18 ஏப்ரல், 2013

‘பாட்ஷா ’- மசாலா மைல்கல்!


இளையதளபதி விஜயை அசிஸ்டெண்ட் கமிஷனர் உடையில் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். மார்பில் அணிந்திருக்கும் பேட்ஜில் எம்.ஜி.ராமச்சந்திரன், ஐ.பி.எஸ் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. “எம்.ஜி.ஆருங்கிறது, வெறும் பேரு இல்லடா... வரலாறு” என்று க்ளைமேக்ஸில் கம்பீரமாக பஞ்ச் பேசினால் எப்படியிருக்கும்.. தியேட்டரில் அதகளமாகி விடாதா..


ஆந்திராவில் இப்போது ரணகளம். தியேட்டர் தோறும் திருவிழாக்கோலம். ஐ.பி.எல்லுக்கு பட்டை நாமம். போலிஸ் அதிகாரியாக ஜூனியர் என்.டி.ஆர்., அவரது பேட்ஜில் இடம்பெறும் பெயர் என்.டி.ராமாராவ், ஐ.பி.எஸ்.,


தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாட்ஷா’தான் என்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பத்து ஐந்து கோடி செலவு என்று தகவல். பின்னே.. தென்னிந்திய சூப்பர் ஸ்டாரின் ஆல்டைம் அல்டிமேட் ஹிட் படத்தின் டைட்டிலை வைத்து டொக்கு படமா எடுக்க முடியும்? டைட்டிலின் வெயிட்டுக்காக இயக்குனர் சீனு வைத்யாலா பிரேம்-பை-பிரேமாக செதுக்கித் தள்ளியிருக்கிறார். முந்தைய ப்ளாக்பஸ்டர் இண்டஸ்ட்ரி ஹிட்டான ‘தூக்குடு’ ஏற்றிவிட்ட எதிர்ப்பார்ப்புகளையும், பூர்த்தி செய்யவேண்டும். சிரஞ்சீவி குடும்பம் கடந்தாண்டு மீண்டும் துளிர்விட்டு விட்டதால், மீண்டும் நந்தமூரியின் குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஜூனியர் என்.டி.ஆருக்கும் ஒரு மாஸ்டர்பீஸான படத்தை கொடுத்தாக வேண்டும். டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தவருக்கு ரிசல்ட்டு சரவெடி. நான்கே நாட்களில் அனாயசமாக ஐம்பது கோடி வசூல் என்றால் சும்மாவா? இந்தியாவில் மட்டுமின்றி ஓவர்சீஸிலும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சீனு வைத்யாலாவின் மேஜிக்கை. நூறு கோடியை அசால்ட்டாக எட்டிவிடும். அடுத்த மைல் கல்லான, நூற்றி ஐம்பது கோடியை தொடுமா? என்றுதான் டோலிவுட் இண்டஸ்ட்ரியில் பெட் கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
                                                     seenu
சீனு வைத்யாலா தெலுங்கு இண்டஸ்ட்ரியில், ஸ்டைலான மேக்கிங்குக்கு பேர் போனவர். கொரிய மசாலாப் படங்களின் தாக்கம், இவரது ப்ரேம் போகஸிங்கில் இருக்கும். அவரது முதல் படமான ‘நீ கோசம்’ பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக் கொண்டாலும், தனித்தன்மையான இயக்கத்துக்காக பேசப்பட்டது. அடுத்த படமான ‘ஆனந்தம்’ காமெடி கும்மி. தொடர்ச்சியாக வெங்கி, தீ, துபாய்சீனு, ரெடியென்று சகட்டுமேனிக்கு ஹிட்ரேட். ரெடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, திருஷ்டி பட்டுவிட்டது. கிங், ரெயின்போ, நமோ வெங்கடேசா, என்று கல்லாப்பெட்டியில் அடுத்தடுத்து ஓட்டை. 

முடங்கிப் போனவரை தட்டியெழுப்பியவர் மகேஷ்பாபுதான். “என்னால் இனிமேல் வெற்றிப்படம் தரமுடியுமாவென்று சந்தேகமா இருக்கிறது” என்று புலம்பியவரை, “உங்களால் முடியும். பொறுமையாக ஸ்க்ரிப்ட் ரெடி செய்யுங்கள். நான் காத்திருக்கிறேன்” என்று தைரியமூட்டினார் மகேஷ். அந்தப் படம்தான் மெகாஹிட் ‘தூக்குடு’. முன்பாக மகேஷ்பாபுவுக்கு சொல்லிக் கொள்ளும்படி ஹிட் இல்லை. தெம்பு பிறக்க ஓவர்நைட்டில் அடுத்த இன்னிங்ஸுக்கு ரெடி ஆனார்கள் மகேஷ்பாபுவும், சீனுவும். பூரியோடு இணைந்து மகேஷ்பாபு பிசினஸ்மேனாக பின்னிப் பெடலெடுக்க, இப்போது சீனுவின் சிக்ஸர் பாட்ஷாவில்.

badshah2 copy
சீனுவின் பெரிய பலம் அவர் உங்களையும், என்னையும் போல மிகச்சாதாரணமான சினிமா ரசிகர் என்பதுதான். ஒரு வெகுஜன சினிமா மிக சுலபமாக அவரை திருப்திபடுத்திவிடும். நாம் எம்.ஜி.ஆரை அணு அணுவாக ரசிப்பதைப் போல, சீனு என்.டி.ஆரை ரசிக்கிறார். தெலுங்கு சினிமாவின் அரை நூற்றாண்டு மசாலாநெடி அவரது மூளைக்குள் நன்றாக ஏறிவிட்டிருக்கிறது. எந்த காட்சிக்கு ரசிகன் விசில் அடிக்க வேண்டும், எதற்கு கைத்தட்டவேண்டும், எப்போது கண்கலங்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்படுத்தக்கூடிய வாகான சுக்கான் அவரது கையில் இருக்கிறது. நகைச்சுவை, காதல், ரகளையான பாடல், இடுப்பொடிக்கும் நடனம், செண்டிமெண்ட், ரத்தவெறி ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் இதையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்து கல்ப் அடித்தால் ஸ்யூர் ஹிட் என்பது அவருக்கு தெரியும். ரஜினி படங்களில் வருவதைப் போல நிறைய கேரக்டர்கள் இவரது படங்களில் இருக்கும். இதன்மூலம் ஏராளமான நட்சத்திரங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். ரசிகனுக்கு ட்ரீட் தரமுடியும். இவரது படங்கள் கொஞ்சம் நீளம் என்பதுதான் இவர் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனம். சுவாரஸ்யமான காட்சிகளை கோர்த்தால், நீளம் ஒரு ப்ளஸ் பாயிண்ட்தான் என்று வாதிடுகிறார். நாராயணாவும், பிரம்மானந்தமும் இவரது பெரிய பலம். ஹீரோக்களையும், சினிமா இண்டஸ்ட்ரியையும் இவர்களை வைத்து வேண்டுமட்டும் நக்கலடித்துக் கொள்வார்.


kajal
தூக்குடுவின் டூப்பர் ஹிட் ஜூனியர் என்.டி.ஆருக்கு சீனுவோடு படம் செய்ய ஆசையை ஏற்படுத்தியது. ஒரேமாதிரியாக டெம்ப்ளேட் பாத்திரங்களிலேயே நடித்து, நடித்து அவருக்கும் அலுத்துவிட்டது. எத்தனை காலத்துக்குதான் வில்லன்களை துரத்தி, துரத்தி அருவாளால் கொத்து பரோட்டா போடுவது.. ஸ்டைலாக துப்பாக்கியை சுழற்றி சுடவேண்டுமென்று அவருக்கும் ஆசையிருக்காதா? இதுவரை நாம் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர் பாட்ஷாவில் இல்லை. கெட்டப்பில் தொடங்கி, பாடிலேங்குவேஜ் வரைக்கும் ரொம்ப புதுசு. முழுமையாக தன்னை இயக்குனரிடம் ஒப்படைத்துவிட்டார் ஜூ.என்.டி.ஆர்.


ஆந்திர தேவுடு என்.டி.ஆரின் மூத்தமகன் ஹரிகிருஷ்ணா. இவருக்கு அஃபிஷியலாக இல்லாமல், தனியாவர்த்தனமாக ஆடிய இன்னிங்ஸில் பிறந்தவர்தான் ஜூனியர் என்.டி.ஆர். ஹரிகிருஷ்ணாவும் அப்பா வழியில் திரைத்துறை, அரசியல் என்று முக்கியமான பிரமுகர்தான்.  ஜூனியர் பிறந்தவுடனேயே ஹரிகிருஷ்ணா, அம்மா ஷாலினியை பிரிந்துவிட்டார். நந்தமூரி குடும்பத்தோடு, எந்த தொடர்புமில்லாமல் ஜூனியரை தன்னந்தனி மனுஷியாக வளர்த்து வந்தார் ஷாலினி. மகனுடைய முறையற்ற செயல்மீது கோபமிருந்தாலும், தாத்தா என்.டி.ஆருக்கு பேரன் ஜூனியர் மீது அவ்வளவு ஆசை. தேடிப்பிடித்து மீண்டும் சேர்த்துக் கொண்டார். ஆனாலும் என்.டி.ஆரை தவிர்த்து அவரது குடும்பத்தில் மீதமிருந்தவர்கள் நந்தமூரி வாரிசாக ஜூனியர் என்.டி.ஆரை ஒப்புக்கொள்ள தயங்கினார்கள்.

1991ல் வயதான காலத்தில் மீனாட்சி சேஷாத்ரியை ஹீரோயினாக போட்டு என்.டி.ஆர் எடுத்த ‘பிரும்மரிஷி விஸ்வாமித்ரா’ படத்தில் ஜூனியர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது எட்டு. அதிலிருந்து ஹீரோ மெட்டீரியலாகவே, அவர் வளரத் தொடங்கினார். நடனம், சண்டை, நடிப்பு என்று பள்ளிப்பாடத்தைக் காட்டிலும், திரைப்பாடத்தைதான் அதிகமாக கற்றார். குச்சுப்புடி நடனத்தில் ஜூனியர் ஒரு ஜீனியஸ். உலகெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

பதினெட்டு வயதில் ’நின்னு சூடலானி’ என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். படம் படு ப்ளாப். அறிமுகப்படமே தோல்விப்படமாக நடித்தவர் நந்தமூரி வாரிசாக இருக்கமுடியாது என்று அனைவரும் எள்ளி நகையாட, தாத்தாவின் வாரிசு என்பதை நிரூபிக்க மெனக்கெட்டார் ஜூனியர். இவரைப்போலவே, தன் திறமையை நிரூபிக்க வெறியாய் பழிகிடந்த இன்னொருவரோடு இணைந்தார். அவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. ‘ஸ்டூடண்ட் நெ.1’ கன்னாபின்னா ஹிட். அழகிலும், திறமையிலும் அப்படியே மனதேவுடு என்.டி.ஆரை உரித்து வைத்திருக்கிறாரே என்று ஆந்திராவே ஜூனியரை ஆராதிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து அவரது படங்கள் சொல்லிக்கொள்ளும்படி ஓட, என்.டி.ஆருக்கு ரசிகராக இருந்தவர்களின் பேரன்கள் ஜூனியர் என்.டி.ஆரின் பின் அணிவகுத்தார்கள். இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிவிட்ட அவரை, வேறுவழியின்றி நந்தமூரி குடும்பமும் அவரை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மாமாவும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னுடைய உறவினரின் பெண்ணை கட்டிக்கொடுத்து ஜூனியர் என்.டி.ஆரை தன் பக்கமாக வைத்துக் கொண்டார். ஏனெனில் தேர்தலில் ஜூனியர் என்.டி.ஆரின் பிரச்சாரம் தெலுங்கு தேசத்துக்கு அத்தியாவசியமான கவர்ச்சி அம்சமாக ஆகிவிட்டது. யார் ஏற்றுக்கொண்டாலும், ஒருமாதிரியாக முறுக்கிக் கொண்டிருந்தவர் சித்தப்பா பாலகிருஷ்ணாதான். பாட்ஷாவின் ஹிட் அவருடைய மனதையும் மாற்றிவிட்டது. “அவன் என்னோட மகன்” என்று பெருமையோடு சொல்லி மீசையை முறுக்கி விட்டுக் கொள்கிறார்.

