11 ஜூன், 2013

மழைக்காதலர்

தொண்ணூறுகளின் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வாழ்வின் அதிகபட்ச லட்சியமாக அது இருந்தது. யமஹா. அவருக்கும் அதுதான் கனவு. செகண்ட் ஹாண்டிலாவது ஒரு பைக் வாங்கிவிட வேண்டும். கிடைத்த சொற்ப சம்பளத்தின் ஒரு பகுதியை யமஹாவுக்காக சேமிக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் எங்காவது பைக் விற்பனைக்கு வருகிறதா என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த திடீர் திருமணம். அவருடன் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஒரு நண்பரின் காதல் திருமணம். நண்பரிடம் திருமணச் செலவுகளுக்கு நயா பைசா இல்லை.

“செலவுக்கு என்னடா பண்ணுவே? இதை வெச்சுக்க. முடியறப்போ திருப்பிக் கொடு” தன் கனவுக்காக சேர்த்து வைத்த பணத்தை, எந்த நெருடலுமின்றி அப்படியே எடுத்துக் கொடுத்தார்.

கேள்விப்பட்ட கதைதான். ஆனாலும் உண்மைக்கதை. இதுமாதிரி அவரைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. சசிகுமார் நடிக்கும் படங்களைப் பார்க்கும்போது, இம்மாதிரி கேரக்டர்கள் நிஜமாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று சந்தேகம் வரும். இவரைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் எனும்போது நட்பு, செண்டிமெண்ட் எல்லாம் சினிமாவில் மட்டும் இல்லை. நம் வாழ்விலும் இவரைப் போன்றவர்களிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கை பிறக்கும். உலகத்தில் இன்னும் மனிதர்கள் வாழ்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் அவர் அவுட்ஸ்டேண்டிங் ஜர்னலிஸ்ட். அவருடன் சமகாலத்தில் அதே திட்டத்தில் பணியாற்றியவர் சொன்னார். “நிறைய எழுதினாதான் அவுட்ஸ்டேண்டிங்கா செலக்ட் பண்ணுவாங்கன்னு நானெல்லாம் நம்பிக்கிட்டிருந்தேன். அதனாலே கிடைச்ச மேட்டரையெல்லாம் தேத்தி நிறைய எழுதினேன். என்னோட பீரியட்லே எண்ணிக்கையிலே நான் செஞ்சுரியைத் தொட்டேன். ஆனா அவன் எழுதினது ரொம்ப குறைவு. அதிகபட்சம் பதினஞ்சி கட்டுரை இருக்கலாம். ஆனா அதுலே பெரும்பாலானவை கவர்ஸ்டோரி. நான் எதிர்ப்பார்த்த மாதிரியே எனக்கு அவுட்ஸ்டேண்டிங் கிடைச்சுது. வொர்க் குவாலிட்டிக்கு மரியாதையா அவனும் அவுட்ஸ்டேண்டிங்கா வந்தான்” மாணவப் பருவத்திலேயே தகுதியான பத்திரிகையாளர் அவர்.

இளைஞர்களிடம் நட்பு பாராட்டுவதிலும், உரையாற்றுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். எந்தவொரு வெற்றிகரமான பத்திரிகையாளரிடமும் இதே பண்பு இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். அனுபவத்திலும், வயதிலும் குறைந்தவர்களிடம் உரையாற்றுவதைவிட அலுப்பான விஷயம் வேறெதுவுமில்லை. பெரும்பாலும் நாமறிந்த செய்திகளையே நம்மிடம் அபத்தமான வடிவில் சொல்வார்கள். ஆனால் அதற்காக அலுத்துக் கொள்பவர்கள் ‘ஜெனரேஷன் கேப்’ வியாதியால் பீடிக்கப்பட்டு விரைவில் காணாமலும் போய்விடுவார்கள். அவரிடம் படு அபத்தமாக உரையாற்றியிருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் இன்றுவரை அதே பாசத்தினை சுருதி மாறாமல் காட்டி வருகிறார். அவருடைய ஆயுதமே அன்புதான். அன்பைவிட வன்முறையான ஆயுதம் வேறு ஏது. எதிரிகளை மட்டுமல்ல. சமயத்தில் நண்பர்களையும் தாக்கும் ஆயுதம் இது. பதில் தாக்குதலுக்கு வாய்ப்பேயில்லை. சரண்டர் ஆவது மட்டுமே ஒரே வழி.

பத்திரிகைப் பணி என்பது ரிலே ரேஸ் மாதிரி. நம்முடைய ஓட்டத்தை முடித்துக்கொண்டு, அடுத்தவனிடம் டார்ச்சை சரியான நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். அவரிடம் ‘டார்ச்’ வாங்கி இப்போது இத்துறையில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். கால் மேல் கால் போட்டு வேடிக்கை பார்க்கக்கூடிய உயர்நிலைக்கு உயர்ந்தபிறகும், அவரும் கூடவே கையில் டார்ச்சோடு ஓடிவந்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

‘உலகம் ஒரே கிராமம்’ காலக்கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இச்சூழலில் சுயநலமே பிரதானம். எம்.ஜி.ஆர் படங்களில் வில்லன்களாக வந்தவர்கள்தான் இப்போது ஹீரோக்கள். தலைமுறை தலைமுறையாக நமது கலாச்சாரம் காத்துவந்த அடிப்படை மனித மதிப்பீடுகளுக்கு இப்போது எந்த மதிப்புமில்லை. ‘வெல்விஷர்’ என்கிற கேரக்டரே இப்போது யார் வாழ்விலும் இல்லை. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் ஏராளமானோருக்கு இவர் இன்னமும் வெல்விஷராக இருக்கிறார் என்பதுதான் அவரது சாதனைகளிலேயே உச்சபட்ச சாதனை.

முன்பெல்லாம் மழை வந்தால் மயில்தான் ஞாபகத்துக்கு வரும். இப்போது கண்ணன் சார் நினைவுக்கு வருகிறார். எல்லாவற்றுக்கும் ரசிகர். குறிப்பாக மழைக்கு மகாரசிகர்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணன் சார்!

7 ஜூன், 2013

உள்ளத்தில் ஒளி இருந்தால்...

நம்மைச் சுற்றி நம்பிக்கைகள் பொய்க்கும் அவலமான காலம்.. கிளியூர் கொளஞ்சி, க்காரிருளில் தன் ஒளியிழந்த கண்களால் ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறார்!


இப்போ வாசி, பார்க்கலாம்தோளைத்தொட்டு முதல்வர் எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
மடமடவென்று மீண்டும் வாசிக்கத் தொடங்குகிறார் கொளஞ்சி. எம்.ஜி.ஆருக்கு சந்தேகம். ஒருவேளை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிக்கிறாரோ என்று. அதனால்தான் சில தாள்களை வேண்டுமென்றே திருப்பிவிட்டு மீண்டும் வாசிக்க சொன்னார். அதையும் முன்பைவிட வேகமாக கொளஞ்சி வாசித்ததுமே முதல்வருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தலையை தொட்டு ஆசிர்வதிக்கிறார். “அந்த தொடுகை இயேசுநாதரின் ஸ்பரிசம் போல எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியதுஎன்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுபடுத்திக் கொண்டு இப்போதும் சிலிர்க்கிறார் கொளஞ்சி.
சம்பவம் நடந்த இடம் திருச்சி புத்தூர் பார்வையற்றோர் பள்ளி. பிரெயில் முறையில் அச்சிடப்பட்ட பாடத்தைதான் முதல்வருக்கு முன்பாக வாசித்துக் காட்டினார் கொளஞ்சி. மாற்றுத் திறனாளிகள் மீது மகத்தான அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர். அன்று முழுக்க அவர் அங்குதான் தன் நேரத்தை செலவிட்டார்.
அடுத்து ஓட்டப்பந்தயம். வெல்பவர்களுக்கு எம்.ஜி.ஆர் கையால் பரிசு. மீண்டும் எம்.ஜி.ஆர் தன்னை தொடவேண்டும் என்பதற்காகவே, அதுவரை ஓடியே பழக்கமில்லாத கொளஞ்சியும் ஆர்வத்தோடு ஓடினார். வென்றார். ஆசைப்பட்டது மாதிரியே எம்.ஜி.ஆர் அவரது தலையை தடவிக்கொடுத்து பரிசளித்தார். “நல்லா படிச்சி பெரியாளா வரணும். மக்களுக்கெல்லாம் உதவணும்” எம்.ஜி.ஆர் அன்று இவ்வாறு சொல்லி ஊக்கப்படுத்தியது கல்லில் உளியால் செதுக்கிய எழுத்துகளாய் கொளஞ்சியின் நெஞ்சில் பதிந்தது.
“அப்போது பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு விமரிசையாக கொண்டாடியது. சென்னை ராஜாஜி ஹாலில் மாநிலம் தழுவிய பேச்சுப்போட்டி. எம்.ஜி.ஆர் பரிசளிப்பார் என்பதற்காகவே அந்தப் போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பினேன். என்னவோ தெரியவில்லை. அப்போதிருந்த தலைமையாசிரியருக்கு என் மீது ஏதோ வருத்தம். பள்ளி சார்பாக அனுப்ப முடியாது என்று மறுத்தார்.
தனிப்பட்ட முறையில் அப்பாவின் உதவியோடு சென்னைக்கு வந்தேன். பேசினேன். பரிசு பெற்றேன். இப்போதும் அதே தொடுகை. அதே வார்த்தை. ‘மக்களுக்கெல்லாம் உதவணும்’ எம்.ஜி.ஆர் சொன்ன அந்த மந்திரத்தைதான் இன்றும் பின்பற்றுகிறேன். அவர் கொடுத்த ஊக்கம்தான் என்னை வழிநடத்துகிறது” என்கிறார் நாற்பத்தி மூன்று வயதான கொளஞ்சிநாதன்.
கிளியூரின் கண்கள்
பின் தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் அமைந்திருக்கும் குக்கிராமம் கிளியூர். பெரம்பலூரிலிருந்து ஒரே ஒரு டவுன்பஸ் 1-பி மட்டும் அவ்வப்போது வந்து போகிறது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு சற்று முன்னதாக சின்னாறு என்றொரு ஊர். சர்க்கரை ஆலை ஒன்று இங்கே இருக்கிறது. வலப்பக்கமாக திரும்பி குறுகிய சாலையில் போய்க்கொண்டே இருந்தோமானால் பெருமாத்தூர், எறையூர் என்று ஏராளமான சிற்றூர்கள். எறையூர் தாண்டி வலப்பக்கமாக உள்ளே போனால் கிளியூர். மாவட்ட மேப்பில்கூட குறிப்பிடமுடியாத அளவுக்கு சின்ன ஊர். கொளஞ்சி பிறந்தது இந்த ஊரில்தான். இன்னமும் அடிப்படை வசதிகள் பூர்த்தியடையாத வழக்கமான தமிழ் கிராமம்.
கல்லும் முள்ளுமாக இருக்கும் சாலையில் மூத்தமகன் ஜெகநாதனின் கைப்பிடித்து நடக்கிறார் கொளஞ்சி.
“என்ன மாமா, நல்லாருக்கீங்களா?” எதிர்ப்படும் பெண் ஒருவர் நலம் விசாரிக்கிறார்.
“நான் நல்லாருக்கேன். வீட்டுலே எல்லாரும் சவுக்கியம்தானா.. கரெண்டு பில்லு கட்டினீங்களா இல்லையா.. தேதி ஆயிடிச்சே?”
“எப்பவும் கரெண்டு கட்டாகிதானே கெடக்குது.. அதைப்போயி என்னாத்துக்கு கட்டுறது?”
“கரெண்டு ரெகுலரா வருதோ, இல்லையோ கரெக்டா கட்டிடணும். பீஸ் புடுங்கிட்டான்னா திரும்ப கனெக்‌ஷன் வாங்குறதுக்குள்ளே உசுரு போயிடும். அட்டையை கொண்டாந்து கொடு. வேப்பூர் பக்கமாதான் போறேன். கட்டிட்டு வந்துடறேன்” ஏற்கனவே கொளஞ்சியின் கையில் பத்துக்கும் மேற்பட்ட மின்கட்டண அட்டைகள்.
மின்கட்டணம் கட்டுவது மட்டுமல்ல. பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, இயற்கை மரண நிதியுதவி, முதியோர் பென்ஷன், திருமண உதவி, பிரசவ உதவி என்று அரசு தொடர்பான அனைத்து உதவிகளையும் கிளியூர் மக்களுக்கு செய்துத்தருகிறார். பெரும்பாலானவர்கள் பாமரர்கள் என்பதால் மனு எழுதுவது, அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு சமர்ப்பித்து, வேலை முடித்துக் கொடுப்பது வரை எல்லாவற்றுக்குமே கொளஞ்சிதான். மொத்தத்தில் அரசுக்கும், கிளியூர் மக்களுக்கும் இடையே இன்று இவர்தான் பாலம்.
பார்வை எதுக்கு.. பாசம் இருக்கு!
பிறவியிலே இக்குறைபாடு இல்லை. பிறக்கும்போது கொளஞ்சிக்கு பார்வை இருந்தது. மூன்று வயதாக இருக்கும்போது மஞ்சக்காமாலை. படிக்காத பெற்றோருக்கு முறையாக மருத்துவம் செய்யத் தெரியவில்லை. அதற்கான வசதிகளும் அவர்களுக்கு இல்லை. பக்கத்து கிராமம் ஒன்றில் நாட்டு மருத்துவரை அணுகியிருக்கிறார்கள். அவர் கொளஞ்சியின் கண்ணில் ஏதோ சொட்டுமருந்து மாதிரிவிட, அதன் பக்கவிளைவால் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை மங்க ஆரம்பித்தது. ஊர் ஊராக ஏதேதோ வைத்தியர்களை நாடினார்கள். முன்னேற்றம் சற்றுமில்லை. கடைசியாக கொளஞ்சிக்கு ஏழு வயதாக இருந்தபோது ஒரு நாட்டு வைத்தியரிடம் சிகிச்சைக்காக போனார்கள். அவரும் தன் பங்குக்கு ஏதோ ஒரு மருந்தை கண்ணில்விட அன்றுதான் மொத்தமாக பார்வை பறிபோனது.
“கடைசியாக அந்த மருந்து என் கண்ணில் விழும்போது ஒருமாதிரி வெளிச்சம் தெரிந்தது. அதே வெளிச்சம்தான் இப்போ வரைக்கும் எனக்கு இருக்கு. இருட்டிலும் கூட என் கண்களுக்கு மட்டும் அந்த வெளிச்சம் நிரந்தரமா இருந்துக்கிட்டே இருக்கும். எதிரிலே யாராவது வந்தீங்கன்னா லேசா நிழலாடறமாதிரி தெரியும்”
பார்வையில்லாதவர் என்பதால் இவரை பரிதாபமாக ஊர் நடத்தவில்லை. மற்ற பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்வார்களோ, அதேமாதிரிதான் இவரிடமும் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். “கண்ணு தெரியாதுங்கிறதாலே கடை கண்ணிக்கு அனுப்பமாட்டோம்னெல்லாம் இல்லை. டேய் தம்பி. ஓடிப்போய் தெருமுனை கடைக்கு போயி வெத்தலைப்பாக்கு வாங்கியாடான்னு அனுப்புவோம். ஓடுவான். இந்தமாதிரி இயல்பா நடத்துனதாலே தனக்கு குறை இருக்கிறமாதிரியே கொளஞ்சி உணர்ந்ததில்லை” என்கிறார் அவருடைய சித்தப்பா ரங்கசாமி.
“எங்க ஜனங்களுக்கு படிப்பு இல்லாம இருக்கலாம். ஆனா இவங்களுக்கு இருக்குற பண்பு உலகத்துலே வேற யாருக்கும் இருக்காது” என்று தன் ஊர்க்காரர்களை பெருமிதமாக அறிமுகப்படுத்துகிறார் கொளஞ்சி. பார்வை இல்லை என்பதைப் பற்றி இவருக்கு கவலை எதுவுமில்லை. ஊர்க்காரர்கள் இவர்மீது காட்டும் பாசத்தை எப்படி திருப்பிச் செலுத்துவது என்றே தெரியவில்லை என்கிறார்.
படிப்பு மீது ஆர்வம்
திருச்சி புத்தூர் பார்வையற்றோர் பள்ளியில்தான் ஆரம்பப்பாடங்களை படித்தார். பிரெய்லி முறையில் வாசிக்க கற்றுக்கொண்டார். அங்குதான் முதன்முறையாக எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘நல்லா படிக்கணும்’ என்கிற எம்.ஜி.ஆரின் கட்டளையை நிறைவேற்ற கடுமையாக படிக்க ஆரம்பித்தார். மேல்நிலை கல்விக்காக பூந்தமல்லியில் இருந்த அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு வந்தார்.
வெற்றிகரமாக +2 முடித்தபின் லயோலா கல்லூரியில் பி.ஏ. (தமிழ்) சேர்ந்தார். இலக்கியம் மீது ஆர்வம் கூடியது. சொந்தமாக கவிதை எழுதி, மெட்டமைத்து பாடும் திறன் பெற்றார். இங்கிருந்த பார்வையற்றோர் சங்கங்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார். உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களில் கொளஞ்சியின் கோஷம் தனித்துக் கேட்கும்.
இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் ஊரில் இருந்து இடியாக இறங்கியது அச்செய்தி. அப்பாவின் திடீர் மரணம். தரை நழுவி பிடிமானமே இல்லாததைப் போல உணர்ந்தார் கொளஞ்சி.
வாழ்வா, சாவா பட்டிமன்றம்
குடும்பப் பாரத்தை தோள் மீது சுமக்க, பெரும் மனச்சுமையோடு கல்வியை கைவிட்டார். அப்போதெல்லாம் பார்வையற்றவர்கள் வழக்கமாக பார்க்கும் வேலைதான். லாட்டரி டிக்கெட் விற்பனை. கொளஞ்சிக்கு இதில் விருப்பமில்லை. ஒருமாதிரியாக அவருக்கு மனச்சாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட இத்தொழில் ஒரு சூதாட்டம். பல குடும்பங்களின் நிம்மதியை கெடுக்கிறது. விரைவில் இதில் இருந்து வெளிபட வேண்டும். ஒருநாள் மனவுளைச்சல் அதிகமாக தொழிலை விட்டு விட்டார். வறுமை கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியது. தன்னுடைய வயிற்றுப் பசிக்கே வழியில்லாத நிலையில், குடும்பத்தை எப்படி காப்பாற்ற முடியும்?
அப்போது சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் டெலிபோன் பூத் நடத்திக் கொண்டிருந்த பார்வையற்றவர் ஒருவர் திடீர் மரணம் அடைந்தார். அந்த பூத்தை கேட்டு நிறைய பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் கொளஞ்சியும் ஒருவர். தினம் தினம் டெலிபோன் அலுவலகத்துக்கு நடையாக நடந்தார். ஒருக்கட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் பலரும் ஆர்வமிழந்துவிட கொளஞ்சியின் விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி. “உன்னுடைய தொடர்ச்சியான முயற்சிக்குதான் இந்த டெலிபோன் பூத்தை உன்னிடம் கொடுக்கிறேன்” என்றார் அங்கிருந்த தொலைபேசித்துறை பொதுமேலாளர்.
“சார், சாவா வாழ்வான்னு என் வாழ்க்கையில் பட்டிமன்றம் நடந்துக்கிட்டிருந்தது. நீங்க வாழச்சொல்லி தீர்ப்பு கொடுத்திருக்கீங்க” என்று அவருக்கு நன்றி சொன்னார்.
திடீர் கல்யாணம்
“மாமா. எனக்கு வீட்டுலே கல்யாணம் பேசுறாங்க. ஏதாவது செய்யுங்க” திடீரென்று தாய்மாமன் மகள் உமா போனில் சொன்னபோது கொளஞ்சிக்கு ஒன்றும் புரியவில்லை.
“நான் என்னம்மா செய்யுறது.. கல்யாணம் நல்ல விஷயம்தானே?”
“அய்யோ மாமா. உனக்குப் புரியலை. உன்னோட டெலிபோன் பூத்தை நேர்லே பார்க்குறதுக்குன்னு சொல்லிட்டு நான் வர்றேன்”
சொன்னமாதிரியே வந்தார் உமா. வழக்கமாக கண்ணுக்கு முன்னால் யாராவது வந்தால் கொளஞ்சிக்கு நிழலாடும். அன்று மட்டும் பிரகாசத்தை உணர்ந்தார். அங்கிருந்து தன் வீட்டுக்கு போன் செய்தார் உமா.
“எனக்கும் மாமாவுக்கும் மெட்ராசுலே கல்யாணம் ஆயிடிச்சி”
உமாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியோ இல்லையோ.. கொளஞ்சிக்கு பயங்கர அதிர்ச்சி. இருவரும் அதற்கு முன்பாக திருமணம் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதில்லை. உமா தன்னை காதலிக்கிறார் என்பதைக்கூட கொளஞ்சி அறிந்திருக்கவில்லை. மாமாவைதான் கட்டவேண்டும் என்று சிறுவயதில் இருந்தே உமாவுக்கு எண்ணம் இருந்திருக்கிறது. அவரது பெற்றோருக்குதான் இவருக்கு பெண் கொடுக்க தயக்கம். எனவேதான் திருமணம் ஆகிவிட்டதாக பொய் சொன்னார். வேறு வழியின்றி பெரியவர்கள் கூடிப்பேசி பின்னர் திருமணம் நடத்தினார்கள்.
“எங்களோட மேரேஜ் லவ் மேரேஜெல்லாம் கிடையாதுங்க. என்னோடவே காலம் முழுக்க இருக்கணும்னு அவங்க ஆசைப்பட்டிருக்காங்க. அவ்ளோதான்” சொல்லும்போது கொளஞ்சியின் குரலில் லேசான வெட்கம்.
நல்லறமான இல்லறத்துக்கு சாட்சியாக இப்போது ஜெகநாதன், வெற்றிக்கொடி, முல்லைநாதன் என்று மூன்று மழலைச் செல்வங்கள்.
ஊருக்கு திரும்பினார்
பூந்தமல்லிக்கு படிக்க வந்ததிலிருந்து சென்னையை சுற்றிதான் கொளஞ்சியின் வாசம். சொந்தமாக டெலிபோன் பூத், கல்யாணம், குழந்தை என்று வாழ்க்கை களைகட்டத் தொடங்கியது. செல்போன் பெருகிவந்த காலம் என்பதால் டெலிபோன் பூத்துகளுக்கு மவுசு குறைய, மீண்டும் வாழ்வியல் நெருக்கடி. திரும்பவும் தொழிலை மாற்றவேண்டும்.
இம்முறை ஆவடி ரயில்வே கேட்டுக்கு அருகில் ஒரு கடைபிடித்து ஃபேன்சி பொருட்கள் விற்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நல்ல வருமானம். ஆனால் கடைக்கு அங்கீகாரம் இல்லை. உள்ளூர் போலிஸார் தொல்லை. தினம் தினம் மாமூலாக, கிடைத்த லாபத்தை கட்டி அழவேண்டியிருந்தது. பார்வையற்றவர் என்பதால் சில லோக்கல் ரவுடிகளும் தங்களை போலிஸ் என்று சொல்லிக்கொண்டு மாமூல் வாங்க ஆரம்பித்தார்கள். வாழ்க்கையின் எல்லைக்கே துரத்திக் கொண்டிருந்தது விதி.
பட்டணம் வந்து கெட்டது போதும். ஊருக்குப் போய் பிழைப்பைப் பார்ப்போம் என்று குடும்பத்தோடு ஊர் திரும்பினார் கொளஞ்சி.
நீ என்ன ஏஜெண்டா?
