18 செப்டம்பர், 2013

வேடிக்கை வெறியர்கள்

நேற்று மாலை ஆறரை மணியளவில் நண்பர் ஒருவரை அண்ணாசாலையில் சந்திக்க திட்டம். ஆனால் சுமார் ஐந்து மணிக்கு வானம் இருட்டி, அடைமழை கொட்டி ‘உதார்’ காட்டிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் மட்டுமே மழையின் ஆதிக்கம். வானம் மெல்ல வெளுக்க நண்பரை சந்திக்க கிளம்பினேன்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் அரண்டு விட்டேன். ஈக்காடுதாங்கல் பாலம் முழுக்க மனிதத்தலைகள். மெட்ரோ ரயில் புண்ணியத்தில் சாதாரண நாட்களிலேயே வாகனங்களால் பிதுங்கும் பாலம், திடீர் கூட்டத்தால் திக்குமுக்காடி போயிருந்தது. சில கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனவரிசை நீண்டிருந்த்து. தரைப்பாலமும் வாகனங்கள் நிரம்பி, சில இன்ச்சுகள் முன்னேறுவதற்குள்ளாகவே தாவூ தீர்ந்து டவுசர் கயண்டது. நடப்பதற்கு கூட வழியில்லாமல் டிராஃபிக் ஜாம் ஆகும் ஒரே நகரம் சென்னையாகதான் இருக்க முடியும். ஒன்றாவது கீரிலேயே கிளட்சை பிடித்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிலேட்டர் கொடுத்து, பிரேக் பிடித்து கையெல்லாம் மரத்துப்போனது.
எல்லோருமே ஆற்றுக்கு நடுவில் மெட்ரோ ரயிலுக்கு அமைக்கப்பட்ட தூண்களுக்கு அருகில் அமைந்திருந்த அடிப்பகுதியை மையமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாகன ஓட்டிகள் பலரும் நடுரோட்டில் வண்டியை ‘பார்க்’ செய்து, ஒரு பயலும் முன்னேற முடியாதபடி வன்முறையில் ஈடுபட்டார்கள்.
அடையாறு ஆற்றில் ஏதோ கலவரம் என்று புரிந்துகொண்டேன். சில வருடங்களுக்கு முன்பாக நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒரு கதிர்வீச்சு கருவி வீசப்பட்டு, சென்னைவாசிகள் உயிரைப் பிடித்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்படி இல்லையாயின் யாரோ ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்க வேண்டும். அடையாறு மேம்பாலத்தில் மாதத்துக்கு ஒருவராவது குதித்து உயிர் மாய்த்துக்கொள்வது சமீபகாலமாக சென்னையில் புதியதாக ஏற்பட்டிருக்கும் மரபாகி விட்டது. யாரோ ‘ஸ்பாட்’ மாறி உயிர்நீத்திருக்கிறார்களோ என்றும் யூகித்தேன்.
இவ்வளவு கூட்டம் கூடி அமளிதுமளி ஆகிக்கொண்டிருக்கிறது, ப்ளாஷ் நியூஸ் பித்தம் தலைக்கு ஏறிப்போன ஒரு செய்தி சானல் கூட இன்னும் ஸ்பாட்டுக்கு வரவில்லையே என்று தொழில்நிமித்தமான கவலை வேறு. செல்போனில் கேமிரா வந்துவிட்டதால், சிட்டிஸன் ஜர்னலிஸ்டுகள் ஆகிவிட்ட மக்களே ஆற்றை விதவிதமான கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். செல்போனிலும் கேமிரா என்று சிந்தித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும். போனில் படம் பிடித்து ப்ளாக்கில் போடலாமா என்று எனக்கும் யோசனை வந்து, உடனே சோம்பல் மேலெழுந்து அந்த யோசனையை கைவிட்டேன். இப்போதிருக்கும் செல்போன் வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதில் இருபது படங்கள் எடுத்திருந்தாலே ஆச்சரியம்தான்.
பாலத்துக்கு மேலே சுவரை ஒட்டி எப்படியும் ஒரு ஐநூறு பேர் நின்றிருப்பார்கள். ஆற்றுக்கு நடுவே மெட்ரோ ரயில் பால வேலைக்காக அமைக்கப்பட்ட திட்டு ஒன்றில் ஒரு நூறு பேராவது நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். போலிஸ் படை தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தும், வேடிக்கை வெறியில் மக்கள் யாருமே போலிஸை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை.
நானும் ஆர்வமாக எல்லோரும் பார்க்கும் அதே பகுதியை உற்று, உற்றுப் பார்த்து எதுவும் தென்படாமல் மனம் சலித்துக்கொண்டே முன்னேறிக் கொண்டிருந்தேன். போலிஸ்காரர் ஒருவர் தடியால் என் வண்டியை தட்டி, “நிக்காம போய்யா.. போய்க்கிட்டே இருக்கு” என்று அச்சுறுத்தினார்.
“என்ன சார், என்ன பிரச்சினை?”
“ஒண்ணும் இல்லை. நீ கெளம்புய்யா”
என் கற்புக்கு அடையாளமாக தாலி மாதிரி தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையை நீட்டி, “ப்ரெஸ்ஸு சார்.. என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றேன்.
“அதான் சொல்லிட்டேனே சார். ஒண்ணுமே இல்லைன்னு. ஒரு துணி மூட்டை ஆத்துலே அடிச்சிக்கிட்டு வந்திருக்கு. எவனோ விவரம் கெட்ட விருந்தாளிக்குப் பொறந்த பய ஒருத்தன் வேலைக்கொண்டையை (வார்த்தைப்பிழை) எல்லாம் விட்டுப்போட்டு வேடிக்கை பார்த்திருக்கான். அவனைப் பார்த்து நாலு பேர் வேடிக்கை பார்க்க, நாலு நாற்பதாகி, நாற்பது நானூறு ஆயிடிச்சி” கவுண்டமணி காமெடியில் வரும் ‘கிணத்துலே பாடி’ கதைதான்.
முன்பெல்லாம் பஸ்ஸில் பயணிக்கும்போது நண்பர்கள் ஒரு ‘டெக்னிக்’கை பயன்படுத்துவோம். பஸ் எங்கேயாவது சிக்னலில் நிற்கும்போது, சும்மாவாச்சுக்கும் ஜன்னலைப் பார்த்துவிட்டு ‘ச்சோச்சோ...’ என்று சப்தம் எழுப்புவோம். பஸ் மொத்தமும் என்னவோ ஏதோ என்று ஜன்னலை எட்டிப் பார்க்கும். அங்கே ஒன்றுமேயில்லை என்று தெரிந்தாலும், ஏதாவது தெரியுமாவென்று ஆவலோடு எட்டிப் பார்க்கும். இம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் சுமார் ஃபிகர்களாவது நம்மை சட்டை செய்து, பொருட்படுத்தி பார்ப்பார்கள் என்பதைத்தவிர இந்த விளையாட்டுக்கு வேறெந்த உள்நோக்கமும் இருந்ததில்லை.
ஒன்றுமே இல்லாத ஒன்றை கூட்டம் கூட்டி, வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு வெறித்தனமாக வேடிக்கை பார்க்கும் கூட்டம் உலகில் வேறெங்காவது இருக்குமா என்பது சந்தேகமே. முதல் எறும்பு எந்த வழியில் போகிறதோ, அதே வழியை பின் தொடர்ந்து வரும் நூற்றுக்கணக்கான எறும்புகள் போவதை போலதான் மூடநம்பிக்கையோடு வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறோம். பேசத்தெரிந்த ஆட்டு மந்தைகள் நாம். போஸ்டரில் காட்டப்படும் ’பிட்டு’ தியேட்டரில் நிச்சயம் இருக்காது என்கிற யதார்த்த உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும், ஏதோ ஒரு மூடநம்பிக்கையில் திரும்பத் திரும்ப அஜால் குஜால் திரையரங்குகளுக்கு படையெடுக்கும் தமிழனின் மனோபாவத்தை எப்படிதான் வரையறுப்பது?
‘சூனியத்தைதான் உலகம் உற்று உற்றுப் பார்க்கும்’ என்கிற வாழ்வியலின் மிகச்சிறந்த தத்துவத்தை நேற்று உணர்ந்துக் கொண்டு, ஓரளவுக்கு சீரான போக்குவரத்தில் கலந்து நண்பரைப் பார்க்க விரைந்தேன்.

