சிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.
பெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.
மழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.
“உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”
ஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு?
“ஆனா... இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.
“இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.
“நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.
இதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.
நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.
அந்த கதை என்னவென்றால்...?
‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.
திராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.
எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண்ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.
திண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
“நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”
“நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”
“திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”
“பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.
“தோ வரேன். ரெடியா இரு”
தோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.
மறுநாளும் போன்.
“திண்டுக்கல்லே எங்கே இருக்கே?”
“அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”
“நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”
வரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.
“ஹலோ தோழர்... கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது...”
“சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்?”
மூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.
“வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”
க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.
“டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”
“சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”
“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”
வரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.
“தலை... எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.
“அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.
மறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.
“சென்னைக்கு வந்திருக்கேன் லக்கி”
“என்ன திடீர்னு”
“அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.
ஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
“கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.
மதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.
“பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.
“இதுக்கு மேலேயும் வருவான்னு நம்பிக்கை இருக்கா தோழர்?”
“கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”
மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.
“சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.
தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா......
கடைசி வரைக்கும் அவன் வரவே இல்லையே....
ஒரு வேளை அந்த விடாது கருப்பா இருக்குமோ,... இல்லையின்னா செந்தழல் ரவியா இருக்குமோ.. மொத்தத்தில எவனோ நல்லா கலாய்ச்சிருக்கான்னு தெரியுது.
பதிலளிநீக்குபிரமாதம்
பதிலளிநீக்குசெம பாஸ்.... சிரிச்சுகிட்டே படிச்சுட்டு இருந்தேன்....
பதிலளிநீக்குwhy varavanaiyan is not blogging nowadays?
பதிலளிநீக்குஅய்யா,வணக்கம் நல்லாருக்குறீங்களா, கொஞ்சம் வேலையா இருந்தேன், பொம்பளை புள்ள ரெண்டு வயசாகுது, இப்ப ஃபிரீதான் இனி எழுதறேன் !
நீக்குwhat's the connection with the photo and the topic? you too Yuva ?!
பதிலளிநீக்குஹஹஹா..லக்கி ப்ராண்ட் பதிவு :)))
பதிலளிநீக்குSuperb..
பதிலளிநீக்குபடித்து சிரித்து மகிழ்ந்தேன் .
பதிலளிநீக்குஎத்தனை விதமான கற்பனைகள் ,தவறு ,உண்மைகள்
'அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.
ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா...”
எல்லோருக்கும் இந்த மாதிரி ஆள் தெரியாத அழைப்புகள் வந்த தொல்லைகள் உண்டு
இதில் விளம்பர அழைப்பு தொல்லைகள் வேறு .தொலைபேசி தொல்லைபேசியாக மாறி வருகிறது
//நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.// ROFL :)))))
பதிலளிநீக்கு//“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”//
அதுக்கு முன்னாடி எதோ கொண்டபள்ளி சீதாராமய்யாவே வரப்போற மாதிரி அசோக்பில்லருக்கு வா ! உதயம் தியேட்டாராண்ட வா !ன்னு இல்லாத சீனை போட்டு அலைகழிச்சு என்னை ஏரியா ஏரியாவுக்கு போய் தண்ணியடிக்க வச்சதுதான் மிச்சம் :P
அது சரி மேலை இருக்குற ஃபோட்டோ என்ன "புல்லுகட்டு முத்தம்மா" நேத்திக்கி 50வது நாளு அதை முன்னிட்டா?
thanks kutta pushky. hearty welcome!
பதிலளிநீக்குTHE REAL LUCKY STYLE OF WRITING...EXCELLENT SIR....LOL....இப்படிக்கு யுவகிருஷ்ணவின் "ஆடு"
பதிலளிநீக்குநாட்டிலுள்ள பிரச்சினைகள் ஏராளம், அதையெல்லாம் நாம எப்படிதான் தீர்க்கறதுன்னு தெரியலையேன்னு காலையிலிருந்து மூட் அவுட்ல இருந்தேன் தம்பி. யெப்பா, ரொம்ப நாளைக்கு அப்புறம் உன் ஸ்டைல்ல நீ எழுதியிருக்கிற இந்த கட்டுரைய படிச்சுக்கிட்டே சிரிச்சு என் டென்ஷனெல்லாம் போச்சுப்பா...போதும்ப்பா இதுக்கு பிறகு நீ ரெண்டு மொக்கை பதிவு போட்டாலும் படிக்க தயாரா இருக்கேன் நைனா...ஹா.......ஹா....அப்பாடி வயிறு வலிக்குதே...
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்கு