30 மார்ச், 2013

ராஜூமுருகன்

ஒன்றரை ஆண்டுகாலமாக ‘வட்டியும் முதலும்’ ஆனந்தவிகடனில் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே நினைத்தேன். இன்னும் இலக்கியவாதிகள் யாரும் ராஜூவுக்கு எதிராக ‘ரவுசு’ ஆரம்பிக்கவில்லையே என்று. நண்பர் அபிலாஷ் ஆரம்பித்திருக்கிறார். 

அபிலாஷுக்கு என்றல்ல. பொதுவாக இலக்கியவாதிகளுக்கே உரித்தான ஒரு பொதுக்குணத்தை அவதானிக்க முடிகிறது. வெகுஜனங்களால் பரவலாக ஆதரிக்கப்படும் ஒரு விஷயம் அபத்தமானதாகதான் இருக்கவேண்டும் என்கிற தீர்மானத்துக்கு வெகுவிரைவில் வந்துவிடுகிறார்கள். ஒருவேளை இவர்கள் மனதளவில் ரசிக்கும் ஒன்றை வெகுஜனங்களும் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தால், தங்கள் தனிப்பட்ட ரசனையை தியாகம் செய்து நேரெதிர் விபரீத நிலைப்பாடுக்கும் சென்றுவிடுகிறார்கள்.

நண்பர் அபிலாஷ் சூது வாது தெரியாதவர் என்பதால் வெளிப்படையாக இவ்விஷயத்தை பொதுவில் வைத்திருக்கிறார். இலக்கிய நண்பர்கள் சிலர் பொருமலாக தனிப்பட்ட பேச்சுகளில் இதே விஷயத்தை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்கள். இதே நண்பர்களில் சிலர் முன்பாக விகடன், குமுதம் இதழ்களுக்கு கதையோ, கட்டுரையோ அனுப்பி நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ‘எட்டாத திராட்சை புளிக்கும்’ கதைதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

பொதுவாக ராஜூமுருகனின் (குறிப்பாக வட்டியும் முதலும்) எழுத்துகளைப் பற்றி வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, ‘ஆழமற்ற மேலோட்டமான வணிக எழுத்து’ என்பதுதான்.

எழுத்து என்பது ஆழமாகதான் இருந்துத் தொலைக்க வேண்டும் என்று யார் வரையறுத்தது. ஒரு வெகுஜன பத்திரிகையின் வாசகர் எல்லோரும் பட்டம் படித்தவர்களாக இருக்கவேண்டும் எப்படி எதிர்ப்பார்க்க முடியும். தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்தவனுக்கும் புரியும்படியான எழுத்துநடையை பின்பற்றுவதில் என்ன குற்றம் இருந்துவிட முடியும். சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஒரு செய்தியையோ, கட்டுரையையோ தினத்தந்தி நடையில் எழுதிப்பாருங்கள். எளிமையைப் பின்பற்றுவது எவ்வளவு கடினம் என்பது தெரியும், புரியும். ஆழமற்ற ஓர் அல்ப விஷயத்தை கூட அலங்கார மொழியில் வெளிப்படுத்துவது இலக்கியம் என்று ஆகிவிட்ட சூழலில், ஆழமான விஷயத்தைக்கூட அரிதாரமின்றி, நேர்மையாக தன்னை வாசிப்பவனுக்கு பேச்சுமொழி மாதிரியான அரட்டை நடையில் முன்வைப்பது அபத்தமாகதான் அறிவுஜீவிகளின் கண்களுக்கு புலப்படும். திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா?
ராஜூமுருகனின் எழுத்து வடிவத்தை சக பத்திரிகை நண்பர் ஒருவர் பீம்சிங்கின் படங்களோடு ஒப்பிடுவார் (பாசிட்டிவ்வான நோக்கில்தான்). தமிழ் சினிமாவில் பீம்சிங்காக இருப்பதுதான் கஷ்டம். ஒரு படத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்வார். எல்லா கதாபாத்திரங்களையும் முதல் பாகத்தில் அறிமுகப்படுத்துவார். அடுத்த பாகத்தில் அப்பாத்திரங்களுக்கு இடையே இடியாப்பச் சிக்கலை உருவாக்குவார். கடைசியாக அவரே உருவாக்கிய சிக்கலை காதை சுற்றி மூக்கைத் தொட்டு எப்படியோ அவிழ்ப்பார். சுபம். இந்த சூத்திரம் கேட்பதற்கு எளிமையானதாக இருக்கலாம். அதனால்தான் பீம்சிங் ஒரு mediocre இயக்குனராக பார்க்கப்பட்டார். ஆனால் பீம்சிங்குக்கு பிறகு வேறொரு பீம்சிங் தமிழ் சினிமாவில் உருவாகவே இல்லை. உருவாகவும் முடியாது என்பதுதான் அவரது சாதனை.