ntr
ஜூனியர் என்.டி.ஆரின் கிரவுட் மாஸ் என்பது திரையில் அவர் ஆடும் நடனத்திலோ, ஆக்‌ஷன் காட்சிகளாலோ நிகழ்ந்ததல்ல. உதாரணத்துக்கு சமீபத்திய சம்பவத்தையே சொல்லலாம். பாட்ஷா திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு ஹைதராபாத்தில் நடந்தது. ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குழுமிவிட பயங்கர நெரிசல். கூட்டத்தில் சிக்கி ரசிகர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். விழாவுக்கு காரில் இருந்து இறங்கிய ஜூனியர் என்.டி.ஆரின் முகம் சிவந்திருந்தது. கருப்புச்சட்டை அணிந்திருந்தார். மேடையில் பேசும்போது, “இறந்தவன் என்னுடைய தம்பி. இன்று எனக்கு துக்க தினம். கொண்டாட்டம் தேவையா?” என்றுகூறி விடுவிடுவென நடந்தார். அதோடு விழாவும் ஓவர். மறுநாள் இறந்த ரசிகனின் குடும்பத்தை நேரில் சந்தித்து லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்கினார். “அவன் செய்யவேண்டிய கடமைகளை, இனிமே நான் முன்நின்று செய்வேன். எதுவா இருந்தாலும், என்னை தொடர்பு கொள்ளுங்க” என்று குடும்பத்திடம் வாக்குறுதியும் தந்தார். பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட அவரது திரைவாழ்வில் இதுமாதிரி ஏராளமான நெகிழ்ச்சி அனுபவங்கள் உண்டு. ஆந்திரதேசம் அவரை ‘ஜூனியர் தேவுடுவாக’ பார்க்கப்படுவதில் ஆச்சரியமென்ன?


ரைட், பாட்ஷாவுக்கு வருவோம்.

“எனக்கு என்னோட தாத்தா பேருவெச்சது, செத்ததும் என்னோட சமாதியிலே எழுதறதுக்கு இல்லடா.. சரித்திரத்தில் எழுதறதுக்கு” – வேறு யார் இந்த பஞ்ச் டயலாக்கை பேசினாலும் சிரிப்பு வந்துவிடும். ஜூனியர் என்.டி.ஆர் என்பதால் சிலிர்த்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள். வில்லன்களை நொறுக்குவதற்கு முன்பாக “மேட்ச்சும் என்னோடது. பிட்ச்சும் என்னோடது” என்கிறார். அரைகுறையாக தெலுங்கு தெரிந்த நமக்கே நம்மையறியாமல், விசில் பீறிட்டுக் கொண்டு வருகிறது என்றால், ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள்? படம் முழுக்க ஜூ.என்.டி.ஆரின் மாஸ் அப்பீல் நிகழ்த்தும் மேஜிக் அபூர்வமாக திரையில் நிகழக்கூடிய அற்புதங்களில் ஒன்று. இம்மாதிரி இன்னொரு படம் அவருக்கு அமையுமா என்பதே சந்தேகம்தான். க்ளைமேக்ஸுக்கு முன்பாக தாத்தாவை இமிடேட் செய்து அவர் ஆடும் ஜூகல்பந்தி நடனத்துக்கு ஒப்பான ஒரு காட்சியை சீனு வைத்யாலாவே நினைத்தாலும், இனி சிந்திக்க முடியாது.

