சட்டென்று ஜெயமோகனின் தேர்வு, தங்கமீன்களின் அச்சாணியாய் தோன்றுகிறது. மாலனின் தப்புக்கணக்கு சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் நிறைய இலக்கியப் பிரதிகளின் பாதிப்பை உணரலாம்.
தங்கமீன்களை விளம்பரப்படுத்த்துவதைப் போல இது வெறும் அப்பாவுக்கும், மகளுக்குமான கதையாக மட்டும் தோன்றவில்லை. மகளை பெற்ற அப்பாவுக்குதான் இந்த படம் பிடிக்கும் என்றுகூட ஃபேஸ்புக்கில் யாரோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். அப்பா – மகன், மாமியார் – மருமகள், அண்ணன் – தங்கை, ஆசிரியை – மாணவி, பெற்றோர் – ஆசிரியர், பணம் வைத்திருப்போர் – பணம் இல்லாதவர், சுரண்டுபவர் - ஒடுக்கப்படுபவர் என்று நிறைய முரண்களை உள்ளடக்கிய கதை. பட முழுக்க ஏராளமான சிறுகதைகள். எதுவுமே சிதறிவிடாமல் ஒழுங்காக கோர்த்து நேர்த்தியான படமாக்கியிருக்கிறார் ராம். வேண்டுமானால் நம்முடைய ஈகோவை திருப்திப்படுத்திக் கொள்ள ஒரு சில குறைகளை தேடி கண்டுபிடித்து பட்டியலிட்டுக் கொள்ளலாம். ஒருவேளை இரண்டரை மணி நேர பொழுதுபோக்குக்காக மட்டுமே யாரேனும் தங்கமீன்களுக்கு போயிருந்தால், அவர்கள் ஏமாற்றமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
காட்சிகளில் யதார்த்தமில்லை என்று தங்கமீன்களை நண்பர் ஒருவர் விமர்சித்தார். வாழ்வியல் சம்பவங்களே மிகையாய், நாடகமாய் நடந்துக் கொண்டிருக்கும் சூழல் இது. சினிமா ஏன் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு காக்கா வந்து சொல்லிச்சா?” மாதிரி வசனங்களும், காட்சிகளும் கொஞ்சம் மிகையாய், அபத்தமாய் இருப்பது உண்மைதான். அதனாலென்ன. பராசக்தி இறுதிக்காட்சியில் சிவாஜி முழம், முழமாய் பேசியதைப் போல கோர்ட்டில் யாரேனும் பேச முடியுமா. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மாபெரும் காவியம் என்று ஒப்புக்கொள்ளும் நாம், தங்கமீன்கள் மட்டும் பக்கத்து வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்கும் காட்சியனுபவத்தை தரவேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கவேண்டும்? ராம் இம்மாதிரி காட்சிகளின் மூலமாக வெளிப்படுத்த விரும்பும் உணர்வை மட்டும் புரிந்துக்கொண்டால் போதுமில்லையா? தன்னுடைய மகள் கொஞ்சம் மந்தமானவள் என்று சுட்டிக் காட்டுபவர்களிடம், அப்படி நம்ப விரும்பாத ஒரு தகப்பன் கொஞ்சம் ஆவேசமாக (லூசுத்தனமாகக்கூட) நடந்துக்கொள்வதில் என்ன பெரிய லாஜிக் மிஸ்டேக் வந்து தொலைக்கப் போகிறது?
படத்தின் திரைக்கதை கட்டுமானமே ஃபேண்டஸியோடு கலந்த நடப்பு சமூக, குடும்ப சம்பவங்கள்தான். தாத்தாவோ, பாட்டியோ கதை சொல்லும்போது அதில் லாஜிக்கலாக குறுக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தோமானால் கதையனுபவம் சுவாரஸ்யப்படாது.
“காசு இல்லாதவன்னா, அவனை முட்டாள்னு நெனைக்காதீங்கடா”
“நானும் செல்லம்மா மாதிரி தானேங்க?”
“காசு இல்லாதது பிரச்சினை இல்லை. காசு நிறைய இருக்குற இடத்துலே நாம மட்டும் காசு இல்லாம இருக்குறதுதான் பெரிய பிரச்சினை”
“அவன் ரொம்ப நல்லவன். கொஞ்சம் கெட்டவனாதான் திரும்பி வரட்டுமே?”
“உங்க கிட்டே நான் விட்டுட்டுப் போனது குழந்தையை. அதை கொன்னுட்டீங்க. அந்த ஸ்கூல் கொன்னுடிச்சி”
படம் நெடுக இம்மாதிரி ஒன்லைனர்களால் பார்வையாளனின் மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். அச்சு பிச்சு பஞ்ச்லைன்களுக்கு விசில் அடித்த நாம், உடனடியாக தங்கமீன்கள் மாதிரியான படத்தோடு ஒன்றுவது கொஞ்சம் கடினம்தான். அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களின் genreல் இதை சேர்க்கலாம்.

இதே கதையை ஏதேனும் ஐரோப்பிய படத்திலோ, கொரியன் படத்திலோ சப்-டைட்டிலின் உதவியோடு பார்த்தால் உருகி, உருகி மாய்ந்துவிடுவோம். தமிழ் பேசும் தமிழ் மாந்தர்களின் கதை என்பதாலும், தமிழர்கள் உருவாக்கிய திரைப்படம் என்பதாலும் தங்கமீன்கள் நமக்கு கொஞ்சம் இளப்பமாய் தோன்றுகிறதோ என்னவோ?