ராஜூமுருகன் ‘வட்டியும், முதலும்’ மூலமாக வெகுஜன நடைக்கும், இலக்கிய நடைக்கும் இடையிலான ஓர் இடைநிலை போக்கினை உருவாக்கியிருக்கிறார். முன்பாக க.சீ.சிவக்குமாரிடம் இதற்கு ஒப்பான ஒரு நடை இருந்தது. வாசிப்பதற்கு எளிமையாக இருப்பதால் இதை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும் என்பதில்லை. இந்நடையை தேடிக்கண்டு அடைவதற்குள் தாவூ தீர்ந்துவிடும். ராஜூவைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகள் பலவும் ‘மியாவ்’ என்றுதான் குரலெழுப்புகின்றன என்கிற அம்சத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அபிலாஷின் பதிவில் ஒரு விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கிறேன். ‘தேய்ந்த ரெக்கார்ட்’ மாதிரி ‘வட்டியும் முதலும்’ ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார். எனக்கும்கூட இப்போது வாசிக்க கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. ஆனால் இதுவும் கூட சினிமா மாதிரிதான். பாகவதரின் ஹரிதாஸ் தேய்ந்த ரெக்கார்டாகதான் மூன்று வருடங்கள் ஓடியது. வாசகர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு வெகுஜனப் பத்திரிகையுமே ஒரு தொடரை நீட்டிக்கத்தான் விரும்புமே தவிர, முடித்துக்கொண்டு அடுத்த புதுத்தொடருக்கு ‘ரிஸ்க்’ எடுக்காது.

வட்டியும், முதலுமுக்காக ராஜூ அவரது வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறார். இப்போது கிடைத்திருக்கும் பிரபலம் என்பது இத்தொடருக்கானது என்று மட்டும் நினைத்தால் அது முட்டாள்தனம். பல ஆண்டுகளாக இதே துறையில் சலிக்காமல் தோண்டிக்கொண்டே இருந்திருக்கிறார். இப்போதுதான் ஊற்று வந்திருக்கிறது. வாழ்த்துவோம்!

12 கருத்துகள்:

  1. அட, நம்மளும் எழுத முயற்சிக்கலாமே என என் போன்றவர்களை தூண்டியது ராஜூ முருகனின் எழுத்துக்கள் தான்.
    யுவா, நீங்கள் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். எழுத்து எல்லோர்க்கும் பொதுவானது தானே. அறிவு ஜீவிகள் எழுதும் சில கதைகள் வேண்டுமென்றே கடின மொழிகளை தேர்ந்தெடுத்து எழுதுவது துருத்திக் கொண்டே தெரிகின்றது. உதாரணம், ஆ.வி யில் வந்த பவா செல்லத்துரையின் இந்த வார சிறு கதை. சிறுகதை

    பதிலளிநீக்கு
  2. வெகுஜன எழுத்து என்ற நிலையில் வைத்துதான் இதை சொல்கிறேன்

    கண்டிப்பாக ''வட்டியும் முதலும்'' என்ற தொடர் ஒரு மொக்கை

    அதாவதுங்க அது இயல்பா இல்லை. ஒவ்வொரு வாரமும் போட்டு திணிப்பதை போல உள்ளது .

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2:26 PM, மார்ச் 30, 2013

    ////உண்மையில் அந்த வேடத்தில் ராஜுமுருகனை பார்க்க எனக்கு சின்ன அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சிறுபத்திரிகை வட்டத்தில் ஒரு எழுத்தாளன் அது போல் நெற்றி முழுக்க பட்டையுடன் மேடையேறி நான் பார்த்ததில்லை. ஆனால் இவர் வேறு ரகம் என பட்டது. ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது. //////

    ////இது சுரண்டல் எழுத்து. ஏனெனில் முருகன் உங்கள் பிரச்சனைகளுக்கான விடை தேடுவதில்லை, காரணத்தை அலசுவதில்லை////

    இந்த இரண்டு வாக்கியங்கள்தான் அபிலாஷின் கட்டுரையில் அவர் இந்த முடிவுக்கு ஏன் வந்தார் என்று தெரிகிறது. இது அபிலாஷின் கருத்து மையத்தையும் காட்டுகிறது. நெற்றியில் பட்டை அடித்தவனை நிராகரிக்கணுமா என்ன...அபத்தம். 'பொதுவாக வருவதில்லை' அப்படின்னா வந்தா அது அபத்தம். இப்போது சடங்குகளில் விழுந்து எழமுடியாமல் தவிப்பது யார் அபிலாஷ்தான் இல்லையா?

    கட்டுரைகளும்,கதைகளும் ஏன் தீர்வுகளை சொல்லணும்...அவசியமே இல்லை. சிறு பத்திரிக்கை கட்டுரைகள் தீர்வா சொல்கின்றன என்று கேட்டால் இது சிறுபத்திரிக்கை பொதுவில் வருமா என்று தெரியலை. எனக்கு சலிப்பாக இருக்கிறது. தொடர் நிறுத்தப்பட்டு ஓரிரு வருட இடைவெளிக்குப் பின் மறுபடி தொடங்கியிருக்கலாம்...எல்லா தொடர்களுக்கும் மெனக்கிட்டு உட்கார்ந்து யோசித்தால் எழுதினவனுக்கு தெரியாத ஒரு ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். அப்டி ஒரு ஃபார்முலா இருப்பதாலேயே அதை நிராகரிக்கவேண்டியதில்லை

    பதிலளிநீக்கு
  4. ராஜூ முருகன் எழுத்து புது வகை நடை. நாம் பல எழுத்தாளர்களின் நடையைப் பார்த்திருக்கிறோம். ராஜுவின் நடை வெகு ஜன நடை. உண்மையை ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு போக வேண்டியது தானே. ராஜூ இலக்கியவாதியுமில்லை, ஆனந்தவிகடன் இலக்கியக் கலைக்களஞ்சியமும் இல்லை, அதைப் படிப்பவர்கள் இலக்கியவாதிகளாக மட்டுமே இருக்கவும் வேண்டியதில்லை.

    ப்ளாக் இலக்கியவாதிகளின் புலம்பலுக்காக ஒரு கட்டுரை தேவையில்லை, ஆனால் ராஜூ முருகனைப் பாராட்டுவதற்காக இந்த கட்டுரை எழுதியது தகும்.

    பதிலளிநீக்கு
  5. எந்தவொரு விஷயத்துக்குமே ரீச் அதிகமா இருந்தா உடனே நம்ம மக்கள் அதனை மட்டம்தட்ட தொடங்கிடுவாங்க.சுஜாதா அவர்களையே வணிக எழுத்தாளர்னு சொன்னவங்க தான் இந்த தீவிர இலக்கியவாதிங்க.ஆனா அவங்கவங்க சொந்த பதிப்பகம் தொடங்கும்பொது மட்டும் ‘சுஜாதா’ பெயரை வைத்து எப்படி காசு பார்க்கலாம்னு யோசிப்பாங்க. ராஜுமுருகன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ‘ரீச்’ என்பது உண்மையிலேயே அபரிமிதமானது. எல்லா மட்டத்திலும் ரசிகர்களை சம்பாதித்திருக்கின்றார்.நானெல்லாம் 17ரூபாய்க்கு விகடன் தொடர்ந்து வாங்க ஆரம்பித்ததே ‘வட்டியும் முதலும்’ வரும் நாலு பக்கங்களுக்காகத் தான்...! மேலே நண்பர் சொல்லியிருக்க மாதிரி கட்டுரைகளும் கதைகளும் தீர்வுகளைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை... நீங்கள் நின்று ஓய்வெடுக்க கொஞ்சம் நிழல் தந்தாலே பொதும்.

    பதிலளிநீக்கு
  6. வெகுஜன பத்திரிகையில் அல்லது ஒரு சினிமாவுக்கு ஒரு எழுத்தாளருக்கு வாய்ப்பு கிடைத்தால், அதே வாய்ப்புக்காக முயற்சிக்கும் சில எழுத்தாளர்கள், வாய்ப்பு கிடைத்த எழுத்தாளரை சுய மரியாதையை அடகுவைத்தவன் என்று சொல்வது பரிகாசத்துகுரியது

    பதிலளிநீக்கு
  7. வெகுஜன எழுத்து இலக்கிய எழுத்து என்ற பாகுபாடெல்லாம் சும்மாபேச்சு. ஆனா மேலோட்டமான எழுத்து ஆழமான எழுத்து என்பது ஏற்றுக்கொள்ளக்கூடயதுதான். மேலோட்டமான எழுத்து படிக்கும்போது “ அட நல்லா இருக்கே” “சூப்பரா எழுதியிருக்காரு” “ சொல்றது சரிதானே” என்றெல்லாம் தோன்றினாலும் அது மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது குறைவுதான். நம்ம குடும்பத்திலோ அல்லது வேறெங்காவதோ உடல் நிலை மோசமாகி அவதிப்படுபவரைப்பற்றி இவ்வளவு கஷ்டபடுவதற்குபதில் அவர் மரணித்துவிடலாம் அல்லது மருத்துவ உதவியோடு அவரை கருணைக்கொலை செய்துவிடலாம் என பல நேரங்களில் நினைத்திருக்கலாம் ஆனால் அது நாமறிந்தவர்க்கு நடந்துவிட்டடால் அதன் பாதிப்பு எப்படியோ அப்படித்தான் ஆழமான எழுத்து எனபதும்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10:13 AM, ஏப்ரல் 05, 2013

    வட்டியும் முதலும் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கைக்கும் நிகழ்கால வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டையும் குறித்தே இருந்தது. கடந்த கால நினைவுகளில் இருக்கும் சுகமே அலாதி தான். நிகழ்கால கான்கிரீட் உலகம் அனைத்தையுமே இழந்துவிட்டது. இனி திரும்பிப்போகும் வாய்ப்பே இல்லை..

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12:32 PM, ஏப்ரல் 07, 2013

    Hats off to rajumurugan...he has told black is black and white is white in simple language that has entered the heart...

    பதிலளிநீக்கு
  10. வழ்த்துவோம் இல்ல சார் அவரு பாஷையிலே சும்மா “போட்டு வாங்குவோம்” சார்

    பதிலளிநீக்கு