20 மார்ச், 2013

பரதேசி

தமிழின் தலைசிறந்த படங்களில் ஒன்று என்று சொல்வதில் தயக்கம் ஏதுமில்லை. இவ்வாறு சொன்னால் ட்விட்டர் ரீட்விட்டுகளும், ஃபேஸ்புக் லைக்குகளும், ரீஷேர்களும் குறையும்தான். ஈடுசெய்ய முடியாத இழப்புதான். ஆனாலும் என்ன செய்ய.. எனக்கு அவ்வளவாக பிடிக்காதவராக இருந்தாலும் பாலா நாம் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு பர்ஃபெக்டாக படம் எடுத்திருக்கிறாரே?

படத்தில் லாஜிக் குறைகிறது, மேஜிக்கே இல்லையென்றெல்லாம் நிறைய விமர்சனங்களை வாசித்திருப்பீர்கள். விமர்சனமாக எழுத சரக்கில்லாதவர்கள் மொத்த கதையையே கூட விமர்சனமாக எழுதியிருப்பார்கள். எனவே படம் பார்க்காதவர்களுக்கும் கதை தெரிந்திருக்கும். இந்தப் பதிவுக்கு எந்தவிதமான தேவையும் இல்லையென்றாலும் ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாக பதிவு செய்துவிட விரும்புகிறோம். ‘பரதேசி பார்த்தே ஆகவேண்டிய திரைப்படம்’.

அவதார் படத்தில் ஜேம்ஸ் கேமரூன் புதியதாக ஓர் உலகத்தை சிருஷ்டித்ததை மாதிரி, பாலா இப்படத்தில் நாமறியாத ஒரு தமிழகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறார். படத்தின் டைட்டிலில் தொடங்கி எண்ட் கார்ட் வரை ஆச்சரியத்தில் வாய்பிளந்து பார்க்க இந்த அற்புத படைப்பாற்றலே காரணம். பாலா படைப்பாளிகளின் படைப்பாளி. இவரது சினிமா மொழி unique ஆன ஒன்று. இதுவரை யாரும் பயன்படுத்தாத புது மொழி. இவரை பார்த்து சூடு போட்டுக் கொள்கிறவர்கள், பாதி வெற்றியை அடைந்தாலேகூட அது சாதனைதான்.

இதுவரை எத்தனையோ இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். நாஞ்சில்நாடனை பாலா கவுரவித்திருப்பதைப் போல, இதுவரை யாரும் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நடிகர்களில் தொடங்கி, டெக்னிஷீயன்கள் வரை அத்தனைபேரையும் மிகச்சரியாக கண்ட்ரோல் செய்திருக்கிறார் பாலா. படத்தின் ஒரு ஃப்ரேம் கூட அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து மீறி துருத்தியதாக தெரியவில்லை. கேப்டன் ஆஃப் த ஷிப் எப்படியிருக்க வேண்டுமென்று ‘பரதேசி’ எடுத்துக் காட்டியிருக்கிறார் பாலா. குறிப்பாக க்ளைமேக்ஸ். மரணத்தைவிட கொடூரமான ஒரு தண்டனையை கதையின் நாயகனுக்கு தந்திருக்கிறார். சேது பார்த்தபோது கூட இவ்வளவு பாதிப்பில்லை. இதற்காகவே இன்னொரு முறை நிச்சயம் ‘பரதேசி’ பார்க்கவே மாட்டேன். இதுவரை வந்த தன்னுடைய படைப்புகளில் ஆகச்சிறந்ததாக இதை எடுத்திருக்கும் பாலாவுக்கு என்னால் அளிக்க முடிந்த எளிய பரிசு இதுதான்.