7 கருத்துகள்:

  1. நண்பரே ! நல்ல படப்பிடிப்பு நிகழ்வை நடந்ததை சொல்வதில் .நீங்களும் அதனை தெரிந்துக் கொண்டுதானே நகர்ந்தீர்கள். கூட்டம் கூட இந்த நாட்டில் காரணம் தேவை கிடையாது .இனாம் கொடுத்தால் பணக்காரர்களும்
    கூடுவார்கள். ஒருவர் ஆபத்தில் சாலையில் அடிபட்டுக் கிடந்தால் அவசர உதவியும் செய்யாமல் அவசரமாக பறந்து விடுவார்கள்

    பதிலளிநீக்கு
  2. //போஸ்டரில் காட்டப்படும் ’பிட்டு’ தியேட்டரில் நிச்சயம் இருக்காது என்கிற யதார்த்த உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும், ஏதோ ஒரு மூடநம்பிக்கையில் திரும்பத் திரும்ப அஜால் குஜால் திரையரங்குகளுக்கு படையெடுக்கும் தமிழனின் மனோபாவத்தை எப்படிதான் வரையறுப்பது?//




    இப்டித்தான் போன வாரம் எங்க ஊரில சிந்துனு ஒரு படம் போட்டு கொஞ்சம் மலயாள படங்களோட ஸ்டில்ஸ் போட்டிருந்தான் நண்பர்கள் பார்த்து விட்டு பல்ப் வாங்கிட்டு வந்தாங்க

    அது வேற எந்த படமும் இல்ல சிந்துச்சமவேளி

    பதிலளிநீக்கு
  3. நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒரு கதிர்வீச்சு கருவி வீசப்பட்டு, சென்னைவாசிகள் உயிரைப் பிடித்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
    -- Most of the blog writers resort to hyperbole to give importance to the event they write about.

    பதிலளிநீக்கு
  4. நான் கூட என்னமோ ஏதோனு சுவாரசியமா வாசிச்சுட்டு இருந்தேன்.... மனசு முன்னாடி அப்படியே பாலம் ட்ராபிக் ஆறு எல்லாம் வந்து க்ளைமாக்ஸ்க்கு வெய்ட் பண்ணிட்டு இருந்துச்சு... அடிச்சிங்க பாருங்க கடைசில ஒரு அடி... செம செம...

    பதிலளிநீக்கு
  5. If sentences sequence are changed, you are commenting about yourself.

    போனில் படம் பிடித்து ப்ளாக்கில் போடலாமா என்று எனக்கும் யோசனை வந்து,

    செல்போனில் கேமிரா வந்துவிட்டதால், சிட்டிஸன் ஜர்னலிஸ்டுகள் ஆகிவிட்ட மக்களே ஆற்றை விதவிதமான கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

    செல்போனிலும் கேமிரா என்று சிந்தித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு