8 மார்ச், 2013

கனவை ஏற்று விதியை மாற்று

“நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. சராசரி குடும்பப் பெண்ணுக்கு இந்த கனவு சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும். எனவே எப்பாடு பட்டாவது இந்த சராசரி வாழ்விலிருந்து தப்பிக்க நினைத்தேன்” 

பதினேழு வயது சந்தாவுக்கு வீட்டில் கட்டாயத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார்கள். இதில் விருப்பமில்லாத அவர் நாட்டை விட்டே வெளியேறினார். முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது சந்தா சவேரி என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?

கல்கத்தாவுக்கு அருகில் கான்குர்கச்சி என்கிற இடத்தில் வசித்த மார்வாரி கூட்டுக் குடும்பம் சந்தா சவேரியுடையது. பதினான்கு வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போதெல்லாம் மார்வாரி குடும்பங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். முடிந்தவரை வெகுசீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைத்து தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

வங்காளத்தில் அப்போது கல்வி குறித்த விழிப்புணர்வு மிக அதிகமாக இருந்தது. கல்வி கற்பதை கலாச்சாரமாகவே மாற்றியவர்கள் வங்காளிகள். இந்த போக்கினால் கவரப்பட்டார் சந்தா. எனவே குடும்பத்தில் சண்டை போட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தார். உயிரியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தார்.

பார்க் தெருவிலிருந்த அமெரிக்கன் லைப்ரரி அவரை கவர்ந்தது. அடிக்கடி நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதுபோல ஒருமுறை சென்றுக் கொண்டிருந்தபோது வெயில் தாங்காமல் (சன் ஸ்ட்ரோக்) ஒரு அமெரிக்கப் பெண் நடுத்தெருவில் மயங்கி விழுவதைக் கண்டார். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று முதலுதவி செய்ய சந்தா உதவினார். அன்றிலிருந்து அந்த அமெரிக்கப் பெண் கேரனும், அவருடைய கணவர் டேவிட்டும் கல்கத்தாவிலிருந்தவரை சந்தாவுக்கு நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்.

1984ல் சந்தாவுக்கு வயது பதினேழு. இனியும் பொறுக்க முடியாது என்று அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். நிறைய படிக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். படிப்புக்காக ஊரை விட்டு ஓடுவது என்று முடிவெடுக்கிறார் சந்தா. உடனடியாக டேவிட்-கேரன் தம்பதியரின் நினைவுதான் அவருக்கு வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளராத காலம் அது. ஈமெயில் இல்லை. ஃபேக்ஸ் பரவலாகவில்லை. பாஸ்டனில் இருந்த டேவிட்டின் அலுவலகத்துக்கு போன் செய்தார். இவர் பேசுவது டேவிட்டுக்கு சரியாக கேட்கவில்லை. அவர் பேசுவது இவருக்கு சரியாக கேட்கவில்லை. பத்து நிமிட போராட்டத்துக்குப் பிறகு தன்னுடைய நிலைமையை தெரியப்படுத்தினார். இறுதியாக சந்தாவுக்கு அமெரிக்காவிலிருந்த ஸ்பான்ஸர் கடிதம் அனுப்பிவைக்க டேவிட் ஒப்புக்கொண்டார்.

அந்த கடிதத்தோடு அமெரிக்க தூதரகத்துக்குச் சென்று ‘விசா’ விண்ணப்பித்தார். விசா அதிகாரி சந்தாவைப் பார்த்து சொல்கிறார். “நீ சின்னப் பெண். உன்னால் அமெரிக்காவுக்கு போக முடியாது”.

கடுப்பான சந்தா பதிலளிக்கிறார். “அமெரிக்காவை சொர்க்கம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அங்கே செல்பவர்கள் திரும்பியே வரமாட்டார்கள் என்று நினைப்பா?”

அதிகாரிக்கு இந்த பெண் அங்கே செல்ல ஏதோ முக்கியமான காரணம் இருக்கிறது என்று தோன்றுகிறது. “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஐந்து வருடம் நீ அங்கே தங்கியிருக்க அனுமதிக்கிறேன்” என்று சொல்லி விசாவை தருகிறார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் டிக்கெட் எடுக்க வேண்டும்? சந்தாவுக்கு உதவிக் கொண்டிருந்தவர்கள் அவரது கல்லூரித் தோழர்கள். உடல் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் அவர்களால் தர இயலும். பணம்? தன்னுடைய வைரத்தோடுகளை விற்றார். டிக்கெட் வாங்கினார். கையில் வேறு பணம் எதுவுமில்லை. கட்டியிருந்த உடையோடு விமானமேறினார்.

“பாஸ்டன் வரையிலான பயணம் முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தேன். ஏனெனில் எனக்கு கல்கத்தாவை அவ்வளவு பிடிக்கும்” என்று சமீபத்தில் கொல்கத்தாவுக்கு வந்தபோது சொன்னார் சந்தா.

விமான நிலையத்தில் சந்தாவை வரவேற்க தவறவில்லை டேவிட்டும், கரேனும். ஏனெனில் அங்கிருந்து தொலைபேச கூட சந்தாவிடம் காசில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.

அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த சந்தாவுக்கு அடுத்து என்னவென்று தெரியவில்லை. செய்தித்தாள்களை மேய்ந்தார். அமெரிக்க முதியோர் பலருக்கும் தாதிக்கள் தேவைப்பட்டார்கள். ஒரு அமெரிக்க மூதாட்டிக்கு உதவ இவர் போய் சேர்ந்தார். தொண்ணூற்றி எட்டு வயது லெஸ்லிக்கு இவரது சேவை மிகவும் பிடித்துப் போனது. சில நாட்கள் கழித்து இவரது கையில் முப்பதாயிரம் டாலர் பணத்தைக் கொடுத்து, “நீ ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார். சந்தாவின் ஆசையும் அதுதானே?

ஹார்வர்டில் படிப்பு முடியும் காலத்தில் டேவிட் இவருக்கு வேறு ஏற்பாடும் செய்தார். தன்னுடைய மாமனாரையும், மாமியாரையும் சந்தாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் சட்டப்படி தங்களுடைய மகளாய் சந்தாவை தத்தெடுத்துக் கொண்டனர். தத்தெடுத்த பெற்றோர், சந்தாவின் உண்மையான பெற்றோரை சந்திக்க கல்கத்தா வந்தனர். ஆறு வாரங்கள் அவர்களோடு தங்கியிருந்து, சந்தா ஏன் அமெரிக்காவுக்கு வந்தார் என்று விளக்கினர். தங்கள் மகளது உள்ளத்தை அவர்கள் புரிந்துகொள்ள இச்சம்பவம் உதவியது.

கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சந்தாவின் மேற்படிப்பு தொடர்ந்தது. பயோகெமிஸ்ட்ரி துறையில் அங்கே ஆய்வுகள் புரிய ஆரம்பித்தார். பேராசிரியராக அங்கே அடிக்கடி வருகை புரிந்தவர் லைனஸ் பாலிங். இவர் வேதியியலுக்காக 1954லும், அமைதிக்காக 1962லும் நோபல் பரிசு வென்றவர். படிப்பு முடிந்தவுடன் பாலிங்கிடம் பணியாற்ற சந்தா விரும்பினார். பாலிங்குக்கு அப்போது வயது தொண்ணூறுக்கும் மேலே.

தன்னுடைய பிரத்யேக ஆய்வகத்தில் தொப்பி அணிந்து அமர்ந்திருந்த பாலிங்கை சந்தித்தார் சந்தா. தன்னுடைய பல்கலைக்கழக ஆய்வுத்தகுதிகளையும், பல்கலைக்கழகம் அவருக்குத் தந்திருந்த தர அளவீடுகளையும் சொன்னார். “உங்களிடம் மாணவியாக சேர்ந்து உங்கள் ஆய்வகத்தில் நான் பணிபுரிய இத்தகுதிகள் போதுமா?”

“எனக்கு இப்போது மாணவிகள் தேவையில்லை. மனைவிதான் தேவை” சந்தாவை தவிர்ப்பதற்காக லேசாக புன்முறுவலிட்டுக்கொண்டே சொன்னார் பாலிங்.

“நாம் எப்போது திருமணம் செய்துக்கொள்ளலாம்?” எதையும் யோசிக்காமல் சந்தா பதிலுக்கு கடிக்க, வாய்விட்டு சிரித்துவிட்டார் பாலிங்.

“என்னுடைய ஆய்வகத்தில் இப்போது பெரியதாக வேலைகள் எதுவுமில்லை. ஆய்வுக்குடுவைகளை கழுவி வைக்கும் வேலைக்கு மட்டும்தான் ஆள் தேவை”

