“மூடர் கூடம் சிரிப்புப் படம்னு சொன்னாங்க. எனக்கு சூது கவ்வும் அளவுக்கு சிரிப்பே
வரலைப்பா” என்று அலுத்துக் கொண்டார் நண்பர் ஒருவர்.
“அது ரொம்ப சீரியஸ் படம் பாஸ்.
உங்களுக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க”
“என்னவோ போ. சந்தானமோ, சூரியோ
இல்லைன்னா இப்போல்லாம் சிரிப்பே வரமாட்டேங்குது” என்றார்.
நண்பரை போலதான் பலரும்
மூடர்கூடத்தை ஏதோ காமெடிப்படம் என்று நினைத்து, தியேட்டருக்கு போய்
ஏமாந்துவிடுகிறார்கள். அறிவுஜீவி திரைவிமர்சகர்களும் கூட அபத்த நகைச்சுவை, கருப்பு
நகைச்சுவை என்றெல்லாம் சொல்லி, கொஞ்சநஞ்சமாவது படம் ஓட இருந்த வாய்ப்புகளையும் முற்றிலுமாக
பறித்துவிட்டார்கள். ஒருவேளை இது இண்டெலெக்சுவல்களின் படமோவென்று வெகுஜன ரசிகர்கள்
படத்தை பார்க்கவே அச்சப்படுகிறார்கள். மூடர் கூடம், எந்த மேக்கப்புகளும் இல்லாத
இயல்பான படம்.
ஏன் விலங்குகளை பாத்திரங்களாக வைத்து
கதை எழுதினீர்கள் என்று கேட்டபோது ஈசாப் சொன்னாராம். “நான் எழுதிய கதைகள் எல்லாமே
நான் பார்த்த மனிதர்களுக்கு நடந்த சம்பவங்கள். அக்கதைகளை மனிதர்களை வைத்து
எழுதினால், சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள்”. நவீன் ஒரு நவீன ஈசாப். படம் பார்க்கும் உங்களையும், என்னையும் மூடர் என்று சொல்வதற்கு வேறு யார் யார் கதையையோ காட்டி
ஏமாற்றியிருக்கிறார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ‘Watched Moodar Koodam. Will
review tommorrow” என்று ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் போடுகிறோம். என்னவோ நம்முடைய ரிவ்யூ நெட்டில் வந்துவிட்டால் ஒபாமா, சிரியா மீது போர் தொடுக்கும் முடிவை கைவிட்டு விடப்போகிறாரா அல்லது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி நின்றுவிடப் போகிறதா. இல்லையேல் முப்பது கோடி பேர் இந்த ரிவ்யூவை படித்து திருந்திவிடப் போகிறார்களா.. இவ்வளவு அல்பமாக, அபத்தமாக நடந்துகொள்ளும் நம்மைவிட பெரிய மூடர் வேறெவராவது இருந்துவிட முடியுமா. ‘மூடர் கூடம்’ நாம் மூடர்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் படம்.
இயக்குனர் சொல்லவிரும்பும் கருத்தை
நேரடியாக சொல்லாமல், பார்வையாளர்களாகவே தேடி கண்டுபிடித்து ரசித்துக் கொள்ளும்
வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பலன் என்னவென்றால், ஒவ்வொருவரும்
ஒவ்வொரு கதையை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் இது
ஜனநாயகம். பார்வையாளனை இப்படிதான் படம் பார்க்கவேண்டும் என்று பொம்மை மாதிரி
ஆட்டுவிக்கும் இயக்குனர்தான் சர்வாதிகாரி. மூடர்கூடம் இந்த சர்வாதிகார மரபை தமிழில்
உடைத்திருக்கும் முதல் படம். சுருக்கமாகச் சொன்னால் இப்படம் ‘மாடர்ன் ஆர்ட்’
மாதிரி. குவென்டின் பாணி படங்கள் என்று இதற்கு முன்பாக ஓரம்போ, ஆரண்ய காண்டம், நேரம்,
சூதுகவ்வும் மாதிரி சில படங்களை சொன்னார்கள். அச்சு அசலாக குவென்டினை தமிழுக்கு
கொண்டுவந்திருக்கும் முதல் இயக்குனராக நவீனைப் பார்க்கலாம். இது அட்டைக்காப்பி
அல்ல. பர்ஃபெக்ட் இன்ஸ்பிரேஷன்.
“நாலு திருடங்க. ஒரு வீட்டை கொள்ளை
அடிக்க வர்றாங்க...” பாணியில் ஊன்னா தான்னா தனமாக மூடர்கூடத்தை புரிந்துக்
கொண்டால், அது மொக்கைப்படமாகவே தெரியும். படத்தின் கடைசி பத்து நிமிடத்தில்
இடம்பெறும் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடல்தான் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின்
வெளிப்பாடு. அந்த பொம்மைதான் வாழ்வில் நாம் தேடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியின் குறியீடு. நேரடியாகவே
அந்த பொம்மையில் HAPPY LIFE என்று இயக்குனர் க்ளூ கொடுத்தும்
புரிந்துகொள்ள முடியாத நாமெல்லாம் ஒன்றுகூடும் திரையரங்கம்தான் மூடர்கூடம்.
மகிழ்ச்சி நம்மிடையேதான் இருக்கிறது. அதை கண்டுகொள்ள முடியாத மூடர்களாக, அறிவுக்
குருடர்களாக இருக்கிறோம் என்கிற எளிமையான மெசேஜைதான் இயக்குனர் தருகிறார். ‘இருக்கும்
இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம் ஞானத்தங்கமே’ என்கிற பாடல்தான் படத்தின் தீம்.
