1 ஏப்ரல், 2013

ஹாலிவுட் 'பரதேசி' : Django Unchained

பாலாவின் ‘பரதேசி’ பார்த்திருப்பீர்கள். அதற்கு செகண்ட் பார்ட் எடுத்தால் எப்படியிருக்கும்? பரதேசியின் க்ளைமேக்ஸில் ராசாவும், அங்கம்மாவும் தேயிலைத் தோட்டத்தில் இணைகிறார்கள். “நரகக்குழிக்குள் வந்து மாட்டிக்கிட்டீயே அங்கம்மா” என்று ராசா கதறுகிறார். செகண்ட் பார்ட்டில் ராசாவும், அங்கம்மாவும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வேறு வேறு தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ராசா அங்கிருந்து தப்பி, அங்கம்மாவை கண்டுபிடித்து சிலபல ஆக்‌ஷன் செய்து கைபிடிக்கிறார் என்று பரதேசி-2 எடுக்கலாம் இல்லையா? பாலா அப்படி எடுப்பதாக இருந்தால் Django Unchainedஐ ஒன்றுக்கு நாலு முறை பார்ப்பது நல்லது. ஏனெனில் இப்படத்தின் கதையும் அதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையாளரோடு இயக்குனர் குவென்டின் டாரண்டினோ பேசிக்கொண்டிருந்தார். சுவாரஸ்யமாக பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. அமெரிக்காவைப் பற்றிப் பேசும்போது வரலாற்றுக்குள் நுழைந்துவிட்டார்கள். 1860ல் அங்குநடந்த சிவில் போர் பற்றி சுவாரஸ்யமாக பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. சிவில் போருக்கு முன்பாக அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த ‘அடிமை வியாபாரம்’ பற்றிய பேச்சு வந்தபோது குவென்டின் உணர்ச்சிவசப்பட்டார். “அமெரிக்காவின் கடந்த காலத்தை பற்றிய படங்கள் ஏராளமாய் வந்திருக்கிறது. அவை அமெரிக்கர்களின் பாசிட்டிவ்வான பக்கத்தை விளம்பரப்படுத்தும் விதமாகதான் இருக்கின்றன. நேரெதிரான நெகடிவ் பக்கத்தை பேச விரும்புவதில்லை. இதற்கு காரணம் அவர்களது குற்றவுணர்ச்சி. மற்ற நாடுகளை சேர்ந்த இயக்குனர்களுக்கோ இதைப்பற்றி எந்த புரிதலும் இல்லை என்பதால் சும்மா இருக்கிறார்கள். இந்த விஷயத்தை நான் படமாக்க விரும்புகிறேன்”

குவென்டின் வெறும் வாய்ப்பேச்சு வீரர் அல்ல. சொன்னதை செய்து முடித்தார். 2012 கிறிஸ்துமஸுக்கு ‘ட்ஜாங்கோ அன்செய்ன்ட்’ வெளியானது. அமெரிக்க தேசியவாதிகளுக்கு கசப்பு மருந்துதான் என்றாலும் எடுத்தவர் உலகம் போற்றும் குவென்டின் ஆயிற்றே? சங்கடத்தோடு ஒப்புக்கொண்டார்கள்.

quentin400
போனவாரம்தான் (மார்ச் 27) குவென்டினுக்கு ஐம்பது வயது நிறைவு பெற்றது. டாரண்டினோ சிறுவயதிலிருந்தே சினிமா வெறியர். வீடியோ கடையில் வேலை பார்த்தபோது, கண்கள் சிவக்க சிவக்க வெறித்தனமாக படங்களை பார்த்தார். ஹாலிவுட்டில் படம் எடுக்க வேண்டுமென்றால் ஸ்டுடியோக்களின் அனுசரணை வேண்டும். இந்நிலையை அவர் வெறுத்தார். ஸ்டுடியோக்களின் சர்வாதிகார கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் சுயாதீனமாக படமெடுக்க விரும்பும் இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர்ஸ் என்று இப்போது ஹாலிவுட்டில் நிறைய படைப்பாளிகள் ‘சுயேச்சையாக’ களத்தில் நிற்கிறார்கள். தொண்ணூறுகளில் இப்போக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர்களில் குவென்டினும் ஒருவர். 1992ல் வெளிவந்த இவரது ரிசர்வாயர் டாக்ஸ், ‘ஆல்டைம் கல்ட் க்ளாசிக் மூவி’ என்று இருபது வருடங்கள் கழித்தும் இன்றும் ஹாலிவுட் ரசிகர்களால் போற்றப்படுகிறது. 94ல் வெளிவந்த ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ குவென்டினை உலகின் தலைசிறந்த இயக்குனர்களின் வரிசையில் சேர்த்தது. உலகின் சிறந்த படங்களை பட்டியலிடும்போது இதை தவிர்க்கவே முடியாது.

