23 செப்டம்பர், 2013

6 மெழுகுவர்த்திகள் : மனித வணிகம்

‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் 2004ஆம் ஆண்டு ‘அடுத்த வீட்டுப் பெண்கள்’ (the girls next door) என்கிற பெயரில் ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியானது. மனித வணிகம் குறித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டுரை, சினிமாக்காரர்களையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இக்கட்டுரையை தழுவி ‘TRADE’ என்கிற பெயரில் 2007ஆம் ஆண்டு ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் முழுநீள சினிமா ஒன்று வெளிவந்தது. கடத்தப்படும் ஒரு பெண். அவளை கடத்திய நிழல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதுதான் படம். விமர்சகர்களும், ரசிகர்களும் இப்படத்தை வெகுவாக கொண்டாடியதாக தெரியவில்லை. ஆனால், வாழ்நாளில் ஒரு படமாவது இந்த கருவில் எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் இருக்கும் திரைப்பட இயக்குனர்களை ஈர்த்தது. விளைவாக நம் தமிழிலும் கூட TRADEஐ அச்சு அசலாக பிரதியெடுத்து ‘விலை’, ‘ஆண்மை தவறேல்’ என்று சில படங்கள் வெளிவந்தன. பெரியதாக ஓடி வசூலைக் குவிக்கவில்லை என்றாலும், இப்படங்களை எடுத்த இயக்குனர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
TRADE வருவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த கதையை, நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். மகாநதி. ஒரு சிறுதவறால் சிதறிவிடுகிறது கமலின் குடும்பம். காணாமல் போன தன்னுடைய மகளை கமல் தேடுவது ஒரு கிளைக்கதையாக விரிகிறது. கமலை ஏமாற்றி சிறைக்கு அனுப்பியவரே, அவருடைய மகளையும் விற்றுவிடுகிறார். ‘ரூட்’ பிடித்துப்போய் கமல் தன்னுடைய மகளை கடைசியில் கல்கத்தாவில் மீட்கிறார். கமல்ஹாசன் கில்லாடி. எழுத்தாளர்களை சினிமாவுக்கு எந்தளவுக்கு உறிஞ்சிக்கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு ரகசியமாக உறிஞ்சிக் கொள்வார். வெளியே அவர்களது பெயர் தெரியவே தெரியாது. மகாநதியில் உறிஞ்சப்பட்டவர் ரா.கி.ர., (தேவர்மகனில் ம.வே.சிவக்குமாரின் பங்கு என்னவென்பது யாருக்காவது தெரியுமா என்ன?)
குழந்தைகளை கடத்தும் மனிதவியாபாரிகள் அவர்களை என்ன செய்கிறார்கள்? ஒன்று; பெண்குழந்தையாக இருந்தால் பாலியல் அடிமைகளாக மாற்றி, அத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இரண்டு; ஆண் குழந்தையாக இருந்தால் பிச்சையெடுக்க வைக்கிறார்கள், அடியாட்களாக, அல்லக்கைகளாக மாற்றுகிறார்கள். மூன்று; ஆணோ, பெண்ணொ.. அவர்களை சிகப்புச் சந்தையின் கச்சாப்பொருள் ஆக்குகிறார்கள் (இதைப்பற்றி விரிவாக அறிய புதிய கலாச்சாரம், மார்ச் 2012 இதழில் வெளிவந்த The Redmarket : மனித உடல் உறுப்புகளின் சந்தை’ கட்டுரையை வாசிக்கவும்).
‘6 மெழுகுவர்த்திகள்’ மனித வணிகம் குறித்த விரிவான பதிவினை தமிழில் உருவாக்கியிருக்கிறது. ஆறாவது பிறந்தநாள் அன்று காணாமல் போன மகனை தேடி கண்டுபிடிக்கும் அப்பாவின் உணர்ச்சிப் பயணம். இந்தப் பயணத்தில் நாயகன் உரசிச்செல்லும் நிழல் மனிதர்கள், அவர்களுடைய பின்னணி என்று பார்வையாளனுக்கு அச்சமூட்டும் கலவரம். படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் இருந்து விழிகளில் நீர் திரையிட, மங்கலாகவே படம் முடியும்வரை காட்சிகள் தெரிகிறது. ஷாம், துரை, ஜெயமோகன் கூட்டணி கண்டிருக்கும் இந்த உச்சம், தமிழ் சினிமாவின் தற்காலப் போக்குக்கு அவசியம்.