பெரம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு ‘பங்க்’ கடை போட்டார். தினமும் பெரம்பலூர் வரை போய் வருவதால், கிளியூர்க்காரர்கள் தாலுகா அலுவலகத்துக்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் கொடுக்க வேண்டிய மனுக்களை இவரிடம் கொடுக்க ஆரம்பித்தார்கள். மனு கொடுப்பதோடு நின்றுவிடாமல், அதன்மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும் இவரே தன்னார்வத்தோடு பின்தொடர ஆரம்பித்தார். இவ்வகையில் சிலருக்கு கொளஞ்சியால் ‘முதியோர் பென்ஷன்’ கிடைக்க, ஊரில் கொளஞ்சியின் புகழ் பரவியது. எல்லாவற்றுக்குமே கொளஞ்சியிடம் வர ஆரம்பித்தார்கள். ‘மக்களுக்கெல்லாம் உதவணும்’ என்கிற எம்.ஜி.ஆரின் மந்திரச் சொற்கள் அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்குவர, முகம் சுளிக்காமல் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யத் தொடங்கினார்.
அந்தமாதிரி ஒருமுறை ஏதோ வேலைக்காக தாலுகா அலுவலகத்துக்கு செல்கிறார்.
“போனவாரம் ஒரு மனு கொடுத்திருந்தோம். அதோட நிலைமை என்னங்க?”
அங்கிருந்த அலுவலர் அன்று என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியவில்லை. “நீதான் உங்க ஊருக்கு ஏஜெண்டா... எல்லாத்துக்கும் நீயே வந்து அதிகாரம் பண்ணுறே...” என்று எகிற ஆரம்பித்துவிட்டார்.
மனவருத்தம் அடைந்த கொளஞ்சி ஊர் திரும்பினார். நடந்ததைச் சொல்ல ஊர் மக்களுக்கு கோபம். “உன்னை ஊருக்கு ஏஜெண்டான்னு கேட்டாங்க இல்லே. ஏஜெண்ட் ஆக்கிக் காட்டுறோம். அடுத்த எலெக்‌ஷனுலே நம்ம வார்டுலே நீ நில்லுப்பா” என்றார்கள்.
தேர்தலில் வென்றார்
2011 உள்ளாட்சித் தேர்தல் நேரம் அது. கொளஞ்சிதான் தங்கள் வார்டு வேட்பாளர் என்று கிளியூர்க்காரர்கள் உறுதியாக இருந்தார்கள். நன்னை ஊராட்சியில் கிளியூருக்கு இரண்டு வார்டுகள். முதல் வார்டில்தான் கொளஞ்சி வசிக்கிறார். துரதிருஷ்டவசமாக வார்டுகள் இரண்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட என்ன செய்வதென்று யோசித்தார் கொளஞ்சி.
“நீ நிக்கமுடியலைன்னா என்ன.. உன் பொண்டாட்டியை நிறுத்துப்பா.. எல்லா ஊர்லேயும் மகளிருக்கு ஒதுக்கப்படற இடங்களில் இப்படித்தான் நிறுத்துறாங்க” ஊர் இவரை விடவில்லை.
உமாகொளஞ்சிநாதன் பெயரில் மனுபோட்டு முடித்தவுடன்தான் தெரிந்தது எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யாரென்று. செல்வாக்கானவர். கூடவே அவர் கொளஞ்சிக்கு சகோதரிமுறையானவரும் கூட. நேராக அவரிடம் சென்றார் கொளஞ்சி.
“அக்கா! தேர்தல் வேற. நம்ம சொந்தம் வேற. ஜனங்களுக்கு நான் நல்லது பண்ணனுங்கிறதுக்காக தேர்தலில் நிக்க வெக்கிறாங்க. வெற்றி தோல்வி ஒரு புறம் இருக்கட்டும். நம்ம சொந்தத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லே...” என்று ஆரம்பத்திலேயே தெளிவாக பேசிவிட்டார்.
மொத்தம் 201 வாக்குகள் ஒன்றாவது வார்டில் பதிவாகியது. உமாவுக்கு 125 வாக்குகள். அமோக வெற்றி. இப்போது அரசு அலுவலகங்களுக்கு ஊரின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டாகவே கொளஞ்சி தன்னுடைய மனைவியோடு கம்பீரமாகப் போகிறார். உரிமைகளை தட்டிக்கேட்டு வாங்குகிறார். அரசின் திட்டங்கள் அத்தனையையும் ஆர்வத்தோடு அறிந்து வைத்துக் கொள்கிறார். அதில் எவை எவற்றை தன்னுடைய ஊருக்கும் மக்களுக்கும் பெற்றுத்தர முடியுமோ, அத்தனையையும் முயற்சிக்கிறார். யாரையும் சேராத தனிநபர் என்பதால் கட்சிப்பாகுபாடு சுத்தமாக இல்லை. அம்மாவின் தாயுள்ளம், கலைஞரின் தமிழ், கேப்டனின் தைரியம் என்று தலைவர்கள் அனைவருக்குமே ரசிகர் இவர்.
“மனுஷங்கள்லே நல்ல மனுஷன், கெட்ட மனுஷன்னு பாகுபாடே கிடையாதுங்க. மனுஷன்னாலே நல்லவன்தான். சூழ்நிலைதான் இப்படியெல்லாம் பிரிச்சி பார்க்கவும், பேசவும் வைக்குது” என்று டக்கென்று தத்துவம் சொல்கிறார்.
கூலிவேலைக்குப் போகிறார்
மக்கள் பிரதிநிதி
உமாகொளஞ்சிநாதன் தேர்தலில் வென்று இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இடையில் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கொளஞ்சியின் பெட்டிக்கடைக்கு பிரச்சினை. நகராட்சி கமிஷனரே அனுமதி கொடுத்தும்கூட அலுவலர்களால் தொல்லை. வளர்ச்சித்திட்டம் என்றுகூறி இப்போது கடையையே திறக்க முடியாதபடி, எதிரே பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். மாற்று இடமும் இன்னும் வழங்கப்படவில்லை.
வருமானம் இல்லையென்பதால் உமா கூலிவேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார். கட்டிடவேலை, ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டம் என்று சொற்பமான வருமானம். கணவன், மனைவி, மூன்று குழந்தைகள் என்று வாய்க்கும், வயிறுக்குமே பற்றாக்குறைதான். வசிக்கும் வீடும் பரம்பரையான மிகப்பழமையான ஓட்டு வீடு. இடிந்துவிழும் நிலையில் பாழடைந்து கிடக்கிறது. ஆனாலும் உமாவுக்கோ, கொளஞ்சிக்கோ கொஞ்சமும் சலிப்பில்லை.
“மாமா எதை செய்தாலும் நாலு பேருக்கு நல்லதாதான் செய்வாரு. அதாலே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கறோம்” என்கிறார் உமா.
“வீடு இவ்வளவு மோசமா இருக்கே.. தொகுப்பு வீடு, பசுமைவீடுன்னு அரசிடம் எவ்வளவோ திட்டங்கள் இருக்கு. நீங்க விண்ணப்பிக்கலாமே சார்?”
“ஊருக்குன்னுதான் இதுவரைக்கும் கேட்டுப்போய் நின்னிருக்கேன். அதனாலேதான் எங்க மாவட்ட கவுன்சிலர் கூட ‘இவரை மாதிரி மத்தவங்களும் செயல்படுங்க’ன்னு என்னை எல்லாத்துக்கும் உதாரணம் காட்டுறாங்க. எனக்குன்னு போயி கேட்டா அது நல்லாருக்காதுங்க. நான் வசிக்கிற கிழக்குத்தெருவில் தண்ணீ எப்பவுமே பிரச்சினைதான். மழைக்காலம் வந்தா வெள்ளம். வெயிலு காலத்திலே குடிநீர்ப் பஞ்சம். அப்புறம் ஊருக்கு கூடுதலா பஸ் வரவைக்க முயற்சிக்கணும். ரோடெல்லாம் எவ்வளவு மோசமா இருக்குப் பாருங்க. இன்னும் ஊருக்கு பார்க்க வேண்டிய வேலையே நிறைய பாக்கியிருக்கு” என்கிறார் கொளஞ்சி.
அவருக்காக கேட்க கொளஞ்சிக்கு தயக்கமிருக்கலாம். ஆனால் நாம் உரிமையோடு கேட்கலாம். ஊருக்காக உண்மையாக உழைக்கும் ஒரு மக்கள் சேவகர் கவுரவமான வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டுமோ அதை அரசு செய்துத்தரவேண்டும். கருணையுள்ளம் கொண்டவர் நம் தமிழக முதல்வர். செய்துத்தருவார் என்று நம்பலாம். தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளால், மக்கள் நலத்துக்காக பணியாற்றும் ஒருவர் சலிப்படைந்துவிட்டால் இழப்பு அவருக்கல்ல. சமூகத்துக்குதான்!

