தமிழ்
படங்களுக்கான ஓவர்சீஸ் கலெக்ஷன் ஈழத்தமிழர்களை நம்பியிருக்கிறது. போலவே
இந்திப் படங்களுக்கு பஞ்சாபிகள். நாம் என்னதான் சர்தார்ஜி ஜோக்குகள் சொல்லி
அவர்களை நக்கலடித்துக் கொண்டிருந்தாலும் உலகம் முழுக்க பரவலாக
காலூன்றியிருக்கிறார்கள் சிங்குகள். குறிப்பாக ஐரோப்பாவில் இந்தியர்கள்
என்றாலே பஞ்சாபிகள்தான் எனும் வகையில் வணிகத்தில் கோலோச்சுகிறார்கள்.
இதைப்
புரிந்துகொண்ட இந்தித் தயாரிப்பாளர்கள் அவர்களை குறிவைத்து கதைகளை
உருவாக்க அயல்நாடுகளில் இந்திப்படங்கள் சக்கைப்போடு போட்டு வசூலை வாரி
குவித்தன. பஞ்சாபியர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு ‘சிங்’
கேரக்டர் ஒவ்வொரு படத்திலும் உருவாக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கதையே
பஞ்சாபில் நடப்பதைப்போல ‘சன் ஆஃப் சர்தார்’ மாதிரி படங்களும் வந்து
நூறுகோடி வசூலை எட்டி சாதனை புரிந்தது. சற்று தாமதமாகவே முழித்துக்கொண்ட
பஞ்சாபியர்கள், எதற்கு இந்திப் படங்களுக்கு குனியவேண்டும்.. நம்
மொழியிலேயே நம்மாட்களுக்கு படங்கள் எடுக்கலாமே என்று சில ஆண்டுகளாக
வரிசையாக படமெடுத்துத் தள்ளுகிறார்கள்.
1936லேயே
முதல் பஞ்சாபிப்படம் கொல்கத்தாவில் தயாரானது. ‘ஷீலா’ என்கிற பெயரில்
தயாரான அப்படம் லாகூர் மாகாணத்தில் வெளியானது (அப்போது ஒன்றுபட்ட இந்தியா).
அப்படம் வெற்றியடைய அடுத்தடுத்து நிறைய படங்கள் பஞ்சாபி மொழியில்
உருவாக்கப்பட்டன. 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து நாடு இரண்டாக
பிரிக்கப்பட்டபோது பஞ்சாபில் பாதி பாகிஸ்தானுக்கு போனது. அப்போது பஞ்சாபி
சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள். அவர்கள்
லாகூருக்கு இடம்பெயர்ந்து ’லாலிவுட்’ எனப்படக்கூடிய பாகிஸ்தான் திரையுலகை
உருவாக்கினார்கள். நம்மூர் பஞ்சாபில் திரைமுயற்சிகள் குறைந்து, ஒரு
கட்டத்தில் இந்திப்படம் பார்த்து மனசை தேற்றிக் கொண்டார்கள்.
2010ல் மட்டும் பதினாறு படங்கள் வெளியானது. ஜிம்மி ஷெர்கீல் நடித்த ‘மெல் கராதே ரப்பா’ எல்லா சாதனைகளையும் உடைத்து பத்து கோடிக்கு மேல் வசூலித்தது. பஞ்சாபில் இவ்வளவு பெரிய பிசினஸ் செய்த முதல் படம் இதுதான். நாப்பத்தி இரண்டு வயதாகும் ஜிம்மி ஷெர்கீல் இப்போது அந்த ஊரின் சூப்பர் ஸ்டார். கடந்த ஆண்டு மட்டுமே இருபது படத்துக்கும் மேலே வெளியாகியிருக்கிறது. என்.ஆர்.ஐ. பஞ்சாபிகளை கவரும் விதமான கதை, காட்சியமைப்பு என்பதுதான் சமீபகால பஞ்சாபி படங்களின் தன்மை. கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாபி படங்களின் பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே போக பாலிவுட்டுக்குப் போன பஞ்சாபிகள் தங்கள் தாய்மண்ணுக்கே திரும்பவர தொடங்கினார்கள். ஜூஹிசாவலா இப்போது பஞ்சாபி படங்களில் நடிக்கிறார். எதிர்காலத்தில் குஷ்பு, சிம்ரன் போன்றவர்கள் நடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்வாசனை கமழும் படங்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எது எப்படியாயினும் காதல்-காமெடி வகைகளில் படங்களை எடுப்பதுதான் அவர்களது பர்ஸ்ட் சாய்ஸ்.
சமீபத்தில்
வெளியான சிங் vs கவுர் படத்தைப் பற்றி எழுதவந்து ஓபனிங் கொஞ்சம்
நீண்டுவிட்டதற்கு மன்னிக்கவும். ஏனெனில் இந்த பஞ்சாபிப் படங்களை பற்றி
பேசும்போது லேசாக இந்த பின்னணியை தெரிந்துவைத்துக் கொள்வதும் அவசியம்.
பத்து, பதினைந்து கோடியெல்லாம் பெரிய கலெக்ஷனா என்றால் பஞ்சாபியில் யெஸ்
தான் சொல்லவேண்டும். கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டெல்லாம் வளர்ந்த
பிள்ளைகள். பஞ்ச்வுட் தவழும் குந்தை.
