13 மார்ச், 2013

வசந்த மாளிகை

அழகாபுரி ஜமீனின் இரண்டாவது வாரிசு ஆனந்த் ஒரு பெரும் குடி மற்றும் காம வெறியர். ஆனால் நல்லவர். வேலை வெட்டியே இல்லாத அவர் தனக்கு ஒரு பி.ஏ.வை வேலைக்கு வைத்துக் கொள்கிறார். பி.ஏ.வாக வரும் பெண் ஆனந்தை திருத்துகிறார். திருந்திய ஆனந்த் பி.ஏ.வை காதலிக்கத் தொடங்குகிறார். அந்தஸ்து, சுயமரியாதை மாதிரி சில பிரச்சினைகளால் பிரியும் காதலின் கதி என்ன? – ஹீரோயின் ஹீரோவை திருத்துவது என்று கிட்டத்தட்ட ‘புதிய பாதை’ கதை மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கவுசல்யா தேவி என்பவர் எழுதிய தெலுங்கு நாவலான ‘பிரேமநகர்’ தெலுங்கில் அதே பெயரில் படமாக்கப்பட்டது. டி.ராமாநாயுடு பெரும் பொருட்செலவில் தயாரித்து 1971ல் வெளியானது. நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். இதையடுத்து தமிழிலும் அதே படத்தை ‘வசந்த மாளிகையாக’ உருவாக்கினார் ராமாநாயுடு. தெலுங்கினை இயக்கிய பிரகாஷ்ராவே தமிழிலும் இயக்கினார். நடிகர், தயாரிப்பாளர், கேமிராமேன், இயக்குனர் என்று பிரகாஷ்ராவுக்கு நிறைய முகங்கள் உண்டு. வசந்தமாளிகைக்கு பிறகு சிவாஜிக்கு ‘அவன் ஒரு சரித்திரம்’ இயக்கியவரும் இவரே. இவருடைய மகன் ராகவேந்திரராவ் தெலுங்கில் நூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சாதனை இயக்குனர். தெலுங்கின் சூப்பர் ஸ்டார்கள் அத்தனை பேரையும் இயக்கியவர் (ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா’ இவருடைய இயக்கம்தான்).

தமிழுக்கு ஏற்ப வசந்தமாளிகையில் சில மாற்றங்கள் செய்துக்கொண்டார் பிரகாஷ்ராவ். குறிப்பாக காமராஜரின் பிரச்சார பீரங்கியான சிவாஜிக்காக சில அரசியல் ‘பஞ்ச்’கள் வசனங்களில் இடம்பெற்றது. சிவாஜி குடிகாரராக நடித்தாலும் அப்போது திமுக அரசு கொண்டுவந்த மதுவிலக்கு வாபஸை கிண்டலடித்து நாகேஷ் பேசுவார். காமராஜரின் பள்ளிச்சீருடை அறிமுகத்துக்கு ஒரு சின்ன பிரச்சாரத்தையும் சிவாஜி செய்வார் (ஸ்ரீதேவி பள்ளிச்சீருடை அணிந்து கிளம்பும்போது). பாட்டாளிகளுக்கு ஆதரவான வசனங்கள் மூலம் ஆளும் திமுகவுக்கு ஆணி அடிக்கவும் முயற்சித்திருக்கிறார்.

பீம்சிங் படங்களில் நடித்து, நடித்து சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்யக்கூடியவர் என்று பெயர் பெற்றுவிட்டார். கலர் படம் என்பதாலோ என்னவோ முடிந்தவரை யதார்த்தமான நடிப்பை வசந்தமாளிகைக்கு வழங்கினார். குடிக்கும் காட்சிகளில் அவரது கண்கள் சிவந்து, கால்கள் லேசாக தள்ளாட்டம் போட, நாக்கு குழறி, நடுங்கும் விரல்களில் சிகரெட் புகைத்து.. சர்வதேச தரத்துக்கு சிவாஜியின் நடிப்பு அமைந்தது. படத்தின் கதையோடு இணைந்தவை என்பதால் பாடல் காட்சிகளுக்கு பிரத்யேகமாக மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் பாடலில் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்தே நடித்திருக்கிறார். ஒரே படத்தில் இத்தனை டைட் க்ளோசப் வேறு எந்த நடிகனுக்குமே வைக்க முடியாது. அப்படி வைத்தால் விகாரமாகி விடும். சிவாஜி மட்டுமே குளோசப்பிலும் அழகாக தெரிபவர். லாங் ஷாட்களிலும், ஸ்க்ரீனில் தன்னுடைய இருப்பை எப்படியேனும் தெரியப்படுத்துபவர்.

இம்மாதிரி படங்களைப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த நடிகரான விளங்கிய சிவாஜிக்கு உரிய கவுரவத்தை நாம் அளிக்கத் தவறிய அவலம் உறைக்கிறது. வசந்தமாளிகை வெளிவந்ததற்கு முந்தைய ஆண்டுதான் ரிக்‌ஷாக்காரனில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டிருந்தது. வாத்யார் ரசிகனாக இருந்தாலும் நடிப்புக்காக அவருக்கு விருது என்பதை நம்மாலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அப்போதைய இந்திரா காங்கிரஸுடனான திமுக கூட்டணிக்கு கிடைத்த லஞ்சமாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசிவரை சிவாஜிக்கு தேசியவிருது கொடுக்காமலேயே அவரை அவமானப்படுத்தி விட்டது இந்திய அரசு. காலமெல்லாம் காங்கிரஸுக்கு தன்னலம் பாராமல் உழைத்த கலைஞனுக்கு கிடைத்த பரிசு இது.