படத்தில் தலைகீழாக நிற்கும்
தண்டனையை ஜெயப்பிரகாஷ் குடும்பத்தாருக்கு நாலு திருடர் கும்பல் தருவதெல்லாம்
சும்மா நாம் சிரிக்க வைக்கப்பட்ட காட்சியல்ல. எதையாவது தலைகீழாக பார்ப்பதும் ஒரு
பரிமாணம்தான். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும், சவால்களையும் ஒருவேளை தலைகீழாக
பார்த்தால் சுலபமாக தீர்வுக்கு வந்துவிடலாம். எதிக்ஸ் திருடன் தனக்கு
எழுதித்தரப்பட்ட எழுத்துகளை தலைகீழாக பார்ப்பது, அவனை பலமுறை தலைகீழாக
நிற்கவைத்தும் அவனால் அந்த பொம்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாதது, யதேச்சையாக
பொம்மையை தலைகீழாக பிடித்திருக்கும்போது அவன் கண்டுகொள்வது... இதையெல்லாம் ஒருமுறை
மறுபடியும் ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கும்போது, இயக்குனர் தேவையில்லாமல் எதையுமே
படத்தில் நுழைக்கவில்லை என்பது புரியும்.
ஒரு பாத்திரமாக நடித்திருக்கும்
நவீன் அவ்வப்போது மார்க்சிஸம் பேசிக்கொண்டே இருக்கிறார். இதென்ன தேவையில்லாத
இடைச்செருகல் என்று முதலில் சலிப்பாக தோன்றியது. மூடர்கூடம் நம்மை, நம் வாழ்க்கையை
சுட்டும் படமென்பதால் வாழ்வியல் குறித்த சிறந்த சித்தாந்தமான ‘மார்க்சிஸம்’ இடம்பெறுவது பொருத்தமானதுதான்
என்பதை படம் முடியும்போது உணரமுடிகிறது.
படத்தில் எல்லா கேரக்டர்களுமே
அவரளவில் சீரியஸானவர்கள்தான். மூன்றாம் மனிதராக நாம் பார்க்கும்போது ‘காமெடி’யாக
தோன்றுகிறார்கள். இப்படிப் பாருங்கள். நமக்கு நம்மைவிட சீரியஸான ஆள் வேறு யாரையும்
தெரியாது. நம்மை உற்றுநோக்கும் மற்றவர்களுக்கு அது காமெடியாக தெரியலாம் இல்லையா?
உதாரணத்துக்கு ஆட்டோ குமார்
பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். “ஏய். எங்க பேட்டையிலே நான் எப்படி தெரிம்மா...
அசால்ட் ஆயிடுவே” என்று ரவுசு கொடுப்பவரை பார்க்கும்போது எனக்கு நரேந்திரமோடி
நினைவுக்கு வருகிறார். புதுப்பேட்டை ஏரியாவில் தான் எப்படி என்று ஆட்டோகுமார்
செய்யும் பில்டப்புக்கும், குஜராத்தில் தான் எப்படி என்று மோடி செய்யும்
பில்டப்புக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன?
ஆட்டோகுமாரின் சீனியர் தாதாவான ‘வக்கா’வை
பார்த்தால் வைகோ நினைவுக்கு வருகிறார். க்ளைமேக்ஸில் கார்ப்பரேட் ரவுடியான
சலீம்பாய், வக்காவை நோக்கி துப்பாக்கி நீட்டிக் கொண்டிருக்கிறார். வக்காவோ மரபான வன்முறை
ஆயுதங்களான அரிவாள், மம்பட்டி சகிதம் எதிரில் நிற்கிறார். இவர்கள் இருவரையும்
கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் துப்பாக்கி நீட்டுகிறார். மூவருக்குமே உள்ளுக்குள்
உதறல். “நான் சுடமாட்டேன்” என்று சலீம்பாய் முதலில் வாக்குறுதி கொடுக்கிறார்.
இன்ஸ்பெக்டரும் “நானும் சுடமாட்டேன்” என்று ஒப்பந்தத்துக்கு வருகிறார். வக்காவும்
“அப்போன்னா நானும் சுடமாட்டேன்” என்கிறார். கூட இருக்கும் அல்லக்கை “தல நம்ம
கையிலேதான் துப்பாக்கியே இல்லையே” என்கிறான். “சுடுறதுக்கு தாண்டா துப்பாக்கி
வேணும். சுடமாட்டேன்னு சொல்றதுக்கு எதுக்கு?” என்கிறார். 2016ல் முதல்வர் என்று
தமிழருவி பஜனைக் கோஷ்டிகள் வைகோவை முன்னிறுத்துவதும், காலாவதியாகிப் போன கட்சியை
வைத்துக்கொண்டு தானும் அதை சீரியஸாக நம்புவதுமாக இருக்கும் வைகோ, வக்காவுக்கு
இணையானவர்தான் இல்லையா?
சும்மா உதாரணத்துக்குதான் மோடியும், வைகோவும். மூடர் கூடம் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரமும் உங்களையும், என்னையும்தான் பிரதியெடுத்திருக்கிறது. நீங்களும், நானும், நம்மைப் போன்ற மற்ற மடையர்களும் சேர்ந்ததுதான் உலகம் என்றால் இந்த உலகமே மூடர்கூடம்தானே?