கொளஞ்சியைப் பற்றி கிளியூர்க்காரர்கள்...
பெரியசாமி, ஊர்க்காரர்
சின்னவயசுலே இருந்தே கொளஞ்சிக்கு ஊர்ப்பாசம் அதிகம். ஜனங்க அவரை நல்லப்படியா நடத்துனாங்க, அதுக்கு நன்றிக்கடனா ஊருக்கு ஏதாவது செய்யணுமேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அதுக்கு வாய்ப்பு கொடுக்கறமாதிரிதான் அவரோட மனைவியை எங்க பிரதிநிதியா தேர்ந்தெடுத்தோம்

கருப்பப்பிள்ளை, ஊர்ப்பெரியவர்
தேர்தலுங்கிறது சம்பாதிக்கிறதுக்கான வழி கிடையாது. ஊருக்கு உழைக்கக் கிடைச்ச வாய்ப்பு. தேர்தல்லே ஜெயிச்சப்புறம் கொளஞ்சிநாதன் நல்லா வேலை பார்க்குறாரு. அடுத்த தேர்தலில் அவரை ஊராட்சித்தலைவரா ஆக்குவோம்.

அருணாசலம், அதிமுக கிளைச்செயலாளர்
கட்சிப்பாகுபாடு இவருகிட்டே சுத்தமா கிடையாதுங்க. அதிமுக, திமுகன்னுலாம் பார்க்க மாட்டாரு. நியாயமான கோரிக்கையா இருந்தா அதை நிறைவேத்துறதுக்காக சிரமம் பார்க்காம உழைப்பாரு. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து, இந்தியா ஆதரிக்கணும்னு பிரச்சினையைப் பத்தி ஊர்லே பிரச்சாரம் பண்ணினாரு. எல்லாரு கிட்டேயும் கையெழுத்து வாங்கி கவர்னர், பிரதமர், குடியரசுத்தலைவருக்கு மனுவும் அனுப்பினாரு.

எம்.எல்.ஏ. பாராட்டு
குன்னம் தொகுதிக்கு உட்பட்டதுதான் கிளியூர். இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ்.சிவசங்கர்தான் தன் தொகுதிவாசியான கொளஞ்சியைப் பற்றி புதியதலைமுறையிடம் சொல்லியிருந்தார்.
“சார், கிளியூர்லேருந்து கொளஞ்சி பேசறேன்னு அடிக்கடி கணீர்னு போனில் குரல் கேட்கும். பொதுப்பிரச்சினைகளுக்கு மட்டும்தான் பேசுவார். உங்களுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார்னு கேட்பேன். எனக்கெதுவும் வேணாம். எங்க ஊர்ப்பிரச்சினைகளை மட்டும் சரி செஞ்சிக் கொடுங்கன்னு சொல்லுவாரு. அப்பப்போ குறிப்பா சில பிரச்சினைகளை என் பார்வைக்கு கொண்டு வருவாரு. பார்வையில்லாத நிலையில் பொதுப்பணிக்கு இவர் வந்தது பாராட்டுக்குரிய செயல். கிளியூருக்கு இவர்தான் ஒளிவீசும் கண்கள்” என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் எம்.எல்.ஏ.

புதிய தலைமுறை வாசகர்
கொளஞ்சி புதிய தலைமுறையை வழக்கமாக வாசிக்கும் வாசகர். பிரெயில் வடிவில் வெளியிடப்படும் ‘புதிய தலைமுறை’ இதழ் தொகுப்பை தொடர்ச்சியாக வாசிக்கிறார். நம்மிடம் சில கட்டுரைகளை நினைவுபடுத்தியும் பேசினார்.
“தங்களோட பத்திரிகையிலே வர்ற நல்ல கருத்துகளையும், கட்டுரைகளையும் பார்வையற்றோரும் வாசிக்கணும்னு வேற யாருமே நினைக்கலை. அந்த பெருந்தன்மை ‘புதிய தலைமுறை’க்கு மட்டும்தான் இருக்கு. இதுக்காக உங்க ஆசிரியருக்கும், நிர்வாகத்துக்கும் பார்வையற்றோர் சார்பில் என்னோட நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவிச்சிடுங்க சார்” என்றார்.

வாசகர்களோடு அவரது வாழ்த்தை ‘புதிய தலைமுறை’ பகிர்ந்துக் கொள்கிறது. நம் இருப்புக்கு என்றுமே அர்த்தமுண்டு!

(நன்றி : புதிய தலைமுறை)

5 ஜூன், 2013

மும்பை போலிஸ்!

படத்தின் டைட்டில்தான் ‘மும்பை போலிஸ்’. மற்றபடி இது எர்ணாகுளம் போலிஸின் கதை. அடாவடிக்கும் அராத்துத்தனத்துக்கும் பெயர் போனவர்கள் மும்பை போலிஸார். எர்ணாகுளம் போலிஸின் கமிஷனரும், அவருடன் இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்களும் ஓவராக அராத்து செய்ய, மீடியா இந்த குழுவுக்கு செல்லமாக ‘மும்பை போலிஸ்’ என்று பெயர் வைக்கிறது.

படத்தின் முதல் காட்சியே க்ளைமேக்ஸ்தான். ஏ.சி.பி.யான ஜெயசூர்யா கொலைவழக்கை, சக ஏ.சி.பி. பிருத்விராஜ் புலன்விசாரணை செய்கிறார். அவரது விசாரணையில் குற்றவாளி யாரென்று தெரிந்துவிடுகிறது. காரை ஓட்டிக்கொண்டே செல்போனில் கமிஷனர் ரகுமானிடம் யார் குற்றவாளி என்பதை விவரித்துக் கொண்டிருக்கும்போதே ஆக்ஸிடெண்ட். விபத்துக்குப் பிறகு பிருத்விராஜிக்கு முந்தைய நினைவுகள் பறிபோய் விடுகிறது. கொலைவழக்கை மீண்டும் முதலில் இருந்து துப்புதுலக்க வேண்டும். கூடுதலாக தன்னையும் தான் யாரென்று தெரிந்துக்கொள்ள வேண்டும். பரபரவென்ற ஆக்‌ஷன் மசாலாதான். ஆனால் ட்ரீட்மெண்டில் மாற்று சினிமாவுக்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

ரோஷன், மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர். 2005ல் இவரது முதல் படமான ‘உதயதானு தாரம்’. மலையாளப் பாரம்பரியம், குடும்பம், கொலைவழக்கை போலிஸ் துப்பு துலக்கும் கதை என்று குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த மலையாளத் திரையுலகை நாலுகால் பாய்ச்சலில் புதுமையான திரைக்கதைகளை நோக்கி பாயவைத்த படம். நடிகரும், இயக்குனருமான சீனிவாசன், மோகன்லாலை நக்கலடிக்க, மோகன்லாலையே நடிக்கவைக்க எழுதிய கதை இது என்பார்கள். அப்போது டல் அடித்துப் போயிருந்த மோகன்லாலின் திரையுலக வாழ்க்கையை மீண்டும் துளிர்விடச் செய்த படம். தமிழில் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் இதுதான் ‘வெள்ளித்திரை’ ஆக ரீமேக் ஆனது. ரோஷனுக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான கேரள அரசின் விருதும் கிடைத்தது.

mumbaipolice1
அடுத்து ரோஷன் இயக்கிய ‘நோட்புக்’ திரைப்படத்தின் போதுதான் சகோதரர்களாகிய பாபி, சஞ்சயின் நட்பு கிடைத்தது. கேரள இளைய சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளை திரைக்கதையில் சாமர்த்தியமாக கொண்டுவரும் புத்திசாலிகள். மலையாளத்தின் மெகாஹிட்டான ‘டிராஃபிக்’ (தமிழில் சென்னையில் ஒரு நாள்) இவர்களது கைவண்ணம்தான். ‘நோட்புக்’ திரைப்படம் கமர்சியலாகவும் பிக்கப் ஆகி, ஏராளமான விருதுகளையும் குவித்ததால், ரோஷனுக்கும் பாபி-சஞ்சய்க்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க்-அவுட் ஆனது. மலையாளத் திரையுலகின் கனவுப்படமான ‘காசனோவா’வுக்கும் இதே குழு இணைந்தது. மலையாளத் தயாரிப்பாளர்கள் மலைக்கக்கூடிய பட்ஜெட்டில் –பத்து கோடி- தயாரிக்கப்பட்ட ‘காசனோவா’ முதல்நாளே இரண்டரை கோடி வசூலித்து அசத்தியது. ஆனாலும் விமர்சகர்கள் கழுவிக் கழுவி ஊற்ற படத்துக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் பரவி அடுத்தடுத்த நாட்களில் படம் படுதோல்வி.


ரோஷம் வந்த ரோஷனுக்கு தேவை ஒரு சூப்பர் டூப்பர் ஹிட். காசனோவாவுக்கு முன்பே
rahman
 திட்டமிட்டிருந்த மும்பை போலிஸை தூசு தட்டி எடுத்தார். தனக்கு முக்கியத்துவம் தராமல் மோகன்லாலுக்கு இயக்கப் போய்விட்டதால், ரோஷனிடம் அப்போது முறுக்கிக் கொண்டிருந்தார் பிருத்விராஜ். எனவே மும்பை போலிஸில் மம்முட்டி ஹீரோவாக நடிக்கலாம் என்று மீடியாக்கள் செய்திகளை கசியவிடத் தொடங்கின. ஏனெனில் சி.பி.ஐ. டயரி குறிப்பு காலத்திலிருந்தே புலன்விசாரணை செய்வதில் கில்லி என்று பேரெடுத்தவர் மம்முட்டி. தமிழில் சக்கைப்போடு போட்டுக்கொட்டிருந்த சூரியாவுக்கும் மலையாளத்தில் பெருசாக ஓர் ‘எண்ட்ரி’ கொடுக்கவேண்டும் என்று நீண்டகால ஆசை. அனேகமாக மும்பை போலிஸாக அவரும் நடிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்தது. ஆனால் படத்தின் கதையை கேட்டபிறகு ஒருவேளை மம்முட்டியும், சூர்யாவும் நைசாக விலகிக்கொண்டிருப்பார்கள். பிருத்விராஜுக்கு மட்டுமே இந்த கேரக்டரின் மீது அப்படியொரு அசைக்கமுடியாத மோகம் இருந்தது. எனவே வேறு வழியில்லாமல் தனிப்பட்ட மனஸ்தாபங்களை மறந்து ரோஷனும், பிருத்விராஜும் இணைந்தார்கள்.


