23 ஆகஸ்ட், 2013

லுங்கியன்

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பார்த்துவிட்டு மஹிந்திரா க்ரூப்பின் சி.எம்.டி. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் இயக்குனர் ரோஹித்ஷெட்டியை பாராட்டியிருந்தார். சிறுவயதிலிருந்தே ஆனந்தும் லுங்கி அணிகிறாராம். அதற்காக கிண்டலும் செய்யப்படுகிறாராம். சக லுங்கியன் என்கிற முறையில் ஆசுவாசமாக இருக்கிறது. ஒரு மெயின்ஸ்ட்ரீம் சினிமா, லுங்கி டான்ஸ் மூலமாக லுங்கியை கவுரவித்திருக்கிறது என்பது உலகம் முழுக்க பரவியிருக்கும் லுங்கியார்வலர்களுக்கு ஆதரவான விஷயம்தான்.
பத்து வயதில் இருந்து லுங்கி அணிகிறேன். அப்போதெல்லாம் மாஸ்டர் லுங்கி என்று உயரத்திலும், சுற்றளவிலும் வாமனன் ஆக்கப்பட்ட லுங்கிகள் ரெடிமேடாக கிடைக்கும். பெரியவர்கள் அணியும் லுங்கியின் ரெட்யூஸ் டூ ஃபிட் மாதிரி கவர்ச்சியாக இருக்கும். இப்போது மாஸ்டர் லுங்கி கிடைக்கிறதா தெரியவில்லை. பாய்கள் கூட பெர்முடாஸுக்கு மாறிவிட்ட கலிகாலம் இது.
அப்பா, பிராண்டட் தயாரிப்பாகதான் வாங்கிக் கொடுப்பார். லுங்கி, ஜட்டி, பனியன் விஷயங்களில் சிக்கனம் பார்க்கக்கூடாது என்பது அவர் தரப்பு நியாயம். பிற்பாடு வளர்ந்து எனக்கு நானே உள்ளாடைகளை வாங்கும்போது, காசுக்கு சுணங்கி லோக்கல் தயாரிப்புகள் வாங்கி அவதிப்பட்டதுண்டு.
காட்டன் லுங்கிதான் பெஸ்ட். க்ரிப்பாக நிற்கும். என்ன பிரச்சினை என்றால் டிசைன்கள் குறைவு. டீக்கடை மாஸ்டர்கள் பாலியஸ்டர் அணிவதுண்டு. புள்ளி, ஸ்டார் போட்ட வகை வகையான டிசைன்களில் கிடைக்கும். ஒரே பிரச்சினை. இடுப்பில் நிற்காது. ஒரு முறை ஆசைப்பட்டு வாங்கி கருடகர்வ பங்கம் ஏற்பட்டு விட்டது.
முதன்முதலாக லுங்கி அணிந்தபோது நான் அடைந்த உணர்வு சுதந்திரம். இவ்வுணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா என்று தெரியவில்லை. பெண்கள் நைட்டி அணியும்போது இதே உணர்வை அடைவார்கள் என்று கருதுகிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக லுங்கிதான் வீட்டில் இருக்கும்போது அணியும் சீருடை. மேலே சட்டையோ, பனியனோ இல்லாமல், இடையில் ஒரு லுங்கியை மட்டும் செருகிக்கொண்டு, கட்டிலில் சாய்ந்து, இடுப்புக்கு மட்டும் ஒரு தலைகாணி முட்டுக்கொடுத்துவிட்டு புத்தகம் வாசித்துப் பாருங்கள். வாசிப்பின்பம் என்கிற சொல்லின் பொருள் புரியும் (இதே உடையில், இதே பாணியில் டிவி பார்த்தாலும் இதே சிற்றின்பத்தை பெறலாம்).
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லுங்கி ஓரளவுக்கு கவுரவமான ஆடையாகதான் கருதப்பட்டது. லுங்கியை தூக்கிக் கட்டுவதில் ரெண்டு மூன்று ஸ்டைல் உண்டு. ஒருவர் தூக்கிக் கட்டியிருப்பதின் லாவகத்திலேயே அவருக்கு லுங்கி கட்டுவதில் எவ்வளவு நீண்ட அனுபவம் இருக்கிறது என்பதை கண்டுகொள்ளலாம்.
