12 ஆகஸ்ட், 2013

ஐந்து ஐந்து ஐந்து

“படப்பிடிப்பில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” என்று படம் தொடங்குவதற்கு முன்பாக ‘ஸ்லைடு’ போடுகிறார்கள்.

உண்மைதான்.

படம் பார்ப்பவர்களை மட்டும்தான் துன்பப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சசி.

6 ஆகஸ்ட், 2013

பாரதி கண்ணம்மா

பிழைப்புக்கு காதல் படங்களை எடுத்தாலும் நிஜவாழ்க்கையில் சேரன் காதலுக்கு எதிரானவர். தன்னுடைய மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த காதலை உடைக்க தன்னுடைய சினிமா செல்வாக்கை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர் என்றெல்லாம் இணையத்தளங்களில் சேரன் மீது ஏராளமான விமர்சனங்கள்.
மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்கள் சேரனின் மகள் தாமினியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தவை. காதலனுடன் தான் சேர்ந்திருக்கும் படம் ஒன்றினை தாமினி பதிவேற்றி இருக்கிறார். அதை சேரன் ‘லைக்’ செய்திருக்கிறார். போலவே விழா ஒன்றில் சேரனுடன் தாமினியின் காதலர் சந்துரு இருக்கும் படம். கடந்த ஜூன், 13 அன்று பதிவேற்றப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கும் சேரன் ‘லைக்’ இட்டிருக்கிறார்.

இதிலிருந்து சேரன் தன்னுடைய மகளின் காதலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் காதலுக்கு எதிரானவர் அல்ல என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சந்துரு குறித்து சமீபத்தில் அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஊடகங்களில் சேரன் சொல்வதைப் போல சந்துருவின் பின்னணி, சேரனின் முதல் மகளிடம் முறைகேடாக இணையத்தளத்தில் சாட்டிங் செய்தது போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம். எனவேதான் தன் மகளுக்கு இவர் ஏற்றவரல்ல என்கிற அடிப்படையில் காதலை எதிர்த்திருக்கலாம். ஒரு தகப்பனாக தன் கடமையை சேரன் சரியாகதான் செய்கிறார் என்று தோன்றுகிறது.

காதலை ஆதரிக்கிறோம் என்கிற பெயரில் சேரனின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை (அது இன்று சந்திக்கே வந்துவிட்டிருந்தாலும்) கொச்சைப்படுத்துவது சரியல்ல. அவர் காதலுக்கு எதிரானவர் என்று ‘பிம்பம்’ கட்டியெழுப்புவது வடிகட்டிய அயோக்கியத்தனம். சேரனோ, சந்துருவோ, தாமினியோ சாதி பற்றி எதுவுமே இதுவரை பேசாத நிலையில், இளவரசன் – திவ்யா காதலோடு இதை ஒப்புமைப்படுத்திப் பேசுவது அறிவார்ந்த செயல் அல்ல. குறிப்பாக பாமகவும், அதன் தொண்டர்களும் இவ்விவகாரத்தில் மைலேஜ் தேடுவது பச்சை சந்தர்ப்பவாதமே தவிர வேறெதுவுமில்லை.

பதினெட்டு வயது பெண்ணுக்கு தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்றால் சட்டப்படி இருக்கிறது. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் துணை சரியான துணையில்லை என்று ஆதாரப்பூர்வமாக பெற்றோர் கருதும் நிலையில், அப்பெண்ணின் காதல் கண்ணை மறைக்கிறது எனும்போது சட்டம் வெறும் சட்டமாக மட்டும் செயல்படக்கூடாது. அப்பெண்ணுக்கு தகுந்த நிபுணர்களின் கவுன்சலிங் தேவை. நீதிமன்ற கண்காணிப்பில் அப்பெண்ணிடம் பெற்றோர் தங்கள் தரப்பை பேசுவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும். சேரன், சந்துரு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது காவலர்களால் விசாரித்து உண்மை வெளிவரவேண்டும். ஒரு பெண்ணை ஏமாற்றும் நோக்கில் சந்துரு காதலித்திருந்தால் அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை சேரன் பொய் சொல்லியிருந்தால் சந்துருவுக்கு ஆதரவாக சட்டம் செயல்படவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் தாமினியின் உரிமையை அதே சட்டம் உறுதி செய்யவேண்டும்.

சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா?

ஏழைகள் என்பவர்கள் யார் என்பதை வரையறுக்க பல நூறு கோடி செலவுகள் செய்து பல்லாயிரக்கணக்கான பொருளாதார நிபுணர்கள் இரவும் பகலுமாக பல வருடமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து திட்டக்குழுவின் வரையறையின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் மாதத்துக்கு ரூ.1,000/-, கிராமப்புறங்களில் ரூ.816/-க்கு வருமானம் பெறுபவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வரமாட்டார்கள் என்கிற கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் நாடு முழுக்க யார் ஏழைகள் என்கிற விவாதம் பொருளாதார ஆர்வலர்களிடையே சூடு பிடித்திருக்கிறது. திட்டக்குழுவின் வரையறையை பலர் வழக்கம்போல எதிர்க்கிறார்கள். பலர் வழக்கம்போல ஆதரிக்கிறார்கள். இந்த விவாதங்களே அர்த்தமற்றவை. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படித்த பொருளாதார நிபுணர்கள், பல்லாயிரம் கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்டிருக்கும் வரையறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற கருத்துக்கே இடமில்லை.

தோழர் பத்ரிசேஷாத்ரி ‘ஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?’ என்று ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். ஒரு நாளைக்கு ரூ.30/-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத்தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியுமென்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தார். இதை ஏற்றுக்கொள்ளாமல் வாடகை, கல்வி, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், ஆடை, தொலைபேசி, இத்யாதி இத்யாதிக்கெல்லாம் ஆகும் செலவு என்ன என்று வினவு தோழர்கள் கணக்கு கேட்கிறார்கள். இதையடுத்து பத்ரி மீண்டும் தன்னுடைய ஆய்வை மீளாய்வு செய்யும் விதமாக சுர்ஜித் பல்லாவின் கட்டுரை அடிப்படையில் இன்று ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் சுமாரான ஏழை மக்கள் ஒரு நாளைக்கு உணவுக்காக ரூ.12/-தான் செலவழிக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. பணக்கார நகரகப் பகுதிகளிலேயே கூட ரூ.40/-தான் செலவழிக்கப்படுகிறதாம். நிலைமை இப்படியிருக்கையில் வினவுதோழர்களின் கேள்விகளையும், பதிவையும் நாம் கேலிக்குரியதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

உண்மையில் ரூ.12/- என்பதே அதிகமென்றுதான் நமக்கு தோன்றுகிறது. இந்தியாவில் ஏராளமான காடுகள் இருக்கின்றன. அங்கே கிழங்குகளும், பழங்களும் இலவசமாகவே காய்க்கின்றன. அவற்றை பறித்து உண்பதை விட்டுவிட்டு மக்கள் தொழிற்சாலைகளிலும், நிலங்களிலும் இயந்திரங்கள் மாதிரி உழைத்து பிழைப்பது என்பது இயற்கைக்கு முரணானதும், வெறும் ஆடம்பர மோகமுமே ஆகும். கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ், ஓலை கூரைகளுக்கு கீழேதான் வசிக்கவேண்டும் என்று மக்கள் அடம்பிடிப்பது நியாயமுமல்ல. மலையிலும், காடுகளிலும் குகைகள் அமைத்து ஐந்து பைசா வாடகைச்செலவு இல்லாமல் வசிக்க முடியுமே? போத்தீஸிலும், சென்னை சில்க்கிலும் ஆடி தள்ளுபடியில் உடைவாங்கி அணிந்தால்தான் உடையா.. ஆதிமனிதன் அப்படிதான் உடை அணிந்தானா.. இலைகளும், தழைகளும் இலவசம்தானே? நதிகளும், குளங்களும், குட்டைகளும் ஓசியில்தானே அமைந்திருக்கின்றன... அவற்றில் நீர் அள்ளிக் குடித்தால் தாகம் அடங்காதா?

ஏழை மக்கள் எனப்படுகிறவர்கள் டாஸ்மாக், சினிமா, பீடி, சிகரெட்டு, பாக்கு என்று ஆடம்பரமாக வீண்செலவு செய்வதால்தான் இன்று நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. அரை பவுன் தங்கத்தில் தாலி செய்துப் போட்டால்தான் அவர்களுக்கு தாலிபாக்கியம் நிற்குமா? ஏன்.. வெள்ளி, பித்தளையெல்லாம் வேலைக்கு ஆகாதா.. டைரக்டாக ஹீரோதானா?

பத்ரி பெரிய மனது வைத்து, ஏழைகளுக்கு விலையுயர்ந்த உணவு தரவேண்டும் என்பது வெறுங்கனவு என்று சொல்லியிருக்கிறார். ஏழைகளுக்கு வீடு, கல்வி, போக்குவரத்து, லொட்டு லொசுக்கெல்லாம் கூட அனாவசியமான கனவுதான். ஆரண்ய காண்டத்தில் ராமபிரான் எப்படி வாழ்ந்தார்.. அவருக்கென்ன உணவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12/-ஆ தேவைப்பட்டது.. அவரும் சீதைபிராட்டியும், லட்சுமணனும் ஆயிரக்கணக்கில் செலவு செய்தா வாழ்ந்தார்கள்... அவர்களை மாதிரி அனைவரும் மனது வைத்தால் வாழ முடியாதா... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் ஏழைகள் மட்டுமல்ல, யாருமே வசிக்க, உயிர்வாழ பணமே தேவையில்லை என்பதுதான் நிதர்சனம். இது புரியாமல், இந்திய அரசாங்கமும் அதன் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களும் மிகத்தாராளமாக நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டை எதிர்ப்பது முட்டாள்த்தனம்.

2 ஆகஸ்ட், 2013

இந்திய சாலைகளின் ராஜா!

ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் கொடிகட்டிப் பறந்த அம்பாஸடர் கார்தான் உலகிலேயே மிகச்சிறந்த டாக்ஸி என்கிறது பி.பி.சி. நடத்திய ’டாப்கீர்’ வாக்கெடுப்பு. அம்பாஸடரின் பெருமிதப் பின்னணி இங்கே...
யானையின் கம்பீரம். புலியின் பாய்ச்சல். இந்த இரண்டின் பெருமையான கலவைதான் அம்பாஸடர் கார். வெளிநாடுகளில் இந்தியா என்றாலே அம்பாஸடரும் நினைவுக்கு வரும் வகையில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாகனம். இந்தியாவில் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் சிகப்பு விளக்கு, மற்ற எந்த வாகனத்தையும் விட அம்பாஸடரின் தலைக்குதான் பொருத்தமாக அமைகிறது.

அம்பாஸிடர் என்றால் அப்படியொரு நம்பிக்கை. பாதுகாப்பான கார் என்பதால் மட்டுமல்ல, அம்பாஸடரில் வருபவர்கள் நாணயமானவர்கள் என்று அனைவரும் நம்புமளவுக்கும் கூட (எனவேதான் டிசம்பர் 2001ல் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகள் அம்பாஸடர் காரை பயன்படுத்தினார்கள். சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட அம்பாஸடரை இந்தியாவில் எந்த காவலருமே மறித்து சோதிக்கமாட்டார்கள் என்று தீவிரவாதிகளுக்கு தெரியும்).

இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் 1948ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் தயாரிப்பான மோரிஸ் ஆக்ஸ்போர்ட் காரை பிரதியெடுத்து லேண்ட் மாஸ்டர் என்றொரு காரை முதன்முதலாக உருவாக்கினார்கள். ஐம்பதுகளின் இறுதியில் அம்பாஸடர் என்கிற பெயரோடு மார்க்-1 வகை கார்கள் சாலைகளுக்கு வந்தது. ‘இந்தியனாக இருப்போம், இந்தியப் பொருட்களையே வாங்குவோம்’ என்கிற கோஷம் பிரபலமாக ஒலித்துக் கொண்டிருந்த அந்த காலத்தில் முழுக்க இந்தியத் தயாரிப்பாக வந்த அம்பாஸடர் பெரும் வெற்றி கண்டது.