பாலாவின் தேவர்பாணி இந்துத்துவா மீது நமக்கு சில விமர்சனங்களும் உண்டு. இப்படத்திலும் அது வெகுவாகவே வெளிப்படுகிறது. குறிப்பாக மருத்துவர் பரிசுத்தம் பாத்திரத்தை அவர் வார்த்திருப்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். பரதேசியில் அப்பகுதி மட்டும் ஒட்டாமல், வேண்டுமென்றே திணித்ததாக கதையோட்டத்துக்கு தடையாக அமைந்திருக்கிறது. படத்தின் முற்பாதியில் பந்தி கவுரவத்தை காட்ட வசனம் எழுதிய நாஞ்சில் நாடனின் சிறுகதையை கடன் பெற்ற பாலா, பரிசுத்தம் பகுதிக்கு ஜெயமோகனிடம் கேட்டு ‘ஓலைச்சிலுவை’ சிறுகதையை கடன் வாங்கியிருக்கலாம். மகிழ்ச்சியாக கொடுத்திருப்பார். படம் இன்னும் பிரமாதமாக பரிணமித்திருக்கும்.

12 கருத்துகள்:

  1. படைப்பாளியை மறந்து விட்டு படைப்பினை மட்டுமே பார்க்கும் அழகான விமர்சனம்..எந்த ஒரு நல்ல ரசிகனும் இதைத்தான் செய்வான்.. ஒரு படைப்பினை பார்க்கும் போது நல்ல ரசிகனாக அது நமக்கு எதை கடத்துகிறது என்று பார்ப்பதுதான் முக்கியம்..நமது புத்திசாலித்தனத்தின் மூலம் தடைகளை ஏற்படுத்திக் கொண்டு, படைப்பினை குறை சொல்லும் போக்கிலேயே பார்ப்பது என்பது ஒரு நல்ல ரசிகனுக்கு அழகும் அல்ல, அது எந்த விதத்திலும் அவனுக்கு உதவவும் போவதில்லை..முதலில் ரசிகன் பிறகுதான் விமர்சகன்..

    படத்தின் குறைகளை மட்டுமே பட்டியலிட்ட பலரும் நாஞ்சில் நாடனின் வசனங்கள் எப்படி இந்த வலிகடத்தியினை இலகுவாக நகர்த்திச் செல்கிறது என்பதை மறந்தும் குறிப்பிட வில்லை..

    எத்தனை படங்களில் இந்த மாதிரியான நுட்பமான பகடி உரையாடல்களை கேட்டிருக்கிறோம்.. விக்ரமாதித்யன் அய்யாவின் மனைவியாக வருபவர் சொல்லும் “உன் மந்திரியைக் கேளு” மாதிரியான வசனங்களை வேறு யாரிடம் கேட்க முடியும்..இது இத்தனைக்கும் நமது அய்யன்களும், ஆத்தாக்களும் நிதமும் பேசும் குசும்பு மொழிதான்..அந்த ஒத்த வசனத்தில் “பெரியப்பாவின்” கொடுப்பினை வாழ்வு எவ்வளவு அழகாக சொல்லப் படுகிறது.. கங்காணி கிராம மக்களிடம் ஊசியில் நூலேற்றுவது போல் பேசும் அந்த இயல்பான வசனத்தை எத்தனை படங்களில் பார்த்துள்ளோம்.. இது போல பலவும்..

    படத்தின் காட்சி படிமங்கள் படம் பார்த்து ஐந்து நாட்களான பின்னும் இன்னும் அப்படியே உள்ளே ஆணி அடித்தால் போல உள்ளது.. எம்டிஎம் அழகான ஒரு பட்டியல் கொடுத்துள்ளார். கங்காணி ”மை லார்ட்” என போர்டிகோவில் மண்டி போட்டிருக்கும் காட்சி ஒரு ஈரானிய அல்லது ரோமனிய படத்தில் வந்தால் நம்ம விமர்சகர்கள் கொண்டாடுவார்கள்..என்ன செய்து தொலைப்பது இது ஒரு சைக்கோ நமக்கு புரியக் கூடிய மொழியில் எடுத்துத் தொலைத்த படமாயிற்றே! எப்படி நமக்கு பிடிக்கும்..