படம் பார்க்க தியேட்டருக்கு போகும்போது லுங்கியில் போயிருக்கிறேன். கல்யாணம் மாதிரி விசேஷங்களில் கூட புது லுங்கி, வெள்ளைச்சட்டையோடு கம்பீரமாக வந்த விருந்தினர்களை பார்த்திருக்கிறேன். பேருந்தில், ரயில்களில், பொது இடங்களில் எங்கெங்கும் லுங்கிவாலாக்கள் நிறைந்திருந்த பொற்காலம் அது. கோயில் மட்டும் விதிவிலக்கு.
தந்தை பெரியார் லுங்கியை விரும்பி அணிந்திருக்கிறார். மலேசிய சுற்றுப்பயணத்தின் போது தன்னுடைய துணைவியாரையும் லுங்கி அணியச் செய்திருக்கிறார். கலைஞரின் வீட்டில் எடுக்கப்பட்ட படங்களில் அவர் லுங்கியோடுதான் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆருடைய தனிப்பட்ட படமொன்றில் கூட அவர் லுங்கி அணிந்திருந்ததை கண்டிருக்கிறேன். சாதாரண மனிதர்களில் தொடங்கி, வி.ஐ.பி.க்கள் வரை லுங்கியை நேசித்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்லவருகிறேன். சினிமாவில் மட்டும்தான் பணக்காரர்கள் (குறிப்பாக சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன்) ஹவுஸ்கோட் போட்டிருப்பார்கள். எனக்குத் தெரிந்த பணக்காரர்கள் வீடுகளில் லுங்கிதான் அணிந்திருந்தார்கள். ஆண்களின் இல்லறத்துக்கும் ஏற்ற உடை லுங்கிதான். இந்த ‘இல்லற விஷயத்தில்’ வேட்டிக்கு வேறு சிக்கல்கள் உண்டு. அதை தனியாகப் பேசுவோம்.
மில்லெனியம் கருமாந்திரம் வந்தாலும் வந்தது. நம்முடைய லைஃப்ஸ்டைல் ஒட்டுமொத்தமாக மாறிப்போய்விட்டது. அசிங்கமாக தொடையைக் காட்டும் பெர்முடாஸ்கள் உள்ளே நுழைந்துவிட்டது. கிழம் கட்டைகள் கூட இன்று வேட்டியையும், லுங்கியையும் புறக்கணித்துவிட்டு பெர்முடாஸோடு வாக்கிங் என்கிற பெயரில் ஆபாசமாக அலைகின்றன. ஆனால் இவர்கள் சொல்கிறார்கள், லுங்கி அசிங்கமான உடையாம். லுங்கி என்பது விளிம்புநிலை மக்களின் உடையலங்காரம் என்கிற பொதுப்புத்தியை சினிமாவும், ஊடகங்களும் எப்படியோ மக்கள் மனதில் பதியவைத்துவிட்டன.
இன்று லுங்கி அணிந்துச் சென்றால் தியேட்டரில் கூட அனுமதிக்க தயங்குகிறார்கள். மல்ட்டிப்ளக்ஸ்களில் வாய்ப்பே இல்லை. லுங்கி வெறியனான எனக்கும் கூட வீட்டை விட்டு அதை அணிந்து வெளியே வர தயக்கமாகதான் இருக்கிறது. தீண்டத்தகாதவனை மாதிரி சமூகம் பார்க்கிறது. லுங்கியை தேசிய உடையாக அங்கீகரிக்கக்கூடிய விளிம்புநிலை மனிதர்கள் கூட இன்று பேண்ட் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். லுங்கி அணிந்த ஆட்டோ ஓட்டுனரை பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. உலக வரலாற்றில் லுங்கிக்கு இம்மாதிரியான சோதனைக்காலம் முன்னெப்போதும் இருந்ததில்லை.

உலக லுங்கியர்களே ஒன்றுபடுங்கள்!


தொடர்புடைய ஆராய்ச்சிப் பதிவு : லுங்கி

12 ஆகஸ்ட், 2013

ஐந்து ஐந்து ஐந்து

“படப்பிடிப்பில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” என்று படம் தொடங்குவதற்கு முன்பாக ‘ஸ்லைடு’ போடுகிறார்கள்.

உண்மைதான்.

படம் பார்ப்பவர்களை மட்டும்தான் துன்பப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சசி.

6 ஆகஸ்ட், 2013

பாரதி கண்ணம்மா

பிழைப்புக்கு காதல் படங்களை எடுத்தாலும் நிஜவாழ்க்கையில் சேரன் காதலுக்கு எதிரானவர். தன்னுடைய மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த காதலை உடைக்க தன்னுடைய சினிமா செல்வாக்கை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர் என்றெல்லாம் இணையத்தளங்களில் சேரன் மீது ஏராளமான விமர்சனங்கள்.
மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்கள் சேரனின் மகள் தாமினியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தவை. காதலனுடன் தான் சேர்ந்திருக்கும் படம் ஒன்றினை தாமினி பதிவேற்றி இருக்கிறார். அதை சேரன் ‘லைக்’ செய்திருக்கிறார். போலவே விழா ஒன்றில் சேரனுடன் தாமினியின் காதலர் சந்துரு இருக்கும் படம். கடந்த ஜூன், 13 அன்று பதிவேற்றப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கும் சேரன் ‘லைக்’ இட்டிருக்கிறார்.

இதிலிருந்து சேரன் தன்னுடைய மகளின் காதலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் காதலுக்கு எதிரானவர் அல்ல என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சந்துரு குறித்து சமீபத்தில் அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஊடகங்களில் சேரன் சொல்வதைப் போல சந்துருவின் பின்னணி, சேரனின் முதல் மகளிடம் முறைகேடாக இணையத்தளத்தில் சாட்டிங் செய்தது போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம். எனவேதான் தன் மகளுக்கு இவர் ஏற்றவரல்ல என்கிற அடிப்படையில் காதலை எதிர்த்திருக்கலாம். ஒரு தகப்பனாக தன் கடமையை சேரன் சரியாகதான் செய்கிறார் என்று தோன்றுகிறது.

காதலை ஆதரிக்கிறோம் என்கிற பெயரில் சேரனின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை (அது இன்று சந்திக்கே வந்துவிட்டிருந்தாலும்) கொச்சைப்படுத்துவது சரியல்ல. அவர் காதலுக்கு எதிரானவர் என்று ‘பிம்பம்’ கட்டியெழுப்புவது வடிகட்டிய அயோக்கியத்தனம். சேரனோ, சந்துருவோ, தாமினியோ சாதி பற்றி எதுவுமே இதுவரை பேசாத நிலையில், இளவரசன் – திவ்யா காதலோடு இதை ஒப்புமைப்படுத்திப் பேசுவது அறிவார்ந்த செயல் அல்ல. குறிப்பாக பாமகவும், அதன் தொண்டர்களும் இவ்விவகாரத்தில் மைலேஜ் தேடுவது பச்சை சந்தர்ப்பவாதமே தவிர வேறெதுவுமில்லை.

