தமிழ்ப் படங்களிடம் –குறிப்பாக மசாலாப் படங்களிடம்-
லாஜிக்கோ, சமூக பொறுப்புணர்வையோ அல்லது வேறு ஏதேனும் கருமாந்திரத்தையோ நாம்
எதிர்ப்பார்க்க வேண்டியது அவசியமில்லை. சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள்
தரத்தில் சுமாராக இருந்தாலும் கூட அவற்றை குறைகூறி விமர்சிப்பது நம் கொள்கையல்ல. குமுதம்
நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் இது. ஆனால், தமிழகத்தின்
சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றினை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும்
வேலையை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் செய்திருக்கிறது எனும்போது அதை
சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.
தர்மபுரியில் தொடங்கி மரக்காணம்
வரை என்னென்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். வடமாநிலங்களில்
வழக்கத்திலிருக்கும் கவுரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டி கலாச்சாரம் சமீபமாக
தமிழகத்திலும் அதிகரித்திருக்கிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து
அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தைதான் நகைச்சுவையாகப் பார்க்கிறார் அறிமுக
இயக்குனர் பொன்ராம்.
வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின்
ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. எம்.ஏ., எம்.பில்
(?) படித்து வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது
ரொமான்ஸ் எதுவும் வரவில்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த
டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை
கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல்
பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ
பாணியில் உடையணிந்து, கூலிங் க்ளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பை கூட
முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று
சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை
உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை
அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா
சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.
படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே
கவுரவத்துக்காக தன் பெண்ணை கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜ் அறிமுகப்படுத்தப்
படுகிறார். அவருடைய அடியாட்கள் இந்த கொலையை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.
ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை சத்யராஜ் கவுரவமாக கருதுகிறார். கடைசிக்
காலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா பக்திப்படங்களாக நடித்துத் தள்ளியதைப் போல, பெரியார்
கொள்கைகளுக்கு எதிரான வேடங்களையே இனமான நடிகரான சத்யராஜ் தற்போது தொடர்ச்சியாக
நடித்து வருகிறார். நம் விரலை கொண்டேதான் நம் கண்களை குத்திக் கொள்கிறோம்.
படத்தில் சத்யராஜ் என்ன சாதியாக
சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில்
பொட்டு. திண்டுக்கல் – பழனி வட்டார கிராமம் என்றெல்லாம்
நிறைய க்ளூ இருக்கிறது. மூன்று பெண்களுக்கு அப்பா. யாருடனாவது ஓடிவிடுவார்களோ
என்கிற அச்சத்தில் தன் பெண்களுக்கு படிக்கும் வயதிலேயே திருமணம்
செய்துவிடுகிறார். அவருடைய கடைசிப் பெண்ணுக்கும் அம்மாதிரி கல்யாணம் செய்ய
முயற்சிக்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஹீரோவின் சாதி பற்றிய விவரங்களை
யூகிப்பது சிரமம். சத்யராஜின் சாதிதான் என்பது மாதிரி தெரிந்தாலும், ஹீரோவின் வீடு
ஊருக்கு ஒதுக்குப்புறமாக – குடிசையாக இருக்கிறது. நெற்றியில்
பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.
இந்தப் பின்னணிகளைக் கொண்டுதான்
முழுக்க முழுக்க காமெடி வசனங்களோடு (ஒவ்வொரு காட்சியும் படுநீளம். அடுத்த
படமெடுக்க வாய்ப்பு கிடைக்குமோ என்னவோவென்று எல்லா கதையையும் இதிலேயே சொல்லிவிட
இயக்குனர் முயற்சித்திருக்கிறார்) மூன்று மணி நேர நகைச்சுவைக் காவியமாக
வந்திருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தில் காட்டப்படுவதுதான்
தமிழ்நாடு என்றால் பாமகவினரின் எதிர்ப்பும், வாதமும் முழுக்க முழுக்க
நியாயமானவையே. காதல் திருமண விவகாரம் குறித்து பாமகவினரின் கருத்துகளில்
கீழ்க்கண்ட அம்சங்கள், அதிலிருக்கும் வார்த்தை கவர்ச்சிக்காக புகழ்பெற்றவை (பாமகவினர் இவ்விவகாரத்தில் பேசும் சில
கருத்துகளை பரிசீலித்து விவாதிக்க வேண்டும். They have proper data & statistics. ஒட்டுமொத்தமாக பாமகவை கழுவில்
ஏற்றுவது கண்மூடித்தனமான பாசிஸம்) :
- பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாக பார்த்து காதலிக்கிறார்கள். பிற்பாடு
பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான
காதல் அல்ல. நாடகக் காதல்.
- ஜீன்ஸ் பேண்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை
ஏமாற்றுகிறார்கள்.
- மைனர் பெண்களை காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்
இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின்
பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.
கவுரவக் கொலை பின்னணியை
காமெடியாகப் பார்ப்போம் என்கிற லட்சியத்தோடு வந்திருக்கிற இத்திரைப்படத்தை,
திரையரங்கில் பார்க்கும் சோசியல் நெட்வொர்க் புரட்சியாளர்கள் “நல்லாயிருக்கு. நாலு
வாட்டி பார்க்கலாம்” என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.
இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக
எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டை தண்ணி வரண்டுப் போகுமளவுக்கு
டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், இரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி
செய்து வந்திருக்கும் படைப்பை ‘சூப்பர்’ என்று படம் பார்த்துவிட்டு வரும்போது
நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் ஹிட் உறுதி. தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு ‘கருத்து’
என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்பதுதான் நம் கேள்வி.
great review. why there is no importance giv3en to cinema in puthiya thalaimurai. but that is a brave attempt.
பதிலளிநீக்கு"தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு" மண்ணாந்தை என்றால் தலையை மண்னிற்குள் புதைத்துக்கொண்டு தான் ஓளிந்துகொண்டுவிட்டதாக நினஒத்துக்கொள்ளும் என்று சொல்வார்களே அதுவா?
பதிலளிநீக்குவித்தியாசமான கோணத்தில் அருமையான பதிவு. சீரியஸ் ஆளுங்களையும் படம் பார்க்க வச்சுட்டீங்க!!! பேஸ்புக், விவாத மேடை என்று இனி அனல் பறக்குமோ? படம் பெரிய ஹிட் தான்...
பதிலளிநீக்குஅறிமுக இயக்குனர் பொன்ராஜ்.//பொன்ராம் தான
பதிலளிநீக்குவிஸ்வரூபம் படத்தை மட்டும் படமாகப் பார்க்க வேண்டும், அதனை சமுதாயத்தோடு பொருத்த்திப் பார்க்கக் கூடாது. ஆனால் இந்தப் படத்தை சமுதாயக் கண்னோட்டத்தோடு பார்க்க வேண்டுமாம், என்னடா கருமம் லாஜிக் இது.
பதிலளிநீக்குபோடா நீயும் உம் விமர்சனமும்.
இந்தக் கோபம் பிடித்திருக்கிறது
பதிலளிநீக்குநம் மக்களிடம் உள்ள மிகப் பெரிய குறையே சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொள்வதுதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானதிலிருந்து இன்றைக்கு ஜெ. விஜயகாந்த் வரை சினிமாவும் அரசியலும் கலக்கக் காரணம் நம் பாமர மக்கள் திரை நடிப்பை நிஜ வாழ்க்கையாக நம்புவதுதான். சினிமாவில் காட்டப்படுகிற கதை கற்பனையானது. அந்த ஹீரோ மிக நல்லவர். அந்த வில்லன் மிகக் கெட்டவர். ஆனால் நிஜத்தில் அவர்கள் அப்படி இல்லை என்கிற உண்மை மூளைக்கு எட்டினாலும் மனசுக்கு எட்டுவதில்லை. மனசு ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டது. இதே மாதிரிதான் காலம் காலமாக காதல் என்பதைப் பற்றி சினிமாக்கள் நல்ல விதமாகவே காட்டி வருகின்றன. சினிமா கதை என்பது ஹீரோ (அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும்) ஹீரோயினை காதலித்தால் அந்தக் காதல் வெற்றி பெற வேண்டும். அப்படித்தான் கதைகள் பின்னப்படுகின்றன. நிஜ வாழ்க்கையை ஒட்டி எந்தக் கதையும் சொல்லப் படுவது கிடையாது. நிஜ வாழ்க்கையில் காதல் என்பது பல காரணிகள் (சாதி, மதம், அந்தஸ்து, வசதி, அழகு etc , etc ) இவற்றின் அடிப்படையிலேயே வெற்றியடைகிறது. இதில் ஏதேனும் வேறுபாடு வந்தால் பெரும்பாலும் அப்படிப் பட்ட காதல்கள் வெற்றியடைவதில்லை. இதுதான் நிஜம். சினிமாவில் காதல் வெற்றியடைய ஒரு திருப்புமுனை போதும். ஒரு சண்டை போதும். ஒரு பாடல் போதும். ஒரு மரணம் போதும். கதையாசிரியரின் ஒரு காரணம் போதும். ஆனால் நிஜம் அப்படியில்லை. நம் இளைஞர்களும் இளைஞிகளும் யதார்த்தம் புரியாமல் சினிமாவைப் பார்த்து காதலைப் பற்றி ஏற்படுத்திக் கொண்ட பிம்பங்கள், அதன் அடிப்படையில் ஏற்படும் காதல்கள், நிஜம் வேறாக இருக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் (இந்த நிஜங்கள் சினிமாவில் காட்டப் படுவதில்லை) இவையே இன்றைய சமூக அவலங்களுக்கு காரணம். இளவரசன்களும் திவ்யாக்களும், சேரன் மகள்களும் (பெயர் மறந்து விட்டது) மாற வேண்டும். சேரன்களும் காதலை பெரிதாகக் காட்டும் போக்கை கை விட வேண்டும். ஆனால் சினிமாவில் நிஜத்தைக் காட்டினால் அந்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாது. அவர்களுக்கு காசு பார்க்க வேண்டும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்கிற உண்மை புரியாத வரை வருத்தப் படாத வாலிபர் சங்கத்தினை பார்த்து விட்டு அதே பாணியை பின்பற்றி பின் வருத்தப் படப் போகிற வாலிபர்கள் வாலிபிகள் வரத்தான் போகிறர்கள். நீங்களும் இதே போல் பதிவு எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறீர்கள்.
பதிலளிநீக்குநான் இதுவரை, லுக்கியிலூக் இப்படி ஒரு கோணத்த்தில் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை விமர்சித்து வாசித்ததில்லை.
பதிலளிநீக்குஎன்னவோ ஒரு குசும்புக்காக இப்படி எழுதி இருக்கார்-னு தோனுது!!!
அறிமுக இயக்குனர் பொன்ராம்.
பதிலளிநீக்குPonram Already Directed a film . .
" THIRUTHAM "
super review sir.
பதிலளிநீக்கு//சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்கிற உண்மை புரியாத வரை வருத்தப் படாத வாலிபர் சங்கத்தினை பார்த்து விட்டு அதே பாணியை பின்பற்றி பின் வருத்தப் படப் போகிற வாலிபர்கள் வாலிபிகள் வரத்தான் போகிறர்கள். // very right.
பதிலளிநீக்குதமிழன் என்கிற மண்ணாந்தைக்கு ‘கருத்து’ என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா
பதிலளிநீக்கு--
I think you suffer from multiple personality disorder. In many masala movies, you comment about seeing it only as a movie and not to look for a social cause. Now suddenly, you are searching for a social cure in a movie whose title itself reveals its nature.
பொறுப்பான விமரிசனம். கௌரவக் கொலைகளை விளையாட்டாக்கும் விபரீதத்தை உங்களைப் போல் வேறு யாரும் சுட்டிக் காட்டத் தவறி விட்டார்கள். நானும் உங்கள் விமரிசனத்தைப் பார்த்து தான் உணர்ந்தேன்.
பதிலளிநீக்குசென்ற முறை ஊருக்குப் போன போது, பக்கத்து ஊர் பெரிய மனிதர் ஒருவர் இறந்திருந்தார். அவரைப் பற்றி ஊருக்குள் பெருமை பேசிக் கொண்ட முதல் விசயமே அவர் தன் மகளைக் கௌரவக் கொலை செய்தார் என்பது தான் :(