“பரவாயில்லை. உங்களோடு இருப்பதே எனக்கு மகிழ்ச்சி” பாலிங்கிடம் சந்தா சேர்ந்த கதை இதுதான். அவர் 94 வயதில் மரணிக்கும் வரை அவரோடு வேலை பார்த்தார் சந்தா. அங்கிருந்தபோதுதான் சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வேதியியல் தீர்வுகளை காணும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க க்ரீன்கார்ட் வாங்கியபிறகு ‘ஆக்டிவர்’ என்கிற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ‘இமாமி ஃபேர் & ஹேண்ட்ஸம்’ முகப்பொலிவு க்ரீமின் ஒரிஜினல் ஃபார்முலாவில் கூட சந்தாவின் பங்குண்டு. முகப்பொலிவு, தோல் சுருக்கம் நீக்கம் போன்றவற்றுக்கு பயன்படும் பல்வேறு க்ரீம்களை உருவாக்கினார். எஸ்டீ லாடர், ரெவலான் போன்ற பிரபலமான அழகுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தாவின் ஃபார்முலாவை கொண்டவையே. பி2-ஆக்டிஜென் எனும் ஃபார்முலா இவர் உருவாக்கியதுதான்.

இன்று சந்தாவின் நிறுவனத்தின் பெயர் ஆக்டியோஜென். பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். வருடாவருடம் கொல்கத்தாவுக்கு வருகிறார். சால்ட் லேக் பகுதியில் சொந்தமாக ஒரு வீடும் கட்டியிருக்கிறார். கொல்கத்தாவின் மார்வாரி பெண்கள் இப்போது நிறைய பேர் உயர்கல்வி பயில்வதை மகிழ்ச்சியோடு பார்க்கிறார். 


“நான் என்னவாக விரும்பினேனோ, அதுவாக மாறியிருக்கிறேன். நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், அது குறித்த தயக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்தால்.. நிச்சயமாக விரும்பியதை அடைவீர்கள்” என்கிறார் சந்தா சவேரி. நோபல் கனவு அவரது கண்களில் இன்னமும் பளிச்சிடுகிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

6 கருத்துகள்:

  1. மகளிர் தினத்தன்று எனர்ஜியான பதிவு அண்ணா..

    பதிலளிநீக்கு
  2. அதாவதுங்க நாம என்னவா ஆக நினைக்கிறோமோ அதுல உறுதியா இருக்கணும்..அதுனாலா எவ்வளவு இழப்புக்கள் வந்தாலும் சமரசம் பண்ணிக்காம இருக்கணும்..... கடைசி வரைக்கும் ...

    அந்த இலக்கு , லட்சியம் நம்மோட ஆழ்மனசுல நல்லா வேறுன்றி இருந்ததுன்னா கண்டிப்பா அந்த இலக்கை அடைய எதோ ஒருவகைல ஆமா எதோ ஒருவகைல ஒரு ஜான்ஸ் வரும்... வேறு வழி இல்லை வந்தே தான் தீரனும்...

    அந்த லட்சியத்துக்காக உயிரைக்கூட இழக்க தயாரா இருக்கணும்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா6:33 PM, மார்ச் 08, 2013

    சிந்திய‌ வெண்ப‌னி சிப்பியில் முத்தாச்சு...
    ச‌ந்தா பெண்ம‌னி ல‌ட்சிய‌ம் ஜெயிச்சாச்சு...‌

    ந‌ல்ல‌ ப‌திவுக்கு ந‌ன்றி

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11:50 AM, மார்ச் 09, 2013

    சென்ற திடீர் காந்தி குல்லாய் post-ல் தாங்கள் அரைகுறை அறிவோடு, ஆங்காங்கே ராஜாஜியை போட்டு பிராண்டியிருந்ததை பார்த்தவுடனே, ஏதாவது comments எழுதலாமே என்று நினைத்தேன். அப்புறம், சரிதான் மடிப்பாக்கம் காலம் தொட்டே ஒரு எழவையும் புரியவைக்க முடியவில்லை, இந்த திரா...ட ராஷ்கோல் எழுதுறதெல்லாம் அவர்மாதிரியேயான டோழர்களுக்கு மட்டும்தான்..இதெல்லாம் அப்படியே போகவிட்டுடனும்ன்னு- விட்டாச்சு.

    மேலே கவித இயம்பியிருக்கின்ற அ..றை anonymous டோழர் கருத்தினை படித்தவுடனே எனக்கு சிரிப்போ சிரிப்பு, சரிதான் நல்ல திராவிட் குஞ்சு (தாங்களே) போட்டிருக்கிற மேடையும் அதனுடை தொண்டரடி படையில் உள்ள ஒரு .ரங்கும்.
    தங்களுக்கு இதுங்க மாதிரியான டொழர் மட்டும்தான் சரியாக வரும். யாரப்பா அங்கே, விசில் போடு !
    நல்ல பதிவு நன்றி பத்ரி
    வருத்தத்துடன்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா8:36 AM, மார்ச் 18, 2013

    http://othisaivu.wordpress.com/2013/03/17/post-180/

    பதிலளிநீக்கு