வசந்தமாளிகை வெளியான 1972, சிவாஜியின் ஆண்டு. அவ்வாண்டு குடியரசுத் தினத்துக்கு வெளியான ராஜாவில் தொடங்கி ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி என்று ஏழு படங்கள். ‘தர்மம் எங்கே’ தவிர்த்து மீதி ஆறு படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. வசந்தமாளிகை இருநூற்றி எழுபத்தைந்து நாள் ஓடி, வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. தமிழில் மாபெரும் வெற்றி கொடுத்த தைரியத்திலேயே பிற்பாடு இந்தியிலும் ராஜேஷ்கண்ணா, ஹேமமாலினியை வைத்து வசந்தமாளிகையை எடுத்தார் ராமாநாயுடு. அங்கே எழுநூற்றி ஐம்பது நாள் ஓடியது.

வசந்தமாளிகையின் ஒரிஜினலான பிரேமநகரில் நாகேஸ்வரராவ் இறுதிக்காட்சியில் இறந்துவிடுவார். தமிழிலும் அதேமாதிரி இடம்பெற்று, ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பை வெளியான நேரத்தில் வசந்தமாளிகை பெற்றதாம். இதனால் தியேட்டர்களில் ஏற்பட்ட வன்முறைச்சூழலை தவிர்க்க, இறுதிக்காட்சியை மீண்டும் மாற்றி சிவாஜி உயிர்பிழைப்பதாக மாற்றப்பட்டதாக ‘பழம்பெருசுகள்’ சிலர் சொல்ல கேள்வி. உண்மையா என்று தெரியவில்லை. இந்தி வெர்ஷனிலும் இதே க்ளைமேக்ஸ்தான்.

72ல் தொடங்கி பலமுறை தியேட்டர்களில் வசந்தமாளிகை ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் வசூலை அள்ள தவறுவதேயில்லை. கடந்த ஆண்டு டிஜிட்டலாக்கப்பட்டு வெளியாகி ‘கர்ணன்’ மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வசந்தமாளிகையும் மீண்டும் டிஜிட்டல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘டிஜிட்டல் ஆக்கியிருக்கிறோம்’ என்று சொல்லி ரசிகர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்கள். ஒளி, ஒலியில் பெரிய துல்லியம் ஏதுமில்லை. டிவிடி ரிப்பில் இருந்து உருவி புரொஜெக்‌ஷன் செய்வதைப் போல மங்கலாக திரையில் தெரிகிறது. எது எப்படியிருந்தாலென்ன வசந்தமாளிகையின் வசீகரம் இதனால் எல்லாம் குறைந்துவிடவில்லை. இம்முறையும் அரங்குகளில் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக ரசிகர்கள். விசில் சத்தம், கைத்தட்டல்களால் தியேட்டர் கூரைகள் அதிர்கிறது.

ஆல்பட் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் கலைக்கோயில் சிவாஜி ரசிகர்மன்றத்துடையதும் ஒன்று. கலைக்கோயில் என்கிற பட்டம்தான் அவருக்கு எத்துணை பொருத்தமானது?

9 கருத்துகள்:

  1. வரலாற்று கடமையை செய்த யுவகிருஷ்ணாவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. //வசந்தமாளிகை வெளியான 1972, சிவாஜியின் ஆண்டு. அவ்வாண்டு குடியரசுத் தினத்துக்கு வெளியான ராஜாவில் தொடங்கி ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி என்று ஏழு படங்கள்//
    1972-ம் ஆண்டு சிவாஜிக்கு மாபெரும் வெற்றிகளை குவித்த ஆண்டு .அதனை முன்னிட்டு இயக்குனர் ஶ்ரீதர் சிவாஜியை வைத்து 'ஹீரோ 72' என்ற படத்தை ஆரம்பிப்பதாக அறிவித்தார் ..பின்னர் அது கைவிடப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மற்ற மொழி நடிகர்களின் ஜாம்பவான்களோடு சிவாஜியை ஒப்பிடும் போது சிவாஜி எட்டாத உயரத்தில் இருந்தார் என்பதற்கு ஒரு சோறு பதமாக இந்த காணொளிகளை பார்ப்போம்

    யாருக்கொசுரம் - தெலுங்கு நாகேஸ்வரராவ்

    https://www.youtube.com/watch?v=iq16LZmEARc

    யாருக்காக - நடிகர் திலகம்
    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PcKAIVhv-Qs

    பதிலளிநீக்கு
  4. வரலாற்று நாயகனுக்கு...மகுடம் சூட்டி உள்ளீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிவாஜி கடைசியில் இறப்பது போல் இருக்கும் காட்சியுடன் கேரளாவில் வெளியிடப்பட்டது. தமிழில், சிவாஜி பிழைப்பது போல் காட்சி வெளியிடப்பட்டது.

    பதிலளிநீக்கு