1500 சிசி ஆற்றல். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் என்கிற அம்பாஸடரின் ஆற்றலும் கார் பிரியர்களை கவர்ந்தது. ஒரு பெரிய குடும்பமே தாராளமாக நெருக்கடி இல்லாமல் அமரலாம். அதிகமான பயணச்சுமைகளை டிக்கியில் அடுக்கலாம். பொலிவான ‘ராயல்’ தோற்றம். நிலச்சுவான்தார்களும், பண்ணையார்களும், அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு அம்பாஸடரை வாங்கினார்கள். வீட்டுக்கு முன்பாக ஒரு கார் நிற்பது குடும்பத்தின் கவுரவத்தை பறைசாற்றும் அம்சமாகவும் அப்போது கவனிக்கப்பட்டது.

64ல் மார்க்-2 கொஞ்சம் மாற்றங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளின் ராஜா இதுதான். 75ல் மார்க்-3. அப்போதைய விலை ரூ.18,000/-தான். நான்கே ஆண்டுகளில் 79ல் மார்க்-4 சாலைகளில் ஓடத்தொடங்கியது. 1990 வரை இதே மாடல்தான்.

இந்த காலக்கட்டத்தில் மோட்டார் வாகனம் என்றாலே அம்பாஸடர்தான் என்று மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்திருந்தது. டாக்ஸியிலிருந்து, குடும்ப உபயோகம் வரை அம்பாஸடரே வசதியாக இருந்தது. போட்டி நிறுவனங்களில் தொல்லையை அனாயசமாக முறியடித்தது அம்பாஸடர். ஃபியட் நிறுவனத்தின் ப்ரீமியர் பத்மினி போன்ற கார்கள் சந்தைக்கு வந்திருந்தாலும், வடிவமைப்பில் எந்த பெரிய மாற்றங்களையும் செய்யாமல் அம்பாஸடரின் கொடி உயரப் பறந்தது.

ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் நிலைமை வெகுவாக மாறத்தொடங்கியது. மெட்ரோ நகரங்களின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசு தன்னுடைய மோட்டார் கொள்கைகளை லேசாக தளர்த்திக் கொண்டது. சுஸுகி நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு மாருதி காரை மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தது. அளவில் சிறியதாக, போக்குவரத்து நெரிசலை தாக்குப்பிடித்து ஓட்டுவதற்கு வாகாக வந்த மாருதிகார்களை ‘தீப்பெட்டி கார்’கள் என்று செல்லமாக அழைத்து மக்கள் வரவேற்கத் தொடங்கினார்கள். அடுத்த இருபது ஆண்டுகளுக்கு – ஹுண்டாய், ஹோண்டா, ஃபோர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளே வரும் வரை – மாருதி கார்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டன.

எண்பதுகளின் இறுதியில் நிலைமை கையை மீறிப்போவதை ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் உணர்ந்தது. இந்திய சந்தையை மட்டும் இனி நம்பி பிரயோசனமில்லை என்று ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. துபாயில் டெலிவரி செய்ய வாகான வாகனமாக அம்பாஸடரே கருதப்பட்டது. அங்கு விற்பனைக்கு கிடைத்த மற்ற வாகனங்களை ஒப்பிடுகையில் அம்பாஸடரின் விலை கணிசமான அளவில் குறைவு. மட்டுமின்றி உழைப்பிலும் அம்பாஸடரை அடித்துக்கொள்ள ஆளில்லை.

1990ல் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய அம்பாஸடர் நோவா, அந்நிறுவனத்தின் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தது. பழைய என்ஜின் மாற்றப்பட்டு சக்திவாய்ந்த 1800 சி.சி. புதிய என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டது. நோவா வகை கார்களில் டீசல் என்ஜின்களும் கிடைத்தன. புதிய இசிஸூ என்ஜின்களின் ஆற்றலால் அதிகபட்சமாக 140 கி.மீ. வேகம் வரை கார்களை இயக்க முடிந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்பாஸடர் கிராண்ட், அவிகோ என்று நிறைய மாடல்களை கொண்டுவந்தாலும், அது தன்னுடைய பழம்பெருமையை மீட்டுவிட முடியவில்லை. ஒரு காலக்கட்டத்தின் அடையாளமாகவே தேங்கிவிட்டது.

