2 செப்டம்பர், 2013

தங்க மீன்கள்

படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே திக்குத்தெரியாத காட்டில் வழிதெரியாமல் அலைந்துக் கொண்டிருப்பதற்கான உணர்வு. ‘தெரியாத்தனமா மாட்டிக்கிட்டோமோ’ என்றுதான் இடைவேளையின் போதும் கூட தோன்றியது. இவரே ஏன் நடித்துத் தொலைத்தார் என்று கோபம் கூட வந்தது. இயக்குனர் ராம் பெரிய இண்டெலக்ச்சுவல். அவருடைய சிந்தனையின் வேகத்தோடு கூடவே ஓடிவருவது, நம்மைப் போன்ற சாதாரண கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு சாத்தியமில்லை. அதுவுமின்றி craftஐ அவர் கண்ட்ரோல் செய்யும் ஸ்டைல் நமக்குப் புதுசு. இடைவேளைக்குப் பிறகு படத்தோடு செட்டில் ஆக முடிகிறது. இயக்குனர் ராமும், நடிகர் ராமும் விஸ்வரூபம் எடுக்கும் கட்டம் இது. பாலிவுட்டில் இருந்தெல்லாம் டிஸ்கஷனுக்கு ராமை கூப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

சட்டென்று ஜெயமோகனின் தேர்வு, தங்கமீன்களின் அச்சாணியாய் தோன்றுகிறது. மாலனின் தப்புக்கணக்கு சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் நிறைய இலக்கியப் பிரதிகளின் பாதிப்பை உணரலாம்.

தங்கமீன்களை விளம்பரப்படுத்த்துவதைப் போல இது வெறும் அப்பாவுக்கும், மகளுக்குமான கதையாக மட்டும் தோன்றவில்லை. மகளை பெற்ற அப்பாவுக்குதான் இந்த படம் பிடிக்கும் என்றுகூட ஃபேஸ்புக்கில் யாரோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். அப்பா – மகன், மாமியார் – மருமகள், அண்ணன் – தங்கை, ஆசிரியை – மாணவி, பெற்றோர் – ஆசிரியர், பணம் வைத்திருப்போர் – பணம் இல்லாதவர், சுரண்டுபவர் - ஒடுக்கப்படுபவர் என்று நிறைய முரண்களை உள்ளடக்கிய கதை. பட முழுக்க ஏராளமான சிறுகதைகள். எதுவுமே சிதறிவிடாமல் ஒழுங்காக கோர்த்து நேர்த்தியான படமாக்கியிருக்கிறார் ராம். வேண்டுமானால் நம்முடைய ஈகோவை திருப்திப்படுத்திக் கொள்ள ஒரு சில குறைகளை தேடி கண்டுபிடித்து பட்டியலிட்டுக் கொள்ளலாம். ஒருவேளை இரண்டரை மணி நேர பொழுதுபோக்குக்காக மட்டுமே யாரேனும் தங்கமீன்களுக்கு போயிருந்தால், அவர்கள் ஏமாற்றமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

காட்சிகளில் யதார்த்தமில்லை என்று தங்கமீன்களை நண்பர் ஒருவர் விமர்சித்தார். வாழ்வியல் சம்பவங்களே மிகையாய், நாடகமாய் நடந்துக் கொண்டிருக்கும் சூழல் இது. சினிமா ஏன் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு காக்கா வந்து சொல்லிச்சா?” மாதிரி வசனங்களும், காட்சிகளும் கொஞ்சம் மிகையாய், அபத்தமாய் இருப்பது உண்மைதான். அதனாலென்ன. பராசக்தி இறுதிக்காட்சியில் சிவாஜி முழம், முழமாய் பேசியதைப் போல கோர்ட்டில் யாரேனும் பேச முடியுமா. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மாபெரும் காவியம் என்று ஒப்புக்கொள்ளும் நாம், தங்கமீன்கள் மட்டும் பக்கத்து வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்கும் காட்சியனுபவத்தை தரவேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கவேண்டும்? ராம் இம்மாதிரி காட்சிகளின் மூலமாக வெளிப்படுத்த விரும்பும் உணர்வை மட்டும் புரிந்துக்கொண்டால் போதுமில்லையா? தன்னுடைய மகள் கொஞ்சம் மந்தமானவள் என்று சுட்டிக் காட்டுபவர்களிடம், அப்படி நம்ப விரும்பாத ஒரு தகப்பன் கொஞ்சம் ஆவேசமாக (லூசுத்தனமாகக்கூட) நடந்துக்கொள்வதில் என்ன பெரிய லாஜிக் மிஸ்டேக் வந்து தொலைக்கப் போகிறது?

படத்தின் திரைக்கதை கட்டுமானமே ஃபேண்டஸியோடு கலந்த நடப்பு சமூக, குடும்ப சம்பவங்கள்தான். தாத்தாவோ, பாட்டியோ கதை சொல்லும்போது அதில் லாஜிக்கலாக குறுக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தோமானால் கதையனுபவம் சுவாரஸ்யப்படாது.

“காசு இல்லாதவன்னா, அவனை முட்டாள்னு நெனைக்காதீங்கடா”

“நானும் செல்லம்மா மாதிரி தானேங்க?”

“காசு இல்லாதது பிரச்சினை இல்லை. காசு நிறைய இருக்குற இடத்துலே நாம மட்டும் காசு இல்லாம இருக்குறதுதான் பெரிய பிரச்சினை”

“அவன் ரொம்ப நல்லவன். கொஞ்சம் கெட்டவனாதான் திரும்பி வரட்டுமே?”

“உங்க கிட்டே நான் விட்டுட்டுப் போனது குழந்தையை. அதை கொன்னுட்டீங்க. அந்த ஸ்கூல் கொன்னுடிச்சி”

படம் நெடுக இம்மாதிரி ஒன்லைனர்களால் பார்வையாளனின் மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். அச்சு பிச்சு பஞ்ச்லைன்களுக்கு விசில் அடித்த நாம், உடனடியாக தங்கமீன்கள் மாதிரியான படத்தோடு ஒன்றுவது கொஞ்சம் கடினம்தான். அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களின் genreல் இதை சேர்க்கலாம்.

இதே கதையை ஏதேனும் ஐரோப்பிய படத்திலோ, கொரியன் படத்திலோ சப்-டைட்டிலின் உதவியோடு பார்த்தால் உருகி, உருகி மாய்ந்துவிடுவோம். தமிழ் பேசும் தமிழ் மாந்தர்களின் கதை என்பதாலும், தமிழர்கள் உருவாக்கிய திரைப்படம் என்பதாலும் தங்கமீன்கள் நமக்கு கொஞ்சம் இளப்பமாய் தோன்றுகிறதோ என்னவோ?

13 கருத்துகள்:

  1. "இதே கதையை ஏதேனும் ஐரோப்பிய படத்திலோ, கொரியன் படத்திலோ சப்-டைட்டிலின் உதவியோடு பார்த்தால் உருகி, உருகி மாய்ந்துவிடுவோம். தமிழ் பேசும் தமிழ் மாந்தர்களின் கதை என்பதாலும், தமிழர்கள் உருவாக்கிய திரைப்படம் என்பதாலும் தங்கமீன்கள் நமக்கு கொஞ்சம் இளப்பமாய் தோன்றுகிறதோ என்னவோ?"

    100% correct..

    பதிலளிநீக்கு
  2. Good review lucky. I'm glad to read such a nice review for this movie. I request to all the bloggers and blog readers to help on promoting this movie and please watch in theater. It's very easy to direct a movie with 4 fight scenes, few items songs and Santhanam comedy (even without a story). But a person with very good skill on story and screenplay only can direct a movie like this.
    We like fast food rather than our traditional foods even though we know that fast food is not good for our health. So I mean to say that we have to support movies like this, then only directors will think of filming some nice stories. Otherwise even good directors will end up in taking masala movies for survival.
    - Raghothaman

    பதிலளிநீக்கு
  3. "இதே கதையை ஏதேனும் ஐரோப்பிய படத்திலோ, கொரியன் படத்திலோ சப்-டைட்டிலின் உதவியோடு பார்த்தால் உருகி, உருகி மாய்ந்துவிடுவோம். தமிழ் பேசும் தமிழ் மாந்தர்களின் கதை என்பதாலும், தமிழர்கள் உருவாக்கிய திரைப்படம் என்பதாலும் தங்கமீன்கள் நமக்கு கொஞ்சம் இளப்பமாய் தோன்றுகிறதோ என்னவோ?"

    true

    பதிலளிநீக்கு
  4. "தங்க மீன்கள் " - ஒரு சிறுகதையாகவோ ,ஒரு நாவலாகவோ இருந்திருந்தால் ரசிக்கலாம் .ஒரு சினிமாவாக இந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை .ராம் தனது எண்ணத்தை பிரதிபளித்துள்ளார் அவ்வளவு தான் .ராம் காட்டும் முக பாவங்கள் ஏற்கனவே சேரன் படங்களில் பார்த்தது தான் ."தங்க மீனாகப் போறேன் " இந்த மாதிரியான கதைகளை குழந்தைகளுக்குச் சொல்வது மிகவும் ஆபத்து . ஒன்று தனியார் பள்ளிகளின் அடாவடிகளை இன்னும் விரிவாக காட்டியிருக்கலாம் அல்லது பள்ளிப் பருவத்திலேயே காதலித்து திருமணம் செய்ததால் நம் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் காட்டியிருக்கலாம் .இரண்டையும் காட்ட முயற்சி செய்து இரண்டிலும் வெற்றி பெறவில்லை .

    பதிலளிநீக்கு