இப்படத்தை தமிழில் எடுக்க ஒரு நிறுவனம் இப்போதே உரிமை வாங்கி வைத்திருக்கிறது. அனேகமாக விஜய் ஹீரோவாக இருக்கலாம். கொஞ்சம் உழைத்து நேட்டிவிட்டியை கொண்டுவந்துவிட்டால், இன்னொரு போக்கிரிதான். இந்திக்கும் எப்படியும் போகும். உறுதியாக இருநூறு கோடி வசூலும் நிச்சயம். வளவளவென்று படத்தைப் பற்றி வேறெதுவும் சொல்லி பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. இது கேட்டுத்தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமும் அல்ல. பார்த்து அனுபவிக்க வேண்டியது. தமிழகத்தில் தமிழ் படங்களுக்கு இணையாக நிறைய திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ‘ஃப்ரம் த டைரக்டர் ஆஃப் தூக்குடு’ என்கிற முத்திரையோடு. ஓபனிங் வீக்கெண்டில் சென்னையிலும், கோவையிலும் அத்தனை காட்சிகளும் ஹவுஸ்ஃபுல். ஒரே ஒரு எச்சரிக்கை. பாட்ஷா ஒரு மேஜிக் என்பதால், லாஜிக் மட்டும் பார்க்காதீர்கள்.
                                    seenu1
 (நன்றி : cinemobita.com)

4 கருத்துகள்:

  1. வழக்கம்போல அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை. இதெல்லாம் ஒரு பத்திரிக்கையாளருக்கே சாத்தியம்.

    //இதுவரை நாம் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர் பாட்ஷாவில் இல்லை. கெட்டப்பில் தொடங்கி, பாடிலேங்குவேஜ் வரைக்கும் ரொம்ப புதுசு.// ஆமாம், அவருடைய ஹேர் ஸ்டைலும் அப்பாவித்தனமான முகபாவமும் "பாத்ஷா" கேரக்டருக்கு எதிரான ஜென்டில் மேன் அட்மாஸ்ஃபியரைக் கொண்டுவந்து இந்தப் படத்தின் நாடகத்தன உச்சத்துக்கு உதவுகிறது. நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். சீனியர் என்.டி.ஆரை ந(க்)கல் செய்கிற நடன அசைவுகள் அருமையான கற்பனா யோசனை!

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப லென்த் ஆ இருக்கு விமர்சனம்
    படித்ததும் படம் பாக்க ஆவலை தூண்டிவிட்டது.
    ஆனால் எங்கள் ஊரில் உள்ள எந்த தியேட்டரிலும் இந்த படம் போடவில்லை. டி வி டி வந்தால் நிச்சயம் பாக்கணும்

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவை ரசித்து எழுதியுள்ளீர்கள் போல...

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.....

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11:14 AM, ஏப்ரல் 21, 2013

    எனக்கு தெலுங்கும் புரியாது. ஜூனியர் என்டியாரையும் தெரியாது. இருந்தாலும் பதிவை படித்தேன். ரசித்தேன். இது பாட்ஷா இல்லை. பாதுஷா என்கிறான் என் நண்பன். அது போகட்டும். இதை தமிழில் அணில் போன்றவர்கள் நடிப்பில் பார்க்க வேண்டிய கொடுமையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. அந்த கொடுமைக்கு பேசாமல் மொழி புரியா விட்டாலும் தெலுங்கிலேயே பார்த்து விடலாமா என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு