கொண்டது. அதனால்தான் ஒரிஜினல் படம் பத்தரைமாத்து தங்கம், சஜித்தின் டூப்ளிகேட் அலுமினியம் என்று எல்லோரும் அலுத்துக் கொள்கிறார்கள். இரண்டையும் ஒப்பிடும் பட்சத்தில் ராகவேந்திராவின் திரைநுணுக்கம் குறித்த பிரமிப்பு மலையளவு உயர்கிறது. காலத்துக்கு ஏற்ப மாற்றுகிறேன் என்று சஜித் திரைக்கதையில் செய்த மாற்றங்கள் எல்லாமே பல்லிளித்துப் போய்விட்டது. ஆனால் பழைய ஹிம்மத்வாலா பார்க்காதவர்கள், புது ஹிம்மத்வாலாவை பார்த்தால் சுவாரஸ்யமாகதான் இருக்கிறது என்கிறார்கள்.
எது எப்படியோ நம்ம தமன்னாவை எக்ஸ்ரே மாதிரி ஸ்கேன் செய்துக் காட்டியதில் மட்டும் சஜித் வென்றிருக்கிறார். தமன்னாவின் பனிநிற தொப்புளைப் பார்த்து வட இந்தியாவே கிறுக்குப் பிடித்து அலைகிறது. பாலிவுட்டில் அவரது இன்னிங்ஸை ஸ்டெடியாக ஆட ‘ஹிம்மத்வாலா’ உதவும் என்பதுதான் நமக்கான ஆறுதல்.
‘ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட்’ என்பதை அஜய்தேவ்கன் புரிந்துக் கொண்டிருப்பார்.
(நன்றி : cinemobita.com)
78 கோடியில் எடுக்கப்பட்ட "சின்ன பட்ஜெட்" படம் இது, 135 கோடி வசூல் தான் என் இலக்கு என்று சாஜித் கான் கூறினார்.
பதிலளிநீக்குஆனால் நிலவரம் கலவரம் ஆகிவிட்டது என்னவோ உண்மையே.
‘ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட்’
பதிலளிநீக்கு100 சதவிகிதம் உண்மை
தமன்னாவிற்காக் நான் அந்தப் படத்தின் டிவிடியை தேடிக்கொண்டு இருக்கிறேன்
பதிலளிநீக்கு