பஞ்ச்வுட்டில்
முதன்முறையாக ஒரு தென்னிந்திய படநிறுவனம் படம் தயாரித்திருக்கிறது
என்பதுதான் சிங் vs கவுரைப் பற்றி நாம் தெரிந்துவைத்துக் கொள்வதற்கான
நியாயமாக இருக்கிறது. தயாரிப்பாளர் வேறு யாருமில்லை. ‘வசந்தமாளிகை’
தயாரித்த நம்ம பக்கத்து ஊர் ராமாநாயுடுதான். அங்குள்ள உள்ளூர்
தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து தயாரித்த இப்படத்தோடு ஒட்டுமொத்தமாக நம்
சன்பிக்சர்ஸ் கணக்காக ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸும் களமிறங்கியது.
நாலு கோடி ரூபாய் செலவில் பிரும்மாண்டமாக உருவான படம் என்பதே
இப்படத்துக்கு உலகெங்கும் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியது.
ஹீரோவாக
நடித்த முப்பத்தியோரு வயது ஜிப்பி கிராவெல் அடிப்படையில் ஒரு பாடகர்.
பஞ்சாபி சினிமாவில் நடிப்பவர்கள் பெரும்பாலும் பாடகர்களாகவும் இருந்தாக
வேண்டும். பாடத்தெரியாதவர்களை பஞ்சாப் ரசிகர்கள் மதிப்பதில்லை. மேலே
குறிப்பிட்டிருக்கும் வசூல்சாதனை சரித்திரம் படைத்த படமான ‘மெல் கராதே
ரப்பா’வில் அறிமுகம் ஆனவர் இவர். பஞ்சாபில் அதிகம் விற்கக்கூடிய இசை
ஆல்பங்கள் ஏராளமானவை இவரது கைவண்ணம்தான். பாப்கார்னை வாயில் போடுவது மாதிரி
பரபரவென்று நான்கு படங்கள் நடித்து (நான்குமே சூப்பர்ஹிட்), இது ஐந்தாவது
படம். பஞ்சாபின் முதல் ஆக்ஷன் ஹீரோ என்று இவரை ரசிகர்கள்
கொண்டாடுகிறார்கள். பாலிவுட்டின் நூறுகோடி ஹீரோ அக்ஷய்குமார் அடுத்த
படமொன்றில் தன்னோடு நடிக்க இவரை அழைத்திருக்கிறார்.
ஹீரோ
விரும்பாத ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஊர் கட்டாயப்படுத்துகிறது.
இந்த தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு கனடா பெண்ணை காதலிப்பதாக
சும்மாவாச்சுக்கும் டூப் அடிக்கிறார். நம்பகத்தன்மைக்காக இண்டர்நெட்டில்
இருந்து அப்பெண்ணின் போட்டோவை பிரிண்ட் எடுத்தும் காட்டுகிறார். அந்த
பெண்ணை நேரில் அழைத்துவரவேண்டும் என்று அம்மாவும், உறவினர்களும்
கட்டாயப்படுத்த கனடாவுக்கு போகிறார். கனடாவில் அப்பெண்ணை இரண்டு மூன்று
முறை கொலைவெறி தாக்குதலில் இருந்து காக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு
பாடிகார்டாகவே ஆகிவிடுகிறார். ஊரில் இருந்து ‘அழுத்தம்’ வர வேறு வழியின்றி
பொய்சொல்லி இந்தப் பெண்ணை ஊருக்கு அழைத்து வருகிறார். அடுத்தடுத்து பொய்
சொல்வதும், அந்த பொய்யை மெய்யாக்க பாடுபடுவதுமாக படம் முழுக்க கிரேஸிமோகன்
பாணி காட்சிகள். முதல் பாதி முழுக்க காமெடி, ஆக்ஷன் என்று களைகட்ட,
இரண்டாம் பாதியில் அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகள்.
காமெடி-ரொமான்ஸ் படமாக வருமென்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு சிங் vs கவுர் மரண மசாலா ஆக்ஷன் படமாக வந்து ஆச்சரியமூட்டியது. பஞ்சாபில் ‘தபாங் சிங்’, ‘ரவுடி சிங்’ என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கல்லா கட்டுகிறார்கள். ராமாநாயுடுவின் தயாரிப்பு என்பதாலோ என்னவோ நிறைய தெலுங்கு மசாலா வாசனை. குத்துப்பாட்டு, டேன்ஸ், காமெடி, காதல், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் என்று பர்பெக்ட்டான காக்டெயில்.
இப்படம்
பஞ்சாபி சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது என்று அந்த
ஊர் ஊடகங்கள் கொண்டாடுகிறது. சினிமாத் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட
ஆட்கள் இனி பஞ்சாபி படங்களிலும் முதலீடு செய்ய பிள்ளையார்சுழி
போட்டிருக்கிறது. உள்ளூர், வெளியூர் என்று ரிலீஸ் ஆன அத்தனை சென்டர்களிலும்
வசூல் சுனாமி. இப்படம் வெளியானபோது கூடவே வெளியான இந்தியின் சூப்பர்ஹிட்
படமான ‘கை போ சே’ பஞ்சாபில் வசூலில் அடிவாங்க இப்படமே காரணம். ஐரோப்பாவில்
‘கோ ஃபார் ஜிப்பி’ என்று புதுகோஷமே ஜிப்பிகிராவெலுக்காக உருவாக்கப்பட்டு
விட்டது.
முன்பே சொன்னதுபோல பஞ்ச்வுட்காரர்கள் தவழும் குழந்தைகள். வளரும் வரை ரசிப்போம். வளர்ந்தபின்னர் விமர்சிப்போம்.
(நன்றி : http://cinemobita.com)
(நன்றி : http://cinemobita.com)
நல்ல தகவல நன்றிங்க........
பதிலளிநீக்கு