பதினெட்டு வயது பெண்ணுக்கு தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்றால் சட்டப்படி இருக்கிறது. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் துணை சரியான துணையில்லை என்று ஆதாரப்பூர்வமாக பெற்றோர் கருதும் நிலையில், அப்பெண்ணின் காதல் கண்ணை மறைக்கிறது எனும்போது சட்டம் வெறும் சட்டமாக மட்டும் செயல்படக்கூடாது. அப்பெண்ணுக்கு தகுந்த நிபுணர்களின் கவுன்சலிங் தேவை. நீதிமன்ற கண்காணிப்பில் அப்பெண்ணிடம் பெற்றோர் தங்கள் தரப்பை பேசுவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும். சேரன், சந்துரு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது காவலர்களால் விசாரித்து உண்மை வெளிவரவேண்டும். ஒரு பெண்ணை ஏமாற்றும் நோக்கில் சந்துரு காதலித்திருந்தால் அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை சேரன் பொய் சொல்லியிருந்தால் சந்துருவுக்கு ஆதரவாக சட்டம் செயல்படவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் தாமினியின் உரிமையை அதே சட்டம் உறுதி செய்யவேண்டும்.

சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா?

ஏழைகள் என்பவர்கள் யார் என்பதை வரையறுக்க பல நூறு கோடி செலவுகள் செய்து பல்லாயிரக்கணக்கான பொருளாதார நிபுணர்கள் இரவும் பகலுமாக பல வருடமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து திட்டக்குழுவின் வரையறையின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் மாதத்துக்கு ரூ.1,000/-, கிராமப்புறங்களில் ரூ.816/-க்கு வருமானம் பெறுபவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வரமாட்டார்கள் என்கிற கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் நாடு முழுக்க யார் ஏழைகள் என்கிற விவாதம் பொருளாதார ஆர்வலர்களிடையே சூடு பிடித்திருக்கிறது. திட்டக்குழுவின் வரையறையை பலர் வழக்கம்போல எதிர்க்கிறார்கள். பலர் வழக்கம்போல ஆதரிக்கிறார்கள். இந்த விவாதங்களே அர்த்தமற்றவை. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படித்த பொருளாதார நிபுணர்கள், பல்லாயிரம் கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்டிருக்கும் வரையறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற கருத்துக்கே இடமில்லை.

தோழர் பத்ரிசேஷாத்ரி ‘ஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?’ என்று ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். ஒரு நாளைக்கு ரூ.30/-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத்தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியுமென்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தார். இதை ஏற்றுக்கொள்ளாமல் வாடகை, கல்வி, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், ஆடை, தொலைபேசி, இத்யாதி இத்யாதிக்கெல்லாம் ஆகும் செலவு என்ன என்று வினவு தோழர்கள் கணக்கு கேட்கிறார்கள். இதையடுத்து பத்ரி மீண்டும் தன்னுடைய ஆய்வை மீளாய்வு செய்யும் விதமாக சுர்ஜித் பல்லாவின் கட்டுரை அடிப்படையில் இன்று ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் சுமாரான ஏழை மக்கள் ஒரு நாளைக்கு உணவுக்காக ரூ.12/-தான் செலவழிக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. பணக்கார நகரகப் பகுதிகளிலேயே கூட ரூ.40/-தான் செலவழிக்கப்படுகிறதாம். நிலைமை இப்படியிருக்கையில் வினவுதோழர்களின் கேள்விகளையும், பதிவையும் நாம் கேலிக்குரியதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

உண்மையில் ரூ.12/- என்பதே அதிகமென்றுதான் நமக்கு தோன்றுகிறது. இந்தியாவில் ஏராளமான காடுகள் இருக்கின்றன. அங்கே கிழங்குகளும், பழங்களும் இலவசமாகவே காய்க்கின்றன. அவற்றை பறித்து உண்பதை விட்டுவிட்டு மக்கள் தொழிற்சாலைகளிலும், நிலங்களிலும் இயந்திரங்கள் மாதிரி உழைத்து பிழைப்பது என்பது இயற்கைக்கு முரணானதும், வெறும் ஆடம்பர மோகமுமே ஆகும். கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ், ஓலை கூரைகளுக்கு கீழேதான் வசிக்கவேண்டும் என்று மக்கள் அடம்பிடிப்பது நியாயமுமல்ல. மலையிலும், காடுகளிலும் குகைகள் அமைத்து ஐந்து பைசா வாடகைச்செலவு இல்லாமல் வசிக்க முடியுமே? போத்தீஸிலும், சென்னை சில்க்கிலும் ஆடி தள்ளுபடியில் உடைவாங்கி அணிந்தால்தான் உடையா.. ஆதிமனிதன் அப்படிதான் உடை அணிந்தானா.. இலைகளும், தழைகளும் இலவசம்தானே? நதிகளும், குளங்களும், குட்டைகளும் ஓசியில்தானே அமைந்திருக்கின்றன... அவற்றில் நீர் அள்ளிக் குடித்தால் தாகம் அடங்காதா?

ஏழை மக்கள் எனப்படுகிறவர்கள் டாஸ்மாக், சினிமா, பீடி, சிகரெட்டு, பாக்கு என்று ஆடம்பரமாக வீண்செலவு செய்வதால்தான் இன்று நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. அரை பவுன் தங்கத்தில் தாலி செய்துப் போட்டால்தான் அவர்களுக்கு தாலிபாக்கியம் நிற்குமா? ஏன்.. வெள்ளி, பித்தளையெல்லாம் வேலைக்கு ஆகாதா.. டைரக்டாக ஹீரோதானா?

பத்ரி பெரிய மனது வைத்து, ஏழைகளுக்கு விலையுயர்ந்த உணவு தரவேண்டும் என்பது வெறுங்கனவு என்று சொல்லியிருக்கிறார். ஏழைகளுக்கு வீடு, கல்வி, போக்குவரத்து, லொட்டு லொசுக்கெல்லாம் கூட அனாவசியமான கனவுதான். ஆரண்ய காண்டத்தில் ராமபிரான் எப்படி வாழ்ந்தார்.. அவருக்கென்ன உணவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12/-ஆ தேவைப்பட்டது.. அவரும் சீதைபிராட்டியும், லட்சுமணனும் ஆயிரக்கணக்கில் செலவு செய்தா வாழ்ந்தார்கள்... அவர்களை மாதிரி அனைவரும் மனது வைத்தால் வாழ முடியாதா... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் ஏழைகள் மட்டுமல்ல, யாருமே வசிக்க, உயிர்வாழ பணமே தேவையில்லை என்பதுதான் நிதர்சனம். இது புரியாமல், இந்திய அரசாங்கமும் அதன் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களும் மிகத்தாராளமாக நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டை எதிர்ப்பது முட்டாள்த்தனம்.

2 ஆகஸ்ட், 2013

இந்திய சாலைகளின் ராஜா!

ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் கொடிகட்டிப் பறந்த அம்பாஸடர் கார்தான் உலகிலேயே மிகச்சிறந்த டாக்ஸி என்கிறது பி.பி.சி. நடத்திய ’டாப்கீர்’ வாக்கெடுப்பு. அம்பாஸடரின் பெருமிதப் பின்னணி இங்கே...
யானையின் கம்பீரம். புலியின் பாய்ச்சல். இந்த இரண்டின் பெருமையான கலவைதான் அம்பாஸடர் கார். வெளிநாடுகளில் இந்தியா என்றாலே அம்பாஸடரும் நினைவுக்கு வரும் வகையில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாகனம். இந்தியாவில் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் சிகப்பு விளக்கு, மற்ற எந்த வாகனத்தையும் விட அம்பாஸடரின் தலைக்குதான் பொருத்தமாக அமைகிறது.

அம்பாஸிடர் என்றால் அப்படியொரு நம்பிக்கை. பாதுகாப்பான கார் என்பதால் மட்டுமல்ல, அம்பாஸடரில் வருபவர்கள் நாணயமானவர்கள் என்று அனைவரும் நம்புமளவுக்கும் கூட (எனவேதான் டிசம்பர் 2001ல் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகள் அம்பாஸடர் காரை பயன்படுத்தினார்கள். சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட அம்பாஸடரை இந்தியாவில் எந்த காவலருமே மறித்து சோதிக்கமாட்டார்கள் என்று தீவிரவாதிகளுக்கு தெரியும்).

இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் 1948ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் தயாரிப்பான மோரிஸ் ஆக்ஸ்போர்ட் காரை பிரதியெடுத்து லேண்ட் மாஸ்டர் என்றொரு காரை முதன்முதலாக உருவாக்கினார்கள். ஐம்பதுகளின் இறுதியில் அம்பாஸடர் என்கிற பெயரோடு மார்க்-1 வகை கார்கள் சாலைகளுக்கு வந்தது. ‘இந்தியனாக இருப்போம், இந்தியப் பொருட்களையே வாங்குவோம்’ என்கிற கோஷம் பிரபலமாக ஒலித்துக் கொண்டிருந்த அந்த காலத்தில் முழுக்க இந்தியத் தயாரிப்பாக வந்த அம்பாஸடர் பெரும் வெற்றி கண்டது.

1500 சிசி ஆற்றல். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் என்கிற அம்பாஸடரின் ஆற்றலும் கார் பிரியர்களை கவர்ந்தது. ஒரு பெரிய குடும்பமே தாராளமாக நெருக்கடி இல்லாமல் அமரலாம். அதிகமான பயணச்சுமைகளை டிக்கியில் அடுக்கலாம். பொலிவான ‘ராயல்’ தோற்றம். நிலச்சுவான்தார்களும், பண்ணையார்களும், அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு அம்பாஸடரை வாங்கினார்கள். வீட்டுக்கு முன்பாக ஒரு கார் நிற்பது குடும்பத்தின் கவுரவத்தை பறைசாற்றும் அம்சமாகவும் அப்போது கவனிக்கப்பட்டது.

64ல் மார்க்-2 கொஞ்சம் மாற்றங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளின் ராஜா இதுதான். 75ல் மார்க்-3. அப்போதைய விலை ரூ.18,000/-தான். நான்கே ஆண்டுகளில் 79ல் மார்க்-4 சாலைகளில் ஓடத்தொடங்கியது. 1990 வரை இதே மாடல்தான்.

இந்த காலக்கட்டத்தில் மோட்டார் வாகனம் என்றாலே அம்பாஸடர்தான் என்று மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்திருந்தது. டாக்ஸியிலிருந்து, குடும்ப உபயோகம் வரை அம்பாஸடரே வசதியாக இருந்தது. போட்டி நிறுவனங்களில் தொல்லையை அனாயசமாக முறியடித்தது அம்பாஸடர். ஃபியட் நிறுவனத்தின் ப்ரீமியர் பத்மினி போன்ற கார்கள் சந்தைக்கு வந்திருந்தாலும், வடிவமைப்பில் எந்த பெரிய மாற்றங்களையும் செய்யாமல் அம்பாஸடரின் கொடி உயரப் பறந்தது.

ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் நிலைமை வெகுவாக மாறத்தொடங்கியது. மெட்ரோ நகரங்களின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசு தன்னுடைய மோட்டார் கொள்கைகளை லேசாக தளர்த்திக் கொண்டது. சுஸுகி நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு மாருதி காரை மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தது. அளவில் சிறியதாக, போக்குவரத்து நெரிசலை தாக்குப்பிடித்து ஓட்டுவதற்கு வாகாக வந்த மாருதிகார்களை ‘தீப்பெட்டி கார்’கள் என்று செல்லமாக அழைத்து மக்கள் வரவேற்கத் தொடங்கினார்கள். அடுத்த இருபது ஆண்டுகளுக்கு – ஹுண்டாய், ஹோண்டா, ஃபோர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளே வரும் வரை – மாருதி கார்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டன.

எண்பதுகளின் இறுதியில் நிலைமை கையை மீறிப்போவதை ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் உணர்ந்தது. இந்திய சந்தையை மட்டும் இனி நம்பி பிரயோசனமில்லை என்று ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. துபாயில் டெலிவரி செய்ய வாகான வாகனமாக அம்பாஸடரே கருதப்பட்டது. அங்கு விற்பனைக்கு கிடைத்த மற்ற வாகனங்களை ஒப்பிடுகையில் அம்பாஸடரின் விலை கணிசமான அளவில் குறைவு. மட்டுமின்றி உழைப்பிலும் அம்பாஸடரை அடித்துக்கொள்ள ஆளில்லை.

1990ல் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய அம்பாஸடர் நோவா, அந்நிறுவனத்தின் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தது. பழைய என்ஜின் மாற்றப்பட்டு சக்திவாய்ந்த 1800 சி.சி. புதிய என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டது. நோவா வகை கார்களில் டீசல் என்ஜின்களும் கிடைத்தன. புதிய இசிஸூ என்ஜின்களின் ஆற்றலால் அதிகபட்சமாக 140 கி.மீ. வேகம் வரை கார்களை இயக்க முடிந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்பாஸடர் கிராண்ட், அவிகோ என்று நிறைய மாடல்களை கொண்டுவந்தாலும், அது தன்னுடைய பழம்பெருமையை மீட்டுவிட முடியவில்லை. ஒரு காலக்கட்டத்தின் அடையாளமாகவே தேங்கிவிட்டது.

ஆனாலும் இராணுவம், காவல்துறை, தலைமைச் செயலகங்கள், அரசு அலுவலகங்கள் என்று இன்றும் அரசு தொடர்பான இடங்களில் அம்பாஸடரின் ஆளுமை குறையவேயில்லை. இடையில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வி.வி.ஐ.பி.களுக்கு பி.எம்.டபிள்யூ கார்களை வாங்க முடிவு செய்தது. ஆனால் 2004ல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அம்முடிவை மாற்றி அம்பாஸடருக்கே ‘ஜே’ போட்டது. அதன் விளைவுதான் நம்முடைய பாராளுமன்றத்தை எப்போதும் சுற்றி நிற்கிறது அம்பாஸடர் அணிவகுப்பு.

விலை மலிவான கார்களின் வருகையால் பெருநகரங்களின் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் அம்பாஸடர்கள் மறைந்துகொண்டே வரலாம். ஒரே தயாரிப்பு எல்லா காலங்களையும் ஆளுவது சாத்தியமுமில்லை. ஆனால் அம்பாஸடர் நம்முடைய பாரம்பரியப் பெருமை. அதன் நினைவுகளை இந்தியா அத்தனை சீக்கிரமாக இழந்துவிடாது.


அம்பாஸடருக்கு ஆறுதல்!

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப் போனால் அம்பாஸடர் கார்களின் விற்பனை இப்போது அதலபாதாளத்தில்தான் இருக்கிறது. 2012-13 ஆண்டில் 3,390 கார்களை மட்டுமே அது விற்பனை செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் பன்னிரெண்டு வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு கார் விற்பனை படுமந்தமாக இருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் மற்ற கார்களை ஒப்பிடும்போது அம்பாஸடரின் விற்பனை மட்டும் 166 சதவிகிதம் பெருகியிருப்பதாக அதே கணக்கீடு கூறுகிறது. ஹிந்துஸ்தான் மோட்டாருக்கு ஒரே ஆறுதலான அம்சம் இதுதான். இதையடுத்து பீகார், ஒரிஸ்ஸா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் விற்பனையாளர்களை நியமித்து கார் விற்பனையை பெருக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)