இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழினக் காவலர்களின் பேரப்பிள்ளைகள் மட்டும் ஆங்கிலம், இந்தியெல்லாம் படிக்கிறார்களே? அப்பாவி மக்கள் மட்டும் இந்தியும், இங்கிலீஷும் படிக்காமல் டப்பிங் படங்களை பார்த்து வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா?
ஐம்பது ஆண்டுகளாக பலரும் பலமுறை இதற்கெல்லாம் விளக்கமாகப் பதில் அளித்தும் புதுசு புதுசாக, தினுசு தினுசாக மொழிப்போராளிகள் கிளம்பி வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
‘இந்தி எதிர்ப்பு’ என்கிற சொல்லே தவறு. ‘இந்தித்திணிப்பு எதிர்ப்பு’ என்பதுதான் சரி. ஏன் இந்தித்திணிப்பை எதிர்க்க வேண்டும். ஏனெனில் நம்மூர் முனுசாமியின் பிள்ளைகளுக்கு தமிழ் தவிர்த்து ஆங்கிலம் என்கிற ஒரே ஒரு மொழியை கூடுதலாக கற்கவே ‘ததிங்கிணத்தோம்’ போட வேண்டியிருக்கிறது. பத்தாங்கிளாஸில் இங்கிலீஷில் பார்டரில் பாஸ் செய்பவர்கள்தான் நம்மூரில் அதிகம். அப்படியிருக்க கூடுதல் சுமையாக இந்தியும் கட்டாயமெனில் பொதுத்தேர்வுகளில் தோல்வியைத் தழுவுபவர்களின் சதவிகிதம் கூடுதலாகும். பட்டம் படிக்கும் கூட்டம் சுத்தமாக குறையும்.
வட இந்தியாவில் பெரும்பான்மையானோருக்கு தாய்மொழி இந்தி என்பதால் அவர்கள் இந்தி படிக்கிறார்கள். எதிர்காலத்தில் நீங்கள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே நீங்கள் தமிழும் படித்து பாஸ் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா?
கோடைவிடுமுறையைக் கூட விட்டு வைக்காமல் கோச்சிங் சென்டர்களுக்குப் போகும் நகர்ப்புற குழந்தைகள் வேறு. சத்துணவு கிடைக்கிறதே என்று பள்ளிகளுக்கு அனுப்பப்படும் கிராமப்புற பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் வேறு. கூலிவேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகளும், வங்கியில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளும் வேறு வேறு. இந்த வர்க்க வேறுபாட்டின் இடைவெளி அவ்வளவு சீக்கிரமாக சுருங்கிடப்போவதில்லை. கல்வி மட்டுமே கரைசேர்க்கும் கலங்கரை விளக்கம். இரு வர்க்கத்தினரின் குடும்பச்சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமுண்டு. இந்த அடிப்படையை புரிந்துக்கொள்ள முடிந்தால், “ஸ்கூல்லே இந்தி கத்துக் கொடுத்திருந்தா நான் டெல்லி போயி புடுங்கியிருப்பேன்” என்று யாரும் பேசமாட்டார்கள்.
மொழி என்பது அறிவல்ல. தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம். அறிவுச்செல்வத்தை கைபற்றியவன் இந்தியென்ன, சிந்தியைக்கூட தேவை ஏற்பட்டால் சுலபமாக கற்றுக்கொள்வான். அறிவு வளர தாய்மொழிக்கல்விதான் சிறந்தது என்று கல்வியாளர்கள் பலகாலமாக கூவிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமகால உதாரணமாக தாய்மொழி கல்வி வழக்கத்தில் இருக்கும் நாடுகள் தொழில்ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னேறியிருப்பதை கைகாட்டுகிறார்கள். ஆங்கிலமே அறியாத சீனர்கள் கணினித்துறையில் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகிறார்கள்.
இந்தியை பிரைவேட்டாக படிப்பதை யாரும் தடுக்கவில்லை. மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் தன்னுடைய தனிப்பட்ட தேர்வாக மொழிப்பாடமாக இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, பிரெஞ்சையோ எடுத்துக்கொள்வதற்கும் யாரும் தடைவிதிக்கவில்லை. எனவே இங்கு வேறு மொழிக்குத் தடை என்பதைப்போல யாரும் பாசிஸ்ட்டுகளாக செயல்படவில்லை.
‘மொழித்திணிப்பு’ என்பதைதான் ஏற்க மறுக்கிறார்கள். நூற்றி பத்து டிகிரி வெயில் அடிக்கிறது. தொடர் மின்வெட்டு வேறு. ஏ.சி.யுமில்லை. ஃபேனுமில்லை. நீங்கள் கட்டாயமாக கம்பளி போர்த்துக்கொண்டுதான் தூங்கவேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை. பரவாயில்லை. நான் கம்பளி போட்டுக்கொண்டுதான் தூங்குவேன் என்று நீங்கள் விருப்பப்பட்டால் அதை யாரும் இங்கே தடுக்கவில்லை.
மொழிப்போர் புரிந்து இந்தியைத் தடுத்த தமிழினத் தலைவர்களின் சந்ததியினர் மட்டும் இந்தி கற்றுக் கொள்கிறார்களே என்று தங்களுடைய அறிவுமந்தத்தை அடிக்கடி காட்டுகிறார்கள் சிலர். தமிழினத் தலைவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கே போகவில்லையென்றால் கூட அவர்களுக்குப் பிரச்சினையில்லை. நமக்கெல்லாம் அப்படியா. பட்டம் பெற்றால் மட்டும் போதாது. மேற்பட்டம் பெறவேண்டும். தொழில்தொடர்பான குறுங்கால பயிற்சிகளை பெறவேண்டும் என்று வேலைச்சந்தையில் எத்தனை எத்தனை எதிர்ப்பார்ப்புகள். குறைந்தபட்ச கல்வியறிவினை பெறவேண்டிய நிலையில் இருக்கும் சமூகம் மொழித்திணிப்பால், போதிய அறிவினைப் பெறமுடியாமல் போனால் யாருக்கு இழப்பு. பணக்கொழுப்பால் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் நகர்ப்புற பெற்றோரான நாம், நம் அறிவீனத்தால் கிராமப்புறங்களில் கல்விக்கு அரசையே சார்ந்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவது தவறு. அவர்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களின், செயற்பாட்டாளர்களின், கல்வியாளர்களின் கருத்துகளை போகிற போக்கில் கேலி பேசிவிட்டுச் செல்வது என்பது முட்டாள்த்தனம்.
இப்போது தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில மீடியம் கொண்டுவருவதையும் இதே அடிப்படையில்தான் கல்வியாளர்கள் எதிர்க்கிறார்கள். அறிவில் வர்க்க வேறுபாடு கூடாது என்று சமச்சீர்க்கல்வி கொண்டுவரச்சொல்லி போராடிய கல்வியாளர்களின் முதல் கோரிக்கை தாய்மொழிக்கல்வியாகதான் இருந்தது. அரையும் குறையுமாக திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர்க்கல்வியே கூட அவர்களை முழுமையாக திருப்திபடுத்தவில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில மீடியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி அரசுப்பள்ளிகள் பலவற்றிலும், அரசு உதவியோடு நடத்தப்படும் பள்ளிகளிலும் சமச்சீர்க்கல்வி முறையிலும் கூட இருக்கிறது.
விவரம் தெரியாத நம் மக்களுக்கு ஆங்கிலமோகம் அதிகம். ஆங்கிலத்தை அறிவாக நினைக்கிறார்கள். ஆங்கிலம் பேசுபவன் விவரமானவன் என்று நம்புகிறார்கள். பத்தாவதில் ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனை கூட ப்ளஸ் ஒன் சேர்க்கும்போது ஆங்கில மீடியத்தில் சேர்த்து உருப்படாமல் போகவைக்கும் சாதனையை தொடர்ச்சியாக செய்துவருபவர்கள் நம் பெற்றோர். தொடக்கக்கல்வியிலேயே ஆங்கில மீடியம்தான் என்றால், விவரம் தெரியாத குழந்தைகளை அதில் சேர்த்து அவர்களது எதிர்காலத்தை தங்கள் அறியாமையால் நாசப்படுத்ததான் செய்வார்கள். வீட்டில் பேசும் மொழி தமிழாக இருக்க, பள்ளியில் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் கணிதத்தையும் அறிவியலையும் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள். ஆங்கிலத்தின் அடிப்படைகளை பள்ளியில் ஒரு மாணவன் அறிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக ஏற்கனவே ஆங்கிலம் மொழிப்பாடமாக இருப்பதே போதுமானது இல்லையா?
தாய்மொழிக்கல்வி என்பது தாய்ப்பால் மாதிரி. வேற்றுமொழிக்கல்வி புட்டிப்பால் மாதிரி. வேற்றுமொழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகள் தங்கள் பாடங்களை புரிந்துகொள்கிறார்களா என்பது கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். நகர்ப்புற பெற்றோருக்கு இது சாத்தியமே. போதுமான படிப்பறிவில்லாத பெற்றோருக்கு பிறந்த ஊரகப்பகுதி குழந்தைகளுக்கு இந்த கண்காணிப்புக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை. எனவே அவர்களுக்கு தங்கள் பாடங்களின் அடிப்படையையே புரிந்துகொள்ள முடியாமல் படிப்பு கசக்க ஆரம்பித்துவிடும்.
நர்சரி கான்வெண்டுகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் அரசுப்பள்ளிகள் போட்டியை ஏற்படுத்தவேண்டும் என்கிற அதிமுக அரசின் ஆதங்கம் நியாயமானது. ஆனால் தனியார் பள்ளிகளின் அடிப்படை நோக்கம் பணமாக இருக்கிறது. அரசு பள்ளிகளை நடத்துவது மக்களுக்கான சேவை. வியாபாரிகளிடம் போய் உயரிய நோக்கத்தோடு சேவை செய்யும் அரசாங்கம் ஏன் போட்டியிட வேண்டும். வேண்டுமானால் தனியார் பள்ளிகளை விட சிறப்பான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும், சிறப்பான கல்விச்சூழலையும் குழந்தைகளுக்கு தந்து தனியாரின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தலாம். அடம்பிடித்து ஆங்கில மீடியத்தை அதிமுக அரசு கொண்டுவருமேயானால், அது எதிர்கால தலைமுறையின் அறிவுவேரில் வெந்நீரை ஊற்றும் செயலாகவே முடியும்.