police
போலவே, ஜெயசூர்யா ரோலுக்கு முதலில் பேசப்பட்டவர் ஆர்யா. 2010ல் பூஜை போடப்பட்டபோது ஆர்யாவுக்கு தமிழில் அவ்வளவு பெரிய மவுசு இல்லை. பாலாவின் ‘நான் கடவுள்’ முற்றுமுதலாக அவரை உறிஞ்சி சக்கையாக்கியிருந்தது. படம் தாமதமான குறுகிய காலத்தில் தமிழில் ஆர்யாவுக்கு ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ சூப்பர்ஹிட்டாகிவிட, அடுத்தடுத்து பிஸியாகிவிட்டார். எனவே ஆர்யாவால், ரோஷன் கேட்ட தேதிகளில் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மோகன்லாலின் ‘காசனோவா’வுக்கு ஆசைப்பட்டுப் போனதால், இம்மாதிரி ஏகப்பட்ட குழப்படிகளை ரோஷன் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும் சப்ஜெக்டின் மீது நம்பிக்கை வைத்து, மனம் தளராமல் உழைத்தார். 2011 கிறிஸ்துமஸ் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த மும்பை போலிஸ், 2013 மே 3ஆம் தேதி ரிலீஸ் ஆனது. விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் திரும்பத் திரும்பத் திரையரங்குக்கு படையெடுக்கிறார்கள். இண்டஸ்ட்ரி ஹிட் என்பது உறுதியாகிவிட்டது. ரோஷனும், பிருத்விராஜும் பெருமூச்சு விடுகிறார்கள். ஸ்க்ரிப்ட்தான் தன்னை காப்பாற்றியது என்று உணர்ந்த ரோஷன் தான் அடுத்து இயக்கவிருக்கும் ‘குஞ்சாகோகோபன்’ நடிப்பில் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’, திலீப் நடிப்பில் ‘கின்னஸ் கில்பர்ட்’ என்று இருபடங்களுக்கு சகோதர எழுத்தாளர்கள் பாபி-சஞ்சயை இப்போதே அட்வான்ஸ்ட் புக்கிங் செய்துவைத்து விட்டார்.


தென்னிந்தியாவின் முதல் ‘gay’ திரைப்படம் என்று இப்படத்தை மும்பையில் பாராட்டுகிறார்கள். இவ்வளவு துணிச்சலான இறுதிக்காட்சியை படமாக்க இயக்குனர் முன்வந்திருப்பது, தென்னிந்திய சினிமாவை உள்ளடக்கரீதியாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியிருப்பதால், ‘மும்பை சினிமா’ ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக நிலைபெறுகிறது. ஏற்கனவே ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி சில படங்களில் ஓரினச்சேர்க்கை லேசுபாசாக காட்டப்பட்டாலும், ‘மும்பை போலிஸ்’ இவ்வுறவை சித்தரித்திருப்பது வேறுவகை. படத்தின் பிரதானமான ட்விஸ்ட்டுக்கு காரணமான காட்சி அதுவென்பதால், அதை இங்கே விவரிப்பது முறையல்ல. படம் பார்த்து நீங்களே உணரவேண்டிய விஷயம் இது.
                       end
இயக்குனர் மீது கோபமிருந்தாலும், தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் மீது பிருத்விராஜுக்கு நல்ல ஈடுபாடு இருந்திருக்கிறது. பாத்திரத்தின் உடல்மொழி, நடை, உடை, ஒப்பனை என்று எல்லாவற்றிலுமே நூறு சதவிகித முழுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக இதுபோன்ற சிரத்தையை தொழிலில் காட்டுபவர் என்று கமல்ஹாசனுக்குதான் பெயர். அவரே மும்பை போலிஸை பார்த்தால் அசந்துவிடுவார். விபத்துக்கு முந்தைய பிருத்விராஜ் ஏ. விபத்துக்கு பிந்தையவர் பி. ஏ மற்றும் பி-யின் காட்சிகள் நான்லீனியராக முன்பின்னாக மாறி மாறி வருகிறது. சாதாரணமாக இம்மாதிரியாக உலகப்பட பாணியில் கதை சொல்லும் பாணி ரசிகனை செமையாக குழப்பும். ஆனால் பிருத்விராஜ் தன் மூக்கில் பட்ட வெட்டுக்காயம் ஒன்றின் ஒப்பனையின் மூலமாகவே இந்த குழப்பத்தை தவிர்க்கிறார். எடிட்டருக்கும் செமத்தியான வேலை. கதையை, திரைக்கதையின் முடிச்சுகளை முழுமையாக உணர்ந்து, அதற்கு விசுவாசமாக வேலை பார்த்திருக்கிறார். ஹீரோயின் இல்லை. பாடல்கள் இல்லை. ஆனாலும் பர்ஃபெக்ட் மசாலா எண்டெர்டெயினர்.
                         Last End
(நன்றி : cinemobita.com)

3 ஜூன், 2013

வரலாறே வாழ்க

அஞ்சுகம்மாள் ஈன்ற திருமகன்
அசுரர்குல தலைவன்
ஆரிய கொட்டம்
அடக்கப் பிறந்தவன்
அண்ணாவின் தம்பி
அன்புத்தம்பிகளுக்கு அண்ணன்
திராவிட தங்கம்
தினவெடுத்த சிங்கம்
கன்னித் தமிழ்த்தாய்க்கு
செம்மொழி ஆடை போர்த்தியவன்
ஏழைகளின் ஏந்தல்
அவன் தமிழ் காந்தல்
சாதி இழிவுக்கு
சாவுமணி அடிப்பவன்
உழைப்பாளரின் உடன்பிறப்பே
வஞ்சகத்தை வீழ்த்தி
வசவாளவர் வயிறெரிய
வரலாறே இன்னுமொரு நூற்றாண்டு
வாழ்க... வாழ்க...

29 மே, 2013

எழுத்து புரம்

அன்புள்ள யுகி,

தற்போது சமூகத்தில் எழுத்தாளனின் இடமென்ன. எழுத்தாளனை சாதாமக்கள் இழிவுபடுத்தும் நிலை இருப்பதாக இணையத்தில் எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே. சாதா தோசைக்கும், மசாலா தோசைக்கும் இந்த சாதாமக்களுக்கு வித்தியாசம் தெரியாதா. உங்களுடைய நேர் அல்லது எதிர்வினை என்ன?

அன்புடன்
சரவணர்
அன்புள்ள சரவணர்,

1. இணையத்தில் நான் ஏதேனும் கில்மா படங்களை போட்டு ஒப்பேற்றி நூற்றி சொச்சம் லைக்குகளையும், முப்பது நாப்பது கமெண்டுகளையும் வாங்குவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்வதில்லை. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. தலா ஒரு ஆபாசத் தொடரும், ஆபாச நாவலும் எழுதிவிட்டதாலேயே என்னை எழுத்தாளன் என்று இந்த சமூகம் நம்புகிறது. மற்றவர்கள் அரசுப் பேருந்துகளோடும், டிவிஎஸ் எக்ஸெல்லோடும், சைக்கிளோடும் மாரடித்துக் கொண்டிருக்கையில் நான் ஒன் பிஃப்டி சிசி பைக்கில் உல்லாசமாக உலாவருகிறேன். என்னுடைய அலுவலகத்தில் ஏசி இருக்கிறது. எனக்கு தனி கேபின் அளித்திருக்கிறார்கள். சன்னலை திறந்தால் மாமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. அணில்கள் ஓடி விளையாடுகின்றன. பேருந்து நிறுத்தத்தில் சுடிதார் அணிந்த பெண்கள் நிற்கிறார்கள். டிராஃபிக்கில் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்கின்றன. பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார்கள். சினிமா தியேட்டரில் படம் ஓட்டுகிறார்கள். என்னுடைய வாழ்க்கை இன்பங்களால் ஆனது. காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் ‘ஜெலுசில்’ வாங்க மருந்துக்கடைக்கு போகும் வாழ்க்கை அல்ல.

2. எழுத்தாளன் என்பதால் எனக்கு எல்லோரும் தரும் மரியாதையை மற்ற எழுத்தாளர்களுக்கும் தருகிறார்கள் என்று பொதுமைப்படுத்த விரும்பவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்ததுமே அங்கிருக்கும் எழுத்தாளர்களை போய் முதலில் சந்தித்தார் சித்தராமையா. ஆனால் இங்கோ ஜெயலலிதா ஆளுநரை போய்தான் பார்த்தார். நீங்களே கூட சிறுவயதில் சரவணனாக இருந்தீர்கள். வளர்ந்ததும் சரவணர் ஆகிவிட்டீர்கள். ஆனால் எழுத்தாளனோ பிறந்ததில் இருந்தே எழுத்தாளனாகதான் இருக்கிறான். அவனை எழுத்தாளர் என்று சொல்வதிலோ, எழுதுவதிலோ கூட இச்சமூகத்துக்கு தயக்கம் இருக்கிறது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மாலன், பாலகுமாரன், மனுஷ்யபுத்திரன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், விஜயமகேந்திரன் என்று எழுத்தாளர்களை ‘ன்’ விகுதியிலேயே பதிப்பாளர்கள் பதிப்பிக்கிறார்கள். வாசகர்கள் வாசிக்கிறார்கள். ‘ர்’ போட்டால் குறைந்தாபோய் விடுவார்கள். ஆனால் ஐரோப்பாவில் பாருங்கள். டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, சார்த்தர், சாக்ரடிஸ், காரல்மார்க்ஸ் என்று மரியாதையோடு விளிக்கிறார்கள். அங்கேயெல்லாம் ‘ன்’ விகுதியில் ஒரு எழுத்தாளனைகூட நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்த அற்பத்தனத்தை, அராஜகத்தை எதிர்க்காவிட்டால் நான் எழுத்தாளனே அல்ல.

3. இரக்கமற்ற இந்த இழிநிலையை புறக்கணிப்பதோடு எதிர்க்கவும் செய்கிறேன். இணையத்தில் கொட்டப்படுவதெல்லாம் குப்பை என்பதாலேயே என்னுடைய குப்பையையும் அங்கேதான் கொட்டவேண்டியிருக்கிறது. இதை நீங்கள் சமரசம் என்று பார்க்கக்கூடாது. நிர்ப்பந்தம் என்றும் பார்க்கலாம். வேறு வழியில்லை என்றும் நினைக்கலாம். எனக்கும் மின்னஞ்சலில் வாசகர் கடிதங்கள் வரவேண்டாமா. என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கும் ‘லைக்’ ‘கமெண்ட்’ வேண்டாமா. நான் எழுத்தாளன் என்பதாலேயே வெகுசாதாரணர்களுக்கு கிடைக்கும் இச்சலுகைகளை இழக்க வேண்டுமா?

4. பாண்டிச்சேரி பெரியவர் பற்றி நிறையபேர் பேசுவதையும், எழுதுவதையும் இணையத்தில் காண்கிறேன். இதையெல்லாம் காண எனக்கு நேரமில்லை என்றாலும் கூட காண்கிறேன். பாண்டிச்சேரி மதுவுக்கு பெயர் பெற்றது. அவ்வப்போது நானும் அங்கு சென்று மது அருந்துவதுண்டு. எனக்கு அங்கே கிடைக்கும் மதுவகையும், சாதாரணரான பாண்டிச்சேரி பெரியவருக்கு கிடைக்கக்கூடிய மதுவகையும் ஒரே வகை என்பதை அறிவுலகம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் சைட் டிஷ்ஷிலாவது வித்தியாசம் வேண்டாமா. நான் எழுத்தாளனாக இருந்து எனக்கு என்ன பிரயோசனம்?

5. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மிடம் எலக்ட்ரிஷியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, எங்கள் வீட்டிலும் கொஞ்சம் எலக்ட்ரிக்கல் வேலை இருக்கிறது என்று கூறி அவரது உதவியை நாடலாம். பிளம்பருக்கும் இதுவே பொருந்தும். கொஞ்சம் விரிவாக சிந்தித்தோமானால் டிவி மெக்கானிக், கொத்தனார், மேஸ்திரி ஆகியோரை சந்திக்கும்போதும் கூட இதே சாத்தியம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளனை நீங்கள் சந்திக்கும்போது கற்பூர ஆரத்தி காட்டி, மணி அடித்து, பூஜை செய்ய வேண்டாமா. கிரேக்கத்தில் சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோருக்கு அதைதானே செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு சாக்ரடிஸுக்கு கடைசியில் விஷக்கோப்பை கொடுத்ததை மட்டும் இன்னும் தமிழர்கள் மறக்காமல் இருப்பது ஏன்? ஓர் ஈழத்தமிழரோ, மலேசியத்தமிழரோ, தென்னாப்பிரிக்கத் தமிழரோ, சீனத்தமிழரோ, ரஷ்யத்தமிழரோ, செவ்வாய்க்கிரகத் தமிழரோ இம்மாதிரி நடந்துகொண்டு நான் பார்த்ததில்லை. தமிழகத் தமிழர்தான் இப்படி நடந்துக் கொள்கிறார்கள். இவர்கள் பூமியில்தான் இருக்கிறார்களா. அல்லது பூலோகத்தில் இருக்கிறார்களா என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது.

6. நான் எழுதுவதால்தான் என்னை எழுத்தாளன் என்கிறார்கள். நீங்கள் வாசிப்பதால்தான் உங்களை வாசகன் என்கிறார்கள். மகத்தான விஷயங்கள் எழுத்தாளனுக்கு சொந்தமானது. அதை மற்றவர்கள் பட்டா போட்டுக்கொண்டு கொண்டாட ஆசைப்படக்கூடாது.

யு