ஆனாலும் இராணுவம், காவல்துறை, தலைமைச் செயலகங்கள், அரசு அலுவலகங்கள் என்று இன்றும் அரசு தொடர்பான இடங்களில் அம்பாஸடரின் ஆளுமை குறையவேயில்லை. இடையில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வி.வி.ஐ.பி.களுக்கு பி.எம்.டபிள்யூ கார்களை வாங்க முடிவு செய்தது. ஆனால் 2004ல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அம்முடிவை மாற்றி அம்பாஸடருக்கே ‘ஜே’ போட்டது. அதன் விளைவுதான் நம்முடைய பாராளுமன்றத்தை எப்போதும் சுற்றி நிற்கிறது அம்பாஸடர் அணிவகுப்பு.

விலை மலிவான கார்களின் வருகையால் பெருநகரங்களின் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் அம்பாஸடர்கள் மறைந்துகொண்டே வரலாம். ஒரே தயாரிப்பு எல்லா காலங்களையும் ஆளுவது சாத்தியமுமில்லை. ஆனால் அம்பாஸடர் நம்முடைய பாரம்பரியப் பெருமை. அதன் நினைவுகளை இந்தியா அத்தனை சீக்கிரமாக இழந்துவிடாது.


அம்பாஸடருக்கு ஆறுதல்!

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப் போனால் அம்பாஸடர் கார்களின் விற்பனை இப்போது அதலபாதாளத்தில்தான் இருக்கிறது. 2012-13 ஆண்டில் 3,390 கார்களை மட்டுமே அது விற்பனை செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் பன்னிரெண்டு வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு கார் விற்பனை படுமந்தமாக இருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் மற்ற கார்களை ஒப்பிடும்போது அம்பாஸடரின் விற்பனை மட்டும் 166 சதவிகிதம் பெருகியிருப்பதாக அதே கணக்கீடு கூறுகிறது. ஹிந்துஸ்தான் மோட்டாருக்கு ஒரே ஆறுதலான அம்சம் இதுதான். இதையடுத்து பீகார், ஒரிஸ்ஸா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் விற்பனையாளர்களை நியமித்து கார் விற்பனையை பெருக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

19 ஜூலை, 2013

துரத்தும் துயரம்

ரோம். 1960. ஒலிம்பிக். 400 மீட்டர். ஓட்டப்பந்தயம். மில்காசிங். ஆரம்பித்த சில நொடிகளிலேயே முடிவு தெரிந்துவிடுகிறது. “தங்கம் மில்காசிங்கின் பாக்கெட்டில்” என்று வர்ணனையாளர்கள் அலறுகிறார்கள். வெற்றிக்கோட்டுக்கு இன்னும் சில தம்படி தூரம்தான். அப்போதுதான் பன்னிரெண்டு வயதிலிருந்து சாத்தானாய் மில்காவை துரத்தும் துயரம், மீண்டும் அவரை துரத்துகிறது. கண்கள் இருள்கிறது. கால்கள் ஓடமறுக்கிறது. ஒலிம்பிக், தங்கம் எல்லாமே மறந்துவிட கடைசியில் கிடைத்தது நான்காவது இடம்தான். மயிரிழையில் வெண்கலம் நழுவினாலும் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இன்றுவரை ஒரு தனிநபர் இந்தியரின் சாதனை இதுதான். 45.73 நொடிகளில் முடிந்த அவரது ஓட்டம் இந்திய தேசிய சாதனையாக நாற்பது ஆண்டுகளுக்கு வீழ்த்த முடியாததாகவும் இருந்தது.

இந்த காட்சியில் இருந்துதான் விரிகிறது ‘பாக் மில்கா பாக்’. அதாவது ‘ஓடு மில்கா ஓடு’. மில்காசிங்கின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட கதையென்றாலும் சினிமாவுக்காக கொஞ்சம் லேசாக டிங்கரிங் பார்த்திருக்கிறார்கள். முன்பின்னாக நான்லீனியர் வடிவம்தானென்றாலும், அது எவ்விதத்திலும் பார்வையாளனை குழப்பாத அளவில் சீரான இடங்களில் காட்சிமாற்றத்தை சிறப்பாக செருகியிருக்கிறார்கள்.

மில்காவுக்கு பன்னிரெண்டு வயதாக இருக்கும்போது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கிறது. அவர் பிறந்த குக்கிராமமான கோவிந்த்புரா, பாகிஸ்தானில் அமைகிறது. அங்கிருக்கும் சீக்கியர்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒன்று; இஸ்லாமியனாக மாறிவிடு. இரண்டு; குழந்தை குட்டிகளை தூக்கிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடிவிடு. ஒரு லட்சம் பேர் கொண்ட மாபெரும் சைனியத்தை, நாற்பதே பேர் கொண்ட படையோடு குரு கோவிந்த் சந்தித்தார். அந்தப் பரம்பரையில் வந்தவர்கள் பயந்து ஓடுவதா என்று அங்கிருப்பவர்கள் போராடி பார்த்துவிட முடிவெடுக்கிறார்கள். எதிரிகள் வெல்கிறார்கள். கழுத்தை கூரிய வாள் வெட்டுவதற்கு சில நொடிகள் முன்பாக மில்காவின் அப்பா சொல்கிறார். “ஓடு மில்கா ஓடு”. திரும்பிப் பார்க்காமல் ஓடச்சொல்லிய அப்பாவின் அறிவுரையை மில்கா மீறுகிறார். திரும்பிப் பார்த்ததால்தான் கடைசிவரை அவரை அத்துயரம் துரத்திக்கொண்டே இருந்தது.

உயிர்வாழ்வதைத் தவிர்த்து வேறெந்த குறிப்பிட்ட லட்சியமும் இல்லாமல் இந்தியாவுக்கு அகதியாய் வந்தது. இங்கு பிற்பாடு உயிர்பிழைத்து வந்த அவரது அக்காவோடு சேர்ந்தது. சிறு அளவிலான திருடனாய் பொறுப்பற்று திரிந்தது. ராணுவத்தில் சேர்ந்தது. யதேச்சையாய் அவருக்குள்ளிருந்த ஓட்டத்திறமையை இராணுவ அதிகாரிகள் கண்டுகொண்டது. சிறுசிறு தடைகளை வென்று சரித்திரம் படைத்தது என்று படம் மில்காவின் எல்லா கோணங்களையும் இண்டு, இடுக்கு விடாமல் படம் பிடித்திருக்கிறது.

இது மில்கா சிங்கின் கதை மட்டுமல்ல. சீக்கிய இனத்தின் கதையும் கூடத்தான். இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்த்தெழுந்து உருவான இயக்கம் அது. பிற்பாடு வெள்ளையர்களோடு சண்டை. சுதந்திரத்துக்குப் பிறகு பிரிவினை காரணமாக தாய்மண்ணில் இருந்து பல்லாயிரம் பேர் விரட்டப்பட்டார்கள். இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இல்லாமல் சீக்கியனாக அவர்கள் இருந்ததுதான் பிரச்சினை. அந்த அடையாளத்தை துறந்துவிடச்சொல்லி வன்முறையால் வலியுறுத்தப்பட்டார்கள். சர்தார்ஜி ஜோக்குகளை உருவாக்கி அவர்களை கேவலப்படுத்தினோம். தனிநாடு உரிமை கோரியவர்களை கொன்றுக் குவித்தோம். அவர்களது உயிரினும் மேலான பொற்கோயிலுக்குள் இராணுவத்தின் பூட்ஸ்கால்கள் நுழைந்தன. ஆனாலும் இன்று அயல்நாடுகளில் எல்லாம் கிளைபரப்பி இந்தியர்கள் என்றாலே சீக்கியர்கள் என்று சொல்லுமளவுக்கு எல்லாத்துறையிலும் உயர்ந்திருக்கிறார்கள். எந்த டெல்லியில் மூவாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டு, அந்நகரின் சாலைகளில் இரத்தவெள்ளம் ஓடியதோ.. இன்று அதே டெல்லியின் செங்கோட்டையை ஆளுபவர் ஒரு சீக்கியர்.

ஒரு சுயசரிதையை எப்படி திரைப்படம் ஆக்க வேண்டும் என்று எதிர்கால சினிமா மாணவர்களுக்கு ‘பாக் மில்கா பாக்’ பாடமாக கற்பிக்கப்படலாம். படம் பார்க்கும் பார்வையாளனும் மூன்று மணி நேரம் மில்காவோடே ஓடிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தும் துல்லியமான இயக்கம். இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹரா, இசையமைப்பாளர்கள் ஷங்கர் எஷான்லாய், ஸ்க்ரிப்ட் எழுதிய ப்ரசூன் ஜோஸி என்று வெயிட்டான டீம். கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் அப்பா யோக்ராஜ்சிங் கோச்சாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜுக்கும் முக்கியமான வேடம்.

ஐம்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் பெரும் மனித உழைப்பை கோரியிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம். மில்காவாக நடித்திருக்கும் ஃபரான் அக்தர் கிட்டத்தட்ட ஓர் ஓட்டப்பந்தய வீரனுக்குரிய எல்லா பயிற்சிகளையும் எடுக்க வேண்டியிருந்தது. இப்படத்தில் நடிப்பதே பெரும் கவுரம் என்றுகூறி சம்பளமாக வெறும் பதினோரு ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்தார் சோனம் கபூர். “நாங்கள் எல்லோருமே மில்காசிங்கின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டோம். எந்தக் கட்டத்திலும் எங்களுக்கு எதுவுமே கடினமாக தோன்றவில்லை” என்று ஃபரான் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். பட்ட சிரமங்களுக்கு பலன் இருக்கிறது. முதல் நான்கு நாட்களிலேயே நாற்பது கோடி ரூபாய் வசூலை அள்ளித்தந்து, ‘ஓடு மில்கா ஓடு’ என்று படத்துக்கு மாபெரும் வரவேற்பை தந்து ஓடவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரோம் ஒலிம்பிக்கில் நான்காவது இடம் கிடைத்த மனச்சோர்வில் மில்கா இருந்தபோது, இந்திய-பாக் நட்புறவு விளையாட்டுப் போட்டிகளுக்கு அவர் தலைமை தாங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நேரு விரும்புகிறார். ஏற்கனவே தன்னை துரத்திக் கொண்டிருக்கும் துயரத்திடமிருந்து தப்பித்து ஓடமுடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மில்கா பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. நேருவின் வற்புறுத்தலில் பாகிஸ்தானுக்கு சென்று, அவர்கள் மண்ணிலேயே அந்நாட்டின் தலைசிறந்த தடகளவீரரான அப்துல்காலித்தை வெல்வதுதான் க்ளைமேக்ஸ். இம்முறை ஓடத்துவங்கும் போதும் ரோமில் துரத்தியதைப் போலவே துயரம் மில்காவை துரத்துகிறது. முடிந்தவரை வேகமாக ஓடி சாதிப்பதின் மூலமாக மட்டுமே இத்துயரத்தை விட்டு விலகி நீண்டதூரம் ஓடமுடியும் என்கிற நிர்ப்பந்தத்தில் மில்கா ஓடுகிறார். அதுவரை அவர் ஓடிய ஓட்டங்களிலேயே சிறந்த ஓட்டம் அது. நானூறு மீட்டர் தொலைவை ஒரு மின்னல் கடப்பதைப் போல கடக்கிறார். போட்டியை நேரில் கண்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் ஜெனரல் அயூப்கான் மில்காவை ‘பறக்கும் சீக்கியர்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். வெற்றிக் கோட்டை தாண்டி வெற்றி பெற்ற மிதப்பில் மெதுவாக ஓடுகிறார் மில்கா. அவருடன் கூடவே பன்னிரெண்டு வயதில் பாகிஸ்தானை விட்டு உயிர்பிழைக்க ஓடிய சிறுவன் மில்காவும் ஓடுகிறான். இம்முறை அவனது முகத்தில் அச்சமோ, துயரமோ இல்லை. மாறாக வெற்றிக்களிப்பு தரும் மந்தகாச சிரிப்பு மட்டுமே உதட்டில் மிஞ்சுகிறது.