‘தங்க மீன்கள்’ பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் ராமுடன் பேசியபோது சொன்னார். “ரெண்டு விதமா தமிழில் படம் எடுக்கலாம். முதலாவது ஜனங்களுக்கு உடனே பிடிச்சி நல்லா ஓடுற படம். ஆனா ஓடி முடிச்சதுமே மறந்துடுவாங்க. ரெண்டாவது உடனே அவ்வளவா ஓடாது. ஆனா ஒரு இருவது, இருவத்தஞ்சி வருஷம் கழிச்சியும் அந்தப் படத்தை மக்கள் நினைவுப்படுத்தி பேசிக்கிட்டிருப்பாங்க. எனக்கு முதலாவது டைப்பில் படமெடுக்க தெரியலை. இரண்டாவது வகை படங்களைதான் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்”. துரை இயக்கியிருக்கும் ‘6 மெழுகுவர்த்திகள்’ இரண்டாவது டைப் படம்தான்.
ஷாம் நடித்த படங்கள் வேண்டுமானால் இதுவரை மொக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் சிறந்த நடிகர்தான். தன்னை நிரூபித்துக்கொள்ளும் வாய்ப்பாக இப்படத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். உடல்மொழி, முகபாவங்கள், உடை, ஒப்பனை என்று அதிகபட்சமான தன்னுடைய உழைப்பை செலுத்தியிருக்கிறார். இனிமேல் வெயிட்டான கருவை சுமந்துக்கொண்டு அலையும் புதுமுக இயக்குனர்களுக்கு ஷாம் நல்ல சாய்ஸ்.
இயக்குனர் துரையும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார். ‘6’ அவர் தோள்மீது பேயாய் ஏறிக்கொண்டு, இறங்கிக் கொள்ளாமல் அடம் பிடித்திருக்கிறது. பொறுமையாய், காலம் எடுத்துக்கொண்டு (படப்பிடிப்பு மட்டுமே ஒன்றரை வருடங்களாம்) நுணுக்கமாக செதுக்கி, செதுக்கி சிறப்பான கலைப்படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். எத்தனை மனிதர்கள், எத்தனை காட்சிகள், எவ்வளவு ஊர்கள். மீனுக்கு காத்திருக்கும் கொக்காக மாறியிருக்காவிட்டால் இப்படத்தை இயக்கும் சாத்தியமே இல்லை.
ஜெயமோகனோடு கூட்டணி அமைத்தது துரையின் சாமர்த்தியம். இந்த நிழலுலக மனிதர்களை சித்தரிப்பதில் அவர் மாஸ்டர். ஏழாவது உலகத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்குலை நடுங்குகிறது. ‘6’-ல் காட்டப்படும் நிழலுகம் ஏழாம் உலகத்திலிருந்து ஓரளவு மாறுபட்டது என்றாலும், அம்மனிதர்களின் குணாதிசயங்களை அசலாக சித்தரிப்பதில் மீண்டும் ஒருமுறை ஜெயமோகன் வெற்றி கண்டிருக்கிறார். வசனம் எழுத பேனாவில் மைக்கு பதிலாக குரூரத்தையும், வன்மத்தையும் ஊற்றியிருக்கிறார். ஜெயமோகனின் பாத்திரங்களில் யாரும் கெட்டவர்கள் அல்ல. அதே நேரம் விக்கிரமன் பட கேரக்டர்களும் இல்லை. அவரவருக்கான நியாய தர்ம, அற விழுமியங்களோடு அவரவர் இருக்கிறார்கள். பிள்ளை பிடித்துக் கொடுக்கும் கடைநிலை பிச்சைக்காரனில் தொடங்கி, போபாலில் வாழும் நெ.1 கடத்தல்காரன் வரை தன்னுடைய வேலையில் இயல்பானவனாக, தன் வேலை குறித்த எவ்விதக் குற்றவுணர்ச்சியோ இல்லாதவனாகவே இருக்கிறார்கள். “பாவம் பண்ணிட்டுதான் இப்படி ஆகியிருக்கேன். இனிமே எனக்கு பாவ புண்ணியம் ஏது?” மாதிரி வசனங்கள் போகிறபோக்கில் வந்தாலும், மிகக்கூர்மையான சமூக விமர்சனங்களை கொண்டிருக்கிறது.
‘தொலைஞ்சுப்போன ஒரு பையனுக்காக ஒருத்தன் இவ்ளோதூரம் மெனக்கெடுவானா?’ மாதிரி விமர்சனங்களை இணையத்தில் காணமுடிகிறது. விபத்திலோ, உடல்நலக் குறைவாலோ குழந்தை இறந்துப் போயிருந்தால் கூட அதை ஏதோ ஒருவகையில் பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியும். தன் உயிரணுவில் பிறந்தவன், தன் ஆண்மையை கவுரப்படுத்தியவன். உயிரோடு எங்கேயோ பிச்சையெடுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு அப்பன் எப்படி ஜீரணிக்க முடியும்? இதை வெறும் சினிமாவென்று கடந்துப்போய்விட முடிந்தால், நம் இதயம் வெறும் இயந்திரம் என்பதாகி விடும்.

‘6 மெழுகுவர்த்திகள்’ உணர்ச்சிகரமான திகில் பயணம். பார்வையாளனுக்கு அவசியமான அனுபவம். இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி டிரெண்டில் நிற்காமல் தனித்துத் தெரிகிறது. இப்போது வேண்டுமானால் ராஜா ராணிக்களின் அலையில் இது அடித்துக்கொண்டுப் போய்விடலாம். ஆனாலும் தமிழின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இப்படத்துக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு.

7 கருத்துகள்:

  1. //இப்போது வேண்டுமானால் ராஜா ராணிக்களின் அலையில் இது அடித்துக்கொண்டுப் போய்விடலாம். ஆனாலும் தமிழின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இப்படத்துக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு.// YES.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான விமர்சனம் யுவா ...............................

    பதிலளிநீக்கு
  3. "தன் உயிரணுவில் பிறந்தவன், தன் ஆண்மையை கவுரப்படுத்தியவன். உயிரோடு எங்கேயோ பிச்சையெடுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு அப்பன் எப்படி ஜீரணிக்க முடியும்? "-முடியல யுவா சார், மனச எதோ பண்ணுது..மிஹவும் அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  4. இது போன்ற படங்களை பார்த்தால் மனதை ஏதோ செய்கிறது என்று தான் இது போன்ற படங்களை பார்பதில்லை. எப்படி ஒரு குழந்தையை கடத்தி பிச்சை எடுக்க வைக்க முடிகிறது சிலரால்? மிருகங்களை விட கேவலமானவர்கள்.

    பதிலளிநீக்கு
  5. //தேவர்மகனில் ம.வே.சிவக்குமாரின் பங்கு என்னவென்பது யாருக்காவது தெரியுமா என்ன?// என்ன????

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு. காரைக்குடியில் ராமவிலாஸ் தியோட்டரில் படம் பார்த்தேன் என்னையும் சேர்த்து 11 பேர் பார்த்தார்கள். அப்போது தெரிந்து கொண்டேன். இன்றைய தமிழ் ரசிகர்களின் ரசனையை. காமெடி மட்டும் சினிமா இல்லை என இன்றைய இயக்குநர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 6 மெழுவர்த்திகள் தமிழ் சினிமாவின் மாறுபட்ட படம். நடிகர் ஷாம் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். திரும்ப திரும்ப ஒரே அழுகையும் திரும்ப திரும்ப வரும் ஜெயமோகனின் ஒரே வசனங்களையும் தவிர்த்து இருந்தால் 6 இன்னும் பிரகாசமாக ஜொலித்து இருக்கும்.

    பதிலளிநீக்கு