குவென்டினின் படங்கள் பொதுவாக அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை பகடி செய்கிறது. அமெரிக்காவின் குரூரமான வன்முறைத் தன்மையை கேலி செய்து ‘பெப்பே’ காட்டுகிறது. இவரது அப்பா டோனி ஒரு நடிகரும், கத்துக்குட்டி இசையமைப்பாளராகவும் வாழ்ந்தார். இத்தாலியப் பரம்பரை. நர்ஸாக வாழ்ந்த அம்மா ஐரிஷ் பரம்பரை. குவென்டின் உடம்பில் ஓடுவது சுத்தபத்தமான ஐரோப்பிய ரத்தம். இவர் பிறப்பதற்கு முன்பாக அப்பாவும், அம்மாவும் பிரிந்து விட்டார்கள். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிப்புப்பயிற்சிக்குப் போனவர். சிறுவயது அனுபவங்கள் அமெரிக்க வாழ்க்கை முறையை குறித்த ஒரு கேலியான பார்வையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

560072_449177298509710_1543056271_n copy
குவென்டினின் படங்களை பார்ப்பவர்கள் சிலர் அவரை கிறுக்கு என்றுகூட கருதக்கூடும். விழுந்து விழுந்து சிரிக்கைவைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் ரத்தம் தெறிக்க தெறிக்க முடியும். மிகக்கோரமான வன்முறைக்கு, மனதை மயக்கும் ரொமான்டிக் பின்னணி இசையை சேர்ப்பது குவென்டின் ஸ்டைல். கதையை நேர்க்கோடாக சொல்லாமல் முன்பின் மாற்றி நான்லீனியராக சுற்றி வளைப்பார். அவர் மீது ஆயிரம் விமர்சனம் சொல்பவர்களும் கூட அவரது படம் வந்தால் தவறவிடாமல் பார்க்கக்கூடிய வசீகரமான ஸ்டைல் குவென்டினுக்கு உண்டு. பின்னணி இசையை தன்னுடைய படுக்கையறையில் கண்களை மூடி படுத்துக்கொண்டே கேட்டு, படத்தில் அக்காட்சியை எப்படி சித்தரிக்கலாம் என்று யோசிப்பாராம்.


“வன்முறையாகவே படங்களை எடுக்கிறீர்களே? இதைப்பார்த்து யாராவது கெட்டுப்போய் யாரையாவது கொலை செய்தால் அதற்கு யார் பொறுப்பு?” ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.


“குங்ஃபூ படத்தைப் பார்த்து யாராவது நூறு பேரை ரோட்டில் போட்டு அடிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. சினிமா வன்முறை ஒரு ஃபேண்டஸி. மக்களுக்கு திரையில் ஓடும் காட்சிகளையும், சொந்த வாழ்க்கை யதார்த்தத்தையும் பிரித்துணர தெரியுமென்று நான் நம்புகிறேன்” அவர் சொன்ன பதில்.


குவென்டினை விடுங்கள். அவர் இப்படித்தான். ட்ஜாங்கோவுக்கு வருவோம். முந்தையப் படமான ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ (தலைப்பில் கூட எவ்வளவு வன்முறை பாருங்கள்) ஹிட்லரையும், அவரது நாஜிப்படையையும் காமெடியாக துடைத்தெறிந்தது. இப்படத்தில் அமெரிக்க வரலாற்றில் சின்ன திருத்தத்தை செய்ய முனைந்திருக்கிறார் குவென்டின்.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பர் இன மக்களை பண்டம் மாதிரி காசு கொடுத்து வாங்குவதும், விற்பதுமாக ‘அடிமை வியாபாரம்’ அமெரிக்காவில் இருந்தது. அடிமை வியாபாரிகள் ஒருபுறம், கருப்பர்களை கண்டாலே அழித்துவிடுவதுதான் இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று நம்பிக்கொண்டிருந்த கூ க்ளக்ஸ் க்ளான் என்கிற வன்முறை அமைப்பு இன்னொருபுறம்.
                                                
leo560
ட்ஜாங்கோவும், அவனது மனைவியும் ஒரு அடிமை வியாபாரியிடம் இருந்து கைமாறும்போது பிரிகிறார்கள். மனிதத்துக்கு எதிரான இம்முறையை கடுமையாக எதிர்க்கும் ஒரு ஜெர்மன் மருத்துவர் ட்ஜாங்கோவை விடுதலை செய்கிறார். அவரது உதவியோடு தன் மனைவியை தேடி கண்டுபிடிக்கிறான் ட்ஜாங்கோ. கரம் மசாலா கதை. வழக்கமான சுற்றிவளைக்கும் பாணியில் சொல்லாமல் நேரடியாக சிரிக்க சிரிக்க, இரத்தம் தெறிக்க தெறிக்க, துப்பாக்கிகள் வெடித்துக்கொண்டேயிருக்க பரபரவென எடுத்திருக்கிறார் குவென்டின்.

