அனிலின் அப்பா ஒரு பிசினஸ்மேன். அம்மா எப்போதும் ஷாப்பிங், ஷாப்பிங் என்று அலைந்துக் கொண்டிருப்பவள். அம்மாவை மாதிரி ஒரு பெண்ணை மட்டும் மணந்துவிடக்கூடாது என்று சபதம் எடுத்திருப்பவன். எப்போது பார்த்தாலும் திருமணத்துக்காக வற்புறுத்தும் அம்மாவிடமிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என்று காத்துக் கொண்டிருப்பவன்.
அனன்யாவின் அப்பா ஒரு டிவி பர்சனாலிட்டி. அம்மா ஹவுஸ் வைஃப். காதலித்து மணந்தவர்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவியின் தனித்திறமைகளை மதிக்காத அப்பா. அப்பாவை மாதிரி ஓர் ஆணாதிக்கவாதி தனக்கு கணவனாக வந்துவிட்டால் என்னாகும் என்று அனன்யாவுக்கு கலக்கம்.
ஒரு வேலை விஷயமாக ஹைதராபாத்துக்கு வருகிறான் அனில். அங்கே அனன்யாவைப் பார்க்கிறான். முதல் சந்திப்பிலேயே அவனை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறாள். பதிலுக்கு அனிலும் அவளை அதைவிட ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறான். அடுத்தடுத்த சந்திப்புகளில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்திக் கொள்கிறார்கள். இவள் நம் அம்மா மாதிரி அல்ல என்று அனிலும், இவன் நம் அப்பா மாதிரி அல்ல என்று அனன்யாவும் உணர்கிறார்கள்.
ஒரு மஞ்சளான மாலை வேளையில் திடீரென்று அனன்யா கேட்கிறாள்.
“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“ஓக்கே”
“என்னது?”
“கல்யாணத்துக்கு ஓக்கேன்னு சொன்னேன்”
அதுவரை அவர்களுக்குள் காதல் இருந்ததற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. எல்லாமே நல்லபடியாக முடிந்துவிட்டால் இடைவேளையிலேயே ‘சுபம்’ போடவேண்டி இருக்கும் இல்லையா? எனவே ஒரு முரணை உள்நுழைக்கிறார் இயக்குனர்.
“ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் இவன் நம்ம அப்பாவை மாதிரி ஆயிடுவானோ?”
“ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் இவ நம்ம அம்மாவை மாதிரி மாறிடுவாளோ?”
இருவருக்குமே அவசரப்பட்டு புரபோஸ் செய்துவிட்டோமோ என்று சஞ்சலம். கூடிப்பேசி ஒரு தீர்வை கண்டறிகிறார்கள்.
“வீடியோ கேம்ஸுக்கெல்லாம் ஒரு டெமோ வெர்ஷன் இருக்குற மாதிரி, லைஃபுக்கும் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?” சாதாரணமாகதான் சொன்னாள் அனன்யா.
ஆனால், அந்த ஐடியா அனிலுக்கு ‘ஓக்கே’ என்றுதான் தோன்றியது.
“நாற்பது நாள். ஒரு ஃப்ளாட் எடுத்து தங்கலாம். நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃபா வாழணும். லிவிங் டூ கெதர் மாதிரி இல்லை. சின்ன வயசுலே அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவோமில்லை, அதுமாதிரி. இந்த நாற்பது நாளில் நாம லைஃப் முழுக்க சந்தோஷமா வாழமுடியுமான்னு தெரிஞ்சிடும். ஓக்கேன்னா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைன்னா ஃபிரண்ட்ஸாவே இருந்துடலாம்”
அனிலின் திட்டம் அனன்யாவுக்கு ஓக்கே. அப்பா அம்மா விளையாட்டு சரி. ஆனா ‘அது’ மட்டும் நோ என்கிற நிபந்தனையோடு ஒப்புக் கொள்கிறாள். இது ஒரு ரகசிய விளையாட்டு. யாருக்கும் தெரியாது. விளையாட்டு ஆரம்பிக்கிறது.
முடிவு என்ன என்பதை ‘அந்தக்க முந்து; ஆ தரவாத்த’ (அதாவது ‘அதற்கு முன்பு; அதற்குப் பின்பு’ என்று அர்த்தம்) படம் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். தெலுங்கு தெரியாது என்றால், தமிழில் ‘வணக்கம் சென்னை’யாகவோ, ‘ராஜா ராணி’யாகவோ வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ, இவர்களும் அங்கிருந்தே எடுக்கப் போகிறார்கள்.
படம் முழுக்கவே ஆணுக்கும், பெண்ணுக்குமான பொதுவான உறவுமுறைகளை பேசுகிறது. இருவருக்குமான அடிப்படை உளவியல் வேறுபாடுகளை அலசுகிறது. உடலும் சரி, மனமும் சரி. இருவருமே வேறு வேறான உலகத்தில் வாழ்கிறார்கள். ஆணின் உலகத்தை பெண்களும், பெண்களின் உலகத்தை ஆண்களும் உணரவே முடியாத யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. ஆனாலும் ஆணும், பெண்ணும் சேர்ந்துவாழ வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ரோகிணி, மதுபாலா என்று நம்முடைய முன்னாள் கதாநாயகிகள். நாயகனுக்கும், நாயகிக்கும் அம்மாக்களாக வருகிறார்கள். க்ளைமேக்ஸில் வசனங்களே இல்லாமல் கண்களால் ரோகிணி நடிக்கும் நடிப்பு பர்ஸ்ட் க்ளாஸ். இருபது ஆண்டுகளுக்கு முந்தைய ஜெண்டில்மேன் மதுபாலாவாகவே இளமையாக –இன்னும் ஒல்லியாக- இருக்கிறார். கொஞ்சூண்டு சதை போட்டால் ரஜினி-கமலுக்கு ஹீரோயினாகவே இன்னும் நடிக்கலாம்.
நாயகனாக நடித்த சுமந்த் அஸ்வினுக்கு இது இரண்டாவது படம். ஆக்ஷன் மசலா படங்கள், தெலுங்கானா சி.எம். கனவு என்பதெல்லாம் இல்லாமல் இருந்தால் கொஞ்ச காலத்துக்கு லவ்வர்பாயாகவே நிலைப்பார். நாயகி ஈஷாவுக்கு முதல் படம். தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிப்பதற்குரிய ஆதாரமான விஷயங்கள் ஈஷாவிடம் தென்படுகின்றன. இயக்குனர் மோகனகிருஷ்ண இந்திராகாந்தி தன்னுடைய முதல் படமான கிரகணம் மூலமாக தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்று குவித்தவர். அடுத்து சுமாராக சில படங்களை எடுத்து, இப்போது குறிப்பிடத்தக்க வணிக வெற்றியை பெற்றிருக்கிறார். உண்மையில் இப்படத்தின் ஹீரோக்கள் என்றால் கேமிராமேனும், ஆர்ட்டைரக்டரும்தான். ஒரு லோ பட்ஜெட் படத்தில், ஒவ்வொரு ஃப்ரேமையும் இவ்வளவு ரிச்சாக அவர்கள் உருவாக்கி இருப்பதால்தான் ஆந்திர மல்ட்டிப்ளெக்ஸ்கள் ‘அந்தக்க முந்து; ஆ தரவாத்த’வை கொண்டாடித் தீர்க்கின்றன.
அடுத்த வீட்டு அந்தரங்கத்தை திருட்டுத்தனமாக எட்டிப் பார்க்கும் சுவாரஸ்ய அனுபவத்தை பார்வையாளனுக்கு இப்படம் வழங்குகிறது.