“சிதம்பரத்துலேருந்து ரவிச்சந்திரன் பேசுறேன் சார்” என்றுதான் ஆரம்பிப்பார். புதிய தலைமுறையின் முதல் இதழில் இருந்தே தீவிரமான வாசகர். அவருடைய எண் செல்போனில் ஒளிர்ந்தால், எந்த சூழலிலும் போனை எடுக்கத் தவறியதே இல்லை. ஆரம்பத்தில் சில கட்டுரைகளை வாசித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொள்ள எண்களை கேட்பார். இந்தப் பழக்கத்தில் எனக்கு தனிப்பட்ட முறையிலும் நண்பர் ஆனார். அவர் வாசிக்கும் பிற பத்திரிகைகள், புத்தகங்களை பற்றி மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தார்.
நீண்ட காலத்துக்கு என்னைப் பற்றி அவரோ, அவரைப் பற்றி நானோ பெயரைத்தவிர வேறெதுவும் கூடுதலாக அறிந்திருக்கவில்லை. நான் பத்திரிகையில் பணிபுரிகிறேன் என்கிற அளவுக்குதான் அவருக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதைத்தாண்டி எனக்கு வேறெதுவும் தெரியாது.
பிற்பாடு பேசும்போது தெரிந்தது. அவரது வகுப்பு மாணவர்களுக்கு பாடம் தவிர்த்து பத்திரிகைகள் - புத்தகங்கள் வாசிப்பது, இணையத்தில் என்னென்ன தளங்களை பாவிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார். பத்திரிகைகளில் வரும் புத்தக அறிமுகங்களை இடைவிடாமல் வாசித்து, அந்த புத்தகங்களை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார். எங்கள் பத்திரிகையின் தலையங்கத்திலோ, கட்டுரைகளிலோ அடிக்கடி ஏதாவது புத்தகத்தை ஆசிரியர் ‘ரெஃபர்’ செய்வதுண்டு. அதை வாசித்துவிட்டு, அந்த புத்தகம் எந்த பதிப்பகம், என்ன விலை என்றெல்லாம் போன் செய்து விசாரித்து தெரிந்துக் கொள்வார்.
ஒருமுறை ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு அதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
“சீக்கிரமா படிச்சிடுங்க சார். ரொம்ப நல்ல புக்கு” என்றேன்.
“ஸ்டூடண்ட்ஸுக்கு எக்ஸாம் லீவு சார். அவங்க வந்துதான் எனக்கு படிச்சி காமிக்கணும்” என்றார்.
எனக்கு புரியவில்லை. “நீங்க படிக்கிறதுக்கும், அவங்க லீவுக்கும் என்ன சார் சம்பந்தம்?” என்றேன்.
“எனக்கு முற்றிலுமா பார்வை இல்லைங்க. நான் ஏதாவது வாசிக்கணும்னா, மத்தவங்க வாய்விட்டு படிச்சி காமிக்கணும்” என்றார்.
அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் மேல்நிலை மாணவர்களுக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர். பார்வையற்ற ஒருவர் மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி இருக்க முடியும்?
ஆரம்பத்தில் ரவிச்சந்திரனுக்கு பார்வை இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பிரச்சினையால் பார்வை போக போக மங்கி முற்றிலுமாக போய்விட்டது. ஆனால், பார்வைக்குறைபாடு தன்னுடைய பணியை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணித்தரமாக நிரூபித்து பணியில் நீடிக்கிறார். பார்வை இருந்தபோது பணிபுரிந்ததைவிட மிகக்கடினமாக இப்போது உழைத்துக் கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி பத்திரிகையில்
எழுதவேண்டும் என்று விரும்பியபோது, நாகரிகமாக மறுத்தார். “சிதம்பரத்துக்கு வாங்க, நண்பரா
சந்திப்போம்” என்றார். அவரை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை (கடைசியாக
போன் மாற்றியபோது அவருடைய எண், பழைய போனில் மாட்டி அழிந்துவிட்டது. இனி அவராக பேசினால்தான்
உண்டு).
கடந்த ஒரு வாரமாக வேலைவாய்ப்பு கோரி பார்வையற்ற பட்டதாரிகள் போராடிக் கொண்டிருப்பதும், அவர்களை காட்டுமிராண்டித்தனமாக காவல்துறை நடத்திக்கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது சிதம்பரம் ரவிச்சந்திரன் நினைவுக்கு வருகிறார்.
அவர் மட்டுமல்ல.
விழிகள் பொய்த்தாலும், மனதால்
உலகைப் பார்ப்பவர்கள் இவர்கள். இவர்களைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர்?
“ப்ளையண்ட் எல்லாம் எதுக்கு சார் வேலை
கேட்கிறாங்க.. டெலிபோன் பூத்து வைக்கலாம். இல்லைன்னா டிரெயினிலே ரேஷன் கார்ட் கவர்
விற்கிறதை தவிர வேறென்ன வேலை அவங்க செஞ்சிட முடியும்?” என்று கொழுப்பெடுத்துப்போய் பஸ்ஸிலும்,
ரயிலிலும் டைம்பாஸுக்கு பேசும் நாம் குருடர்களா.. தன்னம்பிக்கையோடு, ‘அரசு வேலை
கொடுங்கள்.. சிறப்பாக செய்கிறோம்’ என்று தெருவுக்கு வந்து போராடும் இவர்கள்
குருடர்களா?