ஆரம்பத்தில் ட்ஜாங்கோவாக வில் ஸ்மித்தை அணுகியதாக ஒரு பேச்சு. கேரக்டர் அவ்வளவு வெயிட்டாக இல்லாததால் ஒப்புக்கொள்ளவில்லையாம். படம் பார்த்தபின் அந்த முடிவுக்காக ஸ்மித் வருத்தப்பட்டிருப்பார். உலகமே கொண்டாடிய டைட்டானிக் ஜாக்கான லியானார்டோ டி கேப்ரியோ, குவெண்டின் படமென்பதால் கொடூரமான வில்லன் பாத்திரத்தை ஒப்புக்கொண்டு அசத்தியிருக்கிறார்.

குவென்டின் ஃபிலிமில் படமெடுத்து பழக்கப்பட்டவர். டிஜிட்டலில் எடுப்பதை சினிமாவாக அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஃபிலிமில் படமெடுக்கும் பழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டதால், இனி படமெடுப்பேனா என்றே தெரியவில்லை என்று இப்படம் முடியும்போது வருத்தமாக சொன்னார். போலவே அவரது எல்லா படங்களையும் ‘எடிட்டிங்’ செய்யும் சாலிமென்கே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் தவிர்த்து வேறொரு எடிட்டருடன் குவென்டின் முதல்முறையாக வேலை பார்த்தது இந்தப் படத்தில்தான். சாலியிடம் ‘கில்பில்’ காலத்தில் உதவியாளராக இருந்த ப்ரெட்ரஸ்கின் இப்படத்தை எடிட்டியிருக்கிறார்.
                                          
dijango
படம் வெளியானதுமே வழக்கம்போல விமர்சகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். குவென்டின் பழக்கப்பட்டு விட்டார் என்பதற்காக ரசிகர்களும் அவரது பெயருக்காகவே அரங்குக்கு வந்து வசூலை வாரியிறைத்திருக்கிறார்கள். இதுவரை வந்த குவென்டினின் படங்களிலேயே அதிகவசூலை இப்படம்தான் ஈட்டி வருகிறது. ‘நிக்கர்’ என்கிற சொல் அனாயசமாக படத்தில் பயன்படுத்தப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது. அந்த சொல் இல்லாமல் எப்படி இப்படத்தை எடுத்திருக்க முடியும் என்று இன்னொரு க்ரூப்பும் கச்சை கட்டிக் கொண்டிருக்கிறது. விருதுகளும், பாராட்டுகளும் குவியும் ஒரு படத்துக்கு பின்னால் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தால் எப்படி? சினிமாவில் மாபெரும் வெற்றியை கவுரவப்படுத்தும் விஷயங்களே இந்த சர்ச்சைகள்தான்.

ஃபிலிமில் படமெடுக்கும் சாத்தியங்கள் அசாத்தியமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து குவென்டின் படம் இயக்கப் போகிறாரா, இல்லை கடுப்பாகிப்போய் ஓய்வினை அறிவித்துவிடப் போகிறாரா என்பதுதான் இப்போது ஹாலிவுட்டின் ஹாட் டாக்.
                              
leonardo
(நன்றி : cinemobita.com)


5 கருத்துகள்:

  1. Hai Yuva,

    need to watch. I think, if I'm right, independent film making has been tried successfully before that;90s, Lucas in his star wars II (the 80s version).

    பதிலளிநீக்கு
  2. 2006 ல் வெளியான Blood Diamand (விமரிசனம் பார்க்காமல்) பாருங்கள் பரதேசி இதில் 25% கூட இல்லை.

    பதிலளிநீக்கு
  3. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.....

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா5:18 PM, ஏப்ரல் 03, 2013

    ஜேங்கோவில் வரும் கங்காணி சாமுவேல் ஜாக்சனைப் பற்றியும் ஒரு வரி சொல்லியிருக்கலாம்! கங்காணிக்கெல்லாம் அவர் தான் முன்னோடி! என்னே நடிப்பு!

    -பாலா.

    பதிலளிநீக்கு