    ஆரண்ய கண்டத்தை கொண்டாடியவர்கள் எல்லோரும் தியாகராஜன் குமாரராஜா எப்படி “டொரண்டினோ”வால் வெகுவாக பாதிக்கப் பட்டு அனைத்துக் காட்சிகளையும் அமைத்திருந்தார் என்பதை வசதியாக பேக் டிராப்பில் சாய்சில் விட்டு விட்டு புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.. அப்படத்தில் வரும் கேங்ஸ்டர்கள் உரையாடும் காட்சிகள், காரில் பழைய ஹிட்ஸ் கேட்டுக் கொண்டு குளோசப் ஷாட்களில் பயணிப்பது போன்ற பல காட்சிகள் டொரண்டினொவின் டெம்ப்ளேட் காட்சிகள்..இப்படி ஆகச் சிறந்த படமென நமது விமர்சகர்களால் போற்றப் பட்ட படங்கள் பல பக்கமிருந்து இன்ஸ்பைர் ஆகி வெளிப்படுபவைதான்..

    இப்படி எல்லோருக்கும் கொஞ்ச விசயங்களை சாய்சில் விடும் விமர்சகர்கள்.. அசலாக ஒரு படம் நமது மண்ணிலிருந்து வரும் போது, தலையில் முடி வளராததுக்கெல்லாம் முச்சந்தியில் நிறுத்தி கேள்வி கேட்பதுதான் புன்னகையை தருகிறது.. :)

    பதிலளிநீக்கு
  2. nalla vimarsanam! orey kaelvi !ethanai padathil saamiyaargalai vimarsipathai paarthu irukureergal .. oru thadavai kooda urutha villaiya !?

    பதிலளிநீக்கு
  3. இந்த படத்தில் பாலா என்ற திரைக்கதை ஆசிரியர்தான் என்னை மிகவும் கவர்ந்தார். அடித்தளத்தில் சோகம் மட்டுமே பரந்திருக்கும் கதை களம் வறண்ட பூமி கவர்ச்சி இல்லா வாழ்வு இப்படிப்பட்ட ஒரு கதையை எப்படி நமக்கு கொஞ்சம் கூட அயர்ச்சி இல்லாமல் நம் கவனம் சிதறாமல் தொடர்ச்சியாக ஒரே உணர்விலேயே நம்மை இரண்டு மணி நேரம் பயணிக்க வைக்கிறார். இது ஒரு சாதாரண சாதனையல்ல. ஒவ்வொரு அம்சமும் அதுபோல் எடுத்துக்கொண்டால் விரிவாக அலசி பாராட்டலாம். நம் அரசியல் சாயல்களுக்கப்பால் தமிழினத்தின் ஒரு பகுதியின் வாழ்க்கை பதிவாக ஒரு சிறந்த திரைப்படமாக நிச்சியம் பார்க்க வேண்டிய படம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம்.
    தேயிலை தொழிலாளர்களில் வெள்ளையனுக்கு இணங்கும் பெண்களின் சித்தரிப்பு மருத்துவரின் சித்தரிப்பை விட படு வக்கிரம்.வெள்ளையனின் மனைவியின் சித்தரிப்பு,மனைவியே விளக்கு பிடிப்பாள் போன்ற வசனங்கள் காலாகாலத்துக்கும் பாலாவிற்கும்,நாஞ்சில்நாடனிர்க்கும் பெருமை சேர்க்கும்
    இடலாக்குடி ராசா போன்ற ஒன்றுமறியா அப்பாவி கூட வெள்ளையனுக்கு இணங்கிய தோழியை வெறுப்பது , பி வாசுவையே பெண்களுக்கு கற்பின் மகத்துவத்தை நாம் இப்படி காட்டவில்லையே என்று கண்ணீர் விட்டு அழ வைத்திருக்கும்
    இரண்டாவது கதாநாயகி மீது வெள்ளையன் பார்வை கிடையாது.அவள் கற்புக்கரசி ஆயிற்றே.
    அவள் கணவன் விட்டு விட்டு ஓடி விட்டாலும் நெருப்பாக இருக்க முடியும் எந்த அடக்குமுறையிலும் .கதாநாயகிகளை கற்புக்கரசிகளாக வைக்கும்,தங்கையை,தோழியை பாலியல் வன்முறை புரியும் ,வெள்ளையனுக்கு இணங்கியவர்களை மிகவும் கீழ்த்தரமாக காட்டும் தமிழ் போர்முலாவை பாலா சற்றும் பிசகாமல் தொடருவதை விமர்சிக்க மறந்து விட்டீர்களே

    பதிலளிநீக்கு
  5. //விமர்சனமாக எழுத சரக்கில்லாதவர்கள் மொத்த கதையையே கூட விமர்சனமாக எழுதியிருப்பார்கள்//
    அது நான் தான் தல
    மன்னிச்சு

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பார்வை! நன்றி.

    தமிழர்கள் பரதேசியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.

    பின்னணி இசையை அழுத்தமாக தர முடியாமல் , அதிகமாக பாடல்களை செருகியிருப்பது இசை வறுமையாலா?

    இரு கிராமங்களில் வாழ்ந்தது போன்ற உணர்வு.
    அதற்காக பாலாவையும் செழியனையும் கலைஞர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. யுவா ! தினமணியின் மோசமான தலையங்கம் - ஓர் ஆய்வு ! http://tamiljatakam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  8. ஜெயமோகனோட பழைய கதை இருக்கட்டும்... அவரது புது சீரிஸில் ‘வெறும்முள்’ படித்தீர்களா? .**** அகங்காரம் மட்டுமே கொண்ட சாரமற்ற மனிதனைச் சுட்டும் சொல் அது. வசந்தத்தில் இந்த முட்செடி புன்னகை செய்கிறது. ஆனாலும் எச்சரிக்கையாக இலைகளுக்குள் முட்களை நிரப்பிவைத்திருக்கிறது. **** என்ற வரிகளைப் படித்தால், இது வெறும் முள்ளைப் பற்றின கதைதானா, இல்லை, எஸ்ரா 'காய்ந்துபோன இலை' என்று 'கதை' எழுதி 'இலைக்காரரை' வாரியதுபோல முள் கதை எழுதி இலக்கியச்சிந்தனை பரிசு வாங்கிய 'யாரையோ' வாரியிருக்கிறாரா என்று சந்தேகம் வரவில்லை?!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12:17 AM, மார்ச் 21, 2013

    நல்ல விமர்சனம்....வினோத் குதறிவிட்டார்...உங்கள் விமர்சனம் ஆறுதல் தந்தது...



    Maakkaan.

    பதிலளிநீக்கு
  10. /-- இதற்காகவே இன்னொரு முறை நிச்சயம் ‘பரதேசி’ பார்க்கவே மாட்டேன். இதுவரை வந்த தன்னுடைய படைப்புகளில் ஆகச்சிறந்ததாக இதை எடுத்திருக்கும் பாலாவுக்கு என்னால் அளிக்க முடிந்த எளிய பரிசு இதுதான். --/

    இதென்னமோ வஞ்சப் புகழ்ச்சி போல இருக்கிறதே!

    /-- இதுவரை எத்தனையோ இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். நாஞ்சில்நாடனை பாலா கவுரவித்திருப்பதைப் போல, இதுவரை யாரும் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. --/

    கதை நாஞ்சில் நாடனுடையது. அவருடைய பெயரை கதையில் குறிப்பிட்டது போலத் தெரியவில்லையே. இங்குதான் கொஞ்சம் இடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இந்த விமர்சனத்துல உள்குத்து இருக்கா இல்லையா??

    பதிலளிநீக்கு